வெள்ளத்துயர்-உதவி : chennai-floodrelief

இடருதவி ஒருங்கிணைப்பு மையங்களை அமைத்திடுக!

கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை.
(திருவள்ளுவர், திருக்குறள் 15)
   கெடுப்பதும் கொடுப்பதும் மழைதான். எனினும் இதன் விளைவுகளும் நன்மைகளும் பெருகுவதும் குறைவதும் மக்களின் செயற்பாடுகளைப் பொறுத்தே அமைகின்றன. இதனை இப்போதைய கடும் மழையும் கொடுமழையும் உணர்த்தியுள்ளன. எங்கும் வெள்ளக்காடு! காணுமிடமெல்லாம் மனைப்பொருள்கள் மிதப்பு! பல இடங்களில் உயிரற்ற உடல்கள் நீரில் அணிவகுப்பு! எங்கும் அவலம்! இவையே சென்னை, கடலூர் முதலான நகரங்களின் துன்புறு நிலை!
  பலர் கூறுவதுபோல்,   நீரிருந்த இடத்தைநோக்கி நீர் பாய்ந்து வந்ததால், நீரிருக்க வேண்டிய இடங்களில் இருந்த நமக்குப் பெருமழிவு ஏற்பட்டுள்ளது.   பொதுவாக ஆற்றங்கரையிலும் கால்வாய்க் கரைகளிலும் குடிசைப்பகுதிகளிலும் சேரிப்பகுதிகளிலும் புயல், மழை இவற்றால் பேரழிவு ஏற்படுவதே வழக்கமாக இருந்தது. அதன் கொடுமையைப் பெரும்பான்மையர் உணரவில்லை. ஆனால், இந்த மழை, ஏழை, பணக்காரன் என்ற வேறுபாடின்றி அனைவரும் இணையென உணர்த்தி அழித்து விட்டது. அடுக்குமனைகளில் இருந்தவர்களில் கீழ்த்தளங்களில் இரு்ந்தவர்களுக்கு உயிர்கள், உடமைகள் இழப்புஎன்றால், மேலே குடியிருந்தவர்களுக்கு இயல்பு வாழ்க்கை பாதிப்புற்று இழப்பு.
  அரசு துயரீட்டுப்பணிகளில் ஈடுபட்டு வந்தாலும் மக்கள் உள்ளங்களில் குமுறல்கள்! அரசு சிறப்பாகச் செயல்பட்டிருந்தால் இந்நிலை வந்திருக்காதே என்ற ஏக்கம்! ஆட்சியாளர்களின் நம்பிக்கையையே புரட்டிப்போடும்அளவிற்கு அரசின்மீது மக்களுக்குக் குறைகள்!
  அரசு என்று நாம் சொல்லும்பொழுது, சில வேளைகளில் அரசாங்க அமைப்பின் தலைமையைக் குறிக்கிறது; சில வேளைகளில் ஆட்சியாளர்களை அல்லது தலைமை ஆட்சியாளரைக் குறி்க்கிறது; சில வேளைகளில் சார்நிலை அலுவலகங்களைக் குறிக்கிறது; என்றாலும் அரசை வழி நடத்திச் செல்லும் முதல்வரையே பொதுவாக நாம் குறிப்பிடுகிறோம். இப்பொழுது, யாராக இருந்தாலும் எதற்கெடுத்தாலும் நான், நான், நான் எனப் பேசும் அவரையன்றி வேறு யாரையும் எண்ணவும் முடியாதே!
  இங்கே வெள்ளத்தின் பொழுது அரசு சரியாகச் செயல்படவில்லை என்கிறோம். ஆனால், இரவு பகல், விடுமுறை பாராது உழைத்த காவல்துறையினர், தீயணைப்புத்துறையினர், உள்ளாட்சித்துறையினர், மின்வாரியத் துறையினர், மக்கள்நல்வாழ்வுத் துறையினர் முதலான அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிய பணியாளர்களும் அதிகாரிகளும் அரசுதான் என்பதை மறந்து விட்டோம். (இவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு நாள் பணிக்கு இருநாள் கூடுதல் ஊதியம் என வழங்குதல் நன்றாகும்.) உடனடி உதவி கிடைக்கவில்லை என்றும் சொல்லப்பட்டது. அரசு அதிகாரிகளும் பணியாளர்களும் மக்களில் ஒரு பகுதியினர்தாம். அவர்களையும் பெருவெள்ளம் விட்டுவைக்கவில்லை. அவ்வாறிருக்கும் பொழுது உடனடியாக வரும்சூழலில் அவர்களும் இல்லை என்பதை நாம் கவனிக்கத் தவறிவிட்டோம்.
  இதனை வேறு வகையில் கூறலாம். அழைப்பு வாடகைஊர்திகள் பெரும்பான்மையும் வரவில்லை என்றே பலரும் குறை கூறியுள்ளனர். பொதுவாக அழைப்பூர்தி நிறுவனம் சொந்தத்தில் ஊர்திகள் வைத்திருக்கவில்லை. ஒருங்கிணைக்கும் பணியைத்தான் செய்கின்றன. ஊர்தி உரிமையாளர்கள் நேரடியாகவோ, ஓட்டுநர் மூலமோ அழைப்பு ஊர்தி நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றுகிறார்கள். பெரு வெள்ளத்தில் அவர்களும் துன்பத்தில் உழலும் பொழுது எங்ஙனம் வர இயலும்? அவ்வாறு இல்லாதவர்களும் ஊர்தியை எடுக்க இயலாச் சாலைச் சூழலில் எங்ஙனம் வர இயலும்? பிறரைப்பற்றி எண்ணாமல் நம்மைப்பற்றியே எண்ணுவதால் அடுத்தவர் நமக்கு உதவவே பிறந்தவர்கள் என்ற எண்ணத்தில் எளிதில் குறை கூறிவிடுகிறோம். இதே போன்றுதான் அரசைக் குறை கூறுவதும்.
  எனவே, அரசைக் குறை கூறும் பொழுது அரசு நிருவாகம் சரியில்லை, அரசு செயல்படவில்லை என்பனபோல், பொதுவாகக் குறை கூறாமல், இன்னின்ன செயல்பாடுகளில் நிறைவு இல்லை, இன்னின்னவாறு குறைகள் உள்ளன, இன்னின்னவற்றில் செயல்பாடே இல்லை என்பனபோல் குறிப்பிட்டுக் கூறலே நன்று. அப்பொழுதுதான் பெருந்துயரிலும் உழைப்போருக்கு சலிப்பின்மை ஏற்படும். அரசும் குறைகளை உணர்ந்து செயல்பட வாய்ப்பு பிறக்கும்.
  பிற மாநிலங்களை ஒப்பிடும்பொழுது தமிழ்நாட்டில்தான் துயரச்சூழல்களில் எல்லா இடங்களிலும் பொதுமக்களே முன்வந்து உதவுவதாகப் பலரும் கூறி வருகின்றனர். குறிப்பாகத் தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையத்தினர், பிற மாநிலங்களிலிருந்து வந்த தன்னார்வலத் தொண்டர்கள் அல்லது பணியாளர்கள் இவ்வாறு வெளிப்படையாகவே கூறி வருகின்றனர். அந்த வகையில் மனித நேயப்பண்பாடு தமிழ்நாட்டில் இருப்பதை நாம் உணர்ந்து கொண்டோம். ஆம்! மடியவில்லை மனித நேயம் என்பதை இந்த வெள்ளம் பாருக்கு உணர்த்திற்று.
  எனினும், இவ்வெள்ளத்தில் அரசு தன் குறைளை உணர்ந்ததா எனத் தெரியவில்லை. பொதுவாகவே நீர்நிலைகளைச் சரியாகப் பேணாமையே வெள்ளப்பெருக்கிற்கு முழுமுதற்காரணம் என்பதில் ஐயமில்லை. பேணாமையே என்பதில் தூர்வாருதல் முதலான பணியின்மை மட்டுமல்ல, நீர்நிலைகளைத் தனியாருக்கு உரிமை வார்த்ததும் அடக்கம். புதிய பேருந்துநிலையங்கள், கட்டடங்கள் முதலானவையும் நீர்நிலைகளில்தாம் அமைக்கப்படுகின்றன. தனியார் கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள், நிறுவனங்கள் முதலியனவும் ஊழல் முறையில் தனியாருடைமையாக்கப்பட்டன. எனவேதான் நீர் தேங்குமிடமின்றி நகருக்குள் வெள்ளம் புகுந்தது. இங்கே நாம் அரசு என்பது ஆளும் அரசை மட்டுமல்ல, இதுவரை ஆண்ட அரசையும்தான் குறிக்கும். எனவே, நீர்ஓடும் வழிகளில் எந்தக் கட்டடமும் கட்டுவதற்கு இனியேனும் அரசு இசையக்கூடாது.   நீர் தேங்கியுள்ள இடமாயின், ஓரிடத்தைப் பயன்பாட்டிற்கு எடுத்தால் வேறு இரண்டு நீர்நிலைகளை அரசு உருவாக்க வேண்டும் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும். மழைக்காலத்தில் கரைபுரண்டோடிய வெள்ளம் இப்பொழுது நீர்நிலைகளில் காணவில்லை. எனவே, நீர்ச்சேமிப்பு குறித்த விழிப்புணர்வு அரசிடம் இல்லை என்பது புரிகிறது. எனவே, எல்லா நிலைகளிலும் அரசு நீர்நிலைகளைப் பேணவும் புதிய நீர்நிலைகளை உருவாக்கவும் ஆவன செய்ய வேண்டும்.
  அருவி, ஆறு, பேராறு, சிற்றாறு, சுனை, கயம், ஊற்று, குமிழி ஊற்று, ஆற்றிடைஅமையும் மடு, தாமரை முதலான நீர்ப்பூங்கொடிகள் அமைந்த பொய்கை, தடாகம் முதலான இயற்கையாய் அமைந்த நீர் வளங்களைப் பழந்தமிழர் பாதுகாத்தனர். குளிப்பதற்குக் குளம், வட்டக்குளமாகிய வலயம், நாற்புறமும் கட்டப்பட்ட தடம், குண்டு, குண்டம் முதலியன, கால்நடைகளைக் குளிப்பாட்டப் பயன்படுத்தப்படும் குட்டை, குட்டம் முதலியன, ஏர்த்தொழிலுக்கு ஏரி, தாங்கல் முதலியன,   நீர்ப்பாசனத்திற்கான கண்மாய், ஓடை, கலிங்கு, வாளி, கால், மறு கால், கால்வாய், மடை, மதகு, முதலியன, வீட்டுப் பயன்பாட்டிற்குக் கிணறு, ஊற்றுடன் அமைந்த பொங்குகிணறு, தோட்டப் பயன்பாட்டிற்குச் சதுரக் கிணறாகிய துரவு, ஆழக்கிணறாகிய கேணி, படியுடன் அமைக்கப்படும் நடைகேணி, கட்டுக்கிணறு, ஆழி(கடலின்)அருகே நீரூறும் ஆழிக்கிணறு, மணற்பாங்கு பகுதிகளில் அமைக்கப்படும் உறை கிணறு, ஊர்மக்களின் உணவிற்குப்பயன்படும் ஊருணி, ஆழமற்ற பள்ளத்தில் அமைந்த கிணறாகிய கூவல், ஒழுங்கற்ற பகுதியில் அமையும் நீர்நிலையாகிய கூவம், பல்வகைப்பயன்பாட்டு நீர்நிலையாகிய இலஞ்சி, பாறைநிலைத்தில் குடைந்து அமைக்கப்படும் குடை கிணறாகிய குமிழி, கோயிலில் அமைக்கப்படும் தளிக்குளம், கோயிலை ஒட்டி அமைக்கப்படும் தெப்பக்குளம், கோயிலருகே அமைக்கப்படும் நீராடு குளமாகிய திருக்குளம், ஆற்று மணற்பகுதிகளில் அமைக்கப்டும் தொடுகிணறு, நீர்நிலையின் நடுவே அமைக்கப்படும் பிள்ளைக்கிணறு, நீர்த்தேக்கப்படுவதற்குப் பாதுகாப்பாக அமைக்கப்படும் சிறை, மைய மண்டபத்துடன் அமைக்கப்படும் பெருங்குளமாகிய நீராவி, ஆவி, வாவி, மீன் வளர்ப்பிற்கு விடப்படுகின்ற பாசி படர்ந்த சேங்கை, பேரளவிலான நீரோட்டத்தைத் தடுத்து உருவாக்கப்படும் அணை, எனப் பலவகையிலும் இயற்கை நீர்நிலைகளைக் காத்தும் செயற்கை நீர்நிலைகளை உருவாக்கியும் நீர் மேலாண்மையில் பழந்தமிழர் சிறப்புற்றிருந்தனர்; கோட்டையைச் சுற்றி நீர்த்தேக்கமாகிய அகழியை உருவாக்கியும் கடல்களுக்குப் பலவகைப் பெயர் சூட்டியும் நீரின் பயன்பாட்டினை நன்கு உணர்ந்திருந்தனர்.
  சிந்துவெளியில் கண்டறியப்பட்ட பழந்தமிழர் நாகரிகச் சிறப்பு, அவர்களின் பாதாளச் சாக்கடை முதலான நீர்வடிகாலறிவியல் சிறப்பை நமக்கு உணர்த்துகின்றன. இன்றைக்கோ சிறு மழை பெய்தாலே நம்மால் தாக்குப் பிடிக்கமுடியாதபடி சாக்கடை நீர் கலந்த தேக்கங்களைக் காண்கின்றோம். அப்படியாயின் இப் பெருமழையில் நாம் துயருறுவது இயற்கைதானே!
 வீடுதோறும் மழைநீர்ச்சேமிப்பில் கருத்து செலுத்திய அரசு   நீர்நிலைகளில் கருத்து செலுத்த இயலாமல் போனதற்கு ஊழலைத்தவிர வேறு காரணம் கூற இயலுமோ?
  கரைபுரண்டோடிய வெள்ளம் இன்று எங்கே எனத் தேடும் நிலை உள்ளதே, அரசின் நீர்க்காப்புத்திறனின்மையை உணர்த்துகிறது. இதில் கருத்துசெலுத்துவதுபோல், இது போன்ற சூழல்களில் துயர்துடைப்புப்பணிகளை ஒருங்கணைக்க நிலையாணை ஒன்றை அரசு பிறப்பித்து நடைமுறைப்படுத்த வேண்டும்.
   அரசின் குறையாகப் பெருமளவு சொல்லப்பட்டது ஒருங்கிணைப்பின்மைதான். பல இடங்களில் கொண்டுவந்த உணவைத் தடுத்ததாக உதவும் அமைப்புகள் தெரிவித்துள்ளன. காலக்கடப்பு போன்ற இயற்கைக்காரணங்களால் அல்லது செயற்கைச் சதியால் உணவு நஞ்சாக மாறியிருக்கலாம்; அதனால் தடுக்கலாம். எனினும் குறிப்பிட்ட சில பகுதிகளுக்கே உதவிகள் சென்று அவை வீணாயின அவலமும் வேறு பல பகுதிகளில் உதவி கிட்டாமல் அல்லலுற்ற கொடுமையும் நிகழக் காரணம் ஒருங்கிணைப்பின்மையே! சில பகுதிகளில் தேவைக்கு மீறி வழங்கப்பட்ட உணவுப்பொருள்கள் குப்பைக்குப் போயின! கம்பளிஉடை, போர்வை முதலான பொருள்கள், சேமித்து வைக்கவும் இடமின்றிக் குறைந்த விலைக்குப் போயின. எனவே, அரசு இதுபோன்ற சூழல் வராமலிருப்பதற்காக, யார் ஆட்சியிலிருந்தாலும் தேவைக்குரியோர் பயனடையவும் உற்றுழி உதவுநர் நிறைவடையவும்   இடருதவி ஒருங்கிணைப்பு மையங்களை அமைத்தல் வேண்டும். ஒவ்வோர் ஊரிலும் ஊர் நிருவாக அலுவலர் / உள்ளாட்சி உறுப்பினர்கள் முதலான மக்கள்சார்பாளர்கள் ஒருங்கிணைப்பில் எனக் குழுக்களை அரசு நிறுவ வேண்டும். இதில் தன்னார்வத்தொண்டுஅமைப்புகளும் தன்னார்வலர்களும் ஊடகத்தினரும் இடம் பெற வேண்டும். மக்கள்சார்பாளர்களைப் பொறுத்தவரை பெயரைக் குறிப்பிடாமல், பொறுப்பிலுள்ள உறுப்பினர் எனவும் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தவர்கள் எனவும் பொதுவாகக் குறிப்பிட்டுத் தேர்தலில் பங்கேற்ற அனைவரையும் இப்பணியில் இணைக்க வேண்டும். எதிர்பாரா இடர் வரும்பொழுது உரிய ஒருங்கிணைப்பாளர்கள் தாமாகவே குழுவைக் கூட்டும் அதிகாரம் பெற்றவர்களாக அறிவிக்க வேண்டும். இவர்கள், தங்கள் பகுதிகளில் தேவைப்படும் உதவிகள், வரக்கூடிய உதவிகள், போதுமான அளவிற்குமேல் வந்து பிற இடங்களுக்குத் திருப்பி விடுவதற்குரிய உதவிகள், என்ற வகையில் பதிந்து உதவிகளை ஒருமுகப்படுத்த வேண்டும். உடுக்கை இழ்நதவன்கைபோல் விரைந்து உதவும் மக்களும் உதவுவதற்கு முன்னர் ஒருங்கிணைப்புக்குழுவைத் தொடர்பு கொண்டு தேவைப்படும் உதவியை அறிந்து அதற்கேற்ப உதவ வேண்டும்! மாநில இடருதவி மையம் இவற்றை ஒருங்கிணைத்து அரசளவில் கிட்ட வேண்டிய உதவிகள் விரைவில் கிட்ட வகைசெய்ய வேண்டும்.
  இனிப்பெருவெள்ளம் அல்லது பிற எதிர்பாரா இயற்கை  இடர் வந்ததெனில், எளிதிலும் விரைவிலும் அதனைச் சமாளிக்கும் வகையில் அரசு திகழவேண்டும்!
எற்றென் றிரங்குவ செய்யற்க செய்வானேல்
மற்றன்ன செய்யாமை நன்று. (திருவள்ளுவர், திருக்குறள், 655)
என்னும் குறள்நெறியை அரசு பின்பற்றினால் இனி, எக்காலமும் துன்பமில்லை!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை
அகரமுதல 110 கார்த்திகை 27, 2046 / திசம்பர் 13, 2015
Akaramuthala-Logo