வணிக நோக்கிலான கருத்தரங்கங்களும் மோசடிப்பேர்வழிகளும்
கருத்தரங்கங்கள் கருத்துப் பரவலுக்கும் புத்தறிவிற்கும் மனமகிழ்ச்சிக்கும் படைப்புப் பெருக்கத்திற்கும் வழி வகுப்பன. ஆனால், இப்பொழுதெல்லாம் கருத்தரங்கம் என்றாலே அச்சம்தான் வருகின்றது.
சிலர் தங்களுக்கு வேண்டிய பேச்சாளர்களை முடிவெடுத்துக் கொண்டு கருத்தரங்கம் என அறிவிப்பார்கள். அக்கூட்டத்தில் யாரும் கேள்வியும் கேட்கக்கூடாது என்பார்கள். சொற்பொழிவாக இருந்தாலும் 1 மணி நேரம் பேசினால் 10 மணிக்கூறாவது கலந்துரையாடல் இடம் பெற வேண்டும் என்பார் நாவரசர் அறிஞர் ஒளவை நடராசன். ஆனால், இவர்கள் தாங்கள் மட்டும் பேசிக்கொண்டு கருத்தரங்கம் என்பர். குறிப்பிட்ட மையத் தலைப்பில் பேச்சாளர்களை முடிவெடுத்துக் கொண்டு பேசும் நிகழ்ச்சிகளைக் கருத்தரங்கம் என்று சொல்லாமல் உரையரங்கம் என்று சொல்ல வேண்டும். தனித்தனித் தலைப்பில் ஒருவரோ இருவரோ பேசும் நிகழ்ச்சியை(ச் சொற்)பொழிவரங்கம் என்று சொல்ல வேண்டும்.
கட்டுரைகளை அளிக்குமாறு வேண்டி அதன் அடிப்படையில் கருத்தமர்வுகள் நடை பெறும் நிகழ்வை மட்டுமே கருத்தரங்கம் என்று சொல்ல வேண்டும். இக்கருத்தரங்கங்களில் கட்டுரையாளர்களுக்குச் சம வாய்ப்பு அளிக்கப்பெற வேண்டும்.
கருத்தரங்க அமைப்பாளர்கள் தங்களுக்கும் தாங்கள் சிறப்பானவர்களாகக் கருதுபவர்களுக்கும் கூடுதல் நேரம் ஒதுக்கிவிட்டுப் பிறரை ஐந்துமணித்துளிகளில் பேசி முடிக்க வேண்டும் என்று சொல்பவர்களும் உள்ளனர். பன்னாட்டுக் கருத்தரங்கம் என்று சொல்லிக் கொண்டு இரு நிமையத்திற்குள் பேசி முடிவெடுக்க வேண்டும் என்று சொல்பவர்களும் உண்டு.
போதுமான சம வாய்ப்பு கொடுத்துக் கருத்தரங்கம் நடத்துபவர்களும் உள்ளனர். ஆனால், அவர்கள், தாங்கள் பங்கேற்கும் அமர்வுகளில் மட்டும் ஒளிப்படம், காட்சிப்படம் எடுத்துக் கொண்டு பிற அமர்வுப்பக்கம் படக்கலைஞர்கள் தப்பித்தவறிக்கூட வருவதற்கு விட மாட்டார்கள். பங்கேற்பவர்கள் தத்தம் அலைபேசிகளில் படம் எடுத்துக் கொள்ளட்டும் என்பார்கள்.
சிலர் இலக்கியச் சுற்றுலா போல் கருத்தரங்கங்களைத் தொடர்ந்து நடத்தி வருகிறார்கள். பணமும் உயர் பதவியும் உடையவர்களுக்கான கருத்தரங்கங்கள் இவை. கட்டுரையாளர் ஒவ்வொருவருக்கும் நற்றிணைச் செல்வர், குறுந்தொகைச் செம்மல் என்பன போன்ற பட்டங்களை அளிப்பார்கள். தரமற்ற கட்டுரையளிப்பவர்களும் சிறப்பிக்கப் பெறுகிறார்கள் என்று குறைபாடு இருந்தாலும் இவர்களால் பங்கேற்பாளர்கள் மகிழ்ச்சிதான் அடைகிறார்கள். காலத்தாழ்ச்சியின்றிக் கட்டுரைத் தொகுப்புகளைக் கருத்தரங்கத்தின்பொழுதே வெளியிடும் சிறப்பான பணிகளையும் இவர்கள் ஆற்றுகிறார்கள்.
இன்னும் சிலர் மாறுபட்டக் கருத்துகளைக் கலந்துரையாடல் மூலம் முடிவெடுக்க வேண்டும் என்று எண்ணாமல் கட்டுரைகளையே ஏற்பதில்லை. கணிணி சார்பான தமிழ்க் கருத்தரங்கங்கள் எனில், கணிப்பொறியில் வல்லமையும் தமிழில் ஆர்வமும் இருப்பதால் தங்களைத் தமிழ் மேதைகளாக எண்ணிக் கொண்டு தமிழில் கணிப்பொறி சார்ந்த கட்டுரைகள் பெருகுவதற்குத் தடையாக இருப்பார்கள்.
தமிழின் பெயரால் நன்கொடையும் புகழும் வாங்கிக் கொண்டு தமிழுக்கு எதிராகச் செயல்படுபவர்களால் அறிவியல் துறைகள் தமிழில் எப்படி வளரும் என்பதைப் புரிந்து கொள்ளாத இவர்கள் மனம் மாறினால் நன்று.
இன்னும் சிலர் பிற அமைப்புகளுடன் இணைந்து “பன்னாட்டுக் கருத்தரங்கம் நடத்துகிறோம், நாங்கள் உமி கொண்டு வருகிறோம் நீங்கள் அரிசி கொண்டு வாருங்கள்” என்பது போல் நடந்து கொள்கிறார்கள்.
இணைந்தவர்கள், தங்களுக்கு அவப்பெயர் வந்துவிடக்கூடாதே எனக் கைப்பணத்தையும் செலவிட்டுச் சமாளிப்பார்கள். இப்படித்தான் மலேசிய அமைப்புடன் மதுரை காமரசார் பல்கலைக்கழகம் நடத்திய பன்னாட்டுக் கருத்தரங்கத்தில் தமிழகப் பொறுப்பாளர்கள் வஞ்சிக்கப்பட்டார்கள். இக் கருத்தரங்க வணிகர்கள், ஒரே செலவினத்திற்கு இரண்டுக்கு மேற்பட்டவர்களிடம் நன்கொடை வாங்கி ஏமாற்றுபவர்களாகவும் உள்ளனர்.ஒருவரை ஒருமுறை ஏமாற்றினால் போதும் என நல்ல மனம் கொண்டு ஒவ்வொருமுறையும் ஏமாற்றுவதற்கு வெவ்வேறு ஆள்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள். அயல் நாட்டு மயக்கத்தால் இங்குள்ளவர்கள் ஏமாறுவது வழக்கம்தான்.
பலரும் தங்களுக்கு முதன்மையும் விளம்பரமும் கிடைக்க வேண்டும் என்பதற்காகக் கருத்தரங்கங்கள் நடத்தி ஆதாயம் அடைகின்றனர். சிலர் பொறுப்புகளில் இருந்து கொண்டு கருத்தரங்கச் செலவினத்தில் அயல்நாடுகள் சென்று வரலாம் எனக் கருத்தரங்க ஆர்வலர்களாக உள்ளனர். வேறு சிலர் தங்கள் வணிக வளர்ச்சி அடிப்படையில் கருத்தரங்கப் பற்றாளர்களாகக் காட்டிக் கொண்டு பயனடைகின்றனர். இவர்களை யெல்லாம் மன்னிக்கலாம். ஆனால் திருச்செந்தூரார் பெயருடைய ஒருவர் பணத்தைக் கையாள வேண்டும் என்பதற்காகவே திட்டமிட்டுக் கருத்தரங்கம் நடத்தி மோசடி செய்துள்ளார் என்னும் பொழுது இதில் வஞ்சிக்கப்பட்டவர்கள் இனிக் கருத்தரங்கம் என்றாலே காதத் தொலைவு ஓட மாட்டார்களா?
உத்தமம் என்னும் அமைப்புத் தமிழ் ஆர்வலர்களைப் புறக்கணித்ததால் இரண்டாம் உத்தமம் ஒன்று தொடங்கப்பட்டதை முன்பே குறிப்பிட்டிருந்தோம். போட்டி அமைப்பாக இருக்கக்கூடாது அவரவர் செயல்பாட்டிற்கேற்ப இணையத் தமிழை வளர்க்கட்டும் எனச் சொல்லியதற்கும் மாறாக கருத்தரங்க நாள், இடம் போன்றவற்றில் ஒரே மாதிரிச் செயல்பட்டது இந்த அமைப்பு. சரி, தொலையட்டும் என்றால் பங்கேற்பாளர்கள் குழுவாக வருவதற்குக் குறைந்த கட்டணத்தில் ஏற்பாடு செய்வதாகவும் நுழைமம்(விசா) பெற்றுத் தருவதாகவும் ஒவ்வொருவரிடமும் உரூபாய் 65,000 பெற்றார் கனடாவிலுள்ள பொறுப்பாளர்.
எதற்கெடுத்தாலும் கடன் அட்டை மூலமே பணம் செலுத்த வேண்டும் என்ற நடைமுறை வந்து விட்டதால் கடன் அட்டை இல்லாத பெரும்பான்மையர் பணம் செலுதத இயலவில்லை. எனவே அந்தந்த ஊர்களில் தன் நண்பர் என ஒவ்வொருவரைச் சுட்டிக்காட்டி அவரிடம் பணம் செலுத்துமாறு கூறியுள்ளார். அவர்களும் பணம் செலுத்த அந்த நண்பர்கள் எனப் பட்டோரும் மறுநொடியே கனடாவிற்குப் பணத்தை அனுப்பி விட்டனர். கூறியபடி அனைவருக்கும நுழைமம் கிடைத்துக் கருத்தரங்கத்தில் பங்கேற்றிருந்தால் சிக்கல் எதுவும் எழுந்திருக்காது. ஆனால், பணம் பெற்றது கனடாவிற்கு வந்து கருத்தரங்கத்தில் பங்கேற்கச் செய்வதற்காக அல்லவே எனவே நுழைமத்திற்கு ஏற்பாடு செய்யவில்லை. யாருக்கும் நுழைமம் டைக்காததால் கனடா செல்ல இயலவில்லை. சரி, பயணச்சீட்டு எடுக்காததால் முழுப் பணத்தையாவது பெறலாம் என்றால் முதலில் கருத்தரங்கம் முடிந்த பின் அனுப்புவதாகச் சொல்லி அடுத்தடுத்து வெவ்வேறு காரணம் சொல்லிப் பணத்தைத் திருப்பித் தரவில்லை.
பல்வேறு வலியுறுத்தலுக்குப் பின்னர், அவ்வப்பொழுது தவணை முறையில் சிறு தொகைகளை அனுப்பிக் கொண்டுள்ளார். ஏமாற்றுபவரை யாருக்கும் தெரியாது; இங்குள்ள பொறுப்பாளர்கள்தான் மாட்டுவார்கள்; ‘குருவி’யிடம் கொடுத்ததால் காவல் துறையில் முறையீடு செய்ய மாட்டார்கள்; பணம் கொடுத்ததற்கான எச்சான்றும் இல்லை என்பதால் சட்டப்படியான நடவடிக்கை எடுக்க இயலாது; எனப் பலவாறாக எண்ணி அவர் தொடர்ந்து ஏமாற்றி வருகிறார். நண்பர்களாகக் கருதிப் பணம் கொடுக்கப்பட்டவர்கள் ‘குருவி’கள் என்றால் இத்தனைக் குருவிகளைத் தெரிந்து வைத்துள்ள திரு.வஞ்சகர் எத்தகைய மோசடிகளில் ஈடுபட்டு வருகிறார் எனக் காவல்துறையும் தொடர்புடைய பிற துறைகளும் எண்ண மாட்டார்களா?
குருவிகளுக்கு அலுவலகம் கிடையாது. மிதியூர்திகளில் வலம் வந்து பணத்தைப் பெறுகிறார்கள், கொடுக்கிறார்கள். நாணயமாக நடந்து கொள்கிறார்கள். ஆனால், பணம் கொடுக்க வேண்டியவர் தராவிட்டால் என்ன செய்வார்கள்? ஆனால், அவர்களின் தொலைபேசி எண்கள் மூலம் அவர்களின் விவரங்கள் திரட்டப்பட்டுக் கொணடுள்ளன. அவர்கள் மூலம் கனடாவிலுள்ளவர்கள் விவரங்கள் கிடைக்கும். நடவடிக்கை எடுக்க முடியாது என்பவர்களும் நடவடிக்கைக்கு உள்ளாவார்கள். அடுத்த வாரத்தில் தமிழகக்காவல் துறைக்கும் மத்திய அரசின் துறைகளுக்கும் தொரண்டோ காவல் துறைக்கும் கனடாவிலுள்ள இலங்கைத் தூதரகத்திற்கும் முறையீடுகள் தரப்பட உள்ளன. இனத்திற்கும் நாட்டிற்கும் அவப்பெயர் வரக்கூடாது என்பதற்காகக் கமுக்க நடவடிக்கையை வெளிப்படுத்துகின்றோம். இனியேனும் காலந் தாழ்த்தாமல், தமிழகப் பொறுப்பாளர்கள் தத்தம் சொத்துகளை விற்றேனும் தொகைகளைத் திருப்பித் தரட்டும் என்று எண்ணாமல் உடன் அவற்றைத் திருப்பித் தர வேண்டும். பணம் தந்த பலரும் பணத்தைச் செலவழிக்க வழி தெரியாமல் தந்தவர்கள் அல்லர். கடன் முதலான மாற்று ஏற்பாடுகள் மூலம் பணம் பெற்று அளித்தவர்களே! இப்பொழுது பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்கள். பாவ நம்பிக்கை இருப்பினும் இலலாவிட்டாலும் தம் குடும்பநலன் கருதியாவது பாதிப்புற்றோரின் சாவஉரைகளிலிருந்து தப்பிக்க இனியேனும் நேர்மையாக நடந்து கொண்டு அரையாண்டு கடந்த பின்னரும் தரப்படாத தொகைகளை அனுப்பி வைக்க நச்சினார்க்கும் இன்னாதாரை வேண்டுகிறோம்.
தமிழ்க்கடவுள் திருச்செந்தூரார் பெயர் சூட்டியவரே! உங்களின் நற்பணிகளுக்குக் களங்கம் ஏற்படும் வகையில் தமிழர்க்கு வஞ்சகம் -இரண்டகம் – செய்யாதீர்!
கருத்தரங்கங்களில் பங்கேற்பவர்களும் திடீரென்று வந்து உடனே வாசித்துவிட்டுச் செல்ல வேண்டும் என்பது பார்வையாளர் என்ற முறையில் சுருக்கமாக வினா எழுப்பல், ஐயம் கேட்டல், தெளிவுபடுத்தல் போன்றவற்றில ஈடுபடாமல் பேச்சாளராக மாறுவது போன்ற தவறுகளைச் செய்கிறார்கள். இவற்றைப் பின்னர்த் தனியாகக் காண்போம்,
சலத்தால் பொருள்செய்தே மார்த்தல் பசுமண்
கலத்துள்நீர் பெய்திரீஇயற்று. (திருவள்ளுவர், திருக்குறள் 660)
இலக்குவனார் திருவள்ளுவன்
No comments:
Post a Comment