maraimalai-adigal01
மொழிப்போர்  ஈகியர் மணிமண்டபம்
மொழிப்போர் ஈகியர் மணிமண்டபம்
  
 indhi ethirppu03
  தனித்தமிழ் இயக்கம், மொழிப்போர்கள் இவற்றால் நாம் தொடக்கத்தில் வெற்றியை ஈட்டியுள்ளோம். எனினும் வெற்றிக்கனியைச் சுவைக்கும் முன்னரே தோல்விப்பாதையில் சறுக்கி விட்டோம். வீண் பேச்சையும் வெட்டிப்பேச்சையும் கேட்டு மயங்கும் நாம் செயற்பாட்டாளர்களைப் போற்றுவதில்லை. தமிழுக்காக வாழ்ந்த, வாழும் அறிஞர்களையும் தமிழ்காக்கத் தம் இன்னுயிர் நீத்தவர்களையும் நினைத்துக்கூடப் பார்ப்பதில்லை. இவற்றை மாற்றுவதற்கு இவ்வாண்டு முதலான மூன்றுஆண்டுகளும் நாம் ஒல்லும் வகையெலாம் பரப்புரை மேற்கொள்ள வேண்டும்.
 தமிழ்காக்கும் மொழிப்போர் 1937 இலிலேயே தொடங்கிவிட்டது. எனினும் 1965 இல் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு மொழிப்போர் ஆட்சியையே மாற்றிய சிறப்பு மிக்கது. எனவேதான் இதனை நினைவுகூர்ந்து தமிழ்க்காக்கும் பணியைத் தொடரும் வகையில் தமிழமைப்புகள் மொழிப்போர் பொன்விழா நிகழ்வுகளை நடத்தி வருகின்றன. வழக்கம்போல் திராவிடக் கட்சிகள் வீர வணக்க நாளினையும் நடத்தியுள்ளன. எனினும் இன்றைய தலைமுறையினர் உணரும் வண்ணம் இந்தித்திணிப்பின் கொடுமையையும் தமிழைப் புறக்கணிக்கும் அவலத்தையும் போதிய அளவில் இன்றைய தலைமுறையினர் உள்ளங்களில் பெரும்பான்மையர் பதிக்கவில்லை.
 http://www.ilakkuvanar.com/images/IlakkuvanarBG0.jpg
  1967 இல் தி.மு.க. ஆட்சிக்கு வந்த உடனேயே மொழிப்போர் குறித்த பாடங்கள் கல்வித்திட்டத்தில் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். இந்தி எதிர்ப்புப் போரில் உயிர் நீத்தவர்கள் பற்றிய பாடங்களைப் படிப்பதன் மூலம் அடுத்த தலைமுறையினர் மொழிப்போர் முதன்மையை உணர்ந்திருப்பர்; வழிவழியே தமிழ் உணர்வு பரவியிருக்கும். ஆனால், செய்யத் தவறிவிட்டது. மேலும், “தமிழ் வாழ்க!” என முழங்கும் திராவிடக்கட்சிகள் தொடர்ந்து ஆட்சியில் இருந்தும் இந்தி படிப்போர் எண்ணிக்கை பெருகியும் தமிழ் படிப்பதற்கான வாய்ப்பு அருகியும் போன துயரம் ஏற்பட்டுத் தொடர்கிறது. எனவே மொழிப்போர் வெற்றியின் பயனை நாம் முழுமையாக அடைய முடியவில்லை.
  தமிழ்க்கடல் மறைமலையடிகளால் உருவான தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு வரும் 2016 ஆகும். அயல்மொழிக்கலப்பின் தீமையை உணர்த்தி வெற்றி கண்ட இவ்வியக்கம், மொழிப்போருக்கு உந்துதலாய் அமைந்த இவ்வியக்கம், தொடர்ந்து நடத்தப்படாமையால் தோல்வியை நோக்கிக் கொண்டுள்ளது. ஊடகங்களின் வளர்ச்சியால் அன்றாடம் வீடுகளுக்குள்ளேயே திரைப்பெட்டிகள் மூலம் அயல் மொழிகள் திணிக்கப்படுகின்றன. வரிவடிவச்சிதைவிற்கான ஆக்கப்பணிகளில் பல ஊடகங்கள் இடம் பெற்றுத் தமிழ் சிதைவு நோக்கிச் சென்று கொண்டுள்ளது. இந்தி எதிர்ப்புப் போரின் தலைவர் எனக் குற்றம் சாட்டப்பட்டுச் சிறைக்கு அனுப்பி வைக்கப்பெற்ற பேராசிரியர் சி.இலக்குவனார் கல்லூரிகளில் தமிழ்வழிக்கல்வி வேண்டும் எனப் போராடி ஓரளவு வெற்றியும் பெற்றார். ஆனால், இன்றோ பள்ளிகளிலேயே தமிழ்வழிக்கல்வி மறைந்து வருகிறது. தமிழ் மொழிக்கல்வியையும் தமிழ்வழிக்கல்வியையும் நடைமுறைப்படுத்த வேண்டிய அரசாலேயே தமிழ் அகற்றப்பட்டு, இந்தி, சமற்கிருதம், ஆங்கிலம் ஆகியன அரியணையில் ஏற்றப்படுகின்றன. எனவே, மீண்டும் தனித்தமிழ் இயக்கம் வீறு கொண்டு எழ வேண்டியதை வரும் நூற்றாண்டு நமக்கு உணர்த்தும் வகையில் அமைய வேண்டும்.
  1965 ஆம் ஆண்டு மொழிப்போரால் நிகழ்ந்த நன்மை பேராயக்கட்சியாகிய காங்கிரசு தமிழ்நாட்டு அதிகாரப் பீடத்திலிருந்து அகற்றப்பட்டதேயாகும். இன்று வரை பேராயக்கட்சியால் தமிழ் நாட்டின் ஆட்சிப் பீடத்தில் அமர முடியவில்லை. திராவிடக் கட்சிகளின் துணையால்தான் மக்கள் மன்றங்களில் சில இடங்களையைாவது பெற முடிகிறதே தவிர, அதற்கெனச் செல்வாக்கு இல்லாமல் ஆக்கிவிட்டனர் மக்கள். இருப்பினும் இதிலிருந்து பாடம் கற்காமல் தமிழின அழிப்பிலும் ஈடுபட்டு ஈழத்தமிழர்கள் ஏறத்தாழ இருநூறாயிரவர்   கொல்லப்படத் துணை நின்றது காங்கிரசு. தன் ஊழல் பாதையால் மத்தியிலிருந்தும் விரட்டப்பட்டுள்ளது. எனவே, இம் மூன்று நிகழ்வுகளில் காங்கிரசு துரத்தப்பட்ட பொன்விழாதான் சிறப்பாக அமைகின்றது.
  நாம் இம்மூன்று போராட்ட வெற்றிகள் நிலைப்பதற்காக இவற்றை இணைத்துத் தமிழ்நலப் பரப்பியக்கம் நடத்த வேண்டும். மீண்டும் தனித்தமிழ் இயக்கம் பரவினால்தான் தமிழ் தமிழ்நாட்டிலாவது பிழைத்திருக்கும் என்பதை உணர்த்த வேண்டும். மொழி அழியும் பொழுது இனமும் நாடும் அழியும் வரலாற்று உண்மைகளையும் மக்களுக்கு உணர்த்த வேண்டும். திரைப்படத்துறையில் தமிழ்நலம் நாடும் கலைஞர்கள் உள்ளனர். அவர்கள் தங்கள் படங்களிலும் தொலைக்காட்சித் தொடர்கள், நாடகங்கள் முதலானவற்றிலும் தமிழ் உரிமையை வலியுறுத்த வேண்டும். படங்களுக்குத் தமிழ்ப்பெயர் சூட்டல், கதைப்பாத்திரங்களுக்குத் தமிழ்ப்பெயரிடல், அறிமுகப் படுத்தும் கலைஞர்களுக்குத் தமிழ்ப்பெயர் சூட்டல், காட்சிகளில் இடம் பெறும் கடைப் பெயர்களைத் தமிழில் காட்டல், திருமண முறை முதலான நிகழ்வுகளைத் தமிழில் அமைத்தல், தமிழ்ப்பண்பாட்டை உணர்த்தும் காட்சிகளை அமைத்தல்,   அயல் மொழிக்கலப்பற்ற தமிழ்ப்பாடல்களை இடம் பெறச் செய்தல், மொழிப்போர் ஈகியர் பற்றிய செய்திகளை இடம் பெறச் செய்தல், தமிழறிஞர்கள் படங்கள் இடம் பெறச்செய்தல் என எல்லா வகையாலும் மக்களுக்கு இயல்பான முறையில் தமிழுணர்வை ஊட்ட வேண்டும்.
  தமிழ்நாட்டில் தமிழர்க்கே தலைமை! தமிழுக்கே முதன்மை! என்பதை வலியுறுத்தும் வகையில் கூட்டங்கள், கருத்தரங்கங்கள், கிளர்ச்சிகள் நடைபெற வேண்டும்.   இவற்றை வலியுறுத்தும் படைப்புகள் பெருக வேண்டும்.
  (தனித்)தமிழில் அமையும் தமிழ்நலப்பபடைப்புகளுக்கே அரசு நிதியுதவிகளும் பரிசுகளும் வழங்க வேண்டும். பாடத்திட்டங்களிலும் பணித்தேர்வுத் திட்டங்களிலும் தமிழக வரலாறும் தமிழ் இலக்கியச் சிறப்புகளும் தமிழின் தொன்மைச்சிறப்பும் மொழிப்போர் வரலாறும் இடம் பெறத் தமிழக அரசு ஆவன செய்ய வேண்டும்.
  எனவே, தமிழன்பர்களே! தமிழாசிரியர்களே! தமிழ்த்துறையினரே! தமிழ் அமைப்புகளே! தமிழ் இதழாளர்களே! தமிழால் பிழைக்கும் வணிகர்கள்போல் இல்லாமல் தமிழ்ப்பணியைத்தலையாய பணியாகக் கொண்டு மும்மணியாண்டுகளையும் சிறப்பாகக் கொண்டாடித் தமிழ்நாட்டில் தமிழ் திகழ்ந்திட, உலகத்தமிழர்கள் உரிமையுடன் வாழ்ந்திட உழைப்போம்! உயர்வோம்!

துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி
இன்பம் பயக்கும் வினை. (திருவள்ளுவர் : திருக்குறள் 669)

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
நாள் தை 18, 2046, பிப்பிரவரி 01, 2015