திமுக தோல்வியுறும் என்பது தாலினே அறிந்ததுதான்!
 கடந்த 13 ஆண்டுகளில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில்  இப்பொழுது முதன் முறையாக ஆளுங்கட்சி தோற்கடிக்கப்பட்டு விட்டது. ஆளுங்கட்சியுடன் சேர்ந்து முதன்மை எதிர்க்கட்சியான திமுகவும் தோற்கடிக்கப்பட்டு விட்டது.
 இராதாகிருட்டிணன் நகர் இடைத்தேர்தலில் திமுக தோற்றதன் காரணம் தாலின் என்பதுபோலும் திமுக தொண்டர்கள் விலைக்குப் போனதும்தான் எனவும் எழுதப்பட்டும் பேசப்பட்டும் வருகின்றன. உண்மையில் முற்றிலும் தவறான செய்திகளாகும் இவை. தினகரன், தி.மு.க. கூட்டணி என அதிமுக கூறுவது தன் தோல்வியை மறைக்கத்தான். எதிர்க்கட்சி கூட்டணி வைத்தால் தோல்வியுறும் என்றால் அதிமுக வலிமையாக இல்லை என்றுதானே பொருள்.
எதிர்க்கட்சியான திமுகவிற்கு ஆளுங்கட்சி தோற்கடிக்கப்படவேண்டும் என்பதே முதல் இலக்கு. இத்தேர்தலில் அது நிறைவேறியுள்ளது.
  தேர்தலில் தனக்கும் திமுகவிற்கும்தான் போட்டி எனத் தினகரன் சொல்லி வந்தாலும் அவருக்கும் உண்மை தெரியும். நிழலாட்சியின் செல்வாக்கைத் தரைமட்டமாக்கினால்தான் தனக்கு வாழ்வு என அறிந்தவர்தாம் அவர். அப்படியாயின் அதுதானே அதன் முதல் எதிரி. ஆனால், அவ்வாறு கூறினால் அக்கட்சிக்கு முதன்மை கொடுத்ததுபோல் ஆகி விடும் என்றுதான் திமுகதான் எதிரி என்று சொல்லி வந்தார். அதிமுகவினருக்கும் தங்கள் தலைவியின் மறைவிற்குப் பின்னர், யாரை ஏற்பது என்ற முடிவு எடுக்க வேண்டிய தேவை இருந்தது. எனவே, அடிமைக்குரலா, உரிமைக்குரலா என்ற முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர். எனவே, பிற கட்சிகளைக் களத்தில் உள்ளதாகக் கருதவில்லை.
  திமுக விலைபோனதாகக் கூறுவது இத்தொகுதியில் திமுகவிற்கு ஆதரவு உள்ளதுபோன்ற தவறான எண்ணத்தின் அடிப்படையில்தான். பொதுவாகத் தொகுதிகளில் 15% முதல் 25% வரைதான்  திமுகவினர் இருக்கின்றனர். திமுக செல்வாக்கு உள்ள பகுதிகளில் 25% உம் குறைவான செல்வாக்கு  உள்ள பகுதிகளில் 15% உம் பிறவற்றில் இடைப்பட்ட அளவிலும் திமுகவினர் இருப்பர். அடுத்து ஆதரவாளர்களும் அதற்கடுத்துத் தேர்தல் சூழலுக்கேற்ப  ஆதரவு தரும் மக்களும் இருப்பர். (எல்லாக்கட்சிக்கும் இது பொருந்தும்.) இத்தேர்தலில் 14.53% வாக்குகள் திமுகவிற்கு விழுந்துள்ளதால் திமுகவின் அடிப்படை வாக்குகளில் மாற்றம் இல்லை என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
 1977 இல் உருவாக்கப்பட்ட இரா.கி.நகர் ச.ம.உ. தொகுதியில் இருமுறைதான் திமுக வெற்றி பெற்றுள்ளது. அதிமுக 7 முறை வெற்றி பெற்றுள்ளது. (பேராயக்கட்சி இருமுறை வென்றது.) அதிமுக தொகுதி என்பதால் திமுகவினர் வாக்குகள்மட்டுமே திமுகவிற்குச் சார்பாகப் பதிவாகி இருக்கும். ஆதரவாளர் வாக்குகளும் மக்கள் வாக்குகளும் கிடைக்கவில்லை.
 இதனை எதிர்பார்த்துத், தோல்வியைத் தரும் தொகுதி என்பதால் வீண் முயற்சிகளில் தாலின் ஈடுபடவில்லை. என்றாலும் இவ்விடைத்தேர்தலில் வாக்குகளை வாங்கும் முயற்சிகளில் ஈடுபடாமை பாராட்டிற்குரியது. இதனை இனி வரும் எல்லாத் தேர்தல்களிலும் கடைப்பிடிக்க வேண்டும் என்று வேண்டுகிறோம்.
தேர்தல் தோல்வி குறித்து அறிய, இரா.கி.நகர்ச.ம.உ.தொகுதியில் பதிவான வாக்குகள்பற்றிய கணக்கீட்டைப் பார்ப்போம்.

அட்டவணை 1.
கடந்த முறை திமுகவின் சிம்லா முத்துச்சோழன்   பெற்ற வாக்குகள்57,420

இப்போது திமுகவின் மருதுகணேசு பெற்ற வாக்குகள் 24,651
வேறுபாடு   32,769

அட்டவணை 2. 
இப்போது தினகரன்  பெற்ற வாக்குகள்                               89,013
சிம்லா-மருது வாக்குகள் வேறுபாடு
(57,420 -24,651 =)   
32,769
திமுக பெற்ற இவ்வாக்குகள்அனைத்தும்
 தினகரனுக்குச்சென்றதாகக்கருதினால்
 தினகரன் பெற்ற  வாக்குகளுக்கும்
இதற்கும் உள்ள வேறுபாடு 
56,244

அட்டவணை 3. 
இப்போது தினகரன்  பெற்ற வாக்குகள்                                89,013
கடந்தமுறை திமுக பெற்ற வாக்குகள்57,420
கடந்தமுறை திமுக பெற்ற வாக்குகள் அனைத்தும் தினகரனுக்குச் சென்றதாகக் கருதினாலும் (89,013-57,420) மிகுதி வாக்கு  31,693

  எனவே, திமுக வாக்குகளுக்கும் தினகரன் பெற்ற வாக்குகளுக்கும் தொடர்பில்லை. கடந்த முறை திமுகவை ஆதரித்த மக்கள் இம்முறை நிலையான ஆட்சியை விரும்பித் தினகரனுக்கு அளித்த வாக்குகள் இவை.
மேலும் வேறுவகையில் வாக்குகள்குறித்த கணக்கீட்டைப் பார்ப்போம்.
இந்தமுறை தினகரன் பெற்ற வாக்குகளும்(89,013) அதிமுகவின் மதுசூதன்ன் பெற்ற வாக்குகளும்(48,306) சேர்த்தால் வரும்வாக்குகள் எண்ணிக்கை 1,37,319 கடந்தமுறை செயலலிதா பெற்ற வாக்குகள் எண்ணிக்கை 97,037
இரண்டிற்கும் உள்ள வேறுபாடு  = அதிமுக கூடுதலாகப்பெற்ற வாக்குகள் = 40,282
 அதிமுகவில் பிளவு ஏற்பட்டிருந்தாலும் யாரும்திமுக பக்கம் செல்லவில்லை என முன்பே சுட்டிக்காட்டியிருந்தோம். திமுகவில் பிளவு ஏற்பட்டு  அதிமுக உருவானாலும் பின்னர் மதிமுக உருவானாலும்  தேர்தலில் பெறும் ஒட்டுமொத்த வாக்குகள் எண்ணிக்கை கூடத்தான் செய்கின்றது. அதுபோல்தான் அதிமுகவில் பிளவு ஏற்பட்டாலும் அவற்றின் இணைந்த ஆதராவாளர் எண்ணிக்கை மிகுவதாகவே உள்ளது.
தினகரனை அனைவரும் நடைமுறைப்படித் தற்சார்பர்(சுயேச்சை) எனக்கூறினாலும் அவரைப் போட்டி வேட்பாளராகக் கருத வேண்டும். ஆனால், மக்கள் இவரை உண்மையான அதிமுக எனக் கருதுகின்றனர்.
இத்தகைய அரசியல் சூழல்தான் தினகரனின் வெற்றிக்குக் காரணம்.
 மற்றொன்று அலைபேசி வழக்கு முடிவிற்கு அஞ்சி கனிமொழியைப்பரப்புரைக்கு பயன்படுத்தவில்லை எனச் செய்திகள் வந்தன. இவ்வழக்குச் சிலருக்குப் பொய்யாயும் சிலருக்குப் பழங்கைதையாயும் போய்விட்டன. இதன் முடிவு எவ்வாறிருப்பினும் தேர்தல் முடிவை அது பாதிக்கப் போவதில்லை என்பதைத் தி.மு.க. உணரவில்லை. அதே நேரம் தமிழீழத்தில நடைபெற்ற இனப்படுகொலையின்பொழுது திமுக நடந்துகொண்ட முறைக்கும் படுகொலையின் சூத்திரதாரி எனப்படும்  பேராயக்கட்சியான காங்கிரசின் மீதும் இன்னும் மக்களிட்டையே ஆறாச் சினம் உள்ளது. இஃது உண்மையெனின்  வைகோவிற்கு – மதிமுகவிற்கு – ஆதரவு இல்லையே எனக் கருதுகின்றனர். வைகோவிற்கு மக்களிடம் மதிப்பு உள்ளது. தேர்தல் களத்தில் அவருக்கு ஆதரவு இல்லை .ஆனால், தேர்தல் களத்தில் ஆதரவு இருந்த திமுகவிற்கு, ஆதரவிற்குக் காரணமான  தமிழின உணர்வு மங்கியதால் ஆதரவு தேய்ந்து விட்டது. எனவே,  வேறு காரணங்களை எண்ணி ஆராயாமல், தவறுகளுக்கு மக்களிடம் மன்னிப்பு கேட்பத இழந்த ஆதரவைப் பெருக்கும். ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகச் செயலபட்டோம் எனப் பழங்கதை பேசாமல், இனப் படுகொலையின் பொழுதிலான செயல்பாடுகளுக்கும் ஈழத்தமிழர்களைச் சிங்களத்தமிழர்கள் எனத் திரித்துக் கூறியதற்கும் மன்னிப்பு கேட்டு, மனம் மாறினால் மக்கள் இவர்கள் பக்கம் திரும்புவர் என்பதை உணர வேண்டும்.
திமுகவின் இடைத்தேர்தல் தோல்வி குறித்து ஆராயாமல், கொள்கைச்சறுக்குகளை ஆராய்ந்து, தமிழ்சார்கொள்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுத்தால், இனி வரும்தேர்தல்களில் வெற்றிக்கனிகளைப் பறிக்கலாம்.
  • இலக்குவனார் திருவள்ளுவன்