இராகுலுக்கு வாழ்த்துகள்! ஆனால் ……
இந்தியத் தேசியப் பேராயத்தின் எண்பத்தேழாவது தலைவராகப் பொறுப்பேற்றுள்ள இராகுலுக்கு வாழ்த்துகள்!
1885 இல் தொடங்கப்பெற்ற பேராயக்கட்சியில் 1919 இல் 36 ஆம் தலைவராகப் பொறுப்பெற்றார் மோதிலால் நேரு. இவருக்குப்பின் 100 ஆண்டுகளை நெருங்கும் இந்த ஆண்டில் இக்குடும்பத்தின் 6ஆவது வழிமுறையினராக, இக்கட்சியின் 87 ஆம் தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார் இராகுல்(காந்தி);
ஆள் எண்ணிக்கை அடிப்படையில் 6 ஆவது வரிசைமுறை என்றாலும் (சவகர்லால் நேரு 8 தடவை தலைவர் பொறுப்பேற்றதுபோல்) பதவிஆண்டு வரிசையில் குடும்பத்தில் 44ஆம் வரிசையில் பொறுப்பேற்றுள்ளார். அஃதாவது 132 ஆண்டுகாலப் பேராயக்கட்சி வரலாற்றில் மூன்றில் ஒரு பங்கிற்கும் மேலாக நேரு குடும்பமே கட்சியை ஆட்சி செய்து வருகிறது. இத்தகுதியின் அடிப்படையில் இராகுல் பெறுப்பேற்றாலும் எளிமையை விரும்புவதாலும் மக்களாட்சி முறையில் நாட்டம் காட்டுவதாலும் இவர் தனித்தன்மையைப் போற்றிச் சிறப்பாகச் செயல்படுவார் என எதிர்பார்க்கலாம்.
இவர் குடும்பத்தினருக்கு நெகர் என்ற சொல் மருவி நேரு என்று மருவி நிலைத்தது. அதுபோல் ஃபெரோசு செகாங்கிர் கந்தி(Feroze Jehangir Ghandy) என்னும் இவரின் தாத்தா பெயரிலுள்ள கந்தி என்பது காந்தியாயிற்று. அதனால் அறியாமக்கள் காந்தி குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என இவர்கள் குடும்பத்தினரைக் கருதும் நல்வாய்ப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. தகவல் களஞ்சியமான விக்கிபிடீயா தளத்திலேயே ‘’இவர் நேரு-காந்தி குடும்பத்தைச் சார்ந்தவர்’’ என எல்லா மொழிகளிலும் குறிக்கப்பட்டிருக்கும பொழுது பாமரர்கள் இவ்வாறு தவறாக எண்ணுவதில என்ன வியப்பு?
( https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF) எனவே, குடும்பச்சூழலால் உந்தப்பட்டுத் தலைவராகியுள்ளார். எனினும் தன் குடும்பத்தினருக்கும் கட்சிக்கும் நாட்டிற்கும் நற்பெயர் கிடைக்கும் வகையில் பணியாற்றிச் சிறந்திட வாழ்த்துகிறோம்.
ஆனால், ஈழத்தமிழர்கள் இனப்படுகொலைகளால் அழிவுற்ற துயரத்தால் வருந்திக் கொண்டிருப்போர் இவ்வாறு வாழ்த்துவதையே தவறாக எண்ணுவர். இந்த உளப்பாங்கைப் போக்கும் வகையில் செயல் பட இராகுலை வேணடுகிறோம்.
காசுமீருக்குத் தன்னாட்சி வழங்க வேண்டி இவர் கட்சியிலேயே இப்பொழுது குரல் ஒலிக்கத் தொடங்கி விட்டது. இந்தியா என்பது செயற்கையாக உருவாக்கப்பட்ட நாடு என்பதையும் இந்நாடு நிலைத்து நிற்க மொழிவழித் தேசிய இனங்களின் கூட்டாட்சியாக இந்நாட்டை அமைக்க வேண்டும் என்பதையும் நினைத்துக் கட்சியின் வழிக் குரல் கொடுத்துகூட்டரசு நாடாக நம் நாட்டின் அமைப்பை மாற்றுமாறும் வேண்டுகிறோம்.
இதன் தொடக்கமாக வடக்கே காசுமீரிலும் தெற்கே தமிழ்நாட்டிலும் முதலில் தன்னாட்சி அமைந்திட ஆவன செய்யுமாறும் வேண்டுகிறோம்.
இவரது தந்தை இராசீவு கொலையில் உண்மைக்குற்றவாளிகள் தப்பி, அப்பாவித் தமிழர்கள் சிறைக்கொட்ட்டியில் உள்ளனர். பலர் தூக்குத் தண்டனையைச் சந்திக்கும் சூழலில் துயரக்கடலில் உள்ளனர். உண்மையான குற்றவாளிகளையே ‘பல்லுக்குப்பல்’ என்ற முறையில் தண்டிப்பது தவறு என்னும் பொழுது அப்பாவிகளைத் தண்டிப்பது ஏன்? தனக்கெனத் தனிச்சிந்தனைப்பாதையை வகுக்க விழையும் இராகுல் இவர்களின் விடுதலைக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.
ஒரு குடும்பத்தலைவரின் மரணத்திற்கு ஓர் இனத்தையே அழிப்பது என்பது பெருங் கொடுஞ்செயல். அப்படியானால் ஓர் இனத்தின் பேரழிவிற்கு யாரை அழிப்பது? ஆனால், மாற்றாக யாரையும் அழிக்க வேண்டா. விடுலைக்குக் கொடுத்த விலையாகக் கருதி தமிழீழம் மலரக் குரல் கொடுக்க வேண்டும். இவர் முயற்சியால் தமிழ்ஈழம் மலர்ந்தது எனில் அதுவே கழுவாயாக – பிராயச்சித்தமாக – அமையும். இவர் தாய் சோனியா உலகின் மூத்த மொழியான உயர் தனிச் செம்மொழியான தமிழின் செம்மொழித்தன்மைக்கு அறிந்தேற்பு வழங்கினார். இவர் தமிழ்ஈழத்திற்கு அறிந்தேற்பு வழங்கி நிலையான புகழ் பெற வேண்டுகிறோம்.
தமிழையும் தமிழ் வரலாற்றையும் கற்றுத் தமிழுக்குத் தொண்டாற்றவும் கட்சியில் உள்ள அடிமைத்தனத்தைப் போக்கி அந்தந்தப் பகுதியின் தலைவர்களை மதித்து அவர்கள் வழி உண்மையை அறிந்து அதன்படிச் செயல்படவும் வாழ்த்துகிறோம்.
வளமும் வலிமையும் மொழிச்சமஉரிமையும் பகுத்தறிவும் உள்ள பண்பான நாடாக நம் நாட்டைமாற்றத் தொண்டாற்றிச் சிறந்திட வாழ்த்துகிறோம்!
குடும்பப்பரம்பரைத் தகுதியில் இந்தியத் தேசியப் பேராயத்தின்(காங்கிரசுக்கட்சியின்) தலைவராகப் பொறுப்பேற்றுள்ள இராகுல்
மேற்குறித்தவாறு செயல்பட்டுத் தன்னால் கட்சிக்கும் நாட்டிற்கும்பெருமை சேர்க்க வேண்டுகிறோம்.
சலம்பற்றிச் சால்பில செய்யார்மா சற்ற
குலம்பற்றி வாழ்தும்என் பார்.
(திருவள்ளுவர், திருக்குறள் 956)
[மாசில்லாக்குடிப்பண்புடன் வாழ்வோம் எனக் கருதி வாழ்வோர், வஞ்சனையுடன் தகுதியில்லாதவற்றைச் செய்ய மாட்டார்கள்.]
தகுதியானவற்றை ஆற்றித் தகுதியால் தகைமைபெற இராகுலை வாழ்த்துகிறோம்!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை அகரமுதல 217, மார்கழி 02 – மார்கழி 08, 2048 / திசம்பர் 17 – திசம்பர் 23, 2017
No comments:
Post a Comment