பெருந்தொடரியில் (மெட்ரோ இரயில்) அரங்கேறும் நாடகங்கள்
இருப்புப்பாதையில் செல்வதால் ஆகுபெயராக
‘இரயில்’ என்று அழைக்கப்படுவது முதலில் புகைவண்டி எனப்பட்டது. நிலக்கரி
பயன்படுத்தி அதனால் புகை வெளியேறும் வண்டிகளை அவ்வாறு அழைப்பது
பொருத்தமாகும். பிறவற்றையும் அவ்வாறு அழைப்பது எவ்வாறு பொருந்தும் என்ற
எண்ணம் வந்தது. மின்திறனால் இயங்குவதை மின் வண்டி என்றும் சொல்லத்
தொடங்கினர். இருப்பினும் தொடர்ச்சியான பெட்டிகளை உடையதால் தொடர் வண்டி
என்று அழைக்கப்பெற்று அதுவே பெரும்பாலும் கையாளப்படுகிறது. எனினும் பாவாணர்
சுருக்கமாக அதனைத் தொடரி என்றார். தொடரி என்ற சுருக்கமான சொல்லையே நாம்
பயன்படுத்த வேண்டும்.
‘மெட்ரோ/metro’ என்பது
‘மெட்ரோபாலிடன்/metropolitan’ என்பதன் சுருக்கமே. மிகுதியான மக்கள் தொகை
உள்ள நகரம் மாநகரம் / ‘மெட்ரோ’ சிட்டி/metro city எனப்பட்டது. இதற்கடுத்த
நிலையில் பெருமளவு மக்கள் தொகை உள்ள நகரமே பெருநகரம் / மெகா சிட்டி / mega
city என்பதாகும். பொதுவாக மாநகருக்குரிய உள்ளாட்சி அமைப்பு மாநகராட்சி
எனப்பட்டது. ஆனால் மாநகருக்கு மேற்பட்ட சுற்றுப் பகுதியும்
சேர்க்கபட்டமையால் ‘மெட்ரோ சிட்டி’ என்பதைப் பெருநகரம் என அழைக்கும்
பழக்கம் வந்தது. அப்படியானால் இதைவிடப் பெரிய நகரம்
மீப்பெருநகரம்(மெகாசிட்டி) எனப்பெறவேண்டும்.
பெருநகருக்குரிய தொடர்வண்டிகளே சுருக்கமாக
‘மெட்ரோ இரயில்’ என அழைக்கப் பெறுகிறது. ‘மெட்ரோ இரயில்’ என்பது
அவ்விருப்புப்பாதையில் செல்லும் பெருந்தொடரியை / ‘மெட்ரோ டிரெயினை’யே
குறிக்கிறது. இதனை நாம் தமிழில் பெருந்தொடரி எனலாம். இங்கே பெருந் தொடரி
என்றால் பெரிய தொடரி என்று எடுத்துக் கொள்ளக்கூடாது. பெரும்பரப்பளவிற்கான
இருப்புப்பாதைப் பணிகள் எனவும் அவ்விருப்புப்பாதையில் செல்லும் தொடரிகள்
எனவும் எடுத்துக்கொள்ள வேண்டும். நாளை இப்பாதை செங்கல்பட்டு வரைக்கும் கூட
நீளலாம். அதுபோல் மறு முனையிலும் புறநகருக்கோ அடுத்த நகருக்கோ செல்வதாக
அமையலாம். எவ்வாறிருந்தாலும் பெருந்தொடரி என்ற சொல்லை நாம் நிலையாக்கிக்
கொண்டால் எல்லாவற்றிற்கும் இது பொருந்தும்.
சென்னையில் பெருந்தொடரி அமைக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சிக்குரிய செய்தி.
சென்னைக்கும் தமிழ்நாட்டிற்கும் முன்னேற்றத்திற்கு உதவும் பெருமைக்குரிய
செய்தி. 19 ஆம் நூற்றாண்டிலேயே இலண்டன் நகர மக்களுக்கு இவ்வாய்ப்பு
கிட்டியுள்ளது. உலகின் பல நாடுகளில் பெருந்தொடரி அறிமுகப்படுத்தப்பட்
பின்பு, கடந்த நூற்றாண்டிலேயே கல்கத்தா, புதுதில்லி முதலான நகரங்களுக்கு
அறிமுகப்படுத்தபட்ட பின்பு, இந் நூற்றாண்டிலும் மும்பைக்குப் பின்னர்தான்
சென்னைக்கு இவ்வாய்ப்பு கிட்டியுள்ளது. எனவே, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாட வேண்டிய தேவை எதுவும் இல்லை.
சென்னையில் பெருந்தொடரி
அறிமுகப்படுத்தப்பட்ட பின்பு, அரசியல் தலைவர்கள் சுற்றுலா செல்வதுபோல்
வெட்டிப்பயணமாக இத் தொடரியில் பயணம் செய்கிறார்கள். இவர்கள் இதற்கு
முன்னர்ச் சென்ற வெளிநாடுகளிலும் தில்லி முதலான மாநகரங்களிலும் உள்ள
பெருந்தொடரியில் பயணம் செய்யாமல் மகிழுந்தில் சென்றிருப்பார்கள். எனவே,
இதுவே அவர்களுக்கு முதல் பெருந்தொடரிப் பயணமாகவும் இருந்திருக்கலாம்.
ஆனால், இவர்களின் நோக்கம் பெருந்தொடரிப் பணிகளை எந்த அளவிற்கு மக்களுக்கு
மேலும் பயனுள்ள வகையில் அளிக்கலாம் என்பதல்ல. அவ்வாறாயின், பெருந்தொடரித்
திட்டம் தொடங்கப்பட்ட பொழுதே பயன்பாட்டிலுள்ள பிறவற்றைப் பார்வையிட்டு,
அங்கங்கே குறைகள் இருப்பின், அவை இங்கு வராமல் இருக்கவும் சிறப்பாக
அமையவும் கருத்துரை வழங்கியிருக்கலாம். அவ்வாறில்லாமல் தொடங்கப்பட்ட பின்பு வெட்டிச் சுற்றலா சென்று பயணிகளுக்குத் தொல்லை தருவது ஏன் என்று தெரியவில்லை.
தூய்மை இந்தியா விளம்பரத்திற்காகப் பல
கோடிஉரூபாய் வீணாகச் செலவழிக்கும் மத்திய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள
வேளச்சேரி-கடற்காரைச்சாலையில் அமைந்துள்ள பறக்கும் தொடரிநிலையங்களில்
ஒன்றில்கூடத் தூய்மையான கழிவறை இல்லை.
பேருந்துகளில் படியில்லாதவை, ஏறும்
இறங்குமிடங்களில் கைப்பிடியில்லாமை, மேலே பிடிப்பு இல்லாமை, இருக்கைகள்
சரியாக இல்லாமை, பலகணியோரங்களில் உடைகளைக் கிழிக்கும் வகையில்
நீட்டப்பட்ட கம்பிகள் உள்ளமை, மழை பெய்தால் ஒழுகும் வகையில் ஓட்டைகள்
உள்ளமை, பேருந்து செல்லும் தடங்களில் உடலுக்குக் கேடுவிளைவிக்கும் உணவு
விற்பனையகங்கள், தரத்தில் குறைந்தும் விலையில் உயர்ந்தும் உள்ள உணவுப்
பொருள்கள் என அடுக்கிக் கொண்டே போகும் அளவிற்குக் குறைகள் உள்ளன.
இவற்றையெல்லாம் பார்வையிட்டு அரசிற்கு அறிவுறுத்தல்கள் வழங்கிக் குறைகளைப்
போக்கலாம் அல்லவா? ஆனால், இதனை விட்டுவிட்டு, மாறிமாறிப்
பெருந்தொடரிப்பயணம் மேற்கொள்வது எதற்கு? முதல்வர் தொடக்கவிழாவிற்கு
நேரில் சென்று இருந்தார் எனில், ஆளாளுக்குத் தான்தான் பெரியவர் எனக்
காட்டும்வகையில் சென்றிருக்கமாட்டார்கள். போகட்டும் இனியேனும் அரசியல்கட்சித் தலைவர்கள், பெருந்தொடரி வெற்றுச் சுற்றுலாவிற்கு முற்றுப்புள்ளி வைக்கட்டும்.
இனி பொதுவிடங்களையும் பொதுத்துறை
ஊர்திகள், தொடரிகள் முதலானவற்றையும் பார்வையிட்டு அங்கங்குள்ள குறைகளை உரிய
துறையினருக்குச் சுட்டிக்காட்டும் நற்பணிகளை அனைத்துக் கட்சியினரும்
ஆற்றுவார்களாக!
அரசு ஆற்றும் நல்லனவற்றைப் பாராட்டி அல்லனவற்றைச் சுட்டிக்காட்டி மக்கள் நல்வாழ்வு பெற வழிவகுப்பார்களாக!
இடிப்பாரை யில்லாத வேமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும் (திருவள்ளுவர், திருக்குறள் 448)
என்பதை உணர்ந்து ஆட்சியாளர்களும் பிற கட்சியினர் கூறும் குறைகளை அகற்ற முன்வருவார்களாக!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை
அகரமுதல 86, ஆனி 20, 2046 / சூலை 05, 2015
No comments:
Post a Comment