Showing posts with label மணிவிழா. Show all posts
Showing posts with label மணிவிழா. Show all posts

Wednesday, May 31, 2017

அரசியல் தலைவர் விழாவில் அரசியல் பேசாமல் வேறு என்ன பேசுவது? – இலக்குவனார் திருவள்ளுவன்



அரசியல் தலைவர் விழாவில்

அரசியல் பேசாமல் வேறு என்ன பேசுவது?

    கலைஞர்  கருணாநிதியின் 94 ஆம் பிறந்தநாள் பெருமங்கலத்துடன் சட்டமன்றப்பணிகளின் மணிவிழாவும் நடைபெற உள்ளது.(60 ஆண்டினைக் குறிக்கும் இதனை மணிவிழா என்றுதான் சொல்ல வேண்டும். வைர விழா என்பது தமிழர் மரபல்ல.) இவ்விழா அரசியல் சார்புடையது  எனப் பொன்.இராதாகிருட்டிணன், தமிழிசை முதலான பா.ச.க.தலைவர்கள் கூறுகின்றனர். தன் வாழ்வில் பெரும்பகுதியை அரசியல் உலகில் செலவிட்டவரின் பிறந்தநாளின்பொழுது அரசியல் பேசாமல் எப்படி இருக்க இயலும்?
  அரசியல் தலைவர்கள் தேநீர் அருந்தும்பொழுதும் இணைந்து உண்ணும்பொழுதும் அங்கே அரசியல் பேசப்பட்டு முதன்மையான முடிவு எடுக்கப்படுவது வழக்கமான ஒன்று. இந்திய அளவிலான தலைவர்கள் ஒன்றுகூடும்பொழுது வெறும் சந்திப்பாக அல்லது வாழ்த்திப்பேசும் நிகழ்வாக மட்டுமல்லாமல், மதவெறியும் மொழி வெறியும்   கொண்ட மத்தியஆட்சியை அகற்றுவது குறித்துப் பேச ஒரு நல்ல வாய்ப்பு அமைகின்றது அல்லவா? இதற்கெனத் தனியாகக் கூட்டம் போடத் தேவையில்லையே! இ்ங்கே மத்திய ஆட்சியை அகற்றும் திட்டம் குறித்துப்பேசி, அதன்தொடரச்சியாக வேறு கூட்டம் நிகழ்த்தலாம். ஆனால்,வெவ்வேறு பகுதிகளில் இருந்து வந்து சந்திக்கும் தலைவர்கள், இப்பொழுது அமைதி காத்துவிட்டுப் பின்னர் இது குறித்துப்பேச நாள் ஒதுக்கலாம் எனில், அதனினும் அறியாமை மிக்கதான செயல் ஒன்று இருக்குமோ! இப்படிப்பட்ட சந்திப்புகளை அரசியல் ஆய்வுக் களமாக மாற்றுவதுதானே வழக்கமான அறிவார்ந்த செயலாகும்.
  அரசியல் நடைமுறைகளைப் புரிந்துகொள்ளாமல், அரசியல் காரணமாகக் கூட்டப்படுவதாகக் கூக்குரல் இடுவது தவறு. அதனினும் பெரும் தவறு தி.மு.க.செயல்தலைவர் தாலின் அதனை மறுப்பது! ஆட்சிமாற்றத்திற்கான விதையிடும் களமாகப் பிறந்தநாள் பெருமங்கலக்கூட்டம்  அமையும் என நம்பிக்கையுடன் சொல்லவேண்டுமே தவிர, மறுத்து மழுப்பக்கூடாது.
    வினையான் வினையாக்கிக் கோடல் நனைகவுள்
    யானையால் யானையாத் தற்று. (திருவள்ளுவர், திருக்குறள் 678)
  ஒரு யானையைக் கொண்டு மற்றொரு  யானையைப் பிடிப்பதுபோன்று ஒரு செயலில் ஈடுபடுமபொழுது தொடர்புடைய மற்றொரு செயலையும் முடிக்க வேண்டும் என்கிறார் உலகப்புலவர்  திருவள்ளுவர். இதனைத் திறம்பட முடிக்கத் திட்டமிடும் தாலின் அஞ்சாமல் “அரசியல்தான் பேசுவோம்” எனச்சொல்ல வேண்டும். சொல்வதுடன் நில்லாது பாசக ஆட்சியை அகற்ற வரைவுத்திட்டம் உருவாக்க வேண்டும்.
   சமற்கிருதத் திணிப்பாலும் இந்தித்திணிப்பாலும் இத்துணைக்கண்டத்து அனைத்துத் தேசிய மொழிகளுக்கும் அழிவுதான் என்பதை உணரும் வகையில் அதனை முறியடிக்கத் திட்டம் தீட்டப்படவேண்டும்.
    தமிழ்நாட்டில் உண்டாக்கிய பண்பாட்டு மீறலான சல்லிக்கட்டிற்குத் தடை என்பதுபோன்று அனைத்து மாநிலங்களிலும் நிகழும் பண்பாட்டிற்கு எதிர்ப்பான செயல்களைப் பட்டியலிட வேண்டும்.
  நெடுவாசலில் நீர்மக்கரியத்திட்டத்தை நிறைவேற்ற முயல்வதுபோன்று மக்களுக்கு எதிரான மத்தியஅரசின் திட்டங்களைத் தொகுத்து அவற்றை நிறுத்தப் பொதுவான செயல்திட்டம் வகுக்கவேண்டும்.
  மாநில ஆட்சிகளில் குறுக்கீடு போன்ற மாநில உரிமைகளுக்கு எதிரான பா.ச.க.செயல்பாடுகளுக்கு எதிரான பணித்திட்டத்தை உருவாக்க வேண்டும்.
  இவ்வாறாக, மத்திய ஆட்சி மாற்றப் பொதுத்திட்டம் என ஒன்றை வகுத்துத் திறமாக நிறைவேற்றி மக்கள் பகை ஆட்சியை அகற்றி மக்கள் நல அரசை நிறுவவேண்டும்.
  அதே நேரம், பிற கட்சிகள் தாங்கள், மக்களுக்கு எதிராக இதற்கு முன்பு ஈடு பட்ட செயல்களுக்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும்.
  கலைஞர் கருணாநிதியால் தமிழுணர்வு பெற்றவர்களே இன்றைக்கு அவருக்கு எதிராக இருக்கிறார்கள். தமிழ்நாட்டின் அன்றாடப் பயன்பாட்டிலிருந்து தமிழ் விலகிச் செல்வதற்கு எதிரான நடிவடிக்கைகளில் ஈடுபடாமை, எங்கும் தமிழ் என்பதை வெற்று முழக்கமாக ஆக்கியமை, தமிழ் ஈழத்தில் நடைபெற்ற இனப்படுகொலைகளைக் கண்டும் காணாமல் உடந்தையாக இருந்தது போன்ற அவரின் செயல்களே இதற்குக் காரணம். எனவே, இவற்றிற்காகத் தி.மு.க.வும் பேராயக்கட்சியும்(காங்கிரசு) மன்னிப்பு கேட்க வேண்டும்.
  எதிர்க்கட்சிகள் தத்தம் தவறுகளை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்டு, இன்றைய மக்கள் பகை மத்திய அரசை நீக்கத் திட்டமிட இப்பெருமங்கலவிழா பயனுள்ளதாக அமையட்டும்!
  எழுததாளர், திரைக்கதை ஆசிரியர், பாடலாசிரியர், திரைப்பட ஆக்குநர், கவிஞர், கட்டுரையாளர், சட்டமன்ற உறுப்பினர், மேலவை உறுப்பினர், எதிர்க்கட்சித்தலைவர், அரசின் தலைவர்,  அமைச்சர், முதலமைச்சர் எனப் படைப்பாற்றலும் பன்முகத்திறன்களும் கொண்ட கலைஞர் கருணாநிதி, இழந்த நினைவுகளைப் பெற்று நூறாண்டு வாழ வாழ்த்துகிறோம்!
இலக்குவனார் திருவள்ளுவன்

Friday, June 3, 2016

குணக்குன்றர் குருமூர்த்தி வாழ்க நூறாண்டு! – இலக்குவனார் திருவள்ளுவன்




குணக்குன்றர் குருமூர்த்தி வாழ்க நூறாண்டு! – இலக்குவனார் திருவள்ளுவன்

இராம.குருமூர்த்தி-உமாராணி :raama.gurumurthi_umaaraani

குணக்குன்றர் குருமூர்த்தி வாழ்க நூறாண்டு!

   பதிப்பகங்கள், பணப்பெருக்கத்தை நோக்கமாகக் கொண்டும் செயல்படலாம். எனினும் தொடக்கக்காலப் பதிப்பகங்கள் இலக்கியப்பணிகளுக்கே முதன்மை யளித்தன. பழைய இலக்கியங்களையும் புதிய இலக்கியங்களையும் புலவர்களையும் இலக்கியவாணர்களையும் கவிஞர்களையும் கட்டுரையாளர்களையும் நூலாசிரியர்களையும் மக்களுக்கு அறிமுகப் படுத்துவன பதிப்பகங்களே! இலக்கியங்களின் தொடர்ச்சிக்குப் பாலமாகச் செயல்படுவன பதிப்பகங்களே! அத்தகைய பதிப்பகங்களில் குறிப்பிடத்தக்க சிறப்புடையது மணிவாசகர் பதிப்பகம்.  சீர்மிகு மணிவாசகர் பதிப்பகத்தில் ஒருவர் 40 ஆண்டுகளாகப் பணியாற்றுகின்றார் எனில், மிகச்சிறந்த இலக்கியத் தொண்டினைத் தொய்வின்றி ஆற்றுவதாகத்தானே பொருள்! அததகைய அருந்திறலாளர் குணக்குன்றர்  இராம.குருமூர்த்தி ஆவார்.
  வை.இராமலிங்கம், இராம.திலகவிதி இணையரின் மூன்றாவது மகனாக வைகாசி 16, 1987 /   மே 29, 1956 அன்று பிறந்தவர்.  தமையன்மார் இராம.சுந்தரவேலு, இராம.குமாரவேலு, தங்கையர் வை.விசயராணி, ந.சாந்தா, இரா.சோதி ஆகியவர்களிடமும் அவர்கள் குடும்பத்தினரிடமும் அன்பு கெழுமிய உறவை இன்றுவரை பேணி வருகிறார். இல்லறத்லைவி பண்பார் உமாஇராணி, மகள் வி.நருமதா, மருமகன் சி.விக்கிரம், பேரன் முகில், இளைய மகள் இரேணுகா என விரியும் தன் குடும்பத்தின் அச்சாணியாகவும் திகழ்ந்து இல்லறக்கடமைகளில் சிறந்து விளங்குகிறார். இவருக்கு மற்றொரு குடும்பமும் உள்ளது. அதுதான் பதிப்புச்செம்மல் மெய்யப்பனாரின் குடும்பம். மீனாட்சி மெய்யப்பனார், மக்கள், ச.மெ.மீனாட்சி சோமசுந்தரம், திருவாட்டி மீனா ஆகியோருடன் அவர்களின் குடும்பத்தில் ஒருவராக அன்புப்பிணைப்புடன் வாழ்ந்து வருகிறார்.
  சிதம்பரம் ஆறுமுக நாவலர் உயர்நிலைப்பள்ளியில், பள்ளிப்படிப்பிற்குப் பள்ளி இறுதிவகுப்புத் தேர்ச்சியுடன் முற்றுப்புள்ளி இடவேண்டிய சூழல். எனினும் வாழ்க்கைக்  கல்வியைப் பதிப்புச் செம்மல் ச.மெய்யப்பனாரின் பதிப்பகத்தில் பெற்றார்;  பதிப்புக் கல்வியில் பட்டை தீட்டப்பட்ட வைரமாக அங்கே ஒளிவிட்டார்.
  ஆவணி 09, 2006 / ஆக.25, 1975 அன்று மணிவாசகர் பதிப்பகம் சென்னையில் கால் பதித்தது. அதன் முதன் மேலாளராகப் பொறறுப்பேற்றார் இராம.குருமூர்த்தி. ஆனால் இன்று வரை தம் முதன்மைப் பணிகளால் பதிப்பகப்பணிகளுடன் இணைத்துக்கொண்டு  தடம் மாறாமல் வாழ்கிறார். பதிப்பகத்தின் உரிமையாளர் பதிப்புச்செம்மல் மெய்யப்பனாருக்கும் இவருக்கும் இடையே உள்ள உறவு, முதலாளி-தொழிலாளி என்ற நிலையில் இல்லை. தந்தை மகன் உறவாக நிலைத்தது. அவரே இவரைத் தம் வளர்ப்பு மகன் எனப் பலரறிய பாராட்டியுள்ளார். பணியாளர் என்றில்லாமல், பண்புடனும் பாங்குடனும் பணியாற்றியதால்தானே இந்தப் பாராட்டிற்குரியவராகி யுள்ளார்.
  பதிப்பியல்மணி குருமூர்த்தி. 2005இல் தமிழ், சங்க இலக்கியக் கட்டுரைகள் 2, சங்க இலக்கியச் சிந்தனைகள் (தொகுதி 2) முதலான 6 நூல்களைப் பதிப்பித்துள்ளார். ஆனால், மணிவாசகர் பதிப்பகத்தின் பல நூல்களின் பதிப்புப்பணிகளில் இவரது பங்களிப்பும் உண்டு. நாலாயிரத்திற்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டுள்ள மணிவாசகர் பதிப்பகத்தின் ஒரு தலைமுறை கடந்த மேலாளராக இருப்பதால் பல தலைமுறை படைப்பாளிகளின் அறிமுகம் இவருக்கு உண்டு. அறிஞர்களும் கவிஞர்களும் இவரின் எளிமையால் கவரப்பட்டு இவருடனான நெருங்கிய தொடர்பை எப்பொழுதும் பேணி வருகின்றனர்.
  பதிப்புப்பணிகளில் மூழ்கியிருந்தாலும்  மாலைப்பொழுதுகளில் இலக்கியத் தென்றல் வீசும் கூட்டங்களில் பங்கேற்றுவிடுவார். எனவே, படைப்பாளர்கள் மட்டுமல்லாமல், படிப்பாளர்களும் இவரது நட்பு வட்டத்தில் பெருகி வருகின்றனர். இலக்கியக் கூட்டங்களில் பெரிய நிறுவனத்தின் மேலாளர் என்றுஇல்லாமல் படப்பொறியுடன் வலம் வந்து ஒளிப்படங்கள் எடுத்து உரியவர்களுக்குத தன்சொந்தச் செலவில் அவரவர் உள்ள படங்களையும் அனுப்பி வைத்துவிடுவார்.
 பழகுவதிலும் தோற்றத்திலும் உள்ள எளிமை
நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது. (திருக்குறள் 124)
என்னும்  தெய்வப்புலவர் திருவள்ளுவரின் தமிழ் நெறிக்கு எடுத்துக்காட்டாக இவரைத் திகழச்செய்கிறது.
நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
பண்புடை யாளர் தொடர்பு.  (திருக்குறள் 783)
என்னும் தெய்வப்புலவர் திருவள்ளுவர் கூறும் நெறிக்கேற்ப நூல்களோடு வாழும் இவருடன் ஒவ்வொருவரும் கொண்டுள்ள நட்பு, பழகுதொறும் மகிழ்வு தரும் பண்புடைமையே இவரது தனிச்சிறப்பு.
   எளிமை, அடக்கம், உற்றுழி உதவுதல், தோழமை பேணல், தன்னலம்பேணா உழைப்பு, நன்னெறியாள்கை, பண்பில் சிறத்தல் எனக் குணக்குன்றாக வாழும் குருமூர்த்தி மேலும் நூறாண்டுகள் வாழ வாழ்த்துகிறேன்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
நன்றி : இராம.குருமூர்த்தி – உமாராணி மணிவிழா மலர்

Tuesday, August 19, 2014

மனிதநேயச் செம்மல் ப.மகாலிங்கம் வாழ்கவே!

மனிதநேயச் செம்மல் ப.மகாலிங்கம் வாழ்கவே!

vizhaa-magalingam03
இன்றைய தமிழ்ப்பேராசிரியர்களுக்கு எடுத்துக்காட்டாக வாழ்பவர் முனைவர் ப.மகாலிங்கம். நாநலம் என்னும் நலனுடைமை நிறைவால் மாணாக்கர்களை அரவணைத்துச் செல்பவர்.
திருவாளர்கள் அர.பழனிசாமி – செல்வநாயகிஇணையரின் நன்மகனாய், திருப்பத்தூர் (வேலூர்) நகரில் பிறந்தவர்; திருவாளர்கள் கா.அ.ச.இரகுநாயகன் – சரசுவதி இணையர் வளர்ப்பில் சிறந்தவர்.
‘திருவிகவும் காந்தியக் கோட்பாடுகளும்’ என்னும் தலைப்பில் ஆய்வியல் நிறைஞர் பட்டம் பெற்றவர். ‘திருவிகநூல்களில் சமுதாய நோக்கு’ என்னும் தலைப்பில் ஆய்ந்து முனைவர் பட்டம் பெற்றவர். ‘திருவிக காலமும் கருத்தும்’, ‘திருவிகவும் காந்தியக் கோட்பாடுகளும்’ என்னும் தலைப்புகளில் நூல்கள் படைத்துள்ளார். தமிழ்த்தென்றல் திருவிகவை ஆய்ந்து தோய்ந்தமையால், அவரடி ஒற்றித் தனக்கெனத் தனி நடை வகுத்துக் கொண்டவர். திருவிகவின் சமுதாய நோக்கு, ஒலிக்கீற்று, மலையொளி, கம்பர் படைத்த காவிய மாந்தர் முதலான இவரின் பிற நூல்கள் இவரது நடைச்சிறப்பை உணர்த்துகின்றன.
 சென்னைப் பல்கலைக்கழகத்தின் நாட்டுநலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் பொறுப்பினைத் திறம்படச் செயல்படுத்தியவர். இதனால், நாட்டுநலப்பணியில் மாணாக்கர்களை ஈடுபடுத்தி, பாவேந்தர் கூறுவதுபோல்,
நாட்டின்
முழு நலத்தில் பொறுப்புடனும்
முன்னேற்றக் கருத்துடனும்
 முனைப்புடன் உழைத்தமையால் இவர் ஆற்றிய அரும்பணிகள் பல.
திறனறிந்து சொல்லும் பாங்கும் நிரந்தினிது சொல்லும் வன்மையும் கொண்டு செயலாற்றியமையால், பிறர் இவர் சொற்கேட்பது எளிதாயிற்று.இவரது அரவணைப்பு உள்ளமும் பழகும் எளிமையும் கண்டு இவர் மீது ஈடுபாடு கொண்ட நாட்டுநலப்பணித்தொண்டர்கள் ‘மனிதநேயச் செம்மல்’என்னும் விருதினை இவருக்கு வழங்கி உள்ளனர்.
  சிறந்த நாட்டுநலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் என மாநில அளவில் சிறந்த விருதும் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
 vizhaa-magalingam01
பச்சையப்பன் கல்லூரியில் இளங்கலை, முதுகலை மாணாக்கராக இருக்கும் பொழுதே மாணவர் தமிழ்ப்பேரவையின் தலைவர், செயலர் ஆகச் செயல்பட்டுத் தமிழுணர்வை வளர்த்தார். பின்னர், அரசு கலைக்கல்லூரி, திருவண்ணாமலை, அண்ணல் அம்பேத்கார் கலைக்கல்லூரி, மாநிலக்கல்லூரி முதலானவற்றில் பணியாற்றும் பொழுதும்இலக்கிய விழாக்களை ஆளுமையுடன் நடத்தி, மாணாக்கர்களை இலக்கிய ஈடுபாடு கொள்ளச் செய்த இனியவர். யாவர்க்கும் உதவும் நேயநெஞ்சாலும் பழகுதற்கினிய பண்பாலும் சுற்றம் சூழ வாழ்பவர்.30 ஆய்வியல் நிறைஞர்களும் 20 முனைவர்களும் இவரால் பட்டைத்தீட்டப்பெற்று ஒளிவிடுகின்றனர்.
 சென்னை மாநிலக்கல்லூரியின் தமிழ்த்துறைத்தலைவர் என்ற முறையில் பிற தமிழ் அமைப்புகளுடன் இணைந்து, கணிணி மாநாடு, வரிவடிவக்காப்பு தொடர்பான கருத்தரங்கம் எனத் தமிழ் காக்கும் நிகழ்ச்சிகளைத் திறம்பட நடத்திய இவரது பெருமை என்றும் பாராட்டிற்குரியது.
 vizhaa-magalingam04
கா.அ.ச.இரகுநாதன் அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர், செல்லம் அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர், காஞ்சி மணிமொழியார் தமிழ்ப்பேரவையின் செயலர், பன்னாட்டு அரிமா சங்கம், சென்னை அரிமா மாவட்ட (324 ஏ) நாட்டுநலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பிற்கான மாவட்டத் தலைவர், பன்னாட்டு அலயன்சு சங்கத்தின் மாவட்டத் துணை ஆளுநர் முதலான பொறுப்புகள் இவரின் மக்கள் நலப்பணிகளை மன்பதைக்கு அளித்து வருகின்றன.
 கல்லூரிகளில் மட்டுமல்லாமல் பொதுநிலையிலும்தன்மேடைப்பொழிவுகளாலும் பட்டிமன்ற வாதுரைகளாலும் கவியரங்கப் பாக்களாலும் சென்னை வானொலி, தொலைக்காட்சி முதலான ஊடகங்களாலும் தமிழ் பரப்பி, பொதுமக்களால்அறியப்பெறும் ஆன்றோராய் உயர்ந்து நிற்கிறார்.
  vizhaa-magalingam05

மனிதம் அறுபது

சென்னையில், ஆடி 17, 2045 / ஆக.2,2014 சனி மாலை 4.00 மணியளவில், பேராசிரியர் ப.மகாலிங்ம் – பொறி.கலைச்செல்வி மணிவிழாவை மாநிலக்கல்லூரி மாணாக்கர்கள்,  தமிழ்நாட்டிலுள்ள அனைத்துக்கல்லூரி மாணவர்களுடன் இணைந்து மனிதம் 60 என விழாவாகக் கொண்டாடினர். அப்பொழுது தமிழ்ப்பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தரும்  செம்மொழி நிறுவனத்துணைத்தலைவருமான அறிஞர்  ஔவை நடராசன், விழா மலரை வெளியிட்டார்.  தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்ற உறுப்புச் செயலர் பேரா.கரு.நாகராசன் விழா மலரைப் பெற்றுக் கொண்டார்.
vizhaa-makalingam-manitham60-01
முனைவர் சகாயராசா, மரு.ப.விசாகப்பெருமாள், மாநிலக்கல்லூரி முதல்வர் முனைவர் மு.முகமது இப்ராகிம், விழா நாயகர்கள் பொறி. கலைச்செல்வி – பேரா.ப.மகாலிங்கம், விழிப்பூட்டும் எழுத்தாளர் இலனோ தமிழ்வாணன், அரிமா இரத்தின நடராசன், பேரா.பெ.மாது,  ஆகியோர் இப்படத்தில் உள்ளனர்.
விழாவில்,  பேரா.ப.மகாலிங்கம் எழுதிய, திரு.வி.க.வியம், தமிழ்வெளி-அன்றும் இன்றும்,ஆளுமை அலைவரிசை ஆகிய மூன்று நூல்களும் குறுந்தகடும் ஆவணப்படமும் வெளியிடப்பட்டன.
விழாவில் திரளான மாணாக்கர்கள், முதல்வர்கள், பேராசிரியர்கள், பணி நிறைவுற்ற பேராசிரியர்கள், தமிழ்ப்படைப்பாளிகள், தமிழன்பர்கள் கலந்து கொண்டனர்.



Followers

Blog Archive