Tuesday, August 27, 2024

சட்டச் சொற்கள் விளக்கம் 681-690 : இலக்குவனார் திருவள்ளுவன்

 




(சட்டச் சொற்கள் விளக்கம் 671-680 : இலக்குவனார் திருவள்ளுவன்- தொடர்ச்சி)

681. acts justified by law  சட்டத்தால் நியாயப்படுத்தப்பட்ட செயல்கள்

சட்டத்தால் ஞாயப்படுத்தப்பட்ட செயல்கள்

சட்டத்தால் நயன்மைப்படுத்தப்பட்ட செயல்கள்

சட்டத்தால் முறைமைப்படுத்தப்பட்ட செயல்கள்  

நிகழ்வுகளின் உண்மை நிலை குற்றம் நடந்துள்ளது என்பதைக் காட்டினாலும் குற்றம் செய்ததாகத்  தவறாகக் கருதப்படுபவர், தான் இதில் சட்டத்திற்குக் கட்டுப்பட்டவர் எனப் புரிந்து நடந்து கொள்ள வேண்டும்.
682. Acts regarded as trivialஅற்பமாகக் கருதப்படும் செயல்கள்  

அற்பமானவை எனக் கருதப்படும் செயல்கள்

அற்பச் செயல்கள் என்பது மற்றவற்றுடன் ஒப்பிடுகையில் சிறியது, மிகச் சிறிய அளவிலானது, அல்லது முதன்மையற்றது. அவை அதிகக் கவனத்திற்கோ கருதுகைக்கோ பெறுமானம் உடையதல்ல. 1860 இன் இந்தியத் தண்டனைச் சட்டம் (IPC) அற்பமான செயல்களைதத் தீவிரத்தன்மை அல்லது முதன்மைத்துவம் இல்லாதது என்று வரையறுக்கிறது. மேலும் சட்டம் அவற்றைக் கருத்தில் கொள்ளக்கூடாது என்று கூறுகிறது.

அற்பச் செயல்கள் என்பன மற்றவற்றுடன் ஒப்பிடுகையில் சிறியது, மிகச் சிறிய அளவிலானது, அல்லது முதன்மையற்றது. அவை அதிகக் கவனத்திற்கோ கருதுகைக்கோ பெறுமானம் உடையதல்ல. இந்தியத் தண்டனைச் சட்டம் (IPC) 1860, அற்பமான செயல்களைதத் தீவிரத்தன்மை அல்லது முதன்மைத்துவம் இல்லாதது என்று வரையறுக்கிறது. மேலும் சட்டம் அவற்றைக் கருத்தில் கொள்ளக்கூடாது என்று கூறுகிறது. அற்பச்செய்திகளைப் பாதுகாப்பது என்பது “சட்டம் அற்பச்செய்திகளைப் பொருட்படுத்தாது”(De minimis non curat lex) என்னும் கொள்கையின் அடிப்படையிலானது.இது குமுக(சமூக) நல்லிணக்கத்தையும் சரிசெய்தலையும் உறுதிப்படுத்துவதற்காகச் செய்யப்படுகிறது.
எடுத்துக்காட்டாக, இ.த.ச. பிரிவு 95, யாராவது வேண்டுமென்றே அல்லது தெரிந்தே தீங்கு விளைவித்தால், இயல்பான உணர்வு, சினம் கொண்ட ஒருவர் அதைப் பற்றி புகார் செய்யாத அளவுக்குத் தீங்கு சிறியதாக இருந்தால், அது குற்றமாகக் கருதப்படாது என்கிறது.
அற்பச் செயல்களின் சில எடுத்துக்காட்டுகள் பின்வருமாறு:

• எழுத்துப் பிழை
• ஒரு வீட்டின் விலையுடன் ஒப்பிடும்போது ஒரு கோப்பை பானத்தின் விலை
683. Actual    உள்ளபடி  

உள்ளபடியாக, உள்ள, உள்ளவாறு, நடைமுறை, உண்மை, உண்மையான, உண்மையாக உள்ள, நடைமுறையில் உள்ள, இருக்கின்றபடி, மெய்நிலையான, பட்டாங்கு, உள்ள, உரிமை, சரியான, நிகழ்நிலை, உலகியல் வழக்கு, உலகவழக்கம்;

நேரடி; நேர்(ந்த);    

உள்ளவாறெனக் குரைசெய்ம்மின் (தேவாரம், 385.2)

உற்றதுசொன்னால் அற்றது பொருந்தும்  

உள்வழக்கு         உள்ளதை உண்டு என்பது

மெய்ம் மை பட்டாங்காதலின் இயல்பாம் (தொல். எழுத். 156, உரை).  

பட்டாங்கு யானுமோர் பத்தினியே யாமாகில் (சிலப். 21, 36).  
பட்டாங்கி லுள்ளபடி  (மூதுரை) என இலக்கியங்களிலேயே இடம் பெற்றுள்ளன.  

சொல் பயன்படுமிடம்: உண்மையான உடற் தீங்கு அல்லது உடலூறு  

கொடும்உடற்காயத்தை விடக் குறைவாக ஆனால் வன்மையாக மற்றொருவரைக் காயப்படுத்துவது
684. Actual balanceஉண்மையான இருப்பு  

உண்மை இருப்பு

பதிவேட்டின்படியான இருப்பிலிருந்து பதிவிற்குப் பின் மேற்கொள்ளப்பட்டுப் பதியாமல் உள்ள செலவையும் கழித்த பின் வருவது.

இதேபோல் பதியப்படாத வரவையும் சேர்த்தது உண்மையான இருப்பு.

எடுத்துக்காட்டாகச் சொல்வதாயின் இணைய வழியில் வங்கிக் கணக்கைக் கையாள்கையில் பயணச்சீட்டு வாங்குவதற்கான செலவு கழிக்கப்பட்டு இருப்பு காட்டப்பட்டிருக்கும். ஆனால், உண்மையில் இணையப் பிழையாலோ எதனாலோ பயணச்சீட்டு வாங்கப்பெறாமல் (தரப்பெறாமல் ) பிடிக்கப்பட்ட அத்தொகை திரும்பச் செலுத்துப்படுவதாகக் காட்டும். ஆனால், மீள் வரவு வைக்கப்பட்டிருக்காது. எனவே, பதிவேட்டு இருப்புடன் மீள்வரவையும் கணக்கிட்டால் வருவதே உண்மை இருப்பாகிறது.
685. Actual causeஉண்மையான காரணம்  

இது மற்ற தரப்பாரின் தீங்கு, சேதங்கள் அல்லது இழப்புகளை ஏற்படுத்துவதில் ஒரு தரப்பினரின் தவறு என்பதை  மெய்ப்பிக்கும் உண்மையான ஆதாரம் அல்லது வழக்கின் உண்மைகள்.  

உரிமை வழக்கிலும் குற்ற வழக்கிலும் உண்மைக் காரணம் என்பது அடிப்படைக் கூறாகிறது.
686. Actual costஉண்மைச்  செலவு  

ஒரு பொருளை வாங்குவதற்காக அல்லது குடியிருத்தல் போன்ற ஒன்றின் பயன்பாட்டிற்காக, வாடகையாகக் கொடுக்கப்படும் பணமே செலவாகிறது.

பொருளின் விலையுடன் சரிபார்ப்பதற்குப் பணம் கொடுத்தால் அதையும் வீடு, அலுவலகம் போன்ற நமக்குத் தேவைப்படும் இடத்திற்குக் கொண்டு வந்து சேர்ப்பதற்கான வண்டிக்கட்டணம், கடனில் அல்லது தவணையில் வாங்கினால் நாம் கொடுக்கும் வட்டித் தொகை ஆகியனவும் சேர்ந்தே உண்மைச்  செலவு அல்லது உள்ளபடியான செலவு ஆகிறது.

அஃதாவது பொருளின் விலை அல்லது சொத்தின் விலையுடன் அதைப் பெறுவதற்கு நாம் மேற்கொள்ளும் செலவினமும் சேர்ந்ததே உண்மைச் செலவாகிறது.
687. Actual Damagesஉள்ளபடியான சேதங்கள்  

புயல், மழை, வெள்ளம், நில நடுக்கம், கடற்கோள் போன்ற இயற்கைச் சீற்றங்களால் ஏற்படும் உண்மையான இழப்புகளைக் கணக்கிடுவது. உண்மையான சேதங்கள் என்றும் சட்டபூர்வமான இழப்பீட்டுக்குரிய சேதங்கள் என்றும் இரு வகையாகக் கூறுவர்.  

மற்றவரின் புறக்கணிப்பால் அல்லது தவறுகளால் ஏற்படும் சேதங்களையும் கணக்கில் கொள்வர்.  

நேர்ந்த இழப்பின் அளவிற்கு அல்லது தீங்கிற்கு ஏற்ப அளிக்கப்படும் ஈடு என்பதால், சட்டத்தால் வரையறுக்கப்படும் அல்லது தண்டமாக அளிக்கப்படும் இழப்பீட்டினின்றும் வேறு பட்டது.  

கேடு, குற்றம் எனக் குறிக்கும் ஏதம் என்னும் சொல்லில் இருந்து உருவான சேதம் தமிழ்ச்சொல்லே.
688. Actual Deliveryஉண்மையான வழங்கல்   

 ஒரு பொருள் ஒரு தரப்பாரிடமிருந்து மற்றொரு தரப்பாருக்குப் பருப்பொருளாக மாற்றப்படுவது உண்மையான வழங்கல் ஆகும்.  

பொருளை வாங்குநருக்கு அல்லது அவரால் ஏற்கப்பட்ட முகவருக்கு விற்பவரால் பொருள் அனுப்பப்பட்டால் அஃது உண்மையான வழங்கல் எனப்படும்.
689. Actual Evictionமெய்ந்நிலை வெளியேற்றம்  

உண்மையாக வெளியேற்றுதல்  

வாடகையர்/வாடகைக்குக் குடியிருப்பவர் அல்லது குத்தகையர் தன் பயன் உரிமை நிலம்,வீடு,கட்டடம், சொத்து போன்றவற்றில் இருந்து அகற்றப்படுதற்கு அல்லது வெளியேற்றப்படுவதற்கு மேற்கொள்ளப்படும் சட்ட முறையான செயற்பாடாகும்.
வாடகையைச் செலுத்தாத அல்லது குத்தகை ஒப்பந்தத்தை மீறும் வாடகையரை அல்லது குத்தகையரை அவர் கைக்கொண்டுள்ள(ஆக்கிரமித்துள்ள) பகுதியில் இருந்து வெளியேற்ற வீட்டு அல்லது இட உரிமையாளர் சட்ட நடவடிக்கை எடுக்கும் பொழுது இது நேரலாம்.

எடுத்துக்காட்டாக நில உரிமையாளர் வாடகையரை அல்லது குத்தகையரை உள்ளபடியாகவே தூக்கி எறிவதன் மூலம் அல்லது சொத்திலிருந்து அகற்றி வைப்பதன் மூலம் அல்லது பயன்படுத்தாதபடி அந்தச் சொத்தைப் பூட்டி வைப்பதன் மூலம் வெளியேற்றலாம்.
நில உரிமையாளரிடமிருந்து குத்தகையரை வெளியேற்றுவதற்கான சட்டமுறை உரிமையை மூன்றாம் தரப்பினர் பெறும்போதும், குத்தகையரை வெளியேற்றும்போதும் உண்மையான வெளியேற்றம் நிகழலாம்.


ஒரு குத்தகையர் வெளியேற்றப்பட்டால், வாடகை செலுத்த வேண்டிய கூடுதல் பொறுப்பிலிருந்து அவர் விடுவிக்கப்படுகிறார்.


குடியிருப்பின் எந்தப் பகுதியிலிருந்தும் குத்தகையர் வெளியேற்றப்பட்டால், அவர் முழுச் சொத்தையும் திரும்பப் பெறும் வரை அவரின் வாடகைப் பொறுப்பு முற்றிலும் நின்றுவிடும்.  
690. Actual Expenditureஉண்மையான செலவு  

உண்மையாக நேரிட்ட செலவு    

உண்மையான செலவு என்பது பல பொருள்கள் உடையது.

பொது நிதிநிலை யறிக்கை கணக்கியலில் நிகர நிதி சொத்துக்களை மாற்றும் செலவு ;

ஒரு நிதியாண்டு தொடர்பில்
அந்த ஆண்டில் ஒரு செயல்பாட்டிற்காகச் செலவிடப்பட்ட தகுதியான செலவினங்களின் மொத்தத் தொகை;

நல்கைகளின்(மானியங்களின்) சூழலில் நல்கைக் காலத்தின் போது தகுதியான செயல்பாடுகளில் ஏற்படும் மொத்தச் செலவுகள்;

மொத்தச் செலவினங்களின் பின்னணியில் விற்கப்படும் மொத்தத் தொகைக்கு மாறான உண்மையில் விற்கப்படும் முடிக்கப்பட்ட பொருட்களின்/ சேவைகளின் மதிப்பு;

நிதிப் பகுப்பாய்வுச் சூழலில் ஒரு நிறுவனத்தின் நிலையான வரவு செலவுத் திட்டத்திற்கும் அதன் வருமானம் – செலவினங்களுக்கான உண்மையான புள்ளிவிவரங்களுக்கும் உள்ள வேறுபாடு.

 

Sunday, August 25, 2024

சட்டச் சொற்கள் விளக்கம் 671-680 : இலக்குவனார் திருவள்ளுவன்

 




(சட்டச் சொற்கள் விளக்கம் 661-670 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி)

671. Activity, Politicalஅரசியல் செயற்பாடு  

அரசியல் கட்சியின் அல்லது அரசியல் கட்சியின்  சார்பாளனின் வெற்றி தோல்வி நோக்கிய செயற்பாடு.
672. Actori incumbit onus probandi   மெய்ப்பிப்புப் பொறுப்பு முறையீட்டாளரிடம் உள்ளது.  

வழக்கு தொடுத்தவருக்கே மெய்ப்பிக்கும் பொறுப்பு உள்ளது.  

குற்றம் நிகழ்ந்ததாக முறையிடும் வழக்காளியே அதற்கான ஆதாரத்தையும் தர வேண்டும். ஆதாரம் அளிக்கவேண்டிய சுமை, வாதியிடமே உள்ளதை இது குறிக்கிறது.  எனவே, மெய்ப்பிக்க வேண்டிய சுமை வாதிக்கு உள்ளதாகக் கூறுகிறார்கள்.   – இந்திரராசா & பிறர் எதிர் சான் ஏசுரத்தினம் வழக்கு

இலத்தீன் தொடர்
673. Acts done by several persons in furtherance of common intentionபொது எண்ண நிறைவேற்றத்திற்கான பலர் செயல்கள்  

பொது எண்ண நிறைவேற்றத்திற்காகப் பலர் செய்யும் செயல்கள்
674. Acts Done Pursuant To The Order Of  Courtநீதிமன்றத்தீர்ப்புத் தொடர்ச்சிச் செயல்கள்  

நீதிமன்றத்தீர்ப்பின் தொடர்ச்சியாகச் செய்யப்பட்ட செயல்கள்
675. Acts Done With Different Intentionsபல்வேறு நாட்டத்துடன் செய்யப்படுவன  

பல்வேறு நாட்டத்துடன் செய்யப்படும் செயல்கள்
676. Acts done within Indian territoryஇந்திய நிலப்பரப்பில் செய்யப்படுவன

  இந்திய நிலப்பரப்பில் செய்யப்படும் செயல்கள்
677. Acts not constituting infringementஉரிமை மீறுகை அமையாச் செயல்கள்  

உரிமை மீறலாக அமையாத செயல்கள்
678. Acts of childகுழந்தையின் செயல்கள்  

குழந்தைகள் செய்யும் சட்டத்திற்கு எதிரான செயலைக் குற்றம் என்னாது பிழைமை என்றும் அவ்வாறு பிழைமை புரிவோரைக் குற்றவாளிகள் என்னாது பிழையர்(delinquent)  என்றும் கூற வேண்டும்.

இளங்குற்றவாளி என்று சொல்லி வருவதும் தவறே. பன்னாட்டுச் சட்டத்தின்படியும் உலகளாவிய ஏற்பின்படியும் குழந்தை என்பது 18 அகவைக்குட்பட்ட பருவத்தினன் அல்லது பருவத்தினள்.

இந்தியத் தண்டிப்புத் தொகுப்பின்படியும் இளஞ்சிறார் நீதிச் சட்டம் 2000 இன்படியும்(Juvenile Justice Act, 2000) 18 அகவைக்குட்பட்ட பருவம் உடையவர் குழந்தையாவார்.

குழந்தைத் தொழிலாளர் (தடுப்பு மற்றும் ஒழுங்குமுறை) சட்டம், 1986 [Child Labour (Prohibition and Regulation) Act, 1986]இன் படி 14 அகவைக்குட்பட்டவர் குழந்தையாவார்.  

காண்க: Act of a child under seven years of age
679. Acts of Judicial Officersநீதித்துறை அலுவலர்களின் செயல்கள்  

சட்டப்பயன்பாடு தொடர்பாக, எளிதாக்குதல், நடுவராய்ச் செயற்படல், தலைமை தாங்கல், முடிவுகளையும் வழிகாட்டுதல்களையும் எடுத்தல் முதலியனவற்றிற்கான பொறுப்புகளை உடையவரே நீதித்துறை அலுவலர்.  

நீதித்துறை அலுவலர்கள் பாதுகாப்புச் சட்டம், (Judicial Officers Protection Act)1850, நீதித்துறை அலுவலர்களின் பணிச் செயற்பாடுகள், பணிப்பாதுகாப்புகள் முதலியன குறித்து விளக்குகின்றது.
680. Acts of waste
கழிவுச் செயல்கள்
 
கழிவு தொடர்பான செயல்கள்
 
சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் ( he Environment Protection Act)1986,  கழிவுகளை அகற்றல் குறித்துக் கூறுகிறது.

Thursday, August 22, 2024

சட்டச் சொற்கள் விளக்கம் 661-670 : இலக்குவனார் திருவள்ளுவன்

 




(சட்டச் சொற்கள் விளக்கம் 651-660 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி)

661. Active Confidence  செயலுறு நம்பிக்கை  

முனைப்பான நம்பிக்கை  

செயற்திறமுடைய  நம்பகத்தன்மை  

ஒரு நம்பிக்கை எப்பொழுது முனைப்பாக அல்லது தீவிரமாக இருக்கும்? அது நடைமுறையில் – செயற்பாட்டில் இருக்கும் பொழுதுதானே. எனவேதான் செயலுறு நம்பிக்கை எனலாம்.  

நம்பிக்கை என்பது பேச்சளவில் அல்லது ஏட்டளவில் இல்லாமல் செயலில் – செயற்பாட்டில் – உள்ளமையைக் குறிப்பது. இந்தியச் சான்றுகள் சட்டம், 1872 இன் பிரிவு 111 இல் பயன்படுத்தப்படும்  கூட்டுச் சொல்லாகும்.  

ஒரு தரப்பினர் பரிமாற்றத்தில் செயலுறு நம்பிக்கையில் இருக்கும் பொழுது, நன்னம்பிக்கையை மெய்ப்பிப்பதைக் குறிக்கிறது. இதன் மூலம்  ஒரு தரப்பார் மற்றொரு தரப்பாரின் நலன்களைப் பாதுகாக்கக் கடமைப்பட்டவர் என்றும் இதுவே இரு தரப்பாரின் உறவுமுறைக்கு அடிப்படை என்றும் புரிந்து கொள்ளலாம்.

பரிமாற்றம் என்பது இரு தரப்பாரிடையே நிகழும் வணிக நடவடிக்கை.  

வழக்கிடுநர், விற்பனையின் நன்னம்பிக்கையின் மீது வழக்குரைஞர் மீது வழக்கு தொடுத்தால், பரிவர்த்தனையின் நன்னம்பிக்கையை மெய்ப்பிக்க வேண்டிய பொறுப்பு வழக்குரைஞருடையது.  

பிணைப்பு நலன்களைத் தீர்மானிப்பதற்குரிய குறிப்பு அல்லது செயலுறு நம்பிக்கைக்குள் வருவது என்பது வழக்கிற்கு வழக்கு மாறுபடும் தன்மையுடையது.  
662. Active debtநடப்புக் கடன்  

வட்டி வரும் கடன்  

தீர்வு செய்யப்படாத நடப்பிலுள்ள கடன்  
663. Active Memberசெயல்நிலை உறுப்பினர்  

முனைப்புடன் செயல்படுவதால் முனைப்பான உறுப்பினர் என்கின்றனர்.  அதைவிடச் செயல்பாட்டு நிலையிலேயே உள்ளதால் செயல்நிலை உறுப்பினர் என்பது ஏற்றதாக இருக்கும்.  

ஓய்வூதியத் திட்டத்தில் உள்ள உறுப்பினரையும் இவ்வாறு குறிப்பர். 
 
664. Actual occupancyகுடியிருக்கை உடைமையாட்சி  

வளாகத்தில் அல்லது மனையில் அல்லது கட்டடத்தில் முழுமையாக அல்லது பகுதியாக  வாடகை அல்லது குத்தகை அடிப்படையில்  வைத்திருத்தல் அல்லது குடியிருத்தல்.
665. Active Partnerசெயற்கூட்டாளி  

தொழில்முறைக் கூட்டாளி,

செயல்நிறைக் கூட்டாளி, ஈடுபாட்டுப் பங்காண்மையர், முனைப்புக் கூட்டாளி என்றும் கூறப்படுகின்றன. 

  பங்காண்மையில் அன்றாட நடவடிக்கைகளில் ஈடுபடும் முதலீட்டாளரே செயற் கூட்டாளியாவார்.  

தொழிலில் அல்லது வணிகத்தில் வருவாயைப் பெருக்கப் பெயரளவிற்கு முதலீடு செலுத்திவிட்டு அமைதியாக இராமல் நாளும் உழைப்பவராக உள்ளார். ஆதலின், மேற்குறித்தவாறெல்லாம் கூறப்படுகின்றார்.
666. Active serviceமுனைப்பான சேவை  

முழுமையான பணி

தொழிலிடத்தில் அல்லது பணியிடத்தில் தன் முழுமையான பணிகளையும் செவ்வனே ஆற்றும் பாதுகாக்கப்பட்ட பணியாளரின் பணியாகும்.  

பணிக்கால ஊழியம்

ஓய்வூதியச் சட்டம் 10.01.இன் கீழ், உட்பணி அயற்பணிகளில் ஏற்கப்பட்ட விடுப்பு நீங்கலான, உண்மையான உறுதியான பணி.  

ஈடுபாட்டு ஊழியம்

நிதிச் சட்டம் 2012 இல், முதன்முறையாக “சேவை” என்பது சட்ட முறையில் வரையறுக்கப்பட்டுள்ளது. பிரிவு 65ஆ(44) இன்படி, ஒருவர் மற்றவருக்காக விளம்பரத்திற்காக அல்லாமல் ஈடுபாட்டுடன் மேற்கொள்ளும்  தொண்டு ஊழியம் ஆகும்.   ஈடுபாட்டுப் படைப்பணி   பொதுவாக  service என்பது படைப்பணியைக் குறிக்கிறது.   படைப்பணிக்காலத்தில் போரில் ஈடுபட்டிருந்தால் ஈடுபாட்டுப் படைப்பணி எனப்படுகிறது.
667. Active Titleசெயல்பாட்டுரிமை  

பொதுவாக மனைவணிகத்தில்(real Estate) செயல்பாட்டுரிமை என்பது மிகுதியாகப் பயன்படுத்தப் படுகிறது.  

உரிமையாளர் வேறொருவராகவும் அவர் சார்பில் அதனைச் செயல்படுத்துநர் மற்றொருவராகவும் உள்ள பொழுது மற்றொருவர் செயல்பாட்டுரிமையாளராக அறியப்படுகிறார்.
668. Activismசெயல்முனைவு

ஈடுபாட்டியம்  

நேரடியான தீவிரமான செயலை வலியுறுத்தும் ஒரு கோட்பாடு அல்லது நடைமுறை.

குறிப்பாக ஒரு சிக்கலில் தான் சார்ந்த கட்சி அல்லது அமைப்பின் முடிவிற்கு ஏற்ப, ஒரு புற ஆதரவு அல்லது எதிர்ப்பு நிலை எடுத்து அதற்காக அமைப்பு கூறுவதற்கேற்பப் பரப்புரை மேற்கொள்பவர் அல்லது போராடுபவர்.
669. Activistசெயல்வீரர்  

ஒரு குழுவின் உறுப்பினராக இருந்து  அரசியல் அல்லது குமுக மாற்றத்திற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்; செயல்வீரர்.

செயலூக்கத்தை ஆதரிப்பவர் அல்லது நடைமுறைப்படுத்துபவர்: கருத்து மோதலுக்குரிய சிக்கலில் ஒரு பக்கத்திற்கு ஆதரவாக அல்லது எதிர்ப்பாக வலுவான நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்; முனைப்பான ஈடுபாட்டாளர்.  

தான் சார்ந்த அமைப்பின் சார்பில் ஊர்வலங்கள், கிளர்ச்சிகள், மறியல்கள், கதவடைப்புகள், மனிதச் சங்கிலி போன்ற போராட்டங்களில் ஈடுபடுபவர்.
670. Activityநடவடிக்கை  

செய்கைப்பாடு  

ஒன்றை நிகழ்விக்க அல்லது ஒரு நிலைமையைக் கையாள மேற்கொள்ளும் செயல்.   நலனுக்காகவோ மகிழ்ச்சிசக்காகவோ குறிப்பிட்ட நோக்கத்தை எய்துவதற்காகவோ செய்யப்படும் செயல்.  

Tuesday, August 20, 2024

சட்டச் சொற்கள் விளக்கம் 651-660 : இலக்குவனார் திருவள்ளுவன்

 





(சட்டச் சொற்கள் விளக்கம் 641-650 : இலக்குவனார் திருவள்ளுவன் – தொடர்ச்சி)

651. Action, penalதண்டனைக்குரிய நடவடிக்கை  

அரசால் அல்லது தனியார் தரப்பால் சடடத்தை மீறியவருக்குக் குறை களைவதாக இல்லாமல் தண்டனை விதிப்பதற்குரிய செயல்.
652. Action, Remedialமீட்புத் தீர்வு

தீர்வு நடவடிக்கை  

தீர்வுச் செயற்பாடு

குறைபாடுகளைக் களைவதற்காக உற்பத்தி அல்லது சேவையில் மேற்கொள்ளும் மாற்றமே தீர்வு நடவடிக்கை/ தீர்வுச் செயற்பாடு.

இரு தரப்பு அல்லது மேற்பட்ட தரப்பாரிடம் ஏற்படும் பிணக்குகள் முதலான குறைகளைக் களையும் நடவடிக்கை தீர்வு நடவடிக்கை/ தீர்வுச் செயற்பாடு.  

மறுசீரமைப்பு நடவடிக்கை    

மீட்புத் தீர்வு – சுற்றுச்சூழல் தரத்தை நீண்டகாலமாக மீட்டெடுப்பதற்காக எடுக்கப்படும் நடவடிக்கை (விரிவான சுற்றுச்சூழல் எதிர்வினை, இழப்பீடு, பொறுப்புச் சட்டத்தின் கீழ்/ under the Comprehensive Environmental Response, Compensation, and Liability Act)  

  தீர்வு /மறுசீரமைப்பு நடவடிக்கை என்பது (அ) எந்த வகையிலும் உட்புற அல்லது வெளிப்புறச் சூழலில் உள்ள அஞ்சத்தக்க பொருட்களைத் தூய்மை செய்தல், அகற்றுதல், சரி செய்தல், கட்டுப்படுத்துதல், பண்டுவம் செய்தல், கண்காணித்தல், மதிப்பீடு செய்தல், கணக்கிடல் அல்லது

(ஆ) ஒரு வெளியீட்டைத் தடுக்கவும் அல்லது குறைக்கவும் எடுக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகளும் ஆகும். அப்பொழுதுதான், பேரிடரான பொருட்களின் அச்சுறுத்தல் வெளியிடப்படுவதால், அவை இடம்பெயர்வதில்லை அல்லது பொது நலவாழ்வு அல்லது நலன் அல்லது உட்புற அல்லது வெளிப்புற சுற்றுச்சூழலுக்குப் பேரிடரை ஏற்படுத்தாது;

(இ) இயற்கை வளங்கள் அல்லது சுற்றுச்சூழலை மீட்டெடுப்பது அல்லது மீளமைப்பது;

(ஈ) ஏதேனும் முன்-தீர்வு ஆய்வுகள், புலனாய்வுகள் , அல்லது பிந்தைய மறுசீரமைப்பு செயல்பாடு, பேணுகை நடவடிக்கைகள், அல்லது

(உ) சுற்றுச்சூழல் சட்டங்களால் தேவைப்படும் பேரிடர் பொருட்கள் தொடர்பாக வேறு ஏதேனும் செயல்களைச் செய்தல்.  


மேற்குறித்த மூன்று பொருள்களும் சரிதான். எனினும் சுருக்கமான மீட்புத் தீர்வு என்பதைப் பயன் படுத்தலாம்.
653. Action. Classசார் வழக்கு  

வருக்கச் சார்பு வழக்கு  

தனியரால் அல்லது குழுவால் பெரிய குழுவிற்கிணங்கத் தொடங்கப்படும் வழக்கு.  

இவர்கள் அனைவருமே ஒரே எதிர்வாதிக்கெதிரான சட்ட நடவடிக்கையை முன்னிறுத்தலாம்
654. Actionableநடவடிக்கைக்குரிய  

தொடர்தகு   வழக்காடத் தக்க  
போதுமான காரண அடிப்படையில் சட்ட நடவடிக்கை எடுப்பதற்குரியது.  

சட்டப்படி நடவடிக்கை தொடர்வதற்குத் தக்கது.
655. Actionable Claimதொடர்தகு பாத்தியம்  
வழக்குறு கோரல்

  வழக்காடுரிமை, தொடர் தகும் உரிமை, வழக்கு தொடர்தகு உரிமை, வழக்காடத்தக்க உரிமை.

1990 ஆம் ஆண்டின் திருத்தச் சட்டம் 2 மூலம் சொத்து மாற்றச் சட்டத்தில்(Transfer of Property Act) பிரிவு 3 இல் செயல்படக்கூடிய உரிமைகோரல் வரையறுக்கப்பட்டுள்ளது.   செயல்படக்கூடிய உரிமைகோரல் என்பது அசையாத சொத்து, அதன் பரிமாற்றம் இச் சட்டத்தின் 8 ஆவது அத்தியாயத்தில் கையாளப்படுகிறது.  

செயல்படக்கூடிய உரிமைகோரல்களின் எடுத்துக்காட்டுகள் :

வாடகை பாக்கியைக் கோருவதற்கான உரிமை. விலை அல்லது முன்பணத்திற்காக ஒப்பந்தத்தின் கீழ்ச் செலுத்த வேண்டிய பணம்.

ஒப்பந்தத்தின் பலனைக் கோருவதற்கான உரிமை.

கடல் காப்பீடு தவிர பிற காப்பீட்டுக் கோரிக்கை.

பரிசுச் சீட்டு. வருங்கால வைப்பு நிதியில் கடன் பெறும் உரிமை.    

தொடர்தகு பாத்தியம் என்பது பாத்தியதையைக் கோருவதைத்தான் இங்கே குறிக்கிறது.  

Claim என்பதற்கு அக்கு, அதிகாரம், அவகாசம், ஈட்டும் உரிமை, உரிமை கேள், உரிமைக் கோரிக்கை,  உரிமைப் பொருள், உரிமை கொண்டாடு, உரிமை கோரு, கேட்பு உரிமை, கோருதல், கோருரிமை, செலவுக் கோரிக்கை, சொத்துவம், பாத்தியம், கேள், பாத்தியதையைக் கோருதல், வில்லங்கம் எனப் பல பொருள்கள் உண்டு.

பொதுவாக நமக்கு உரியவற்றைக் கோருதல், செலவழித்தவற்றை மீளக் கோருதல், செலவழிப்பதற்காகக் கோருதல், உரிமை கொண்டாடிக் கோருதல் என்பனவற்றைக் குறிக்கிறது.  

வழக்கு தொடுப்பதற்குத் தகுதியுடைய கோரிக்கையை –  வழக்கு நடவடிக்கை மேற்கொள்வதற்குத் தக்க கோரல் > வழக்குறு கோரல் என்கிறோம். 

1990 ஆம் ஆண்டின் திருத்தச் சட்டம் 2 மூலம்  சேர்க்கப்பட்டுள்ள சொத்துப் பரிமாற்றச் சட்டத்தின் பிரிவு 3 இல் வழக்குறு கோரல், வரையறுக்கப்பட்டுள்ளது.  

  வழக்குறு கோரல் என்பது எளிதில் உணரஇயலா அசையாச் சொத்து; சொத்துப் பரிமாற்றச் சட்டம்  7 ஆம் இயலில் இது கையாளப்படுகிறது.   மற்றொரு தரப்பார் வைத்திருக்கும் பங்குகளில் பயன்களைப் பெறுவதற்குரிய உரிமையைப் பயனுறு நன்மை குறிப்பிடுகிறது.

பொதுவாக அறக்கட்டளைகள் தொடர்பானவற்றில் அறக்கட்டளை உடைமைகளில் ஒருவர் ஆர்வம் காட்டும் பொழுது குறிக்கப்படுகிறது.

மூன்றாம் தரப்பினருடனான ஒப்பந்தத்தில் குறிக்கப்பெறும் உரிமை பயனுறு நன்மை எனப்படுகிறது.

சட்டப்பிரிவு 3 இல் வழக்குறு கோரல்   பாதுகாப்பற்ற கடனுக்கு உரிமை கோருதல்,

2.) அசையும் சொத்தில் நலன் பயக்கும் ஈடுபாடு முதலியவற்றைக் குறிக்கிறது.  
இவை இரண்டும் நீதி மன்றங்களில் துயர் தணிப்பிற்கு ஏற்கப்பெற்ற கோரிக்கைகள் ஆகும்.

அவதூறு முதலிய கொடுந்தொல்லைகள், இடையூறுகள் தொடர்பானவற்றில் துயரீடு பெறுதல் போன்ற, துயர் தணிப்பிற்கான வேறு வகைக் கோரல்களும் உள்ளன. என்றாலும் இவை, வழக்குறு கோரல்களாக வகைப்படுத்தப் படவில்லை.
வழக்குறு கோரல் என்பது மேலே குறிப்பிட்ட இருவகையான கோரல்களைமட்டுமே உள்ளடக்கியது
656. Actionable per se தனித்தனியாகச் செயல்படக்கூடியது  

சட்டப்பூர்வ வழக்கு ஒன்று நடவடிக்கை எடுக்கக்கூடியதாக இருந்தால், நீதிமன்றத்திற்கு வழக்கை எடுத்துச் செல்ல  இழப்பு அல்லது சேதம் ஏற்பட்டது என்பதை மெய்ப்பிக்க வேண்டியதில்லை.

அவதூறு போலல்லாமல் தனித்தனிச் செயல்பாட்டிற்குரியது.  

இலத்தீன் தொடர்
657. Actionable Wrongதொடர்தகு தீங்கு  

செயல்வழித் தவறு

இஃது அரசியல் யாப்பினை மீறுவது.

இது குற்றமா அல்லது உள்நோக்கத்துடன் செய்யப்பட்டதா எனப் பார்ப்பதில்லை.  

வழக்குறு தீங்கு  

வழக்கு தொடர்வதற்குரிய தீங்கு என்னும் பொருளில் தொடர்தகு தீங்கு  என்கின்றனர். வழக்கு தொடர்வது என்பதை விட வழக்கு தொடுப்பது என்பதுதான் சரியாக இருக்கும். எனவே, வழக்கு தொடுப்பதற்குரிய தீங்கினைச் செய்யும் பொழுது அது வழக்குறு தீங்கு எனப்படுவது சரியாக இருக்கும்.

ஒரு செயல், நிகழ்வு, நடப்பு, இதன்/இவற்றின் மீது வழக்கு தொடுப்பதற்குரிய காரணங்கள் உள்ளன என்னும் பொழுது வழக்குறு தீங்கு எனப்படுகிறது. எடுத்துக்காட்டாகத் தாக்குதல் என்பது வழக்குறு பொல்லாங்காகும்.  

பொல்லாங்கு அல்லது அரசமைப்பு உரிமை மீறல் செயல், குற்றச்செயலா இல்லையா எனப் பார்க்காமல் அல்லது உள்நோக்கம் உள்ளதா இல்லையா என ஆராயாமல்  வழக்கு தொடுப்பதற்கு உரியது எனக் கருதி வழக்குறு தீங்கு எனப் படுகிறது.

  வழக்குறு தீங்கு என்பது, தீங்கியல் சட்டத்தின்படித் தீர்வு காண்பதற்குரிய தீங்கான செயலுடன் முதன்மையாகத் தொடர்புடையதாகும்.   இதன் மீது உரிமை வழக்கு தொடுக்கலாம்; சேதத்திற்கு இழப்பீடு கோரலாம்.

அவதூறு , ஒப்பந்த மீறல், குறிப்பிட்ட செயலாக்கத்தை  மீறல் முதலியனவற்றிற்கான வழக்குகள் எடுத்துக் காட்டுகளாகும்.  

குற்றம் என்பது மன்பதைக்கு எதிரான தவறு என வகைப்படுத்தப்பட்டுள்ளது. தண்டிப்புச் சட்டங்களின் கீழ்க் குற்றமாக விவரிக்கப்பட்டுள்ளது. எனவே, குற்றம் மெய்ப்பிக்கப்பட்டால் தண்டனை உண்டு. இங்கே தண்டத் தொகையும் இழப்பீடும் மாநில அரசால் விதிக்கப் படுகிறது.

  வழக்குறு தீங்கின் மீதான சேத ஈடுகளை, இதற்கு எதிராக வழக்கு தொடுத்துக் கோரலாம்.  

மரண நேர்ச்சிகள் சட்டம் 1855(முழுமையான சட்டம்) பிரிவு 1.அ. (Section 1A in The Fatal Accidents Act, 1855 [Complete Act]) இன் கீழ் வழக்குறு தீங்கால் மரணம் நிகழ்கையில் அல்லது மரணமின்றி ஊறு நேர்கையில்  பாதிக்கப்பட்ட தரப்பாருக்கு அதற்கான இழப்பீடுகளைப் பெற உரிமையுண்டு.  

[பொருட்கள், பணிகள் சட்டத்தில்( GST Act) உரிமை கோரல் என்பது கடனைக் குறிக்கும். கடன் என்பது, அசையாச் சொத்தின் அடைமானம் அல்லது அசையும் சொத்தின் ஒற்றி(ஒத்திக்கு விடல்)  அல்லது அடைமானம் அல்லது நீதிமன்றத்தின் ஆதாரமான தணிதொகையாக(நிவாரணமாக)அமையும்  கோருநரின் உள்ளபடியான அல்லது ஆக்கமுறையான உடைமையில் இல்லாத உரிமையியல் மன்றங்களில் பயன் நுகர்வில் உள்ள இருப்பு, திரட்டு,கட்டுப்பாடு, தற்செயல்  முறையில் இல்லாத கடனை மட்டுமே குறிக்கும்.]  
658. Activateசெயல்திறன் ஊட்டு

முடுக்கிவிடு

தூண்டிவிடு  

செயற்பாங்கு  

சுறுசுறுப்பாக்கு, செயற்படுத்து, கிளர்வூட்டு, எதிர்மின் உமிழ்வு மிகுத்தல், செயலூக்கு, செயல்திறன் ஊட்டு, முடுக்கிவிடு, தூண்டிவிடு என்பன இச்சொல்லின் பொருள்கள். எனினும் வணிகச் சட்டத்தில் செயற் பாங்கிற்கு வரும் நிலை அல்லது நாளைக் குறிப்பதால் செயற்பாங்கு எனலாம்.

  கூட்டாண்மை நிறுவனத்தில் வரையறுக்கப்பட்ட கூட்டாண்மை உருவாக்கப்பட்ட நாள், உற்பத்திக் கூட்டாண்மையில் முதலீட்டுப் பங்கைச் செலுத்திய நாள் ஆகியவற்றைக் குறிக்கும். இவ்வாறு செயல்பாட்டிற்கு வரும் நாளைக் குறிப்பதால் செயற்பாங்கு என்பது இங்கும் பொருந்தும்.
659. Active Complicityகுற்றச் செயலில் முனைப்பாக இருத்தல்

  குற்றச் செயலில் உடந்தையாக இருத்தல்
660. Active concealmentமறைப்புச்செயல்  

ஒன்றை வெளிப்படுத்த வேண்டிய சூழலில் சொல்லாலோ செயலாலோ மறைத்தல்.  

ஒரு தரப்பார், மறு தரப்பாரை ஏமாற்ற அல்லது ஏமாற்றும் நோக்கத்துடன் எதையாவது மோசடியாக மறைத்தல்.

Followers

Blog Archive