கனடாவில்  முதலாம் உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாடு நிகழும் திருவள்ளுவர் ஆண்டு 2055, புரட்டாசித் திங்கள், 04, 05, 06ஆம் நாள்களில் (2024-09-20, 2024-09-21, 2024-09-22) கனடா, தொரண்டோ (Toronto) நகரில் சிறப்பாக நடைபெற்றது. கனடாத் தொல்காப்பிய மன்றமும் (தமிழ்நாட்டின்) இலக்குவனார் இலக்கிய இணையமும் இணைந்து இதனை நடத்தின. அதன் கருத்தரங்கத்தில் வாசிக்க நான் ‘தொல்காப்பியமும் பாணினியமும்’ என்னும் கட்டுரையை அனுப்பியிருந்தேன். நான் பொதுவாகக் கருத்தரங்கங்களில் பங்கேற்கும்போது விரிவான கட்டுரையை  அனுப்பிவிட்டு அதன் பின்னரே சுருக்கத்தை எழுதியனுப்புவது வழக்கம். ஏனெனில் பெரும்பாலோரின் கட்டுரைச் சுருக்கங்களுக்கும் முழுமையான கட்டுரைகளுக்கும் தொடர்பு இருப்பதில்லை. அவ்வாறு நேரக்கூடாது என்பதற்காக 46 பக்கக் கட்டுரை எழுதி அனுப்பியிருந்தேன். அதைப்படித்த ஒருவர் கனடாவிலிருந்து “நீங்கள் இலக்குவனாரின் மேற்கொள்களை மட்டும் குறிப்பிட்டுள்ளீர்களே! அவரைப்பற்றி மேலும் ஒருவர்தான் எழுதியுள்ளார்” என்றார். “என்னிடமும் சிலர் எழுத வேண்டும் என்பதற்காக அவரின் ‘தொல்காப்பிய ஆராய்ச்சி’ நூலைக் கேட்டனர். என்னிடம் இன்மையால் வெளியீட்டகத்தின் பெயரைக் குறிப்பிட்டேன். அவற்றை அவர்கள் வாங்கியிருக்கலாம். ஆனால், வாங்கவில்லை. இதுபோல் நூல்கள் கிடைக்காமல் எழுதாமல் இருந்திருக்கலாம். இதனால் ஒன்றுமில்லை” என்றேன். “இல்லையில்லை! உங்கள் அப்பாவின் கருத்துகளில் இருந்து மட்டும் எடுத்தாண்டுள்ளீர்கள்” என்றார். (அப்பொழுது நான் அவ்வாறுதான் எழுதியுள்ளதாக எண்ணி விட்டேன். பொதுவாகக் கட்டுரை எழுதியவுடன் மறக்கும் பழக்கம் இருந்ததால் எனக்கு அப்போது தெரியவில்லை. ஆனால் பின்னர் நான் பார்த்த பொழுது முப்பதிற்கும் மேற்பட்டவர்களின் மேற்கோள்கள் இருந்தன.) “அப்பா என்று பார்க்காதீர்கள். அவர் படிக்கும் பொழுதே தொல்காப்பிய ஆராய்ச்சியில் ஈடுபட்டவர்; இருபதாம் நூற்றாண்டு தொல்காப்பியர் என அழைக்கப்பெறுபவர்; ஆங்கிலத்தில் தொல்காப்பியத்தை மொழி பெயர்த்தவர்; தொல்காப்பியத்தை மக்கள் இலக்கியமாக மாற்றியவர். எனவே, அதில் தவறு இல்லை” என்றேன். மாற்றித் தருமாறு கேட்டார். “பொருண்மை குறித்துத் தவறான கருத்துகளைக் குறிப்பிட்டு அவை தவறு எனச் சொல்வதை விடச் சரியான கருத்துகளை மட்டும் எழுதினால் போதும் என எண்ணுபவன் நான். எனவே, அதற்கேற்ப எழுதியுள்ளேன். கருத்து மாறுபாடு இயற்கையே. கருத்தரங்கக் கலந்துரையாடலில் மாறுபாடாகக் கருதும் கருத்துகளைக் குறிப்பிட்டால் விளக்குகிறேன்” என்றேன். அவர் அவரது நிலையிலேயே நின்றார்.  “இக்கட்டுரை சரியில்லை என்றால்  நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டா. எனினும் இதை நான் அச்சிட்டு அனைவருக்கும் தருவேன்” என்றேன். காலங்கடந்து கட்டுரைச் சுருக்கத்தைத் தேர்ந்தெடுத்தனர். எனக்குப் பல ஆண்டுகளுக்கு முன்னர் அயலகத் தமிழறிஞர் ஒருவர் சொன்னது நினைவிற்கு வந்தது. அவர் என் கட்டுரை ஒன்றைக் குறித்துச் சில ஐயங்களைக் கேட்டு இதற்கெல்லாம் சான்றுகள் உள்ளனவா என்றார். நான் குறிப்பிட்டுத் தெரிவித்தேன். அவர், உடனே “நான் பல ஆண்டுகளுக்கு முன்னரே இங்கு வந்துவிட்டேன். எனவே அண்மையக் கருத்துகளை அறிய முடியாமல் போய்விட்டது. எனவேதான் எனக்குப் புரியாமல் போய்விட்டது” என்றார்.. அதுபோல்தான் பேசியவருக்கும் அக்கருத்தை அவரிடம் தெரிவித்தவருக்கும் தவறான கருத்துகள் தெரிந்த அளவிற்கு தொடர்பான ஆய்வுரைகள் தெரிய வாய்ப்பில்லாமல் போயிருந்திருக்கும் எனக் கருதுகிறேன். இணையத் தேடலில் பல கருத்துகளை அறிய முடியும் என்றாலும் அவை பெரும்பாலும் தவறான கருத்துகளாகவே உள்ளன. நல்ல சரியான ஆய்வுரைகள் யாவும் இணையத்தில் இடம் பெற வேண்டும்.

ஆரிய நூல்களைக் காலத்தில் மூத்ததாகவும் தமிழ்நூல்களைவிட மிகவும் சிறப்பானதாகவும் திரித்துக் கூறுவோரும் அவற்றை அறிந்தும் அறியாமலும் பரப்புவோரும் உள்ளமையால் தொல்காப்பியத்தைவிடக் காலத்தில் பிந்தியதாகவும் அதனுடன் ஒப்பிட இயலா அளவிற்குத் தரம் குறைந்ததாகவும் உள்ள பாணினியத்தை உயர்வானதாகவும் காலத்தால் மூத்ததாகவும் பலரும் எழுதியும் பேசியும் வருகின்றனர். அவற்றை முறிடியடிக்க வேண்டும் என்று எழுந்ததே இக்கட்டுரை. 100 பக்கங்களுக்கு மேல் குறிப்புகள் எடுத்திருந்தாலும் ஏ 1 அளவில் ஏறத்தாழ 35 பக்க அளவில் விரிவுக் கட்டுரை அமைந்தது.

இவ்விரிவுக் கட்டுரையைத் தமிழன்பர்கள் பார்வைக்கு நூலாக  வெளியிட்டுள்ளேன். நூல் அட்டை வடிவமைத்த வடிவமைப்புத் தளத்தினருக்கும் அச்சிட்ட மாணவர் நகலகப் பார்த்திபன் நண்பர்களுக்கும் நூல் வெளியீட்டிற்கு உதவியாக இருந்த பொறி தி.ஈழமலர் பாலாசி, பொறி தி.ஈழக்கதிர், மலர்க்காெடி வெளியீட்டகத்தின் திருவாட்டி தி.அன்புச்செல்வி ஆகியோருக்கு நன்றி.

 கனடாத் தொல்காப்பிய மன்றத்தின் தலைவர் முனைவர் முனைவர் செல்வநாயகி சிரீதாசு தன் தலைமையில் ஆராய்ச்சி மாநாட்டைச் சிறப்பாக நடத்தியிருந்தாலும் அதுபோது இந்நூலை வெளியிட இயலாமல் போய்விட்டது. எனினும் இதன் தொடர்ச்சியாகச் சென்னையில்,  நிகழும் திருவள்ளுவர் ஆண்டு 2055, புரட்டாசி 26, 2055 / சனி / 12.10.2024 அன்று இலக்குவனார் இலக்கிய இணையம் விருதளிப்பு நிகழ்ச்சியை நடத்தியது.   இது போழ்து இந்நூலை வெளியிட்டுள்ளோம்.

சிறிய நூல் என்பதால் இதிலுள்ள கருத்துகளை முன்னுரையில் எடுத்துக் கூறத் தேவை எழவில்லை. எனவே அன்பர்கள் இந்நூலைப் படித்து ஆதரவு தர வேண்டுகிறேன்.

நன்றி.