Sunday, August 18, 2024

சட்டச் சொற்கள் விளக்கம் 641-650 : இலக்குவனார் திருவள்ளுவன்

 




(சட்டச் சொற்கள் விளக்கம் 631-640 : இலக்குவனார் திருவள்ளுவன் – தொடர்ச்சி

641. Actionவழக்கு  

வழக்கு நடைமுறை

செயற்படுமுறை  

வழக்கு மூலம், செயல்,  வினையாற்றுதல், நடவடிக்கை, போர்வினை, வழக்குநடவடிக்கை, நாடகம் புதினம் முதலியவற்றின் நிகழ்ச்சிப்போக்கு, நடிப்பு செயலாய்வு, கருமம், தொழில், அமைதி, புரிவு, தொழிற்பண்பு, செய்தொழில், சேட்டை, வண்ணம், புணர்ப்பு, ஆட்டம், வினையம், செய், செயற்கை, நடவடிக்கை, வினை, கூத்து, கிரியை, வழக்கு, விசை, தாக்கம், செயல்வினை, செய்கை, அதிரடி.

  வீரதீரச் சண்டைப்படங்களை அதிரடிப்படம் (Action film) என்பர். அதிரடிப்பட நாயக, நாயகியரை முறையே அதிரடி நாயகர்(Action hero), அதிரடி நாயகி(Action heroine) என்பர்.  

ஒருவர் அல்லது ஒரு தரப்பு தன் அல்லது தம் உரிமையை நிலைநாட்ட அல்லது பிறரால் ஏற்படும் தீங்கிழைப்பைத் தடுக்க நீதி மன்றத்தின் முன் கொண்டு வரும் நடவடிக்கை.

உரிமையியல் குற்றவியல் வழக்கின் சட்ட நடவடிக்கையைக் குறிக்கிறது.
642. Action Committeeநடவடிக்கைக் குழு  

கருதிப்பார்க்க அல்லது நடவடிக்கை எடுக்க நியமிக்கப்பட்ட அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட சிலரின் குழு.  

ஒரு குறிப்பிட்ட காரணத்திற்காகப் போராடும் அல்லது ஒரு குறிப்பிட்ட பணியைச் செய்யும் மற்றவர்களை ஒழுங்கமைக்கவும் மேற்பார்வையிடவும் ஒன்றிணைந்த மக்கள் குழு.  

செயற் குழு என்றால் executive committee  எனப் பொருள் படும். எனவே அதனை இங்கே பயனபடுத்த வேண்டா.
643. Action Planசெயற் திட்டம்  

குறிப்பிட்ட இலக்கை அடைய, என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதைக் குறிப்பிடும் ஆவணம் செயற்திட்டம் எனப்படுகிறது.  

இலக்கைக் குறித்த காலத்தில் எய்த, மேற்கொண்ட பணிகளைச் சரிபார்க்கவும் மேற்கொள்ள வேண்டிய பணிகளைத் திட்டமிடவும் செயற்திட்டம் உதவுகிறது.
644. Action. Cause ofவழக்கு மூலம்  

செயற் காரணம்  

வழக்கிற்கு அடிப்படையாக அமையும் நிகழ்வு.  

உரிமை வழக்கு, வழக்கு மூலம் எழுகிற இடங்களில் தொடுக்கப்பட வேண்டும். (பி/20, உ.ந.ச./C.P.Act)
645. Action, Civil  உரிமை நடவடிக்கை

உரிமை வழக்கு  

உரிமையை நிலைநாட்டுவதற்காக நீதி மன்றத்தின் அல்லது நீதிமன்ற அதிகாரம் கொண்ட அமைப்பின் மூலம் மேற்கொள்ளப்படும் சட்ட நடவடிக்கை.
646. Action, Criminal  குற்ற நடவடிக்கை  

குற்ற வழக்கு   சட்டத்தால் விலக்கப்பட்ட செயலைப் புரிந்தவர் மீது அதற்குரிய சட்டம் விதித்துள்ள தண்டம் அல்லது சிறைத்தண்டனை அல்லது இரண்டையும் விதிக்க வேண்டி மேற்கொள்ளப்படும் நடவடிக்கை.  

குற்றம் புரிந்தவர் மீது சட்டச் செயற்பாட்டை மேற்கொள்வதற்கான வழக்கு நடவடிக்கை.
647. Action taken or thing done  எடுக்கப்பட்ட நடவடிக்கை 

ஒரு குறிப்பிட்ட முடிவைப் பெறுவதற்காக அல்லது விளைவை விரும்பி மேற்கொள்ளும் செயல்.
648.Action, Cause Of  வழக்கு மூலம்  

செயற்காரணம், வினை முதல் என்பன நேர் பொருள். சட்டத்தில் வழக்கு மூலம் என்பதே பொருத்தமான சொல்.   வழக்கிற்கு மூலமாக அமையக் கூடிய செயல் அல்லது வழக்கு தொடுப்பதற்குக் காரணமாய் அமையும் மூலம்  எனலாம்.  

வழக்கு மூலம்  என்பது நிகழ்வுகளின் தொகுப்பிற்கான நீதி மன்றத்தில் செயல்படுத்தக்கூடிய கோரலுக்கான சட்ட நுட்பப் பெயர்.     இது, வழக்கு தொடுப்பதற்குரிய உரிமையை உருவாக்கும் சட்டம் சுட்டும் தவறாகும்.  

ஆங்கிலத்தில்  It is a legally recognised wrong   என்பர்.

நேர் பொருளாகச் சட்டத்தால் ஏற்கப்பட்ட/அங்கீகரிக்கப்பட்ட/ ஏற்பளிக்கப்பட்ட என்பனபோல் கூறுவது தவறாகும். அப்படியானால் சில தவறுகளுக்குச் சட்டம் ஏற்பு அளிக்கிறது எனப் பொருளாகும். சட்டத்தால் அடையாளம் காட்டப்படும்  தவறுகளையே இது குறிக்கிறது. எனவே, சட்டம்  சுட்டும் தவறு எனக் குறிக்கப்பட்டது.  

ஒவ்வொரு வழக்கு மூலமும் வாதியால் மெய்ப்பிக்கப்படவேண்டிய குறிப்புகளைக் கொண்டிருக்க வேண்டும். இவையாவும் நீதிமன்ற நடவடிக்கை எடுப்பதற்கு ஏற்றதாய் இருக்க வேண்டும்.
649. Action, Civil  உரிமையியல் வழக்கு  

 உரிமையியல் நடவடிக்கை  

தனிப்பட்ட ஆட்கள், அமைப்புகள் நிறுவனங்கள் இடையே உள்ள பாகப்பிரிவினை, சொத்துரிமை போன்ற உரிமை குறித்த கருத்து வேறுபாடுகள், பிணக்குகள், முரண்பாடுகள் தொடர்பான செயற்பாடுகள், வழக்குகள்.    

உரிமையியல் நடவடிக்கை என்பது, உரிமையியல் வழக்கு நடவடிக்கையையே குறிக்கிறது. எனவே, உரிமையியல் வழக்கு என்கின்றனர்.  

ஒருவரால் அல்லது ஒரு நிறுவனத்தால், மற்றொருவர் மீது அல்லது மற்றொரு நிறுவனத்தின் மீது, உரிமைக்கு ஊறு விளைவிக்கும் வகையில் / தீங்கிழைத்ததாக அலுவல் முறைப்படி  சட்ட நீதி மன்றத்தில் கையாள்வதற்காகத் தரும் முறையீடு/ உரிமை நடவடிக்கை அல்லது வழக்கு   தனிப்பட்ட தரப்பினரிடையிலான முறையீட்டுடன் தொடங்கும் குற்றம் சாரா  வழக்கு  உரிமையியல் நடவடிக்கை எனப்படுகிறது.  

வாதி அல்லது வழக்காடி என்பவர் நீதிமன்றத்தில் முறையீடு பதிபவர்.

எதிர்வாதி அல்லது எதிர் வழக்காடி என்பவர்  முறையீட்டாளரின் குற்றச்சாட்டுகளுக்கு எதிராகக் காத்துக் கொள்பவர்.  

இதற்கு நேர்மாறாக, ஒரு குற்றவியல் வழக்கு ஒரு குற்றச்சாட்டுரையுடன் தொடங்குகிறது;  ஒரு நிறுவனம் அல்லது தனியருக்கு எதிராக அரசாங்கத்தால் வழக்குத் தொடரப்படுவதை உள்ளடக்கியது.
650. Action, criminalகுற்ற வழக்கு நடவடிக்கை.  

தனியரால் அல்லது நிறுவனத்தால் தனக்கு அல்லது தன் நிறுவனத்திற்கு  ஊறு அல்லது துன்பம் விளைவிக்கும் வகையில் குற்றம் புரிந்ததாக மற்றவர் அல்லது மற்ற நிறுவனத்தின் மீது சட்ட நீதி மன்றத்தில் மேற்கொள்ளப்படும் குற்றம் தொடர்பான வழக்கு நடவடிக்கை.

Thursday, August 15, 2024

சட்டச் சொற்கள் விளக்கம் 631-640 : இலக்குவனார் திருவள்ளுவன்

      16 August 2024      கரமுதல



(சட்டச் சொற்கள் விளக்கம் 621-630 : இலக்குவனார் திருவள்ளுவன் – தொடர்ச்சி)

631. Acting incumbentமாற்றுப் பணிப் பொறுப்பாளர்

மாற்றுப் பொறுப்பாளர்

பொறுப்பு நடப்புப் பதவியாளர்  

நடப்புப் பதவியாளர்

நடைமுறைப்பதவியில்  மாற்றாள் முறையில் பணியிடத்தை வகிப்பவர்.  

பதவியில் உரியவர் இருக்கும் பொழுதே பயிற்சிக்குச் செல்லல் போன்ற காரணங்களால் பணியைத்தொடர்ந்தாலும் பதவியிடப்பணி தொய்வின்றித் தொடர்வதற்காகப் பொறுப்பு வழங்கப்படுபவர்.
632. Acting Judgeபொறுப்பு நீதிபதி  

நீதிபதி விடுப்பில்/மாறுதலில்/ஓய்வில் சென்றிருந்தால் அல்லது இதுபோன்ற சூழலில் நீதிபதிப் பதவியில் இடைக்காலமாக அமர்த்தப்படுபவர் பொறுப்பு நீதிபதியாவார்.

  இப்பணியமர்த்தம் குடியரசுத் தலைவரால் மேற்கொள்ளப்படும். இந்திய அரசியல் யாப்பு கூறு 224

காண்க: Acting chief justice
633. Acting Judiciallyநீதித்துறை வழிச் செயற்படல்  

எந்த ஒருவரும் சட்டத்தின்படியும் தரப்பாரின் இசைவுடனும் கேட்டல், சான்றுகளை ஆராய்தல் போன்ற பணிகளை ஆற்றல்.
634. Acting on behalf ofசார்பாகச் செயற்படல்  

ஒருவரின் சார்பாக அவர் ஆற்ற வேண்டிய பணியை ஆற்றுதல்.
635. Acting within the scope of the authorityஅதிகார வரம்பிற்குள் செயற்படல்  

ஒரு பொது அதிகாரி அல்லது பொது ஊழியர் தன் அதிகாரத்திற்கு உட்பட்ட தனக்குக் கொடுக்கப்பட்ட பணிகளை ஆற்றுதல்.
636. Acting judgeபொறுப்பு நீதிபதி

  நீதிபதி பணியிடத்தில் உரிய நீதிபதி விடுப்பில் இருந்தாலோ மாறிச்சென்றிருந்தாலோ முழு நேர நீதிபதி நியமிக்கப்படும் வரை அல்லது மாற்று ஏற்பாடு செய்யும் வரை அப்பதவிப்பொறுப்பில் உள்ள நீதிபதி, பொறுப்பு நீதிபதியாவார்.  

காண்க: Acting chief justice
637. Acting Serviceமாற்றாள் பணி  

காண்க: Acting incumbent
638. Acting upon the licenceஉரிமத்தின் மீது செயற்படுதல்  

ஒருவர் மற்றொருவருக்கு அல்லது குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பிறருக்கு, வழங்குநரின் அசையாச் சொத்து தொடர்பில் செயலாற்ற உரிமை வழங்கல் அல்லது தொ டர்ந்து செய்யும் உரிமையை வழங்கல். [இந்தியத் துய்ப்புரிமைச் சட்டம் (Indian Easement Act) 1982, பிரிவு 52]
639. Actioசெயல் அல்லது செயற் பொருத்தம்  

இலத்தீன் சொல்.
640. Actio Personalis Moritur Cum Persona  ஆளர் வழக்கு ஆளுடன் முடியும்  

ஒருவரின் வழக்கு அவர் முடிவுடன் முடியும்/ செயலுக்கான தனிப்பட்ட உரிமை அதற்குரியவருடன் இறந்துவிடுகிறது.   இறத்தல் என்பதற்குச் சாவு என்பதுடன் காலாவதி(expire) என்னும் பொருளும் உண்டு.  

இறந்து விடுகிறது என்னும் நேர் பொருளை உரியவர் இறந்ததும் முடிந்து விடுகிறது என்ற பொருளில் பயன்படுத்த வேண்டும். எனவே, ஆள்நிலை வழக்கு, ஆளுடன் முடியும்.

இது வரையறுக்கப்பட்ட பயன்பாடு உள்ளது என உச்சநீதிமன்றம் கூறுகிறது.   அவதூறுக்கான சேதங்களுக்கான நடவடிக்கைகள், தாக்குதலுக்கான நடவடிக்கைகள் அல்லது மறு தரப்பாருக்கு மரணத்தை ஏற்படுத்தாத பிற தனிப்பட்ட காயங்களுக்கான நடவடிக்கைகள்,  

தரப்பாரின் மரணத்திற்குப் பிறகு வழங்கப்பட்ட தணிப்புதவியைத் துய்க்க முடியாத அல்லது வழங்குவது அற்பமாக இருக்கும் மற்ற செயல்கள் – கிரிசா நந்தினி தேவி & பிறர் எதிர் பிசேந்திர நரேன் சௌத்திரி (MANU/SC/0287/1966: AIR 1967 SC 1124: 1967 (1) SCR 93.) – இந்திரராசா & பிறர் எதிர் சான் ஏசுரத்தினம் வழக்கு  

 சொத்தினங்களுக்குக் கணக்கு காட்டவேண்டியவர் மரணம், அச்சொத்தினங்களுக்கான பொறுப்பைப் பாதிக்காது. – கிரிசா நந்தினி தேவி & பிறர் எதிர் பிசேந்திர நரேன் சௌத்திரி, MANU/SC/0287/1966: AIR 1967 SC 1124: 1967 (1) SCR 93.    

“நடவடிக்கை தனிப்பட்டவரின் தனிப்பட்ட செயலாகும்” என்ற கொள்கையின் அடிப்படையில் இறந்தவருடன் இறந்தவரின் தனிப்பட்ட செயலுக்கான காரணத்தைத் தவிர்த்து,  தனி உரிமைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் மற்ற அனைத்து நடவடிக்கைக் காரணங்களையும் அத்தகையவருடன் தரப்பாரின் குமுக(சமூக) சட்ட நிலைப்பாடு முடிந்ததாகக் கூற முடியாது – யல்லவா எதிர் சாந்தவ்வா, (MANU/SC/0016/1997: AIR 1997 SC 25: 1997 (11) SCC 159.)

  இறுதிமுறியை(உயிலை) நிறைவேற்றுபவரின் மரணம் ஏற்பட்டால், அவரது இறப்பிற்கு முன் அவரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளுக்குச் “செயலுக்கான தனிப்பட்ட உரிமை அதற்குரியவருடன் இறந்துவிடுகிறது” என்பது பொருந்தாது.

Tuesday, August 13, 2024

சட்டச் சொற்கள் விளக்கம் 621-630 : இலக்குவனார் திருவள்ளுவன்

 




(சட்டச் சொற்கள் விளக்கம் 611-620 : இலக்குவனார் திருவள்ளுவன் – தொடர்ச்சி)

621. Act, nature of theஇயற்கையின் செயல்  

இயற்கைச் செயல்

இயற்கையின் செயல் என்பது சூறாவளி, வெள்ளம், புயல், பூகம்பம், கடற்கோள் அல்லது பூச்சி தாக்குதல் போன்ற இயற்கை பேரழிவைக் குறிக்கிறது. இது மனிதரின் நியாயமான கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட ஒரு செயலாகும். சான்றாக இதனால் கட்டடங்கள் சிதைந்தன எனில், இதற்குக் கட்டுமானர் பொறுப்பாக மாட்டார்.  

‘சட்டத்தின் தன்மை’ எனக் குறிக்கப்படுவது தவறாகும்.  

காண்க : Act Of God
622. Acted in concertஒத்திசைவாகச் செயற்பட்ட  

ஒன்று சேர்ந்து இணக்கத்துடன் செயற்படல்.
623. Actingசெய்தல்  

நடிப்புக்கலை

மாற்றாள் வேலைபார்த்தல்    

பாசாங்கு செய்தல்,

(வினை) மாற்றாள் வேலைபார்க்கிற,

இப்பொழுதைக்குப் பணியாற்றுகிற.
624. Acting arrangementபொறுப்பு ஏற்பாடு  

பணிப்பொறுப்பு ஏற்பாடு

ஒருவர் தன் பணிப்பொறுப்பிலிருந்து, விடுப்பு, மாறுதல், ஓய்வு, விலகல், நீக்கம், இடை நீக்கம் போன்ற ஏதேனும் காரணத்தால் விலகியிருக்கும் பொழுது, ஒழிவாக ஆகும் பணியிடப் பொறுப்பைப் பார்ப்பதற்கு உரிய தகுதியுடைய மற்றவரை அமர்த்துவது.
625. Acting chief justiceபொறுப்புத் தலைமை நீதிபதி  

தலைமை நீதிபதி விடுப்பில்/மாறுதலில்/ ஓய்வில்/விலகலில்/நீக்கத்தில் / இடை விலகலில் சென்றிருந்தால் அல்லது இதுபோன்ற சூழலில் தலைமை நீதிபதிப் பதவியில் இடைக்காலமாக அமர்த்தப்படுபவர் பொறுப்புத் தலைமை நீதிபதியாவார்.

  ஒன்றிய அரசின் சட்டம் நீதித்துறை வெளியீடுகளில் செயலமர்(நீதிபதி) என்னும் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. செயலாற்ற அமர்ந்துள்ளவர் என்னும் பொருள் நன்றாக இருந்தாலும் முழு நேர நீதிபதிகள் (அல்லது அதிகாரிகள்) செயலாற்றுவதற்காக இல்லையா என்ற வினா எழுகிறது. ஆனால், இடைக்கால அமர்வு ஏற்பாடு என்னும் பொருளில் இடையமர்(தலைமை நீதிபதி) என்று சொல்லலாம்.  

உச்சநீதிமன்றப் பொறுப்புத் தலைமைநீதிபதி பணியமர்த்தம் குறித்து இந்திய அரசியல் யாப்பு கூறு 126 கூறுகிறது.  

உயர் நீதிமன்றப் பொறுப்புத் தலைமை நீதிபதி பணியமர்த்தம் குறித்து இந்திய அரசியல் யாப்பு கூறு 223  கூறுகிறது.  

இப்பணியமர்த்தங்கள் குடியரசுத் தலைவரால் மேற்கொள்ளப்பட வேண்டும்.
626. Acting in any manner inconsistent with his dutyகடமைக்கு முரணாகச் செயற்படுவது  

எந்த விதத்திலும் தன் கடமைக்கு முரணாகச் செயற்படல்  

ஒருவர் தன் பணிப்பொறுப்பிற்குரிய கடமையிலிருந்து விலகுவதுடன் தன் பணியின் தன்மைகளுக்கு எதிராகவும் செயற்படல்.
627. Acting in good faithநன்னம்பிக்கையில் செயற்படுவது  

காண்க : Act Done In Good Faith
628. Acting in official capacityஅலுவற் தகுநிலையில் செயற்படுவது  

அலுவல் நிலையில் செயற்படுவது  

பணிமுறைச் செயற்பாடு

தான் வகிக்கும் பதவியின் அடிப்படையில் செயல்படுவதைத் தனிப்பட்ட செயலாகக் கருத முடியாது. தன் துறை, நிறுவனம், முதலாளி, அரசின் சார்பாகச் செயற்படுவதாகத்தான் பொருள். எனவே, இதனால் செயற்பாட்டுக்குரியவருக்குத் தீங்கு நேர்ந்தால் அது குற்றமாகாது.  

அலுவலக ஆளுமையின் கீழ்ச் செய்யப்படும் செயல் – அலுவலகக் கடமையை நிறைவேற்றுவதற்காக ஒருவர் மேற்கொள்ளும் செயல் – மறு தரப்பாருக்குத் தீங்கு விளைவித்தாலும் குற்றமாகாது.  

எடுத்துக் காட்டாகத் தூக்குத் தண்டனை நிறைவேற்றும் பணியாளர், தன் கடமையைப் புரியும் வகையில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டவரைத் தூக்கிலேற்றி அவர் உயிரிழக்கக் காரணமாகிறார். இது கடமையின்பாற்பட்ட பணி என்பதால் குற்றமாகாது.  

காண்க : Act Done Under Colour Of Office
629. acting in ordinary course of businessஇயல்பான வணிக முறையில் செயற்படல்  

விற்பனையாளர், இயல்பான அல்லது வழக்கமான நடைமுறைகளுடன் விற்று, அதனை ஏற்று  வாங்குநர் வாங்குவது இயல்பான வணிக முறைச் செயற்பாடாகும்.
630. acting in pursuance of his dutiesஅவர் கடமைகளைத் தொடர்வதற்குரிய செயல்  

குறிப்பிட்ட சட்டத்தின்படிச் சட்டமீறலுக்கான நடவடிக்கை எடுப்பதற்குரியவர் செயல், சட்ட நிறைவேற்றத்தைத் தொடருவதாகத்தான் பொருள். எனவே, நடவடிக்கைக்குரியவர் அவருக்கு ஒத்துழைக்க வேண்டும்.      

Sunday, August 11, 2024

சட்டச் சொற்கள் விளக்கம் 611-620 : இலக்குவனார் திருவள்ளுவன்

 




(சட்டச் சொற்கள் விளக்கம் 601-610 : இலக்குவனார் திருவள்ளுவன் – தொடர்ச்சி)

611. Act of terrorismவன் செயல்  

பயங்க வாதம் என்கிறோம். வாதம் என்றால் ஒன்றிற்காக வாதிடுவதைத்தான் குறிக்கிறது. வன்முறைப் போக்கிற்காகப் பேசுவதுடன் வன்முறைச் செயல்களில் ஈடுபடுவதையும் இது குறிக்கிறது. எனவே, வன்முறைச் செயல் > வன் செயல் என்றே சொல்லலாம்.

  இதனைத் தன்னாட்டு வன்முறை என்றும் பன்னாட்டு வன்முறை என்றும் கூறலாம்.  

தன்னாட்டு வன்முறை அல்லது உள்நாட்டு வன்முறை என்பது அரசியல், சமயம், குமுகம், இனம் அல்லது சுற்றுச்சூழல் இயல்பு போன்ற உள்நாட்டுத் தாக்கங்களிலிருந்து மேலும் கருத்தியல் இலக்குகளுக்காக தனியர்கள்,  குழுக்களால் செய்யப்படும் வன்முறை, குற்றச் செயல்கள்.  

பன்னாட்டு வன்முறை என்பது வெளிநாட்டு வன்முறைக் குழுக்களால் அல்லது வன்செயல் ஆதரவு நாடுகளால், ஈர்க்கப்பட்ட அல்லது அவற்றுடன் தொடர்புடைய தனியர் அலலது குழுக்களால் மேற்கொள்ளப்படும் வன்செயல்கள்; பிற நாட்டு வன்முறைக் குழுக்களுடன் தொடர்புடையவர்களின் வன் செயல்கள்.

வன்செயல்களுக்கான திட்டமிடல், பரப்புரையும் குண்டு வெடிப்பு, கொலை, கொள்ளை, தொடரிகளைக் கவிழ்த்தல் போன்ற வன்முறைகளை விளைவிப்பதால் வன் செயலே.
612. Act of warபோர்ச் செயல்  

போரைத் தூண்டும் நோக்கத்துடன் ஒரு நாடு மற்றொரு நாட்டிற்கு எதிராக மேற்கொள்ளும் நடவடிக்கை அல்லது அறிவிக்கப்பட்ட போரின் போது அல்லது பிற நாட்டு ஆயுதப்படைகளுக்கிடையேயான  ஆயுத மோதலின் போது ஏற்படும் செயலாகும்.  

அமைதியாக இருக்கும் மற்றொரு நாட்டை அல்லது அதன்  பகுதியைக் கவரும் வன் செயல்.  

படைகளைப் பயன்படுத்தி மற்றொரு நாட்டின் அமைதிக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவது.  

இப்பெயரில் புதினம், காணொளி முதலியன உள்ளன.
613. Act Or Omission   செய்கை அல்லது விடுகை  

செய்யக் கூடாததைச் செய்வதும் செய்ய வேண்டியதைச் செய்யாமல் விடுவதும் குற்றமாகும்.  
இதனையே திருவள்ளுவர்,

செய்தக்க அல்ல செயக் கெடும் செய்தக்க செய்யாமையானும் கெடும் (திருக்குறள் 466) என்கிறார்.  

ஒருவரின் செயலால் பிறருக்குத் தீங்கு நேர்கையில் அச்செய்கை குற்றச் செயலாகிறது.   விடுபாடு/ விடுகை/ செய்வன செய்யாமை – ஒரு பொருள் குறித்த இவை சட்டத்தில், தனியருக்கு அல்லது பொதுமக்களுக்குச் செய்யப்பட வேண்டிய கடமையை அல்லது ஒப்புக்கொள்ளப்பட்ட செயலைச் செய்யத் தவறுவது என வரையறுக்கப்படுகிறது.  

புறக்கணிக்கப்படுகின்ற அல்லது முறையற்ற செயலைப் போலவே வழக்கு தொடுப்பிற்கு விடுபாடும் உள்ளாக்கப்படலாம்.  

மறுபுறம் ஏற்கப்பெற்ற பொறுப்பினை அல்லது கடமையைச் சட்டத்திற்கு இணங்க நிறைவேற்றப் படாமையும் குற்றமாகிறது.

  இந்தியத் தண்டிப்புச்சட்டம் 1860, தவிர்த்தல்/விடுபாடு குறித்து வரையறுக்க வில்லை. ஆனால், இந்தியத் தண்டிப்புச் சட்டப்பிரிவு 33, செய்கை செய்யாமை குறித்து வரையறுத்துள்ளது.

 குற்றச் செயலைச் செய்வது குற்றமாவதுபோல், செய்யவேண்டிய கடப்பாட்டைச் செய்யாமையும் குற்றமாகிறது.
614. Act or regulation having the force of law, anசட்டத்தின் வலிமையைக் கொண்ட சட்டம் அல்லது ஒழுங்குமுறை  

ஒரு சட்டம் நாடாளுமன்ற ஈரவைகளாலும் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவர் ஒப்புதலுடன், அரசுப் பதிவிதழில் வெளியிடப்படுகையில் நடைமுறைக்கு வருகிறது.
615. Act preparatory to commit murderகொலை ஆயத்தச் செயல்  

கொலை புரிவதற்காக அதற்குரிய முன்னேற்பாடுகளைச் செய்து ஆயத்தமாக  அல்லது அணியமாக இருப்பது.
616. Act subversiveஅழி செயல்கள்  

அரசாங்கத்தைக் கவிழ்க்கும் நோக்கில் செயல்படும் செயல்கள் அழி செயல்கள் ஆகும். 

மேலும் தேசத்துரோகம், நாசவேலை, தேசத்திற்கு எதிரான கலகம், நாட்டிற்கு எதிரான இரண்டகச் செயல் நாட்டைக் கவிழ்க்கும் வஞ்சகச் செயல், ஆட்சியைக் கவிழ்ப்பதற்கான வன்முறையைப் பயன்படுத்தல் ஆகியன யாவும் அழி செயல்கள் ஆகும்.
617. Act to consolidate and amend the law, anசட்ட ஒருங்கிணைப்பு, திருத்தச் சட்டம்  

நிலைச்சட்டங்களின்(Statutes)திருத்தம், ஒருங்கிணைப்பு, குறியீடாக்கம் என வகைப்படும்.  

திருத்தம் என்பது தற்போதுள்ள சட்டங்களில் அல்லது விதியங்களில்  காலத்தின் தேவைக்கேற்ப மாற்றங்களைச் செய்வதாகும்.

ஒருங்கிணைப்பு என்பது ஒரு குறிப்பிட்ட சட்டப் பொருள் தொடர்பான சட்ட விதிகளை ஒன்றிணைக்கும் செயல்முறையாகும்.
618. Act to provide, anவகைசெய்தற்குரிய சட்டம்  

நடைமுறைச் சட்டத்தில் மேற்கொண்டு பாதுகாப்பும் விளக்கமும் வழங்கும் சட்டம்.
619. Act towards the commission of such offenceஅத்தகைய குற்றத்தைச் செய்வது நோக்கிய செயல்  

இந்தியத் தண்டிப்புத் தொகுப்பின்படி,  தண்டிக்கப்படக் கூடிய குற்றத்தைச் செய்ய முற்படும் எவரும், அத்தகைய முயற்சியில் குற்றச் செயல்களை மேற்கொள்ளும் வகையில் ஏதேனும் செயலைச் செய்தாலும், அவர் தண்டிக்கப்படுவார்.
620. Act under the direction of (so and so)(அத்தகைய) வழிகாட்டுதலின்படிச் செயற்படல்

தகுதி வாய்ந்த மருத்துவப் பயிற்சியாளர், தொடக்கத்திலும் பண்டுவத்தின்(சிகிச்சையின்) பொழுது இடையிடையேயும்  தன் வழிகாட்டுதலில் கற்பிப்பது.  

பிற பயிற்சி முறைகளுக்கும் வழிகாட்டுதலில் பயிற்சி வழங்கலைக் குறிக்கும்.

Followers

Blog Archive