Saturday, February 22, 2025

குறள் கடலில் சில துளிகள் – இலக்குவனார் திருவள்ளுவன்: 15. வந்தபின் காப்பதைவிட வருமுன் காத்திடு!

 

குறள் கடலில் சில துளிகள் – இலக்குவனார் திருவள்ளுவன்: 15. வந்தபின் காப்பதைவிட வருமுன் காத்திடு!



(குறள் கடலில் சில துளிகள் 14. அஞ்சவேண்டியதற்குஅஞ்சுவதேஅஞ்சாமையாகும்! –தொடர்ச்சி)

எதிரதாக் காக்கும் அறிவினார்க்கு இல்லை

அதிர வருவதோர் நோய்

(திருவள்ளுவர்திருக்குறள்அதிகாரம்அறிவுடைமைகுறள் எண்: 429)

எதிர் வருவதை முன்பே எதிர்நோக்கி – அறிந்து காக்க வல்ல அறிவு உடையவர்க்கு அவர் நடுங்கும் படி வரக்கூடிய துன்பம் இல்லை என்கிறார் திருவள்ளுவர்.

நடக்க இருப்பதை முன்கூட்டி உணர்பவர்கள் துன்பத்தைத் தடுப்பர் (Those who foresee the outcome will avoid suffering) என்கின்றனர் ஆளுமை அறிவியலாளர்கள்.

எதிரது=எதிர்காலத்தில் நேரக் கூடியது; ஆ-ஆகும்படி; காக்கும்=காப்பாற்றும்; அதிர=நடுங்கும்படி; நோய்=துன்பம்/வாழ்க்கைத்துயரம்,பிணி.

ஆள்வோராயினும் ஆளப்படுவோராயினும் எதிர்காலத்தில் வருவதை எதிர்நோக்கும் அறிவு இருப்பின் எத்துன்பத்திலிருந்தும் காத்துக் கொள்ளலாம். மழை, புயல், வெள்ளம், வறட்சி, பஞ்சம், இயற்கைப் பேரிடர்கள் தொடர்பிலான முன்கூட்டிய அறிவு இருப்பின் தீமைகளிலிருந்து மக்களைக் காப்பாற்றலாம் அல்லது தீமைகளின் கடுமைகளைக் குறைக்கலாம்.  தொற்றுநோய்கள், பிற நோய்கள் குறித்த எதிர்கால விழிப்புணர்வு இருப்பின் நோயின்றி வாழச்செய்யலாம், வாழலாம்.

நாடாயினும் வீடாயினும் இன்றைய பணத் தேவையைமட்டும் கருத்தில் கொண்டு செயலாற்றாமல் எதிர்காலப் பணத்தேவையையும் உணர்ந்து செயல்பட்டால் பின்னர் வரும் துன்பங்களிலிருந்து தப்பிக்கலாம்.

நேற்றைய துன்பங்கள் இடர்கள் குறித்துக் கவலைப்பட்டுக் கொண்டிராமல் அவற்றைப் பாடங்களாக எடுத்துக் கொண்டு நாளை வரும் துன்பங்கள் இடர்களிலிருந்து காத்துக் கொள்ளும் அறிவுடைமை வேண்டும். வீட்டிற்கும் நாட்டிற்குமான எதிர்காலத் தேவைகளை முன் கூட்டியே அறிந்து திட்டமிட்டு அதற்கான வருவாயைப் பெறும் முறை குறித்து முடிவெடுத்துச் செயற்படுத்தினால் தேவைகள் வரும் பொழுது அவற்றைச் சமாளிக்க முடியாமல் அல்லல்பட வேண்டியதில்லை. குடிமக்கள் சிக்கல்கள், தொழிலாளர்கள் சிக்கல்கள், பணியாளர்கள் சிக்கல்கள், தொடர்ச்சியாக இயங்குவதில் ஏற்படும் இடர்ப்பாடுகள் முதலியவறைப்பற்றி முன்னரே உணர்ந்து வரும் தீமைகளிலிருந்து காத்துக் கொண்டால் அத்தகையோரை வெல்ல இருப்பவர் யார்தான் உளர்? (எவருமிலர்.)

(தொடரும்)

விருதாளர் திரைக்கதை எழுதுகிறார் 7 : இலக்குவனார்திருவள்ளுவன்

 

விருதாளர் திரைக்கதை எழுதுகிறார் 7 : இலக்குவனார்திருவள்ளுவன்



(விருதாளர் திரைக்கதை எழுதுகிறார் 6 : இலக்குவனார்திருவள்ளுவன் : தொடர்ச்சி)

வணக்கம் ஐயா.

வணக்கம். வாங்க, வாங்க! இன்றைக்கு என்ன பார்க்கப் போகிறோம்?

ஐயா, உங்கள் புதினத்தின் மையக் கருத்து வளரும் தலைமுறையினர் மூத்த தலைமுறையினரைப் போற்றிப்பேண வேண்டும் என்பதுதானே.

ஆமாம். ஆமாம். கூட்டுக் குடும்பமே இல்லாமல் போன இக்காலத்தில் கூட்டுக் குடும்பத்தின் நன்மையைக் கருதிச் செயற்பட வேண்டும்.

ஒரு குடும்பத்தில் மூன்று அண்ணன் தம்பியரும் ஒரு தங்கையும் உள்ளனர். மேலும், இவர்களின் சித்தியும் இங்கேயே உள்ளார். அவருக்குக் கணவன் உறவில் வந்த   மணமாகா மருமகள் உள்ளார்.

அடுத்த தெருவில் இவர்களின் உறவினர் குடும்பம். பெற்றோர் ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர்.

இவர்கள் பெற்றோரை மதிக்காமல் உள்ளனர். ஆனால் முதலில் கூறிய கூட்டுக் குடும்ப நன்மையைப் பார்த்துத் திருந்தி பெற்றோரை மதித்து வாழத் தொடங்குகின்றனர். இரு குடும்பத்தினருமே இணைந்து தத்தம் பெற்றோருக்கு வரும் சிக்கல்களை நீக்கி ஒற்றுமையாக வாழ்கின்றனர்.

இதன் உச்சக்கட்டமே கதையின் முடிவு. இவ்வளவுதானே! ஆனால், நயம்பட ஆங்காங்கே சிறப்பான வரிகளை இணைத்துப் புதினத்திற்குப் பெருமையைச் சேர்த்துள்ளீர்கள். இப்புதினம் சிறப்பாகப் போற்றப்படுவதன் காரணமே அத்தகைய வரிகள்தாம். உணர்ச்சியுடன் நீங்கள் எழுதிய அவையே புதினத்திற்குப் பாராட்டுகளை வழங்கக் காரணமாக அமைந்துள்ளன.

 ஆமாம், ஆமாம். சரியாகச் சுருக்கமாகக் கூறி விட்டீர்கள். உங்கள் தொடர்களில் வேறு என்ன மாதிரி கதை யமைப்பை வைத்திருப்பீர்கள்.

எந்தத் தொடராக இருந்தாலும் கணவன் தரப்பில் அல்லது மனைவி தரப்பில் மணமாகாத உறவினன் அல்லது வாழா வெட்டியான உறவுப்பெண் இருப்பார். இவர்கள் அடைக்கலமாக அவர்கள் வீட்டில் இருந்தாலும் அவர்களுக்குத் தெரியாமல்  குடும்பத்தினருக்கு எதிராகச் சதிச் செயல் புரிவார்கள். அதுபோல் சாப்பாட்டு இராமனான ஒருவனோ பெருந்தீனிக்காரியாக ஒருத்தியோ இருக்க வேண்டும்.

இவர்களும் சதிகாரர்களா?

அப்படி யில்லை. சில நேரம் அப்படிப்பட்ட கதைகளும் உள்ளன. பொதுவாக, இவர்கள் மூலம் நகைச்சுவைக் காட்சிகளை அமைத்து விடுவோம்.

அது சரி. நகைச்சுவைக் காட்சிகளும் தேவைதானே. மேலும் எப்படியெல்லாம் கதையைக் கொண்டு போவீர்கள்?

பொய்ப்பழி சுமத்தி வீட்டை விட்டு விரட்டுவது, உண்மை தெரிந்து சேர்த்துக் கொள்வது, வேண்டுதலுக்காகக் கோயிலுக்குப் போவது, நேர்த்திக் கடன் நிறைவேற்றுவது அதில் இடையூறு ஏற்படுத்துவது, குல தெய்வக் கோயிலுக்குப் போவது என்று பல நிகழ்ச்சிகளையும் இணைத்து விடுவோம். அதற்குள் கதையை வேறு எம்மாதிரி கொண்டு போகலாம் என்று சிந்தித்து அதற்கேற்பக் கதையை அமைத்து விடுவோம். சில கதைகளில் தந்தை அன்பாக இருந்தாலும் முரட்டுத் தனமாக நடந்து கொள்பவராகக் காட்டுவோம். இவ்வாறு தொடர்களுக்கென்றே சில இலக்கணங்கள் வைத்துள்ளோம்.

இதிலும் கூடக் கோயில் திருவிழா வெல்லாம் வருகிறது. அதனால் பரவாயில்லை.

ஐயா,சொல்வதற்கு நிறைய உள்ளன. அடிப்படையான சிலவற்றை மட்டும் சொல்லியுள்ளோம்.

போதும் போதும். நீங்கள் மாறி மாறி விளக்கி விட்டீர்கள். நான் தொலைக்காட்சித் தொடர்கள் எல்லாம் பார்ப்பதில்லை. ஆனால், இன்றைய தொலைக்காட்சிகளின் போக்கினை அறிய நேயர்களின் நாடியைப் பிடித்துப் பார்க்க உதவுவதற்காக இவை குறித்தெல்லாம் கேடடுத் தெரிந்து கொண்டேன்.

அதற்கு நாங்கள் விளக்கியது போதும் அல்லவா ஐயா.

போதும் போதும். நான், உங்களிடம் ஒரு செய்தி சொல்லப் போகிறேன். அது உங்களுக்கு அதிர்ச்சி அளிக்குமா? மகிழ்ச்சி அளிக்குமா என்று தெரியாது.

அப்படி என்ன செய்தி சொல்லப் போறீங்க ஐயா.

உங்களுக்கு இந்தக் கதைதான்வேண்டுமா? அல்லது புத்தம் புதிய கதை உங்களுக்கென்றே எழுதித் தரட்டுமா?

புதியதாகவா? சரி எழுதித் தாருங்கள். உங்களுக்கென்றே “விருதாளர் வழங்கும் புத்தம் புதிய கதையில் வரும் தொடர்” என்று விளம்பரம செய்கிறோம். அது சரிங்க ஐயா. என்ன கதை அது?

இப்பொழுது நாம் பேசினோம் அல்லவா? அதையே புதினமாக எழுதித் தருகிறேன். கதை நடைபெறுமிடம், காட்சியில் உள்ள மாந்தரகள், புதியதாக வருவோர், காட்சியிலிருந்து வெளியேறுவோர், அணிய வேண்டிய உடைகள், அணிகலன்கள், காட்சியில் இருக்க வேண்டிய பொருள்கள், எனத் திரைக்கதைக்கு வேண்டிய எல்லாக் குறிப்புகளையும் எழுதித் தருகிறேன்.

அருமை ஐயா. திரைக்கதை எழுதுவது எப்படி என்ற பெயரில் புத்தகங்கள் உள்ளன. ஏதாவது உங்களுக்கு வாங்கித் தரலாமா? அல்லது நாங்களே விளக்கலாமா?

காரன் என்பவர் எழுதிய புத்தகம் உள்ளதா?

இருக்கிறதே. எங்களுக்கெல்லாம் அவர் புத்தகம்தான் வழிகாட்டி.

‘காரன்’ பற்றி வேறு என்ன தெரியும்.

20 வருடங்களுக்கு முன் மும்பையிலிருந்து வந்த அவர் ஒரு திரைப்படம் தயாரித்து இயக்கியுள்ளார்.  அத்துடன் திரைப்பட வாழ்க்கையை விட்டே ஒதுங்கிவிட்டார்.

என்ன திரைப்படம் அது?

கைப்பெண்கள் பற்றிய திரைப்படம் எனக் கேள்விப்பட்டோம்.

வேரில் பழுத்த பலா’ என்னும் படம்தானே அது.

ஆமாம் ஆமாம். அதுவேதான். உங்களுக்கு எப்படித் தெரியும் அவரைப்பற்றி. நீங்கள் மும்பையில் இருந்திருக்கிறீர்களா?

ஆம். நான் முன்பு மும்பையில்தான் இருந்தேன்.

அப்படியானால் காரன் இப்பொழுது எங்கே உள்ளார்? உங்களுக்குத் தெரியுமா? யாருக்குமே அவரைப்பற்றி ஒன்றும்  தெரியவில்லை. நீங்கள்சொன்னால் நாங்கள அவரைப்பார்ப்போம்.

காரன் இப்பொழுது இங்கே தான் இருக்கிறார்.

இங்கே என்றால் தமிழ்நாட்டிலா? சென்னையிலா?

இங்கே என்றால் இங்கேதான்.

எங்களுக்குப் புரியவில்லை. அவரிடம் எங்களை அழைத்துச் செல்லுங்கள்.

நான்தான் அந்தக் காரன்.

நீங்களா? உங்களுக்கே நாங்கள் திரைக்கதை எழுதுவது குறித்துக் கற்றுக் கொடுக்க வந்துள்ளோமா? மன்னித்து விடுங்கள் ஐயா.  அது ஏன் ஐயா, காரன் எனப் பெயர் வைத்துக் கொண்டீர்கள்?

திரைத்துறையினருக்கு நான் ஒரு வேலைக்காரன் என்பதற்காக வேலைக்காரன் எனப் பெயர் வைத்துக்கொள்ள விருமபினேன். ஆனால், நான் மும்பையில் இருந்து வந்ததால்,  மும்பைக்காரனாகக் காட்டிக் கொள்ள வேலைக்காரன் என்பதைச் சுருக்கிக் காரன் எனப் பெயர் சூட்டிக் கொண்டேன். அந்தப் பெயருக்கு நல்ல வரவேற்பு இருந்தது.

உங்கள் படத்திற்கும் நல்ல வரவேற்பு இருந்ததே. பிறகு ஏன் திரைப்படத் துறையை விட்டு விலகினீர்கள்?

நாணயம், நேர்மை, ஒழுக்கம் முதலியவற்றிற்கு வாய்ப்பு குறைந்ததால் இதில் நீடிக்க விரும்பவில்லை. காதல் காட்சிகளில் நாயகன் நாயகியிடம் நெருக்கம் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக அவர்களிடையே நெருக்கம் உண்டாகும் வகையில் அவர்களைச் சேர்த்து வைப்பது, காட்சி யமைப்பை வெவ்வேறு கோணங்களில் எடுப்பதாகக் கூறி மிகுதியான படச்சுருளை வீணாக்குவது, படுக்கைப் பகிர்வுகள், போன்ற பலவும் என்னைத் திரைத்துறையில் இருக்க விடவில்லை. எனினும் என் கதையார்வம் ஓயவில்லை. எனவே, பத்தாண்டுகள் பின்னர் இங்கே வந்து, விருதாளர் என்ற பெயரில் கதைகள், புதினங்கள் எழுதினேன்.

அதனால் இலக்கிய உலகிற்கும் நல்ல எழுத்தாளர் கிடைத்தார்.

ஐயா, இதற்கு இன்னும் இயக்குநர் முடிவாகவில்லை. நீங்கள் இயக்குவதாக இருந்தால் எங்களுக்கு மகிழ்ச்சியே. உங்கள் இசைவைச் சொல்கிறீர்களா?

எனக்கு முழு உரிமை அளித்தால் இயக்குவதற்குத் தடையில்லை.

மிக்க மகிழ்ச்சி ஐயா. எங்கள் நிறுவனத்தினர் பெரிதும் மகிழ்ச்சியடைவார்கள். சரிங்க ஐயா. நீங்கள் எழுதி இயக்கித் தரப்போகிற  தொலைக்காட்சிக் கதைக்கு என்ன பெயர்?

விருதாளர் திரைக்கதை எழுதுகிறார்.”

000

Thursday, February 20, 2025

குறள் கடலில் சில துளிகள் 14. அஞ்சவேண்டியதற்குஅஞ்சுவதேஅஞ்சாமையாகும்! – இலக்குவனார் திருவள்ளுவன்

 

குறள் கடலில் சில துளிகள் 14. அஞ்சவேண்டியதற்குஅஞ்சுவதேஅஞ்சாமையாகும்! – இலக்குவனார் திருவள்ளுவன்



(குறள் கடலில் சில துளிகள் 13. தொலைநோக்குச் சிந்தனையே அறிவாகும்! – தொடர்ச்சி)

அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது

அஞ்சல் அறிவார் தொழில்

(திருவள்ளுவர்திருக்குறள்அதிகாரம்அறிவுடைமைகுறள் எண்: 428)

அஞ்சத்தக்கவற்றிற்கு அஞ்சாதிருத்தல் அறியாமை; அஞ்ச வேண்டியதற்கு அஞ்சுதல் அறிவுடையார் இயல்பு என்கிறார் திருவள்ளுவர்.

அஞ்சாமை உடையவர்கள் அஞ்ச வேண்டியதற்கு அஞ்சாமல் இருப்பதில்லை(Fearless people are not afraid to be afraid) என்கின்றனர் மனஅறிவியல் அறிஞர்கள். அஃதாவது அஞ்சவேண்டிய நேர்வுகளில் அஞ்சுவர்.

மணக்குடவர், பரிப்பெருமாள், பரிமேலழகர் ஆகிய மூவரும் “இறைமாட்சியில் அஞ்சாமை வெண்டும் என்று சொல்லப்பட்டாலும் இடம் கருதி இங்கு அஞ்சல் வேண்டும் என்கிறார்” என விளக்குகின்றனர். பேராசிரியர் சி.இலக்குவனாரும்  இவ்வாறு குறிப்பிட்டு எப்பொழுதும் எதைக் கண்டும் அஞ்சாமலிருத்தல் அறிவுடைமை ஆகாது என்கிறார். மக்களாட்சியில் ஆள்வோர் அஞ்ச வேண்டியது மக்கள் எதிர்ப்பே என்றும் விளக்குகிறார். இப்பொழுது அரசு மக்கள் எதிர்ப்புகளைக் கண்டு அஞ்சாமல் சில திட்டங்களைச் செயற்படுத்த முனைகின்றனர். இஃது அறிவுடைமை ஆகாது என்பதை உணர வேண்டும். மக்கள் எதிர்ப்பனவற்றைக் கைவிடுதல் கோழைத்தனம் ஆகாது; அறிவுடையார் செயலாகும்.  எனவே, ஆட்சிநலன் கருதியும் தன் நலம் கருதியும் மக்கள் நலன் கருதியும் அஞ்ச வேண்டியவற்றிற்கு அஞ்சிச் செயலாற்ற வேண்டும்.

தொழிற் சூழல், பணிச்சூழல், குடும்பச் சூழல் முதலான நேர்வுகளிலும் அஞ்ச வேண்டியவற்றிற்கு அஞ்சுதல் சிக்கல்களைத் தவிர்க்கும். முதலாளிகள், தொழிலாளர்கள் போராட்டங்களைத் தமக்கு அச்சமில்லை என்று காட்டுவதற்காக ஒடுக்கும் போக்கில் ஈடுபடக் கூடாது. பின் விளைவுகளை உணர்ந்து முடிவு எடுக்க வேண்டும். தொழிலாளர்களும் போலியான மதிப்பைக் காக்க எண்ணாமல், அஞ்ச வேண்டியவற்றிற்கு அஞ்சிச் செயலாற்ற வேண்டும்.

போர்ச்சூழல் போன்றவற்றில் மிகை மதிப்பு கொண்டு அஞ்சாமல் போரில் இறங்குவதை விட அடுத்தவர் வலிமைக்கு அஞ்சி வலிமையுள்ள பிறரைத் துணைக்குச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.  ஏதேனும் முடிவெடுத்து அதற்கு எதிர்ப்பு வந்தால் அச்சமில்லை என்று காட்டுவதற்காகத் தொடரக் கூடாது. எதிர்நோக்கும் தீமைகள் குறித்த அச்சமே மக்களின் எதிர்ப்பிற்குக் காரணமாக இருக்கும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். அஞ்ச வேண்டிய தேவை இருப்பின் அஞ்சிப் பின்வாங்குவதே அறிவார்ந்த செயலாகும்.

(தொடரும்)

Tuesday, February 18, 2025

குறள் கடலில் சில துளிகள் 13. தொலைநோக்குச் சிந்தனையே அறிவாகும்! – இலக்குவனார் திருவள்ளுவன்

 

குறள் கடலில் சில துளிகள் 13. தொலைநோக்குச் சிந்தனையே அறிவாகும்! – இலக்குவனார் திருவள்ளுவன்



(குறள் கடலில் சில துளிகள் 12. உலகத்தார்வழியில்செல்வதேஅறிவு! – தொடர்ச்சி)

அறிவுடையார் ஆவது அறிவார் அறிவிலார்

அஃதறி கல்லா தவர்

(திருவள்ளுவர்திருக்குறள்அதிகாரம்அறிவுடைமைகுறள் எண்: 427)

அறிவுடையார் எதிர்கால நிகழ்வை அறியக்கூடியவர். அறிவில்லாதவர் அறியும் திறன் இல்லாதவர் என்கிறார் திருவள்ளுவர்.

அறிகல்லாதவர்=அறிவதைக் கல்லாதவர்கள் = அறியமாட்டாதவர் அல்லது அறியமுடியாதவர்கள். அறிக + கல்லாதவர் =(அறிக என்பதன் ஈற்று எழுத்தான க மறைந்து) அறிகல்லாதவர் என்றும் சொல்லலாம்.

கண்ணுக்கு முன்னால் இருப்பதைக் கண்டு செயலாற்றுவோர் அரசியல்வாதியாவார்(politicians). நூற்றாண்டுகளுக்குப் பின்னால் வருவதை முன்னறிந்து செயலாற்றுவோர் அரசியலறிஞர் (Statesmen)” என்கின்றனர் அரசியலறிஞர்கள். இதனையே திருவள்ளுவர் இங்கே உரைக்கிறார்.

ஆள்வோர்க்கும் தொழில் முயல்வோர்க்கும் வணிகர்களுக்கும் தொழில் நடத்துநருக்கும் தொலைநோக்கு உணர்வு தேவை. குடும்பத்தினருக்கும் வரக்கூடிய சிக்கலை உணரும் அறிவு தேவை. எனவே, யாவராக இருந்தாலும் வரக்கூடியதை உய்த்து உணரும் திறன் இருந்தால்தான் வரும் இடர்களில் இருந்து தப்பிக்கலாம் அல்லது இழப்பைத் தவிர்க்கலாம் அல்லது இழப்பின் அளவைக் குறைக்கலாம். எனவே, வருவது அறிதலே அறிவாகிறது. வருவது உணரும் அறிவிலார் இடர்களைத் தவிர்க்கலாம் என்னும் பொழுது வருவது அறியா அறிவிலார் தீமைகளே அடைவர் என்பது சரிதானே!

கடந்தகாலச் சூழல் தொடர்பில் நிகழ்காலத்தில் நாம் செய்ய இருக்கும் செயல் அல்லது செய்து வரும் தொழில் தொடர்பாகவும் எதிர்காலக் கணிப்பு தேவை. திட்டமிடலில் வருவது உணர்தலும் அடங்கும்.

நாட்டு நிலையில் உள்நாட்டுச் சிக்கல்கள் வெளிநாட்டுச் சிக்கல்கள் தொடர்பில் கூடுதலாக வருவது அறியும் அறிவு இருந்தால்தான் நாட்டை நல்வழியில் நடத்த இயலும்; போர் இடர்களைத் தவிர்க்க முடியும்; உள்நாட்டுப் பகை, வெளிநாட்டுப் பகைகளில் இருந்து மக்களைக் காக்க இயலும். மக்களுக்குத் தேவையான உணவு வளம், நீர் வளம், நல்வாழ்வு முதலானவை குறித்தும் வருவது அறியும்  திறன் தேவை. அதுவே உண்மையான அறிவுடைமை.

(தொடரும்)

குறைகள் இருந்தாலும் பெரியார் ‘பெரியார்’தான்! 2. இந்து மதத்தை மட்டும்தான் பெரியார் எதிர்த்தாரா? – இலக்குவனார் திருவள்ளுவன்

 

குறைகள் இருந்தாலும் பெரியார் ‘பெரியார்’தான்! 2. இந்து மதத்தை மட்டும்தான் பெரியார் எதிர்த்தாரா? – இலக்குவனார் திருவள்ளுவன்



(குறைகள் இருந்தாலும் பெரியார் ‘பெரியார்’தான்! 1. மிக்கதைக் கொள்க! – தொடர்ச்சி)

பெரியார் ஈ.வெ.இரா.குறித்து நாம் பின்வருவனவற்றை அறிவோம்.

1. பெரியார் ஈ.வெ.இரா. நிறைகள்

2. பெரியார் ஈ.வெ.இரா. குறைகள்

3. பெரியார் ஈ.வெ.இரா. மீது குறைகளாகச் சொல்லப்படுவன

4. பெரியார் ஈ.வெ.இராகுறித்த பழிப்புரைகள்

பெரியார் மீதான பழிப்புரைகளையும் குறைகளாகச் சொல்லப்படுவனவற்றையும் பார்த்தாலே அவரைப்பற்றிய நிறைகளையும் நாம் அறியலாம். எனவே, மேற்குறித்தவற்றை நாம் வரிசை மாறிப்பார்க்கலாம்.

இதழ்களிலும் பிற ஊடகங்களிலும் வந்த கருத்துகளின் தொகுப்பாக்கமே இத் தொடர். எனினும் யார், எதைச் சொன்னது என்ற குறிப்பு இடம் பெறவில்லை. ஏனெனில் ஒரே செய்தி பலராலும் சொல்லப்பட்டிருப்பதாலும் எது முந்தையது என்ற தகவல் இன்மையாலும் தரவுக் குறிப்புகள் இடம் பெறவில்லை.

பெரியார் மன்பதைச் சீர்திருத்தவாதி. அந்த முறையில் நம் நாட்டில் இருக்கும் மதங்களில் மண்டிக்கிடக்கும் மூட நம்பிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் எழுதியும் பேசியும் வந்துள்ளார். ஒரு மதத்தைச் சேர்ந்தவர் மற்ற மதத்தைப்பற்றிக் குறை கூறினால் அது மத வெறுப்பாகப் பார்க்கப்படும். அதன் உண்மையைப்பற்றி ஆராயாமல் அடுத்த மதத்துக்காரர் எங்கள் மதத்தில் குறுக்கிடுவது ஏன்? என்ற பேச்சிற்கே வழி வகுக்கும். இருப்பினும் பெரியார் ஈ.வெ.இரா. நம் நாட்டில் உள்ள இசுலாம், கிறித்துவ மதங்கள் குறித்த தம் குறையாய்வையும் அவ்வப்பொழுது தெரிவித்துத்தான் வந்துள்ளார். ஆனால் இந்து மதத்தில் மூடநம்பிக்கைகள் மண்டிக்கிடப்பதால் அதனைப்பற்றிய குறையாய்வும் மிகுதியாக இடம் பெறுவது இயற்கையே.

தமிழ்நாட்டில் சைவ, வைணவ சமயங்கள் இருந்தனவே தவிர, இந்துமதம் என்று ஒன்று கிடையாது. தமிழ் நாட்டில் உள்ள இச்சமயத்தினர் இந்துவாகத் திணிக்கப்பட்டனர். இச்சொல்லாட்சியே இன்று நிலைத்துவிட்டது. ஆகவே, இவர்கள் இந்து மதத்தினர் அல்லர். இந்துவாக மாற்றப்பட்டவர்கள் எனலாம். இது குறித்தும் பெரியார் ஈ.வெ.இரா.பேசியும் எழுதியும் வந்துள்ளார்.

பெரியார் ஈ. வெ. இராமசாமி 1940இல் நீதிக்கட்சி மாநாட்டில் உரையாற்றும் போது பின்வருமாறு பேசியுள்ளார்:

திராவிடர்களாக நாம் கற்பிக்கப்பட்டுள்ள இந்து சமயத்தில் சீர்திருத்தங்கள் கொண்டு வரவேண்டும். பெரும்பாலான திராவிடர்கள் தங்களை இந்து சமயத்தினர் என்று கருதிகிறார்கள். நீங்கள் உங்களை இந்துக்கள் என்று அழைத்துக் கொண்டால், ஆரியக் கொள்கைகளை ஏற்றுக் கொள்பவர்களாக கருதப்படுவீர். நம் முன்னோர்களின் நூல்களில், நாம் இந்துக்கள் என்றும் இந்து சமயத்தை பின்பற்றுபவர்கள் என்று எங்கும் குறிக்கவில்லை.

உலக வரலாற்று ஆசியர்கள், இந்துக்களின் புனித நூல்கள் என வேதங்கள், உபநிடதங்கள், இதிகாசங்கள், புராணங்கள், ஆகமங்கள் எனக் கூறுகிறார்கள். மேற்படி பண்டைய சாத்திரங்களில் எதிலும் திராவிடர்களைப் பற்றிக் கூறவில்லை. அவை ஆரியர்களை மட்டும் கூறுகின்றன என்பது கவனத்தில் கொள்ள வேண்டும்.

வேத சாத்திரங்களைக் கூர்ந்து படித்தால், அவை திராவிடர்களை அடிமைப்படுத்தவும், சுரண்டவும் சொல்லப்பட்டுள்ளன என ஐயத்திற்கு இடமின்றி அறியலாம். இந்து சமயம் திராவிடர்களை அரக்கர்கள் என்றும் சூத்திரர்கள் என்றும் கூறுகிறது. இந்து சமயம் சாதி வேறுபாட்டை அறிமுகம் செய்து, இம்மண்ணின் மைந்தர்களிடையே மோதல்களை உண்டாக்கியது, அதிகரித்தது. நமது மூடநம்பிக்கைகளும், பொருளற்ற, மடமை வாய்ந்த சடங்குகளும், விழாக்களும் இந்துத்துவத்தின் தத்துவங்களைப் பின்பற்றுவதன் விளைவாகும். திராவிடர்களின் சமூக அடிமைத்தனமும் கீழ்மைத்தனமும் ஆரியர்களின் அரசியல் அடிமைத்தனத்திற்கும் வழிவகுத்தது. அரசியல் வழியிலும் திராவிடர்கள், இந்து சமயம் பயிலப்படும் ஆரியவர்த்ததிலிருந்து விடுபடுவது அவசியம் என்பதை நாங்கள் உறுதியாகக் கருதுகிறோம்“.

இவ்வாறு இந்து சமயம் என்பது ஆரிய சமயம் என்ற உண்மையைக் கூறியதன் மூலம் அவர் ஆரியத்திற்கு எதிரான கருத்துகளைத்தான் கூறினார் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

எம்மதமும் சம்மதம் என்பது பெரியார் ஈ.வெ.இரா.வின் கொள்கையன்று. “மதமான பேய் என்னைப் பிடியாதிருக்க வேண்டும்” என்னும் வள்ளலாா் வழியில் எம்மதமும் வேண்டா என்பதே பெரியார் ஈ.வெ.இரா.வின் கொள்கை. எனவேதான், “மதம் மனிதனை விலங்காக்கும்; மதம் மனிதர்கள் ஒற்றுமைப்படுவதைத் தவிர்க்கிறது. ஆகையால், அனைத்து மதங்களும் தேவையற்றவைதான்” என்பதையே நிலைப்பாடாகக் கொண்டிருந்தார். ஆனால் தன் குடும்பத்தார் சார்ந்திருந்த மதமும் இங்கே பெரும்பான்மையாக இருந்த மதமும் இந்துமதம் என்பதால் இந்துமதம் குறித்து எழுதவும் பேசவும் தள்ளப்பட்டார் எனலாம்.

இராசா இராம்மோகன் இராய், தேபேந்திரநாத்து தாகூர், கேசப்பு சந்திர சென், ஆத்துமராம் பாண்டுரங்கன், எம்(ஞ்)சி.இரானடே, என்றி விவியன் தெரோசியோ(Henry Louis Vivian Derozio), சோதிராவு பூலே, கோபாலகிருட்டிண கோகலே, இராமகிருட்டிண பரமஃகம்சர், விவேகானந்தர், சிவ நாராயண் அக்னிஃகோத்திரி முதலிய பலரும் மதச் சீர்திருத்தவாதிகள் என அழைக்கப்படுகின்றனர். இவர்களில் ஒருவர்கூடப் பிறமதச் சீர்திருத்தங்கள் குறித்துப் பேசியதில்லை. அவர்களை யாரும் இந்துமதத்தைப்பற்றி மட்டுமே பேசுகிறார்கள் என்று கூறியதில்லை. ஆனால், பெரியார் ஈ.வெ.இரா.பற்றி மட்டும் தவறான கருத்தீட்டை வழங்குகிறார்கள். பெரியார் ஈ.வெ.இரா. தொடுக்கும் வினாக்களுக்கு விடையிறுக்க இயலாமல் இவ்வாறு திசை திருப்புகிறார்கள் எனலாம்.

(தொடரும்)

Followers

Blog Archive