பொய்களையே முதலீடு செய்யும்
பாசகவின் வெற்றி மாயை!
பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்தவர்களை நாம் பார்த்திருக்கிறோம். அந்த நிலையையும் தாண்டி எப்பொழுதும் பொய்களையே முதலீடுகளாகக் கொண்டு பொய்வணிகம் புரிந்து மக்களை ஏமாற்றிப் பயனைடந்து வரும் கட்சி ஒன்று உண்டென்றால் அது பாசக ஒன்றுதான்.
அண்மையில் (மே 2018) நடந்துமுடிந்த கருநாடகாவின் சட்டமன்றத் தேர்தலிலும்நாம் இதனைக் கண்கூடாகக் காண முடிகிறது. பாசக பல தோல்விகளைச் சந்தித்தும் மாபெரும் வெற்றியாகப் பொய்ப் பரப்புரை மேற்கொள்கிறது.அதன் ஆதரவுக் கட்சிகளும் நடுநிலையாகத் தெரிவிப்பதுபோல் நடித்து நரேந்திர(மோடி)யின் செல்வாக்கு உயர்ந்துள்ளதாகக் கதை அளக்கின்றன.
அதன் காலடியை முதலில் தழுவிக் குளிர் காய எண்ணும் ஒருவர், தென்மாநிலத்தில் நுழைவுவாயிலான மாபெரும் வெற்றி என்கிறார். தலைமைப் பதவியில் தொடர வேண்டும் அல்லது மாற்று உயர் பதவி வேண்டும் என விரும்பும் தமிழிசை கூறியிருந்தால் அஃது அவரது பிழைப்பு என விட்டு விடலாம். ஆனால், ஆளுங்கட்சியைச் சேர்ந்த – ஆட்சிப்பொறுப்பில் முதன்மை இடத்தில் உள்ள ஒருவர் கூறுகிறார் என்றால் அவரும் மாயையில் மூழ்கிக் கிடக்கிறார் அல்லது மாயையைப் பரப்பிப் பயனடைய விரும்புகிறார் என்றுதானே பொருள்.
பாசகவின் ஆதரவிற்காகக் கருநாடகத் தேர்தலில் யாருக்கு ஆதரவு எனத் தெரிவிக்காமல் பம்மிய, ஆளத் துடிக்கும் மற்றொரு தலைவரோ எண்ணிக்கை முடியும் முன்னரே வாழ்த்தினைக் கொட்டுகிறார். தலைவர்களே மாயையில் சிக்கும் பொழுது எளிய மக்கள் இதில் வீழ்வதில் இயற்கைதானே! இதன் மூலம் நாட்டின் பிற பகுதிகளிலும் குறிப்பாகத் தமிழ்நாட்டிலும் தன்னை வலுப்படுத்த பாசக முயல்கிறது. ஆனால் இம்மாயை நிலைக்காது.
பொய்யை முதலில் பரப்புவதில் நரேந்திரரும் அமீத்தும் வல்லவர்கள். ஆந்திராவில் உள்ள தமிழ்நாட்டுப் பெண்மணியான நிருமலா சீதாராமனைக் கருநாடாகா மகள் என்றார் நரேந்திரர்(மேடி).
படைத்தளபதிகள் கரியப்பா, திம்மையா ஆகியவர்களைப்பற்றிய தவறான தகவல்களை அவரே வெளியிட்டுள்ளார். இதற்கு முன்னராக இந்திராகாந்தி, பெனசீர் பூட்டோ, இராசீவுகாந்திபற்றி நாடாளுமன்றத்திலேயே தவறான தகவல் தெரிவித்தும் கவலைப்படாதவர்கள் எதற்குத்தான் கவலைப்படுவார்கள்? பொய் என்றால் சருக்கரைப் பொங்கலாயிற்றே அவர்களுக்கு!
இப்படியெல்லாம் சொன்னவை பொய்கள் என மெய்ப்பிக்கப்பட்டதும் சிறு வருத்தமாவது தெரிவித்த வரலாறு உண்டா? அறியாமல் சொல்லியிருந்தால் அல்லவா மன்னிப்பு கேட்கவோ வருத்தம் தெரிவிக்கவோ முன்வருவர். தெரிந்தே சொன்ன பொய்களுக்கு வருத்தம் எதற்கு? திரியைக்கொளுத்திப் போடுவதுடன் வேலை முடிந்து விட்டது என அடுத்த பொய்யை அரங்கேற்ற வேண்டியதுதான்.
நாடெங்கும் மக்கள் பணமதிப்பிறக்கத்தால் நடுத் தெருக்களில் நின்று கொண்டு அல்லாடிக் கொண்டிருந்தனர். அப்பொழுது பாசக தலைவர் ஒருவரின் மகள் புதிய பணத்தாள்களால் ஆன பணமாலையைக் கழுத்தில போட்டுக் கொண்டு படம் எடுத்துக் கொண்டார். இவரைப் போல வேறுசில பாசகவினரும் புதிய பணமாலையை அணிந்த செய்தி வந்தது. பணக்கட்டுப்பாடு ஏழை மக்களுக்கு விதிக்கப்பட்ட போதும் பாசக தலைவர்கள் கோடிக்கணக்கில் பணம் செலவழித்து வீட்டுத்திருமணம் போன்ற நிகழ்ச்சிகளை மிகவும் ஆடம்பரமாக நடத்தினர். அவற்றில் குறிப்பிடத்தக்க ஒன்றுதான் கருநாடகாவில் சனார்த்தனன்(இரெட்டி) மகள் திருமணம் 650 கோடி உரூபாயில் நடைபெற்றது.
முந்தைய பாசக அரசின் வருவாய்த்துறைஅமைச்சர் கருணாகரன்(இரெட்டி), சுற்றுலாத்துறை அமைச்சர் சனார்த்தனன்(இரெட்டி), கருநாடகப் பால் கூட்டமைப்பின் தலைவர் சோமசேகரன்(இரெட்டி) ஆகிய பண முதலைகளே இரெட்டி உடன்பிறப்புகள் என அழைக்கப்பெறுகின்றனர்(தமக்கை இராசேசுவரி). பெல்லாரி இரும்புச் சுரங்க 35,000 கோடி உரூ. ஊழல் வழக்கில் சிறைத்தண்டனை பெற்ற சனார்த்தனன்(இரெட்டி), பிணையில் வந்து, குடும்பச் சொத்து 70 கோடி உரூபாய் முடக்கி வைக்கப்பட்ட பொழுதும் உரூ.650 கோடி செலவழித்துத் தன் மகள் திருமணத்தை நடத்தியுள்ளார்.
இரட்டி உடன்பிறப்புகளைப் பிணையில் கொண்டுவர பாசக நாடாளுமன்ற உறுப்பினராய் இருந்த வேட்பாளர் சிரீராமுலு நீதிபதிக்கு 500 கோடி உரூபாய் கொடுத்ததான காணொளி தேர்தலுக்கு முதல்நாள் வெளியாகியது.
ஊழல் முதலைகளைத் தங்கள் பக்கம் சேர்க்கவில்லை என்று கூறிக்கொண்டே இவர்கள் குடும்பத்தினர் 7 பேருக்குச் சட்டமன்றத் தேர்தலில் வாய்ப்பு கொடுத்தது. கருணாகரன், சோமசேகர் ஆகிய உடன்பிறந்தார் மட்டும் குறைந்த வாக்கு வேறுபாட்டில் வெற்றி கண்டுள்ளனர். ஒருவர் (சிரீராமுலு) ஒரு தொகுதியில் தோல்வியையும் மற்றொரு தொகுதியில் வெற்றியையும் தழுவியுள்ளார்.
சன்னா ஃபகிரப்பா என்னும் பாசக நாடாளுமன்ற உறுப்பினர் மகன் முத்து சன்னா ஃபகிரப்பா, ஐவருடன் சேர்ந்து இளம்பெண்ணைத் தாக்கியதாகக் கைது செய்யப்பட்டவர்.
பாசக சட்டமன்ற உறுப்பினர்கள் சட்ட மன்றத்திலேயே காணக்கூடாத காணொளியை அலைபேசியில் பார்த்தவர்கள். இவ்வாறு பல முறைகேடுகளுக்கும் ஒழுக்கக்கேடுகளுக்கும் ஆளான பாசக உத்தமர் வேடம் போட்டும் மக்களின் வெறுப்பிற்குள்ளாகிய நிலைதான் உள்ளது.
காவல் துறையில் சாதாரணக் காவலராக இருந்த செங்கா(இரெட்டி)யின் மக்கள்தான் இவர்கள். ஆனால், இன்றைக்கோ பல்லாயிரம் கோடிக்கு உரிமையானவர்கள். பெல்லாரியின் ஆட்சியாளர்களே இவர்கள்தாம் என்னும்படிச் செல்வச்செருக்கில் திளைக்கின்றனர்.
பாசக தமிழ்நாட்டில் கணிசமான தொகுதிகள் வெற்றி பெற்றால் மாபெரும் வெற்றி எனலாம். ஆனால் ஊழல் முதலைகளைப் போட்டியிடச் செய்து, அதனால் அவர்கள் குடும்பத்தினர் சார்ந்த 15 இடங்களில் வெற்றி பெற முடியும் எனத் திட்டமிட்டு மாபெரும் தோல்விகளைத்தான் இத் தொகுதிகளில் சந்தித்துள்ளது. இஃது எப்படி மாபெரும் வெற்றியாகும்?
29 இடங்களில் 1595, 1915, 1961 என்பனபோன்று குறைந்த வாக்குகளைப் பெற்றுப் பாசகவினர் காப்புத்தொகை இழந்து மண்ணைக் கெளவியுள்ளனர். அறிவுடன் சிந்திப்பவர்கள் இதனை மாபெரும் வெற்றி என்பார்களா?
பாசகவின் முதல்முறை வெற்றி அல்ல இது. 2013 சட்டமன்றத் தேர்தலில் 114 இடங்களில் வென்ற பாசக, அவர்களின் பிதாமகர்கள் பல வாரங்கள் பரப்புரை மேற்கொண்டும் 104 இடங்களைத்தான் பிடித்துள்ளது என்னும் பொழுது தென்னிந்திய நுழைவிற்கான வெற்றி என்றால் பொருந்துமா?
2014 நாடாளுமன்றத் தேர்தலில் 28 தொகுதிகளில் 17 தொகுதிகளில் வென்று 60 விழுக்காடு வாக்குகளைப் பெற்ற பாசக இப்போதைய ச.ம.தேர்தலில் 222 தொகுதிகளில் 104 தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்று 46 விழுக்காடு வாக்குகள் மட்டும் பெற்றுள்ளது எப்படி மாபெரும் வெற்றியாகும்?
வாக்குகள் எண்ணிக்கையில் இந்தியத் தேசியப் பேராயக்(காங்,)கட்சி 38 விழுக்காடு பெற்று முதலிடம் வகிக்கும் பொழுது 36.2 விழுக்காடு வாக்குகள் பெற்ற பாசக எப்படி மாபெரும் வெற்றி என்று வெட்கமின்றிக் கூறுகிறது என்றுதான் தெரியவில்லை
கோவா முதலான பிற மாநிலங்கள் பலவற்றிலும் தனிப் பெரும்பான்மை பெற்ற பிற கட்சிகளை ஒதுக்கிவைத்துவிட்டுக் குறுக்குவழியில் ஆட்சிக்கு வந்த பாசக இப்பொழுது சட்டமன்றத்தில் பெரும்பான்மை எண்ணிக்கை இல்லாத பொழுதும் தனிப் பெரும்பான்மை என்ற முழக்கத்தைக் கையில் எடுத்துக் கொண்டு ஆட்சிப்பீடத்தில அமர நாணம் கொள்ள வில்லையே! முன்முறைகளைப் பின்பற்றிச் சட்டமன்ற பெரும்பான்மை இல்லாத பாசக ஆட்சிஅமைக்க உரிமையில்லை என உச்சநீதிமன்றம் இறுதித்தீர்ப்பை வழங்கலாம். ஆனால், அதற்கான வாய்ப்பு நேராதபடி, பேர வணிகத்தைச் சிறப்பாக முடித்துக்கொண்டு ஆட்சியில் ஒட்டிக் கொள்ள பாசக முயன்று வருகிறது.
பாசக மாநிலங்களில் – காசுமீராக இருக்கட்டும், உ.பி.யாக இருக்கட்டும் – எல்லா மாநிலங்களிலும் பெண்களுக்கும் ஒடுக்கப்பட்டோர்க்கும் உழவர் பெருமக்களுக்கும் மண்ணின் மைந்தர்களுக்கும் எதிரான அவலங்களே நிகழ்கின்றன. ஆனால், பாசக, ஒரே சமயம் – இந்து; ஒரே மொழி – சமற்கிருதமயமாக்கப்பட்ட இந்தி; ஒரே கட்சி – பாசக என்னும் நிலைக்காக முயன்று வருகிறது. தோல்வியை வெற்றியாகக் காட்டும் பாசக தமிழ்நாட்டிலும் நச்சு விதை பரப்ப மேலும் முனைப்பாகப் பணியாற்றும். நாம் விழிப்படைவோமா?
இற்பிறந்தார் கண்அல்லது இல்லை இயல்பாகச்
செப்பமும் நாணும் ஒருங்கு. (திருவள்ளுவர், திருக்குறள் 951)
வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை, அகரமுதல: சித்திரை 30- வைகாசி 05, 2049 – ஏப்பிரல் 16-22, 2018
No comments:
Post a Comment