(தமிழ்த்தாயைப் புறக்கணிக்கும் கன்னடச் சேய் 5 – தொடர்ச்சி)

கன்னட மொழியில் சமற்கிருதக் கலப்பு குறித்துப் பின்வரும் நூற்பாவில் அதற்கு எதிராகத் தெரிவிக்கிறார் கவிராச மார்க்கம்                நூலாசிரியர்.

தற்சமந் தன்னில் இணைந்து பிணைந்த

கன்னட நடையினைக் கண்டு கைக்கொள்க

நூலறி புலவர் நுவன்ற நெறியிது

வடமொழி கலந்து வழங்குதல் தகாது (51)

சமற்கிதச் சொற்களைக் கலந்து எழுதப் புலவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

கன்னட மொழியில் வடெமாழிக் கலப்பு

காவிய அழகினைச் சிதைத்திடும் கண்டீர்

பின்வரும் பாடல் வடமொழி பிணைந்ததால்

பறைஒலி போலக் கடூரம் பயக்கும்  (56)

தெளிவுற இதனைத் தெளிந்து கொள் ளாமல்

கன்னட மொழியுடன் வடமொழி புணர்த்தித்

தொகைநிலை ஆக்குதல் கொதிக்கும் பாலில்

மோர்த் துளி சேர்ப்பதுபோலக் குற்றமாம் (58)

கன்னடப் புலவர் கன்னடத்தில் சமற்கிருதம் கலப்பதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதுடன் அதைக் கொதிக்கும் பாலில் மோர்த்துளி சேர்ப்பதுபோலக் குற்றம் என்றும் வன்மையாகத் தெரிவிக்கிறார்.

பொதுவாகத் தமிழ்க் குடும்ப மொழிகளைச் சேர்ந்தோர் தத்தம் மொழிகளில் உள்ள சமற்கிருதச்சொற்களை நீக்கிய பாடல்களைத் தங்களின் தனிமொழியாகக் கூறுவர். அஃதாவது தனிக்கன்னடம், தனித் தெலுங்கு, தனி மலையாளம் என்பர். அதுதான் தமிழ் என்று உணராமல் அவ்வாறு கூறுவர். அத்தவறான நம்பிக்கையால் தத்தம் மொழியைத் தமிழிலிருந்து தோன்றியதாகக் கூறக் காலங்காலமாக மனமின்றி இருக்கின்றனர்.

துறை, மலை,  குளம், சேரி, ஏரி, ஊர், நகர், புரம், காடு,பட்டி, பொழில், தோப்பு, பாக்கம், பட்டினம், பட்டணம் முதலிய நூற்றுக்கும் மேற்பட்ட விகுதிகளைக் கொண்டு தமிழ்நாட்டிலுள்ள ஊர்களும் நகரங்களும் உள்ளன.  அவைபோல் கருநாடக ஊர்ப்பெயர் விகுதிகளும் உள்ளன. சான்றுக்குச் சில பார்ப்போம்.

பெங்களூரு , கோலார் , துமகூரு ,  மைசூரு ,  சிக்மகளூரு, சாமராசநகர், இராமநகரம், அச்சனூர், அடையாறு, கனகபுரம், குசால்நகர், கொல்லூர், தங்க வயல், பாகல்கோட்டை முதலிய பல ஊர்ப்பெயர்கள் தமிழ் ஊர் விகுதிகளுடனே உள்ளன. கருநாடக மாநிலம் என்பது ஒரு காலத்தில் தமிழ் நிலமாக இருந்ததுதான். தமிழ் நிலததில் வழங்கிய மொழி தமிழ்மொழியாகததானே இருக்க முடியும்? அப்பகுதியில் உரு மாறித் தோன்றிய கன்னட மொழி அப்பகுதி மூல மொழியாகிய தமிழில் இருந்துதானே வந்திருக்கும் என்பது இயற்கை நீதிதானே!

கன்னடச் சொற்களைப் பார்த்தால் பெரும்பாலும் தமிழே எனத் தெளிவாகப் புரியும். அதற்குச் சான்றாக எண்ணுப் பெயர்களை இங்கே பார்ப்போம்.

சுன்னம் (0)  சொன்னே

ஒன்று  –   ஒந்து

இரண்டு -எரடு

மூன்று – மூரு

நான்கு / நால் – நாலக்கு

ஐந்து  –  ஐது

ஆறு – ஆறு

ஏழு – ஏளு

எட்டு  –  என்டு

ஒன்பது – ஒம்பத்து

பத்து – ஃகத்து

நூறு – நூறு

 எண்ணுப் பெயர்கள் தமிழில் இருந்து திரிந்ததை நாம் உணர்கிறோம். ஆனால் ஆயிரம் அவ்வாறு அல்ல எனக் கருதுவாரும் உள்ளனர். அது தவறு என்பதையும் பேரா.முனைவர் சி.இலக்குவனார் பின்வருமாறு கூறுகிறார். “ஆயிரம் என்னும் எண்ணிற்குக் கன்னடத்தில் சாவிர என்றும் தெலுங்கில் வேலு என்றும் பெயர்கள் வந்துள்ளமை எவ்வாறு என்று தெளியவில்லை.

கன்னடச் சாவிர (சவர என்பதும் உண்டு) வடமொழியின் சகசிர என்னும் சொல்லிலிருந்து வந்திருக்கக் கூடும் என்று அறிஞர் காலுடுவல் கருதுகின்றனர். தமிழ் ஆயிரமும் வடமொழிச் சகசிரத்திலிருந்து வந்திருக்கக் கூடுமென்று அவர் கூறுகின்றமை பொருத்தமுடைத்தன்று.     இப் பேரெண்ணைத் தமிழ்க் குடும்பத்தினர் வடமொழி யாளரிடருந்து கடன் பெற்றிருக்கக்கூடும் என்று அறிஞர் காலுடுவல் கருதுகின்றமையும் உண்மைக்கு மாறுபட்டது. தமிழில் நூறாயிரம், கோடி கோடிக்கு மேற்பட்ட ஆம்பல், வெள்ளம் முதலிய எண்கள் ஆரியர் தொடர்பு கொள்வதற்கு முன்பே இருக்கக் காண்கின்றோம். அவ்வாறு இருக்க ஆயிரம் என்ற எண்ணுப் பெயரை மட்டும் ஆரியர்களிடமிருந்து தமிழர் கடன் வாங்கி இருப்பர் என்பது எவ்வாறு பொருந்தும்?”

எனவே, கன்னட எண்ணுப் பெயர்கள் யாவும் தமிழில் இருந்து திரிந்தவையே எனலாம்.