Friday, January 31, 2025

குறள் கடலில் சில துளிகள் 4. அறிவுரைகளைக் கேட்பனவே செவிகள். பிற துளைகள் – இலக்குவனார்திருவள்ளுவன்

 

குறள் கடலில் சில துளிகள் 4. அறிவுரைகளைக் கேட்பனவே செவிகள். பிற துளைகள் – இலக்குவனார்திருவள்ளுவன்



(குறள் கடலில் சில துளிகள் 3 – இலக்குவனார்திருவள்ளுவன்-தொடர்ச்சி)

கேட்பினும் கேளாத் தகையவே கேள்வியால்

தோட்கப் படாத செவி

 (திருவள்ளுவர்திருக்குறள்அதிகாரம்கேள்விகுறள் எண்: 418)

கேள்விச்செல்வத்திற்கு இடம் தராத காதுகள் ஓசையை மட்டும் கேட்கும் செவிட்டுத்தன்மை உடையனவே என்கிறார் திருவள்ளுவர்.

புறச்செவி உள்ளே நடுச்செவி உள்ளது. இதில் செவிப்பறை குழி உள்ளது. செவியில் அமைந்த இயற்கைத் துளை என்னும் அறிவியல் உண்மைபோல் அதில் நற்பொருள்ள ஒலி அதிர்வுகள் மோதுவதையே தோட்கப்படுதல் என்கிறார் திருவள்ளுவர்.

கேள்வியால் தோட்கப்படாத செவி = கேள்வியால் துளைக்கப்படாத செவி. பொதுவாக யாரும் தொடர்ந்து கேள்வி கேட்டுக்கொண்டே இருந்தால் அல்லது பேசிக்கொண்டே இருந்தால், ஏன் இப்படிக்காதைத் துளைத்தெடுக்கிறாய் என்று இப்பொழுதும் சொல்வதுண்டு. துளை > தொளை என்றாகி அதன் வேர்ச்சொல்லான தொள் > தோள் ஆனது. எனவே, தோள் என்றால் துளை என்றும் பொருள். அறிவார்ந்த செய்திகளால் துளையின் வழியாக உள்ளே செல்லாத – தோட்கப்படாத செவி – என்கிறார். செவி ஓசைகளைக் கேட்கும் புலனாகும். எனினும், கேள்விச்செல்வம் செவிகளில் தோட்கப்படாவிட்டால் அவை பயனற்றன. வெறும் ஓசைகளைமட்டும் கேட்கும் திறன் உள்ள அவை செவிகளல்ல என்கிறார் திருவள்ளுவர்.

காலிங்கர், “சான்றோருழைச் சென்று தாம் கேட்கும் கேள்வியாகின்ற கூரிய கடைகோலான் இரண்டாவது துளையிடப்படாத செவிகள்” என விளக்குகிறார். பரிமேலழகர், “மனத்தின்கண் நூற்பொருள் நுழைதற்கு வழியாக்கலிற் கேள்வியைக் கருவியாக்கியும் கூறினார்” என்கிறார்.

 அறிவுரைகளைக் கேட்கும் பொழுது காதைத் துளைப்பது போன்று துன்பம் தருவதாக இருக்கலாம். எனினும் உயர்ந்த கருத்துகளைக் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும். கற்காதவன் கண்ணில்லாதவன்கேட்காதவன் செவி இல்லாதவன் என்பதே திருக்குறள் நெறி.

Thursday, January 30, 2025

மொழிப்போர் வரலாறு அறிவோம்!-3 : இலக்குவனார் திருவள்ளுவன்

 

மொழிப்போர் வரலாறு அறிவோம்!-3 : இலக்குவனார் திருவள்ளுவன்



(மொழிப்போர் வரலாறு அறிவோம்!-2 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி)

இடைக்காலத்தில் திருஞானசம்பந்தரே ஆரியச் சடங்குகளைத் தவிர்த்துத் தமிழ் மறை ஓதிச்சடங்கு செய்து கொண்டார் அல்லவா? அவ்வாறிருக்க சங்கக்கால இறுதியில் மட்டும் ஆரியச்சடங்குகளைச் செய்திருப்பார்களா?

ஆரிய நான்மறைகளைத் திருஞானசம்பந்தர் ஏற்கவில்லை. “நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தன்” எனப் போற்றப்படுபவர் திருஞானசம்பந்தர். எனவே, ஆரிய மறைகளுக்கு எதிராகத் தமிழ் வேதங்களை ஓதினார் என்று கருதலாம். (சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் நான் மறை நூல்களும் நால் வேதங்களும் தமிழே!, தினச்செய்தி, 05.09.2019)

பாவேந்தர் பாரதிதாசன் மறைமலையடிகளாரின் தமிழ் நான்மறை கருத்தை ஏற்று,

மறையெனப் படுவது தமிழ்நான் மறைநூல்

மற்ற மறைநூல் பின்வந்த குறைநூல்

என்கிறார்.

சைவ சமயத்திலும் சமற்கிருத எதிர்ப்பு, சமற்கிருத ஆதரவு என்ற இரு நிலைப்பாடு உள்ளது.  சைவம் வளர்த்த குரவர்கள், தமிழுக்குத்தான் முதன்மைஅளித்துள்ளனர்.  ஆனால், ஒரு பகுதியினர், சைவம் தமிழ் மதம் அல்ல, வேத நெறியில் இருந்து உருவானது என்று பரப்பி வருகின்றனர். தலைவர்களைத் திராவிடர் இயக்கத்தால் மூளைச் சலவை செய்யப்பட்டவர்கள் என்கிறார்கள் இத்தகையோர்.

“சைவாலயங்களில் சமற்கிருத மந்திரங்களே வேண்டும்.  “தமிழர்ச்சனைக் கலகம்” என்றெலலாம் நூல்கள் எழுதி உள்ளனர். இது குறித்துச் ‘சைவ சமயத்தில் மொழிப்போர்’ என்னும் நூலில் ஆ.ஈசுரமூர்த்திப் பிள்ளை(1897-1971) எழுதியுள்ளார். தமிழ் வழிபாடுகளை வலியுறுத்தும் சைவ நெறித் தலைவர்களைச் சைவசமயத்தை ஆரியமதமாகத் திரிப்போர் கண்டிக்கின்றனர். குன்றக்குடி அடிகளார் போன்ற ஆதீனகர்த்தர்களையும் பழிக்கின்றனர். இத்தகைய போக்கினால்தான் ஆதினகருத்தாக்களில் ஒரு பகுதியினர்  சமற்கிருத ஆதரவாளராக இருக்கின்றனர். இன்றைக்கும் வரைக்கும் தருமபுரம் ஆதினத்தில் உள்ள கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் தமிழ் வழிபாடு இல்லை.

‘அந்தணர்’ என்போர் தமிழரே! ‘மறை’ என்பது தமிழ் மறையே! பின்னர் ஆரியர்கள் இந்நாட்டிற்கு வந்த பின்னர், அவருள் சிறந்தோரையும் அவர் உயர்வெனக் கருதிய நூலையும் ‘அந்தணர்’ என்றும் ‘மறை’ என்றும் அழைத்துக் கொண்டனர். மேலைநாட்டுக் கிறித்துவர்கள் ‘ஐயர்’ என்றும் ‘சாசுதிரி’ என்றும் அழைத்துக் கொண்டனர் அன்றோ?(பேரா.சி.இலக்குவனார், தொல்காப்பிய ஆராய்ச்சி)

பல்லவர் காலத்தில் தமிழினும் சமற்கிருத மொழி உயர்ந்தது என்றும் கடவுளுக்கு அம்மொழியே உகந்தது என்றும் கூறிச் செயற்பட்டோர் உருவாகினர். எனவேதான், அப்பர்,

 தமிழோடு இசை பாடல் மறந்தறியேன்

என்று பாடினார். அவ்வாறு அவர் பாடியதும் மொழிப்போராட்டத்தின் அடையாளமே. மொழிப்போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்றால், தமிழ்நாட்டில் வாழ்வார் தம்மைத் தமிழராகக் கொண்டுதமிழே சிறந்த மொழி என உணர்ந்து இணைந்து வாழ வேண்டும்.

இவ்வாறு சமயத்தில் சமற்கிருதம் புகுந்ததும் இறைநெறியாளர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதுவும் மொழிப்போராட்டம்தான். இந்த மொழிப்போராட்டம் இன்றும் ஓயவில்லைவிரும்புவோர்க்குத் தமிழ்வழிபாடு என்பதும் அலைபேசியில் அழைத்து அருச்சகர்களை வரவழைத்துத் தமிழ் அருச்சனை செய்யலாம் என்பதும் தமிழன்னையை இழிவு படுத்துவதே! தமிழ்நாட்டில் எதற்குத் தமிழ் வழிபாட்டை விருப்ப வழிபாட்டாக மாற்ற வேண்டும்? தமிழ்நாட்டில் தமிழ்வழிபாடு மட்டுமே என்ற நிலை இருந்தால்தான் தமிழர்க்கு அழகு. அந்நிலை வரும் வரை இதற்கான மொழிப்போராட்டமும் தொடரத்தான் செய்யும்.

இசையிலே புகுந்தன தெலுங்கு, கன்னட, சமற்கிருதப்பாடல்கள். மொழித்தொன்மையைப்போன்ற தொன்மையுடையது இசைத்தமிழ். அந்த இசைத்தமிழ் மேடைகளில் புறக்கணிக்கப்பட்டது. தமிழ்ப்பாடல்களைக் கேட்டுக்கேட்டுத் தெலுங்கு முதலிய மொழிகளில் பாடியோர் அவரவர் மொழிப்பகுதிகளுக்குச் சென்றவர் அல்லர். அஃதாவது தமிழ்நாட்டைக் கடந்தவர்கள் அல்லர். தமிழிசையால் கவரப்பட்டுத் தம் மொழிக்கு அவற்றை ஈர்க்க வேண்டும் என்ற மொழிப்பற்றால் பாடினர். ஆனால், நாமோ அப்பாடல்களை எடுத்துக் கொண்டு தமிழ்ப்பாடல்களைத் தூக்கி எறிந்து விட்டோம். சீர்காழி மூவர் தமிழிசைக்கு மீளேற்றம் கொடுத்ததும் மொழிப்போராட்டம்தான்.

எனினும் மேடைகளில் தமிழ்ப்பாட்டிற்கு  இடமில்லை. அப்படி இடம் பெறும் இடங்களிலும் கடைசியாகத் ‘துக்கடா’ என்ற பெயரில் இடம் பெறும்.

இதுகுறித்துப் புரட்சிக்கவிஞர் பாரதியார், தோல்காது உள்ள தேசங்களில் இந்தத் துன்பத்தைப் பொறுத்துக் கொண்டிருக்கமாட்டார்கள் என்றும் இரும்புக்காதுகள் நமக்கு உள்ளதால்தான் நாம் பொறுத்துக் கொண்டிருப்பதாகவும்  அன்றே கவலைப்பட்டார். பாரதி பெயரால் தமிழ் வளர்ப்போர்கள் இனியும் பொறுக்கலாமா?   “பாடுகிறவர்கள் தமிழர்கள்; கேட்பவர்களும் தமிழர்கள்; ஆனால், தமிழ்ப்பாட்டுமட்டும் பாடுவது கிடையாது. என்ன வெட்கக்ககேடு! எவ்வளவுகாலம் தமிழர்கள் இதனைச் சகித்துக் கொண்டிருக்கப் போகிறார்கள்” என அன்றே கேட்டார் அறிஞர் வெ.சாமிநாதசர்மா. இன்னும் நாம் பொறுமை காக்கின்றோமே! பிடில் சீனிவாசையர், “தமிழிசைதான்  தென்னிந்தியாவின் இசை. அது சூரியனைப் போன்றது. மற்ற இசைகளுக்கும் மற்ற மொழிகளுக்கும் இடம் கொடுக்கும் பண்பு தமிழிசைக்குஉண்டு. அதனாலேயே தமிழிசை கேடுற்றது. பயிரைக் கெடுக்கவந்த களைகளைப் பிடுங்கி எறிய வேண்டுமா? அவற்றோடு உறவு கொண்டாட வேண்டுமா?” என வேதனையில் வெடித்தாரே! நாம் தொடர்ந்து எத்தனை காலம்தான் களைகளை வளர்த்துத் தமிழ்ப்பயிரை அழித்துக் கொண்டிருக்கப் போகிறோம்?

தமிழைப் புறக்கணிக்கின்றவர்களுக்குத் தமிழ்நாட்டில் இடம் இல்லை என்ற நிலை என்று உருவாகும்? யாரால் உருவாகும்? நாம் நினைத்தால் அந்த நிலை இன்றே உருவாகும். அது  நம்மால்தான் உருவாக வேண்டும்! எனவே, முதலில் நாம் இந்த நிகழ்ச்சியைப் புறக்கணிக்க வேண்டும். ஆனால், நாம் இந்த நிகழ்ச்சியை மட்டும்புறக்கணித்தால் தமிழ்த்தாய் மகிழ மாட்டாள். (தமிழிசை வாழ்கிறதா? வீழ்கிறதா?-3, இலக்குவனார் திருவள்ளுவன், அகரமுதல மின்னிதழ்,29.12.2013)

  தமிழ்க்கடலில் நஞ்சு கலக்கும் இசை நிகழ்ச்சியை நடத்துபவர்கள், பங்கேற்பவர்கள், விளம்பரதாரர்கள், என அனைத்துத் தரப்பாரின் பிற நிகழ்ச்சிகளையும் அவர்கள் தொடர்பான பொருள்களையும் நாம் புறக்கணிக்கவேண்டும்.

தமிழ்ப்பாட்டு பாடு

தமிழ்ப்பாட்டிற்கு ஆடு

இல்லையேல் ஓடு

என்பதை நாம் ஒவ்வொருவருக்கும் உணர்த்த வேண்டும்ஊர்கள் தோறும் நஞ்சாறு ஓடும்முன் நாம் சென்னையிலேயே அதனைத் தடுத்து நிறுத்த வேண்டும்.

உலக இசைகளி்ல் எல்லாம் தொன்மையும் நுண்மையும் மிக்கத் தமிழிசையைக் காக்கவேண்டும் எனில் காவலுக்கு இடையூறு தருபவர்களை இடறி விழச் செய்ய வேண்டும்.(சென்னையில் திருவையாறு – தமிழ்க்கடலில் கலக்கும் நஞ்சாறு : இலக்குவனார் திருவள்ளுவன், அகரமுதல).

 இன்றைக்குச் சென்னையில் திருவையாறு என்பதுபோல், கோவையில் திருவையாறு எனப் பிற ஊர்களிலும் தமிழிசைக்கு எதிரான இசையரங்குகள் நிகழ்கின்றன. இவர்கள் ஆந்திராவில் திருவையாறு எனக் கொண்டாடுவதுதானே?

இவ்வாறு காலங்காலமாக நம் மொழியில்,இலக்கியத்தில், இசையில், கலையில், பண்பாட்டில்  ஆரிய ஊடுருல் வரும் பொழுதெல்லாம் மக்கள் எதிர்ப்பு வந்துகொண்டுதான் உள்ளது. இவற்றையெல்லாம் முற்றிலும் ஒழிக்கும் வரை நமக்கு விடிவு இல்லை என்பதை உணர்ந்து இப்பொழுதாவது நாம் விழித்தெழ வேண்டும். பிற மொழிகளின் ஆதிக்கம் எந்த வகையிலும் நம் மீது ஏற்படாத வண்ணம் முனைப்புடன் செயலாற்றி முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

Wednesday, January 29, 2025

குறள் கடலில் சில துளிகள் 3 – இலக்குவனார்திருவள்ளுவன்

 

குறள் கடலில் சில துளிகள் 3 – இலக்குவனார்திருவள்ளுவன்



(குறள் கடலில் சில துளிகள் 2 – இலக்குவனார்திருவள்ளுவன்-தொடர்ச்சி)

பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லார் இழைத்துணர்ந்து

ஈண்டிய கேள்வி யவர்

(திருவள்ளுவர்திருக்குறள்அதிகாரம்கேள்விகுறள் எண்: 417)

நுட்பமாக ஆராய்ந்து மிகுதியான கேள்விச்செல்வம் பெற்றவர்கள் தவறாக உணரந்தாலும் அறியாமையானவற்றைச் சொல்ல மாட்டார்கள் என்கிறார் திருவள்ளுவர்.

உளவியலறிஞர்கள். கவனித்துக் கேட்டல் அறிவாற்றலையும் ஒழுக்க நடத்தையையும் உள்ளடக்கியது. ஆதலின் அறியாமையை வெளிப்படுத்த மாட்டார்கள் என்கின்றனர்.

காலிங்கர், “ ‘பிழைத்தும்-உணர்ந்தும்’ எனப் பிரித்துத் ‘தப்பியும்’ ‘குறிக்கொண்டும்’ என்று இரண்டாக்கினார். இது கேள்விச் செல்வம் உடையோர் அறியாமலோ அறிந்தோ இவ்விருவகையானும் அறிவற்ற பேச்சு பேசார் என்ற பொருள் தரும்.” என விளக்குகிறார்.

பரிமேலழகர், இழைத்துணர்ந்து என்பதற்குப்  “பொருள்களைத் தாமும் நுண்ணியதாக ஆராய்ந்தறிந்து அதன்மேலும் ஈண்டிய கேள்வியினை உடையார்; ஈண்டுதல்- பலவாற்றான் வந்து நிறைதல்”  என்கிறார்.

பிழைத்து உணர்ந்து என்று சொல்லாமல் உம்மைச் சேர்த்துப் பிழைத்து உணர்ந்தும்  என்று சொல்வதால், நன்கு ஆராய்ந்து கற்போர், தவறாக உணரமாட்டார். ஒருவேளை உணர்ந்தாலும் அதனைப் பிறருக்குச் சொல்ல மாட்டார்  என்பதைத் திருவள்ளுவர் உணர்த்துகிறார்.

ஒன்றைப் படிக்கும் பொழுது சொல்லப்பட்ட முறையாலோ புரிதலில் இடர்ப்பாடு ஏற்பட்டாலோ பிழையாகப் புரிந்து கொள்ள நேரிடும். கற்றதில் தவறு நேர்ந்தது என உணர்ந்தவரகள் உடன் தன் அறியாமையைப் பிறருக்குப் புலப்படுத்த மாட்டார். கேள்விச் செல்வத்தால் அறியாமையை அகற்றிக் கொள்வார். கேட்பதிலும் தவறானவை இடம் பெறலாம். எனவேதான் நிறைந்த கேள்வி என்கிறார் திருவள்ளுவர். எனவே, நுட்பமாக ஆராய்ந்து கற்றவர்கள் தங்கள் அறியாமையைப் புலப்படுத்தாமல், கேள்விச்செல்வத்தால் அவற்றைப் போக்கிக் கொள்வர். எனவே,  கற்பதில் ஏற்படும் ஐயங்களைப் போக்கவல்லது கேள்விச்செல்வமே!

தவறானவற்றைப் பிறருக்குச் சொல்லாமல், கேள்விச்செல்வத்தால் அவற்றைப் போக்கு!

Tuesday, January 28, 2025

மொழிப்போர் வரலாறு அறிவோம்!-2 : இலக்குவனார் திருவள்ளுவன்

 

மொழிப்போர் வரலாறு அறிவோம்!-2 : இலக்குவனார் திருவள்ளுவன்



(மொழிப்போர் வரலாறு அறிவோம்!-1 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி)

எப்போதுமே தனித் தமிழ் என்று சொன்னாலே, பிராமண எதிர்ப்பாகவும், இறை மறுப்பாகவும் கருதி எதிர்க்கருத்துகளைக் கூறுவோர் உளர். தன்மானம், தன்மதிப்பு முதலியவை பற்றிப் பேசும் திராவிட இயக்கத்தார் தமிழுக்கும் குரல் கொடுப்பதால் அவ்வாறு தவறான கருதுகையும் பரப்புரையும் நேர்ந்துள்ளன. உண்மையில் காலங்காலமாக இறை ஏற்பாளர்களும் தமிழுக்குக் குரல் கொடுத்தே வந்துள்ளனர். இறைநெறி இலக்கியக் காலங்களிலும் திருமுறைப் புலவர்களும் பிறரும் தமிழை உயர்த்தியே கூறி வந்துள்ளனர்.

இறைவழிபாட்டில் சமற்கிருதம் புகுந்து பரவத் தொடங்கியதால் அதற்கு எதிர்ப்பாக,

என்னை நன்றாக இறைவன் படைத்தனன்

தன்னை நன்றாகத் தமிழ்ச் செய்யு மாறே (திருமந்திரம் 81)

 எனத் திருமூலர், என்னை நன்றாக இறைவன் படைத்தது, தன்னை நன்றாகத் தமிழில் போற்றவே என்கிறார்.

இறைவன் கட்டளைக்கிணங்கத் தமிழில் பாடிய சுந்தரர்

சுந்தரமூர்த்தி நாயனார் செந்தமிழ்ப்பாட்டுக்குப் பேரானந்தப் பேரருள் அளித்தருளும் பேராற்றல் உண்டு என்பதைத் தேனமுதத் திருப்பாட்டு என்னும் தொடர் மூலம் வள்ளலார் விளக்குகிறார்.,

தேன்படிக்கும் அமுதாம் உன்

திருப்பாட்டைத் தினந்தோறும் நான்படிக்கும் போ(துஎன்னை

நான்மறந்தேன் நாவொன்றோ ? ஊன்படிக்கும் உளம்படிக்கும்

உயிர்படிக்கும் உயிர்க்குயிரும் தான்படிக்கும் அனுபவங்காண்

தனிக்கருணைப் பெருந்தகையே.’

என்கிறார் அவர்.

சுந்தரமூர்த்தி நாயனார் இறைவன் கட்டளைக்கிணங்கப் பாடினார் என்பர். அவர், இறைவனே அவரைத் தமிழில் பாடுமாறு சொன்னதாகக் குறிப்பிடுகிறார்.

மண்மேல் நம்மைச்

சொற்றமிழ் பாடு கென்றார்

தூமறை பாடும் வாயார்

நான்மறை தமிழ்மறையே

இங்கே தூமறை என்பதன் நோக்ம் என்ன? தமிழில் தமிழ் மரபு போற்றும் மறைகளும் வேதங்களும் இருந்தன. பின்னர் வந்த ஆரியர் இதே பெயர்களிலேயே நூல்களை இயற்றினர். அவை நல்லன அல்ல. எனவே, தமிழின் உயர்வைக் குறிப்பிடத்  தூ மறை (தூய மறை) என்கிறார்.

நான்மறை என்பது முந்தைய தமிழ்மறையே!” எனத்தமிழ்க்கடல் மறைமலையடிகள்தமிழ்ப்போராளி பேரா.சி.இலக்குவனார் முதலிய அறிஞர்கள் பலரும் கூறியுள்ளனர்.

தமிழில் தமிழர்களால் படைக்கப்பட்ட தமிழ் மறை நூல்கள் தொல்காப்பியர் காலத்திற்கு முற்பட்டே இருந்துள்ளனஅதுபோல் தமிழர்களால் தமிழில் படைக்கப்பட்ட தமிழ் வேதங்களும் ஆரிய வேதங்களுக்கு முன்னரே தமிழில் இருந்துள்ளனசங்க இலக்கியங்கள் இவற்றைக் குறிப்பிட்டுள்ளனதமிழ்நாட்டிற்கு வந்த ஆரியர் தமிழில் சிறப்பாக உள்ள மாந்தரையும் நூல்களையும் பிறவற்றையும் குறிக்கும் தமிழ்ச்சொற்களைத் தாங்கள் உள்வாங்கிக் கொண்டு தமதுபோல் பயன்படுத்தினர்தமிழின் முந்தைய வரலாற்று நூல்கள் கடல்கோள்பட்டும் பிற வகைகளிலும் அழிந்தமையால் தமிழ் மறைகளையும் தமிழ் வேதங்களையும் குறிப்பிடும் இடங்களை ஆரியமாக எண்ணித் தவறு செய்துவிட்டனர்.

புரையில்

நற்பனுவல் நால் வேதம்

என்கிறார் புறநானூற்றுப் புலவர் நெட்டிமையார்(பாடல் 15). குற்றமற்ற நல்லறநெறியாகிய நால் வேதம் என உரையாளர்கள் விளக்குகின்றனர்.

குற்றமற்ற அறவழிப்பட்ட வேதம் எனக் கூறுவது ஏன்ஆரிய வேதம் அறிமுகமான காலக்கட்டம் அதுதமிழ் வேதங்கள் அறநெறிகளை மட்டுமே உணர்த்துவனஆரிய வேதங்கள் அவ்வாறல்லசான்றாக அதர்வண வேதம் நல்ல மந்திரங்களை உடையதாக இல்லை என்று கருதுவதைக் குறிக்கலாம்.  “அதர்வம்வேள்வி முதலிய ஒழுக்கம் கூறாது பெரும்பான்மையும் உயிர்கட்கு ஆக்கமேயன்றிக் கேடும் சூழும் மந்திரங்களும் பயிறலின் என நச்சினார்க்கினியர் (தொல்காப்பியம்பொருளதிகாரம்புறத்திணை யியல்நூற்பா 20, உரைகூறியுள்ளமை இதனை உறுதி செய்கிறதுஆரிய வேதங்கள் குற்றமுடையனஅவ்வாறு தமிழ் மறைகளை எண்ணக்கூடாது என்பதற்காகத்தான் ‘புரைதீர் நற்பனுவல் என்கிறார் புலவர். (சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் நான் மறை நூல்களும் நால் வேதங்களும் தமிழே!, தினச்செய்தி, 05.09.2019)

     “ மந்திரங்கள் மொழிந்தவர்க்கு மதுர வாக்கால்

      பொரு இறப்ப ஓதினார் புகலிவந்த

      புண்ணியனார் எண்ணிறந்த புனித வேதம்

என்பதுதான் அப்பாடல்.

இங்கே நாம் சமற்கிருதம் குறித்த தவறான செய்திகள் குறித்தும் பார்ப்போம். சமற்கிருதம செம்மொழியல்ல, நல்லொழுக்கங்களைப் போதிக்கும் இலக்கியங்களை உடையது அல்ல, எனச் சமற்கிருத நூலாசிரியர்களே தெரிவித்துள்ளனர். நம்மில் பலர், அறியாமையின் காரணமாக, “சமற்கிருதம் 2000 ஆண்டுகளாக நம்மை ஆட்சிசெலுத்தி வருகிறது. சமற்கிருதம் தமிழ்நாட்டில் ஆட்சி மொழியாக இருந்தது. சமற்கிருதப் பள்ளிகள் தமிழ்நாட்டில் இருந்தன” என்றெல்லாம் தவறாகக் கூறி வருகின்றனர்.

பேச்சுமொழியாக இல்லாத சமற்கிருதம் எங்ஙனம் ஆட்சிமொழியாக இருந்திருக்க முடியும். அறிஞர்கள் பலர் கூறியுள்ளதுபோல், தமிழ்நாட்டில் ஒரு போதும் சமற்கிருதம் ஆட்சிமொழியாக இருந்ததல்லை. பிராமணர்களுக்குச் சடங்குகளுக்காகச் சமற்கிருதம் கற்பிக்கப்பட்டதே தவிர, மக்களுக்கான சமற்கிருதப் பள்ளிகளும் இருந்ததில்லை.

2000 ஆண்டுகளாகச்சமற்கித வழிபாடு இருந்ததாகக் கூறி வருவதும் தவறே.  இடைக்காலத்தில்தான் இரிக்கு ஓதும் மறையவர்க்கு ஓர் இளங்கோயில் என ஒரே ஒரு கோயிலில் சமற்கிருத வழிபாடு பிராமணர்களுக்காக நடைமுறையில் கொண்டுவரப்பட்டது.

திருமணத்தில் ஆரிய முறையும் பிற்பட்ட காலத்தல்தான் வந்துள்ளது.”மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிட” என இளங்கோ அடிகள் கூறுவது சமற்கிருதத் திருமண முறையல்ல. ஆரிய வழிபாடுமுறைகளுக்கான எதிர்ப்பைத் தேவந்தியிடம் கண்ணகி வாயிலாகக்காட்டுகிறார் இளங்கோ அடிகள். இது வேள்வி முறைத் திருமணமும் அல்ல.

ஆரியரின் வேள்வி என்பது நெய் முதலிய உணவுப்பொருள்கள் மட்டுமல்ல, மான் முதலிய உயிரினங்களையும் போடும் உயிர்க்கொலை செயல். விலங்கினங்கள், பறவையினங்கள் மட்டுமல்ல, மனிதர்களையும் குறிப்பாகக் பெண்களையும் வேள்வித்தீயில் இடும் கொடுஞ்செயலே வேள்வி.  ஆரியர்களால் போற்றப்பட்ட அம்பிகை, அம்பாலிகை, காந்தாரி, குந்தி, பாஞ்சாலி ஆகிய பெண்களும் வேள்வித் தீயில் போடப்பட்டு உயிர்ப்பலி யாக்கப்பட்டவர்கள்.(புகழ் பெற்ற இதிகாசப் பெண்மணிகள் ஐவர், பாரதி புத்தகாலயா வெளியீடு).  உயிர்க்கொலைக்கு எதிரான கோவலன் குலத்தினர் இத்தகைய வேள்வித்தீயை வளர்த்திருப்பார்களா? தீ என்பது அழிக்கபுவம் ஆக்கவும் வல்லது. தீயைப்போல் நம்மிடம் உள்ள தீய எண்ணங்கள்,தீய பண்புகள் ஆகியவற்றை அழிக்கவும் நல்லெண்ணங்கள், நற்பண்புகள் ஆகியவற்றை வளர்த்து ஆக்கவும் தீயை ஒரு குறியீடாகக் கொண்டு வலம் வந்திருப்பர். இதில் குறிப்பிட்டுள்ள மாமுது பார்ப்பான் பிராமணர் அல்லர். தமிழரே. இப்பொழுதும் சில வகுப்பாரிடையே தங்கள் வகுப்பில் உள்ள மூத்தவரைக் கொண்டு திருமணம் செய்விப்பது வழக்கமாக உள்ளது.அதுபோன்ற வழக்கம்தான்.

Followers

Blog Archive