Monday, November 17, 2025

தமிழாசான்களை நெறிப்படுத்திய இலக்குவனார்! – இலக்குவனார்திருவள்ளுவன்

 




இலக்கியம் – நூல் அறிமுகம் நவம்பர் 17, 2025 தாய் / thaaii.com


பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் வித்துவான் இலக்குவனாராகத் தமிழாசிரியராகப் பணியாற்றிய பொழுது 1939இல் எழுதி 1940 இல் வெளியிட்ட நூல் ‘தமிழ்க் கற்பிக்கும் முறை’.

இலக்குவனார் பள்ளி மாணாக்கராக இருந்த பொழுதே கவிஞர், சொற்பொழிவாளர், மொழி பெயர்ப்பாளர் என விளங்கினார்.

புலவர் மாணாக்கராக இருந்த பொழுது கட்டுரையாளர், நூலாசிரியர், தனித் தமிழ்ப்பரப்புநர், தமிழாசிரியர் எனத் திகழ்ந்தார்.

இதனால், இந்நூலை எழுதுவதற்குரிய முழுத்தகுதியாளராகத் திகழ்ந்தார். பலர் பெயரளவிற்குப் பக்கங்களை நிரப்பி ஏனோதானோ என்று எழுதிவிடுகின்றனர்.

இந்நூல் குறித்த அறிஞர்களின் கருத்துகளைப் பார்ப்போம்.

நன்னிலம் கழக மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் எசு. ஆராவமுது (ஐயங்கார்), இந்நூல் குறித்து அறிமுக உரையில்,

தாய்மொழியின் வளர்ச்சிக்கு ஊக்கத்தை வழங்க வேண்டிய தேவையைத் தமிழர்களுக்கு எடுத்துரைக்கவும், உடன் பணிபுரியும் ஆசிரியர்கள் தமிழ்க் கற்பித்தலை எவ்வாறு பயனுள்ளதாகவும், மாணவர்களின் ஆர்வத்தைத் தூண்டுவதாகவும் செய்யலாம் எனத் திட்டமிடுவதிலும், சில வழிமுறைகளை வழங்கியுள்ளார்” எனத் தெரிவித்துள்ளார்.

இந்நூலில், தமிழ்நாட்டுக் கல்வியின் துயரங்களையும் தமிழாசிரியர்களின் அவலங்களையும் நடுநிலையுடன் எடுத்துரைத்துள்ளார்.

எனவே, குடவாசல் கழக மேல் நிலைப்பள்ளித் தலைமையாசிரியர் பி. சுவாமிநாதன் மதிப்புரையில், “இந்நூல் மூல நூலாகவும், படிக்கச் சுவையானதாகவும் இருந்தது. அதில் ஒரு சிறப்பு என்னவென்றால், ஆசிரியர் மிகவும் துணிவாகத் தற்காலத் தமிழ் வகுப்புகளின் அவல நிலையை வெளிப்படையாக எழுதியிருந்ததுதான்.

ஆனால் இந்த நூல், தமிழின்மீது தணியாத காதல் கொண்ட ஒரு தமிழாசிரியரால் எழுதப்பட்டது என்பதாலேயே, அவர் கூறிய பரிந்துரைகள் நடைமுறையில் ஆழ்ந்து சிந்திக்கப்பெற்றவை என்றும், அவை மிகச்சிறந்த பயனளிக்கக் கூடியவை என்றும் நம்பலாம்” என இலக்குவனாரின் துணிவைச் சுட்டுகிறார்.

“இந்நூற் பயிற்சியால் ஆசிரியராவார்க்குத் தகுதி மேம்பாடும், உள்ளக் கிளர்ச்சியும், மாணவர்களது நன்மதிப்பும், தேர்ச்சி நலனும் பெருகும் நிலை எய்தும்.

நூலிற் கூறப்படும் பொருள்களை ஒழுங்குப்படுத்தி, ஏற்ற அளவு விரித்து விளக்கி, அழகு பெற முடித்துக் காட்டியிருக்கும் திறமை இந்நூலாசிரியது இளமை தொட்டுளதாய நுண்மாண்புலச் சிறப்பினை நன்கு வெளிப்படுத்திக் காட்டுகின்றது.”

– என அரசர் கல்லூரி (திருவையாறு), தமிழ்ப் பேராசிரியர் வேங்கடாசலம் (பிள்ளை) இந்நூல் குறித்து அணிந்துரையில் குறிப்பிட்டுள்ளார்.

‘தமிழ்க் கற்பிக்கும் முறை’யெனும் இந்நூலைப் பார்வையிடும் பேறு பெற்ற யான் இதன்கண் அமைந்துள்ள முதுமொழி, தமிழின் புதுநிலை முதலாகத் தாய்மொழி தோய்ந்த தனித்திட்டம் ஈறாகவுள்ள பொதுவியல்பு விளக்கங்களையும், செய்யுளும் உரைநடையும் இலக்கணமும் கட்டுரையும் மொழிபெயர்ப்புமாகிய மொழிப்பயிற்சிக் கூறுகளின் சிறப்பியல்பு விளக்கங்களையும் ஊடூடே பொதியப்பட்டுள்ள பொருணயம் சொன்னயங்களையும் ஒருவாறு ஆய்ந்துணர்ந்தேன்.

இலக்குவனார் இத்துறையைத் துருவியாய்ந்து கண்ட கருத்துகளைத் திரட்டி, உணர்வு துள்ளும் உரைநடையிலே உதவியுள்ள இச்சிறுநூலை நமது வித்துவான் இனத்தவரும் அவர் புறத்திருந்து தமிழ்க் கற்பிக்கும் பொறுப்பேற்ற பிற ஆசிரியரும் மனமுவந்தேற்றுப் பயன்படுத்திக் கொள்வார்களாக!“

– என மதுரை மாநாட்டாண்மைக் கழகக்கல்விப் பணியாளன் – மதுரை மாவட்டக்கல்வி அலுவலர் – க. சம்பந்தன், நூலுரையில் பாராட்டியுள்ளார்.

தமிழாக்கம் கருதுவோர் நினைவில் வைத்துப் போற்றுதற்குரிய செயல்கள் பல இந்நூலில் விரித்துரைக்கப்படுகின்றன.

தமிழ்க் கற்போர், தமிழ்க் கற்பிப்போர் ஆகிய இருதிறத்தினரின் பெற்றிமைகள், ஈதல் முறை, கட்டுரை இயற்றல், சொற்பொழிவாற்றல் பாடநூல் இயற்றல், இன்னோரன்ன செய்திகள் செவ்விதின் ஆய்ந்து தெளிக்கப் பெற்றுள்ளன.

இந்நூலாசிரியர் வித்துவான் சி. இலக்குவன் நுண்ணறிவும், தமிழ்ப் புலமையும் நிரம்பிய பெற்றியர். தமிழ்க் கல்வியை உளமாரப் போற்றுபவர்; அதன் வளர்ச்சியில் கருத்தூன்றி இடையறாத் தமிழ்ப் பணியில் தலைநிற்பவர்.

தாம் ஆற்றி வரும் ஆசிரியத்துறையில் காணும் இடர்ப்பாடுகளைக் களையும் நோக்குடன் ஆழ்ந்து சிந்தித்து, இயற்றிய நூலாகும் இக்கட்டுரை தமிழார்வம் மிக்கு வளரும் இற்றைநாளில் வித்துவான் இலக்குவனார் இயற்றி உதவிய இந்நூல், புது எண்ணங்களைத் தோற்றுவிப்பதற்குரிய கருவியாகும். தமிழுலகம் இதனை ஆதரித்துப் போற்றுமென எண்ணுகின்றேன்“

– என நூன்முகத்தில் கரந்தைத் தமிழ்ச் சங்கத் தலைவர் தமிழவேள் த.வே. உமாமகேசுவரனார் சிறப்பாக விவரித்துள்ளார்.

இரண்டாம் பதிப்பின் அணிந்துரையில், தமிழாய்வின் விடிவெள்ளி பேரா. முனைவர். ப. மருதநாயகம் பின்வருமாறு தெரிவித்துள்ளார்:

“இலக்குவனார் இளமையில் கண்ட கனவுகளையும், தீட்டிய திட்டங்களையும், உயர்நிலைப் பள்ளி ஆசிரியராக இருந்தபோதே அவர் எழுதிய, ‘தமிழ்க் கற்பிக்கும் எனும் நூல் நமக்கு முறையாகத் தெரிவிக்கிறது.

அவர் இறுதிவரையிலும் தடம் புரளாமல், பதவிக்காகவோ, பணத்திற்காகவோ, தம் கொள்கையெதனையும் மாற்றிக் கொள்ளாமல் தளராது போரிட்டார் என்பதை இந்நூலிலிருந்து அறிந்து மகிழ்கிறோம்.

புது எண்ணங்களைத் தோற்றுவிப்பதற்குரிய கருவியாக இந்நூல் செயல்பட்டுள்ளதை இதன் உட்தலைப்புகள் புலப்படுத்தும்.”

தமிழாசிரியர்கள் மொழியை மட்டும் கற்பிக்காமல் மொழிப்பற்றையும் நாட்டுப் பற்றையும் ஊட்டும் வகையில் வகுப்பெடுக்க வேண்டும் என்கிறார்.

“நம் நாடோ அடிமை நாடு; நாமோ அடிமைகள்; நம் மொழியோ அடிமை மொழி; மாணவர்களோ அடிமை நிலையிற்றோன்றியவர்கள்; பழம் பெருமையையுணரார்; உணரின் தாழ்வுற்றிருப்பதையுன்னி வீறுகொண்டெழுவர்.

இலக்குவனாரைப் போல் தமிழாசிரியர்களும் மொழிப் பற்றையும் நாட்டுப் பற்றையும் தன்மதிப்புணர்வையும் ஊட்டுவார்களாக.

இவ்வாறு சிறப்பாகப் பாராட்டப்பெறும் தமிழ்க் கற்பிக்கும் முறை நூல் குறித்து நாமும் சுருக்கமாகப் பார்ப்போம்.

1.பொது, 2. சிறப்பு, 3 நூல் நிலையம், 4. மாணவர் கழகம், 5. தமிழிற் கற்பித்தல், 6. நன்னெறி வகுப்பு, 7. தமிழ்ப் பாடப் புத்தகங்கள், 8. தமிழ்க் கல்வித் திட்டம் என 8 தலைப்புகளில் கற்பிக்கும் முறையை எளிதில் உணரும் வகையில் இலக்குவனார் இந்நூலைப் பகுத்து எழுதியுள்ளார்.

இவற்றுள் ‘பொது’த் தலைப்பில் ஆசிரியர்கள், வகுப்பில் நடந்துகொள்ள வேண்டிய முறை குறித்து அறிவுறுத்தியுள்ளார்.

‘சிறப்பு’ என்னும் தலைப்பில், செய்யுள் கற்பிக்கும் முறையையும் உரைநடைப் பாடத்தை நடத்தும் முறை குறி்த்தும் தமிழாசிரியர் எவ்வாறு பணியாற்ற வேண்டும் என்றும் விளக்கியுள்ளார்.

தமிழாசிரியர்களாயிருப்போர் பிறமொழிகளில் ஒன்றைப் பேணிப் பயிலுதல் தவிர்க்கலாகாக் கடனாகும் என வலியுறுத்துகிறார்.

பண்டைத் தமிழ்நாட்டில் ஆசிரியர் என்றால் தமிழாசிரியர்தாம். அவரே தாம் அறிவியல் முதலானபிற உலகியற் பொருள்களையும் கற்பித்தனர்.

ஆதலின் தமிழாசிரியர்கள் பிற துறைகளையும் அறிந்தவராக இருத்தல் வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

மூன்றாவதாக, யாவரும் கசப்பாகக் கருதும் இலக்கணத்தை அவ்வாறு அல்ல என ‘இலக்கண’த் தலைப்பில் விளக்கியுள்ளார்.

நான்காவதாகக் ‘கட்டுரை’ என்னும் தலைப்பில், கட்டுரைக்குரிய பொருள்கள், கடிதம் எழுதுதல், திருத்தம், குறியீடுகள் அடுத்து ஐந்தாவதாக மொழிபெயர்ப்பு குறித்து விளக்குகிறார்.

எவ்வாறு மொழி பெயர்ப்பு அமைய வேண்டும் என்றும் மாணாக்கர்களுக்கு எவ்வாறு இதில் பயிற்சி அளிக்க வேண்டும் என்றும் இலக்குவனார் நன்கு விளக்கியுள்ளார்.

சொல்லுக்குச் சொல் மொழி பெயர்க்கலாகாது என்பதை எடுத்துக்காட்டுகளுடன் பின் வருமாறு விளக்குகிறார்.

“ஆங்கிலத்தினின்றும் தமிழிற் பெயர்த்தல் என்றால் சொல்லுக்குச் சொல் மொழி பெயர்த்தலன்று. அவ்விதம் மொழி பெயர்க்கவும் இயலாது. ஆங்கில நாட்டுப் பழக்க வழக்கம் நாகரிகம், தட்பவெப்பம் சுற்றுச் சார்பு, மொழியின் தொடர் அமைப்பு முதலியன தமிழ்நாட்டுப் பழக்க வழக்கம் முதலியவற்றோடு பல்லாற்றானும் மாறபாடுடையன.

ஆங்கிலப் பெரியாரான இஞ்சு என்பவர், ‘gentleman’ என்ற ஆங்கிலச்சொற்குத் தகுதியான சொல் வேறு எம்மொழியிலும் காண முடியாது என்கின்றார்.
அவ்வாறே சான்றாண்மை என்ற தமிழ்ச் சொற்கேற்ற சொல் ஆங்கிலத்திலும் வேறு எம்மொழியிலும் காண முடியாதென்று தமிழ்ப் பெரியார் ஒருவர் கூறக் கேட்டிருக்கின்றோம்.
இக்கூற்றுகள் ஆங்கிலத்திலுள்ளவற்றைத் தமிழிலும் தமிழிலுள்ளவற்றை ஆங்கிலத்திலும் சொல்லுக்குச் சொல் மொழி பெயர்க்க முடியாதென்பதை வலியுறுத்துகின்றன.

ஆதலின் ஆங்கிலத்திலுள்ள வற்றைத் தமிழிற் பெயர்க்கப் புகுங்கால், ஒவ்வோர் ஆங்கிலச் சொல்லுக்கும் சரியான ஒவ்வொரு தமிழ்ச் சொல்லை நாடிப் பொருள் கூற முற்படலாகாது என்பதை மாணவர்கள் உளத்தில் பதியச் செய்தல்வேண்டும்.

இலக்குவனார் தாம் படித்த காலத்தில் நூலகத்தில் உள்ள எல்லா நூல்களையும் படித்துச் சிறப்பாக முன்னேறியவர். எனவே, அடுத்து நூல் நிலையம் குறித்துச் சிறப்பாகக் குறிப்பிடுகிறார்.

“நூல் நிலையத்தில் பண்டை நூல் தொடங்கி இற்றை நாள் நூல் வரையில் மாணவர்கட்கேற்ற எல்லா வகையான நூல்களும் நிறைந்திருத்தல் வேண்டும். மாணவர்கட்கேற்ற முறையில் வெளியாகும் ஒவ்வொரு நூலும் கல்விக்கூட நூல் நிலையத்தில் இடம்பெறுதல் வேண்டும்.

தமிழாசிரியர்கள், தக்க முறையில் நூல் நிலையப் புத்தகங்களைப் பயன்படுத்தச் செய்து, தமிழ் நூற்களைப் படிப்பதில் தணியாத ஆர்வத்தை உண்டாக்கித் தமிழ்க் கல்வியைப் பெருக்குவார்களாக!” என வேண்டுகிறார்.

கல்வியென்றால் தாய்மொழிக் கல்வியைத்தான் குறிக்குமென்றாலும், இத்தமிழ்நாட்டில் வேற்றுமொழியை விரும்பி விரைந்து கற்கின்ற நிலைமை ஏற்பட்டு விட்டமையின், தாய்மொழிக் கல்வியெனத் தனிப்பெயரிட்டு அதன் இன்றியமையாமையை விளக்க வேண்டியுள்ளது என வருந்துகிறார்.

பள்ளி மாணாக்கனாக இருக்கும் பொழுதே வரவேற்புரை, வழியனுப்புரை, நன்றியுரை, சொற்பொழிவு, கவிதை உரைத்தல் எனப் பலவகையிலும் தம் ஆற்றலைப் பெருக்கிய சிறப்பிற்குரியவர் இலக்குவனார்.

எனவே, மாணவர் கழகத்தின் பயனை நன்கறிந்தவர் என்ற முறையில் அதனை நன்கு வலியுறுத்தியுள்ளார்.

மாணவர் கழகம் குறித்துப் பின்வரும் வகையில் இலக்குவனார் வலியுறுத்துகிறார்.

“மாணவர் கழகத்தின் சார்பில் தமிழ்ப் புலவர்கள் மன்னர்கள் முதலியோர் நட்களைக் கொண்டாடச் செய்து,

தமிழ்நாட்டுப் பெரியார்களிடத்தும் தமிழ் நூல்களிடத்தும் பற்றுதல் கொள்ளுமாறு செய்து, தாமும் தமிழ்ப் பெரியார்களாக வேண்டுமென்ற ஆர்வத்தை மாணவர்க்கு ஊட்டுதல் வேண்டும். இன்னும் ஒல்லும் வகைகளிலெல்லாம், மாணவர் கழகத்தைப் பயன்படுத்தி மாணவர்க்குத் தமிழ்க்கல்வியைத் தமிழாசிரியர்கள் அளிப்பார்களாக!”

‘தமிழிற் கற்பித்தல்’ என்னும் அடுத்த கட்டுரையில் தமிழ்மொழி மட்டுமல்லாமல் எல்லாப் பாடங்களும் தமிழிலேயே கற்பிக்கப்பட வேண்டும் என்கிறார்.

“பிற பொருட்பாடங்கள் திருந்திய தமிழ் நடையில் எழுதப்பெற்று, தமிழ்ப் புலமையுற்றோரால் கற்பிக்கப்படுமாயின், மாணவர்கள் பாடங்களை எளிதாக அறிந்துகொள்வர். பிறமொழி வகுப்பு நீங்கிய ஏனைய வகுப்புக்களிலெல்லாம், உரைப்பதும் உற்றுக்கேட்பதும் திருந்திய தமிழாயிருத்தலின், தமிழிலும் விரைவில் நற்பயிற்சியுறுவர். தமிழைக் கற்பதிலும் ஆர்வங்கொள்வர். தமிழ்மொழியும் திருந்திய முறையில் வளர்ச்சியுறும்; தமிழாசிரியர் தமிழைக் கற்பிப்பதில் இடர்காணார்.”

சில ஆங்கிலப் பெரியார்கள் போன்று வாழ்க்கையின் எத்துறையிலும் நன்னெறியைக் கடைப்பிடிக்க வேண்டுமென்று எண்ணுவது போல், எல்லா வகுப்புகளிலும் நன்னெறியைக் கற்பிக்க வேண்டுமேயன்றித் தனியாகக் கற்பிக்கக் கூடாதென்று இலக்குவனார் ‘நன்னெறி வகுப்பு’ என்னும் ஆறாவது தலைப்புக் கட்டுரையில் தெரிவிக்கிறார்.

நன்னெறி வகுப்பை இலக்கிய வகுப்பென மாற்றித் தமிழிலக்கியச் சிறப்பை எடுத்துக் கூறும்படி செய்வார்களாக!

தமிழிலக்கியங்களே நன்னெறியைப் பல்லாற்றானும் விரித்துக் கூறுபவையாய் இருக்கின்றமையின், நன்னெறியையும் மாணவர்கள் அறிந்து போற்றி ஒழுகுவதற்கும் வழியுண்டாகும் என்கிறார்.

நம் கல்வித் திட்டத்தை இரண்டு பகுதிகளாகப் பிரிக்க வேண்டும்.

முதற்பகுதி: ஏழாண்டுகள் தமிழ்க் கல்வியையே கற்பித்தல் வேண்டும்.

இரண்டாம் பகுதி: இப்பகுதியை மூன்று பிரிவுகளாகச் செய்தல் வேண்டும்.

  1. தமிழ்ப் புலமை பெறுதல் 2. ஆங்கிலப் புலமை அடைதல் 3. தொழில் வல்லுநராதல்.

எனக் கல்வித் திட்டத்தை வகுத்துத் தருகிறார்.

நிறைவாகச் சேர்க்கையாக மாணவர்கள் பிழைபட எழுதும் சொற்களிற் சிலவும், அவற்றின் திருத்தமும் அளித்துள்ளார்.

ரகர, றகரச் சொற்களின் வேறுபாடுகள், ளகர ழகரச் சொற்களின் வேறுபாடுகள் ஆகியனவும் இப்பகுதியில் இடம் பெறுகின்றன.

இவை ஆசிரியர்களுக்கே பேருதவிய என்னும் பொழுது படிக்கும் அனைவருக்குமே பயன் தரும் எனலாம்.

தமிழைத் திருத்தமாக எழுதவும் பேசவும விழைபவர்கள் தமிழறிஞர் இலக்குவனாரின் ‘தமிழ்க் கற்பிக்கும் முறை’ நூலைப் படித்துப் பயனடைவார்களாக!

Sunday, November 16, 2025

குறட் கடலிற் சில துளிகள் 34 : கடிந்துரைப்போர் இல்லாதவன் அழிவான்! – இலக்குவனார் திருவள்ளுவன்



(குறட் கடலிற் சில துளிகள் 33 : இடிக்குந் துணை இருப்போரைக் கெடுப்போர் யாருமிலர் – தொடர்ச்சி)

    இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்

    கெடுப்பா ரிலானுங் கெடும்.  

    (திருவள்ளுவர், திருக்குறள், ௪௱௪௰௮ – 448)

    தவறுகின்ற நேரங்களில் கடிந்துரைப்பார் இல்லாத பாதுகாப்பற்ற அ்ரசன் கெடுப்பார் இல்லாவிட்டாலும் தானே கெடுவான்.

    இடித்தல் என்பதற்கு முழங்குதல், இடியிடித்தல், நோதல், தாக்கிப்படுதல், மோதுதல், கோபித்தல், தூளாக்குதல், தகர்த்தல், நசுக்குதல், தாக்குதல், முட்டுதல், கழறிச்சொல்லுதல், கொல்லுதல், தோண்டுதல், கெடுத்தல்,கடிந்து சொல்லுதல் எனப் பல பொருள்கள்.

    இத் திருக்குறளில் இடிப்பாரை என்பது தக்க சமயத்தில் கண்டித்து நல்வழிப்படுத்துவோர் என்னும் பொருளில் வந்துள்ளது.

    இல்லாத=தமக்கு அணுக்கமாக வைத்திராத

    ஏமரா=காவலற்ற

    மன்னன்=அரசன்

    கெடுப்பார்=கெடுப்பவர்கள்

    இலானும்=இல்லை என்றாலும்

    கெடும்=அழிவான்

    ஏமரா  என்பது தக்க இடித்துரைப்பார் இல்லாமையால் காவலை இழந்தவனைக் குறிக்கிறது.

    கெடும் என்பது தீங்கிற்கு உள்ளாதல், வழி தவறுதல், சிறப்பை இழத்தல், ஒழுக்கந் தவறுதல், முறை தவறுதல் எனப் பலவற்றையும் குறிக்கும்.

    மன்னன் என்பது அரசனை மட்டுமல்லாமல், தலைவன், குடும்பத் தலைவனாகிய கணவன் முதலியவரையும் குறிக்கும்.

    இலானும்=கெடுப்பான் இல்லாதவனும் என்றும் பொருள் கொள்ளலாம்.

    இவ்வாறு தலைவனோ தலைவியோ கேட்டிற்கு உள்ளானால், அவர்களைச் சார்ந்துள்ளவர்களும் தீங்கிற்கு உள்ளாவர். எனவே, அனைவர் நலன் கருதியும் தன் அருகே துதி பாடிகளை வைத்துக் கொள்ளாமல் துணிவுடன் தவற்றினைக் கடிந்துரைப்போரைச் சூழ வைத்துக் கொள்ள வேண்டும்.  அருகில் உள்ளவர்கள் ஆமாம் சாமி போடுபவர்களாக இருப்பின் செவிக்கு இனிமையாக இருக்கலாம், உள்ளம் குளிரலாம். ஆனால் வாழ்க்கை நலம் பயக்காது. அதே நேரம், பிறர் தவற்றினை அல்லது குறையைச் சுட்டிக் காட்டுவது அந்த நேரத்தல் கசப்பாக இருக்கலாம். ஆனால் அவர்கள் அறிவுரையைக் கேட்டு நடப்பின் வரக்கூடிய அழிவிலிருந்து காத்துக் கொள்ளலாம்.

    ஆன்றோர் அறிவுரையைக் கேட்காமல் அழிந்தவர்களை வரலாறு நமக்கு எடுத்துச் சொல்கிறது. நல்லவர்கள் அறிவுரையால் நன்மை எய்தியவர்களைப் பற்றியும் வரலாறு சொல்லத் தவறவில்லை. ஆட்சி வரலாறு, தொழில் வரலாறு எனப் பல தரப்பிலும் நாம் இவற்றை அறியலாம்.

    முந்தைய குறளில்(447), இடிக்குந் துணை இருப்போரைக் கெடுப்போர் யாருமிலர் என்ற திருவள்ளுவர் இக்குறள்(448) மூலம் அவ்வாறு இடித்துரைக்கும் தன்மையரை அணுக்கமாகக் கொள்ளாதவன் கெடுப்பார் இல்லாவிட்டாலும் தானே அழிவான் என்கின்றார். ஆக இவ்விரு குறள்கள் மூலம் இடித்துரைப்போர் துணையின் இன்றியமையாமையை நமக்குத் திருவள்ளுவர் வலியுறுத்துகிறார்.

    நாமும்,

    கடிந்துரைப்போரைத் துணையாகக் கொள்ளாதவன்

    தானே அழிவான்

    என்பதை உணர்ந்து தக்கவரைத் துணையாகக் கொண்டு வாழ்வில் வெல்வோம்! 000

    Saturday, November 15, 2025

    சமற்கிருதத்திற்குக் கூடுதல் நிதி- சரிதானே!?- 4: இலக்குவனார் திருவள்ளுவன்

          16 November 2025      கரமுதல



    (சமற்கிருதத்திற்கு கூடுதல்  நிதி- சரிதானே!?- 3: தொடர்ச்சி)

    ஆக எந்த ஒரு திட்டத்திற்கும் நாம் ஒன்றிய அரசைச் சார்ந்தே உள்ளோம். ஆனால், பல திட்டங்களைத் தமிழ்நாடு அரசைப் பின்பற்றித்தான் தென் மாநிலங்கள் பின்பற்றுகின்றன. அஃது உலகத் தமிழ் மாநாடு ஆகட்டும் வேறு பல திட்டங்கள் ஆகட்டும். ஆனால் இந்த மொழி வளர்ச்சியில் நாம் மத்திய அரசைப் பின்பற்றலாம். பின்பற்றி நாம் என்ன கேட்கலாம்? அவர்கள் சமற்கிருத வளர்ச்சிக்குப் பல்வேறு திட்டங்களைச் செயற்படுத்துகிறார்கள் இல்லையா? அந்தத் திட்டங்கள் படி நாமும் பண உதவி கேட்டுப் பெறலாம். எடுத்துக்காட்டாகச் சமற்கிருத இதழ்கள், இந்தி இதழ்களை ஊக்கப்படுத்துவதற்காக அரசு விளம்பரங்களைத் தருகிறது. அஃதாவது நிதி உதவி வேறு, விளம்பரம் வேறு, இவ்வாறு பல்வேறு திட்டங்கள் மூலமாக அம்மொழிகளை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. ஆகவே, சமற்கிருத நிதி ஒதுக்கீட்டிற்கு எதிராக, யார் யாரெல்லாம் கண்டனம் சொல்கிறார்களோ, ஒரு தடவைக்கு மேல் ஆட்சிப் பொறுப்பில் இருந்தவர்கள்களைத்தான் முதலில் கேட்கிறேன் இந்தப் பத்து ஆண்டுகளாக எங்கே சென்றீர்கள்? பத்தாண்டுகளாகத் தூங்கிவிட்டு, இப்போது ஏன் கேட்கிறீர்கள்? போன ஆண்டு சமற்கிருத நிதி ஒதுக்கீட்டு விவரம் வந்தது; கண்டித்தார்கள், அதற்கு முந்தின ஆண்டும் வந்தது; கண்டித்தார்கள். போன ஆண்டு ஒருவர் கண்டித்தார். இப்போது கண்டிக்கவில்லை; கவனம் இல்லை, வேறு சிக்கலில் இருக்கிறார் போலும். பொதுவாக அவ்வப்போது வரும் இவ்வளவு வளர்ச்சித் தொகை ஒதுக்கீடு என்று. ஆகா ஓகோ ஒன்றுமில்லா செத்த மொழிக்கு இவ்வளவா என்பார்கள். ஆனால் செத்த மொழிக்குதான் செலவழிக்கிறார்கள். நாம் வாழும் மொழியைச் சாகடித்துக் கொண்டு இருக்கிறோம். கல்வியில் தமிழ் இல்லையே, அன்றாடப் பயன்பாட்டில் தமிழில்லையே, வழிபாட்டு மொழி தமிழில் இல்லையே, எங்கு பார்த்தாலும் தமிழ் இல்லையே, தமிழே இல்லாமல் தமிழை நாம் சாகடித்துக் கொண்டு இருக்கும் போது நாம் செத்த மொழி என்று பல கோடி உரூபாய் ஒதுக்கீடு பெறக்கூடிய ஒரு மொழியைச் சொல்லலாமா, ஆக நாம் மேலோட்டமாக கண்டிப்பதிலோ அல்லது மிக கடுமையாகக் கண்டிப்பதிலோ பலன் கிடையாது.

    இதே போன்று, தமிழ்நாட்டிலும் பல திட்டங்கள் உள்ளன. நிதி உதவி செய்வது, அச்சிட்ட புத்தகங்களுக்கு நிதி உதவி செய்வது என. ஆனால் அதற்கான வரையறையை நீங்கள் பார்த்தீர்களானால் மிக மிகச் சிக்கலாக இருக்கும். அஃதாவது எந்த உதவியும் யாரும் பெற முடியாது. அந்த அளவில் தான் உதவியே இருக்கும். இந்தத் திட்டங்கள் எதற்காக? தமிழைப் பரப்புவதற்காக தானே இருக்க வேண்டும். ஆனால் அஃது அல்ல அவ்வாறு இல்லாமல் நிதித் துறையை அவர்கள் சொந்த வீட்டுப் பணத்தை வாரி வழங்குவது போன்று எண்ணிக் கொண்டு கெட்டியாகப் பிடித்துக் கொள்வார்கள். அப்படிப்பட்ட நடை முறைதான் நமக்கு இருக்கின்றது. ஆக, நாம் செய்ய வேண்டியது என்ன? சமற்கிருதத்திற்கு அதிக ஒதுக்கீடு என்று சொல்வதை நிறுத்துங்கள். மிக அன்பான வேண்டுகோள், திட்டங்களைத் தாருங்கள்,  இன்னின்ன திட்டங்கள், இந்த திட்டங்களுக்கான எங்களுக்குத் தாருங்கள், திட்டத்திற்கான பண வசதி தாருங்கள், இப்படிக் கேட்கும்பொழுது ஒட்டுமொத்த எல்லா மொழிக்கும் குரல் கொடுக்க வேண்டா. அவரவர் மொழியை அவர்கள் பார்த்து கொள்ளட்டும். அவர்கள் குரல் கொடுத்தால் சேர்த்துக் கொள்ளலாம். எல்லாவற்றையும் சேர்த்துச் சேர்த்தே நம் தமிழை அழித்துக் கொண்டு இருக்கிறோம். மலையாளத்தில் அவன் குரல் கொடுத்தால் இணைந்து கொள்ளுங்கள். அதை நாம் சொல்ல வேண்டா. தமிழுக்கு இன்னின்ன செய்ய வேண்டும்; செய்யுங்கள் என்று கேட்போம். நமது வேலை என்ன? தமிழ் வளர்ச்சிக்கு ஒன்றிய அரசு என்னென்ன செய்ய வேண்டும் என்று திட்டமிடுதல், அது மட்டுமல்லாமல் எவ்வாறு சமற்கிருத அறிஞர்களையும், சமற்கிருத நூலாசிரியர்களையும் ஒன்றிய அரசு மதிக்கிறதோ அவ்வாறு தமிழ்நாடு அரசு மதிக்க வேண்டும். தமிழ்நாடு அரசு விருதுகள் கொடுத்தும் மேலும் பாராட்டவும் செய்யும். இல்லை என்று சொல்லவில்லை. ஆனாலும் கூட, இருக்க வேண்டிய அளவிலே இல்லை; எந்த அளவிற்கு இருக்க வேண்டுமோ அந்த அளவிற்கு இல்லை, காரணம் நமக்கு உரிய நடைமுறை அறிவு இல்லை. வேறு சொல் பயன்படுத்தலாம் ஆனால் எனக்கு அந்தச் சொல்தான் வருகிறது. நம்மிடம் செயற்பாட்டுத் திட்டங்கள் இல்லை என்றுதான் சொல்ல வேண்டி இருக்கிறது. ஆக எந்த ஒரு நடைமுறைத் திட்டமும் இல்லாமல், நாம் குரல் கொடுப்பதாலோ கண்டிப்பதாலோ ஏதேனும் பலன் இருக்கிறதா? என்று நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இவ்வாறு சிந்தித்துப் பார்த்தால்தான், ஏன்? நாம் இவ்வாறு செய்ய வேண்டி இருக்கிறது என்றும், என்னென்ன செய்யலாம் என்றும் நமக்கு விழிப்புணர்வு வரும்.

    (தொடரும்)

    13.07.2025

    Friday, November 14, 2025

    நாலடி நல்கும் நன்னெறி 17: கல்வியே உண்மையான அழகு- இலக்குவனார் திருவள்ளுவன்

          15 November 2025      கரமுதல



    (நாலடி நல்கும் நன்னெறி 16: பிறர் மதிக்காவிட்டாலும் சினம் கொள்ளாதே!- தொடர்ச்சி)

    குஞ்சி யழகும் கொடுந்தானைக் கோட்டழகும்

    மஞ்சள் அழகும் அழகல்ல – நெஞ்சத்து

    நல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையால்

    கல்வி அழகே அழகு.

    (நாலடியார் 131)

    பதவுரை:

    குஞ்சி யழகும்= தலைமுடி அழகும்; கொடுந்தானைக் கோட்டழகும்= வேலைப்பாடுகளாலும் வடிவமைப்பாலும் சிறந்துள்ள ஆடை அழகும்; மஞ்சள் அழகும் = மஞ்சள் பூசுவதால் ஏற்படும் அழகும்; அழகல்ல = அழகு அல்ல; நெஞ்சத்து = மனத்தில்; நல்லம்யாம் = நல்லவர்கள் நாம்; என்னும் = என்ற; நடுவு நிலைமையால் = ஒழுக்கம் தவறாத நடு நிலைமையால்; கல்வி அழகே அழகு = கல்வியின் அழகே அழகு.

    பொதுவாகத் தலைமுடி ஆண்களுக்காயின் குஞ்சி என்றும் பெண்களுக்காயின் கூந்தல் என்றும் சொல்லப்படும். தலைமுடி ஐந்து வகைகளாகப் பிரிக்கப்படுவதால் ஐம்பால் எனப்படும். அவை குழல், அளகம், கொண்டை, பனிச்சை, துஞ்சை.

    குழல் என்பது சுருட்டி முடிக்கப்படுவது. அளகம் என்பது நெற்றியைச் சார்ந்த முன்னுச்சிச் சுருள்(curl) முடி.  கூந்தல் என்பது பின்னித் தொங்கவிடப்படுவது. கொண்டை – கூந்தலைத் திரளாகச் சேர்த்துக் கட்டும் முடிவகை. இது ஐந்து வகைப்படும். அவையாவன, 1. இடுமுடிக் கொண்டை, 2. முத்துமுடிக் கொண்டை, 3. வளையம்புக் கொண்டை,    4. புரிக்கொண்டை,   5. கூட்டுக்கொண்டை.

    பனிச்சை என்பது சொருகி விடப்படும் முடியையும் பிரித்துக் கட்டப்படும் சடையையும் குறிக்கும் எனலாம். துஞ்சை என்பதன் மறு பெயர் துஞ்சுகுழல் என்பதாகும்.

    இவை தவிர,தலைமுடியை அழகு செய்வதால் சடை, பின்னல் போன்ற வகைகளாலும் அழைக்கப்படுகிறது.

    இவ்வாறு தலைமுடியைக் குறைத்தும் கூட்டியும் சீர்படுத்தியும் அழகு பார்ப்பது இரு பாலருக்கும் பொதுவே. எனவே, குஞ்சி என்பதால் ஆடவர் முடி திருத்தம்பற்றி மட்டும் கூறுவதாகக் கருதக் கூடாது. ஆடவர்க்குக் கூறுவது பெண்டிர்க்கும் பெண்டிர்க்குக் கூறுவது ஆடவருக்கும் பொருந்தும். எனவே, இதனைப் பொதுவாகவே கருத வேண்டும். மேலும் மஞ்சள் அழகைச் சொல்வதன் மூலம் பெண்கல்வியை நாலடியார் வலியுறுத்துவதை உணரலாம்.

    கொடுந்தானைக் கோட்டழகு என்பதற்கு=வளைந்து நெளிந்து இருக்கும் ஆடையின் வனப்பு என்றும் வேலைப்பாடுகள் கொண்ட நெளிந்து வளைந்து காணப்படும் அழகிய முகப்பைக் கொண்ட முந்தானையின் அழகிய வேலைப்பாடுகள் அல்லது மடிப்புகளின் அழகு என்றும் விளக்குகின்றனர்.  தானை என்பது ஆடையைத்தான் குறிக்கிறது. கொடுந்தானைக் கோட்டழகு என்பதால் வளைந்தும் நெளிந்தும் நேராகவும் உள்ள கோடுகளால் ஆன கோலம்(design) கொண்ட ஆடை எனக் கொள்ள வேண்டும். எனவே வடிவமைப்பு கொண்ட ஆடை அழகு உண்மையான அழகு அல்ல என்கிறது நாலடியார்.

    மஞ்சள் அழகு என்பது மஞ்சள் தூளை முகத்தில்பூசிக் குளிப்பதால் பொலிவு பெறும் மகளிரின் மஞ்சள்முக அழகினைக் குறிக்கும்.

    அழகல்ல என்பது இத்தகைய வெளித்தோற்றத்தாலும் ஆடை அணிகளாலும தோன்றும் புற அழகு உண்மையான அழகு ஆகாது என்கிறது.

    செயலுக்குக் காரணமான மனத்தில், தன்னை நல்லவனாக/நல்லவளாக நடந்து கொள்ளும் அற வாழ்க்கையைக் கற்பிக்கும் கல்வி அழகுதான் உண்மையான அழக. நடுவுநிலைமை என்பது நயன்மை (நீதி)நெறியைக் குறிப்பிடுகிறது.

    நாலடியார் கல்வி குறித்து ஓர் அதிகாரம் மூலம் பத்துப் பாடல்கள் வழி நமக்குக் கல்வியை வலியுறுத்துகிறது. திருக்குறள் முதலான பிற இலக்கியங்களும் கல்வியைச் சிறப்பித்து வலியுறுத்துகின்றன.

    எடுத்துக்காட்டாக ஏலாதி(பாடல் 74).யில் புலவர் கணிமேதாவியார்

    இடைவனப்பும் தோள்வனப்பும் ஈடின் வனப்பும்

    நடைவனப்பும் நாணின் வனப்பும் – புடைசால்

    கழுத்தின் வனப்பும் வனப்பல்ல எண்ணோ

    டெழுத்தின் வனப்பே வனப்பு

    எனக் கல்வியே அழகு என்கிறது. இப்பாடலும் பெண் கல்வியை வலியுறுத்துவைதக் காணலாம். இவற்றையெல்லாம் நாம் உணர்ந்து நடந்தால் நூற்றுக்கு நூறு பெண்கல்வியை நாம் அடையலாம். இதன் மூலம் நாட்டைச் சீர்திருத்தப் பாதையில் கொண்டு செல்லலாம்.

    எனவே நாலடியார் முதலிய தமிழ் இலக்கியங்கள் வலியுறுத்தும் கல்வியே உண்மையான அழகு என்பதை உணர்ந்து அஃதை அடைவோமாக!

    Thursday, November 13, 2025

    தொல்காப்பியமும் பாணினியமும் – 9 : வடமொழி இலக்கண நூலாசிரியர் அறுபத்து நால்வர் என்னும் புரட்டு – இலக்குவனார் திருவள்ளுவன்

          14 November 2025      அகரமுதல



    (தொல்காப்பியமும் பாணினியமும் 8  : தொல்காப்பியர் காலத்தில் சமற்கிருதத்தில் இலக்கணநூல் உருவாகவே வாய்ப்பில்லை – தொடர்ச்சி)

    “இந்திரனுக்குப் பின்னும் பாணினிக்கு முன்னுமாக ஒருவன் பின் ஒருவராய் வந்த வடமொழி இலக்கண நூலாசிரியர் அறுபத்து நால்வர் என்பர். இவர்கள் ஒவ்வொருவர்க்கும் முப்பதாண்டுகளாக வைத்துக் கணக்கிடுங்கால் இந்திரனுக்கும் தொல்காப்பியம் – பாணினிக்கும் இடைப்பட்ட காலம் 1920 ஆண்டுகளாம்.” என்பது அடுத்த புரட்டாகும். ஆனால் இதை மெய்யென்று நம்பி, க.வெள்ளைவாரணார், தொல்காப்பியம்(வரலாறு) என்னும் தம் நூலில் எடுத்தாண்டுள்ளார்.

     எழுத்தே உருவாக்காதவர்கள் எங்ஙனம் இலக்கண நூலை எழுதியிருக்க முடியும்? அதுவும் 64 சமற்கிருத இலக்கண நூல் உருவாகியிருக்க முடியும்?  எனவே, இதுவும் தவறேயாகும். காலங்களை முன்னதாகவே கூறும் வஞ்சகத்தாலும் எதுவும் சமற்கிருதத்தில் இருந்து வந்ததாக நிலைநாட்டும் கயமையாலும் இவ்வாறு தவறாகக் கூறப்பட்டுள்ளது. தொல்காப்பியர் தமக்கு முந்தைய நூற்றுக்கணக்கான புலவர்கள் கூற்றை மேற்கோளாகக் கூறுவதால், தமிழின் இலக்கண வரலாறும் அதனால் இலக்கிய வரலாறும் மொழி வரலாறும் பல்லாயிரம் ஆண்டுகள் சிறப்புகளை உடையது. இதற்குப் போட்டியாகக் கூற வேண்டுமென்பதற்காக் கட்டப்பட்ட கதையே இது.

    தொல்காப்பியம் எழுத்து, சொல் ஆகிய இரு படலங்களும் மிகச் செம்மையாக, ஒன்றன்பின் ஒன்றாகச் செய்திகள் முறைமைப்படுத்தப்பட்டு நூற்பாக்களின் வரிசைமுறையை மாற்றிச் சிந்திக்கவேண்டிய தேவையின்றிக் கோவைப்பட அமைந்துள்ளன.  கணிணியில் செய்தி நிரல்களை எழுதுவோர் பின்பற்றவேண்டிய முறைமையைத் தொல்காப்பியர் பன்னெடுங் காலத்திற்கு முன்னரே பயன்படுத்தியுள்ளமை பெரிதும் போற்றத்தக்கது.  BNF என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இம்முறைமையைப் பாணினி கடைப்பிடித்துள்ளதாகவும், ஆகவே சமற்கிருதம் உலக மொழிகளிலேயே கணிணிப் பயன்பாட்டுக்குப் பெரிதும் உகந்தமொழி எனவும் மேலைநாட்டார் பாராட்டுவதைக் காண்கிறோம்.  [The Backus-Naur Form (Panini-Backus Form) or BNF grammars used to describe modern programming languages have significant similarities to Panini grammar rules] பாணினிக்கு முன்னரேயே தொல்காப்பியர் இத்தகு சீர்மையைத் தமது நூலில் பயன்படுத்தியுள்ளதை நாம் எடுத்துக்கூறத் தவறிவிட்டமையாலும், பாணினியை அவர்கள் உலகுக்கு முறையாக அறிமுகம் செய்தமையாலுமே, மேலைநாட்டார் கவனம் இங்குத் திரும்பவில்லை. தொல்காப்பியர் இலக்கண முறைமைகளைத் தொடுத்துக் கூறும் அல்லது அடுக்கி வைக்கும் பாங்கு தொன்மைமிக்க தமிழின் இலக்கணச்சீர்மையை மட்டுமின்றி, நம் முன்னோரின் சிந்தனைப்போக்கின் முதிர்ச்சியையும் ஏரணவியலின் தொன்மையையும், அறிவியல் முறைமைப்படத் தரவுகளைத் தொகுத்து வழங்கும் ஆய்வுநெறிமுறைப் பயிற்சியையும் தெள்ளத்தெளிவாகக் காட்டுகிறது. தமிழைக் கணிணிமொழி என்று பெருமிதத்துடன் கொண்டாடிக் கொள்ளத் தூண்டுவது எழுத்துப் படலம், சொற்படலம் ஆகிய இருபடலங்களின் அமைப்பு முறையேயாகும். இந்தச் சங்கிலித்தொடர்ச் செய்தித்தொகுப்பின் கட்டுக்கோப்பால்தான் இடைச்செருகல் விளையாட்டுகளை இவ்விரு படலங்களிலும் தொல்காப்பியத்தின் பின்வந்தோர் நிகழ்த்த முடியவில்லை. இங்ஙனம் அமைந்துள்ள எழுத்துப்படலத்தில் இரு நூற்பாக்கள் வேற்றுமொழி இலக்கணநூலிலிருந்து இரவல் வாங்கப்படவேண்டிய தேவை என்ன? (மறைமலை இலக்குவனார் செம்மொழி ஆய்வு வளர்ச்சியில் பேராசிரியர் சி. இலக்குவனாரின் பங்களிப்பு,  மதுரைக் காமராசர் பல்கலைக் ழகம் நடத்திய பேராசிரியர் சி.இலக்குவனார் நூற்றாண்டு விழாக் கருத்தரங்கு-15/3/2010-மையக் கருத்துரை)

    தமிழிலுள்ள சிறப்புகளை ஆரியத்திற்கு அதற்கு முன்னரே இருந்ததாகக் கட்டுக்கதைவிடும் பழக்கத்தில்தான் பாணினியம் கணிணி  மொழியின் சிறப்பை உடையதாகக் குறிப்பிட்டுள்ளனர். உண்மையில் அத்தகு சிறப்பு பாணினியத்திற்கு இல்லை.

    உலகம் போற்றும் தொல்காப்பியம்

     உலகிலுள்ள ஒவ்வொரு மொழியும் ஒரு சிறப்பான தன்மையைப் பெற்றிருக்கும். அச்சிறப்பு மக்கள், அவர்கள் வாழும் சூழலுக்கு ஏற்ப அமைந்திருக்கும். இதே வகையான நிலை தமிழுக்கும் இருந்தாலும் மற்ற மொழி பேசுவோர் சிந்தித்ததைவிடப் பழந்தமிழர் மேலும் அதிகமாகச் சிந்தித்துள்ளார்கள். இதனாலேயே மற்றைய உலக மொழிகளுக்கு இல்லாத பெருமை தமிழுக்கு இருக்கின்றது. இதனாலேயே உலக அளவில் அறிஞர் பெருமக்கள் தமிழை உயர்தனிச் செம்மொழி என்று பாராட்டுகின்றார்கள்.

    தமிழுக்கு அந்தப் பெருமை வருவதற்கான காரணம் மொழிக்கு மட்டுமல்லாமல் வாழ்வியலுக்கும் இலக்கணம் வகுத்ததேயாகும். பொதுவாக, உலகிலுள்ள பழமையான மொழிகளில் காலந்தோறும் இலக்கண நூல்கள் தோன்றியுள்ளன. மொழியின் எழுத்து, சொல், தொடர் பற்றியே அவை விளக்குகின்றன. இம்முறை தொல்காப்பியம் முதலான எல்லாத் தமிழ் இலக்கணங்களிலும் காணப்படுகின்றது. கூடுதலாகப் பழந்தமிழ்ச் சான்றோர் அவர்கள் வாழ்ந்த மண்ணுக்கும் மக்களுக்கும் இலக்கணம் எழுதி வைத்துள்ளனர்.

    தொல்காப்பியர் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம் என்னும் இரண்டு அதிகாரங்களில் எழுத்து, சொல், தொடர் என்னும் மொழி இலக்கணங்களை விளக்குகின்றார். தொல்காப்பியப் பொருளதிகாரத்தில் பழந்தமிழ் மக்களின் அக, புற வாழ்வியலை மிகவும் தெளிவாக வரையறை செய்து விளக்குகின்றார். இவ்வகையான ஒரு வாழ்வியல் இலக்கணம் உலகில் வேறு எந்த மொழியிலும் இல்லை எனத் தமிழ் அறிந்த உலக அறிஞர்கள் குறிப்பிடுகின்றார்கள்.

    தமிழ்மொழிக்குத் தற்போது கிடைத்துள்ள தரவு அடிப்படையில் பார்க்கும்போது ஒரு நீண்ட வரலாறு இருக்கின்றது. தொல்காப்பியமே தமிழுக்குக் கிடைத்துள்ள முதல் இலக்கண நூலாகும். பத்துப்பாட்டும், எட்டுத் தொகையும் தொன்மையான இலக்கியங்கள் ஆகும். இந்நூல்கள்வழி ஒரு செழுமையான இலக்கண – இலக்கிய மரபை அறிந்துகொள்ள முடிகின்றது, இவ்வகையான ஒரு செழுமை கிடைத்துள்ள நூல்களில் இருப்பதற்குக் காரணம் அவற்றுக்கு முன் ஒரு செழுமையான மரபு இருந்ததேயாகும்.

    தமிழ் இலக்கியங்கள் வழியும் தொல் பொருட் சான்றுகள் வழியும் ஆழிப் பேரலையால் பழந் தமிழகத்தின் தெற்கிலும் கிழக்கிலும் நிலப்பகுதி கடல் கொண்டதை அறிய முடிகின்றது. பழந்தமிழர் மூன்று சங்கங்களை நிறுவித் தமிழை வளர்த்துள்ளார்கள். முதல் இரண்டு சங்கங்கள் இருந்த பகுதி கடல் கோளால் அழிய அக்காலங்களில் தோன்றிய இலக்கண இலக்கியங்களும் அழிந்து விட்டன. தொல்காப்பியத்தில் என்ப, மொழிப, என்மனார் எனக் குறிக்கப்படும் சொற்களைக் கொண்டே தமிழில் இப்போது கிடைத்துள்ளவற்றுக்கு முன்னுள்ள மரபை அறிந்துகொள்ளலாம்.

    தொல்காப்பியம்தான் உலகின் முதல் இலக்கண நூல். உலக இலக்கண நூல்களிலெல்லாம் சிறந்ததும் தொல்காப்பியம்தான். மாந்தர் அனைவரும் உயர்திணை, மற்றெல்லாம் அஃறிணை என்று வகுத்தது தொல்காப்பியம்தான். இத்தகைய திணைப் பெருமை வேறு எந்த மொழி இலக்கண நூலுக்கும் இல்லை. ..வடமொழி இலக்கண நூலான பாணினிக்கு முந்தையது தொல்காப்பியம். ஆனால் பாணினி குறித்து ஆங்கிலத்தில் 100 நூல்கள் உள்ளன. தொல்காப்பியம் குறித்து குறைந்த அளவு நூல்களே ஆங்கிலத்தில் உள்ளன. தொல்காப்பியரின் புகழும், தொல்காப்பியத்தின் சிறப்பும் உலகம் அறியும் வகையில், உலக மொழிகள் அனைத்திலும் தொல்காப்பியத்தை மொழி பெயர்க்க வேண்டும்” என்கிறார் ச.வே.சுப்பிரமணியம்(தொடக்கவுரை, தொல்காப்பியர்  சிலை  திறப்பு  விழா)

    (தொடரும்)

    Followers

    Blog Archive