Showing posts with label கலைஞர். Show all posts
Showing posts with label கலைஞர். Show all posts

Wednesday, May 31, 2017

அரசியல் தலைவர் விழாவில் அரசியல் பேசாமல் வேறு என்ன பேசுவது? – இலக்குவனார் திருவள்ளுவன்



அரசியல் தலைவர் விழாவில்

அரசியல் பேசாமல் வேறு என்ன பேசுவது?

    கலைஞர்  கருணாநிதியின் 94 ஆம் பிறந்தநாள் பெருமங்கலத்துடன் சட்டமன்றப்பணிகளின் மணிவிழாவும் நடைபெற உள்ளது.(60 ஆண்டினைக் குறிக்கும் இதனை மணிவிழா என்றுதான் சொல்ல வேண்டும். வைர விழா என்பது தமிழர் மரபல்ல.) இவ்விழா அரசியல் சார்புடையது  எனப் பொன்.இராதாகிருட்டிணன், தமிழிசை முதலான பா.ச.க.தலைவர்கள் கூறுகின்றனர். தன் வாழ்வில் பெரும்பகுதியை அரசியல் உலகில் செலவிட்டவரின் பிறந்தநாளின்பொழுது அரசியல் பேசாமல் எப்படி இருக்க இயலும்?
  அரசியல் தலைவர்கள் தேநீர் அருந்தும்பொழுதும் இணைந்து உண்ணும்பொழுதும் அங்கே அரசியல் பேசப்பட்டு முதன்மையான முடிவு எடுக்கப்படுவது வழக்கமான ஒன்று. இந்திய அளவிலான தலைவர்கள் ஒன்றுகூடும்பொழுது வெறும் சந்திப்பாக அல்லது வாழ்த்திப்பேசும் நிகழ்வாக மட்டுமல்லாமல், மதவெறியும் மொழி வெறியும்   கொண்ட மத்தியஆட்சியை அகற்றுவது குறித்துப் பேச ஒரு நல்ல வாய்ப்பு அமைகின்றது அல்லவா? இதற்கெனத் தனியாகக் கூட்டம் போடத் தேவையில்லையே! இ்ங்கே மத்திய ஆட்சியை அகற்றும் திட்டம் குறித்துப்பேசி, அதன்தொடரச்சியாக வேறு கூட்டம் நிகழ்த்தலாம். ஆனால்,வெவ்வேறு பகுதிகளில் இருந்து வந்து சந்திக்கும் தலைவர்கள், இப்பொழுது அமைதி காத்துவிட்டுப் பின்னர் இது குறித்துப்பேச நாள் ஒதுக்கலாம் எனில், அதனினும் அறியாமை மிக்கதான செயல் ஒன்று இருக்குமோ! இப்படிப்பட்ட சந்திப்புகளை அரசியல் ஆய்வுக் களமாக மாற்றுவதுதானே வழக்கமான அறிவார்ந்த செயலாகும்.
  அரசியல் நடைமுறைகளைப் புரிந்துகொள்ளாமல், அரசியல் காரணமாகக் கூட்டப்படுவதாகக் கூக்குரல் இடுவது தவறு. அதனினும் பெரும் தவறு தி.மு.க.செயல்தலைவர் தாலின் அதனை மறுப்பது! ஆட்சிமாற்றத்திற்கான விதையிடும் களமாகப் பிறந்தநாள் பெருமங்கலக்கூட்டம்  அமையும் என நம்பிக்கையுடன் சொல்லவேண்டுமே தவிர, மறுத்து மழுப்பக்கூடாது.
    வினையான் வினையாக்கிக் கோடல் நனைகவுள்
    யானையால் யானையாத் தற்று. (திருவள்ளுவர், திருக்குறள் 678)
  ஒரு யானையைக் கொண்டு மற்றொரு  யானையைப் பிடிப்பதுபோன்று ஒரு செயலில் ஈடுபடுமபொழுது தொடர்புடைய மற்றொரு செயலையும் முடிக்க வேண்டும் என்கிறார் உலகப்புலவர்  திருவள்ளுவர். இதனைத் திறம்பட முடிக்கத் திட்டமிடும் தாலின் அஞ்சாமல் “அரசியல்தான் பேசுவோம்” எனச்சொல்ல வேண்டும். சொல்வதுடன் நில்லாது பாசக ஆட்சியை அகற்ற வரைவுத்திட்டம் உருவாக்க வேண்டும்.
   சமற்கிருதத் திணிப்பாலும் இந்தித்திணிப்பாலும் இத்துணைக்கண்டத்து அனைத்துத் தேசிய மொழிகளுக்கும் அழிவுதான் என்பதை உணரும் வகையில் அதனை முறியடிக்கத் திட்டம் தீட்டப்படவேண்டும்.
    தமிழ்நாட்டில் உண்டாக்கிய பண்பாட்டு மீறலான சல்லிக்கட்டிற்குத் தடை என்பதுபோன்று அனைத்து மாநிலங்களிலும் நிகழும் பண்பாட்டிற்கு எதிர்ப்பான செயல்களைப் பட்டியலிட வேண்டும்.
  நெடுவாசலில் நீர்மக்கரியத்திட்டத்தை நிறைவேற்ற முயல்வதுபோன்று மக்களுக்கு எதிரான மத்தியஅரசின் திட்டங்களைத் தொகுத்து அவற்றை நிறுத்தப் பொதுவான செயல்திட்டம் வகுக்கவேண்டும்.
  மாநில ஆட்சிகளில் குறுக்கீடு போன்ற மாநில உரிமைகளுக்கு எதிரான பா.ச.க.செயல்பாடுகளுக்கு எதிரான பணித்திட்டத்தை உருவாக்க வேண்டும்.
  இவ்வாறாக, மத்திய ஆட்சி மாற்றப் பொதுத்திட்டம் என ஒன்றை வகுத்துத் திறமாக நிறைவேற்றி மக்கள் பகை ஆட்சியை அகற்றி மக்கள் நல அரசை நிறுவவேண்டும்.
  அதே நேரம், பிற கட்சிகள் தாங்கள், மக்களுக்கு எதிராக இதற்கு முன்பு ஈடு பட்ட செயல்களுக்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும்.
  கலைஞர் கருணாநிதியால் தமிழுணர்வு பெற்றவர்களே இன்றைக்கு அவருக்கு எதிராக இருக்கிறார்கள். தமிழ்நாட்டின் அன்றாடப் பயன்பாட்டிலிருந்து தமிழ் விலகிச் செல்வதற்கு எதிரான நடிவடிக்கைகளில் ஈடுபடாமை, எங்கும் தமிழ் என்பதை வெற்று முழக்கமாக ஆக்கியமை, தமிழ் ஈழத்தில் நடைபெற்ற இனப்படுகொலைகளைக் கண்டும் காணாமல் உடந்தையாக இருந்தது போன்ற அவரின் செயல்களே இதற்குக் காரணம். எனவே, இவற்றிற்காகத் தி.மு.க.வும் பேராயக்கட்சியும்(காங்கிரசு) மன்னிப்பு கேட்க வேண்டும்.
  எதிர்க்கட்சிகள் தத்தம் தவறுகளை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்டு, இன்றைய மக்கள் பகை மத்திய அரசை நீக்கத் திட்டமிட இப்பெருமங்கலவிழா பயனுள்ளதாக அமையட்டும்!
  எழுததாளர், திரைக்கதை ஆசிரியர், பாடலாசிரியர், திரைப்பட ஆக்குநர், கவிஞர், கட்டுரையாளர், சட்டமன்ற உறுப்பினர், மேலவை உறுப்பினர், எதிர்க்கட்சித்தலைவர், அரசின் தலைவர்,  அமைச்சர், முதலமைச்சர் எனப் படைப்பாற்றலும் பன்முகத்திறன்களும் கொண்ட கலைஞர் கருணாநிதி, இழந்த நினைவுகளைப் பெற்று நூறாண்டு வாழ வாழ்த்துகிறோம்!
இலக்குவனார் திருவள்ளுவன்

Friday, May 13, 2016

கலைஞருக்குக் கேடு விளைவிக்க சிலர் முயற்சி. அவருக்குப் பாதுகாப்பு தேவை! – இலக்குவனார் திருவள்ளுவன்





kalaignar06

கலைஞருக்குக் கேடு விளைவிக்க சிலர் முயற்சி.

அவருக்குப் பாதுகாப்பு தேவை!

  தனக்குப்பின் குடும்பத்தில் யார் எனக் குடும்பத்தலைவர் என்ற முறையில்  கலைஞர் கருணாநிதியால்  கூற இயலும். ஆனால் கட்சியில் தனக்குப்பின் யார் எனக்  கூற முடியாதே! சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய ஒருவரை அவர் எப்படி அறிவிக்க இயலும்? “தி.மு.க., ஒன்றும் சங்கர மடம் அல்ல. கட்சிப் பதவிக்கு யார் வர வேண்டும் என்பதைப் பொதுக் குழு, செயற்குழுதான் முடிவு செய்யும்’  என்பதல்லவா கலைஞர் கருணாநிதியின்  அழுத்தமான பேச்சு. எனினும் தி.மு.க. பொருளாளராக இருந்துகொண்டே தலைவர்போல் செயல்படும் திறம் மிக்க தாலின் தன் சார்பாளர்களையே பெரும்பாலும் வேட்பாளர்களாக நிறுத்தியுள்ளதாலும் அவரது ஆதரவாளர்கள் அவரே அடுத்த முதல்வர்  எனப் பரப்புரை மேற்கொள்வதாலும் மூத்ததலைவர்களிடையே அச்சம் உள்ளதாகக் கூறுகின்றனர். ஏனெனில் கலைஞருக்கு அடுத்து யார் என்பது கலைஞருக்குப்பின் முடிவெடுக்க வேண்டிய ஒன்றே தவிர அவர் வாழ்நாளில் அல்ல என்பதே மூத்த தலைவர்கள்,  கலைஞர் கருணாநிதியின் குடும்பத்தினர் கருத்தாகும்.
  மாற்று அரசியல் பக்கம் மக்கள் பார்வை செலுத்துவதால், அதிமுக, திமுக தோல்வி முகத்தைச்  சந்தித்து வருவதை அவ்விரு கட்சியினரும் உணர்ந்து வருகின்றனர். செயலலிதா, சென்னையில் மீளவும்  24 இடங்களில் பரப்புரை மேற்கொண்டுள்ளதே தேர்தல் நிலவரத்தை உணர்ந்துள்ளமைக்குச் சான்றாகும். இரக்கத்தின் அடிப்படையில் வாக்குகளை அள்ளலாமா என இரு கட்சியினரும் எண்ணுவதாகத் தெரிகின்றது. அப்படி எதுவும் கேடு விளைக்கக்கூடும் என்ற அச்சம் முதுபெரும் தலைவர் கலைஞர் கருணாநிதிக்கு வந்திருக்க வேண்டும். எனவே, அவர், “இயற்கையாக எனக்கு ஏதாவது நேர்ந்தால்தான் மு.க.தாலின் முதலமைச்சர் ஆக முடியும்” என ஆங்கில ஊடகத்துக்கு அளித்துள்ள  செவ்வியில் குறிப்பிட்டுள்ளார்.
  தனக்குப்பின் தாலின் என அவர் கூறவில்லை. ஏனெனில், பொதுக்குழு,செயற்குழு கூடி முடிவெடுத்தால் தாலின்தான் தலைவர் என்பது அவருக்கு நன்றாகவே தெரியும். இதனால் தி.மு.க. உடைந்தால்கூட பிறக்கும் புதிய அணியும் கலைஞரின் குடும்பத்தினர் கட்டுப்பாட்டில்தான் இருக்கும் என்றும் அவருக்குத் தெரியும். எனவே, அவ்வாறு அவர்  கூறவில்லை.
சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை
இகல்வெல்லல் யார்க்கும் அரிது. (திருவள்ளுவர், திருக்குறள் 647)
என்பதற்கு எடுத்துக்காட்டாகச் சொல்வன்மை மிக்கவர். இத்தகைய  சொல்லாற்றல் மிக்கவர், பொடிவைத்துப்பேசுவதில் வல்லவர், “எனக்கு இயற்கையாக ஏதாவது நேர்ந்தால்தான்” என்று கூறுவதற்கு என்ன காரணம்?  அவருக்குக் கேடு விளைவித்து மக்களிடம் இரக்கம் ஈட்டி ஆட்சியைப்பிடிக்கலாம் எனச் சிலர் எண்ணலாம் அல்லவா? தனக்கு ஏதும் செயற்கையாகக்  கேடுவிளைவிக்க வாய்ப்புள்ளது என்பதை உணர்ந்து அதனால் பயனிருக்காது என்பதை உணர்த்துவதற்காகவும் அம்முயற்சியைத் தடுப்பதற்காகவும்தானே அவ்வாறு கூறியிருக்க வேண்டும்.  தான் நூறாண்டு வாழ்வேன்  எனக்கூறியுள்ள கலைஞர் கருணாநிதி,    “இயற்கையாக  எனக்கு ஏதாவது நேர்ந்தால்தான்”  எனக் கூறுவதை எளிதில் புறம் தள்ள முடியாது. எனவே, தமிழக அரசின் காவல் துறை அவருக்குக் கூடுதல் பாதுகாப்பு தரவேண்டும். உளவுத்துறை விழிப்புடன் இருந்து அவ்வாறு கேடு செய்ய திட்டமிடுவோர் முயற்சியை  முறியடிக்க வேண்டும்.
  தமிழீழப் படுகொலை  தொடர்பில் அவர்மீதுள்ள களங்கம் மாறாதது. என்றாலும் அதற்கு முந்தைய அவரது மன்பதை விழிப்புணர்வுகளும் இலக்கியப்பணிகளும் மறக்கத்தக்கன அல்ல. எனவே, அவர் நூறாண்டு வாழ்ந்து இலக்கியப்பணியாற்ற வேண்டும்! எனவே, அவரது குடும்பத்தினரும் கட்சிப்பொறுப்பாளர்களும் தமிழகக்காவல்துறையும் விழிப்புடன் செயல்பட்டு அவருக்குப்பாதுகாப்பு வழங்க வேண்டும்.
ThiruvalluvanVanakkam
இலக்குவனார் திருவள்ளுவன்

Saturday, April 30, 2016

தி.மு.க.வின்மீதான கசப்பு குறையவில்லை! – இலக்குவனார் திருவள்ளுவன்

தலைப்பு-திமுக-கசப்பு, திரு :thalaippu, thimuka,kasappu,thiru

திமுகவின்மீதான கசப்பு குறையவில்லை!

  மிகுதியான மன்பதை நலன் திட்டங்களை அறிமுகப்படுத்திச் செயல்படுத்திய முதல்வர்களில் முதலாமவர் என்றால் கலைஞர் கருணாநிதிதான் இடம் பிடிப்பார். கடந்த தலைமுறையைச் சேர்ந்த தலைவர் எவரேனும் தமிழ்ப்பற்றுடன் எந்தக் கட்சியிலேனும் இருந்தார் எனில் அவர் கலைஞர் கருணாநிதியின் பேச்சாலோ எழுத்தாலோ கவரப்பட்டிருப்பார்.  கட்டியணைக்க வேண்டிய நேரத்தில் கட்டியணைத்தும் அணைத்து வெட்டிவிட வேண்டிய நேரத்தில் வெட்டியணைத்தும்(அழித்தும்)விடும் வல்லமையும் அவருக்கு மிகுதியாகவே உண்டு. உலக அளவில் மிகுதியான படைப்புகளை வழங்கியுள்ள முதல் அரசியல் தலைவரும் அவர்தான். என்றாலும் மக்கள்திலகம் ம.கோ.இரா எனப்படும் எம்ஞ்சியார் உருவாக்கிய அவர்மீதான வெறுப்பு என்பது இன்றளவும் நீடித்து வருகிறது. இந்த வெறுப்பலையைத் தாண்டித்தான் அவர் வெற்றியும் பெற்று வருகிறார். ஆனால் அதற்குக் காரணம் அவரது கட்சியினரல்லர். தி.முக.கவிற்கான வாக்கு வங்கி என்பது 15% இலிருந்து 20% வரை இருக்கலாம். ஆனால்  கட்சிக்கு அப்பாற்பட்டு, அவர்தான் தமிழ்நலன், சமயச்சார்பின்மை முதலானவற்றிற்கு ஏற்ற தலைவர் என்ற நம்பிக்கை கொண்ட, வேறு கட்சிகளுக்கு வாக்களிக்காத 15%இற்கு மேலுள்ள இன நல ஆர்வலர்களால்தான் திமுகவின் வெற்றி அமைந்துள்ளது.
  திமுகவினருக்குத் தங்கள் கட்சியின் மீது வருத்தம்  ஏற்படும் பொழுதெல்லாம், வாக்களிப்பைப் புறக்கணிப்பார்களே தவிர,  பிற கட்சி எதற்கும் வாக்களிக்க மாட்டார்கள். ஆனால், அவ்வாறு தொடக்கத்தில் இருந்த  திமுகவின்பால் பற்றுக்கொண்ட தமிழ் நல ஆர்வலர்கள் தாங்கள் விரும்பும் கட்சியின் பக்கம் சாய்வதையே திமுகவைப்  புறக்கணிப்பதாக அமையும் என்ற முடிவில் உள்ளவர்கள்.
  திமுகவின் மீதான கசப்பு அவர்களுக்கு மிக, மிக, திமுகவால் ஊட்டி வளர்க்கப்பட்ட தமிழுணர்வு வீணாகக்கூடாது எனத் தமிழ்நலக்கட்சிகள் அல்லது அமைப்புகள் எனக்கருதும் ம.தி.மு.க., நாம் தமிழர் கட்சி அல்லது தமிழ்த்தேசிய அமைப்புகளின்பால் நேரடி ஈடுபாடுகாட்டும் நிலைக்கு மாறிவிட்டனர்.
 பொதுவாக எல்லாத் தலைவர்களிடமும் நிறைகளும் குறைகளும் உள்ளன. ஆனால், கலைஞர் கருணாநிதியின் மீதுள்ள குறைகள்மட்டும் பெரிதுபடுத்தப்படுவதன் காரணம் என்ன? “எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்!” என்பதில் இவர் பேச்சில் காட்டிய வேகம் “எங்கும் தமிழ்இல்லை! எதிலும் தமிழ்இல்லை!” என்ற செயலிலும் இல்லாததுதான். ஒருவேளை அறிஞர் அண்ணா இவரைப் பொதுப்பணித்துறை யமைச்சராக ஆக்காமல் கல்வி அமைச்சராக ஆக்கியிருந்தால், தமிழ்சார்ந்த கல்வியில் புரட்சியை உருவாக்கியிருப்பார். ஆனால், இவருக்குக்கிடைத்த பொதுப்பணித்துறை அமைச்சர் பதவி தமிழ்ச்சுவையிலிருந்து செல்வச்சுவையின் பக்கம் திருப்பிவிட்டது. இவரது ஆட்சிக்காலத்தல்தான் ஆங்கில வழிக்கல்விநிலையங்கள் பெருகின. இவரது ஆட்சிக்காலத்தில்தான் தமிழ்வழிக்கல்விக்கான மூடுவிழாவிற்கு அடிக்கல்நாட்டப்பட்டன.  கல்வி வணிகமானதும் இவரது ஆட்சியில்தான் தொடங்கியது.  அதிமுகவும் அதைத்தான் பின்பற்றியது என்றாலும் தொடக்கமும் தொடர்ச்சியும் இவரால்தானே விளைந்தன!
  கல்வித்துறையிலிருந்து தமிழ் விரட்டப்படும்பொழுது தமிழ்நல ஆர்வலர்கள் எங்ஙனம் இவர் பக்கம் இருப்பர்?
  கலைஞர் கருணாநிதியின் மீது சாட்டப்படும் மற்றொரு குற்றச்சாட்டு, குடும்ப அரசியல். இந்தியாவில் குடும்ப அரசியல் என்பது மிகுதியாகவே உள்ளது. இதற்கு வித்திட்டவர் சவகர்லால் நேருதான். என்றாலும் இவரை மட்டும் குற்றம் சுமத்துவது தவறு. என்றாலும், யார் யாருக்கு அமைச்சர் பதவி என்பதிலிருந்து முதன்மையான முடிவுகள்  இவரின் மனைவி, துணைவி, மகன், மகள், மருமகன், பேரன் எனக் குடும்பத்தினரால் மட்டும் எடுக்கப்படும் முடிவுகளாக இருக்கும் பொழுது, மக்கள்நாயக உணர்வில் வளர்க்கப்பட்ட திமுகவினருக்கே வெறுப்புணர்வு வந்ததில் வியப்பில்லை.
  முதுமை வர வர முதிர்ச்சியும் வரும் என்கிறார்கள். பற்றற்றதன்மையும் முதிர்ச்சியின் பகுதிதான். ஆனால், கலைஞர் கருணாநிதிக்கு முதுமைவரவர, தம் குடும்பமக்கள்மீதான பாசம் பெருகிப் பொங்குகின்றது. இதன் விளைவு நாட்டுமக்கள்நலன், வீட்டுமக்கள் நலனுக்காகத் தாரை வார்க்கப்படுகிறது. இதன் மோசமான பகுதிதான் ஈழத்தமிழர்கள் ஏறத்தாழ இருநூறாயிரவர் இனப்படுகொலைக்கு ஆளான பெருந்துயரம்! இதற்குமுன்பு வரை கூட, நம் குடும்பத்தில் மூத்த உறுப்பினர் செய்யும் தவறுகளுக்குப் பொறுமை காப்பதுபோல் பொறுத்திருந்தவர்கள் இனப்படுகொலையில் கலைஞர் கருணாநிதியின்  துணைமை அல்லது பொருட்படுத்தாமை அல்லது அமைதி அறிந்ததும் எப்படி அமைதி காப்பார்கள்?
  இனப்படுகொலை நிறுத்த வேண்டி கலைஞர் கருணாநிதியின் உண்ணாநோன்பு, தொடங்கும்பொழுதே நாடகமாடலாம் என்ற நோக்கில் தொடங்கப்பட்டதாக இருக்க வாய்ப்பில்லை. ஆனால், அதை மத்திய அரசு எப்படி முடிவிற்குக் கொண்டுவந்தது? அதற்கு இவர் உடன்படவேண்டிய அச்சத்திற்கு அல்லது கட்டாயத்திற்கு உள்ளானமை எதனால்? அத்தகைய மிரட்டலுக்கு ஆளாகும் நிலைக்கு இவரது குடும்பத்தினர் அரசியல் வாழ்க்கை இருப்பதே தவறுதானே!
  ஈழத்தமிழர்கள் இனப்படுகொலைகளுக்கு ஆளாகும் மீக் கொடுஞ்செயல்பாடுகளின் வித்தும் உரமும்  பேராயக்கட்சியாகிய காங்கிரசுதான். ஒருவேளை அக்கட்சியுடன்  கூட்டணி வைக்காமல் இருந்தால், வேறுவழயில்லை என எண்ணி ஆதரிக்க  இருந்தவர்களும் விலகக்காரணமே படுகொலைாயாளிகளுடனான கூட்டணிதான். அதுவும் இக்கூட்டணி  கொள்கையின் அடிப்படையில் ஏற்பட்டது என்று பெருமையாகச்சொல்லிக்கொள்ளும்பொழுது – அதிமுக மீளவும் ஆளக்கூடாது என்பதற்காகத் – திமுகவிற்கு ஆட்சியுரிமை வழங்குவது என்பது வாணலியிலிருந்து அடுப்பில் குதிப்பதுபோல்தானே!
  கொள்கைக் கூட்டடணி என்றெல்லாம் உண்மை விளம்பிகளாக இல்லாமல்,  காங்.தலைவர்களை மிகுதியும் மேடையேற்றாமல், அக்கட்சியினரை வீதிப்பரப்புரைகளுக்கு மட்டும் பயன்படுத்தினால் திமுகமீதான கசப்பு அமிழ்ந்துவிட வாய்ப்பு உள்ளது. ஆனால், அதற்கு வாய்ப்பில்லாதபடி திமுக நடந்துகொள்ளும் பொழுது என் செய்வது?
 ‘நமக்கு நாமே நாடகத்தை வெற்றியாகப் பரப்புவதும் தங்களைத்தாங்களே ஏமாற்றிக்கொள்ளும் செயல்தான். தலைவராகச் செயல்படும் பொருளாளரைச் சந்திக்கும் ஆர்வத்தில் திமுகவினரில் ஒரு பகுதியினரும் நாடகப்பாத்திரங்களாக அழைத்துவரப்பட்டவர்களில் ஒரு பகுதியினரும் நிறைந்ததுதான் ‘நமக்கு நாமே’ அவைக்களம். இதனால், மதில்மேல் பூனையாக இருந்த திமுகவினரை ஈர்த்தலில் தாலினுக்கு வெற்றி எனலாம். நாடக அரங்கேற்றங்களில் தாலின் மேற்கொண்ட கடுமையான உழைப்பு என்பது பொதுமக்களை ஈர்க்கவில்லை என்பதே உண்மை.  மதுவிலக்கு நாடகங்களும் ஆழ்நிலவளி(மீத்தேன்வாயு) திட்டத்திற்கு ஒப்புதல் கொடுத்துவிட்டு அறியாமையால் நிகழந்தது எனப்போடும் வேடமும் மக்களைக்கவரவில்லை. நடந்துவிட்ட தவறுகளுக்கு   மன்னிப்பு கேட்கும் தாலின், ஈழத்தமிழர்களின் இனப்படுகொலை தொடர்பிலும் மன்னிப்பு கேட்டிருக்கலாமே! ஏன், அதற்கு மனம் வரவில்லை?
  அதிமுகவிற்கு எதிராக உருகிவரும் எதிர்ப்பு உணர்வுகளை எளிதில் அறுவடை செய்யாமல், அதற்கு எதிரான வலுவான கூட்டணி வேண்டும் எனக் கூறித் தன் வலிவின்மையை ஒத்துக்கொள்ளுதல்; ம.ந.கூட்டணியை அதிமுகவின் ‘ஆ’ அணி  எனச்சொல்வதன் மூலம், அதிமுகவிற்கும் திமுகவிற்கும் எதிர்ப்பான வாக்குகளை அக்கூட்டணி பெறும் என்பதை ஏற்றுக்கொள்ளுதல் போன்றவை திமுகவின் தேர்தல் கள அச்சத்தின் வெளிப்பாடுகளாகத்தான் தோன்றுகின்றன.
  அதிமுகவின் எதிர்ப்பு உணர்வுகளை ஒருமுகப்படுத்தித் திமுகவின் பக்கம் திருப்பிவிட இன்னும் வாய்ப்பு உள்ளது. அதற்குப் பிற கட்சிகளைப்பற்றித் தவறாகக்கூறி அதிமுகவின் வலிமையைப் பெரிதாகக் காட்டும் முயற்சியைக் கைவிட வேண்டும். தமிழ்நலன், தமிழர் நலன் தொடர்பில் திமுக ஆட்சியில் செய்யத் தவறியவற்றைப் பட்டியலிட்டு ஒப்புக்கொண்டு, இனி அத்தவறுகள் நேரா என உறுதி அளிக்க வேண்டும்.  நீண்ட காலம் நிலைத்திருந்து மக்கள்நலத்திட்டங்களையும் தமிழர் நலச் செயல்பாடுகளையும் நிறைவேற்ற வேண்டிய திமுக வீழ்ச்சிப்பாதையில் இருந்து மீள இதுவே உதவும்!
பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல்.(திருவள்ளுவர், திருக்குறள் 505)

– இலக்குவனார் திருவள்ளுவன்

Followers

Blog Archive