மொழிப்போர் 50 மாநாடு01 -mozhipoar50maanadu01

தடம் மாறிய தமிழ்த்தேசியப் பேரியக்கம்

   1938 மொழிப்போர் என்பது அறிஞர்கள், தலைவர்களின் பெரும்பங்கும் ஆங்காங்கே தொண்டர்களின் பங்கும் கொண்டதாக இருந்தது. ஆனால், 1965 மொழிப்போர் என்பது உள்நாட்டுப்போருக்கு இணையான மக்கள் போராக இருந்தது. கட்சி வேறுபாடின்றி நாடு முழுவதும் மாணாக்கர்கள் திரண்டு நடத்திய இப்போரால் காவல் துறையாலும் பேராயக்கட்சியாகிய காங்கிரசுக்கட்சியினராலும் தாக்குதலுக்கு உள்ளான மாணாக்கர்களின் பெற்றோர்களே களத்தில் இறங்கியதால் மக்கள் போரானது. இதனால் தமிழ்நாட்டிலிருந்து அடித்து விரட்டப்பட்ட பேராயக்கட்சி 50 ஆண்டுகள் கடந்த பின்னரும் இன்றுவரை ஆட்சிக்கட்டிலில் ஏற இயலவில்லை.
  ஆனால், இன்றைய தலைமுறையினருக்கு மொழிப்போர் வரலாறும் தெரியவில்லை. இந்தியைத் தேசிய மொழி என இத்தலைமுறையினரிடம் திணித்து வருகின்றனர். எனவே, தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் மொழிப்போர் 50 மாநாடு வரவேற்கத்தக்கதொன்று. ஆனால், மொழிப்போர் 50 மாநாடு என்றால் 1965 ஆம் ஆண்டு மொழிப்போர் குறித்துத்தானே மாநாட்டு நிகழ்ச்சி இருக்க வேண்டும். மாநாடு குறித்தறிந்த பொழுது ஏற்பட்ட மகிழ்ச்சி அழைப்பிதழைப் பார்த்ததுமே போய்விட்டது. நேரில் சென்று பங்கேற்ற பொழுது முதல் கோணல் முற்றம் கோணல் என்பது நன்றாகப் புரிந்தது.
   மொழிப்போர் ஈகியருக்கான சுடரை ஏற்றி வீர முழக்கங்களுடன் அவர்களுக்கு வணக்கம் செய்து மாநாட்டைத் தொடங்கியது பாராட்டிற்குரியது. தீர்மானங்களும் மகிழ்சியுடன் வரவேற்கும் வகையில் அமைந்துள்ளன. கலை நிகழ்ச்சிகள் களிப்பூட்டும் வகையில் அமைந்தன. ஆனால், உரைகள்? தமிழ் வளர்ச்சி மாநாடு அல்லது இலக்கிய மாநாடு போல் தலைப்பைத் தந்தால் எங்ஙனம் மொழிப்போர் தொடர்பான உரைகளை எதிர்பார்க்க முடியும்? விதை ஒன்று போடச் சுரை ஒன்று முளைக்குமா? 1965 ஆம் ஆண்டின் மொழிப்போர் சூழல், களப்பலி எல்லாம் விளக்கி, இன்று நாம் அதன் பயனை அடைந்திருக்கிறோமா? பிற மொழித்தாக்குதலின்றித் தமிழ் வாழ மீண்டும் மொழிப்போர் தேவையா? என வெல்லாம் விளக்க வேண்டிய மாநாட்டில் அவற்றைக் காணவில்லை!
 ‘1965ஆம் ஆண்டு மொழிப்போர்’ குறித்து எழுத்தாளர் பா. செயப்பிரகாசம் மட்டும் பேச அழைக்கப்பட்டிருந்தமையால் அவர்மட்டும் அது குறித்துப் பேசினார். என்றாலும் அவர் இன்னும் சிறப்பாக விளக்கியிருக்கலாம். அவருக்கு முன்னதாக முனைவர் த.செயராமன் ‘1938-மொழிப்போர்’ குறித்து உரையாற்றியமையும் மொழிப்போர் தொடர்பான அறிதலுக்ககு உதவும் என்பதால் சொல்வதற்கு ஒன்றுமில்லை. பிற்பகல் பாராட்டரங்கத்திற்குத் தலைமை தாங்கிய இயக்குநர் வ.கௌதன் 1965 மொழிப்போர் குறித்தும் உரையாற்றினார்.
  இளந்தளிர் அரங்கில் பங்கேற்றவர்கள் நல்ல சொற்பொறிவாற்றும் திறன் பெற்றவர்களாக இருந்தார்கள். அவர்களிடம் மொழிப்போர் ஈகியர்பற்றிக் கூறச்செய்து, அதன்மூலம் சிலரைப்பற்றியாவதும் அவர்கள் சார்ந்த மாவட்ட இந்தி எதிர்ப்புப்போர்பற்றியாவதும் பேசச் செய்திருந்தால் எவ்வளவு சிறப்பாக இருந்திருக்கும்! அவர்களும் ஓரளவேனும் இந்தி எதிர்ப்புப்போர் பற்றி அறிந்திருப்பார்கள். தமிழ்நாட்டின் பல மாவட்டங்களிலிருந்தும் ஆர்வமுடன் வந்திருந்த இளைஞர்களும் பயன் பெற்றிருப்பர்.
  அதுபோல் ‘இனத்தை செய்தது மொழிதான்’ என்ற தலைப்பிலான பாவரங்கத்திற்கு மாற்றாக. ‘மொழிப்போர் நாயகர்கள் என்ற தலைப்பில் பாவரங்கம் அமைத்திருந்தால் தழலூட்டியும் நஞ்சுண்டும் குண்டடிபட்டும் வதைபட்டும் தமிழ்க்காப்பில் உயிர் துறந்த -உயிர் நீத்த- செம்மல்களைப்பற்றி அறியும் வாய்ப்பு கிடைத்திருக்குமல்லவா?
 அடுத்தது “வளர்தமிழ்” அரங்காம்! ‘கலைச் சொல்லாக்கம்’, ‘கல்வித்தமிழ்’, ‘நாடகத்தமிழ்’, ‘இசைத்தமிழ்’, ‘இந்திய ஒன்றிய ஆட்சிமொழிகள்’, ‘தொடர்பியல் தமிழ்’ என்னும் தலைப்பில் உரைகள். முற்பகல் நிகழ்வில் பேசிக்கொண்டே இருந்த அவையினர் இவ்வரங்கை அமைதியாகக் கருத்தூன்றிக் கேட்டனர். ஆனாலும் என்ன? தலைப்புகள் வழி மாறிப்போனதால், மொழிப்போர் முழு வெற்றியைக்காணவில்லை என்பதையும் மீண்டும் தேவைப்படும் மொழிப்போர் குறித்தும் உணர்த்தி மக்களை ஆயத்தப்படுத்தும் பணியைத் தவறவிட்டுவிட்டார்களே!
  குறும்படப்போட்டி நடத்திப் பரிசுகள்வழங்கினர். 1965 ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்புப்போர் குறித்தும், மொழிப்போர் ஈகியர் குறித்தும் போட்டி நடத்தியிருக்க வேண்டுமல்லவா? அவ்வாறில்லையே!மொழியின் முகங்கள் என்னும் தலைப்பு மொழிப்போர் மாநாட்டிற்குத் தேவைதானா? மொழிப்போர் என்றாலும் இந்திஎதிர்ப்புப்போர்தானே! இதனை மையமாகக் கொண்ட குறும்படம் வருவது காட்சியூடகத்தில் உள்ளவர்களை இதுபற்றிச் சிந்திக்கச் செய்யும் அல்லவா? ஏன், அவ்வாறு நடத்தமனம் வரவில்லை?
  எல்லாவற்றிலும் கொடுமை ‘ஆன்மிகம் வளர்த்த தமிழ்’ என்னும் தலைப்பிலான இறுதி அமர்வு. சமயம் வளர்த்த தமிழ் குறித்தா மாநாடு நடத்துகிறார்கள்? பெரும் உழைப்பும் பணமும் செலவழித்து, மொழிப்போர் வரலாற்றை உணர்த்தாமல், ‘உடல் மண்ணுக்கு! உயிர் தமிழுக்கு!’ என உயிர்க்கொடை வழங்கிய ஈகியர் உயிரிழப்பு வீணாகிக் கொண்டிருப்பதை உணர்த்தாமல், எல்லா நிலைகளிலும் எல்லாத் துறைகளிலும் அயல்மொழிகளை அகற்றவேண்டிய மொழிப்போர் தேவை என்பதை உணர்த்தாமல் தமிழ்த்தேசியப்பேரியக்கம் தடம் புரண்டு போனதேன்?
  படிக்கும்பொழுதே இந்தி எதிர்ப்புத் தந்தை பேரா.சி.இலக்குவனாரின் ‘குறள்நெறி’ முதலான இதழ்களைப் படித்துத் தமிழுணர்வு பெற்ற தோழர் பெ.மணியரசன், தோழர் கி.வெங்கடராமன், பிற அமைப்பினர் தமிழ்ப்பற்றை ஐயப்படவில்லை! பல மாநாடுகள் நடத்திப் பட்டறிவு பெற்றவர்கள்தாம் இவர்கள்! அப்படியிருந்தும் ஏன் இப்படி?
தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை
வாளாண்மை போலக் கெடும். (திருவள்ளுவர், திருக்குறள் 614)
என்பதற்கு எடுத்துக்காட்டாகிப் போனதேன்?
ஒருவேளை பின்வரும் அரசியல் காரணமாக இருக்கலாம் என எண்ணுகிறேன்.
  1965 மொழிப்போரின்பொழுது இல்லாக் கட்சிகள் இப்போது பலவாய்ப் பெருகிவிட்டன. இன்று தமிழ்த்தேசியம் பேசும் சில இயக்கத்தினர் அன்று மாற்று முகாமில் இருந்தனர். கட்சி சார்பில்லா மாணாக்கர்களும் தமிழ் அமைப்பினரும் பொதுமக்களும் நீங்கலாக, மொழிப்போரில் தீவிரமாக ஈடுபட்டக் கட்சி – இளைஞர்களிடையே   இந்தி எதிர்ப்பு உணர்வை விதைத்த கட்சி என்றால் தி.மு.க. மட்டும்தான்! போராட்டங்களில் ஈடுபட்டவர்களும் சிறை சென்றவர்களும் காவல்துறையினரின் கொடுமைகளுக்கு ஆளானவர்களும் தி.மு.க.வினர்தான். இன்றைக்குத் தி.மு.க. தமிழ்காப்புப் பணிகளில் ஈடுபடவில்லை என்பது உண்மைதான். அதற்காக அதன் கடந்த கால நற்பணிகளைப் புறந்தள்ளக்கூடாது. ஆனால், மொழிப்போர், 1965 என்பதுபற்றிப் பேசினால் தி்.மு.க.பற்றிப் பேசவேண்டிவருமே! வந்தேறிகள் எனச் சொல்லிக் கொண்டு எப்படி அவர்களது பெருமையைச் சொல்ல முடியும்? எனவே, மொழிப்போர் மாநாடு நடத்திய மாதிரியும் இருக்க வேண்டும்! மொழிப்போரில் தி.மு.க.வின் பங்கை மறைக்கவும் வேண்டும்! எனவேதான், மொழிப்போருக்குத் தொடர்பில்லாத் தலைப்புகள்!
 வரலாற்றை மறைப்பதும் வரலாற்றைத் திரிப்பதுதான். தமிழ்த்தேசியப்பேரியக்கம் நோக்கம் தவறி, இலக்கு தவறி, இன்றைய தலைமுறையினருக்கு வழிகாட்டத் தவறியது வருததத்திற்குரியதே! இனி, மாவட்டம்தோறும் மொழிப்போர் மாநாடு நடத்தப்போகிறார்களாம்! வேண்டா! இக்கொடுமையைத் தொடர வேண்டா! வேண்டுமென்றால் தமிழ்வளர்ச்சி மாநாட்டினை நடத்துங்கள்! அதற்கெனப் பல அமைப்புகள் இருக்கலாம்! ஆனால். தமிழ்த்தேசியம் காக்க மூண்ட இந்தி எதிர்ப்புப்போரை மறைக்கும் உங்களுக்கு இனி, மொழிப்போர் நடத்தத் தகுதியில்லை!
  நடராசன், தாலமுத்து, கீழப்பழுவூர் சின்னச்சாமி, கோடம்பாக்கம் சிவலிங்கம், விருகம்பாக்கம் அரங்கநாதன், கீரனூர் முத்து, சிவகங்கை இராசேந்திரன், சத்தியமங்கலம் முத்து, ஐயம்பாளையம் வீரப்பன், விராலிமலை சண்முகம், பீளமேடு தண்டபாணி, மயிலாடுதுறை சாரங்கபாணி முதலான இந்தி எதிர்ப்பிற்காகக் தமிழ்காக்க உயிர்க்கொடை அளித்தவர்கள், தேசியப் பாதுகாப்புச்சட்டத்திலும் பிற சட்டப்பிரிவுகளிலும் தளையிடப்பட்டு அல்லலுற்றவர்கள், காவல்துறையினரின் குண்டடிபட்டும் பிற வகையிலும் உயிர் நீத்தவர்கள், காவல்துறையினர் அடக்கமுறையால் கை,கால் முதலான உறுப்புகளை இழந்தவர்கள், காவலர் ஊர்திகளை எரித்த இயற்கையாய் எழுந்த சீற்றப்போர், முதலானவைபற்றி உரையரங்கம், கவியரங்கம், நாடகம், குறும்படம், கலை நிகழ்ச்சிகள் என அமைத்திருந்தாலல்லவா மொழிப்போர் மாநாட்டினை நடத்தியதாகப் பொருள். மற்றபடி, ஆண்டுதோறும் நடைபெறும் வீரவணக்கச் சடங்குபோல் இதுவும் ஒரு சடங்குதான்!
   ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று
   போற்றினும் பொத்துப் படும்”
என்கிறார் திருவள்ளுவர்(திருக்குறள் 468). தக்க வழியில் மேற்கொள்ளப்படாத முயற்சி எத்தனைபேர் துணையாய் இருந்தாலும் குறையாய் முடியும் என அவர் கூறுவது தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் மொழிப்போர் 50 மாநாட்டிற்கு மிகவும் பொருந்தும்!
– இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை
AkaramuthalaHeader