Tuesday, April 4, 2023

ஆட்சியாளர்கள் பின்பற்றத் தவறும் திருக்குறள்கள்: 1.மொழி, இன , நாட்டுப் பற்றில்லாதவரைத் தேர்ந்தெடுக்காதே! – இலக்குவனார் திருவள்ளுவன்

 




ஆட்சியாளர்கள் பின்பற்றத் தவறும் திருக்குறள்கள்

எக்காலத்திற்கும் எல்லாவர்க்கும் ஏற்ற வாழ்வியல் நூல் திருக்குறள். திருவள்ளுவர் நாம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு நேர்மறையாகவும் அறிவுரை வழங்கி யுள்ளார். எப்படி இருக்கக்கூடாது என்பதை வலியுறுத்தி எதிர்மறையாகவும் அறிவுரை வழங்கி உள்ளார்.  எப்படி நாம் நடந்து கொள்ளக் கூடாது என்பது, நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான நெறியுரையே ஆகும். இந்நெறியுரை ஆட்சியாளருக்கு, அமைப்பின் தலைவருக்கு, என வெவ்வேறு நிலையில் தேர்ந்தெடுக்கும் பொறுப்பில் உள்ளவர்க்கு, வழிகாட்டியாக இவை உள்ளன. எனவே, அனைவரும் இவற்றைப் பின்பற்ற வேண்டும். அவற்றை நாம் நோக்குவோம்!

  1. மொழி, இன, நாட்டுப்பற்றில்லாதவரைத் தேர்ந்தெடுக்காதே!

திருவள்ளுவர், எந்த மொழியையும், எந்த இனத்தையும், எந்த நாட்டையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. ஆனால், எம் மொழியினராய், எவ்வினத்தவராய், எந்நாட்டவராய் இருப்பினும் அவரவர், தத்தம் மொழி இன நாட்டுப்பற்றாளரையே பொறுப்புகளுக்குத் தேர்ந்தெடுக்க வேண்டும் என அறிவுறுத்துகிறார். அக்குறள் வருமாறு:

அற்றாரைத் தேறுதல் ஓம்புக மற்றவர்

பற்றிலர் நாணார் பழி

(அதிகாரம்:தெரிந்து தெளிதல் குறள் எண்:506)

இக்குறளுக்கு, ஒழுக்கமற்றாரைத் தேறுதலைத் தவிர்க(மணக்குடவர், பரிப்பெருமாள்); சுற்றம் இல்லாரைத் தெளிதலை ஒழிக(பரிமேலழகர்); சுற்றத்தாறின் தெடர்பு அற்றவரை நம்பித் தெளியக்கூடாது(மு.வரதராசன்); நெறியற்றவர்களை ஒரு பணிக்குத் தேர்வு செய்வது கூடாது(கலைஞர் மு.கருணாநிதி); எனப் பல உரைகள் உள்ளன. தாம் செய்த பாவம் பிள்ளைகளைச் சாரும் என அஞ்சிப் பிள்ளைகள் உள்ளவர்கள் பழிபாவச் செயல்களைச் செய்யமாட்டார்கள் எனவும் அவ்வாறில்லாதவர்கள் பழி பாவம் செய்ய அஞ்ச மாட்டார்கள் என்பதும் மக்கள் நம்பிக்கை. எனவேதான், “சுற்றம் இல்லாதவரைப் பணிக்குத் தேர்ந்தெடுக்காதே” என்கின்றனர்.

இதனடிப்படையில் இடைக்காலத்தில் மகப்பேறு இல்லாதவர்களையும் நம்பக்கூடாது என்றனர். அதற்கிணங்க இக்கால அறிஞர் ஒருவர், “மகப்பேறும் உறவினரும் இல்லாதவரை வினைத்தலைவராகத் தெளிதலை விட்டு விடுக”  என்கிறார். மகப்பேறில்லாத பேரறிஞர் அண்ணா போன்ற தலைவர்கள் இல்லரா? மகப்பேற்றுக்கு வாய்ப்பில்லாத் திருமணமாகாப் பெருந்தலைவர் காமரசார், அபுதுல்கலாம், வாசுபாய் முதலிய தலைவர்கள் நம்பத்தகாதவர்களா? பொருந்தவில்லை அல்லவா?

இதனை அடியொற்றி, “நாணயம் அற்றவரை, நேர்மை அற்றவரை, பதவிக்குரிய திறமை அற்றவரை, சுறுசுறுப்பு அற்றவரை, ஒழுக்கம் அற்றவரை, பண்பு அற்றவரை, தொண்டு உணர்வு அற்றவரை நம்பி எப்பொறுப்பையும் ஒப்படைக்கக் கூடாது. இதில் முதல்வர் கருத்துடன் இருப்பதால் வாழ்த்துகிறோம். இந்நிலை தொடர வேண்டுகிறோம்.”(முப்பால் வழியில் முதல்வர் மு.க.தாலின், அகரமுதல மின்னிதழ்)  என நான் முன்பு குறித்துள்ளேன்.

 நெறியற்றவர்களை நம்பி எப்பணியையும் ஒப்படைக்கக் கூடாது என்கிறார்கள் அல்லவா? “குறிக்கோள் உடையவரே வாழ்க்கையில் நன்னெறிச் செல்லவேண்டுமென்று நினைப்பவர். குறிக்கோள் என்பது உயர்ந்த கொள்கையை வாழ்வில் நிலைநாட்ட எண்ணி அதற்கேற்ப ஒழுகலாகும்.” எனப் பேராசிரியர் சி.இலக்குவனார் விளக்கம் அளித்திருப்பார்(வள்ளுவர் வகுத்த அரசியல்).தாய்மொழி, தாய் இனம், தாய் நாடு பேணுவது முதன்மையான நெறியாகும். எனவேதான் இதனடிப்படையில் குறள்நெறி அறிஞர் சி.இலக்குவனார் பின் வருமாறு கூறுகிறார்: “கொள்கை இல்லாதாரைத் தெளிதலை ஒழிக; அவர் மக்கட் பற்றும் நாட்டுப்பற்றும் மொழிப்பற்றும் இல்லாதவராக இருப்பர்; பழிக்கும் அஞ்சார்” (திருக்குறள் – எளிய பொழிப்புரை).

இக்கருத்தாக்க வழியில் உள்ள விளக்கம் வருமாறு: “தமிழ்ப்புலமை அற்றாரைப் பதவிகளில் ஆட்சியாளர்கள் அமர்த்தக் கூடாது. ஏனெனில் அவர்கள் தமிழ்மொழி, தமிழினப் பற்றில்லாதவர்கள். ஆதலின் தமிழுக்கும் தமிழர்க்கும் எதிரான பழிச்செயல்களைச் செய்வதற்கு அஞ்சமாட்டார்கள்” (எழுத்தைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! – செம்மொழி மாநாட்டின் பொழுதான வெளியீடு) என்றும்  நான் முன்னரே குறிப்பிட்டுள்ளேன். (பிற நாட்டினருக்கு அவரவர் நாட்டுமொழிப் பற்றில்லாதவர்களைக் குறிக்கும்.)

இக்குறள் தொடர்பான என் விளக்கம் குறித்துக் குறள் விளக்கப் படைப்பறிஞர் பேரா.வெ.அரங்கராசன், “இலக்குவனார் திருவள்ளுவன், மொழிப்பற்று அற்றாரை நம்பக் கூடாது எனப் பொருத்தமான இக்காலத்திற்கேற்ற விளக்கம் தருகிறார்.” எனக் குறிப்பிட்டிருப்பார்(திருக்குறள் சான்றோர் இலக்குவனார் திருவள்ளுவன்).

இக்கருத்தை எப்பொழுதும் வலியுறுத்தி வருகிறேன் என்பதற்காகத்தான் இவற்றைக் குறிப்பிடுகின்றேன். அரசு மிகுதியான நலத்திட்டங்களைச் செயற்படுத்தி வருகிறது. தமிழினப் பற்றில்லாதவர்கள் பொறுப்பில் இருப்பின் மக்களுக்கு நன்மை கிடைக்க வேண்டும் என்பதில் கருத்து செலுத்த மாட்டார்கள். அரசின் திட்டங்களுள் சரிவர நிறைவேற்றப்படாத திட்டம் ஆட்சிமொழிச் செயலாக்கத்திட்டம் என்பதை நாடே அறியும். தமிழ்ப்பற்றில்லாதவர்கள் பொறுப்பில் அமர்த்தப்பட்டிருந்தமையால்தான் உரிய குறிக்கோளை அரசு எட்ட இயலவில்லை. முதன் முதலில் பொறுப்பில் அமர்த்தப்பட்டவர் ஆங்கிலத்தில்தான் பேசி, ஆங்கிலத்தில்தான் அறிவுரைகள் வழங்கினார் என்னும் பொழுது  முதற் கோணல், முற்றும் கோணலானதை நம்மால் உணர முடிகிறது அல்லவா?

 ‘திராவிட நன்முறை‘ என்று அரசு செயற்படுத்தி வருகிறது. இனப்பற்றில்லாதவர் பொறுப்பில் தொடர்பான பணிகளை ஒப்படைத்தால் சிறப்பான விளைவுகளை எட்ட இயலுமா? மொழிப்பற்றின்றி ‘மாடல்’ என ஆங்கிலத்தில் குறிப்பிட்டதால்தான் மக்களிடம் உரிய முறையில் இக்கருத்து சென்று சேரவில்லை என்பதையும் உணர வேண்டும்.

இதன் தொடர்பில் முன் நிகழ்வு ஒன்றைக் குறிப்பிட விரும்புகிறேன். முப்பதாண்டுகளுக்கு முந்தையது என்றாலும் இப்பொழுதும் பொருந்தும் என்பதால் குறிக்கிறேன்.  அறிஞர் நாவரசர் ஒளவை நடராசன், மதுரையில் உள்ள புகழ்பெற்ற மருத்துவமனை ஒன்றின் நிறுவனரிடம், “உங்களின் இலவச மருத்துவத்தொண்டால் பாகுபாடின்றி அனைவரும் பயன்பெறுகின்றார்கள். உங்களின் மருத்துவப்பணிகளால் தமிழர்க்கு நன்மை கிடைக்கின்றது. ஆனால், நீங்கள் தமிழ்நாட்டில் இருந்து கொண்டு தெலுங்கர்களையே பணியமர்த்தியுள்ளீர்களே! இது சரிதானா?” என்று கேட்டார். அதற்கு அவர், “ஒரு வேளை இவர்கள் எனக்குக் கட்டுப்படாமல் தவறிழைத்தாலும் குடும்பத்தினர் இவர்களை அடக்கி அடங்கி இருக்கச் செய்வர். மொழிப்பற்றும் இனப்பற்றும் வலியமையானது என்பதை நீங்கள் அறியாததா?” என்றார். எனவேதான், தமிழ்நாட்டில் கேரளம் முதலான பிற மாநிலத்தவர் தொழில் தொடங்கினால், தொடக்கத்திலும் விரிவாக்கத்திலும் தங்கள் மொழி இனம் சார்ந்தவர்களையே வேலைகளுக்கு அமர்த்திக் கொள்கின்றனர்.  அவர்கள் எல்லாரும் திருக்குறளைப் படித்திருக்க மாட்டார்கள். ஆனால், மொழி, இனப்பற்று அவர்களை வழி நடத்துகிறது.

நாமோ தமிழ்நாட்டு வேலைகளுக்குத் தமிழ்ப்பற்றில்லாதவர்களையே அமர்த்தி வருகின்றோம். இந்நிலையை மாற்றப் பொறுப்பில் அமர்த்தக்கூடிய பொறுப்பில் உள்ளவர்கள் தமிழ் மொழி, தமிழினம், தமிழ்நாட்டுப் பற்று உள்ளவர்களையே தேர்ந்தெடுக்க வேண்டும். தமிழர்க்குத்தான் தமிழினப்பற்றுவரும். அப்படியானால் முதன்மைப்பொறுப்புகளில் தமிழர்களை அமர்த்துவதுதானே முறையாகும். எனவே, இனியாவது அரசும் நாமும் இத்திருக்குறளைப் பின்பற்றித் தமிழ்மொழி, தமிழ் இனம், தமிழ் நாட்டுப்பற்று உள்ளவர்களைப் பணியமர்த்துவோம்! பயன்பெறுவோம்!

இலக்குவனார் திருவள்ளுவன்

Saturday, April 1, 2023

தயிருக்குப் பொங்கிய முதல்வர் எல்லாவற்றிற்கும் பொங்க வேண்டும்!: தமிழுக்குச்செய்ய வேண்டிய ஆயிரம் 24 – இலக்குவனார் திருவள்ளுவன்

 




(ஒன்றிய அதிகாரிகளுக்குள்ள மொழி உணர்வு தமிழ்நாட்டு அதிகாரிகளுக்கும் வேண்டும்! தொடர்ச்சி)

தயிருக்குப் பொங்கிய முதல்வர் எல்லாவற்றிற்கும் பொங்க வேண்டும்! – தமிழுக்குச்செய்ய வேண்டிய ஆயிரம் 24

ஆவின் தயிர் உறைகளில் தஃகி என இந்தியில் குறிக்க வேண்டும் எனச் சில நாள் முன்னர்  ஒன்றிய உணவுப் பாதுகாப்பு, தரக் கட்டுப்பாட்டு ஆணையம் (FSSAI) அறிவித்தது. முதல்வர் மு.க.தாலின் உடனடியாக எதிர்வினையாற்றித்  “தொலைந்துவிடுவீர்கள்” என எச்சரிக்கை விட்டுள்ளார். (வழக்கம்போல் முதலில் எதிர்ப்பு தெரிவித்தவர் மரு.இராமதாசுதான்.) முதல்வர் கண்டனம் தெரிவித்து இந்தித்திணிப்பு முயற்சிக்குத் தயிர் உறைகளில் முற்றுப்புள்ளி வைத்ததற்குப் பாராட்டுகள்.

ஆவின் தயிருக்கு மட்டும் பொங்கினால் போதுமா? எல்லா இடங்களிலும் பொங்க வேண்டாவா? எல்லா உணவகங்களிலும் தஃகி என்றுதான் பயன்படுத்தி நம்மையும் அவ்வாறே கூறச்செய்து விடுகிறார்கள்.

சோறுக்குப் பாத்து என்றும் பருப்பிற்குத் தால் என்றும் கிழங்கிற்கு ஆலு என்றும் மல்லிக்குத் தனியா என்றும் தேநீருக்குச் சாயா என்றும் ஏலக்காய்க்கு இலச்சி என்றும் இவ்வாறு பலவகையாக இந்திச்சொற்களைத்தான் பயன்படுத்துகின்றனர். நாமும் கண்டிக்காமல் அவ்வாறே பயன்படுத்துகிறோம்.

பாசிப்பயறு என்பதை மூங்தால் எனக் குறிப்பதுபோல் மளிகைப் பொருள்களிலும் இந்தியே வீற்றிருக்கிறது.

மருத்துவமனைகள், உறையுளகங்கள்(தங்கும் விடுதிகள்) ஆகியவற்றில் வரவேற்பில் நமசுகாரம்தான் சொல்ல வேண்டும் என்பதே ஒன்றிய ஆணை. தொலைபேசிகள், அலைபேசிகளில் முதல் தகவல்கள் இந்தியில்தான் சொல்லப்பட வேண்டும் என்பதும் ஒன்றிய ஆணையே. இவ்வாறு பொது மக்களுடன் தொடர்புடைய பணப்பொறியிலும் இந்திக்கே முதலிடம். தமிழ் இருந்தாலும் அது வேலை செய்யாது. கோவில்களில் கூட இரவிவார், சோமவார், மங்கள் வார், குருவார், சுக்கிரவார், சனி வார் என்றுதான் குறிப்பிடுகிறார்கள்.. பல இடங்களில் இந்தியே பயன்படுத்தப்பட வேண்டும் என்பது ஒன்றிய ஆணை. இவ்வாறு  எங்கும் இந்தி என்பது ஒன்றிய ஆணையாகச் செயற்படுத்தப்பட்டு வருகிறது. மாநில அரசோ ஆங்கிலமே நம் தாய்மொழி என எண்ணி “எங்கும் ஆங்கிலமேஎன்றும் ஆங்கிலமே” எனச் செயற்பட்டு வருகிறது.

‘இந்தித் திணிப்பு கண்டறியும் குழு’ ஒன்றை முதல்வர் அமைக்க வேண்டும்.  உணவுப்பொருள்கள், மளிகைப் பொருள்கள், வரவேற்பு உரையாடல்கள், அலைபேசி-தொலைபேசிப் பயன்பாடுகள் என எல்லா இடங்களிலும் இந்தி எவ்வாறெல்லாம் புகுத்தப்படுகின்றது என்பதைக் கண்டறிய வேண்டும். அங்கெல்லாம் தமிழ் இடம் பெற ஆவன செய்ய வேண்டும்.

ஆவின் தயிருக்குப் பொங்கினார் அல்லவா முதல்வர். நாம் முன்பே குறிப்பிட்டிருந்தது போல் ஆவின் பால் வகைகள் ஆங்கிலத்தில்தான். மிகப்பெருங்கொடுமை, கெள மில்க்(கு) எனக் குறிப்பிட்டு விற்பது. என்ன செய்வது? ஆங்கிலேயரின் தத்துப்பிள்ளைகளுக்குப் பசும் பால் எப்படித் தெரியும்? எனவேதான் ஆங்கிலத்தையே பயன்படுத்துகின்றனர்.

யோகர்ட்(டு) என்பதை இந்தி எனக் கருதிப் பயன்படுத்தி வருகின்றனர். இன் தயிரைக் குறிக்கும் துருக்கிச் சொல் இது. ஆவின் பாலகத்தில் உற்பத்தியாகும் – விற்பனையாகும் – அனைத்துப் பொருள்களையும் தமிழில் குறிக்கலாம் அல்லவா? ஆங்கிலேய அடிமைகளுக்கு அந்த எண்ணம் வராது என்பதுதான் வருத்தமான உண்மை.

“இந்தி பரவலாகப் பேசக்கூடிய மொழி என்பதால் தயிரில் இந்தியைச் சேர்க்கக் கூறியிருப்பார்கள்” என ஒருவர் கூறியுள்ளார். இத்தகைய உணர்வாளர்களால் தேர்ந்தெடுக்கப்படும் மக்கள் சார்பாளர்களும் இத்தகைய உணர்வுடன்தானே இருப்பார்கள். அரசும் அரசு அலுவலகங்களில் தமிழ் பயன்படுத்தப்பட்டால் போதும் எனக் கருதுகிறார்கள். (அதுவும் ஓரளவுதான் செயற்படுத்தப்பட்டு வருகிறது.) எனவே, தன்னாட்சி நிறுவனங்கள், தனியார் கடைகள், தனியா் நிறுவனங்கள், தமிழ்நாட்டிலுள்ள பன்னாட்டு  நிறுவனங்கள், ஒன்றிய அலுவலகங்கள், பிற மாநில அவலகங்கள் ஆகியவற்றில் தமிழுக்குச் சிறிதும் இடமில்லை என்பது பற்றி ஆட்சியாளர்கள் கவலைப்படுவதில்லை. தமிழ்நாட்டில் ல்லா இடங்களிலும் தமிழ் மட்டுமே பயன்படுமொழியாக இருக்க வேண்டும் என்பதை அரசு நடைமுறைப்படுத்த வேண்டும்.

தயிரை இந்தியில் குறிக்க வேண்டும் என்றதும் பொங்கி எழுந்து கண்டனம் தெரிவித்து அதைத் திரும்பப் பெற வைத்த முதல்வர், தன் அதிகாரத்திற்கு உட்பட்ட இடங்களில் ஆங்கிலத்தை அகற்றவும் பொங்கி எழ வேண்டும்.

அக நாட்டில் அன்னைத்தமிழ் மொழி! புறநாட்டுடன் ஆங்கில மொழி!” எனப் பின்பற்றினால் தமிழ்நாட்டில் தமிழ் எல்லா இடங்களிலும் இருக்கும்.

எங்கும் எதிலுமே

   தமிழமுதூட்டு!

இங்கிலீசை இந்தியை

   இடமிலா தோட்டு!

– புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்

 இலக்குவனார் திருவள்ளுவன்

Thursday, March 30, 2023

இராமதாசின் ஆங்கிலப்பெயர்களை அழிக்கும் நல்ல முயற்சியும் வணிகர் சங்கத்தின் பொல்லா அறிவிப்பும் – இலக்குவனார் திருவள்ளுவன்

 




இராமதாசின் ஆங்கிலப்பெயர்களை அழிக்கும் நல்ல முயற்சியும்

வணிகர் சங்கத்தின் பொல்லா அறிவிப்பும்

. “ஒரு மாதத்துக்குள் கடைகளில் தமிழில் பெயர்ப் பலகை வைக்கவேண்டும். இல்லையெனில், கருப்பு மை வாளியோடும், ஏணியோடும் நாங்கள் வருவோம்” என வணிகர்களுக்குப் பாமக நிறுவனர் மரு.இராமதாசு சில நாள் முன் எச்சரிக்கை விடுத்துள்ளார். பாராட்ட வேண்டிய முயற்சி!

இதற்கு எதிர்வினையாக வணிகர் சங்கத்தலைவர் விக்கிரமராசா,  தமிழில் பெயர்ப் பலகை இல்லாத கடைகளில் மையிட்டு அழிப்போம் என்ற நிலைப்பாட்டை தவிர்க்க வேண்டும் எனவும்‌, இவ்விவகாரத்திற்கு ஒரு மாத அவகாசம் என்பது போதாது எனவும் கூறியுள்ளார். மேலும், தங்கள் அமைப்பு சார்பில் அனைத்து வணிகர்களுக்கும் தமிழ் மொழியில் பெயர்ப் பலகை வைக்கக்கோரி சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வணிகர் சங்கத் தலைவர் அறிவிப்பு வேடிக்கையாக உள்ளதுஏதோ இப்போதுதான் முதன்முறையாக ஆங்கிலப் பெயர்ப்பலகை குறித்த அறிவிப்பு வந்துள்ளதுபோல் கூறுகிறார். பல முறை – அல்ல, அல்ல மிகப்பன்முறை – தமிழில் பெயர்ப்பலகை வைக்க வேண்டும் என்று அரசு, அரசின் சார்பில் மாவட்ட ஆட்சியர்கள், தமிழ் வளர்ச்சி இயக்குநர், தொழிலாளர் துறை ஆணையர், தமிழ் வளர்ச்சிச் செயலர், அமைச்சர், முதல்வர் எனப் பல தரப்பினரும் இது குறித்து அறிக்கை அளித்துள்ளனர்; பேசியுள்ளனர். ஒவ்வொரு முறையும் இப்போதுபோல் அவகாசம் கேட்பதும் வழக்கமான ஒன்றே. பின்னர் அறிவித்தவர்களும் மறந்து விடுவார்கள்கால வாய்ப்பு கேட்டவர்களும் மறந்து விடுவார்கள்.

அரசாணை நிலை எண் 1541, தொழிலாளர்-வேலைவாய்ப்புத்துறை நாள் 29.07.1982 இல் கடைகள் நிறுவனங்கள், உணவகங்கள், ஆகியவற்றில் தமிழில் பெயர்ப்பலகைகள் வைக்கவும் வைக்கப்படாதவர்கள்மீது நடவடிக்கை மேற்கொள்ளவும் தொழிலாளர் துறைக்கு அரசு ஆணையிட்டுள்ளது. அதாவது கடைகள், நிறுவனங்கள் வைக்கும் பெயர்ப் பலகையில் எழுத்துகள் முதலில் தமிழில் இருக்க வேண்டும் என்றும் அதற்கு அடுத்த படியாக ஆங்கிலமும் அதற்கு அடுத்தபடியாக மற்ற மொழிகளையும் வைத்துக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் விகிதம் 5:3:2 ஆகும். 

இதன்  பின்னரும் கூட இவ்வாறு இதனை வலியுறுத்திப் பல சுற்றறிக்கைகள், அறிவிப்புகள் வந்துள்ளன. ஆம்! அவ்வப்பொழுது வெவ்வேறு நிலைகளில் உள்ள அதிகாரிகளிடமிருந்தும் கட்சித் தலைவர்களிடம் இருந்து அறிவிப்புகள் வந்து கொண்டுதான் உள்ளன. பெயர்ப்பலகைகளில் தமிழ் இல்லாவிட்டால் நடவடிக்கை எடுப்பதற்குரிய அரசாணையும் இன்னும் செயற்பாட்டில்தான் உள்ளது. அதே நேரம் பெயர்ப்பலகைகளில் ஆங்கிலம் இருக்கத்தான் செய்கின்றது. இதுதான் நாட்டின்நிலை.

கோவையில் செம்மொழி மாநாடு நடைபெறுவதாக அறிவிப்பு வந்ததும் தமிழ்நாட்டின் தமிழ்த்தெருவில் தமிழ் இல்லை என்ற அவல நிலையைப் போக்க வேண்டும் எனத் தமிழ்அமைப்புகளும் தமிழன்பர்களும் வேண்டினர்.  அப்போது சென்னை மாநகரத் தலைவராக இருந்த மா.சுப்பிரமணியன் நடவடிக்கை எடுத்தார். முதலில் “மே31, 2010 ஆம் நாளுக்குள் தமிழ்ப் பெயர்ப்  பலகை வைக்காத கடைகளின் பெயர்ப் பலகைகள், மாநகராட்சி மூலம் அகற்றப்படும். கேரளா, கருநாடகா, ஆந்திர மாநிலங்களில் அந்தந்த மாநில மொழிகளில் கடைகளில் பெயர்ப் பலகை வைக்கப்பட்டுள்ளன. ஆனால், தமிழகத்தில், கடைகளின் பெயர்ப் பலகைகள் தமிழில் வைக்கச் சொல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. வருங்காலச் சந்ததியரின் நலனுக்காக நிச்சயம் கடைகளில் பெயர்ப் பலகைகள் தமிழில் இடம் பெற வேண்டும். செம்மொழி மாநாட்டிற்கு வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் சென்னை வழியாகவே கோவைக்குச் செல்வர். எனவே, சென்னையில் உள்ள கடைகளில் பெயர்ப் பலகைகள் தமிழில் இடம் பெறுவது மிகவும் அவசியம்,” என்றார். பின், சூன் மாதம் 20 ஆம் நாளுக்குள்  தமிழில் பெயர்ப் பலகைகளைத் திறந்திட வேண்டும். வணிகப் பெருமக்களின் கோரிக்கையைக் கனிவுடன் பரிசீலித்து, இந்தக் கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. எனவே, சென்னை மாநகராட்சி இந்த மாதம் 21ஆம் நாள் கடைகளில் தமிழில் பெயர்ப் பலகைகள் வைக்காத நிறுவனங்களின் பெயர்ப் பலகைகளை அகற்றும் சூழ்நிலையை உருவாக்காமல் வணிகப் பெருமக்கள் மாநகராட்சிக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி, அனைவரும் தமிழில் பெயர்ப் பலகைகள் வைத்திட வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன்.” என்றார். அந்த நாளும் கடந்து சென்றது. கோவையில ்செம்மொழி மாநாடும் நடந்து முடிந்தது. 14 ஆண்டுகள் கடந்த பின்னரும் எந்த வெட்க உணர்வுமின்றிக் கால வாய்ப்பு கேட்கிறார் ஒரு பிரிவு வணிகர் சங்கததின் தலைவர்.

வணிகர் சங்கத்தினர் தங்கள் நிலைப்பாட்டிற்கு வெட்கப்பட வேண்டும். தமிழ்நாட்டில் தமிழர்களுக்கான கடைகளில் தமிழில் பெயர்ப்பலகை வைப்பதற்கும் ஒவ்வோர் முறையும் கால வாய்ப்பு கேட்பது இழிவு என்பதை அவர்கள் உணர வேண்டும்.

இந்த நிலையே தொடரும் என்பதே நம்மருந்தமிழ் நாட்டின் இழிநிலை. இதனை மாற்றப் பின்வருவனவற்றைக் கருதிப் பார்க்க வேண்டும்.

மரு.இராமதாசு, பா.ம.க.வில் பேரளவிலான எண்ணிக்கையில் தொண்டர்கள் உள்ளதாகவும், அடுத்த ஆளுங்கட்சி என்றும் கூறி வருகிறார். எனவே, முதலில் தம் கட்சிப் பொறுப்புகளில் உள்ளவர்கள்பொறுப்புகளில் இல்லாத தொண்டர்கள் அன்பர்கள் அனைவரையும் தங்கள் நிறுவனக் கடைப்பெயர்களைத் தமிழில் அல்லது விதிக்கிணங்க உரிய விகிதத்தில் தமிழ்ஆங்கிலம் பிற மொழிகளில் எழுத அறிவுறுத்தி வெற்றி காண வேண்டும். இதற்கு எந்த அழிப்புப் போராட்டமும்  தேவையில்லை. இதனால், இதனைப் பிற கட்சியினரும் பின்பற்றுவர். எனவே, பெரும்பான்மையர் தமிழில் பெயர்ப்பலகைகளை எழுதி வைப்பர்.

பிற மொழிகளில் கடைகளின் பெயர்களை வைத்துள்ளனர். இதனை அப்படியே எழுதலாம், கிரந்த எழுத்துகளைப் பயன்படுத்தலாம் என அதிகாரத்தில் உள்ளவர்களும் கிரந்த அன்பர்களும் கருதுகிறார்கள். கிரந்த எழுத்துகள் இன்றி நல்ல தமிழில் முதலில் 5 பங்கு எழுத வேண்டும். இரண்டாவதாக 3பங்கு ஆங்கிலத்தில் அடுத்து மூன்றாவதாக கடைக்காரர்கள் நிறுவனத்தினர் இப்போது பெயர் வைத்துள்ளவாறு பிற மொழிப்பெயர்களைத் தமிழ் வரிவடிவில் குறிக்க வேண்டும். இவ்வாறு இருந்தால்தான் தமிழ்த்தெருவில் தமிழ்மணம் கமழும்.

அரசு நடவடிக்கை எடுக்காமல் இயல்பான இந்நிலையைக் கொணர வேண்டும் என்றுதான் அமைதி காக்கின்றது. எனவே, பெயர்ப்பலகைகளைத் தமிழில் பெரும்பான்மையர் எழுதி வைத்தால் சிறுபான்மையர் மீது அரசு நடவடிக்கை எடுத்து விடும். அரசு இனி, இது குறித்து எந்தவோர் அறிக்கையும் விடக்கூடாது. நடைமுறையில் உள்ள அரசாணைக்கிணங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வாணிகர், தம் முகவரியை வரைகின்ற பலகையில், ஆங் கிலமா வேண்டும்?

‘மாணுயர்ந்த செந்தமிழால் வரைக’ என அன்னவர்க்குச் சொல்ல வேண்டும்!

ஆணிவிற்போன் முதலாக அணிவிற்போன் ஈறாக அனைவர் போக்கும்

நாணமற்ற தல்லாமல் நந்தமிழின் நலங்காக்கும் செய்கையாமோ?

என 1945இலேயே புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் கேட்டார்இன்னும் நமக்கு உணர்வு வரவில்லையே!

வருத்தத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல – இதழுரை



Tuesday, March 14, 2023

தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம் 23. ஒன்றிய அதிகாரிகளுக்குள்ள மொழி உணர்வு தமிழ்நாட்டு அதிகாரிகளுக்கும் வேண்டும்! – இலக்குவனார் திருவள்ளுவன்

 




(தலைமைச் செயலகத்தில் தமிழாய்வு மேற்கொள்க! – தொடர்ச்சி)

ஒன்றிய அதிகாரிகளுக்குள்ள மொழி உணர்வு தமிழ்நாட்டு அதிகாரிகளுக்கும் வேண்டும்!

தலைப்பைத் தவறாகப் புரிந்து கொண்டு ஒன்றிய அதிகாரிகளுக்குள்ள இந்தி மொழி உணர்வு தமிழ்நாட்டு அதிகாரிகளுக்கும் வேண்டும் என்று கருதக்கூடாது. அவர்களுக்கு இந்தியைச் செயற்படுத்துவதில் உள்ள உணர்வும் செயலும்போல் தமிழ்நாட்டு அதிகாரிகளுக்குத் தமிழ் மீது உணர்வும் செயற்பாங்கும் வேண்டும். இது குறித்துப் பின்னர்தான் வேறுவகையில் எழுத வேண்டும் என எண்ணினேன். ஆனால் கடந்த கட்டுரையைப் படித்த நண்பர் ஒருவர்  “அரசு ஏன் பெயர்ப்பலகைகளை வைக்க வேண்டும். அவரவரை வைத்துக்கொள்ளச்சொன்னால் தமிழில் வைத்துக்கொள்ள மாட்டார்களா” என்று கேட்டார். “அப்படிச் சொன்னால்  ஏறக்குறைய எல்லாமும் ஆங்கிலத்தில்தான் இருக்கும்” என்றேன். இதற்கு முன்னர்ச்  செயலர் சிலர்  அறைகளில் ஆங்கிலத்தில் பெயர்ப்பலகை இருந்ததைச் சுட்டிக்காட்டியுள்ளேன். அப்பொழுது அவர்கள், “நான் இங்கு பொறுப்பேற்க வரும் முன்னரே இவ்வாறு வைத்து விட்டார்கள்”, “பழைய பெயர்ப்பலகையைக் கழட்டி இங்கே கொண்டு வந்து மாட்டி விட்டார்கள்”, “என் மீது அன்பு கொண்ட ஒருவர்  அவராக ஆங்கிலத்தில் பெயர்ப்பலகை வைத்துவிட்டார்” என்பனே போல் சொல்லி உடன் ஆங்கிலப் பெயர்ப்பலகையைக் கழற்றச் செய்தனர்.

1990களில் ஒருநாள் புதியதாகப் பொறுப்பேற்ற தமிழ்வளர்ச்சி இயக்குநர் இல்லத்திற்குச் சென்றிருந்தேன். இயக்குநர்,  “ஏன் வாசலிலேயே நிற்கிறீர்கள்? உள்ளே வாருங்கள்” என்றார். அப்பொழுதும் நான் வாசலில் நின்று கொண்டு கதவைப்பார்த்துக் கொண்டிருந்தேன். அவர் “உள்ளே வாருங்கள்” என மீண்டும் சொல்லிக்கொண்டே வெளியே வந்து கதவைப்பார்த்தார்.

பெயர்ப்பலகை ஆங்கிலத்தில் உள்ளதைப் பார்க்கிறீர்களா? இப்பொழுதுதானே இயக்குநர் பொறுப்பேற்றுள்ளேன். விரைவில் தமிழில் பெயர்ப்பலகை வைத்து விடுகிறேன்” என்றார். “இதுவரை தமிழ்வளர்ச்சித்துறையில் உதவி இயக்குநராகவும் துணை இயக்குநராகவும் இருந்தீர்களே! அப்பொழுது தமிழ்ப்பெயர்ப்பலகை வைக்காதவர்கள் இப்பொழுது மட்டும் எப்படி வைப்பீர்கள்? எனவே இதனைக் கழற்றி விடுங்கள்.” என்றேன். “இல்லையில்லை! தமிழில் பெயர்ப்பலகை வைத்து விடுவேன். இது அரசாங்கப்பணத்தில் வைத்த பெயர்ப்பலகை யன்று. என் சொந்தப் பணத்தில் வைத்தது”  என்றார். “அஃதாவது, அரசாங்கப்பணம் என்றால் விதிப்படித் தமிழ்ப்பெயர்ப்பலகை வைத்திருப்பீர்கள். சொந்தப்பணம் என்பதால் அப்படி வைக்கவில்லை என்கிறீர்களா?” என்றேன். “இல்லையில்லை. நான் பெயர்ப்பலகையைக் கழற்றி விடுகிறேன். போதுமா” என்று உடனே கழற்றிவிட்டார்.

பொதுமக்களின் வீடுகளில் பாருங்கள். அங்கொன்றம் இங்கொன்றுமாக எங்கேயாவது தமிழ்ப்பலகையைக் காணலாம். ஆங்கிலப்பலகைதான் எங்கும் இருக்கும். வீடுகளில் முகப்பில் இல்லத்தின் பெயரையும் உரிமையாளரின் பெயரையும் பதித்து வைத்திருக்கிறார்களே! அதுவும் பெரும்பாலும் ஆங்கிலத்தில்தான். சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வருவதற்கு? தமிழ் உணர்வில்லா மக்களின் சிறு பகுதியினரான அரசு ஊழியர்களுக்கு மட்டும் எங்ஙனம் தமிழ் மொழி உணர்வு வரும்? கட்சித்தலைவர்களும் ஆட்சியாளர்களும் தமிழ், தமிழ் எனக் கூவிக் கொண்டிருந்தாலும் இவர்களின் உள்ளங்களில் ஆங்கிலம்தான் வீற்றிருக்கும். இந்த அடிமை நிலை போக வேண்டும். எனவேதான் ஒன்றிய அரசு ஊழியர்களைப்போல் இங்குள்ளவர்களுக்கும்  ஆட்சித் தமிழ் உணர்வு வேண்டும் என்கிறேன்.

ஒருவர், “தமிழ் பயன்படுத்துவதைக் குறிப்பிட்டுப் பாராட்டக் கூடாதா? எதற்கு எங்கள் குறைகளை வெளிச்சம்போட்டுக் காட்டுகிறீர்கள்” என்று கேட்டார். சம்பளம் பெற்றுச் செய்யும் பணிகளைப் பாராட்டுவது நம் வேலையல்ல. ஆனால், சம்பளம் பெற்றுக் கடமை தவறும் பொழுது சுட்டிக்காட்ட வேண்டுமல்லவா? நாம் பாராட்டிக் கொண்டிருந்தால் பாராட்டு மழையில் நனைந்து எங்கும் தமிழ் எதிலும் தமிழ் இருப்பதாக ஆள்வோரும் மக்களும் எண்ண மாட்டார்களா? சுட்டிக்காட்டினால்தானே குறைகள் களையப்படும். நாம் கடந்த கட்டுரையில் தலைமைச்செயலகத்திலிருந்து தமிழ் பரவ ஆட்சித்தமிழ் செயலாக்கக் கண்காணிப்பு குழுவினை அமைக்க வேண்டினோம். உடன் மாண்புமிகு தமிழ் வளர்ச்சி அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள், “ஆட்சிமொழிச் செயலாக்கத்தில் விரைந்து முனைப்போடு செயலாற்றுவதை உறுதி செய்யும் நோக்கில் ஆட்சித்தமிழ் செயலாக்கக் கண்காணிப்பு குழுவினை உடன் அமைத்திட வேண்டும் எனும் கோரிக்கையினை மாண்புமிகு முதலமைச்சர் மற்றும் தலைமைச் செயலாளரிடம் கலந்து ஆலோசித்து விரைவில் ஆவன செய்கிறோம்” என மறுமொழி அளித்திருந்தார். அவருக்கு நம் நன்றி. 

இதற்கு முன்னரும் தலைமைச்செயலர் முனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப. அவர்கள், “தமிழுக்குச்செய்ய வேண்டிய ஆயிரம் குறித்த கட்டுரைகளை ஒரு கோப்பில் இட்டு, எதை எவ்வாறு நிறைவேற்றுவது எனத் திட்டமிட்டு வருகிறேன்” என்றார். அவருக்கும் நன்றி.

தமிழ் வளர்ச்சிச் செயலர் மரு.செல்வராசு ... அவர்களிடம் தமிழ் நல முறையீட்டை அளித்ததும் உடன் நடவடிக்கை எடுக்கத் தொடங்கிவிட்டார்.

இத்தகைய ஆக்கச் செயல்களுக்காகக் குறைகளைச் சுட்டிக்காட்டுவது சரிதானே!

ஆட்சிமொழிச் செயலாக்கதில் யார், யார் தமிழில் வரைவுகள் மடல்கள் எழுதுகிறார்கள் என்று பார்ப்பதை விட, மக்களுக்குக் கண்களில் படும்அறிவிப்புகள்விளம்பரங்கள்செய்திகள்பெயர்ப்பலகைகள்தகவல் பலகைகள்பதாகைகள்அழைப்பிதழ்கள்  முதலிய யாவும் தமிழில் இருக்க வேண்டும் என்ற உறுதியை அரசு ஊழியர்கள் எடுத்துக் கொண்டு செயலாற்ற வேண்டும். மக்களுக்கு அனுப்பக்கூடிய மடல்கள், மடலுறைகளில் குறிப்பிடும் முகவரிகள் என யாவும் தமிழாகத்தான் இருக்க வேண்டும் என்பதை இலக்காக அவர்கள் கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் தமிழ் மணத்தை மக்கள் நுகர முடியும்.

ஒன்றிய அரசின், தகவல் பலகைகள், பெயர்ப்பலகைள், அறிவிப்புகள், விளம்பரங்கள், சுற்றறிக்கைகள், ஒப்பந்த அறிவிப்புகள், பணியாணைகள், அழைப்பிதழ்கள், தகவல் கல்வெட்டுகள் என யாவும் இந்தியில் அல்லது இந்தியிலும் ஆங்கிலத்திலும்தான் உள்ளன. அந்தமான் நிக்கோபார் தீவுகளில்கூட இந்தியும் ஆங்கிலமும்தான் உள்ளன. அஃதாவது இந்தியில்லாத எதையும் பார்க்க முடியாது. யார் ஆட்சியில் இருந்தாலும் இந்த நிலைதான். அதுபோன்ற உறுதிப்பாடு நம்மவர்களுக்கும் வேண்டுமல்லவா? இங்கே இவற்றுள் சில தமிழிலும் ஆங்கிலத்திலும் இருக்கும். அல்லது பெரும்பான்மை ஆங்கிலத்தில்மட்டும் இருக்கும்.

தமிழ்நாட்டில் தமிழ் மக்களுக்காகப் பணியாற்றிக் கொண்டு தமிழை இல்லாமல் ஆக்குகிறோமே என்ற கவலையோ வருத்தமோ இவர்களுக்குக் கிஞ்சித்தும் கிடையாது. இத்தகையவர்களுக்குத் தண்டனை கொடுத்தாலதானே திருந்தித் தமிழை வாழ வைப்பார்கள். எனவேதான், ஆட்சிமொழிச் செயலாக்கத்தில் தவறுசெய்வோருக்குத் தண்டனை வழங்க வேண்டும் என்கிறோம்.

அரசு ஊழியர்கள் நல்ல வழிகாட்டுதல் இருப்பின் தமிழைப் பயன்படுத்துவதில் ஆர்வமாகத்தான் உள்ளார்கள். ஆனால், சில நேர்வுகளில் மேலதிகாரி  போதிய தமிழ் அறியாதவராக இருக்கும் பொழுது அவர் கேட்கிறார் என்பதற்காக ஆங்கிலத்தைப் பயன்படுத்தி விடுகிறார்கள். தமிழாணை மட்டுமே செல்லத்தக்கது என அரசு அறிவித்தால் உயர்அதிகாரிகள் ஆங்கிலத்தில் கேட்க மாட்டார்கள் அல்லவா? இவை குறித்துப் பின்னர்த் தனியாகப் பார்ப்போம். இப்போது நாம் வேண்டுவது மக்களுடன் நேரடித்தொடர்பில் உள்ளவற்றில் தமிழையே பயன்படுத்துங்கள். ஒன்றிய அரசில் பணி யாற்றுவோா்போல் தமிழ் உணர்வுடன் செயற்பட்டுத் தமிழை வாழ வையுங்கள் என்றுதான்.

தமிழ் உணர்வு கொள்வார்களா? தமிழை முழுமையாகப் பயன்படுத்துவார்களா?

தமிழ் நலத்தை வலியுறுத்தும் முதல்வரும் தமிழ் அமைச்சரும் பிற அமைச்சர் பெருமக்களும் தலைமைச் செயலரும் தமிழ் வளர்ச்சிச் செயலரும் தமிழ் வளர்ச்சி இயக்குநரும் இருக்கும்பொழுது கூடத் தமிழ் புறக்கணிக்கப்படுகிறது என்றால் எப்போதுதான் தமிழ் வாழும்?

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

Followers

Blog Archive