தாய்த்தமிழும் மலையாளமும் 4
தமிழ் மக்களே பழந்தமிழ்ச் சொற்களைத்,
தெலுங்கு, கன்னடம், மலையாளம் முதலான பிற சொற்களாக – இம்மொழிகள் பேசப்பட்ட
பகுதி ஒரு காலத்தில் தமிழ் நிலமாக இருந்த பொழுது வழங்கிய தமிழ்ச் சொற்களே
இவை என்பதை உணராமல் – கருதும் பொழுது இம் மொழி பேசும் மக்கள் எல்லாச்
சொற்களும் தமக்குரியனவே எனக் கருதுவதில் வியப்பொன்றும் இல்லை. எனவேதான்
அவர்கள், தமிழ்ச் சொற்கள் கண்டறியப்படும் தொல்லிடங்களையெல்லாம் தம் மொழிச்
சொற்களாகக் காட்டுகின்றனர். எனவே, தமிழ்க்குடும்ப மொழிகளில் உள்ள பிற
மொழிக் கலப்பில்லாத சொல் வளத்தைத் தமிழ்ச் சொற் கருவூலத்தில் சேர்க்க
வேண்டும். இதனைப் பிற மொழிகளிலும் வெளியிட வேண்டும். இம் முயற்சியே மொழி
ஆராய்ச்சிக்குத் துணை நிற்கும் நன்முயற்சியாக அமையும்.
“தமிழே சிதைந்து ஒன்று
பலவாய் வேறுபட்டனவாய் இன்று காணப்பட்டாலும் தமிழின் இயல்புகள் ஆங்காங்குள்ள
மொழிகளில் வெளிப்படுகின்றன. யானை கண்ட குருடர்கள் போன்று இன்று
மொழிநூலறிஞர்கள் தமிழையும் அதன் கிளை மொழிகளையும் பல்வேறு குடும்பங்கட்கு
உரிமையாக்கி உரைத்து மகிழ்கின்றனர். உண்மை நிலை வெளிப்படுவதாக”
எனச் செந்தமிழ் மாமணி பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் கூறுவதுபோல்
தமிழ்க் குடும்ப மொழிகளைப் பிற குடும்பத்தில் சேர்க்கும் அறியாமை நிலையும்
தமிழின் சேய்மொழிகளைத் தாய்த்தமிழின் தாயாகக் காட்டும் வஞ்சக நிலையும்
விரைவில் மாற உண்மைத் தமிழன்பர்கள் பெரிதும் முயல வேண்டும்; மேலும், வரி
வடிவ மாற்றங்களே தமிழைச் சிதைத்தன என்பதை உணர்ந்து கொண்டு தற்போது சிலர்
வரிவடிவ மாற்றத்தையே வாழ்நாள் திட்டமாக அறிவித்துக் கொண்டிருப்பதற்கு
முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்; பேசுவது போல் எழுதுவதற்குத் தடைசெய்து
எழுதுவது போல் பேசுவதையே கடமையாகக் கொள்ள வேண்டும். ஊடகங்கள் நிகழ்த்தும்
மொழிக் கொலைகளுக்கும் சிறுபான்மைச் சாதித் தமிழையே பெரும்பான்மையாகக்
காட்டும் உரையாடல்களுக்கும் எழுத்து நடைக்கும் தணிக்கைத்தடை விதிக்க
வேண்டும். நமக்குரியவற்றைப் பிறருக்குத்தாரை வார்த்து விட்டு முன்னோர்
செல்வத்தைப் பறிகொடுத்த ஏழையாக மாறாமல் முன்னோர் செல்வத்தையும் மீட்டு
புதிய செல்வப் பெருக்கிலும் ஈடுபடவேண்டும். அதற்கு இதுபோன்ற
கருத்தரங்குகளும் அறிஞர்களும் உதவ வேண்டும்.
தமிழில் பேசுவோம்!
தமிழறிந்தவர்களிடம் தமிழிலேயே பேசுவோம்!
தமிழில் பேசுகையில் தமிழிலேயே பேசுவோம்!
தமிழ் அறியாதவர்களையும் தமிழ் அறியச் செய்வோம்!
தமிழில் எழுதுவோம்!
தமிழறிந்தவர்களுக்குத் தமிழிலேயே எழுதுவோம்!
தமிழில் எழுதுகையில் தமிழிலேயே எழுதுவோம்!
தமிழ் அறியாதவர்களையும் தமிழ் அறியச் செய்வோம்!
– இலக்குவனார் திருவள்ளுவன்
No comments:
Post a Comment