Sunday, November 8, 2020

அடிப்படை அறிவற்றவரா கே.எசு.அழகிரி? – இலக்குவனார் திருவள்ளுவன்

 அகரமுதல


அடிப்படை அறிவற்றவரா கே.எசு.அழகிரி?

பேராயக்(காங்.)கட்சியின் தமிழகத் தலைவரான கே.எசு.அழகிரி அடிப்படை அறிவற்றவரா எனக் கேட்டால், கட்சியை நடத்துவதற்குரிய, திட்டமிடுவதற்குரிய நல்லறிவு படைத்தவர் என்றுதான் சொல்ல வேண்டும்.  ஆனால் அவருடைய பேராயக்(காங்.)கட்சிக்குரிய இலக்கணத்தின் படி கட்சியின் இந்தியத்தலைமைக்கு அடிமையாகக் காட்டிக் கொள்வதற்குரிய கருத்துகளை வெளியிடுவதில் வல்லவராக உள்ளார். மறந்தும் தமிழ், தமிழர் நலன்களில் அவர் கட்சி மேற்கொள்ளவேண்டியநடவடிக்கைகள் குறித்து மேலிடத்தில் தெரிவிக்க மாட்டார்.

இராசீவு காந்தி கொலை வழக்கில் சிக்க வைக்கப்பட்ட எழுவரையும் விடுதலை செய்ய முன்னாள் முதல்வர் சட்டமன்றத் தீர்மானம் முதலான பல நடிவடிக்கைகளையும் எடுத்துள்ளார். பா.ச.க.வின் அடிமை என ஊடகத்தினரால் சொல்லப்பட்டாலும் இந்நாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் அவர் வழியில் எழுவர் விடுதலைக்கு முயன்று வருகிறார். ஈராண்டாக விடுதலைக்கான கோப்பினை உறங்க வைத்துக் கொண்டிருக்கும்  ஆளுநருக்கு நேரிலும் மடல் வழியிலும் அழுத்தம் கொடுத்து வருகிறார்.

எழுவரையும் விடுதலை செய்ய வாய்ப்பு வந்த பொழுது அப்போதைய மத்திய ஆட்சியின் கட்டுப்பாட்டினால் மேனாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி அந்த நல் வாய்ப்பைத் தவற விட்டார். அதன் கெடுதிதான் இன்று வரை நீடித்துக் கொண்டுள்ளது. ஆனால், அவர் தலைவராக இந்த தி.மு.க.வின் இந்நாள் தலைவர் மு.க.தாலின் அன்றைய கருத்தை உடும்புப் பிடியாகப் பற்றிக் கொண்டிருக்கவில்லை. எந்தச் சூழலில் அப்படிச் சொன்னார் என்றும் ஆராய்ந்து கொண்டிருக்கவில்லை. எதிர்க்கட்சித்தலைவரின் கடமையைச் செய்யும் வகையில் எழுவர் விடுதலைக்குக் குரல் கொடுத்து வருகிார.

அது மட்டுமல்ல. ஆளுநருக்கு இது குறித்து மடலும் அனுப்பியுள்ளார்.  அதில், “அரசியல் சட்டப் பதவிகளில் இருப்போர் உரிய காலவரம்பிற்குள், தங்களது கடமையை ஆற்றிட வேண்டும் என்பது சட்டத்தில் வழக்கமான நடைமுறை.மாநில அரசின் பரிந்துரையை இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக முடிவு எடுக்காமல்- தங்கள் அலுவலகத்தால் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது – சட்டத்தின் அடிப்படையில் மாநிலத்தில் ஆட்சி நடைபெறவில்லையோ என்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது. எனவே தமிழக அமைச்சரவையின் 9.9.2018–ஆம் நாளிட்ட பரிந்துரையைப் பரிவுடன் ஏற்று ஏழு பேருக்கும் ஆயுள் தண்டனையைக் குறைத்து – உடனடியாக அவர்களை விடுதலை செய்ய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டுள்ளார். ஆளுங்கட்சியின் உண்மைக்குக் குரலுக்குச் சார்பாகவே மாந்த நேய அடிப்படையில் மடல் அனுப்பியுள்ளார். இதுதான் தலைவனுக்குரிய அழகு.

ஆனால் கே.எசு.அழகிரி, தமிழ்நாட்டின் முதன்மைக்கட்சி ஒன்றின் தலைவர் என்ற முறையில் தான் ஆற்ற வேண்டிய கடமையை ஆற்றாததுடன் அதற்கு எதிராகவும் வேண்டுமென்றே அறிக்கை விட்டுள்ளார். அதில், “7 பேர் விடுதலையை நீதிமன்றம் அறிவித்தால் ஏற்றுக் கொள்வோம். ஆனால், அரசியல் கட்சியினர் அவர்களுக்கு விடுதலை கோருவது ஏற்புடையது அல்ல.”  எனக் குறிப்பிட்டுள்ளார்.

மக்களவை உறுப்பினராகவும் இருமுறை சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்த ஒருவர் இவ்வாறு கூறுவது வியப்பாக உள்ளது. சட்டம் இயற்றும் பொறுப்பில் இருந்த ஒருவருக்கு அடிப்படைச் சட்ட அறிவு கூட இல்லாமல் இருக்குமா? என்று எண்ணத் தோன்றுகிறது. வேண்டுமென்றே தவறான நச்சுக்கருத்துகளை மக்களிடம் திணிக்க முயலுகிறார் என்றுதான் எண்ண வேண்டியுள்ளது.

நீதி மன்றத்திற்குத் தண்டிக்கும் அதிகாரம்மட்டும்தான் உள்ளது. ஒரு வழக்கில், நீதிமன்றம் தண்டித்த பின்னர் அதற்கு வேலையில்லை. மேல் முறையீட்டு நீதி மன்றம் தண்டனையைக் குறைக்கலாம் அல்லது மாற்றலாம். ஆனால், தண்டனை வழங்கிய நீதிமன்றத்திற்கு அந்த அதிகாரம் கிடையாது. ஆனால், தண்டிக்கப்பட்டவர்களை மன்னிக்கும் அதிகாரம் சிறைத்துறைக்கு இருக்கிறது. இந்தியாவில் குற்ற வழக்குமுறைச் சட்டம் 432. 433 ஆகியவற்றின் கீழ் இவை செயல்படுகின்றன. தண்டனைக் குறைப்புப் பிரிவு (remission section) மூலம் அதற்குரிய விதிகளைப் பின்பற்றி அரசின் ஒப்புதலுடன் அவர்கள் தண்டனைவாசிகளை மன்னித்து விடுதலை செய்யலாம். உலகெங்குமே இதுதான் நடைமுறை. இதனைப் பின்பற்றச்சொன்னால் இல்லாததும் பொல்லாததுமான அறிக்கை விடுகிறார்.

எனினும், மத்தியஅரசு சட்டங்களின் கீழ்த் தண்டனை பெற்றவர்களின் தண்டனைக் குறைப்பு விவரத்தை மத்திய அரசிற்குத் தெரியப்படுத்தப்பட வேண்டும். ஆனால், அப்பொழுதும் மத்திய அரசிற்கு மறுக்கும் உரிமை யில்லை. தன் கருத்தினைத் தெரிவிக்கலாம் அவ்வளவுதான். இதை ஏற்பதும் மறுப்பதும் மாநில அரசிற்குரியது. இந்த நடைமுறையைப் பின்பற்றியே மேனாள் முதல்வர் செயலலிதா 2015 இல் செயற்பட்டார்.

எனவேதான், மேனாள் முதல்வர் செயலலிதா,

“மத்திய அரசு 3 நாட்களுக்குள் தனது கருத்தினைத் தெரிவிக்காமல் காலம் தாழ்த்தினால், குற்ற விசாரணை முறைச் சட்டம் 432-இல் மாநில அரசுக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில் அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, திருவாளர்கள் சுதேந்திரராசா என்கிற சாந்தன்,  சிரீகரன் என்கிற முருகன், பேரறிவாளன் என்கிற அறிவு, திருமதி நளினி, இராபர்ட்டு பயசு, செயகுமார், இரவிச்சந்திரன் ஆகியோர் விடுவிக்கப்படுவார்கள் என்பதை இந்த மாமன்றத்திற்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என அறிவித்தார்.

பிற நாடுகளில் மட்டுமல்லாமல், இந்தியாவின் பிற மாநிலங்களில் மட்டுமல்லாமல், தமிழ்நாட்டிலும் இதுவரை  தண்டனைக்குறைப்பு முறையில்  ஆயிரக்கணக்கான தண்டனைவாசிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

உண்மையான நீதிமுறையும் சட்ட முறையும் இவ்வாறு இருக்க கே.எசு.அழகிரியும் அவர் கட்சியினரும் எதிர்ப்பது  அரசின் சட்ட நடைமுறைகளில் குறுக்கிடுவதாகும்.எனவே, இவர்மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

“சட்டத்தின் முன் யாவரும் சமம்” என்பது குற்றவாளிகள் கண்ணோட்டத்தில் மட்டுமல்ல. பாதிக்கப்பட்டவர்களின் கண்ணோட்டத்திலும்தான். பாதிக்கப்பட்டடவர்களில் செல்வமும் செல்வாக்கும் உள்ளவருக்கு ஒரு நீதி. ஒன்றுமில்லாதவருக்கு வேறொரு நீதி என்பது சட்டமல்ல.

எனவே, கொல்லப்பட்டவர் முன்னாள் தலைமையமைச்சராக இருந்த இராசீவு காந்தி என்பதற்காகத் தண்டனைவாசிகளுக்கு எதிராக நீதியை வளைப்பதும் குற்றமாகும்.

குற்றம் புரிந்தவர்களுக்கே முன்விடுதலை என்பது சட்டப்படியான செயலாக உள்ளபொழுது குற்றவாளிகளாகச் சிக்க வைக்கப்பட்டவர்களிடம் மனிதநேயமும் அறவுணர்வும் கொண்டு செய்படவேண்டுமல்லவா? 

காவல்துறை அதிகாரிகளும் நீதித்துறையினருமே இவர்களுக்குப் பொய்யான இட்டுக்கட்டப்பட்ட சான்றாவணங்களின்படித் தண்டனை வழங்கப்பட்டதாகப் பொதுவெளிகளில் தெரிவித்துள்ளனர்.  அப்பொழுதே விடுதலை செய்து இழப்பீடு கொடுக்க வேண்டியவர்களை இன்னும் அடைத்து வைத்திருப்பது கொடுமையல்லவா?

நீதிக்குக் குரல் கொடுப்பவரின் கட்சியின் வண்டவாளம் என்ன? கட்சித் தலைவர்களுக்காகக் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்குப் பதவிகள் வழங்குவதுதானே!

போலநாத்து பாண்டே(Bholanath Pandey), தேவேந்திர பாண்டே (Devendra Pandey) ஆகிய இருவரையும் பேராயக்(காங்.)கட்சி சட்டமன்ற உறுப்பினர்களாக ஆக்கியது. தேவேந்திரர் உத்தரப்பிரதேசக் காங்கிரசுக் கட்சியின் பொதுச்செயலராக நியமிக்கப்பட்டார். போலாநாத்து இந்திய இளைஞர் காங்கிரசுக் கட்சியின்  பொதுச்செயலராகவும் இந்தியத் தேசியக் காங்கிரசுக் கட்சியின் செயலராகவும் நியமிக்கப்பட்டார். இவர், தொடர்ந்து ஆறுமுறை (1991,1996, 1999, 2004, 2009, 2014) சலேம்பூர்(Salempur) நாடாளுமன்றத் தொகுதியின் வேட்பாளராகவும் ஆக்கப்பட்டார். அப்படி என்ன இவர்கள் நாட்டு மக்களுக்காக நாட்டிற்காகப் பாடுபட்டார்கள் என்கிறீர்களா?

நெருக்கடிநிலைத் துன்பங்களை வழங்கியதற்காகக் கைது செய்யப்பட்ட இந்திரா காந்தியை விடுதலை செய்யவும் அவர் மகன் சஞ்சய் காந்திக்கு எதிரான அனைத்துக் குற்ற வழக்குகளையும் திரும்பப் பெறவும் வலியுறுத்தி 126 பயணிகள் இருந்த விமானத்தைக் கடத்தினார்கள். இதற்குத்தான் இந்தப் பரிசுகள்.

இந்திராகாந்தி கொல்லப்பட்ட பின்னர் ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் கொல்லப்பட்டனர்;; துன்புறுத்தப்பட்டனர்; அவர்களின் உடைமைகள் அழிக்கப்பட்டன;  நூற்றுக்கணக்கான பெண்கள் கற்பழிக்கப்பட்டனர். ஆனால் குற்றவாளிகளை ஒன்றும் செய்யவில்லை. பெயரளவிற்குச் சிலர் மீது வழக்குகள் போடப்பட்டன. அவர்களில் ஒருவரான சஞ்சன் குமார்(Sajjan Kumar) என்பவருக்கு. நாடாளுமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற ஊரக மேம்பாட்டுக் குழு உறுப்பினர்  முதலான பரிசுகள் வழங்கப்பெற்றன.(எனினும் பின்னர் அவர் தண்டனை பெற்றார்.)

மூத்த தலைவர் கமல்நாதனுக்கு (Kamal Nath) 1985, 1989, 1991,1998,1999, 2004, 2009  ஆம் ஆண்டகளில் மக்களவை உறுப்பினர்,1991 – 1995 இல்  சுற்றுச்சூழல் வனங்களுக்கான (தனிப் பொறுப்பு) மத்திய இணை அமைச்சர் பதவி; 1995 – 1996 இல்  நெசவுத்தொழில்களுக்கான (தனிப் பொறுப்பு) மத்திய இணை அமைச்சர் பதவி; 2001 – 2004 வரை, காங்கிரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் பதவி; மே 23, 2004 இல் இருந்து வணிகம் & தொழில்துறையின் மத்திய அமைச்சர் பதவி;  2009 இல் சாலைப் போக்குவரத்து –  நெடுச்சாலைகள் துறை மத்திய அமைச்சர் பதவி; 2018 இல் மத்தியப் பிரதேசத்தின் முதல்வர் பதவி எனத் தொடர் பரிசுகள் வழங்கப் பெற்றன.

எதற்காக இத்தனைப்பரிசுகள்? சீக்கியர் படுகொலைகளை விசாரித்த நானாவதி ஆணையத்தால்  குற்றம் சாட்டப்பட்டவர்களில் இவர் முதன்மையானவர். அந்தத் தகுதிக்காகத்தான் இத்தனைப் பதவிப் பரிசுகள்.

இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். கொலைகாரர்களுக்கும் கற்பழித்தவர்களுக்கும் வன்முறையில் ஈடுபட்டவர்களுக்கும் பயணிகள் விமானத்தைக் கடத்தியவர்களுக்கும் கட்சித்தலைவர்களுக்காகக் குற்றம் இ்ழைததவர்கள்  என்பதால் குற்ற வழக்கின்றியும் குற்ற வழக்குகளில் சிக்கினாலும் விடுவித்தும் பதவிகள் வழங்கும் கட்சியின் மாநிலத் தலைவர் இப்பொழுது அப்பாவி எழுவர்பற்றித் தவறான கருத்துகள் தெரிவிப்பதற்கு வெட்கப்படவில்லையே!

எனவே, தமிழக அரசு சட்டமுறையான செயலைத் திரித்துக் கூறி அரசுப்பணிக்கு இடையூறாக இருக்கும் கே.எசு.அழகிரி மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசுப்பள்ளி மாணாக்கர்களுக்கு மருத்துவக்கல்வியில் 7.5 விழுக்காடு உள் ஓதுக்கீடு வழங்கியும் வேறு சில நடவடிக்கைகள் மூலமும் திறம்பட முதல்வர் செயல்படுகிறார். புரட்சித்தலைவி வழிச் செயல்படும் இலட்சியத்தலைவர் எடப்பாடியார் என அன்பர்கள் போற்றும் வண்ணம் திகழ்கிறார். எனவே, உள் ஒதுக்கீட்டு ஆணை போன்று எழுவர் விடுதலைக்கும் உடன் ஆணை வழங்க வேண்டுகிறோம்.

மனித நேயமற்ற தமிழகம் என்ற பெயர் வராமல் காத்திட விடுதலை ஆணை பிறப்பிப்பார் என எதிர்நோக்குகிறோம்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

இதழுரை, அகரமுதல 

Thursday, November 5, 2020

போலிப் பெரியாரியவாதி குட்பூவிற்குச் சில வினாக்கள்: இலக்குவனார் திருவள்ளுவன்

 அகரமுதல


போலிப் பெரியாரியவாதி

குட்பூவிற்குச் சில வினாக்கள்

 

பெண்களை இழிவுபடுத்துவதில் மனுநூலுக்கு இணை மனுநூல்தான். அதில் உள்ள அத்தகைய கருத்தை முனைவர் தொல்.திருமாவளவன் கடந்த திங்கள் பெரியார் வலைக்காட்சியில் குறிப்பிட்டுப் பேசியுள்ளார். அவர் இல்லாத ஒன்றைக் கூறவில்லை. முன்னரே திராவிட இயக்க இதழ்களிலும் குமுக வலைத்தளங்களிலும் மட்டுமல்லாமல் நடுநிலை எழுத்தாளர்களாலும் அறிஞர்களாலும் பன்முறை கூறப்பட்ட செய்திதான்.

பா.ச.கட்சியில் புதியதாகச் சேர்ந்தமையால் விளம்பரம் தேட விரும்பிய நடிகை குட்பூ ஒரு திங்கள் கழித்து வந்த அப்பேச்சைப் பார்த்துப் பொங்கி எழுந்துள்ளார். பெண்களை இழிவுபடுத்திப் பேசியதாகக் கூறித் திருமாவிற்குக் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பாசகவினர் பெண்களுக்கு எதிராகக் கொடுமைகள் இழைத்தபோதும் அவற்றுக்குப் பரிசாகப் பதவிகளை அக்கட்சி வாரி வழங்கிய போதும் அமைதி காத்தவர், விழிப்புணர்வுப் பேச்சிற்காகப் பொங்கிஎழுந்து கண்டனம் தெரிவிப்பதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதும் ஏன்? சான்றுக்கு ஒன்றிரண்டைப் பார்ப்போம்.

தில்லி சட்டப்பேரவைத் தேர்தலின் பொழுது பாசக வெற்றி பெற்றால் பள்ளிவாசல்கள் இடிக்கப்படும் என்று பாசக நாடாளுமன்ற உறுப்பினர்  பருவேசு வெர்மா(Parvesh Verma) எச்சரிக்கை விடுத்தார். இம் மதவெறிப்பேச்சிற்காகப் பொங்கி எழாமல் அக்கட்சியிலேயே ஐக்கியமாகியது ஏன்?

கடந்த இரண்டாண்டுக்கு முன்பு உள்ள புள்ளிவிவரப்படி பெண்களுக்கு எதிரான குற்றம் இழைத்து வழக்கு தொடுக்கப்பட்டவர்களில் 47 பேருக்குப் பாசகவில் 2014-2018 இல், தேர்தலில் வாய்ப்பு தரப்பட்டுள்ளது. பா.ச.க. தோன்றிய முதல் இதுவரை என்றால் இத்தகையோர் நூற்றுவரைத் தாண்டுவர். பெண்களுக்கு எதிரான குற்றம் இழைத்தவர்களுக்குப் பதவிகளா எனப் பொங்கி எழாமல் அக்கட்சியிலேயே ஐக்கியமாகியது ஏன்?

கடந்த 2018-ஆம் ஆண்டு, சனவரி 10 அன்று சம்மு பகுதியின் கத்துவா நகரில் `பகர்வால்’ என்ற நாடோடிப் பழங்குடி இனத்தைச் சேர்ந்த எட்டு அகவைச் சிறுமி காணாமல் போனார். பின்னர் அச்சிறுமி கோயில் பணியாளர் சஞ்சிஇராம் முதலானவர்களால் கூட்டு வன்புணர்விற்கு ஆளாக்கப்பட்டுக் கொல்லப்பட்டார் என அறிய வந்தது. பின்னர் இவர்கள் நீதி மன்றத்தால தண்டிக்கப்பட்டுச் சிறையில் உள்ளனர்.

எனினும் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டபொழுது அவர்களுக்கு ஆதரவாகவும் விடுதலை செய்ய வலியுறுத்தியும்  இந்து ஏக்தா மன்சு(Hindu ekta munch) அமைப்பு பேரணி நடத்தியது. இதில் பா.ச.க. அமைச்சர்கள் சந்திர பிரகாசு கங்கா, இலால் (சிங்கு) ஆகியோர் பங்கேற்றுள்ளனர். அமைச்சர்களே, சிறுமியைச் சீரழித்துக் கொன்றவர்களுக்காக வாதிடுவதா எனப் பொங்கி எழாமல் அக்கட்சியிலேயே ஐக்கியமாகியது ஏன்?

குல்தீபு சிங்கு செங்கர் (Kuldeep Singh Sengar)  என்பவர், பெண்களுக்குப் பாதுகாப்பற்ற மாநிலமாகக் கூறப்படும் உ.பி.யில் பா.ச.க சட்டமன்ற உறுப்பினர் ஆவார். இவர் ச.ம.உ.ஆகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 2017 ஆம் ஆண்டே வேலை கேட்டு வீட்டிற்கு வந்த 17 அகவைச் சிறுமியை மற்றொருவருடன் சேர்ந்து வன்புணர்வு செய்துள்ளார்.  அப்பெண்ணின் தந்தைமீது பொய்வழக்கு பதியச்செய்து சிறையில் இறக்கும் படிச் செய்துள்ளார். அப்பெண்ணின் வழக்குரைஞரையும் உறவினர் ஒருவரையும் மகிழுந்தில் செல்லும் பொழுது சுமையுந்து ஏற்றிக் கொல்லச் செய்துள்ளார். இதற்காகத் தில்லி நீதிமன்றத்தால் ஆயுட் தண்டனையும் பெற்றுள்ளார் மக்கள் சார்பாளரான தன்னை வேலைக்காக நாடிவந்த சிறுமியைக் கற்பழித்ததுடன் அதற்காகக் காவல் துறையில் முறையிட்ட தந்தை, வாதாடிய வழக்குரைஞர், உதவிய உறவினர் எனப் பலரையும் அழித்தவருக்கு அழித்தவருக்கு எதிராகப் பொங்கி எழாமல் அக்கட்சியிலேயே ஐக்கியமாகியது ஏன்?

பெண்களைப் பழித்துச் சொன்னதாகப் பொங்குபவர் தொலைக்காட்சிகளிலும் திரைக்காட்சிகளிலும் பெண்களை இழிவாகக் காட்டுகிறார்களே! ஏன் பொங்கி எழவில்லை? பெண்கள் என்றால் அன்பின் உருவம், பண்பின் சிகரம் என்றெல்லாம் சொல்கிறார்கள். ஆனால், தொலைக்காட்சித் தொடர்களில் காட்டப்படும் பெண்கள் வஞ்சகர்களாகவும் கூட்டுச் சதியினராகவும் அடுத்தவள் கணவனை அடைய குறுக்கு வழிகளை மேற்கொள் பவர்களாகவும் கணவன் மனைவியரைப் பிரித்து வைப்பவர்களாகவும் தான்  ஆசை கொள்பவனை அடைய  என்ன வேண்டுமானாலும் செய்யும் காமுகியராகவும்தான் உள்ளனர். அடியாட்கள். கொலைகாரர்கள், கொள்ளைக்காரர்கள், போதை மருந்து விற்பவர்கள் முதலானவர்களை அறிந்து வைத்து அவர்கள் மூலம் கொடுமை செய்பவர்களாகவும் பாசங்காட்டும் அன்னைபோல் நடித்து வளர்ப்பு மகன் சொத்துகளை அடைய  அவனை அழிக்க  முயல்பவர்களாகவும் அவன் மனைவியாகிய மருமகளைக் கொன்று தனக்கு வேண்டியவளுக்குத் திருமணம் செய்ய முயலும் மோசடிக்காரிகளாகவும்தான் காட்டப்படுகின்றனர். மனுநூல் பெண்களைப்பற்றி என்ன சொல்கிறதோ அப்படித்தான் காட்டப்படுகின்றனர். இவற்றுக்காகப் பொங்கி எழாமல் உண்மையை உரைப்பதற்குப் பொங்கி எழுவது ஏன்?

வெற்று விளம்பர ஆரவாரத்திற்காகத்தானே இல்லாத பெருமையைக் கூறி இருக்கின்ற இழிவைச் சுட்டிக்காட்டியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார். எனினும் அவரிடம் சிறிது மனச்சான்று ஒட்டிக்கொண்டுள்ளது. எனவேதான், மனுநூலில்  பெண்களைக் கேவலப்படுத்தும் அளவுக்கு ஏதும் இல்லை என்றவர், “மனு நீதி என்று அழைக்கப்படும் மனுசுமிருதி நூலை இப்போது யாரும் பின்பற்றுவதில்லை. அதைப் பற்றி இப்போது யாரும் பேசவும் இல்லை. அப்படி இருக்கும்போது, பழங்காலத்தில் எழுதப்பட்ட அந்த நூலைப் பற்றி இப்போது திருமாவளவன் விமர்சித்துப் பேசுவதற்கு என்ன தேவை வந்தது?” என்றார்.

“மனுநூல் பிராமணரால் எழுதப்பட்டது என்பதோடு பிராமணர்க்காகப் பிராமணர் நலன் கருதி எழுதப்பட்டது” என்று வெண்டை தானிகெர்             (Wendy Doniger) தம் நீண்ட ஆய்வு முன்னுரையில் எடுத்துரைக் கிறார்(பேரா.ப.மருதநாகயம், ஒப்பியல் வள்ளுவம், பக்.166). மனுநூல், பிராமணர்களைப்பற்றி மட்டுமே உயர்த்திப் பிறரைப் பழித்தும் இழித்தும் சொல்லும்  அறமற்ற நூல்.

எனவே, மனு சாதிக்கொரு நீதி கூறுவதில் வியப்பில்லை. பிற நாட்டு அறிஞர்களும் அறநூல்களுடன் ஒப்பிட்டு மனுவிற்கும் அறத்திற்கும் தொலைவு மிகுதி எனக் கூறியுள்ளனர். ஆனால், உயர்த்தப்படும் சாதியினர்தான் அதைத் தலையில் வைத்து ஆடுகிறார்கள் என்றால் பிறரும் அதைப் போற்ற வேண்டும் என எதிர்பார்ப்பது எப்படிச் சரியாகும்?

எனினும் இங்கே அதைப்பற்றிப்பாராமல் பெண்களுக்கு எதிராக அந்நூல் கூறியுள்ள சிலவற்றைப்பற்றி மட்டும் பார்ப்போம்.

அறமுறைக்கு எதிரான கருத்துகளையும் பெண்களை இழிவுபடுத்தும் செய்திகளையும் உடையது மனுநூல் என்னும் உண்மையை மறுக்க வழியில்லை. எனவே, எப்பொழுதோ எழுதப்பட்ட நூலைப்பற்றி, இப்பொழுது வழக்கிலில்லாத நூலைப்பற்றிக் கூறுவானேன் என மழுப்புகின்றனர்.

இதுவரை இதனை அறநூலாகவும் அறிவியல் நூலாகவும் போற்றி வந்தவர்கள், இப்பொழுது மனு என்று ஒருவர் இல்லை எனப் பின் வாங்குகின்றனர்.  மனுவின் உண்மை மக்களுக்குப் புரியத் தொடங்குவதால் எடுத்த நிலைப்பாடு. எனினும் வாய்ப்புள்ள பொழுது மீண்டும் முருங்கை மரம் ஏறுவர்.

மேற்கோள் காட்டிய மனு நூல், ஆங்கிலேயர்களால் புகுத்தப்பட்டது; வயவர்.வில்லியம் இயோன்சு என்ற ஆங்கிலேயரால் 1794ஆம் ஆண்டு எழுதப் பட்டது. என்றும் இந்து மதத்திற்கும், அதற்கும், எந்தத் தொடர்பும் இல்லை என்றும் சிலர் பொய் விளக்கம் அளிக்கின்றனர். வேதக்காலத்தில் குறிப்பிடப்பட்ட ஆரியத்தை – சங்கக்காலத்தில் குறிக்கப்பெற்ற ஆரியத்தை  ஆங்கிலேயர்களால் புகுத்தப்பட்ட கற்பனை என்போர்தான் இவ்வாறு கூறுகின்றனர்.

ஆரியர்கள் தமிழ்நூல் சிறப்பாக இருந்தாலும் பழித்துக் கூறுவர். அதையும் மீறி அதன் செல்வாக்கு உயர்ந்தது எனில், தாழ்த்தப்பட்டவரால் எழுதப்பட்டது என்பர். இருப்பினும் மக்கள் அந்த நூலைப் பாராட்டிப் பின்பற்றினால் தாழ்த்தப்பட்டவனுக்கும் பிராமணனுக்கும் பிறந்தவரால் எழுதப்பட்டது என்பர். இதையும் மக்கள் புறக்கணித்தால் எழுதியவர் பிராமணன் என்பர். இவ்வாறுதான் திருவள்ளுவர் குறித்தும் கூறினர்.

ஆரியத்தின் நச்சு வெளியே வந்தால் அதை மறைக்கப் பார்ப்பர். அதையும் மீறி வெளிவந்தது என்றால் அதனைக் கற்பனை, வேண்டாதவர்களால் புனையப்பட்டது என்பர்.

ஆரியர்கள் தங்களுக்குச் செல்வாக்கு இருக்கும் பொழுது ஆர்ப்பரிப்புடன் தங்களை வெளிப்படுத்திக் கொள்வர். ஆனால், செல்வாக்கு இல்லாத பொழுது மறுவாய்ப்பிற்காகக் காத்திருந்து அடங்கிக்கிடப்பர். 

பெண்களை இழிவுபடுத்தும் மனுவின் சாத்திரங்கள் மேலும் பின் வருமாறு உள்ளன.

“நிறை பிறழ்தலும், நிலையில் மனமும், நண்பின்மையும், மாதர் தம் இயல்பாவதால், கணவனால் நன்கு போற்றிப் புரக்கப்படும்போதும், அவர்கள் கணவரின் காவலை விரும்புவதில்லை.”( மனு, 9 : 15).

“மாதர்க்குப் பிறவியைத் தூய்மையாக்கும் சமக்காரங்கள் மந்திரப்பூர்வமாகச் செய்வித்தல் யாதுமின்று. இவர்களுக்கு வெள்ளையுள்ளமும் இல்லை. பாவம் நீக்கும் மந்திர உபதேசமும் கிடையாது. எனவே பொய்யைப் போல் மாசு வடிவினராக மாதர் இயன்றிருக்கின்றனர்.” (மனு, 9 : 18).

“பெரும்பாலும் மாதர் கற்பிலார் என்றே பெரிதும் பல நூல்களிலும் குறப்படுவனவற்றையும் கேட்பீராக!”(மனு 9.19)

“புலன்களை அடக்கியவனாயினும் அறிவிலியாயினும் அவர்களைத் தங்களது தொடர்பால் காமக்குரோதமுள்ளவனாகச் செய்வர் மாதர்.” (மனு, 2.214)

மனுவில் உள்ளன பொய்,  ஆங்கிலேயர்களின் கற்பனை என்கிறார்களே! அப்படியானால் ஆரியச்சாமியார்கள் அவற்றை ஏன் மேற்கோளாகக் கூற வேண்டும்.

காஞ்சிமடம் ஆரியச் சமயத்தையும் அதன் வருணாசிரமத் தருமத்தையும் காப்பதற்காகவும் பாடுபடுகிறது. கடந்த நூற்றாண்டில் அதன் தலைவராக இருந்த சந்திரேசகர(ஆச்சாரியா)ர், நேரு, பெண்களுக்குச் சொத்துரிமை எனச் சட்டவரைவு கொண்டுவந்த பொழுது அதனைக் கடுமையாக எதிர்த்தார். அப்பொழுது  அவர் இதனை மனுவிற்கு எதிரானது என்றார்.

“பெண்களுக்குச் சொத்தில் பாத்தியம் கொடுக்கப் போறாளாம்; அவாளுக்குச் சொத்துலே பங்கு கொடுத்தால் என்னாகும் தெரியுமா? இட்டப்பட்டவா கூடப் பெண்கள் ஓடிப் போயிடுவா. அபாண்டமா அபச்சாரமா போயிடும். மேலும் இதனால் பெண் தருமமே பாழாயிடும். பெண்களுக்குப் பாத்தியமோ சம்பாத்தியமோ இருக்கக் கூடாதுன்னு மநு சுமிருதி சொல்லியிருக்கு. ஆம்படையானுக்கு அடிமையாக இருக்கறதுதான் பெண்ணிற்கு அழகு.” என்றவர்தான் காஞ்சி மடத்தலைவர் சந்திரசேகரேந்திர சரசுவதி(அக்னிகோத்திரம் இராமானுச தாத்தாச்சாரியார், இந்து மதம் எங்கே போகிறது?) ஆரியச் சமையத்தலைவரே மனுவில் உள்ளதாகத் தெளிவாகக் கூறி அதனை மீறக்கூடாது என்னும் பொழுது “ஆங்கிலேயர், இல்லாத மனுவின் பெயரில் கூறியுள்ள கற்பனை’ என்பது பெரும் மோசடி அல்லவா?

அவர். பெண்கள் வேலைக்குச் செல்வதை எதிர்த்து, பெண்மையையும் இழந்து கொண்டு தீய ஆசைகளைப்பெருக்கிக் கொண்டு வேலைக்குச் செல்வதாகக் கூறுகிறார். “வீட்டில் அடைபட்டில்லை என்று அலுவலகத்திற்குப் போவதால் எத்தனை தப்புக்களுக்கு இடம் கொடுத்துப் போகிறது?” என அவரே கூறுகிறார்.(தெய்வத்தின் குரல் பாகம் 2).

“மாதர்கள் கற்பு நிலையின்மையும், நிலையா மனமும், இயற்கையாக உடையவர் ஆதலால் கணவனால் காக்கப்பட்டிருப்பினும் அவர்களை விரோதிக்கின்றார்கள்”(மனு 9.15)

“மாதர்கள் பெரும்பாலும் விபச்சார தோச முள்ளவர்களென்று அநேக சுருதிகளிலுஞ் சாத்திரங்களிலுஞ் சொல்லப்பட்டிருக்கின்றன.”  (மனுநூல்.9.19).

பெண்கள் திருமணத்துக்கு முன் பாலியல் உறவு வைத்துக் கொள்வது தவறில்லை என்கிறவர்கள் இவற்றை இயல்பாகக் கருதலாம். ஆனால், ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழ்பவர்களுக்கும் பிறன்மனை விழையாமையைப் போற்றுபவர்களுக்கும் எல்லாப் பெண்களையுமே பரத்தையர் என ஒழுக்கக்கேடராகக் கூறுவது எப்படி ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும்?

பெண்களுக்கு எதிரானதே மனு என்பதற்குப்பின்வரும் வரிகள் சான்று.

 “மலடியான மனைவியை எட்டு வருடத்திற்கு மேலும், சாப்பிள்ளை பெறுபவளைப் பத்து வருடத்திற்கு மேலும், பெண்ணையே பெறுபவளை பதினொரு வருடத்திற்கு மேலும், தீங்கு சொல்பவளை அப்பொழு தேயும் நீக்கி வேறு விவாகம் செய்து கொள்க. இந்த மனைவியர்களுக்கு மனமகிழ்ச்சிப் பொருள் கொடுக்க வேண்டியதில்லை.”

ஆனால்,இதே நிலையில் உள்ள ஆண்களுக்கு எத்தண்டனையும் இல்லை. (மனு 9.81)

“இப்பொழுது எங்கே இருக்கிறது மனுதருமம்? ஏன் அதைக் கிளப்ப வேண்டும்?” என்று மனு ஆதரவாளர்கள் சொல்வதே மனுவின் தீமைகளை மறைப்பதற்குத்தான்.

காஞ்சி மடத்தலைவர் சுப்பிரமணியன் என்ற செயேந்திரர் “வேலைக்குச் செல்லும் பெண்கள் எல்லாம் பரத்தையர்கள்” – என்று செவ்வி(பேட்டி) அளித்தார்.

நடிகர் ச.வெ.(எசு.வி.)சேகர், பெண்களை இழிவாகச் சொன்னவர்; பெரிய ஆட்களுடன் படுக்காமல் அவர்களால் (ஊடகப் பெண்களால்) செய்தியாளராகவோ செய்தி வாசிப்பவராகவோ ஆகிவிட முடியாது என்றதும் மனுஅவர் மனத்தில் ஆழமாகப்பதிந்துள்ளதுதான்.

பெண்கள் வேலைக்குச் செல்லாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? “வீட்டிற்கு வேண்டிய பாத்திரம் முதலியவற்றை தேடிப் பெறுவதற்காக பொருளை அவளிடம் கொடுத்தும் அதனைக் காப்பாற்றி வைத்து வேண்டிய போது செலவிடும்படி செய்தும் தட்டு முட்டுச் சாமான்களை சுத்தமாக வைத்துக் கொள்ளச் செய்தும் வீட்டை துப்புரவாக்கி வைத்தல், தேவ பூசைக்கான ஏற்பாடுகளைச் செய்தல், அடுக்களைப் பொறுப்பு, பாத்திரம் படுக்கை முதலியவற்றைச் சரியாக கவனித்துக் கொள்ளல் போன்ற இன்றியமையாத இல்லத்துக் காரியங்களை மனைவிக்குக் கற்பித்து அவற்றை அவளைக் கொண்டு செய்வித்தல் போன்றவற்றாலும் அவளது மனம் வேறிடம் செல்லாமற் காக்க!”(மனு 9.11).

பெண்கள் வீட்டுக்குள்ளேயே வேலை செய்து குடும்பத்தை பார்த்துக் கொள்வதற்காகவே உருவாக்கப்பட்டவர்கள் என்று உத்தரப் பிரதேச முதல்வர் சொல்கிறார்.

மனு கூறுவதைத்தானே இவர்கள் கூறுகிறார்கள். “மனு பழைமையான நூல், இப்பொழுது அதைப்பற்றிப் பேசுவது ஏன்” என்பது தவறுதானே.

இடைச்செருகல் என்பது ஆரியர்களுக்குக் கைவந்த கலை. தமிழ், பாலி, பிராகிருதம் முதலான மொழி நூல்களில் தங்கள் கருத்துகளை இடைச்செருகலாகப் புகுத்துவர். அதற்கு முன்னதாக அந்நூல்களைத் தங்கள் மொழியில் புத்தாக்கம் போல் எழுதி வைத்துக் கொண்டு சமற்கிருதத்தில் இருந்துதான் பிற மொழிகளுக்குச் சென்றது என்பர். தங்கள் நூல்களின் காலங்களை முன்னுக்குத் தள்ளித் தமிழ் முதலான பிற மொழி நூல்களின் காலங்களைப் பின்னுக்குத் தள்ளுவர். அதேபோல் தமிழ் முதலான மொழிநூல்களின் சிறந்த கருத்துகளைத் தங்கள் நூல்களில் இடைச்செருகல்களாகச் சேர்ப்பர். அவ்வாறு மனுவிலும் தமிழ் அறக்கருத்துகள் சேர்க்கப்பட்டுள்ளன. எனினும் நூலை முழுமையாகப் படிக்கும் பொழுது அக்கருத்துகள் மனுவின் அடிநாதக் குரலுக்கு எதிராக உள்ளதைப் புரிந்து கொண்டு இடைச்செருகல் என்பதை உணர்த்தி விடும். மனுவிற்கு எதிர்ப்பு வரும் பொழுது இடைச்செருகல்கள் கருத்துகளைக் காட்டி மனு பெண்ணின் காவலர் என்பதுபோல் பொய்யுரை கூறுகின்றனர்.

தன்னை நடுநிலையாளராகவும் துணிவானவராகவும் காட்டிக் கொள்பவர் குட்பூ. எனவே, பெண்களை இழிவாகக் கூறும் மனுவிற்கு எதிராக – மக்களிடையே உயர்வு தாழ்வைக் கற்பித்து ஒரு சாதி நலனுக்காக மட்டும் சாத்திரம் பேசும் மனுவிற்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டும். அதற்கு வாய்ப்பில்லை எனக் கருதினால் பா.ச.க.வை விட்டு வெளியேற வேண்டும். தானே, அமைப்பு ஒன்றைத் தொடங்கிப் பெண்களை இழிவு படுத்துவோருக்கும் சாதி வேற்றுமை பாராட்டுவோருக்கும் அத்தகைய நூல்களுக்கும் எதிராக இயக்கமாகச் செயல்படவேண்டும். அவ்வாறில்லாமல் அமைதி காத்தாலோ மீண்டும் மீண்டும் மனுவிற்கு ஆதரவாகக் குரல் கொடுத்தாலோ,  நடு நிலை தவறும் அவர், தமிழ்நாட்டில் நட்டாற்றில் விடப்படுவார் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். என்ன செய்யப் போகிறார் அவர்? உழைக்கும் மக்களின் பக்கம் இருப்பாரா? ஏய்த்துப் பிழைக்கும் மக்களின்பக்கம் இருப்பாரா? பெண்களின் உரிமையை மீட்போர் பக்கம் இருப்பாரா? பெண்களை இழிவுபடுத்துநர் பக்கம் இருப்பாரா?

எனவே, பெண்களைப் பரத்தையராகவும் இழிவாகவும் கூறும் மனுவின் மீது பாயாமல் , அதைத் தடை செய்யக் குரல் கொடுக்காமல் அதை எடுத்துரைப்பவர்கள் மீது பாய்வதில் எந்நீதியும் இல்லை என்பதை உணர வேண்டும்!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல : இதழுரை

Thursday, October 29, 2020

உள்ஒதுக்கீட்டு ஆணைக்குப் பாராட்டு! எழுவர் விடுதலைக்கும் அரசாணை வெளியிடுக! – இலக்குவனார் திருவள்ளுவன்

 அகரமுதல,


View Post

உள்ஒதுக்கீட்டு ஆணைக்குப் பாராட்டு! எழுவர் விடுதலைக்கும் அரசாணை வெளியிடுக!

அரசுப்பள்ளி மாணாக்கர் நலனைக் கருத்தில் கொண்டு துணிந்து அவர்களுக்காக மருத்துவக்கல்வியில் 7.5% உள்ஒதுக்கீடு வழங்கி அரசு ஆணை பிறப்பித்துள்ளமைக்கு மனமாரப்பாராட்டுகிறோம்!

மருத்துவப் படிப்பிற்காக அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு உள்ஒதுக்கீடு வழங்கத் தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது. ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி பி.கலையரசன் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டு அதன் பரிந்துரை அடிப்படையில் சிறப்புச் சட்டம் இயற்றி ஆளுநர் பரிந்துரைக்கு அனுப்பி வைக்கப்பட்டது அதில் சில திருத்தங்கள் கோரி ஆளுநர் அதை திருப்பி அனுப்பினார்.

பின்னர் அந்தத் திருத்தங்களுடன் மருத்துவம், பல் மருத்துவம், இந்திய மருத்துவம், ஓமியோபதி மருத்துவம் முதலான மருத்துவக்கல்வி சேர்க்கைக்கு கடந்த செட்டம்பர் 15ஆம் நாள் சட்ட முன்வடிவு தமிழகச் சட்ட மன்றத்தில்  நிறைவேற்றப்பட்டு,  ஆளுநர் ஒப்புதலுக்கு வரைவு அனுப்பி வைக்கப்பட்டது.

ஆனால், தமிழக ஆளுநர் ஒப்புதல் தராமல் காலங்கடத்திக் கொண்டு உள்ளார். இதனால் மருத்துவச் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெறுவதிலும் காலத்தாழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

அனைத்துக் கட்சியினரும் சட்ட வரைவில் கையொப்பமிட ஆளுநரை வலியுறுத்தினர். ஆனால், அவர் இதனை பொருட்படுத்தவில்லை. தி.மு.க. கூட்டணியினரும் ஆளுநர் மாளிகை முன்னர் கண்டனப் பேரணி நடத்தினர். இச்சட்டவரைவில் ஒப்பமிட ஆளுநருக்கு தி.மு.க.தலைவர் மு.க.தாலின் மடல் அனுப்பியிருந்தார். அதற்கு இதுகுறித்து முடிவெடுப்பதற்காக மேலும் 4  வாரக் காலம் தேவைப்படுவதாகக் காலத்தாழ்ச்சி செய்தார்.

அரசுப்பள்ளி மாணாக்கர் நலன் பாதிப்புக்ஷறுவது குறித்து ஆளுநர் சிறிதும் கவலைப்படவில்லை. மக்களாட்சியைக் காப்பதிலும் ஆர்வம் காட்டவில்லை என்பது புரிந்தது.

மருத்துவப்படிப்புகளில், அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5  உள்ஒதுக்கீடு வழங்குவதை இந்த ஆண்டே நடைமுறைப்படுத்த வேண்டும் எனக்கூறி, மதுரையைச் சேர்ந்த இராமகிருட்டிணன் என்பவர், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

இதனை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு பின்வருமாறு தெரிவித்தனர்: “7.5 சதவீத உள் ஒதுக்கீட்டுச் சட்ட வரைவில், ஆளுநர் மனச்சான்றின்படி முடிவு எடுக்க வேண்டும். அரசியலமைப்புச் சட்டப்படி , நீதிமன்றத்திற்கு ஆளுநர் பதிலளிக்க வேண்டிய தேவையில்லை. பொது(நீட்டு) தேர்வு முடிவுகள் வெளியாகிவிட்டதால், விரைவாக முடிவெடுக்க வேண்டும். சூழல், இன்றியமையாமை, அவசரம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு முடிவெடுக்க வேண்டும்.

பல கட்ட ஆலோசனைகளுக்குப் பிறகே, சட்டமன்றத்தில், இந்தச்சட்ட வரைவு நிறைவேற்றப்பட்டுள்ளது. அவ்வாறு இருக்கையில், கூடுதலாகப் பல கோணங்களில் ஆலோசிக்க ஆளுநருக்கு மேலும் காலவாய்ப்பு தேவையா?

மக்களால் தேர்வு செய்யப்பட்டவர்கள் உருவாக்கிய சட்ட வரைவிற்கு ஒப்புதல் வழங்குவதற்கு கூடுதல் காலம் கேட்பது விந்தையாக உள்ளது. இதுபோன்ற சூழல்கள் எழாது என்பதாலேயே, ஆளுநருக்கு உத்தரவிட முடியாது எனச் சட்டத்தில் உள்ளது.

ஆளுநருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது எனினும், மாணவர்களின் நலனைக் கருத்தில் கொள்ள வேண்டும்.”

இவ்வாறு  நடுநிலையுடன் நன்காய்ந்து நல்ல தீர்ப்பு வழங்கியுள்ளனர்.

எனினும் ஆளுநர் மாணாக்கர் நலன் குறித்தோ மக்களாட்சி மாண்புகுறித்தோ கருதிப்பார்க்க வில்லை.

ஆனால்,மாணாக்கர் நலனில் கருத்து செலுத்தித் தமிழக அரசு நல்ல முடிவு எடுத்துள்ளது.

அரசியலமைப்பு சட்டம் 162 பிரிவின்படி சட்ட வரைவு ஆளுநரிடம் நிலுவையில் உள்ள விவகாரத்தில் அரசாணை பிறப்பிக்கலாம் என்பதன் அடிப்படையிலும், மருத்துவ கலந்தாய்வு தொடங்கியதாலும் அவசர அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.  எனத் தெரிவித்துள்ளது.

 பாசகவின் அடிமை என்று சொல்லப்படுவதற்கு மாற்றாக முதல்வர் எடப்பாடி க.பழனிச்சாமி நல்ல முடிவெடுத்து அருவினை ஆற்றியுள்ளார். எனவே முதல்வருக்கும் தமிழக அரசிற்கும் பாராட்டுகள்.

மரு.இராமதாசு தெரிவித்துள்ளதுபோல் இந்த ஆணைக்குச்சட்டப்பாதுகாப்பு பெறவும் ஆளுநர் முடிவிற்குக் காலவரையறைசெய்யவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதேபோல் இராசீவு காந்தி கொலை வழக்கில் சிக்க வைக்கப்பட்டுப்பன்னெடுங்காலம் சிறையில் துன்புறும் எழுவரையும் விடுதலைசெய்யவும் ஆணை பிறப்பிக்க வேண்டும்.

சட்டமன்றத்தீர்மானம், அமைச்சரவை முடிவு, முதல்வர் அறிக்கை, உரை முதலியவற்றின் அடிப்படையில்  இவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்பதே தமிழக அரசின் நோக்கம்.

“19.02.2014 இல் கூடிய அமைச்சரவைக்கூட்ட முடிவின்படி எழுவரையும் விடுதலை செய்யத் தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. முடிவு மத்திய அரசுக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்படும். மத்திய அரசு 3 நாட்களுக்குள் தனது கருத்தினைத் தெரிவிக்காமல் காலம் தாழ்த்தினால், இந்திய அரசமைப்புச் சட்டம் 432- இல் மாநில அரசுக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில் அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, சுதேந்திரராசா என்கிற சாந்தன்,  சிரீஅரன் என்கிற முருகன், பேரறிவாளன் என்கிற அறிவு, நளினி,  இராபர்ட் பயசு, செயகுமார், இரவிச்சந்திரன்  ஆகியோர் விடுவிக்கப்படுவார்கள்” என்று மாண்புமிகு முதல்வர் செயலலிதா தெரிவித்தற்கு உயிர் கொடுக்க வேண்டும்.

உள்ஒதுக்கீட்டு ஆணைபோல் எழுவர் விடுதலைக்கும் உடன் ஆணை பிறப்பிக்க வேண்டும்.

இதனால் எழுவரும் எழுவர் குடும்பத்தினர் மட்டுமல்லாமல் உலகத் தமிழர்களும் உலகெங்கும் உள்ள மனித நேயர்களும் முதல்வரையும் தமிழக அரசையும் பாராட்டுவர். நிறைந்த உள்ளத்துடன் குவியும் பாராட்டு வெற்றி மாலைகளை முதல்வர் எடப்பாடி க.பழனிச்சாமிக்குச் சூட்டும்.

ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனஇரண்டின்

நீள்வினையால் நீளும் குடி.   (திருவள்ளுவர், திருக்குறள் – 1022)

அன்புடன்இலக்குவனார் திருவள்ளுவன்

இதழுரை – அகரமுதல

Saturday, October 17, 2020

இனப்பகைவன் வேடத்தில் நடிக்க மாட்டார்கள்! – இலக்குவனார் திருவள்ளுவன்

ஊடக வலிமை உணர்ந்தவர்கள்

இனப்பகைவன் வேடத்தில் நடிக்க மாட்டார்கள்!

மக்களுக்கு வழி காட்டுவதாகவும் திசை மாற்றுவதாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதாகவும் ஊடகங்கள் இருக்கின்றன. திரைக்காட்சியிலும் தொலைக்காட்சியிலும் உள்ளவர்கள் தோற்றத்திலும் பண்பிலும் எத்தன்மையராக இருந்தாலும் மக்களைக் கவர்ந்துவிட்டார்கள் என்றால் மக்களின் நாயக நாயகியர் அவர்களே என்பதில் ஐயமில்லை.

குடும்பத்தினரிடையே, உறவினரிடையே, பழகுநரிடையே, காண்பவரிடையே நிறவேற்றுமை பார்ப்பவர்கள், உருவ அழகிற்கேற்ப பழகுபவர்கள் பெரும்பான்மையர் உள்ளனர். ‘உருவு கண்டு எள்ளாமை வேண்டும்’ என்னும் திருக்குறளைப் படித்திருந்தாலும் அதைப் பின்பற்றமாட்டார்கள். ஆனால், இவர்களே, திரையில் குள்ளனாக இருந்தாலும் கறுப்பனாக இருந்தாலும் கோரனாக இருந்தாலும் அத்தகையவர்களின் திறமையினால் கவரப்பட்டார்கள் என்றால் அவர்களைத் தலையில் வைத்துக் கொண்டாடுவர். அவர்கள் பெயர்களில் நேயர் மன்றங்கள் வைத்துத் தம் உயிரையும் கொடுக்க முன்வருவர்.தீயன், வஞ்சகன், கெட்டவன்,இரண்டகன் என்பனபோன்று எதிர்ப்பண்பு வேடங்களில் தாம் விரும்பும் நடிக நடிகையர் நடித்தாலும் அவர்களை வரவேற்பர். அத்துடன் நில்லாது தீயன் முதலான பெயர்களையும் தங்களுக்குச் சூட்டிக் கொள்வர். அவர்கள் திரையில் உதிர்ப்பன உளறலளாக இருந்தாலும் தங்கள் வழிகாட்டுரைகளாக ஏற்றுக் கொள்வர்.

திரைஉலகைச்சேர்ந்தவர்கள் மக்கள் சார்பாளர்களானதும் அமைச்சர், முதலமைச்சர் பொறுப்பேற்பதும் ஊடக வலிமையால்தான். ஊடகலிமையை உணர்ந்ததால்தான் திரை உலகைச் சேர்ந்தவர்கள் அரசியலில் ஈடுபடுகின்றனர். தங்களின் திரைச்செல்வாக்கு அரசியலிலும் செல்வாக்கை ஏற்படுத்தும என நம்புகின்றனர். இம் முயற்சியில் சிலர் வெல்லலாம். சிலர் கவிழலாம். எனினும்  மக்களிடையே உள்ள திரைமுக மயக்கம் தங்களுக்குக் கை கொடுக்கும் என எதிர்பார்த்தே செயல்படுகின்றனர்.

ஆங்கிலத்தில் கடந்த நூற்றாண்டு தொடக்கத்தில் இருந்தே வரலாற்றுப்படங்கள் நூற்றுக்கணக்கில் வந்துள்ளன. தமிழில் சிவகங்கைச் சீமை, வீரபாண்டிய கட்டபொம்ன்,கருணன் முதலான சில படங்கள் வந்துள்ளன. இப்போது இன்றைய புகழ்வாணர்களை வரும்தலைமுறையினரும் அறிந்திருக்க வேண்டும் என்பதற்காக அவர்களைப்பற்றிய வரலாற்றுப் படங்களையும் எடுத்து வருகின்றனர். இது பாராட்டப்பட வேண்டிய ஒன்றாகும். மறைந்தபிறகு பாராட்டுவதை விட இருக்கும்பொழுதே பாராட்டுவது அவர்களின் உழைப்பிற்கான அறிந்தேற்பாகும்.

வாழும் நிலையில் உள்ள தலைவர்கள், கலைஞர்கள், ஆன்றோர்கள், விளையாட்டு வீரர்கள் என வரலாற்றுப்படங்கள் எடுக்கும் போக்கு இந்திய மொழிகளிலும் தமிழிலும் இப்பொழுதுதான் தொடங்கியுள்ளது. அந்தவகையில் இலங்கை மட்டைப்பந்தாட்ட வீரரான முத்தையா முரளிதரன் வரலாற்றுப் படத்தைத் தமிழில் இப்பொழுது எடுக்க உள்ளனர்.

மட்டைப்பந்தாட்டத் திறமைப்போட்டிகளில்(Test Match) 800 இலக்குகளை வீழ்த்தி அருவினை புரிந்தார் என்பதால் 800 என்னும் தலைப்பில் இவரைப்பற்றிய திரைப்படம் எடுக்கின்றனர். தமிழில் எடுக்கப்படும் படத்தை இந்தி, வங்காளம், சிங்காளம் முதலான பல மொழிகளிலும் மொழி மாற்றம் செய்து வெளியிட உள்ளனராம்.

இத்திரைப்படத்தை எடுப்பவர்கள் அல்லது இயக்குநர் முதலான தொழில் நுட்பக் கலைஞர்கள், பிற கலைஞர்கள் யாரையும் மக்கள் எதிர்க்கவில்லை. ஆனால் மக்கள் செல்வன் எனப் போற்றப்படும் நடிகர் விசய்சேதுபதி முரளீதரன் வேடத்தில் நடிப்பதற்குத் தமிழின உணர்வாளர்கள் உலகெங்கும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். விசய்சேதுபதி மீது மக்கள்கொண்டிருக்கும் தமிழ் உணர்வாளர் என்ற நம்பிக்கையே இத்தகைய எதிர்ப்புகளுக்குக் காரணம் என்பதை விசய்சேதுபதி உணர்ந்து இப்படத்தில் நடிப்பதிலிருந்து விலக வேண்டும்.

பொதுவாக ஈழத்தமிழர்கள் சொந்தநாடு என்பதால் உரிமை வேட்கையுடன் வாழ்பவர்கள். மலையகத் தமிழர்கள் வந்த நாடு என்பதால் உரிமை உணர்வு மழுங்கி வாழ்பவர்கள். முரளி மலையக் தமிழர். மலையகத்தமிழர்களிலும் உரிமைக்காகப் போராடிய, போராடும்  எண்ணற்றோர் இருக்கத்தான் செய்கின்றனர். முரளி, எப்பொழுதுமே பொதுவெளிகளில் சிங்களத்தில் பேசுநராக உள்ளார்.  “நான் முதலில் இலங்கையன்… அதன் பின்னரே தமிழன்” என்று சொல்லித் தமிழன் என்று கூறுவதைப் பின்னுக்குத் தள்ளுநராக உள்ளார். ஈழப்போராட்டங்ளைக் கொச்சைப்படுத்திப் பேசி வந்துள்ளார். 1,86,000 ஈழத்தமிழர்கள் கூட்டு இனப்படுகொலைக்கு ஆளான நாளை-அந்த ஆண்டை- மகிழ்ச்சியான நாளாகவும் மகிழ்ச்சியான ஆண்டாகவும் கூறியவர். அதற்கு விளக்கம் கூறுவதாக எண்ணிக் கொண்டு அதன்பின் போரில்லா வாழ்க்கை உள்ளதால் அவ்வாறு கூறியதாகக் கூறியுள்ளார்.  வாழும் மக்களிடையே அமைதியை உண்டாக்க வேண்டுமே தவிர அனைவரையும் கொன்று புதைத்துவி்ட்டு மயானஅமைதியைப் பாராட்டிக் கொண்டிருக்கக் கூடாது. பேரளவிலான கொத்து கொத்தான இனப் படுகொலைகளுக்குப் பின்னரும்  ஆள் கடத்தல், கட்டாயக்கருத்தடை, தமிழர் நிலங்களைச் சிங்கள நிலங்களாக ஆக்கல், தமிழர்களைச் சுற்றியும் அவர்கள் இடையேயும் சிங்களக் குடியேற்றங்களை உருவாக்கி வருவதல் முதலான பல்வேறு நடவடிக்கைள் மூலம் தமிழர்களை நாளும் அழித்து வருகிறது சிங்கள அரசு. இப்படி இருக்கையில் நாளும்  நடைபெறும் இனஅழிப்புகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் கொலைத்தலைவன் இராசபக்குசேவுடன் கூடிக்குலவுபவனைத் தமிழனாக எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? எனவேதான் அத்தகையவன் படத்தைத் தமிழ்நாட்டில் எடுக்கவும் அதில் நடிகர் விசய்சேதுபதி நடிக்கவும் உலகெங்கிலும் தமிழ் உணர்வாளர்களும்தமிழ் அமைப்புகளும் திரைக்கலைஞர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

‘அசுரன்’ படித்தில் நடித்த நடிகர் அருணாச்சலம் தான் ஈழத்தமிழன்னைக்குப் பிறந்தவர் எனக் கூறித் தன்னிடம் முதலில் முரளி வேடத்தில் நடிக்க அழைத்ததற்கு மறுத்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார். அவருக்குப் பாராட்டுகள்! விசய்சேதுபதிக்கு இப்படத்தில் ஒப்பந்தாகும் பொழுதே பின் விளைவுகள் என்னவாக இருக்கும் எதிர்ப்பலைகள் எழும் என்பனவெல்லாம் தெரிந்திருக்கும். இருப்பினும் அவர் துணிந்து நடிக்க ஒத்துக்கொண்டுள்ளார்.

திரைப்படங்கள் மூலமும் தவறான பரப்புரைகள் மூலமும் மூளைச்சலவை செய்து ஈழத்தமிழர்களின் உணர்வுகளை மழுங்க அடித்துக் கொண்டுள்ளது சிங்களஅரசு. அவற்றின் ஒரு பகுதிதான் இந்தத் திரைப்படமும்.

இந்தப் படத்தைப் பார்ப்பவர்கள் தங்களின் நாயகன் கூறும் உரைகளையும் ஏற்பார்கள் அல்லவா? அப்படியானால் அந்த வேடத்திற்குரிய மூல நாயகனின் தமிழ்ப்பகை உரைகளையும் ஏற்பார்கள் அல்லவா? எனவேதான், தமிழனாகப் பிறந்தும் அயலவனாக நடந்துகொள்ளும் இரண்டகனின் வேடத்தில் நடிக்க வேண்டா என மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். கோட்சேவிற்கு முதன்மை அளிக்கும் படங்களுக்கும் நிகழ்ச்சிகளுக்கும் எதிர்பபு தெரிவிப்பதுபோல்தான் இதுவும். நடிப்பது அவர் உரிமை என்றும் பிறரின் தவறான செயல்களை ஒப்பிட்டும் விசய் சேதுபதி இப்படத்தில் நடிப்பதற்கு ஆதரவு தருவோரும் உள்ளனர். அவர்கள் தமிழின உணர்வாளர்கள் அல்லர். செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் இராசு, “இலங்கை மட்டைப்பந்தாட்ட வீரர் முத்தையா முரளிதரன் தொடர்பான திரைப்படத்தில் நடிப்பது நடிகர் விசய் சேதுபதியின் தனிப்பட்ட உரிமை. ஆனால், மக்களின் உணர்வுகளையும் அவர் மதிக்க வேண்டும்.” என்றார். இதுவே, சரியான நிலைப்பாடு. இங்கே அவரின் உரிமைபற்றிப் பேச்சு எழவில்லை. அவர் உருவாக்கிய பிம்பத்தைச் சிதைக்க வேண்டா என்பதற்காக மக்களின் எதிர்ப்பு உணர்வைப் புரிந்து கொள்ள வேண்டும். உடனடியாக இத்திரைப்படத்தில் விளையாட்டரங்கங்களிலும் பிற இடங்களிலும் சிங்களக் கொடியை உயர்த்திப் பிடிக்கும் சிங்கள அரசை வாழ்த்தும் முரளி வேடத்தில் நடிப்பதில் இருந்து விலக வேண்டும்.

“என்ன இப்படிச் செய்து விட்டோமே என்று பின்னர் வருந்தும் படியான செயல்களைச் செய்யாது விட வேண்டும்” என்பதற்காகத் திருவள்ளுவர். “எற்றென்று இரங்குவ செய்யற்க”(குறளடி655) என்கிறார்.

புகழையும் அறத்தையும் தாராத தூய்மை அற்ற செயல்களை எக்காலத்திலும் ஒருவன் செய்யாமல் விட்டொழிக்க வேண்டும் என்பதைப் பின்வரும் திருக்குறளில்(652) திருவள்ளுவர் வலியுறுத்துவதைப் பின்பற்ற வேண்டும் நடிகர் விசய் சேதுபதியும் 800 திரைப்படக் குழுவினரும்..

என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு

நன்றி பயவா வினை.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

இதழுரை – அகரமுதல

 

Followers

Blog Archive