Showing posts with label ஆளுநர். Show all posts
Showing posts with label ஆளுநர். Show all posts

Tuesday, October 9, 2018

ஆளுநர் ஆட்சியில் நக்கீரன் கோபால் கைதும் விடுதலையும் – இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல

ஆளுநர் ஆட்சியில் நக்கீரன் கோபால்

கைதும் விடுதலையும்

 நக்கீரன் இதழாசிரியர் நக்கீரன் கோபால், நேற்று(9.10.2018) விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்; சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்; பிற்பகல் எழும்பூர் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்து, பேரா.நிருமலாதேவி தொடர்பான கட்டுரைகள் தொடர்ந்து நக்கீரன் இதழில் வருவதாகவும் இவை ஆளுநரை மிரட்டுதல், ஆளுநரைப் பணிசெய்ய விடாமல் தடுத்தல் ஆகியன தொடர்பான குற்றப்பிரிவு 124.அ இன்கீழ் வருவதாகவும் காவல் துறையினர் குற்றம் சுமத்தி வழக்கு தொடுத்திருந்தனர். ஆனால் இதை உசாவிய எழும்பூர் 3 ஆவது பெருநகர நடுவர் கோபிநாத்து, குற்றச்சாட்டு பொருந்தவில்லை எனக் கூறி நக்கீரன்கோபாலை விடுதலை செய்தார்.
  கருத்துரிமையை மதித்து நடுநிலையுடன் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகோபிநாத்திற்குப் பாராட்டுகள்.
  ஆளுநர் மாளிகை தந்த முறையீட்டின் அடிப்படையில்தான் காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
  சட்டம்பற்றி ஒன்றும் அறியாப் பாமரனுக்குக்கூட இச்சட்டப்பிரிவைப் படிக்கும் பொழுது பொருத்தமற்ற  குற்றச்சாட்டு என்பது நன்கு புரியும். அவ்வாறிருக்க மேல்மட்டத்தில் உள்ளவர்கள் இவ்வாறு தவறான குற்றச்சாட்டை முன் வைத்ததுஎவ்வாறு எனத் தெரியவில்லை. தமிழக அரசு மூலம் நடவடிக்கை எடுக்காமல் நேரடியாக இறங்கிக் களங்கப்பட்டதும் ஏன் எனப் புரியவில்லை?
  ஒருவேளை தமிழக அரசிடம் நடவடிக்கை எடுக்குமாறு கூறி அவர்கள் மறுத்துவிட்டனரோ என்ற ஐயம் ஏற்பட்டது. ஆனால் வந்துள்ள செய்திகள், மேதகு ஆளுநர், அவர் செயலர், இருவரின் அறிவுறுத்தலில் தலைமைச்செயலர் ஆகியோர் இணைந்து நடவடிக்கை எடுத்ததாகத் தெரிவிக்கின்றன. இத்தகைய செயல்பாடு மக்களாட்சி மாண்பிற்குக் கேடு விளைவிக்கும் என்பதை உணராதது ஏன் என்றும் தெரியவில்லை?
  மடியில் கனமிருந்தால்தானே வழியில் பயம் ஏற்படும்? உண்மையில்லாத செய்திக்கு ஏன் கவலைப்பட வேண்டும்? அல்லது தொடர்ந்து வரும் செய்திகளால் தன் பெயருக்குக் களங்கம் ஏற்படும் என்று கருதினால் முதலில் குறிப்பிட்டவாறு தமிழக அரசு மூலம் நடவடிக்கை எடுத்திருக்கலாம். மேதகு ஆளுநர் அலுவலகத்திலிருந்தே முறைப்பாடு வந்துள்ளதால் வழக்கு உசாவல் என்றால் எதிர் வழக்குரைஞர் கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் மேதகு ஆளுநர் அலுவலகத்தினர் விடையிறுத்தாக வேண்டும். மேதகு ஆளுநரும் உசாவல் கூண்டில் நிறுத்தப்பட வேண்டிய சூழல் எழலாம். பொதுவாக இதழ்களுக்கு வரும் அனைத்துச் செய்திகளையும் வெளியிட மாட்டார்கள். பக்கங்களும் போதா. ஆனால் வழக்கு என்றால் அனைத்துத் தகவல்களும் நீதிமன்றத்திற்கு வரும். சிலர் வேண்டுமென்றே தவறான செய்திகளை அனுப்பியிருக்கலாம், அவையும் நீதிமன்றத்தின் முன்னர் வரும்.  இவற்றால் ஏற்படும் களங்கம்தான் பெரிதாக இருக்கும்.
 நக்கீரன் கோபால் பல அச்சுறுத்தல் வழக்குகளைச் சந்தித்தவர். ஆதலின் வழக்குகளுக்கும் சிறைப்படுத்தலுக்கும் அஞ்சா நெஞ்சினர். அவ்வாறிருக்க மேல் மட்டம் கீழிறங்கி அச்சுறுத்த முன்வந்ததற்குக் காரணம் யாரும் பாசகவினரோ என்ற ஐயமும் வருகிறது.
 காவல்துறையால் தேடப்படும் குற்றவாளி ஆளுநருடன் விருந்துண்டபொழுது இவ்வறிவுரை வழங்கப்பட்டிருக்குமோ என்ற ஐயமும் ஏற்படுகிறது. நாட்டுமக்கள் அனைவரும் நக்கீரன் படிப்பவர்கள் அல்லர். ஆனால் செய்தியிதழ்களிலும் தொலைக்காட்சிகளிலும் மாணாக்கியரை அலுவலர்களுடன் உறவு கொள்ள வைத்து ஆதாயம் அடைந்த நிருமலாதேவி, மேல்மட்டம் வரை தொடர்பிருப்பதாகக் கூறியது இடம் பெற்றது அனைவரும் அறிந்ததே! அப்படியானால் அத்தனை ஊடகங்களையும் மிரட்டும் தொனியில் நக்கீரன் கேபால் கைது செய்யப்பட்டாரா? இதற்கு மாறாகத் தொடர்பின்மையை வெளிப்படுத்தும் வகையில் சான்றாதாரங்களை வெளிப்படுத்துவதுதானே முறையாக இருக்கும்அவ்வாறில்லாமல் அடக்குமுறையிலும் ஒடுக்கு முறையிலும் ஈடுபட்டு யானை தன் தலையில் தானே மண்ணை வாரிப்போட்டுக் கொள்ளும் செயலைச் செய்யலாமா?
  மக்கள் ஏடு/இட்டவாடா(The Hitavada) என்னும் இதழின் ஆசிரியராக இருந்தவர் நம் ஆளுநர். அவரே இதழ்களை – பத்திரிகைகளை – அடக்கி ஒடுக்கும் முயற்சியில் இறங்கலாமா? அதுவும் ஏப்பிரல் மாதம் வந்த கட்டுரைக்கு இப்பொழுது நடவடிக்கை எடுத்ததாகக் கூறுகிறார்கள். அதுவும் முறைதானா? போனது போகட்டும்  வழக்கில் அசிங்கப்பட்டதாக எண்ணித் தன்மானச் சிக்கலாகக் கருதாமல் இத்துடன் நக்கீரன் மீதான நடவடிக்கையை நிறுத்திக் கொள்ளவேண்டும்இல்லையேல் மாறுதல் பெற்றுச் செல்ல வேண்டும்.
  குற்றம் சுமத்தப்பட்ட நக்கீரன் கோபால் விடுதலை செய்யப்பட்டார். அவருக்கு வதாட வந்த வைகோ சிறைக்காவலில் உள்ளார். அவரும் உடனே விடுதலை செய்யப்பட வேண்டும்.
  அனைத்துக்கட்சித் தலைவர்களும் இதழுலகினரும் இக்கைது நடவடிக்கையைக் கண்டித்துள்ளனர். ஆனால் அமமுக துணைப்பொதுச்செயலர் ச.ம.உ. தினகரன் வரவேற்றுள்ளார். நக்கீரன் தனக்கு எதிரானது எனக் கருதி அவ்வாறு தெரிவித்துள்ளாரா எனத் தெரியவில்லை. ஆளுநர் அல்லது பாசக ஆதரவு நிலைப்பாட்டைக் காட்ட விரும்பி அவ்வாறு வரவேற்றாரா எனப் புரியவில்லை. குறைந்தது உசாவி அறிந்தபின் கைது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என்றாவது சொல்லியிருக்கலாம். எனினும் அரசியல் முதிர்ச்சியாளராகத் தோற்றமளித்தவர் தானே விரும்பிச் சறுக்கிக்கொண்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.
  தனிமனிதர் மீதான ஐயப்பாட்டை நாட்டெதிர்/தேசத்துரோக வழக்காக மாற்ற எண்ணுவது அவ்வாறு முயல்வோருக்குத் தீங்கே விளைவிக்கும். எனவே எதற்கெடுத்தாலும் தேச வஞ்சகம்/இரண்டகம் எனத் திரிக்கும் போக்கிற்கு முற்றுப்புள்ளி இட வேண்டும். மக்களாட்சியின் தூணாக விளங்கும் ஊடகங்கள் காக்கப்பட வேண்டும். ஊடகஅறங்களும் பேணப்பட வேண்டும். மறைமுக நெருக்கடி நிலைக்கும் மறைமுக ஆளுநர் ஆட்சிக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். தமிழக அரசு தன்னுரிமையுடன் செயல்படவேண்டும்!
கூழுங் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச்
சூழாது செய்யும் அரசு.(திருவள்ளுவர், திருக்குறள் 554)
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரைஅகரமுதல

Thursday, June 22, 2017

ஆட்சியை மாற்ற வேண்டியது மக்களே! ஆளுநர் அல்லர்! – இலக்குவனார் திருவள்ளுவன்


அகரமுதல 191, ஆனி 04, 2048 / சூன் 18, 2017

ஆட்சியை மாற்ற வேண்டியது மக்களே! ஆளுநர் அல்லர்!

  இந்திய நாடு முழுவதுமே மத்திய ஆளுங்கட்சிக்கு ஒத்துவராத மாநில ஆட்சிகள் பலமுறை கவிழ்க்கப்பட்டுக் கலைக்கப்பட்டுள்ளன. முதன் முதலில் (சூலை 31, 1959), சவகர்லால்நேருவால், தேர்ந்தெடுக்கப்பட்டப் பொதுவுடைமைக் கட்சியின் ஆட்சி கேராளவில் கலைக்கப்பட்டுக் குடியரசுத்தலைவர் ஆட்சி கொண்டு வரப்பட்டது. அதன்பின்னர் இதுவரை 125இற்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் மாநிலஅரசுகள் கலைக்கப்பட்டுள்ளன. சத்திசுகாரையும்(Chhattisgarh) புதியதாகத் தோன்றிய தெலுங்கானாவையும் தவிர எல்லா மாநிலங்களுமே குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு உட்பட்டுள்ளன. ஏறத்தாழ 85 முறை  பேராயக்(காங்.)கட்சிதான் இத்திருவிளையாடலைச் செய்துள்ளது. பா.ச.க.வின் கலைப்புப்பணி 7 முறைதான் நடந்துள்ளது. இதனால், தி.மு.க., அ.தி.மு.க., ஆகிய இரு கட்சிகளுமே கலைக்கப்பட்டுள்ளன.
    தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியைக்  குறுக்கு வழியில் கலைப்பதற்குக் கலைஞர்  கருணாநிதி பெரும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார். அ.தி.மு.க. ஆட்சியைக் கலைக்க வேண்டும் என்று உள்ளக்கிடக்கை இருந்தபொழுதுகூட,  அரசமைப்புச்சட்டப்பிரிவு 356 ஐப் பயன்படுத்தி அரசைக் கலைப்பதற்கு எதிராகவே  பேசி வந்துள்ளார். ஆனால், இப்பொழுது அவர் திருமகனான மு.க.தாலின்,  குடியரசுத்தலைவர் ஆட்சியை அரங்கேற்றத் துடித்துக் கொண்டுள்ளார்.  செயலலிதா மறைவால் அதிமுக பிளவுறும்; ஆட்சியைக் கைப்பற்றலாம் என்ற கனவு தகர்ந்ததால் வந்த செயற்பாடே இது.
 சோ.இரா.பொம்மை(S.R.Bommai)   வழக்கில் உச்ச நீதிமன்றம், குடியரசுத்தலைவர் ஆட்சியை நடைமுறைப்படுத்துவதற்குச் சில நடைமுறைகளை வரையறுத்து நீதிமன்றத்தின் பார்வைக்கு இதனைக் கொணர்ந்தது. இருப்பினும் அதன்பின்னர், ஆட்சிக்கலைப்புகள் நிகழத்தான் செய்துள்ளன. ஆனால், இதுவரை வந்த எந்த ஆளுநர் ஆட்சியும் நேர்மையான ஆட்சியாக இருந்ததில்லை. நேற்றுவரை  இன்றைய அரசியல்வாதிக்குரிய இலக்கணங்களுடன்  திரிந்து, மக்கள் செல்வாக்கு இழந்த பின்னர் ஆளுநராக அமர்த்தப்பட்டவர்கள், எங்ஙனம் நேரான பாதையில் செல்வர்? இருப்பினும்  குடியரசுத் தலைவர் சார்பிலான ஆளுநர் ஆட்சி நேர்மையான ஆட்சி என்பதுபோல் சிலர் அதனை வரவேற்கின்றனர்.
  இத்தகைய திணிப்பு ஆட்சி என்பது மத்திய ஆளுங்கட்சியின் ஆட்சியாகத்தான் செயல்படுகின்றதே தவிர மக்கள் நலன் நாடும் ஆட்சியாகச் செயல்படுவதில்லை. எனவே, இத்தகைய ஆட்சியைத் தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தினால், பா.ச.க.வின் மறைமுக ஆட்சிதான் நிலவும். இதனால் தி.மு.க.விற்கு என்ன ஆதாயம்? அடுத்துத் தேர்தல் வந்தால் தான் வரலாம் எனத் தி.மு.க. கனவு  காணலாம். ஆனால், இதுவரை ஆளுங்கட்சியான அதிமுகவைப் புரட்டி எடுத்துக்கொண்டிருக்கும் பா.ச.க. அடுத்துத்தன் பாய்ச்சலைத் தி.மு.க.மீதுதானே காட்டும். தமிழ்நாட்டின் இரு முதன்மைக் கட்சிகளையும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து தன் பேரவலிமையைக் கூட்டிச்சட்டமன்றத்திலும் ஆட்சி்யிலும்  இடம் பிடிக்கும் முயற்சியில்தானே அது ஈடுபடும்! இதனை  உணராமல் தாலின் ஆட்சிக் கலைப்பிற்குப் பாடுபடுவது சரியல்ல.
  அதிமுகவில் பன்னீர் பிரிந்ததும் எடப்பாடி பழனிச்சாமி முதலானோர் சசிகலா-தினகரனைப் புறக்கணிப்பதும் பா.ச.கவின் சித்து விளையாட்டுகளால்தான் என்பதை அனைவரும் அறிவர். இருப்பினும் யாரும் தி.மு.க.பக்கம் சாயவில்லையே! இயல்பாகத் தேர்தல் நடந்தால் தி.மு.க.விற்குக் கிடைக்கும் வெற்றி வாய்ப்பு  இதனால் பாதிக்கப்படுமே தவிரக், குடியரசுத்தலைவர் சார்பிலான ஆளுநர் ஆட்சியால் தி.மு.க.விற்கு எப்பயனும் விளையாது. நாடடிற்கும் கட்சிக்கும் பயன்தராத ஆட்சி வருவதற்குத் தி.மு.க. ஏன் பாடுபடவேண்டும்?
  ஆளுங்கட்சி, பெரும்பான்மை இழந்த சூழலில் எக்கட்சியும் ஆட்சியமைக்க இயலாச் சூழலில், சட்டம் ஒழுங்கு  சிதைந்த சூழலில், நாட்டின் பாதுகாப்பிற்கு ஊறு நேரும் சூழலில்.
என ஆட்சியைக் கலைப்பதற்கான சூழல்களை அரசமைப்புச்சட்டம் வரையறுத்துள்ளது. இவற்றுள் எந்த ஒன்றும் தமிழ்நாட்டில் இப்பொழுது பொருந்தவில்லை. கூவத்தூர் பூச்சாண்டியைக் காட்டுவதும் பொருந்தாது. எல்லா மாநிலங்களிலும் இது போன்ற நேர்வுகள் நிகழ்ந்துள்ளன. தி.மு.க.வும்  இந்தப்  பாதையில் வந்ததுதான்; இப்பொழுதும் இந்தப்பாதையில் நடந்து இயலாமல் திரும்பியதுதான்; இனியும் வாய்ப்பிருந்தால் இந்தப் பாதையில் நடக்கப்போவதுதான்.
  ஆட்சிக்கலைப்பிற்கு ஒரு காரணமாக மாநில அரசு  சமயச் சார்பின்மைக்கு எதிராகச் செயல்படுவதும் குறிக்கப்பெற்றுள்ளது. அப்படியானால் பா.ச.க. அரசுகளைத்தான் கலைக்க வேண்டும். ஆனால், அதற்கு வழிகாட்டும்  சமயவெறியும் மொழிவெறியும் பிடித்த பா.ச.க. அரசிற்கு என்ன தகுதி யிருக்கிறது?
  மக்கள் பரத்தை ஒருத்தி மீது கல்லெறிந்த பொழுது, இயேசுநாதர், “உங்களில் யார் ஒரு குற்றமும் செய்யவில்லையோ அவர்கள் இவள் மேல் கல்லை விசி எறியுங்கள்” என்றார் அல்லவா? அப்படிப்பார்த்தால் யாரொருவருக்கும் ஊழலைப்பற்றிச் சொல்லத் தகுதி இல்லை. நாம் நேர்மையான ஆட்சிதான் வரவேண்டும் என்று விரும்புகிறோம். ஆனால், அதற்கான சூழலை உருவாக்கவில்லை. எனவே,  அந்த நல்ல காலம் எப்பொழுது கனியும் என்று தெரியவில்லை. ஒரே வகையான குற்றச்செயலை அனைவரும் செய்யும் பொழுது வலியோருக்கு ஒரு தீர்ப்பு, எளியோருக்கு ஒரு தீர்ப்பு என்பது முறையில்லை யல்லவா?
  ஆகவே, தேர்தல் ஊழலைக் காரணம் காட்டி ஆட்சியைக் கலைக்கச்சொல்வது அதே குற்றத்தில் ஊறியவர்கள் சொல்வது, அதே குற்றத்தில் திளைப்பவர்கள் நடைமுறைப்படுத்துவது என்பது எப்படிச் சரியாகும்?
  மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஆட்சி மக்களால்தான் அகற்றப்பட வேண்டுமே தவிர, அதிகாரத்தால் அல்ல! என்பதை அவர் புரிந்துகொள்ள வேண்டும்.
  தவறான ஆட்சியை அகற்றும் அதி்காரம் கொண்டவர்கள் வாக்குரிமை கொண்ட மக்கள் மட்டுமே!! ஆளுநர் அல்லர்! மத்திய ஆட்சியனரும் அல்லர்!
விளைவை எண்ணாமல் ஆட்சியைக் கவர எண்ணுவது அழிவைத்தரும். அதனை விரும்பாமல் வாழும்  பெருமிதம்   (ஆட்சியாகிய) வெற்றி‌யைத் தரும்.
    இறலீனும் எண்ணாது வெஃகின் விறல்ஈனும்
    வேண்டாமை என்னுஞ் செருக்கு (திருவள்ளுவர், திருக்குறள் 180)
–   அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை  : அகரமுதல 191, ஆனி 04, 2048 / சூன் 18, 2017

Friday, February 10, 2017

இதற்குத்தானா தாழ்ச்சி செய்தீர் ஆளுநரே! - இலக்குவனார் திருவள்ளுவன்





இதற்குத்தானா தாழ்ச்சி செய்தீர் ஆளுநரே!


 தமிழ்நாட்டரசின் முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம்  தை 23, 2048 / பிப்பிரவரி 5, 2017  அன்று தன் முதல்வர் பதவியைவிட்டு விலகி மடல் அளித்துள்ளார். அன்றே  அ.தி.மு.க. சட்டமன்றக்கட்சியின் தலைவராக வி.கி.சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அன்றைய நாளில் தமிழ்நாட்டில்தான் பொறுப்பு ஆளுநர் வித்தியாசாகர் இருந்துள்ளார். ஆனால், உடனே தில்லி பறந்துவிட்டார். மத்திய அதிகாரமையத்தால் மிரட்டப்பட்ட பன்னீர்செல்வம் கட்சியில் தான் மிரட்டப்பட்டதால் பதவி விலகியதாக அறிவித்தார். இதனால் தமிழ்நாடு குழப்பத்தைச் சந்தித்துள்ளது.
  பெரிய மாநிலமான தமிழ்நாட்டிற்கு முழுமையான ஆளுநரை அமர்த்தாத மத்திய அரசு, பொறுப்பு அலுவரையும் அவர் விருப்பில் செயல்படவில்லை என்றுதான் அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
அவர் உடனடியாகச் சென்னை வந்திருந்தால் பன்னீர்செல்வத்தின்  விலகலை ஏற்றதன் தொடர்ச்சியாக அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் தீர்மானத்திற்கு இணங்க வி.கி.சசிகலாவை முதல்வராகப் பொறுப்பேற்று அரசை அமைக்க அழைத்திருப்பார். அவ்வாறு அழைக்காத இடைவெளியில்தான், யாருடைய இயக்கத்திலோ ஆடும் பன்னீர்செல்வத்தின் நாடகம் அரங்கேறியுள்ளது.

  காலந்தாழ்ந்துவந்த ஆளுநர் இரு  தரப்பாரையும் சந்தித்துள்ளார்.  ஆனால், பதவி விலகலை ஆளுநர் ஏற்றபின்னர் அவரை ஆட்சி அமைக்க அழைப்பதிலோ இசைவதிலோ விதிகளில்லை. அவர் மிரட்டப்பட்டதாகக் கூறியது கேட்டு அனைவரும் பொங்குகின்றனர். அவ்வாறு அவர் அவராக விலகல் மடல் அளித்திருக்காவிட்டால், ச.ம.உறுப்பினர்கள் தீர்மானம் இயற்றி அவரை நீக்கியிருப்பர். எனவே, மிரட்டல் என்பது கருதக்கூடிய செய்தியல்ல. மேலும்,  மிரட்டலுக்கு அடிபணிபவர் நாட்டின் உயர்ந்த பொறுப்பில் எவ்வாறு தற்சிந்தனையுடன் செயலாற்ற இயலும்?

  இருப்பினும் அவரை ஆட்சி யமைக்க அழைத்திருக்கலாம். அவ்வாறு அழைத்து  அவரால் பெரும்பான்மையை மெய்ப்பிக்க இயலாவிடில் அதே கட்சியைச் சேர்ந்த சசிகலாவை எவ்வாறு ஆட்சியமைக்க அழைக்க இயலும்? எனவே, அடுத்த பெரிய  கட்சியான - ஒரே வலிமையான எதிர்க்கட்சியான தி.மு.க.வைத்தான் ஆளுநர் அழைக்கவேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கும். அதற்கான மனம் வருவதற்கான  காலம் கனியவில்லைபோலும்!
  அல்லது அவரை ஆட்சியமைக்க அழைக்கும் பொழுது அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக அ.தி.மு.க.அறிவித்தால்,  சட்டச்சிக்கல் ஏற்படும்.
  அல்லது அ.தி.மு.க.சட்டமன்ற உறுப்பினர்கள் தெரிவிற்கிணங்க வி.கி.சசிகலாவை அழைத்திருக்கலாம். அதுவே முறையுமாகும். அவர் ஆட்சியில் அமர்ந்தால், எதிர்ப்புகளைச் சமாளித்துவிடுவார் என்றும் தன் செயற்பாடுகளால் மக்களின் ஆதரவைப் பெற்று விடுவார் என்றும் பா.ச.க. அஞ்சியுள்ளது. எனவேதான் அவருக்கான வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று தோன்றுகிறது.

 ஆளுநர் முடிவே இறுதியானது என்றும்  பா.ச.க. இதில் தலையிடவில்லை என்றும் பா.ச.க. அடிக்கடி அறிவித்தாலும்,  ஒருவரைத்தவிர, அனைத்துப் பா.ச.க.தலைவர்களும் சசிகலாவிற்கு எதிரான கருத்துகளையே கூறி வருகின்றனர். எனவே, சசிகலாவிற்கு ஆட்சிப்பொறுப்பு ஏற்கும் வாய்ப்பு தரக்கூடாது என்பதுதான் பா.ச.க.வின் உள்ளக்கிடக்கை.

 இந்தச் சூழலில் பொறுப்பு ஆளுநர், குடியரசுத்தலைவருக்கும்  தலைமையச்சருக்கும் உள்துறை அமைச்சருக்கும் அறிக்கை அளித்துள்ளார் எனச் செய்தி வந்துள்ளது. இருவருக்கும் பெரும்பான்மை இல்லை, குழப்பமான சூழல் உள்ளது, எனவே, 6 மாதக்காலம்  சட்டமன்றத்தை இடைநிறுத்தம் செய்யலாம் என்று கருதினால்தான் அறிக்கை அனுப்ப வேண்டியிருக்கும்.  யாருக்கேனும் ஆட்சி யமைக்க இசைவு தருவதாயின் அறிக்கை தேவையில்லையே! இத்தகைய அறிக்கை தருவதற்குத்தான் உரிய அறிவுரைகளைப் பெறக்காலத்தாழ்ச்சி செய்தாரோ என்று அஞ்சவேண்டியுள்ளது.

  ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்பதை ஆளுங்கட்சியினர் உணர்ந்து ஒற்றுமை காக்க வேண்டும். இன்றைய சூழலில் பெரும்பான்மைச் சட்டமன்ற உறுப்பினர்களால் தெரிவு செய்ப்பட்டவருக்கு ஆட்சியமைக்கும் அதிகாரம் வழங்காமல்   பெரும்பான்மையை மெய்ப்பிக்கும் வாய்ப்பை யாருக்கும் வழங்காமல் மறைமுகமாகப் பா.ச.க. ஆட்சி நிலவ வழிவகுக்கும் எச்செயலிலும் பொறுப்பு ஆளுநர் செயல்படக்கூடாது. பா.ச.க.வும் இத்தகைய முயற்சிகளில் ஈடுபடக்கூடாது.

 தாலின் முதலான தலைவர்கள் தெரிவித்துவருவதுபோல், தமிழ்நாட்டில் அமைதியான நிலையான ஆட்சி அமையவே ஆளுநரும்  மத்திய அரசும் முயலவேண்டும்.  தலைவர் ஒருவர் மறைந்தால் ஏற்படும் இயல்பான குழப்பத்தைப் பயன்படுத்திக் குளிர்காய  முயலக்கூடாது.

செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானுங் கெடும். (திருவள்ளுவர், திருக்குறள், 466)


-இலக்குவனார் திருவள்ளுவன்

Followers

Blog Archive