Showing posts with label மொழிப்போர். Show all posts
Showing posts with label மொழிப்போர். Show all posts

Friday, December 19, 2025

மொழிப்போர் வரலாறு அறிவோம்!-11 : மொழிப்போரில் மகளிர் பங்களிப்பு – 2 : இலக்குவனார் திருவள்ளுவன்

 




(மொழிப்போர் வரலாறு அறிவோம்!-10 : மொழிப்போரில் மகளி்ர் பங்களிப்பு – 1: தொடர்ச்சி)

இந்தி எதிர்ப்புப் போராட்டங்களில்  பெண்களின் அளப்பரிய பங்கில் ஒரு பகுதிதான் பதிவுகளில் உள்ளன. அவற்றில் நாமறிந்த ஒரு பகுதியைத்தான் ‘பெண்களின் முதன்மைப் பங்கு’ என்னும் தலைப்பில் முன் கட்டுரையில் பார்த்தோம். எனவே, இன்னும் சொல்வதற்கு மிகுதியாக உள்ளன. எனினும் மொழிப்போரில் சிறை புகுந்த வீராங்கனைகள் பெயர்களைப் பார்ப்போம்.

மொழிப்போரில் சிறை புகுந்த வீராங்கனைகள் நிரல்

17.1.1938இல்

ஈரோடு (இ)ரங்கம்மாள்

சென்னை இலலிதாம்பாள்(இரு குழந்தைகளுடன்)

14.11.1938 இல்

மருத்துவர் தருமாம்பாள்

புதின ஆசிரியர் மூவாலூர் இராமாமிர்தத்தம்மையார்

பட்டம்மாள் (திருவாரூர் பாவலர் பாலசுந்தரம் மனைவி)

மலர் முகத்தம்மையார்(மயிலைத் தமிழ்ப்புலவர் முத்துக்குமாரசாமியார் தமக்கை)

சீதம்மாள் (மரு.தருமாம்பாள் மருமகள், மூன்று அகவையுடைய குழந்தை மங்கையர்க்கரசி, ஓர் அகவைக்குழந்தை நச்சினார்க்கினியன் ஆகியோருடன்)

21.11.1938இல்

உண்ணாமலையம்மையார் (முன்னாள் திராவிடன் ஆசிரியர் புலவர் அருணகிரிநாதர் மனைவி, தமிழரசி என்னும் ஓர் அகவைக் குழந்தையுடன்)

புவனேசுவரி அம்மையார்(தோழர் என்.வி.நடராசன் மனைவி, சோமசுந்தரம் என்னும் 2 அகவைக் குழந்தையுடன்)

சிவசங்கரி(தோழர் டி.வி.முருகேசன் மனைவி, (உ)லோகநாயகி என்கிற2 அகவைக் குழந்தையுடன்)

சரோசனி அம்மையார்(தோழர் தேவசுந்தரம் மனைவி மார்த்தாண்டம் என்கிற 2 அகவைக் குழந்தையுடன்)

கலைமகளம்மையார்(மரு.சிற்சபையின் மனைவி மரு.தருமாம்பாள் மருமகள்)

ஞானசுந்தரி அம்மையார்(விமலா என்கிற 2 அகவைக் குழந்தையுடன்)

தனக்கோட்டிஅம்மையார், சதுரங்கப்பட்டினம்

28.11.0938இல்

இராசம்மாள்(பெல்லாரி திவான்பகதூர் கோபால்சாமி முதலியார் தமக்கை; பண்டிதை நாராயணி அம்மையார் தாயார்)

கமலம்மாள்(சேக்காடு தோழர் பாலசுப்பிரமணிய முதலியார் மனைவி)

கேக்காடு அங்கயற்கண்ணி அம்மையார்

வேலூர் துளசிபாய்(பிராமணர்)

5.12.1938இல்

செயலெட்சுமி அம்மையார்(இந்தி எதிர்ப்புப் போரில் 85 மாதக்கடுங்காவல் பெற்ற சிந்தாதிரிப்பேட்டை சாமிநாதனின் சிறிய தாயார்)

12.12.1938இல்

(உ)ரோசம்மாள் (சிவாசி என்கிற 2 அகவைக் குழந்தையுடன்)

16.12.1938இல்

அம்பலூர் அபரஞ்சிதம்மாள்(குழந்தை இளங்கோவுடன்)

அம்பலூர் கோவிந்தம்மாள்

கனகாம்பாள்

ஆர்.செல்லம்மாள்

9.1.1939இல்

சேலம் தேவகி அம்மாள் (இரு குழந்தைகளுடன்)

22.01.1939 இல்

எசு.குப்பம்மாள்

பிரகாசம்மாள்

சொக்கம்மாள்

பகவதியம்மாள்

துளசிபாய்

இராசேசுவரி அம்மாள்

குணபாக்கியம் அம்மாள்

கண்ணம்மாள்(இரண்டு அகவைக் குழந்தையுடன்)

விச்சி அம்மாள்

கமலம்மாள்(கசேந்திரன் என்கிற குழந்தையுடன்)

30.01.1939 இல்

சென்னை கல்யாணி அம்மாள்

6.02.1939இல்

மீனாட்சி அம்மாள்

முத்தம்மாள்(தன் குழந்தையுடன்)

அன்னம்மாள்

அமிர்தம்மாள்

பத்மாவதி அம்மாள்

17.02.1939இல்

சென்னை ஆர்.நாராயணி அம்மையார்(பெரியாரைப் பதினைந்து நாள்களுக்குள் விடுதலை செய்க. இல்லையேல் மறியல் என்று முன்கூட்டி எச்சரிக்கை விடுத்து  முதலமைச்சர் இல்லம் முன் மறியல் செய்து சிறை புகுந்தார்.)

20.02.1939இல்

பட்டம்மாள் (பாவலர் பாலசுந்தரம் மனைவி குழந்தை ஆலங்காட் டானுடன்)

ஞானம் அம்மையார்(புலவர் மறை திருநாவுக்கரசு மனைவி. அறிஞர் மறைமலையடிகளாரின் இளைய மருமகள், குழந்தை சிறையஞ்சானுடன்)

6.03.1939இல்

மலர்க்கொடி அம்மையார்

13.03.1939இல்

இராசம்மாள்(திருவாரூர் தோழர் டி.என்.இராமனின் தாயார்)

சரோசனி அம்மையார்(மறை-மாணிக்கவாசகத்தின் மனைவி, மறைமலை அடிகளாரின் மூத்த மருமகள், குழந்தை மறைக்காடனுடன்)

திருச்சி எபினேசம்மாள்

மாயவரம் இரசாமணி அம்மாள்

26.06.1939 இல்

நெய்வேலி தாயாராம்மாள்

நாகை விசாலாட்சி அம்மாள்

17.07.1939இல்

11ஆவது சருவாதிகாரி சுத்தம் ரோசம்மாள்

குருவம்மாள்(சிறையில் உயிர்த்த வீரன் தாளமுத்துவின் மனைவி)

காமாட்சியம்மாள்

மருதம்மாள்(மீனாட்சி சுந்தரம்,அம்சவேணி என்கிற இரு குழந்தைகளுடன்)

வடிவாம்பாள்(ஐந்து அகவைக்ம குழந்தையுடன்)

மலர்க்கொடி அம்மையார்(இரண்டாம் முறை சிறைவாசம்)

இலட்சுமி அம்மாள்

24.07.1939இல்

தாயாரம்மாள் (இரு குழந்தைகளுடன்)

21.08.1939இல்

12ஆவது சருவாதிகாரி மாரியம்மாள்

நெய்வேலி பொன்னம்மாள்(நெல்லைத் தமிழ்ப்புலவர் இராமநாதர் மனைவி)

தமிழ்அன்னை (8 அகவைக் குழந்தையுடன்)

4.09.1939இல்

நாச்சியம்மாள்(இந்திப்போரில் முதன் முதல் சிறைசென்ற பல்லடம் தோழர் பொன்னுசாமியின் மனைவி, நாகம்மாள் என்கிற 10 மாதக் குழந்தையுடன்)

பூவாளுர் செல்லம்மாள்

ஈரோடு மீனாட்சியம்மாள்(மூன்று அகவை இரத்தினம், 9 மாத நாகம்மாள் ஆகிய குழந்தைகளுடன்)

அங்கமுத்து அம்மாள்

காஞ்சி இராசாமணி அம்மாள்

இந்திப் போரில் சிறை சென்ற மங்கைமார் தொகை 73, அவர்களுடன் சிறை சென்ற குழந்தைகள் தொகை 32.)

இத்தகவல்கள் முனைவர் ம.நடராசன் தொகுப்பாசிரியராகவும் மணா பதிப்பாசிரியராகவும் கொண்டு வெளிவந்துள்ள உயிருக்கு நேர் என்னும் நூலில் இருந்து எடுக்கப்பட்டது என நன்றியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

Tuesday, January 24, 2017

முடியவில்லை மொழிப்போர்! முடித்து வைக்க வேண்டாவா மொழித்திணிப்புகளை! – இலக்குவனார் திருவள்ளுவன்



அகரமுதல 170, தை 09, 2048 / சனவரி 22, 2017

முடியவில்லை மொழிப்போர்!

முடித்து வைக்க வேண்டாவா மொழித்திணிப்புகளை!

வினைபகை என்றிரண்டின் எச்சம் நினையுங்கால்
தீயெச்சம் போலத் தெறும் (திருவள்ளுவர், திருக்குறள் 674).
  மொழிப்போர் என்றால் நாம் 1965 இல் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப்போரைத்தான்  குறிப்பிடுகிறோம்.  வரலாறு எழுதுவோர் அதற்கு முன்  1937 இல் கட்டாய இந்தித்திணிப்பிற்கு எதிரான போராட்டத்தைக் குறிப்பிடுவர். ஆனால், சமற்கிருதம் எப்பொழுது  தன்னைத் தேவ மொழியாகக் கற்பித்துக்கொண்டும் தமிழை நீச மொழியாகப் பழித்துக் கொண்டும் தமிழ்நாட்டில் வரத் தொடங்கியதோ,  அப்பொழுதே மொழிப்போர் தொடங்கிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். சமற்கிருதத்திற்கு முன்னர் பாலி, பிராகிருதம முதலான மொழிகளுடனான தொடர்பு ஏற்பட்டிருப்பினும் அப்போது அந்தச் சூழல் எழவில்லை. ஆனால் 2,500 ஆண்டுகளுக்கு முன்னர்த் தொடங்கிய சமற்கிருதத்திற்கு எதிரான மொழிப்போர் இன்றும் முடியவில்லை. மொழிப்போர் என்பது இந்தித்திணிப்பிற்கு எதிரானது மட்டுமல்ல! சமற்கிருத்திற்கும் எதிரானது. தமிழர்களின் அன்றாட வாழ்வில் திணிக்கப்படும் ஆங்கிலம் முதலானவற்றிற்கும் எதிரானது என்பதை நாம் உணரவேண்டும்.
   தமிழகக்கட்சிகள் ஆண்டிற்கொருமுறை வீரவணக்க நாள் கொண்டாடுகின்றனர். எப்பொழுதாவது மத்திய அரசின் இந்தித்திணிப்பு, சமற்கிருதத் திணிப்புபற்றிச் பேசுகின்றனர். மற்ற நேரங்களில் சமற்கிருத்திணிப்பு, இந்தித்திணிப்புபற்றி  நினைத்துப்பார்ப்பதில்லை.
  மத்தியில் யார் ஆட்சியில் இருந்தாலும் சமற்கிருதத்திணிப்பும்  இந்தித்திணிப்பும் முனைப்பாகச் செயல்படுத்தப்படும். பா.ச.க ஆட்சியிலிருக்கும் பொழுது மொழித்திணிப்புகள்  வெளிப்படையாக நடைபெறும். ஆனால், மத்தியில் மாறி மாறி  ஆட்சியில் பங்கு பெற்ற தமிழ்நாட்டுக் கட்சிகளுக்கு இவைபற்றிக் கவலையில்லை.  இந்தியை எப்படியெலலாம்  திணிக்கலாம் என வெளிநாடுகளுக்குச் செல்லும் குழுக்களுடன் இணைந்து  மகிழ்ச்சிப் பயணம சென்று வருவர். இந்தி ஒழிக!’ என்று சொல்லத் தெரிந்தவர்களுக்கு எந்த வகையிலெல்லாம் இந்தித் திணிக்கப்படுகிறது என்ற  விவரம்கூடத் தெரியாது.
  ‘தமிழ்’ என்று வாய் பேசினாலும் தமிழக ஆளுங்கட்சிகள் கல்வியில் இருந்து தமிழை அகற்றுவதன் மூலம் அயல்மொழிகளுக்கு வாயிலைத் திறந்து விடுவதையே கடமையாகக்கொண்டு செயல்படுகின்றனர்.  கல்வியிலும் தாய்மொழியாம் தமிழ் தமிழ்நாட்டிலிருந்து விரட்டப்பட்டால் எந்த எதிர்ப்புமின்றிச் சமற்கிருதத்தையும் இந்தியையும் எளிதில் திணிக்கலாம் அல்லவா? அப்புறம் ஆங்கிலத்தினிடத்தில் தமிழை அமர்த்தாமல் இந்தியை அமர்த்தலாம் அல்லவா? எனவே, மத்திய ஆட்சியாள்களின் மொழித்திணிப்பு வேலையை எளிதில் முடிப்பதற்கு உதவுவனவே தமிழக ஆட்சியாளர்களின் பணிகளாகின்றன.
  உச்சநீதிமன்ற  நீதிபதி பொறுப்பேற்க வேண்டும் என்றால் இந்தியில் தான் கையெழுத்து போடவேண்டும். அவரவர் தாய்மொழியில் கையொப்பமிட முடியாது. இந்தியில் கையொப்பம் இடப்பயிற்சி பெறுவதே உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு அளிக்கும் முதல் பயிற்சியாகும்.
 வாணாள் காப்புறுதிக்கழகம்(எல்.ஐ.சி.) முதலான மத்திய நிறுவனங்களில் பண எடுப்பு முதலான பதிவுகளில் இந்தியில் அல்லது ஆங்கிலத்தில்தான் கையொப்பமிடவேண்டும். இவை அல்லாத நம் தாய்மொழியில் கையொப்பமிட்டால்இந்தி அல்லது ஆங்கிலத்தில் கையொப்பமிடத் தெரிந்தவரின் சான்றொப்பம் தேவை.   இப்படி மத்திய அரசு தொடர்பானவற்றில் நம் தாய்மொழியாம் தமிழில் கையொப்பமிட உரிமையில்லாதவர்களாகத்தான் நாம் இருக்கிறோம்.
  பதவிப்பெயர்கள் முதலானவை சமற்கிருதமயமாக்கப்பட்ட இந்தியில் உள்ளன. அதுபோல் பல்வேறு துறைகளின் முழக்கங்கள் அல்லது குறிக்கோள் தொடர்கள் சமற்கிருதமே. சான்றுக்குப்படம் 1 ஐயும் 2 ஐயும் காண்க. ஆனால், இதுபற்றிக்கேட்க நமக்கு உரிமையில்லை. படம் 3 ஐப் பாருங்கள். சென்னை உயர்நீதி மன்ற முத்திரையில் வாய்மையே வெல்லும் எனத் தமிழ்நாட்டரசின் முழக்கமில்லை; இந்தி முழக்கம்!
 சென்னைக் காவல்துறையில் ஆங்கில முழக்கம். ஊர்க்காவல்படையில் இந்தி முழக்கம்.
  “உப்பு போட்டுத்தான் தின்கிறாயா?  வெட்கம், மானம் சூடு, சொரணை இருக்கிறதா?” – இவ்வாறு நாம் அடிக்கடி கேட்பதுண்டு. ஆனால், நாம் அனைவருமே மான உணர்வற்றுத்தான் இருக்கிறோம் என்பதற்கு எடுத்துக்காட்டாகத் தமிழகத் துறைகளில் தமிழ் அல்லா இலக்குத் தொடர்களே சான்றுகளாகும். சென்னை அல்லது  தமிழ்நாடு உயர்நீதி மன்றம் தங்களைத்  தமிழக அரசிலிருந்து வேறுபடுத்தித் தனித்துக் கூறிக்கொள்வதில் பெருமை கொள்ளும். அந்தப் பெருமை என்பது தமிழக நலன்சார்ந்துதான் அமைய வேண்டும். தமிழ் முழக்கத்தைப் புறக்கணிப்பதிலா இருக்க வேண்டும்.
   கல்விமொழி, பாடமொழி, இந்தித்தட்டச்சு தெரிந்தால்தான் மத்தியஅரசிலும் மத்திய நிறுவனங்களிலும் வேலை  என்பதுபோன்று வேலைவாய்ப்பு மொழி என எங்கும் இந்தி எதிலும் இந்தி என்பதே நீக்கமற உள்ள நடைமுறையாகும். இதனைத் தடுக்கத் தமிழகக் கட்சிகள் ஒரு துரும்பையாவது  கிள்ளிப்போட்டிருக்குமா?
  ஊடகங்களில்   இந்திக்காரர்களை அழைத்தல், இந்தி விளம்பரங்கள், பெயர்களை நட்ஃசு, பொன்ஃசு  எனச் சமற்கிருதப் பெயர்போல் எழுதுதல், தொகுப்புரையாக இருந்தாலும் தீர்ப்புரையாக இருந்தாலும், கலந்துரையாக இருந்தாலும் ஒன்றிரண்டு தமிழ்ச்சொற்கள் மட்டும் தெரியாமல் வந்துவிடும். ஊடக மொழி என்பது தமிழை இல்லாமல் ஆக்குவதாகத்தானே உள்ள்து.
  இவ்வாறு தமிழ்நாட்டில் தமிழ் இல்லாத நிலையையும் பிற மொழித்திணிப்புகளையும் அடுக்கிக்கொண்டே  போகலாம்.  ஏறுதழுவலுக்கு ஒன்று கூடிய இளைஞர்கள், மாணவ மாணவியர்,  நாட்டு நலன் கருதியும் தங்கள் எதிர்கால நல்வாழ்வு கருதியும்  தமிழின நிலைப்பு கருதியும் மொழித்திணிப்பிற்கு எதிராகக்  குரல்  கொடுத்து வெற்றி காண வேண்டும். மொழிப்போர்  என்பது தொடர்ந்துகொண்டே போவதில் பொருளில்லை. எனவே, சமற்கிருத, இந்தி,மொழகளின் திணி்ப்புகளுக்கு முற்றுப்புள்ளி இட  வைப்போம்!  தமிழைப் பயன்பாட்டுமொழியாகச் சிறக்கச் செய்வோம்!
தமிழ் எங்கள் உயிர் என்பதாலே — வெல்லுந்
தரமுண்டு தமிழருக்கிப்புவி மேலே
தமிழ்என்னில் எம்முயிர்ப் பொருளாம் – இன்பத்
தமிழ்குன்றுமேல் தமிழ்நாடெங்கும் இருளாம்
தமிழுண்டு தமிழ் மக்களுண்டு – இன்பத்
தமிழுக்கு நாளும் செய்வோம் நல்ல தொண்டு
தமிழ் என்று தோள் தட்டி ஆடு! நல்ல
தமிழ் வெல்க வெல்க என்றே  நாளும் பாடு!    
 – பாவேந்தர் பாரதிதாசன்
    

– இலக்குவனார் திருவள்ளுவன்

Friday, February 13, 2015

மும்மணி யாண்டுகள்: மொழிப்போர் பொன்விழா, தமிழியக்க நூற்றாண்டு விழா, காங்கிரசு துரத்தப்பட்ட பொன்விழா

மும்மணி யாண்டுகள்: மொழிப்போர் பொன்விழா, தமிழியக்க நூற்றாண்டு விழா, காங்கிரசு துரத்தப்பட்ட பொன்விழா

 maraimalai-adigal01
மொழிப்போர்  ஈகியர் மணிமண்டபம்
மொழிப்போர் ஈகியர் மணிமண்டபம்
  
 indhi ethirppu03
  தனித்தமிழ் இயக்கம், மொழிப்போர்கள் இவற்றால் நாம் தொடக்கத்தில் வெற்றியை ஈட்டியுள்ளோம். எனினும் வெற்றிக்கனியைச் சுவைக்கும் முன்னரே தோல்விப்பாதையில் சறுக்கி விட்டோம். வீண் பேச்சையும் வெட்டிப்பேச்சையும் கேட்டு மயங்கும் நாம் செயற்பாட்டாளர்களைப் போற்றுவதில்லை. தமிழுக்காக வாழ்ந்த, வாழும் அறிஞர்களையும் தமிழ்காக்கத் தம் இன்னுயிர் நீத்தவர்களையும் நினைத்துக்கூடப் பார்ப்பதில்லை. இவற்றை மாற்றுவதற்கு இவ்வாண்டு முதலான மூன்றுஆண்டுகளும் நாம் ஒல்லும் வகையெலாம் பரப்புரை மேற்கொள்ள வேண்டும்.
 தமிழ்காக்கும் மொழிப்போர் 1937 இலிலேயே தொடங்கிவிட்டது. எனினும் 1965 இல் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு மொழிப்போர் ஆட்சியையே மாற்றிய சிறப்பு மிக்கது. எனவேதான் இதனை நினைவுகூர்ந்து தமிழ்க்காக்கும் பணியைத் தொடரும் வகையில் தமிழமைப்புகள் மொழிப்போர் பொன்விழா நிகழ்வுகளை நடத்தி வருகின்றன. வழக்கம்போல் திராவிடக் கட்சிகள் வீர வணக்க நாளினையும் நடத்தியுள்ளன. எனினும் இன்றைய தலைமுறையினர் உணரும் வண்ணம் இந்தித்திணிப்பின் கொடுமையையும் தமிழைப் புறக்கணிக்கும் அவலத்தையும் போதிய அளவில் இன்றைய தலைமுறையினர் உள்ளங்களில் பெரும்பான்மையர் பதிக்கவில்லை.
 http://www.ilakkuvanar.com/images/IlakkuvanarBG0.jpg
  1967 இல் தி.மு.க. ஆட்சிக்கு வந்த உடனேயே மொழிப்போர் குறித்த பாடங்கள் கல்வித்திட்டத்தில் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். இந்தி எதிர்ப்புப் போரில் உயிர் நீத்தவர்கள் பற்றிய பாடங்களைப் படிப்பதன் மூலம் அடுத்த தலைமுறையினர் மொழிப்போர் முதன்மையை உணர்ந்திருப்பர்; வழிவழியே தமிழ் உணர்வு பரவியிருக்கும். ஆனால், செய்யத் தவறிவிட்டது. மேலும், “தமிழ் வாழ்க!” என முழங்கும் திராவிடக்கட்சிகள் தொடர்ந்து ஆட்சியில் இருந்தும் இந்தி படிப்போர் எண்ணிக்கை பெருகியும் தமிழ் படிப்பதற்கான வாய்ப்பு அருகியும் போன துயரம் ஏற்பட்டுத் தொடர்கிறது. எனவே மொழிப்போர் வெற்றியின் பயனை நாம் முழுமையாக அடைய முடியவில்லை.
  தமிழ்க்கடல் மறைமலையடிகளால் உருவான தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு வரும் 2016 ஆகும். அயல்மொழிக்கலப்பின் தீமையை உணர்த்தி வெற்றி கண்ட இவ்வியக்கம், மொழிப்போருக்கு உந்துதலாய் அமைந்த இவ்வியக்கம், தொடர்ந்து நடத்தப்படாமையால் தோல்வியை நோக்கிக் கொண்டுள்ளது. ஊடகங்களின் வளர்ச்சியால் அன்றாடம் வீடுகளுக்குள்ளேயே திரைப்பெட்டிகள் மூலம் அயல் மொழிகள் திணிக்கப்படுகின்றன. வரிவடிவச்சிதைவிற்கான ஆக்கப்பணிகளில் பல ஊடகங்கள் இடம் பெற்றுத் தமிழ் சிதைவு நோக்கிச் சென்று கொண்டுள்ளது. இந்தி எதிர்ப்புப் போரின் தலைவர் எனக் குற்றம் சாட்டப்பட்டுச் சிறைக்கு அனுப்பி வைக்கப்பெற்ற பேராசிரியர் சி.இலக்குவனார் கல்லூரிகளில் தமிழ்வழிக்கல்வி வேண்டும் எனப் போராடி ஓரளவு வெற்றியும் பெற்றார். ஆனால், இன்றோ பள்ளிகளிலேயே தமிழ்வழிக்கல்வி மறைந்து வருகிறது. தமிழ் மொழிக்கல்வியையும் தமிழ்வழிக்கல்வியையும் நடைமுறைப்படுத்த வேண்டிய அரசாலேயே தமிழ் அகற்றப்பட்டு, இந்தி, சமற்கிருதம், ஆங்கிலம் ஆகியன அரியணையில் ஏற்றப்படுகின்றன. எனவே, மீண்டும் தனித்தமிழ் இயக்கம் வீறு கொண்டு எழ வேண்டியதை வரும் நூற்றாண்டு நமக்கு உணர்த்தும் வகையில் அமைய வேண்டும்.
  1965 ஆம் ஆண்டு மொழிப்போரால் நிகழ்ந்த நன்மை பேராயக்கட்சியாகிய காங்கிரசு தமிழ்நாட்டு அதிகாரப் பீடத்திலிருந்து அகற்றப்பட்டதேயாகும். இன்று வரை பேராயக்கட்சியால் தமிழ் நாட்டின் ஆட்சிப் பீடத்தில் அமர முடியவில்லை. திராவிடக் கட்சிகளின் துணையால்தான் மக்கள் மன்றங்களில் சில இடங்களையைாவது பெற முடிகிறதே தவிர, அதற்கெனச் செல்வாக்கு இல்லாமல் ஆக்கிவிட்டனர் மக்கள். இருப்பினும் இதிலிருந்து பாடம் கற்காமல் தமிழின அழிப்பிலும் ஈடுபட்டு ஈழத்தமிழர்கள் ஏறத்தாழ இருநூறாயிரவர்   கொல்லப்படத் துணை நின்றது காங்கிரசு. தன் ஊழல் பாதையால் மத்தியிலிருந்தும் விரட்டப்பட்டுள்ளது. எனவே, இம் மூன்று நிகழ்வுகளில் காங்கிரசு துரத்தப்பட்ட பொன்விழாதான் சிறப்பாக அமைகின்றது.
  நாம் இம்மூன்று போராட்ட வெற்றிகள் நிலைப்பதற்காக இவற்றை இணைத்துத் தமிழ்நலப் பரப்பியக்கம் நடத்த வேண்டும். மீண்டும் தனித்தமிழ் இயக்கம் பரவினால்தான் தமிழ் தமிழ்நாட்டிலாவது பிழைத்திருக்கும் என்பதை உணர்த்த வேண்டும். மொழி அழியும் பொழுது இனமும் நாடும் அழியும் வரலாற்று உண்மைகளையும் மக்களுக்கு உணர்த்த வேண்டும். திரைப்படத்துறையில் தமிழ்நலம் நாடும் கலைஞர்கள் உள்ளனர். அவர்கள் தங்கள் படங்களிலும் தொலைக்காட்சித் தொடர்கள், நாடகங்கள் முதலானவற்றிலும் தமிழ் உரிமையை வலியுறுத்த வேண்டும். படங்களுக்குத் தமிழ்ப்பெயர் சூட்டல், கதைப்பாத்திரங்களுக்குத் தமிழ்ப்பெயரிடல், அறிமுகப் படுத்தும் கலைஞர்களுக்குத் தமிழ்ப்பெயர் சூட்டல், காட்சிகளில் இடம் பெறும் கடைப் பெயர்களைத் தமிழில் காட்டல், திருமண முறை முதலான நிகழ்வுகளைத் தமிழில் அமைத்தல், தமிழ்ப்பண்பாட்டை உணர்த்தும் காட்சிகளை அமைத்தல்,   அயல் மொழிக்கலப்பற்ற தமிழ்ப்பாடல்களை இடம் பெறச் செய்தல், மொழிப்போர் ஈகியர் பற்றிய செய்திகளை இடம் பெறச் செய்தல், தமிழறிஞர்கள் படங்கள் இடம் பெறச்செய்தல் என எல்லா வகையாலும் மக்களுக்கு இயல்பான முறையில் தமிழுணர்வை ஊட்ட வேண்டும்.
  தமிழ்நாட்டில் தமிழர்க்கே தலைமை! தமிழுக்கே முதன்மை! என்பதை வலியுறுத்தும் வகையில் கூட்டங்கள், கருத்தரங்கங்கள், கிளர்ச்சிகள் நடைபெற வேண்டும்.   இவற்றை வலியுறுத்தும் படைப்புகள் பெருக வேண்டும்.
  (தனித்)தமிழில் அமையும் தமிழ்நலப்பபடைப்புகளுக்கே அரசு நிதியுதவிகளும் பரிசுகளும் வழங்க வேண்டும். பாடத்திட்டங்களிலும் பணித்தேர்வுத் திட்டங்களிலும் தமிழக வரலாறும் தமிழ் இலக்கியச் சிறப்புகளும் தமிழின் தொன்மைச்சிறப்பும் மொழிப்போர் வரலாறும் இடம் பெறத் தமிழக அரசு ஆவன செய்ய வேண்டும்.
  எனவே, தமிழன்பர்களே! தமிழாசிரியர்களே! தமிழ்த்துறையினரே! தமிழ் அமைப்புகளே! தமிழ் இதழாளர்களே! தமிழால் பிழைக்கும் வணிகர்கள்போல் இல்லாமல் தமிழ்ப்பணியைத்தலையாய பணியாகக் கொண்டு மும்மணியாண்டுகளையும் சிறப்பாகக் கொண்டாடித் தமிழ்நாட்டில் தமிழ் திகழ்ந்திட, உலகத்தமிழர்கள் உரிமையுடன் வாழ்ந்திட உழைப்போம்! உயர்வோம்!

துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி
இன்பம் பயக்கும் வினை. (திருவள்ளுவர் : திருக்குறள் 669)

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
நாள் தை 18, 2046, பிப்பிரவரி 01, 2015


Followers

Blog Archive