இந்தியாவின் எதிர்காலம் குசராத்தியர் கைகளில்!
பேச்சுத்திறன் மிக்கவன், பொய்யை மெய்யென நம்ப வைக்கும் திறமை பெற்றவனாக இருக்கிறான்; வறுமையில் வாழ்பவர்களையும் வளமாக வாழ்வதுபோல் நம்ப வைக்கும் ஆற்றல் உடையவனாக இருக்கிறான்; இன்னலில் வாழ்பவர்களிடமே இன்பத்தில் வாழ்வதுபோல் கருத வைக்கும் வல்லவனாக இருக்கிறான். இச்சூழலில் பொய்யர்களைக் குறை சொல்வதா? தங்கள் நிலையைக் கூட உணரா மக்களுக்காக இரக்கப்படுவதா? அறியாமை இருளில் மூழ்கியிருக் கச் செய்யும் ஆட்சியாளர்களைக் குறை சொல்வதா?
பொய்யுடை ஒருவன் சொல்வன்மையினால்
மெய் போலும்மே; மெய்போலும்மே
(அதிவீரராம பாண்டியர், வெற்றிவேற்கை 73)
இதற்கு இலக்கணமாகப் பலரைக் குறிப்பிடலாம். குறிப்பாகப் பாசக வினரும் அவர்களுள்ளும் நரேந்திரர் முதலான தலைவர்களும் சிறப்பானவர்கள். குசராத்தைப்பற்றித் தவறான தகவல்களைக் கூறும் பொழுது அம்மாநில மக்களே உண்மை என நம்பும் பொழுது பிற மாநிலத்தவர் நம்புவதில் என்ன வியப்பு? எனினும் மெல்ல அவர்களின் உண்மையுரு வெளி வந்து கொண்டுள்ளது. பாசக ஆட்சியால் இந்தியா பல இன்னல்களை எதிர்நோக்கி வருகிறது. இந்தியா பிளவை நோக்கிய பயணத்தில் செல்வதற்குப் பாசகவின் மொழி வெறி, சமய வெறி, இன வெறி காரணமாக உள்ளன என மக்கள் நல நேயர்கள் கூறிவருவது உண்மையன்றோ!
குசராத்தில் இறந்த மாட்டின் தோலை உரித்ததற்காகத் தணிந்த(ஒடுக்கப்பட்ட) இளைஞர்கள் நால்வரைப் பொதுஇடத்தில் கட்டி வைத்து அடித்தது போன்ற அவல நிகழ்வுகள்!
குசராத்தில் முறுக்குமீசை வைத்திருந்த பியூசு பார்மர் என்னும் தணிந்த(ஒடுக்கப்பட்ட) பிரிவைச்சேர்ந்த இளைஞரைக் கட்டிவைத்து அடித்தது போன்ற கொடுஞ்செயல்கள்!
குசராத்து கலவரத்தில் நரேந்திர அரசால் ப.த.ச.(பொடா)வின் கீழ்ச் சிறைக்குத் தள்ளப்பட்ட 287 பேர்களில் 286 பேர் இசுலாமியர் என்பது போன்ற சிறுபான்மையினருக்கு எதிரான நடவடிக்கைகள்!
தணிந்த(ஒடுக்கப்பட்ட) சாதியினருக்கு எதிரான வன்கொடுஞ் செயல் புரிந்தவர்களில் குசராத்தில் தண்டனை பெற்றவர்கள் 3% -இனருக்கும் குறைவே! என்னும் அவலம்!
குசராத்து இன்பம் விளையும் மாநிலம் அல்ல என்பதற்கு இப்படிப்பட்ட செய்திகளை அல்லது உண்மைகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.
பணமதிப்பிழப்பு நடவடிக்கை, சரக்கு-சேவை வரி போன்ற பல நடவடிக்கைகளால் மக்கள் அடைந்துள்ள மீளாத்துயரம் போன்றவை தொடரக்கூடா என்றால் குசராத்தியர் நாட்டு நலன் கருதி வாக்களிக்க வேண்டும்!
சமற்கிருத வெறியாலும் இந்தி வெறியாலும் எடுக்கப்படும் நடவடிக்கைகளால், பிற தேசிய இனங்களுக்கு எதிரான அழிசெயல்களால் இன்னலுக்கு ஆளாகிறவர்கள் குசராத்தியரும்தான்!
இந்தியாவில் மொழிவழித்தேசிய இனங்கள் மேம்படவும் எல்லா பிரிவு மக்களும் பிரிவு இல்லாத ஒருமை நிலையில் வாழவும் பாசக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி இட வேண்டியது காலத்தின் கட்டாயம்.
தனக்கு அறுதிப்பெரும்பான்மை இருப்பதால், நாடு முழுவதும் முழுமையாகத் தன் பக்கம் இருப்பதாக எண்ணிக் கொண்டு, மக்களாட்சி முறைக்கு எதிரான நடவடிக்கைகளில் பாசக துணிவாக ஈடுபடுவதன் ஒரு பகுதிதானே தமிழ்நாட்டில் பாசகவின் நிழல் ஆட்சி!குசராத்தில் மீண்டும் பாசக வெற்றி பெற்றால் இது போன்ற அவலங்கள் தொடர்நிகழ்வாகுமல்லவா? குசராத்தில் அடிவிழுந்தால் மக்களாட்சியின் கழுத்தை நெரிக்கும் பிடி தளருமல்லவா?
அந்தப்பணியைச் செய்ய வேண்டியது குசராத்து மக்களல்லவா?
குசராத்து மக்களே! உங்கள் சட்டமன்றத்திற்கு மட்டுமான தேர்தல் அல்ல இது!
பாசகவின் போக்கை நல்வழிப்படுத்துவதற்கான தேர்தல் இது!
பாசக மீது விழும் முத்திரை பிறரை அழுத்தும் முத்திரை!
பாசகவினருக்கு எதிரான வாக்களிப்பு என்பது இந்தியாவிற்கான திருப்பு முனையாக அமையும் கைகாட்டி!
புதுதில்லி, புதுச்சேரி, தமிழ்நாடு எனப் பல மாநிலங்களிலும் மடிந்து வரும் மக்களாட்சியை மலர்ச்சிபெறச்செய்யும் மந்திரக்கோல் உங்கள் கைகளில் வாக்குஆயுதமாக உள்ளது!
குற்றப்பின்னணியினர் பெரும்பான்மையர் போட்டியிடும் உங்கள் மாநிலத் தேர்தலில் நல்லாரைப்பார்த்து வாக்களியுங்கள்! அதே நேரம், இந்தியாவின் எதிர்காலம் உங்கள் கைகளில் உள்ளது என்பதை உணர்ந்து வாக்களியுங்கள்!
நீங்கள் நாட்டுமக்களுக்கு ஆற்றும்அருந்தொண்டாகக் கருதி வாக்களியுங்கள்!
நீங்கள் கருதுவதுபோல் குசராத்தில் இந்தியா இல்லை! இந்தியாவில்தான் குசராத்து உள்ளது என்னும் உண்மையை உணர்ந்து வாக்களி’யுங்கள்!
உங்களது சட்டமன்ற உறுப்பினர்களை மட்டும் நீங்கள் தேர்ந்தெடுக்கவில்லை! இந்தியா நல்லாட்சி நோக்கி நடைபோடுவதற்கான பாதையை ஆளுவோருக்கு வழிகாட்டுவதற்காகவும்தான் வாக்களிக்கிறீர்கள் என்பதை உணர்ந்து வாக்களியுங்கள்.
இந்தியாவின் எதிர்காலம் உங்கள் கைகளில் உள்ளது என்பதை உணர்ந்து வாக்களியுங்கள்!
இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல். (திருவள்ளுவர், திருக்குறள்: 517)
அன்புடன் வேண்டும் இலக்குவனார் திருவள்ளுவன்
No comments:
Post a Comment