Saturday, July 25, 2015

இறையாண்மை என்றால் இதுதான் 2 – இலக்குவனார் திருவள்ளுவன்

 iraiyaanmai_endral_thalaippu

2

  இந்தியா என்பது பல தேசிய அரசுகளின் இணைப்பு. இதன் நிலப்பரப்பும் நிலையாக இல்லாமல், உருவான காலத்திலிருந்து மாற்றங்களைச் சந்தித்து வருகிறது. 19 ஆம் நூற்றாண்டில்தான் இந்தியா என்னும் செயற்கை அமைப்பே உருவானது. 1858 ஆம் ஆண்டில் இன்றைய இந்தியப் பரப்புடன் இலங்கை, ஆப்கானிசுதானம், பருமா, கிழக்கு வங்காளம், சிந்து, வடமேற்கு எல்லை மாநிலம் எனப்படும் பாக்கிசுத்தான் முதலியவை சேர்ந்த பரப்பே இந்தியா எனப்பட்டது. இப்பரப்பு எல்லைக்குள்ளேயே தனியரசுகள் சிலவும் ஆங்கிலேயர் அல்லாத பிறர் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளும் இன்றைக்கு இணைக்கப்பட்டவாறு இல்லாமல் தனித்தனியாக இருந்தன. பின்னர் ஒவ்வொன்றாகப் பிரியவும் சேரவும் புதிய புவிப்பரப்பு உருவாகியுள்ளது. இருபதாம் நூற்றாண்டுத் தொடக்கத்திலேயே இலங்கையும் ஆப்கானிசுதானும் பிரிந்தன. 1935இல் பருமாவும் (மியான்மர்); 1947 இல் பாகிசுத்தானும் பிரிந்தன. அதேபோல் மாகி-காரைக்கால்- புதுச்சேரிப் பகுதிகளும்(1954), கோவா(1961), சிக்கிம் (1975) டையூ-டாமன்(1987) ஆகியனவும்  இந்தியாவுடன் இணைந்தன. வெவ்வேறு காலங்களில் பெரு மாநிலங்கள் பிரிக்கப்பட்ட நிகழ்வுகளும் உள்ளன. இவ்வாறு இந்தியா எனப்படும் பரப்பிலிருந்து சில நிலப்பரப்புகள் பிரிக்கப்பட்ட பொழுதும் வேறு சில நிலப்பரப்புகள் சேர்க்கப்பட்ட பொழுதும் சில நிலப்பரப்புகள் மாற்றியமைக்கப்பட்ட பொழுதும் இந்நிலப்பரப்பின் பெயர் மாற்றப்படவில்லை என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
  பரப்பளவு சுருங்கியும் விரிந்தும் இந்திய இறையாண்மை என்பது இவ்வாறு மாறுதலுக்குள்ளாகும் பொழுது அதனை நிலையானதாகக் கருதி, அது பற்றிப் பேசக் கூடாது என்பது நடைமுறைக்கேற்றதல்ல. ஆளும் அதிகாரம் நாம் வாழும் நிலைக்கு ஊறு விளைவிக்கும் பொழுது அது குறித்துப் பேசித்தான் ஆக வேண்டும் என்பது  உலக நடைமுறையே. மக்களாட்சி மக்களாட்சியாகவே விளங்குவதற்கு இறையாண்மை குறித்த கருத்துப் பரவல்கள் தேவை. எனவே, இந்திய இறையாண்மை கேள்விக்குறியாகும் பொழுது  கருத்தாய்வுகள் எழுவது இயற்கையே. இதனை வரவேற்று உரியவாறு செப்பம் செய்யும் பொழுதுதான் இந்திய இறையாண்மை செழுமை அடையும்.நம் நாட்டமைப்பு எத்தகையது எனக் குறிப்பிடும் 26.11.1949 இல் அறிவித்து 1950இல் வெளிவந்த இந்திய அரசியல் யாப்பு  பேரரசாண்மை வாய்ந்த மக்களாட்சிக் குடியரசு   எனக் குறிப்பிட்டது. பின் 1976 இல் நடைமுறைப்படுத்திய திருத்தத்தின்படி, பேரரசாண்மை வாய்ந்த சமநலமை நெறிசார்ந்த சமயச் சார்பற்ற மக்களாட்சிக் குடியரசு எனக் குறிப்பிடுகிறது. நாம் இறையாண்மை என்பதுதான் இந்திய அரசின் தமிழ் மொழி பெயர்ப்பில் பேரரசாண்மை எனக் குறிக்கப்பட்டுள்ளது.
  இதன் முதல் விதி முதல் உட்பிரிவில் 1.1. இந்தியா, அதாவது பாரதம் மாநிலங்களின் ஓர் ஒன்றியமாக  இருத்தல் வேண்டும். எனக் குறிக்கப்பட்டுள்ளது. ‘states’ என ஆங்கிலத்தில் குறிப்பதை மாநிலங்கள் என மொழி பெயர்த்துள்ளனர். எனினும்  ‘united states of America’ என்னும் பொழுது அமெரிக்க ஐக்கிய நாடுகள் என்று சொல்வது போல் ‘அரசுகளின் ஒன்றியம்’ என்று குறிப்பிடுவதே சிறந்தது. அவ்வாறு குறிக்கும் பொழுது ஒவ்வோர் அரசும் இறையாண்மை மிக்க அரசாக இருத்தலை உணர்த்துவதாகக் கொள்ளலாம். இந்திய ஆட்சியால் ஏற்கப்பட்ட அரசியல் யாப்பின்படி  இந்தியாவை அல்லது பாரதத்தை நாடு என்று கூறுவதுகூடத் தவறுதான். பரத அரசுகளின் கூட்டமைப்பு என்று சொல்லலாம். இங்கே பரதம் என்பது பரதனின் பெயரால் வந்தது அல்ல. இந்நிலப்பகுதி பெரும்பாலும் கடலால் சூழப்பட்டுள்ளது. ஒரு காலத்தில் முற்றிலும் தமிழர்களால் ஆளப்பட்டு வந்த தமிழ்நிலமாக இருந்தது. கடல் சார்ந்த பகுதிகளில் வாழ்ந்தவர்கள் பரதவர்கள் எனப்பட்டனர். பெரும்பான்மைப் பரதவர்களால் சூழ்ந்த நிலப்பகுதி பரதவ நாடு என்றும் பின்னர்ப் பரதநாடு என்றும் அழைக்கப்பெற்றது. இதுவே   பரதனின் பெயரால் அமைந்த நாடு என்று தவறாகவும் எண்ணப்படுகிறது. இதுவே பின்னர் பாரதநாடாகவும் குறிக்கப் பெற்றது. இந்தியா என்ற பெயர்தான் வேண்டுமென்றால் தமிழ் இந்தியா என்று அழைக்கப்படலாம். இனி, எவ்வாறு அழைக்கப்படலாம் என்பது குறித்து ஆராயாமல், தற்போதைய சூழலில் இந்திய இறையாண்மை குறித்துப் பேசுவது தவறா எனப் பார்ப்போம்.
  இந்திய அரசியல் யாப்பு விதி 19.1.இல் பின்வருமாறு கூறுகிறது. 19.1.அ. குடிமக்கள் அனைவரும், அ.பேச்சு உரிமைப் பேற்றுக்கு மற்றும் சிந்தனை வெளிப்பாட்டு உரிமைப் பேற்றுக்கு உரிமை உடையவர் ஆவர்.இதற்கிணங்க இந்திய இறையாண்மை குறித்துப் பேசுவது  அல்லது சிந்தனையை வெளிப்படுத்துவது சட்டப்படித் தவறாகாது. இந்திய அரசியல் யாப்பு விதி
  29.1. தமக்கெனத் தனிவேறான மொழி, எழுத்துரு அல்லது பண்பாடு உடையவராயும் இந்திய ஆட்சிப் பரப்பில் அல்லது அதன் பகுதி எதிலும் குடியிருப்பவராயும் உள்ள குடிமக்களின் பிரிவினர் எவரும் அவற்றைச் சிதையாது காக்கும் உரிமை உடையவர் ஆவர். எனக் குறிக்கிறது. எனவே, நமது மொழிக்கோ எழுத்துருவிற்கோ பண்பாட்டிற்கோ சிதைவு நேரும் பொழுது அல்லது சிதைவு நேரும் வாய்ப்பு உள்ளது என அச்சம் வரும் பொழுது அது குறித்துப் பேச ஒவ்வொருவருக்கும் உரிமையை நமது அரசியல் யாப்பே தந்துள்ளது.
  மேலும் இந்திய அரசியல் யாப்பு 344.3. இந்தியாவின் தொழில், பண்பாடு, அறிவியல் ஆகியவற்றின்  முன்னேற்றத்தையும் பொதுப்பணிகள் பற்றிய வகையில் இந்தி மொழி பேசாத பரப்பிடங்களைச் சேர்ந்தவர்களின் நேர்மையான கோருரிமைகளையும் நலப்பற்றுகளையும் உரியவாறு  நாட்டத்தில் மேற்கொள்ளுதல் வேண்டும் எனக் குறிப்பிடுகிறது. இந்த விதி இந்தியைப் பரப்புவதால் ஏற்படும் நலக்கேடுகளைக் குறித்தாலும் வேறுவகையிலும் இவ்வாறு நலப்பற்றுகளை நாட்டத்தில் மேற்கொள்ளாமல் அரசுகள் நடந்து கொள்ளும் பொழுது அது குறித்துத் தட்டிக் கேட்கும் உரிமை, நலப்பற்றுகளை இழந்தவர்களுக்கு உரித்தாகின்றது. இருப்பினும் பின்னர்க் கொண்டு வரப்பட்ட திருத்தத்தின்படி இந்தியாவின் பேரரசாண்மை, ஒருமைப்பாடு, ஏமக்காப்பு, அயல்நாட்டரசுகளுடன் நட்புறவு முதலானவற்றிற்கு எதிராக விதி 19.1.அ. பயன்படுத்தப்படக் கூடாது என்பது தெரிவிக்கப்பட்டுள்ளது.
  இதற்கிணங்கவே அயல்நாட்டு நட்புணர்விற்கு எதிராகப் பேசுவதைக் குற்றமாக அரசு கருதும் நிலைப்பாடு வருகிறது. எனினும் நாம் ஒன்றைப்பற்றிச் சிந்திக்க  வேண்டும். இறையாண்மை என்பது அதிகாரம் உறைதலைக் குறிப்பதால் இந்த அதிகாரமானது நாட்டு மக்களின் நலனுக்கு எதிராக மாறும்பொழுது அதைத்தட்டிக் கேட்கும்  உரிமை மக்களுக்கு உண்டு. பலராலும் பலவகையாக விளக்கப்படும் இறையாண்மை   என்பதன் அடிப்படையில் குற்றம் சுமத்துவது நல்லரசிற்கு ஏற்றதல்ல. இந்தியாவுடன் நட்பு பாராட்டும் சிங்கள அரசின் இறையாண்மைக்கு எதிராகப் பேசுவதைக் குற்றம் எனக் கருதினால் இறையாண்மை இலக்கணத்தின்படி, முப்படைகளும் பொருள்களும் அமைச்சும், நட்பும் அரணும் உடைய தமிழ்ஈழ இறையாண்மைக்கு எதிராக இந்திய அரசு நடந்து கொள்வதும் தவறாகிறது.
(தொடரும்)
– இலக்குவனார் திருவள்ளுவன்


Thursday, July 23, 2015

‘பாபநாசம்’ படத்திற்கு வரிவிலக்கு அளிக்க வேண்டும்.

 paapanaasam01
paapanaasam03_G.O.

தமிழ்ப்பெயர்த் திரைப்படங்களுக்குக்

கேளிக்கை வரிவிலக்கிற்கான

தேர்வுக்குழுவை மாற்றி யமைக்க வேண்டும்.

  கேளிக்கை வரிச்சட்டம் என்பது 1939 முதல் தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ளது. இதன் தொடர்ச்சியாக 2006 இல் [அரசாணை (நிலை) எண் 72 (வணிக வரி -பதிவுத்துறை) நாள் 22.07.2006] தமிழிலேயே பெயர் சூட்டப்படும் புதிய திரைப்படங்களுக்குக் கேளிக்கை வரியிலிருந்து முழுமையான வரிவிலக்கு அளிக்கப்பட்டது. 20.11.2006 இல் பிறப்பிக்கப்பட்ட மற்றோர் ஆணை மூலம்[அரசாணை (நிலை) எண் 147 வணிக வரி – பதிவுத்துறை நாள் 20.11..2006]   இக்கேளிக்கை வரிவிலக்கு, பழைய திரைப்படங்களுக்கும் அளிக்கப்பட்டது. பெயரைமட்டும் தமிழில் வைத்துக்கொண்டு, தமிழ்ப்பண்பாட்டிற்கு எதிராகவும் மொழிக் கொலை புரியும் அளவிலும் உள்ள படங்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்படுவதற்கு எதிர்ப்பு வந்தது. எனவே, [அரசாணை (நிலை)எண் 159 (வணிக வரி -பதிவுத்துறை) நாள் 22.8.2007] திரைப்படத்தின் தமிழ்ப்பெயர் தமிழ்ப்பண்பாட்டிற்கு உகந்ததாகவும் கண்ணியமானதாகவும் உள்ளதா என ஆய்வு செய்து பரிந்துரைக்க ஒரு குழு அமைக்கப்பட்டது.
   என்றாலும் பெயர்மட்டும் தமிழில் இருந்தால் போதாது, கதைக்கருவும் தமிழ்ப்பண்பாட்டிற்கு ஏற்றதாக இருக்க வேண்டும் என்ற வேண்டுகோள்களுக்கு முதன்மை அளிக்கும் வகையில் இது அமையவில்லை. எனவே, எதிர்ப்பு தொடர்ந்தது. எனவே, கேளிக்கை வரிவிலக்கு பெற, தமிழ்த்திரைப்படங்களுக்குத் தமிழில் பெயர் சூட்ட வேண்டும் என்ற நிபந்தனையுடன் மேலும் 4 நிபந்தனைகளை அரசு விதித்தது [அரசாணை (நிலை) எண் 89 (வணிக வரி – பதிவுத்துறை) நாள் 21.7.2011].   அவை வருமாறு:-
  1. திரைப்படத் தணிக்கை வாரியத்திடமிருந்து (யாவரும் பார்க்கலாம் என்பதற்குரிய) ‘யு‘ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
  2. கதைக்கரு, தமிழ் மொழி – பண்பாட்டின் வளர்ச்சிக்கு உதந்ததாக இருக்க வேண்டும்.
  3. பெருமளவு திரைப்படத்தின் உரையாடல்கள் தமிழில் இருக்க வேண்டும்.
  4. வன்முறை-ஆபாசங்கள் அதிகஅளவில் இடம் பெறுமானால், வரிவிலக்கு பெறுவதற்குரிய தகுதியை இழக்கும்.
 இதன்படி [அரசாணை(நிலை) எண் 002 வணிகவரி-பதிவு(சி1)துறை நாள் 03.01.2012 இல்] ஒரு குழு அமைக்கப்பட்டது. இக்குழுவில் பதவிசார்ந்த மூன்று உறுப்பினர்களும்   பதவிசாராத 22 உறுப்பினரக்ளும் இடம் பெற்றுள்ளனர். திரைப்படத்தைக் குறைந்தது பதவிசார் உறுப்பினர்கள் இருவரும் பதவி சாராத உறுப்பினர்கள் இருவரும் பார்வையிட வேண்டும். அதே நேரம் ஆண்கள் இருவரும் பெண்கள் இருவரும் கண்டிப்பாகப் பார்வையிட வேண்டும் என்றும் இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  பதவி சார்ந்த உறுப்பினர்கள் தமிழறிவு உள்ளவர்களாக இருப்பார்கள் என உறுதியாகக் கூற முடியாது. (தமிழ்நாட்டில்தான் பிற மொழியினர் பதவிக்கு வரலாம்; தலைமைப் பதவியிலும் அமரலாம் என உள்ளனவே) ஆனால், அவர்களின் பட்டறிவு குழுவின் செயற்பாட்டிற்கு உறுதுணையாக அமையும் என எதிர்பார்க்கலாம். ஆனால் பதவி சாரா உறுப்பினர்கள் தமிழறிவு உள்ளவர்களாக அமர்த்தப்படுவதுதானே முறை. கலைசார்ந்த தேர்வுக்குழு என்றால் கலைத்துறையினர் இடம் பெறுவது ஏற்புடைத்தே. ஆனால் தமிழ் சார்ந்த குழுவிற்குத் தமிழ் அறியாதவரை அமர்த்திவிட்டு அவர்களிடம் சிறப்பான செயல்பாட்டை எவ்வாறு எதிர்பார்க்க இயலும்? எனவே, தமிழ்ப்பெயர் அல்லாத
 சிவாசி, பில்லா, இந்தியா-பாகிசுதான், ரோமியோ சூலியட்(டு) ,ஒரே ஒரு ராசா மொக்க ராசா, சார்லசு சபீக் கார்த்திக், வாலிப ராசா
முதலான பல படங்களுக்கு வரிவிலக்கு அளித்துள்ளனர். ‘மாசு என்கிற மாசிலாமணி’ தமிழ்ப்பெயர் என்றாலும் பொருள் திரிவுடைய தொடர். எனவே, வழங்கப்பட்டிருக்கக்கூடாது. ‘மாசிலாமணி’ என்றால் ‘மாசு இல்லாத – குற்றம் இல்லாத மாணிக்கம் போன்றவர்’ எனப் பொருள். ‘மாசு’ என்றால் குற்றம் எனப் பொருள். பொருள் முரணுடன் உள்ள இப்படத்திற்கு வரிவிலக்கு அளித்தது தவறு. இதுபோல் தமிழ்ப்பெயராகத் தெரிந்தாலும் மொழிச்சிதைவுப் பெயராக இருப்பின் வரிவிலக்குஅளிக்கக்கூடாது.
  மக்களுக்கு எது, தமிழ், அது ஆங்கிலம் என்று தெரியாத துன்பநிலை நம் நாட்டில் நிலவுகிறது. அதற்குத் திரைத்துறையினரும் விலக்கல்ல. எனவேதான், ‘சில்லா’ போன்ற பெயர் தாங்கியபடங்களுக்கு வரிவிலக்கு வேண்டி விண்ணப்பிக்கின்றனர். வரிவிலக்கு அளித்த படங்களின் பெயர்கள் பல, தெரிவுக்குழு உறுப்பினர்களும் தமிழறியாதவர்கள் என்பதை உறுதிப்படுத்துகின்றது. எனவேதான், தமிழ்ப்பெயர் அல்லாத் திரைப்படங்களுக்கு வரிவிலக்கிற்குப் பரிந்துரைத்த குழுவினரை நீக்குமாறு வேண்டி வழக்கு ஒன்று உயர்நீதிமன்றத்தில் நடைபெறுகிறது.
  அரசு தமிழறிஞர்களைத்தான் இக்குழு உறுப்பினர்களாக அமர்த்தியிருக்க வேண்டும். அவ்வாறில்லாததால் இந்த அவலம் அரங்கேறிக் கொண்டுள்ளது. நண்பேன்டா என்னும் திரைப்படத்திற்கு வரிவிலக்கு அளிக்கவில்லை என வழக்கு தொடுத்துள்ளனர். அதனைத்தமிழ்ப்பெயர் எனக் குழு ஒத்துக்கொண்டதால்தான் இந்த நிலை. ‘நண்பகல்’ என்றால் ‘நடுப்பகல்’ எனப் பொருள். ‘நண்பேன்’ என்றால் ‘நடுப்பேன்’ என்றுதான் பொருள் வருகின்றது. நண்பன் என்னும் தமிழ்ச்சொல்லைக் கொலை செய்துள்ளதால் இப்பெயர் தாங்கிய படத்திற்கு வரிவிலக்கு கிடையாது எனத் தெரிவிக்கும் தமிழறிவு தேர்வுக்குழுவினருக்கு இல்லை. பிறமொழிப் பெயர் தாங்கிய பட நிறுவனத்திற்குத் தமிழறிவு இல்லை என்பது தெரிந்ததுதான். ஆனால், தமிழ்ப்பெயரா, தமிழ்பண்பாடு காக்கப்பட்டுள்ளதா என ஆராய்வோருக்குத் தமிழறிவும் தமிழ்ப்பண்பாட்டறிவும் இருக்க வேண்டுமல்லவா? கிஞ்சித்தும் இல்லை என மக்கள் எண்ணும்படி, பெயர்ச்சொல் என்ற போர்வையில் பிற மொழிப்பெயர் தாங்கிய படங்களுக்கு வரிவிலக்கு அளிக்கலாமா ?
இந்த நேரத்தில் பாபநாசம் படம் குறித்துத் தெரிவிக்க வேண்டும். தலைப்பே அதுதானே!
  ‘பாபநாசம்’ தமிழ்ப்பெயர் அல்ல. அவ்வூரின் பழைய தமிழ்ப் பெயர் பொதியில் என்பதாகும். பொதியில் உறைந்துள்ள இறைவனைத் திருஞான சம்பர்ந்தர் ‘பொதியிலானே’ என்கிறார். பொதிகைமலை யடிவாரத்தில் அமைந்த ஊர் பொதியில் என அழைக்கப்பெற்றுள்ளது. வேறு தமிழ்ப்பெயர் உள்ளதா என்பது ஆய்விற்குரியது. ஆனால், ‘பாபநாசம்’ திரைப்படத்தைப் பார்வையிட்ட தேர்வுக்குழு உறுப்பினர்கள் எழுவரும், “திரைப்படத்தின் பெயர் தமிழில் உள்ளது என்றாலும். ‘யு’ சான்றிதழ் பெற்ற திரைப்படம் என்றாலும்” என்றுதான் சொல்லிவைத்தாற்போல் ஒரே வகையாகத் தெரிவித்துள்ளனர்.   பிறமொழிப் பெயர்களையெல்லாம் தமிழ்ப்பெயர் என எண்ணுவோர் கிரந்த எழுத்து பயன்படுத்தப்படாத இவ்வூர்ப் பெயரைத் தமிழ் எனக் கருதியதில் வியப்பில்லை.
  ஆனால், படத்தின் பெயர் தமிழாக இல்லாவிட்டாலும் பெயர்ச்சொல் அடிப்படையில் பல படங்களுக்கு வரிவிலக்கு அளித்துள்ளதால் இப்படத்திற்கும் வரிவிலக்கு அளித்திருக்க வேண்டும்.
பெயர் மட்டும் தமிழில் இருந்தால் போதாது என இப்படத்திற்கு வரிவிலக்கு மறுக்கப்பட்டதற்கான காரணங்களும் சரயில்லை. அவை யாவை?
  1. கொலையை மறைக்கப் பொய்சொல்லித் தண்டனையிலிருந்துதப்பியது ஏற்புடைத்தல்ல.
  2. காவல் துறை அதிகாரி துன்புறுத்துவது வன்முறையின் உச்சம்.
  3. தவறு செய்தவன் ஆற்றில் குளித்து விட்டால் பாவம் தொலையும் என்பது ஏற்புடையதாக இல்லை.
  4. மகன், சக மாணவியை ஆபாசக் காட்சிப்படுத்தியதைக் குற்றம் என வலியுறுத்தாமல் வன்முறை செயல்பாட்டில் ஈடுபடுவது காவல்துறையின் கண்ணியத்திற்கு இழுக்கு.
  5. அரசாணையின் நிபந்தனைகளுக்கு உட்படவில்லை.
முதல் நான்கு வெவ்வேறு வகையில் வலியுறுத்தப்பட்டு வரிவிலக்கு மறுக்கப்பட்டுள்ளது. ஆனால், இவர்கள் படத்தைப்பார்த்துத்தான் குறிப்பு எழுதியுள்ளார்களா? சிலர் மட்டும் பார்த்து விட்டு, எழுவர் குறிப்புகளாக இடம் பெற்றுள்ளதா எனத் தெரியவில்லை. ஏனெனில்,
தந்தையாகக் கதைத்தலைவன் கொலை செய்வது சரியாக இருந்தாலும் சக பெற்றோரின் துன்பத்தையும் கவலையையும் புரிந்துகொண்டு அவர் (கதைத்லைவன்) தண்டனை பெற்றிருக்க வேண்டும்.
என உறுப்பினர் ஒருவர் குறிப்பு எழுதியுள்ளார். நடைபெற்றது கொலையல்ல. தன் கற்பையும் தாயின் கற்பையும் காப்பாற்ற எண்ணி இறங்கிய முயற்சி மாணவனின் உயிரிழப்பிற்குக் காரணமாக அமைந்துவிட்டது. அதைச் செய்ததும் கதைத்தலைவன் அல்லன். ஏன், இவ்வாறு நிகழ்ச்சி நடந்தபொழுது அவன் அங்கேயே இல்லை. பின்னர்தான் அறிய வருகிறான். அவ்வாறிருக்க கதைத்தலைவன் கொலை செய்ததாகக் குறிப்பு எழுதப்பட்டுள்ளது என்றால் படத்தைப் பார்க்கவில்லை அல்லது சரியாகப் பார்க்கவில்லை என்றுதானே பொருள்! படத்தைப் பார்க்காமலேயே குறிப்பு எழுதியது இதன்மூலம் உறுதிப்படுத்தப்படுகிறது. வேறு சிலரும் பார்க்காமல் யாரோ தந்த குறிப்பினை எழுதியிருக்கலாம். அவ்வாறில்லாவிட்டாலும் தேர்வுக்குழுவில் ஓர் உறுப்பினர் படம் பார்க்காமல் குறிப்பு எழுதியது நன்றாகத் தெரியவருவதால் குழுவின் மொத்தக் குறிப்புகளும் செல்லாதனவாகும். எனவே, இவற்றின் அடிப்படையில் அரசு பிறப்பித்த ஆணையும் செல்லாததாகும்.
உறுப்பினர்கள் குறிப்புகள் பற்றிய உண்மை நிலைப்பாடுகளையும் பார்ப்போம்.
  திரைப்படம் என்பது நல்லனவற்றைமட்டும் நேர்முகமாக எடுத்துரைப்பது அன்று. அல்லனவற்றைச் சுட்டிக்காட்டுவதன் மூலம் நல்லனவற்றை அறிவுறுத்துவதும் ஆகும். அந்த அடிப்படையில் பார்த்தால், இன்றைக்கு நாளும் செய்தித்தாள்களில் பார்க்கும் அலைபேசிவழி குளிக்கும் காட்சிகளைப் படம்பிடிக்கும் அவலத்தின் விளைவை நன்றாகக் காட்டியுள்ளனர் எனவே, இதனைக் கீழ்மைக்காமம்(ஆபாசம்) என்று எண்ணாமல், குற்றச்செயலை மக்களுக்கு அறிவுறுத்தும் செயலாகத்தான் பார்க்க வேண்டும்.
 எல்லாத் துறையிலும் நல்வழியினர், அல்வழியினர் என இருவகையினர் உள்ளனர். இதுபோல், காவல்துறையிலும் அவ்வாறு உள்ளனர். இவ்விரு சாராரையும் இப்படத்தில் காட்டியுள்ளதால் காவல்துறைக்கு எதிரானதாகக் கருதக்கூடாது. காவல்துறையினரால் துன்புறுத்தப்படுபவர்களும் அவர்கள் துன்புறுத்துவதைப் பார்ப்பவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். எனவே, அத்தகையோருள் ஒருவரைக் காட்டியுள்ளனர். எனினும் உடனே பெண் அதிகாரியின் கணவர் இதனைத் தவறு எனச் சொல்லத் தவறவில்லை.   வேண்டுமென்றால், “நீ தாய் என்ற முறையில் நடந்துகொள்வதாக இருந்தால், உன்னால் துன்புறுத்தப்படும் தாயின் உள்ளத்தைப் புரிந்து கொண்டு துன்புறுத்தாதே! காவல் அதிகாரி என்ற முறையில் விசாரிப்பதாக இருந்தால் உரிய முறைப்படி விசாரணையை மேற்கொள்”. என்பதுபோல் தெளிவாகக் கூறுமாறு ஒரு காட்சியைச் சேர்த்து இருக்கலாம்.
  காவல்அதிகாரி தான் செய்தன தவறு என உணர்கையில் வேலையைவிட்டு விலகுவதுடன் தன் வருத்தத்தையும் தெரிவித்துக் காவல்துறைக்குக் கண்ணியம் சேர்த்துள்ளார். எனவே, இதனை இக்கண்ணோட்டத்தில்தான் பார்க்க வேண்டுமே தவிர வேறு வகையில் நோக்கக் கூடாது.
  தவறான கவர்ச்சி மூலம் படத்தை எடுக்கலாம் என எண்ணினால் குளிக்கும் காட்சி கதைக்குத் தேவை எனக் காட்டப்பட்டிருக்கலாம்; அலைபேசியில் எடுக்கப்பட்ட காட்சிப்படத்தை இருமுறையோ ஒருமுறையோ காட்டியிருக்கலாம். மிகவும் கண்ணியமாக அப்படி ஒரு நிகழ்வு நடந்ததை உணர்த்தியுள்ளார்களே தவிர காட்சியாகக் காட்டவில்லை. இதைத் தவறு என்று சொல்வது தவறு. புகைபிடிப்பது தவறு எனச் சொல்லும் படத்தில் புகைபிடிக்கும் காட்சி வந்தால் எதிர்ப்பதும் குடிப்பது தவறு எனக்காட்டும் படத்தில் குடிக்கும் காட்சி வருவது தவறு என எதிர்ப்பதும் எப்படி தவறோ அப்படித்தான் இதுவும் தவறாகும். கதையின் கருவே இந்நிகழ்வை அடிப்படையாகக் கொண்டது. இதன் மூலம் பெண்கள், குறிப்பாக மாணவிகள், பொதுஇடங்களில் விழிப்பாக இருக்க வேண்டுவது குறித்தும் அப்படி எதுவும் தவறான நிகழ்வுகள் ஏற்படின் மிரட்டலுக்கு அடிபணியாமல் பெற்றோரிடம் தெரிவிக்க வேண்டும் என்றும் எடுத்துச் சொல்வதாக உள்ளது. எனவே, பண்பாட்டு விழிப்புணர்வாகத்தான் இதனைப் பார்க்க வேண்டும்.
  ‘குளித்தால் பாவம் போகும்’ என்பது பிற்போக்குச்சிந்தனைதான். மக்களில் பெரும்பாலோரிடம் உள்ள நம்பிக்கை இதுதானே! மகாமகம் குளியல் போன்றவற்றைத் தடைசெய்யா அரசு இத்தகைய நம்பிக்கையைக் குற்ற உணர்வுடன் கூறுவதைத் தவறு எனச் சொல்வதுதான் தவறு.
  எளிய நிலையில் உள்ள ஒரு மாணவன் தன் தகாச் செயலால் உயிரிழக்க நேரிடும் வகையில் நிகழ்ச்சி நடந்துள்ளது என்றால் கதைத்தலைவன் ஆன தந்தை காவல்துறையிடம் செல்ல இயலும்; உயர் காவல் அதிகாரியின் மகன் என்னும்பொழுது எவ்வாறு செல்ல இயலும். மேலும் தன்னையும் தன் தாயையும் காக்கவேண்டிய நேர்வில் தன் மகள் இச்செயலைச் செய்துள்ளாள் எனில் அவளைக் காப்பதுதானே தந்தையின் கடமையாக இருக்க இயலும். அதைத்தான் அவன் செய்துள்ளான். தன் மகன் ஒழுக்கக் கேடாக நடந்துள்ளதன் விளைவாகத்தான் அவன் காணாமல் போக நேர்ந்துள்ளது என்பதை உணர்ந்து வன்முறைப் போக்கைக்கைவிடாத் தாயாக உள்ள அதிகாரியிடம் இவர்கள் உண்மையைச் சொன்னால் எப்படிக் குடும்பத்தினர் காப்பாற்றப்படுவர். எனினும் மற்றுமோர் உரையாடலைச்சேர்த்திருக்கலாம். “மாணவன் குளிக்கும் காட்சியைப் படம் பிடித்த ஒழுக்கக்கேடான செயல், பெற்றோருக்குத் துன்பம் தருவதுடன் அவர்களின் மதிப்பிழப்பிற்கும் காரணமாக அமையும் என்பதால்   சொல்லவில்லை” என்பதை உணர்தும் வகையில் அவ்வுரையாடல் அமைந்திருக்க வேண்டும்.
  குற்றத்தை மறைத்தது தவறு என்கின்றனர். நடைப்பயிற்சி செல்பவர்களே, உயிரிழந்தாலும் கொலையாளிகள் தண்டிக்கப்படாச் சூழல்தான் நம் நாட்டில் நிலவுகிறது. முன்பு ஒரு புள்ளி விவரம், இந்தியாவில் தமிழ்நாட்டில்தான் மிகுதியான விழுக்காட்டில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதாகவும் 65% வழக்குகளில் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றும் தெரிவித்தது. எஞ்சிய 35% குற்றவாளிகளுள் ஒருவரைப்பற்றிய படம், காவல்துறையின் விழிப்புணர்விற்கு வந்ததாக எடுத்துக் கொள்ள வேண்டியதுதான்.   குற்றச்செயலை எப்படி மறைக்கிறார்கள் என்பதுதான் கதை என எண்ணாமல், அலைபேசிவழி ஒழுக்கக்கேடான செயல்களில் ஈடுபடுவோருக்கு இத்தகைய செயல் மறு தரப்பிற்கு மட்டுமல்லாமல், அவர்களுக்கும் அவர்கள் குடும்பத்தினருக்கும் இன்னல் தருவதாக அமையும் என்பதை உணர்த்துவதாகக் கொள்ள வேண்டும்.
  ‘கொலையும் செய்வாள் பத்தினி’ என்பது கற்பு நிலையினரை வெளிப்படுத்தும் வழக்கிலுள்ள தொடர். ‘தன் கற்பிற்கு இழுக்கு நேர்ந்தாலோ தன் கணவன் காரணமின்றித் துன்புறுத்தப்பட நேர்ந்தாலும் அதுகண்டு வாளாவில்லாமல் அவ்வாறு துன்புறுத்துவோரைக் கொலையும் செய்வாள் பத்தினி’ என்பது இதன் பொருள்,. இதனை வலியுறுத்தும் திரைப்படங்களும் வந்துள்ளன. அதையே இன்றைய சூழலுக்கேற்ப, மாணவி, தனக்கும் தன் தாய்க்கும் கயவனால் கேடு நேரப்போவதை உணர்ந்து தன்னையும் தாயையும் காத்துக்கொள்ள, தடி கொண்டு தாக்கியுள்ளாள். எனினும் அவளின் நோக்கம் அவனைக் கொல்ல வேண்டும் அல்லது காயப்படுத்தவேணடும் என்பதல்ல. எனவேதான், தடியால் அடிக்கப்பட்ட மாணவன் கீழே விழுந்ததும் தொடர்ந்து அவனைத் தாக்காமல், குளிக்கும் காட்சி இடம் பெற்ற அலைபேசியைத்தான் கம்பினால் அடிக்கின்றாள். எனவே, இக்காட்சி ஒன்றே படத்தின் நோக்கம் வன்முறையல்ல என்பதைச் சரியாக உணர்த்துவதைப் புரிந்து கொள்ளலாம்.
  எனவே, வன்முறை, கீழ்மைக்காமம்(ஆபாசம்), என்றவற்றின் அடிப்படையில் வரிவிலக்கு மறுத்திருப்பது தவறாகும்.   மாறாகக் காட்சிப்படம் மூலம் நாளும் பரவும் கீழ்மைக்காடசிகளுக்கு முற்றுப்புள்ளி இடும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் காவல்துறையின் பணியை எளிமையாக்கியுள்ளதற்காக, தமிழ்ப்பெயர் இல்லாவிட்டாலும், ஊர்ப்பெயர் என்ற முறையில் முன்முறைகளை எடுத்துக்காட்டாகக் கொண்டு கேளிக்கை வரி விலக்கு அளிக்க வேண்டும்.,
  கேளிக்கை வரி என்பது மக்களிடம் இருந்து பெறும் மறைமுக வரியாகும். எனவே, இதன் பயன் பட உருவாக்குநருக்கும் வெளியீட்டாளருக்கும் போதாக வகையில் கேளிக்கை வரியைக்கழித்துக் கட்டணச் சீட்டு அளி்த்து அனைவரும் திரையங்குகளிலேயே பார்க்கும் வகையில் செய்ய வேண்டும்.
 எனவே, படக்கதையைப் புரிந்து கொள்ளாமல் தவறான குறிப்புரை இடம் பெற்ற குழுவினரின் மறுப்புரையை ஏற்காமல் அரசு மீளாய்வு செய்த பாபநாசம் திரைப்படத்திற்குக் கேளிக்கைவரிவிலக்கு அளிக்க வேண்டும்,.
  கேளிக்கை வரி விலக்கிற்கான தேர்வுக்குழுவைத் தமிழறிஞர்களைக் கொண்டு அமைக்க வேண்டும்.
 சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க் கணி. (திருவள்ளுவர், திருக்குறள் 120)
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
feat-default
 அகரமுதல 87, ஆனி 27, 2046 / சூலை 12, 2015
paapanaasam02_thavaiyakkunar_kaamusekar_remarks


Wednesday, July 22, 2015

இறையாண்மை என்றால் இதுதான் 1 – இலக்குவனார் திருவள்ளுவன்


iraiyaanmai_endral_thalaippu

  இறையாண்மை என்னும் சொல்லிற்குக் காலந்தோறும் மாறுபட்ட பொருள் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. எனினும் ஒரு குறிப்பிட்ட புவிப்பரப்பில் செலுத்தும் வகையில் அதிகாரம் முற்றிலும் உறைதல் (தங்குதல்) என்னும் அடிப்படைப் பொருளில் மாற்றம் மிகுதியாக இல்லை. இறையாண்மை என்பது அண்மையில் பெரிதும் பேசப்பட்டு வருவதால் நாம் இதனை அறிந்து கொள்ள வேண்டியது உள்ளது. தமிழர்க்கு இறையாண்மை மிக்க அமைப்பு தேவையா? அவ்வாறு பேசுவது சரியா? தவறா? தமிழக இறையாண்மை என்பது இந்திய இறையாண்மைக்கு எதிரானதா? என்பனவெல்லாம் நாம் அறிய வேண்டுவன ஆகும்.புவிப்பரப்பில் சட்டங்களையும் விதிகளையும்  ஆக்கவும் செலுத்தவும் அழிக்கவும் வல்ல மிகுஉயர் அதிகாரம் மிக்க அமைப்பை இறையாண்மை மிக்க அமைப்பு என்கின்றனர். தனியரிடம் அல்லது சிறு குழுவிடம் அல்லது கட்சியிடம் அல்லது பிற வகையில் இறையாண்மை உறைவதைப் பொறுத்து அதன் நிலைப்பாடும் மாறுபடுகிறது. ஆட்சி முறை மாறி வருவதாலும் பெரும்பாலும் இப்பொழுது மக்களாட்சி முறையே வற்புறுத்தப்படுவதாலும் இறையாண்மை பற்றிய விளக்கம் மாறுபடுகிறது.
 உரூசோ, பகுக்கப்படாத, முழுமையான, தவறெனச் சொல்ல  இயலாத, எப்பொழுதும் சரியான, பொதுநலன் சார்ந்த அதிகாரவைப்பை இறையாண்மை என்கிறார். இறையாண்மை இல்லாத சட்டம் எதுவும் இல்லை என்றும் அவர் கூறுகிறார். எனினும் 1789இல் பிரெஞ்சுப் புரட்சி ஏற்பட்ட பின்பு இறையாண்மை என்பது ஆளுவோரிடமிருந்து நாட்டு மக்களிடம் இட மாற்றம் பெற்றது. மாக்கியவல்லி, உலூதர், போடின், ஆபெசு (Machiavelli, Luther, Bodin, and Hobbes) முதலானோர் இறையாண்மை குறித்து அரசியல் சிந்தனைகளில் முதன்மை இடம் கொடுத்துள்ளனர்.அரசை உருவாக்கும் அதிகார ஆளுமை என்றும் வன்முறைக்கு அஞ்சா அரச ஆளுமை என்றும்கூட இறையாண்மை பற்றிய கருத்துகளை அறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
  இறையாண்மைக்கு உலக அளவில் ஒப்புக் கொள்ளப்பட்ட ஒரே பொருள் என்றும் இருந்ததில்லை எனப் பன்னாட்டுச் சட்டங்களில் வல்லுநரான இலாசா ஓபன்கெய்ம் (Lassa Oppenheim) கூறுகிறார்.சட்டப்படியும் நடைமுறைப்படியுமான (De jure and de facto) அதிகார உரிமையே இறையாண்மை என்றும் சொல்லப்படுகிறது. இதன்படி இறையாண்மை என்பது குடிமக்களைக் கட்டுப்படுத்தும் சட்டங்களைக் கொண்டுள்ளதா? நடைமுறையில் அவற்றிற்குக் குடி மக்கள் கட்டுப்படுகின்றனரா என்பவற்றைப் பொறுத்ததே. ஏட்டுச் சட்டத்தை விட நாட்டுச் செயல்பாட்டிற்கே இது முதன்மை அளிக்கிறது. நிலப்பரப்பு இருந்தால்தான் இறையாண்மை இருக்குமா என்றால் அப்படி ஒன்றும் கட்டாயம் இல்லை என்பதே உலக வரலாறு உணர்த்தும் உண்மை. இத்தாலி  நாட்டின் வாடிகன் நகரில் அமைந்துள்ள திருத்தல ஆளுகை (Holy See) என்பது  நிலப்பரப்பற்ற இறையாண்மை மிக்கதாகும். இதே போன்ற நிலப்பரப்பற்ற மற்றொரு இறையாண்மை அமைப்பு  இத்தாலியில் உள்ள படைவீரத் துறவிகள் தொண்டகம் (Sovereign Military Order of Malta) ஆகும். பன்னாட்டு அவையிலும் இவற்றிற்குப் பார்வையாளர் தகுதி உண்டு.
  பழந்தமிழ்நாட்டில் இறையாண்மை பற்றி ஒன்றும் சொல்லவில்லையா என்று வினவலாம். அவர்கள் இறையாண்மை பற்றிக் கவலைப்படவில்லை. இறைமாட்சி குறித்துத்தான் கருத்து செலுத்தினர். அஃது என்ன இறைமாட்சி என்கிறீர்களா? இறையாண்மை மாட்சிமையுடன் – சிறப்புடன் – அமைவதைக் குறிப்பதே இறைமாட்சி. இறையாண்மை ஆளும் முறைக்கு ஏற்ப மாறுபடலாம். ஆனால் இறைமாட்சி என்றும் நிலைத்திருக்க வேண்டும் என்ற அறவுணர்வு தமிழர்களிடம் ஓங்கியதாலே இறைமாட்சி குறித்து வலியுறுத்தினர்.தெய்வப்புலவர் திருவள்ளுவர் திருக்குறளின் இரண்டாம் இயலான பொருளியலில் முதல் அதிகாரமாக இறைமாட்சி குறித்துத்தான் விளக்குகிறார். குடிமக்கள் நலன் சார்ந்த இறையாண்மையே இறைமாட்சி மிக்கது என்பதை அவ்வதிகாரத்தின் முதல் குறளிலும் இறுதிக் குறளிலும் குடிமக்கள் பற்றிக் குறிப்பிட்டு வலியுறுத்துகிறார்.
  இவ்வதிகாரத்தின் முதல் குறள் (381)படைகுடி கூழ் அமைச்சு நட்புஅரண் ஆறும்      உடையான் அரசருள் ஏறு.  பொருளியல் முதல் குறள் மூலம் குடிமக்களை அரசின் உறுப்பாகத் தெய்வப்புலவர் திருவள்ளுவர் விளக்குகிறார்.இவ்வதிகாரத்தின் இறுதிக் குறள் (340)கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும்             உடையானாம் வேந்தர்க்கு ஒளிஎன்பதாகும்.
  இதன் பொருள், நலவாழ்வுக்கு வேண்டியவற்றை வழங்கியும், நிலையுணர்ந்து கருணை காட்டியும், நடுநிலை தவறாமல் ஆட்சி நடத்தியும் மக்களைப் பேணிக் காப்பதே ஓர் அரசுக்குப் புகழொளி சேர்ப்பதாகும் என்கிறார் கலைஞர் .இறைமாட்சி என்றால், அரசனின் நற்குண நற்செய்கைகள். உலகபாலர் உருவாய் நின்று உலகம் காத்தலின், இறை என்றார். திருவுடை மன்னரைக் காணில் திருமாலைக் கண்டேனே என்னும் என்று பெரியாரும் பணித்தார் என அரசனை இறைவனுக்கு ஒப்பாகக் கூறுகிறார் பரிமேலழகர். காலிங்கர் உலகத்து மக்கட்கெல்லாம் நலிவற்ற ஆட்சியை வழங்க மன்னவர் மாட்சிமை முற்பட வேண்டும் என்பதே இறைமாட்சி என்னும் பொருளில் விளக்குகிறார்.எனவே, இறையாண்மை யாரிடம் உள்ளது அல்லது எவ்வாறு உள்ளது என்பதை விட அது மாட்சிமைப்பட்டதாக இருக்க வேண்டும் என்பதே தமிழர் நெறி எனப் புரிந்து கொள்ளலாம். இதுவே உலகோர் போற்ற வேண்டிய தலைசிறந்த நெறியுமாகும்.
  இவற்றின் அடிப்படையில் நாம்  இந்திய இறையாண்மை குறித்து நோக்கலாம்.புவிப்பரப்பில் இயல்பாய் அமைந்த நிலப்பரப்பில் கூடி வாழும் மக்களினம் தம் நலனுக்கெனத் தன்னளவில் கொண்டுள்ள அதிகாரமும் உரிமையுமே உண்மையில் இறையாண்மையாக உருப் பெருகிறது அல்லது அழைக்கப் பெறுகிறது எனலாம். இருப்பினும்  உலகின் பல பகுதிகள் குடியேற்றங்களாலும் ஆட்சிப் பரவலாலும் ஆளுகைப் பகுதிகளாக உருவாகிப் பின்னர் இறையாண்மை மிகுந்த நாடுகளாக விளங்குகின்றன. இதைப்போன்றே இந்தியா என்று இன்று அழைக்கப் பெறும் இந்நிலப் பரப்பும் இயல்பாய் உருவான இயற்கை நாடல்ல. அயலவர்  ஆட்சி வசதிக்காகச் செயற்கையாக உருவாக்கப்பட்ட ஆளுமைப் பகுதியே.
(தொடரும்)
– இலக்குவனார் திருவள்ளுவன்


Followers

Blog Archive