கனிவில்லாத இந்திய அரசும்
துணிவில்லாத தமிழக அரசும்
மடியில் கனம் இருந்தால் வழியில் பயம் இருப்பது இயற்கைதான். ஆனால், தமிழக அரசினருக்கு இந்த அளவு பயம் இருப்பது நாட்டு மக்களுக்கு அல்லவா தீமையாய் முடிகிறது? தீமையின் உச்சக்கட்டம்தான் தேசியத்தகுதி நுழைவுத் தேர்வு -NEET – மூலம் மாணவர் சேர்க்க நடை பெற இசைந்தது.
கல்வித்துறை என்பது மாநிலப்பட்டியலில் இருந்து பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்ட பொழுதே தீமைகள் உலா வரத் தொடங்கின. இப்பொழுது கல்வித்துறை முழுமையும் மத்தியப் பட்டியலுக்கு மாற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இனிமேல் துயரங்களும் அவலங்களும் நம்மை விட்டு நீங்கா. பொதுத் தேர்வுத் துயரங்களில் இருந்து நாம் பாடம் படிக்காவிட்டால் அடிமையாகக் கிடக்க வேண்டியதுதான்!
பொதுத் தேர்வு மூலம் மருத்துவக்கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெற என்ன தேவை வந்தது? இதுவரை தமிழ்நாட்டில் பள்ளிக் கல்வி முடித்துவிட்டு மருத்துவரானவர்கள் வல்லுநர்களாக இருக்க வில்லையா? அந்தந்த மாநில மக்களின் கல்விக்காக அந்தந்த மாநிலங்களில் உள்ள கல்லூரிகளில் சேர்க்க இந்தியா முழுமைக்கான பொதுத் தேர்வு ஏன் தேவை? மேனிலைக்கல்வியின் தரம் உயர்கல்விக்குச் செல்லும் தரத்தில் இல்லையா? அப்படியானால் மேனிலைக்கல்வி முறையை மாற்று! இல்லை, தரமான கல்விதான் அளிக்கப்படுகிறது என்கிறீர்களா? அப்படியானால் உயர்கல்விக்கான நுழைவுத் தேர்வுகளை நிறுத்து!
“ஒரே நாடு! ஒரே மதம்! ஒரே மொழி! ஒரே கல்வி!” என்பது நாட்டு மக்களை அழிவுப் பாதையில் இட்டுச் செல்கின்றது. இருந்தும் ஆட்சியாளர்கள் திருந்தவில்லையே! பாசக ஆட்சி என்றாலே ஆரிய விரும்பிகள் துள்ளல்களுக்கும் எள்ளல்களுக்கும் சென்று விடுகின்றனர். இதனால் நிலைமை மேலும் மோசமாகின்றது. பாசகவினரின் அன்றாட உளறல்கள் தங்குதடையின்றி ஊடகங்கள்மூலம் உடனுக்குடன் மக்களை அடைகின்றன. அச்சத்தினால் பின்னர்ப் போலியாக மறுப்பு தெரிவித்தாலும் மக்கள் அதை ஏற்பதில்லை.
இவ்வாறுதான் ‘நீட்டுத்’ தேர்வு என அழைக்கப்பெறும் தேசியத் தகுதி நுழைவுத் தேர்வின் தீமைகளை உணர்ந்த பின்னரும் பொதுவான கல்வி வளர்ச்சிக்கு எதிராக இதைப் பாசக கெட்டியாகப்பிடித்துக் கொண்டு மக்களை ஆட்டுவிக்கின்றது. அக்கட்சியினரும் அதன் தாளத்திற்கேற்ப ஆட்டம் போடுகின்றனரே யன்றி மக்களின் இன்னல்களை அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்வதில்லை.
தேர்வர்கள் மீது காட்டப்படும் கெடுபிடிகளுக்குக் கடந்த ஆண்டே எதிர்ப்பு வந்த போதும் இவ்வாண்டும் தேவையற்ற கெடுபிடிகள். சட்டைக் கைகளைக் கிழித்தல், கூந்தல்களை அவிழ்த்துத் தலைவிரிகோலமாகத் தேர்வு எழுதச் செய்தல், பெண்களின் மாராப்புகளை அகற்றல் போன்றவை பண்பாடுள்ள செயல்கள்தாமா? மூட நம்பிக்கைகளை விளைவிக்கும் கைகளில் கட்டப்படும் கயிறுகளும் சாதிப்பாகுபாட்டை உணர்த்தும் பூணூல்களும் தேவையில்லைதான். ஆனால், அவற்றைத் தேவை என உணர்வோர்களுக்கும் நம்பிக்கை வைத்திருப்போர்களுக்கும் நாம் மதிப்பு அளிக்க வேண்டுமல்லவா? அவற்றை அறுத்தெறிவது கொடுமையல்லவா? இனிமேல், மொட்டையடித்துக் கொண்டும் உடம்பில் ஒட்டுத்துணிக்கூட இல்லாமலும் தேர்வு அறைக்குள் செல்ல வேண்டும் என்று சொல்வார்கள் போலும்!
தமிழ்நாட்டில் 1,07,288 தேர்வர்களுக்கு 170 தேர்வு மையங்கள் மட்டும் அமைத்தது மத்தியஅரசின் கல்வி வாரியம். ஆனால், 75,167 தேர்வர்கள் உள்ள குசராத்தில் 138 தேர்வு மையத்தை அமைத்துள்ளது, அதே மத்திய அரசு. கருநாடகாவில் 96,377 தேர்வர்களுக்கு 187 மையங்களும் கேரளாவில் 1,20,792 தேர்வர்களுக்கு 226 தேர்வு மையங்களும் மகாராட்டிரத்தில் 1,83,961 தேர்வர்களுக்கு 345 மையங்களும் என இவ்வாறு பிற மாநிலங்களில் அமைக்கப்பட்ட தேர்வர்-மையம் விகிதங்களைப் பார்க்கும் பொழுது தமிழ்நாடு வஞ்சிக்கப்பட்டுள்ளது எளிதில் புரியும். தமிழன் என்றால் இளித்தவாயன் என்பதால் தமிழகத் தேர்வர்களுக்குக் கேரளா, கருநாடகா, இராசசுதான் மாநிலங்களில் தேர்வு மையங்கள் வைத்துள்ளனர்.
உள்ளூரில் தேர்வு என்றாலே நடுக்கம், கிலி, உளைச்சல் ஏற்படுவது இயற்கை. இதில் வழக்கத்திற்கு மாறாக அயல் மாநிலங்களுக்கான அலைச்சல் என்பது வாழ்வில் உயரக் கனவு காணும் மாணவர்களுக்குப் பெருந்தொல்லை அல்லவா? என்னதான் அரசும் தனியாரும் பண உதவி அளித்தாலும் அதற்கு முன்னதாகப் பணம் புரட்டல், வழக்கமான வேலைகளை விட்டுவிட்டு உடன் செல்லுதல் போன்றவற்றால் நம்பிக்கையூட்ட வேண்டிய பெற்றோர் நிலைகுலைந்து அல்லவா போனார்கள்? தேர்வைப்பற்றிமட்டுமே சிந்திக்க வேண்டிய மாணவத் தேர்வர்களை எண்ணத்தைச் சிதறவிடும் சூழலுக்குத் தள்ளிவிட்டமையால், படிப்பிலும் தேர்விலும் நாட்டம் எங்ஙனம் செல்லும்? தகுதியிருந்தும் இது போன்ற சூழல்களால் வெற்றி வாய்ப்பைப் பறிகொடுக்கிறார்களே! இதனால் அவர்களின் எதிர்காலமும் பாதிக்கப்படுகின்றனவே!
இவற்றால் பாதிக்கப்பட்டு உயிர்ப்பலிக்கு ஆளானவர்கள்தான் மகாலிங்கத்தின் தந்தை கிருட்டிணசாமி என்னும் இரமேசும் ஐசுவர்யாவின் தந்தை கண்ணனும்! கிருட்டிணசாமி என்னும் இரமேசு பகுதி மக்களுக்குச் சதுரங்கத்திலும் கால்பந்தாட்டத்திலும் பயிற்சி அளித்து வந்த நூலகர். தன் மகனைச் சதுரங்க நாயகனாகவும் மருத்துவராகவும் ஆக்க வேண்டும் என்று கனவு கண்டவர். நூலகராக உள்ளமையால் தகுதித் தேர்வுகளுக்கு மகனை உருவாக்கும் நம்பிக்கை மிகுந்தவர். கண்ணன் பற்றிய விவரம் இன்னும் வரவில்லை. இருப்பினும் என்ன? மகளை மருத்துவமணியாக ஆக்கும் கனவில்தானே முயற்சிகள் மேற்கொண்டிருப்பார். இவர்கள் இறப்பிற்குப்பின் அரசு எவ்வளவு உதவி புரிந்தாலும் இழந்த தந்தையை – அவர்களின் குடும்பத்தலைவரை – மீள அளிக்க இயலுமா? உயிர்ப்பலிக்கு ஆளாகாவிட்டாலும் வெவ்வேறு வகையில் பாதிப்புற்ற பெற்றோரும் மாணவ இளைஞர்களும் மிகுதி யல்லவா?
இவர்களின் துயரத்தைப் போக்கத் தமிழ்நாட்டரசு ஒன்றே ஒன்று செய்தால் போதும்! போனது போகட்டும்! இனியேனும் துணிவுடன் செயல்பட்டு மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்று செயல்பட வேண்டும். மத்திய அரசும் கருநாடக அரசும் உச்சநீதிமன்றத் தீர்ப்பையே மதிக்காமல் செயல்படும் பொழுது தமிழ்நாட்டரசு மட்டும் மத்திய அரசின் ஆணையை அல்லது தொடர்பான உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறாமல் இருந்து மக்களுக்கு ஏன் அநீதி இழைக்க வேண்டும்?
+2 தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் இட ஒதுக்கீட்டு முறையில் மருத்துவக் கல்லூரிக்கான சேர்க்கை முடிவை அறிவிக்க வேண்டும். தகுதித் தேர்விற்கான ஆயத்தம், தேர்வு எழுதப்பட்ட இன்னல்கள்பற்றிக் கவலைப்பட வேண்டா! இனியேனும் நல்லன நடக்கட்டும் என்ற உறுதியுடன் தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் தமிழ்நாட்டரசே மக்களின் விருப்பத்திற்கிணங்கச் செயல்படுவதாக அறிவித்து இதனை நிறைவேற்றட்டும். இதனால் மத்திய அரசால் தொல்லை விளைந்தால் தமிழக மக்கள் இவர்கள் பக்கம் இருப்பார்கள்.
வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்
மற்றைய எல்லாம் பிற. (திருவள்ளுவர், திருக்குறள் 661)
ஆம்! துணிவு தரும் மன உறுதியே சிறந்த செயல் என உணர்க!
திறமையால் ஆட்சியை நிலைக்க வைத்திருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி துணிவாரா? துணிந்து துன்பம் தரும் தேசியத் தகுதி நுழைவுத் தேர்வைத் தூக்கி எறிவாரா?
– இலக்குவனார் திருவள்ளுவன்
No comments:
Post a Comment