தாய்த்தமிழும் மலையாளமும் 1
தமிழ் உலக மொழிகளுக்கெல்லாம் தாயாகத்
திகழ்ந்தாலும் தமிழ் நாட்டு வரலாறு போன்று தமிழ் மொழியின் உண்மையான
வரலாறும் அனைவரும் அறியும் வண்ணம் வெளிப்படுத்தப்படவில்லை. போதிய சான்றுகள்
இருப்பினும் மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் பேசுவது போன்று தமிழின்
தொன்மைபற்றியும் நாம் பேசி வருகிறோம்; பேசும் அளவைவிடக் குறைவாக எழுதி
வருகிறோம். நடுநிலை ஆய்வறிஞர்களால் தமிழ்மொழி வரலாறும் தமிழ்க்குடும்ப
மொழிகளின் வரலாறும் தமிழ்மொழியின் தாய்மை வரலாறும் எழுதப்பெற்று அனைத்து
மொழிகளிலும் பெயர்க்கப்பட வேண்டும். அந்த வகையில் இங்கே முழுமையாக
ஆராயாவிட்டாலும் தமிழுக்கும் தமிழ்க் குடும்ப மொழியான மலையாளத்திற்கும்
உள்ள உறவு பற்றி நாம் காண்போம்.
திராவிட மொழி, மூல முதன்மொழி,
மூலத் திராவிடமொழி, போன்ற தவறான எடுகோள்கள் ஆய்வு உலகத்தில் இருந்து
தொலைந்தால்தான் உண்மையான மொழி வரலாற்றை நாம் அறிய முடியும். மொழி
வரலாற்றை அறிவதற்குரிய பெருங்கேடு என்னவெனில், தமிழ் மொழி வரலாற்றை
எழுதுவோரில் பெரும்பான்மையர் நடுவுநிலை தவறி, ஆய்வு நெறிக்கு மாறாக
உயர்தனிச் செம்மொழியாம் தமிழின் சிறப்புகளை மறைப்பவர்களாகவும்
சிதைப்பவர்களாகவும் உள்ளனர். தமிழ்க் குடும்ப மொழிகளின் வரலாறுகளை
எழுதுபவர்களோ நடுநிலை பிறழ்ந்து அவரவர் மொழியில் இருந்து தமிழ் தோன்றியது
போன்று அல்லது வேறு மொழியில் இருந்து தமிழும் அவரவர் மொழியும் ஒரே நேரம்
பிரிந்தது போன்றும் அதனால் தமிழின் தாய்மைநிலை பற்றிய கருத்துகள் தவறு என்ற
அளவிலும் மொழிகளின் தோற்றத்தைத் திரிப்பது போன்று அல்லது அவ்வாறு
பிரிந்தவற்றில் மூத்த மொழி தத்தம் மொழியே என்று உண்மையை மறைப்பது போன்று
தவறான கருத்துகளை விதைத்து வருகின்றனர். இச் சூழலில் கிடைக்கக் கூடிய தவறான
இவை போன்ற தகவல்கள் அடிப்படையில் ஆராய்ச்சி உணர்வு இன்றி எழுதுவோரும்
உள்ளனர். எனவே, அறிஞர் கால்டுவல் போல் ஓரறிஞர் தோன்றி உண்மை வரலாற்றை
உலகிற்கு உணர்த்த வேண்டும்.
தமிழே உலக மொழிகளின் தாய் என்பதைப்
பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார், மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர் முதலான
பல அறிஞர்கள் நிறுவியிருந்தாலும் அனைத்து மொழிகளையும் நாம் தமிழ்க் குடும்ப
மொழிகள் என்ற தலைப்பில் கொணரவில்லை. தமிழ்க் கண்டம் என்று அழைக்கப்பட
வேண்டிய இந்திய நிலப்பரப்பில் உள்ள தாய்த்தமிழின் வேர்களை மிகுதியாகக்
கொண்டிருக்கக் கூடிய திராவிட மொழிகள் என்ற தவறான அளவீட்டில் மதிப்பிடப்
படுகின்ற தமிழ் இன மொழிகள் அல்லது தமிழ்ச் சேய் மொழிகள் என்று சொல்லப்பட்டு
வருகின்ற மொழிகளையே தமிழ்க் குடும்ப மொழிகள் என்று இங்கே
குறிப்பிடுகிறோம். எனவே, உலக மொழிகள் யாவுமே தமிழ்ச் சேய் மொழிகளாக
இருப்பினும் பிறந்த பின் தொடர்பற்றுப் போனவற்றை விட்டு விட்டு
எஞ்சியவற்றையே நாம் தமிழ்க் குடும்ப மொழிகள் என்ற வரையறையில் ஆராய்கிறோம்.
“சிதியன் குடும்பத்தில்
திராவிட மொழிகள் சேர்க்கப்பட்டுள்ளன. ஆயினும் திராவிட மொழிகள் என்று
கூறப்படுவனவற்றைத் தமிழ்க் குடும்பம் என்று பெயரிட்டுத் தனிக் குடும்பமாகக்
கருதுவதே ஏற்புடையதாகும். தமிழ்க் குடும்ப மொழிகளைத் தனிக் குடும்பமாகக்
கொண்டு மதிப்பிடுதல்தான் சாலப் பொருந்தும்” எனப் பேராசிரியச் செம்மல் சி.இலக்குவனார் அவர்கள் கூறியதற்கிணங்க – பிறரால் திராவிட மொழிகள் எனத் தவறாகப் பெயரிட்டு அழைக்கப்படுகின்ற மொழிகளைத் – தமிழ்க் குடும்ப மொழிகள் என்ற பெயரிலேயே அழைக்க வேண்டும். அதற்கேற்ப இங்கும் அவ்வாறே குறிப்பிடப்படுகிறது.
தமிழ்க் குடும்ப மொழிகள் யாவை?
தமிழ்க்குடும்ப உறுப்புகளான கன்னடம், குருக், கூயி, கூவி, குடகு, கோயா,
கோலாமி, கதபி, நாயக்கி, கொண்டா அல்லது கூபி, கதபா, கோத்தா,கொரகா, தோடா,
மண்டா, மலையாளம், தெலுங்கு, கோண்டி, துளு, பிராகூய், மால்தோ, பர்சி,
நாயக்கி, பெங்கோ முதலான தென்தமிழ்க் குடும்ப மொழிகள், மத்திய தமிழ்க்
குடும்ப மொழிகள், வட தமிழ்க் குடும்ப மொழிகள் என்னும் முப்பிரிவிற்குட்
பட்டனவேயாம். எனினும் இங்கு மலையாள மொழியைப்பற்றி மட்டும் ஆய்விற்கு
எடுக்கப்பட்டுள்ளது. அறிஞர் கால்டுவல் அவர்களின் ‘திராவிட மொழிகளின்
ஒப்பிலக்கணம்’, மொழி ஞாயிறு பாவாணர் அவர்களின் ‘திராவிடத்தாய்’,
செந்தமிழ்ச் செம்மல் பேராசிரியர் சி. இலக்குவனார் அவர்களின் ‘பழந்தமிழ்’
முதலான நூல்களில் தமிழும் தமிழ்க் குடும்ப மொழிகளுள் ஒன்றான
மலையாளமும்பற்றிய ஆய்வுரைகள் உள்ளன. இலக்கண அடிப்படையிலான ஆய்வுகளை இவர்கள்
மேற்கொண்டுள்ளமையால் நடைமுறை வழக்கு அடிப்படையில் சில கருத்துகளை மட்டும்
நாம் இங்கு பார்க்கலாம்.
செந்தமிழ்மாமணி பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் அவர்கள், தம்முடைய பழந்தமிழ் என்னும் நூலில் பழந்தமிழ்ப் புதல்விகள்
என்னும் தலைப்பில் தமிழின் புதல்விகளான தெலுங்கு, கன்னடம், மலையாளம்
முதலிய மொழிகளைப்பற்றி ஆராய்ந்துள்ளார். உடலுறுப்புகள், உணவு வகைகள்,
எண்ணுப்பெயர்கள் முதலான அடிப்படைச் சொற்களின் அடிப்படையிலும் இலக்கண
அமைப்பு அடிப்படையிலும் இவை யாவும் தமிழ்ப் புதல்விகளே என நிறுவியுள்ளார்.
அவ்வகையில் மலையாளம் பற்றிக் குறிப்பிடுகையில் பின்வருமாறு
தெரிவித்துள்ளார்:
மலையாளம் :
மலையாளம் என்ற சொல் தமிழ்ச் சொல்லேயாகும். மலையிடத்தை ஆட்சியாகக் கொண்டது
என்னும் பொருளதாகும். மலையாளம் என்ற சொல் மொழியைக் குறிக்கும். கேரளம் என்ற
சொல் நாட்டைக் குறிக்கும். இச்சொல் சேரலன் என்ற தமிழ்ச் சொல்லின் வேறு
வடிவமேயாகும். ச போலியாகக் க வருவது இயல்பு. சீர்த்தியே கீர்த்தியாகவும், செம்பே
கெம்பாகவும் (கன்னடத்தில்) உருமாறியுள்ளமையைக் காண்க. மலையாள நாடு
தமிழிலக்கியங்களில் சேரநாடு என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. அதனை யாண்ட
அரசர்கள் சேரர் என்றும் சேரலர் என்றும் அழைக்கப்பட்டனர். சேரன்
செங்குட்டுவன், களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல், தகடூர் எறிந்த பெருஞ்சேரல், குடக்கோ இளஞ்சேரல் என்னும் பெயர்களை நோக்குக. சேரல் சேரலன் ஆயது. தென்னவன் சேரலன் சோழன் 1, செருமா வுகைக்கும் சேரலன் காண்க 2
என்னும் இலக்கிய வழக்குகளை நோக்குக. சேரலன் கேரலன் ஆகிப் பின்னர்க் கேரளன்
ஆகியது. ஆதலின் கேரளன் என்ற சொல்லின் தோற்றத்திற்கு வேறு மூலம் தேடி
உரைப்பது உண்மை நிலைக்கு மாறுபட்டதாகும்.
மலையாள மொழி வழங்கும் நாடாக இன்று
கருதப்படும் பகுதி கி.பி. பத்தாம் நூற்றாண்டு வரை செந்தமிழ் நாடாகவே
இருந்துள்ளது. செந்தமிழ் இலக்கியங்களாம் ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, சிலப்பதிகாரம், புறப்பொருள் வெண்பாமாலை, ஆதியுலா, பெருமாள் திருமொழி முதலியன இப் பகுதியில் தோன்றியனவே.
பதினாறாம் நூற்றாண்டில்
இந்நாட்டுக்கு வந்த வெளிநாட்டவர் தமிழுக்கும் மலையாளத்திற்கும் வேறுபாடு
அறியாது தாம் அச்சிட்ட புத்தக மொழியை மலவார் அல்லது தமிழ் என்றே அழைத்தனர்.
ஆதலின் பதினாறாம் நூற்றாண்டு வரையில் இப்பகுதியில் வழங்கிய மொழி தமிழாகவே
இருந்துள்ளது என்று அறியலாம். மலைப் பகுதியில் வழங்கிய மொழியை (தமிழை)
மலையாளம் என்று அழைத்தனர் போலும். பத்தாம் நூற்றாண்டிலிருந்து பதினாறாம்
நூற்றாண்டு வரையில் கொடுந்தமிழாகவும் வடசொற் கலப்புடையதாகவும் இருந்து
வந்துள்ளது. பதினேழாம் நூற்றாண்டில் (கி.பி. 1650) துஞ்சத்து
எழுத்தச்சன் என்பவர் மலையாள (தமிழ்) மொழிக்கு ஆரிய மொழியை ஒட்டி எழுத்து
முறைகளையும் இலக்கண விதிகளையும் அமைத்துவிட்டார். பின்னர்த் தமிழின்
தொடர்பு குறைந்து ஆரியமொழித் தொடர்பு மிகுந்து தமிழுக்கு அயல்மொழியாக வளரத்
தலைப்பட்டு விட்டது. மொழிக்குரியோரும் தம்மை ஆரியர்களோடு தொடர்பு
படுத்திக்கொள்ள விரும்பினரே யன்றித் தமிழருடன் உறவு முறைமை பாராட்ட
விரும்பினாரிலர். தம் மொழியை ஆரியத்தின் புதல்வி என்று கூறிக்கொள்வதில்
பெருமையும் அடைந்தனர்.
பதினான்கு பதினைந்தாம்
நூற்றாண்டுகளில் ஆரிய மொழிச் செல்வாக்கு உச்சநிலையை அடைந்திருந்தது.
கொடுந்தமிழும் ஆரியமும் கலந்த மணிப்பிரவாள நடை ஆட்சியில் இருந்தது.
பதினான்காம் நூற்றாண்டில் (கி.பி.1320) வீரராகவ மன்னரால் வெட்டுவிக்கப்பட்ட கோட்டயம் செப்பேட்டில் வாயில் வாதில் ஆகவும், உண்டாக்கில் ஒண்டாயில் ஆகவும், எழுந்தருளி எழுந்நள்ளி ஆகவும் வழங்கப்பட்டு உள்ளன. இந் நூற்றாண்டில் (கி.பி.1350) கண்ணிசப் பணிக்கரால் இயற்றப்பட்ட இராமாயணம் மணிப்பிரவாள நடையில் அமைந்துள்ளது. எடுத்துக்காட்டாக இந்நூலில் உள்ள பாடலை நோக்குவோம்.
கொண்டலிந் நேரிருண்டு சுருண்டு நீண்டொளி வார்ந்துதிங்ஙும்
குந்தள பாரமொடு முகில் குலத்திட மிந்நல் போலே,
புண்டரீகேக்ஷ ணந்நரிகப் பொலிந்தவள ஸீதசொந்நாள்
இப்பாடலில் குந்தளபாரம், புண்டரிகேக்ஷணன் எனும் இரண்டு வட சொற்களே பயின்றுள்ளன. இவற்றுள்ளும் குந்தளபாரம் கூந்தல் பாரம் எனும் தமிழ்ச் சொல்லின் ஆரிய மொழித் திரிபாகும். ஏனைய தமிழ்ச்சொற்களே திரிந்து வழங்கப்பட்டுள்ளன.
ஆரியமொழி முறைக்கு ஏற்பத் தமிழ் எழுத்தாம் ன வை விடுத்து தமிழிலும் ஆரியத்திலும் வரும் ந ஆளப்பட்டுள்ளது.
(தொடரும்)
– இலக்குவனார் திருவள்ளுவன்
No comments:
Post a Comment