Showing posts with label ஆங்கில ஏ வரிசை. Show all posts
Showing posts with label ஆங்கில ஏ வரிசை. Show all posts

Monday, November 17, 2025

சட்டச் சொற்கள் விளக்கம் 1021-1025 : இலக்குவனார் திருவள்ளுவன்



(சட்டச் சொற்கள் விளக்கம் 1016-1020 : தொடர்ச்சி)

1021. Auxiliary force       துணைப்படை

துணைப் படையினர் என்பது படைத்துறை அல்லது காவல்துறைக்கு உதவும் துணைப் பணியாளர்கள். ஆனால் வழக்கமான படைகளிலிருந்து மாறுபட்டு ஒழுங்கமைக்கப்பட்டவர்கள்.

துணைப் படையினர் என்பது ஆதரவான செயற்பாடுகளை மேற்கொள்ளும் அல்லது கோட்டைக் காவற்படை  போன்ற சில கடமைகளைச் செய்யும் படைசார் தன்னார்வலர்களாக இருக்கலாம்.

ஒரு துணைப் படை வழக்கமான வீரர்களைப் போலவே பயிற்சி அல்லது தரவரிசை அமைப்பைக் கொண்டிருக்க வேண்டிய தேவையில்லை. மேலும் அஃது ஒரு சண்டைப் படையில் ஒருங்கிணைக்கப்படலாம் அல்லது ஒருங்கிணைக்கப்படாமலும் இருக்கலாம். இருப்பினும், சில துணைப் படைகள் முன்னாள் படைஞர்கள், போராளிகள் ஆகியவற்றைக் கொண்டிருக்கும். எனவே, சிறந்த பயிற்சி, போர்ப் பட்டறிவைக் கொண்டுள்ளன.

ஒரு நாட்டில் நடைபெறும் போரின்பொழுது அந்நாட்டிற்குத் துணையாக வரும் பிற நேச நாட்டுப்படைகளும் துணைப்படைகளாகும்.

Auxilia என்னும் இலத்தீன் சொல்லில் இருந்து Auxiliary உருவானது. இஃது உரோமானியப் பேரரசின் பகுதியாகச் செயற்படும் வகையில் அமைக்கப்பட்ட காலாட்படை, குதிரைப்படையைக் குறிக்க முதலில் பயன்படுத்தப்பெற்றது. 
 1022. Auxiliary home                 துணை இல்லம்‌

துணை இல்லம் என்பது உட்புறக் குடியிருப்பு அல்லது இணைப்புக் குடியிருப்பாகும்.
 1023. Avail          பயன்படுத்திக்‌ கொள்‌

நல் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளல்  
நன்மை பயக்கு

சொத்து விற்பனை வருமானம் அல்லது காப்பீட்டுக் கொள்கை வருமானத்தினால் அடையும் ஆதாயம் அல்லது பயனையும் குறிக்கும்.
1024. Available              கிடைக்கத்தக்க

சட்டத்தில்,

கிடைக்கத்தக்க’ என்பது பொதுவாகச் சூழலைப் பொறுத்து, அணுகக்கூடியது, பெறக்கூடியது அல்லது பயன்படுத்த ஆயத்தமாக உள்ளது என்பதைக் குறிக்கிறது. எடுத்துக்காட்டாகத் தத்தெடுப்பதற்கான குழந்தையின் சட்டப்பூர்வக் கிடைக்கும் தன்மை, விற்பனை அல்லது காப்பீட்டுத் திட்டத்திலிருந்து ‘கிடைக்கும் வருமானம், சட்டப்பூர்வமாகப் பயன்படுத்தக்கூடிய ஒரு வளத்தின் கிடைக்கும் தன்மை, அல்லது தகவல் அல்லது சேவைக்கான செயல்பாட்டு மற்றும் நம்பகமான அணுகல்.
இது கிடைக்கக்கூடிய வழிமுறைகளில் கைப்பணமாக மாற்றக்கூடிய பணம் அல்லது சொத்துக்களையும் குறிக்கலாம்.
 1025. Available for the reception      ஏற்புமைக்கான கிடைப்புத் தன்மை

reception என்பது பொதுவாக வரவேற்பு என்னும் பொருளில் குறிக்கப்பெறுகிறது. எனினும் சட்டத்தில் ஏற்றுக்கொள்கை, ஏற்புத்தன்மை > ஏற்புமை என்னும் பொருள்களில் குறிக்கப் பெறுகிறது.

சட்டக் கோட்பாட்டில், ஏற்புமை என்பது முதன்மையாக, மற்றொரு பகுதி அல்லது மற்றொரு காலக்கட்டத்தின் வேறுபட்டசட்ட ஒழுகலாற்றின் சட்டத் தோற்றப்பாட்டை(phenomenon) அல்லது  சட்ட நிகழ்வை ஒரு புதிய சட்டச் சூழலுக்கு மாற்றுவதாக வரையறுக்கப்படுகிறது

Monday, October 27, 2025

சட்டச் சொற்கள் விளக்கம் 1016-1020 : இலக்குவனார் திருவள்ளுவன்



(சட்டச் சொற்கள் விளக்கம் 1011-1015 : தொடர்ச்சி)

1016. Autrefois acquitமுன்னரே விடுவிக்கப்பட்டடவர்.
முன்பே குற்றமற்றவர் என விடுதலை செய்யப்பெற்றவர்.

autrefois என்பது “முன்னர்” அல்லது “மற்றொரு நேரத்தில்” என்று பொருள்படும் ஒரு பிரெஞ்சுச் சொல்லாகும்.
autre = மற்றொரு +‎ fois = நேரம்

எதிர்வாதி முன்னரே விடுவிக்கப்பட்ட அதே குற்றத்திற்காக மீண்டும் உசாவப்படுவதிலிருந்தோ குற்றம் சாட்டப்படுவதிலிருந்தோ தடுப்பதற்கு உதவும் நிலை.

முன்விடுதலை (Pre release) என்றால் ஒரு குற்றத்திற்காகத் தண்டிக்கப்பெற்று அத்  தண்டனைக் காலத்திற்கு முன்பே விடுதலை செய்யப்படுவது எனப் பொருளாகும். எனவே, Autrefois acquit என்பதை முன் விடுதலை என்று சொல்லக் கூடாது. அகராதியைப்பார்த்து நான் முன்னர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளதும் தவறாகும்.  

இந்தியக் குற்றவழக்கு நடைமுறைச் சட்டத்தொகுப்பு(CrPC) பிரிவு 300, இரட்டை இடர்()கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டது. இதனை விளக்குவதே இத் தொடர்.
 1017. Autrefois acquit – plea of    முன்னரே விடுவிக்கப்பட்டவர் என்னும் வாதம் 

விடுவிக்கப்பட்ட குற்றச்சாட்டின் மீது மீண்டும் குற்றம் சாட்டக்கூடாது என்பதற்கான வாதுரை.

காண்க:  Autrefois acquit
 1018. Autrefois convict        முன்னரே தண்டிக்கப்பட்டவர்

எதிர்வாதி முன்னரே தண்டிக்கப்பட்ட அதே குற்றத்திற்காக மீண்டும் உசாவப்படுவதிலிருந்தோ குற்றம் சாட்டப் படுவதிலிருந்தோ தடுத்தல்.

ஒரு குற்றச் செயலுக்காகத் தண்டிக்கப்பட்டவர் அதே குற்றத்திற்காக மீண்டும் தண்டிக்கப்படக்கூடாது என்றும் இயற்கை நீதி.

காண்க:  Autrefois acquit
1019. Autrefois convict -plea ofமுன்னரே தண்டிக்கப்பட்டவர் என்னும்  வாதம்‌

முன்னரே தண்டிக்கப்பட்ட குற்றச் செயலுக்காக மீண்டும் தண்டிக்கக்கூடாது என்பதற்கான வாதுரை.

முந்தைய தண்டனை வாதம் என அகராதிகளில் குறிக்கப்பெற்றுள்ளது பொருந்தாது. முந்தைய தணடனை குறித்த வாதம் அல்ல. முந்தைய தண்டனைச் செயலுக்காக மீண்டும் தண்டிக்கப்படக் கூடாது என்னும் வாதம்.

காண்க: Autrefois convict
1020. Auxiliary    துணைமை

எனினும், துணைவர் துணைப்படைவீரர் துணைவினை(இலக்கணம்) துணையான
உடனுதவியான
உதவியாளரான
துணைக்கருவி
எனப் பல பொருள்களில் குறிக்கப்படுகிறது.

துணைமையர்(Auxiliary Person) என்பது தொடர்புடைய பணியாளர் அல்லது அதற்கு இணையானவருக்காக அல்லது துணை ஒப்பந்தக்காரர் அல்லது ஒப்பந்தரின் பணியாளர் அல்லது அதற்கு இணையானவருக்காக அல்லது அவரின் அதிகாரி, சார்பாளர், அறிவுரைஞரருக்காக நேரடியாகவோ மறைமுகமாகவோ பணியாற்றுநரைக் குறிக்கிறது.

Followers

Blog Archive