எத்தனை ஆண்டுகள் பிறந்தால் என்ன?

இலக்குவனார் திருவள்ளுவன்

எத்தனை ஆண்டுகள் பிறந்தால் என்ன? எள்ளத்தனைத் துயரமும் முடியவில்லை. ஆண்டுகள் முடிந்தாலும் துயரங்களுக்கு முடிவில்லையே! பல நாடுகளில் போர்கள். அதனால் வேறுபல நாடுகளிலும் போர்களால் பாதிப்புகள். உலகெங்கும் போர் அச்சுறுத்தல்கள். “கெட்டபோரிடும் உலகை வேரொடு சாய்ப்போம்” என்னும் பாவேந்தர் பாரதிதாசன் குரல்போல் பலரும் குரல் எழுப்பத்தான் செய்கின்றனர். ஆனால் போர்களுக்கு முடிவில்லையே!

அணுக்குண்டுகளின் அழிவுகளைப் பார்த்த பின்னும் அணுக்குண்டுகள் பயன்படுத்தப்படுகின்றனவே! போர்களில் குழந்தைகள், சிறுவர்கள், இளைஞர்கள், பெண்கள், முதியோர் என எல்லாத் தரப்பு மக்களும் கொல்லப்படுகின்றனரே! பிற உயிரினங்களும் அழிக்கப்படுகின்றனவே! நாடுகளின் வளங்களும் சிதைக்கப்படுகின்றனவே! போர்கள் புத்தாண்டிலும் தொடரும் பொழுது அதனை வரவேற்றுப் பயன் என்ன?

உலகின் ஒரு பகுதியில் மக்கள் வறுமையால் நாளும் மடிகின்ற பொழுது மற்றொரு பகுதி மக்கள் ஆடம்பரத்தில் திளைக்கும் சமநிலையற்ற நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்காத சூழலில் புத்தாண்டை வரவேற்கலாமா? எல்லார்க்கும் எல்லாம் என்னும் நிலை வராத பொழுது புத்தாண்டு வந்தால்தான் என்ன பயன்?

பல நாடுகளில் புலம்பெயர் மக்கள் விரட்டியடுக்கப் படுகின்றனர். புலம்பெயர் மக்களை வரவேற்று வாழ்வளித்த கனடாவிலேயே இந்த நிலை என்னும் பொழுது, இதனால் பெரிதும் பாதிப்புறுவோர் தமிழர்களாக இருக்கும் பொழுது வாட்டுகின்ற வருத்தத்தைப் போக்குகின்ற நிலை வராமல் புத்தாண்டு வந்து என்ன பயன்? ஈழத்தில் நடைபெற்ற தமிழினப் படுகொலை வேறு வடிவுகளில் தொடரும் பொழுது அவற்றை முறியடிக்க வேண்டிய நிலையில் உள்ளவர்கள் ஊக்கப்படுத்துகின்றனர். நாமோ வேடிக்கை பார்த்துக் கொண்டுள்ளோம். இந்நிலைக்கு இறுதி வராத பொழுது ஆண்டு இறுதி வந்து புதிய ஆண்டு தொடங்குவதில் என்ன மகிழ்ச்சி உள்ளது?

உலக மக்கள் தொகையில் தமிழ் மக்கள் தொகை குறைவாகவே காட்டப்படுகிறது. உண்மைக் கணக்கை யறிந்து நாம் விழிப்புணர்வு பெறாத பொழுது புத்தாண்டு கண்டு மகிழ என்ன உள்ளது?

தமிழ்நாட்டிலும் பிற நாடுகளிலும் உள்ள தமிழர்கள் தமிழறியாத் தமிழர்களாகப் பெருகிக் கொண்டே இருக்கும் பொழுது புத்தாண்டு வாழ்த்துகளைப் பரிமாறிக் கொள்வதில் என்ன பயன்?

 நாடுகளுக்கிடையேதான் போர் என்றால் நாடுகளுக்குள்ளேயும் போர். இன, மத, சாதி, ஊர், பிரிவினை முதலிய சண்டைகள்,  -கலவரங்கள்.  

தமிழ்நாட்டில் இக்கலவரங்களுடன் மொழிக் கொலைஞர்களும் உலாவந்து அரசோச்சுகின்றனரே! பேச்சிலும் தமிழ்க் கொலை! எழுத்திலும் தமிழ்க்கொலை! படிப்பிலும் தமிழ்க்கொலை! படைப்பிலும் தமிழ்க்கொலை! முத்தமிழால் புகழ் பெற்ற தமிழில் இயலிலும் தமிழ் இல்லை! இசையிலும் தமிழைத் தொலைத்து விட்டனர்! நாடகத்திலும் தமிழைச் சிதைத்து விட்டனர்! வழிபாடுகளில் கேட்டால்தான் தமிழ் என்ற பொய்க்கோலம். தமிழ்நாட்டில் இசை என்றால் தமிழிசைதான் என்றில்லாமல் தமிழிசையும் பாடப்படலாம் என்ற சூழலே மேலோங்கியுள்ளதில் மாற்றமில்லை. மாற்றமில்லாச் சூழல் மாறாத பொழுது மாறிவரும் ஆண்டிற்கு வாழ்த்துப் பா இசைத்து என்ன பயன்?

“எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்!” என்பது தமிழ் வளர்ச்சித்துறையின் முழக்கமாக உள்ளது. ஆனால், “எண்ணுவோம் ஆங்கிலத்தில்! எழுதுவோம் ஆங்கிலத்தில்!” என்பது பிற துறைகளின் செயற்பாடாக உள்ளது. இவர்களைத் தட்டி வீழ்த்த வேண்டிய தமிழ்நாடு அரசு, தமிழ் வளர்ச்சிப் பணிகளில் ஆர்வம் காட்டிக் கொண்டே இவர்களைத் தட்டிக் கொடுத்து ஊக்கப்படுத்துகிறது.

ஆண்டுகள் மாறினாலும் இந்த நிலையில் மாற்றமில்லை என்னும் பொழுது வருகின்ற ஆண்டை வரவேற்றுப் பயன் என்ன?

தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்.   (திருவள்ளுவர், திருக்குற௨௱௨ – 202)

வருத்தத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்

நடைமுறைப் புத்தாண்டுச் சிந்தனைகள்

இதழுரை, அகரமுதல

மார்கழி 17, 2055 / 01.01.2025