(மொழிப்போர் வரலாறு அறிவோம்!-9 : பிராமணர்கள் ஆதரவும் சத்திய மூர்த்தியின் இரட்டை வேடமும் – -தொடர்ச்சி)
மொழிப்போர் வரலாறு அறிவோம்!-10
மொழிப்போரில் மகளி்ர் பங்களிப்பு – 1
இந்தி எதிர்ப்புப் போராட்டங்களில் பெண்களின் முதன்மைப் பங்கு
இந்தியத் துணைக் கண்டத்தில் பல்வேறு காரணங்களுக்காகப் பற்பல போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. ஆனால், தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்புப் போராட்டங்களில் பெண்கள் பங்கேற்றமை போல் வேறு எந்த மாநிலத்திலும் எந்தப் போராட்டத்திலும் பெண்கள் ஈடுபாடு இருந்ததில்லை.
பெரியார் ஈ. வெ. இராமசாமியும் எதிர்க்கட்சியான நீதிக்கட்சியும் இந்தித் திணிப்பை எதிர்த்து நடத்திய, முதற்கட்ட இந்தி எதிர்ப்புப் போராட்டக் களத்தில் பெண்கள் பங்களிப்பு அளப்பற்கரியது. இந்தி எதிர்ப்புப் போராட்ட வகைகள் மாநாடுகள், அணிவகுப்புகள், மறியல் போராட்டங்கள், உண்ணா நோன்பு, பேரணிகள், கறுப்புக் கொடி காட்டுதல் எனப் பலவகையாக இருந்தன. இவை அனைத்திலுமே பெண்களின்பங்களிப்பு முதன்மையாக இருந்தது.
இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் இலக்காகவும் செயற்பாடுகளாகவும் பின்வருவன இருந்தன.
• இந்தியை கட்டாயப் பாடமாக்குவதை ஒழிக்க வேண்டும்
• இந்தியைத் திணிக்கும் ஆணையைப் பிறப்பித்ததை எதிர்த்தல்
• மாணவர்களை இந்திப் பாடங்களைப் புறக்கணிக்கும் படி செய்தல்
• இந்தியைப் பயிற்றுவிக்கும் பள்ளிகளுக்கு முன்னால் மறியல் போராட்டங்கள் நடத்துதல்
• பேராயக்கட்சி(காங்கிரசு) அமைச்சர்களுக்கு எதிராக்க கறுப்புக் கொடி காட்டுதல்
• முதலமைச்சர் வீட்டிற்கு முன்பு மறியல் நடத்துதல்
ஆண்களுக்குத் தாங்கள் எவ்வகையிலும் சளைததவ்கள் இல்லை என்று சொல்லும்படிப் பெண்களி்ன் பங்களிப்பு இவற்றில் தீவிரமாக இருந்தது.
தமிழ்நாட்டில் முதல் முறையாக் தியாகராய நகர் மாதர் முன்னேற்றக் கழகம் என்ற அமைப்பு தொடங்கப்பட்டது. அமைப்பின் பெயரில் உள்ள ‘முன்னேற்றக் கழகம்’ என்ற தொடரைத் தமிழ்நாட்டிற்கு அறிமுகப்படுத்தியவர் மருத்துவர் தருமாம்பாள் அம்மையார். இத்தொடரே முன்னேற்றக் கழகம் என்று தமிழ்நாட்டில் தொடங்கப்படும் கட்சிகளின் பெயர்களில் இடம் பெற்றது. கழகம் என்று அரசியல் கட்சிகளின் பெயர்களில் இடம் பெறவும் இதுவே தொடக்கமாக அமைந்தது.
பெண்களின் போராட்ட உணர்வுகளுக்கு தூண்டுகோலாகவும் வடிகாலாகவும் இவ்வமைப்பு செயற்பட்டது. இத்தகைய போராட்டப் ப்ங்களிப்புகளில் ஒன்றுதான் சென்னையில் ஒற்றைவாடை அரங்கில் 13.11.1938 அன்று நடைபெற்ற தமிழ்நாடு பெண்கள் மாநாடு.
மறைமலையடிகளின் மகள் நீலாம்பிகை அம்மையார் மாநாட்டுத் தலைமை தாங்கினார். மீனாம்பாள் சிவராசு தமிழ்க் கொடி ஏற்றினார்; பண்டிதை நாராயணி அம்மையார் மாநாட்டைத் தொடங்கி வைத்தார். தாமரைக் கண்ணி அம்மையார் வரவேற்புரை ஆற்றினார். நாகம்மையார் படத்தைத் தோழியர் பார்வதி அம்மையார் திறந்து வைத்தார் பெரியார் ஈ.வெ.இராமசாமி சிறப்புரை ஆற்றினார். மாநாட்டில் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார், மரு, தருமாம்பாள், அலர்மேலுமங்கை தாயாரம்மாள், மஞ்சுளாபாய் சண்முகம், புவனேசுவரி என்.வி. நடராசன் முதலானோர் கலந்து கொண்டனர்.
இம் மாநாட்டில் மீனாம்பாள் சிவராசு பெண்களுக்கு இந்தி எதிர்ப்பில் ஈடுபட அழைப்பு விடுத்தார். தமிழ்மொழி, தமிழ்ப்பண்பாட்டுக்காக மன உறுதியோடு போராட முன்வர வேண்டும் என்று பெண்களை வேண்டினார்
அம்மாநாட்டில்தான் ஈ.வெ.இராமசாமி அவர்களுக்குப் பெரியார் என்ற பட்டம் சூட்டப்பட்டது. “இந்தியாவில் இதுவரை தோன்றிய சீர்திருத்தத் தலைவர்களால் செய்ய இயலாமற் போன வேலைகளை நம் மாபெரும் தலைவர் ஈ.வெ.ரா. அவர்கள் செய்து வருவதாலும், தென்னாட்டில் அவருக்கு மேலாகவும், ஒப்பாகவும் நினைப்பதற்கு வேறு ஒருவரும் இல்லாமையானும் அவர் பெயரைச் சொல்லிலும், எழுத்திலும் வழங்கும்போது பெரியார் என்ற சிறப்புப் பெயரையே வழங்கவேண்டும்” என்று முதல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மாநாடுகள், பேரணிகள், கூட்டங்கள் நடத்துவதோடு மட்டுமன்றி ஆண்களைப் போலவே பெண்களும் சிறைபுகும் போராட்டம் நடத்த வேண்டும் என்பதே இந்த மாநாட்டின் முதன்மைக் குறிக்கோளாக இருந்தது. முதல் பெண்கள் மாநாட்டில் உரையாற்றிய பெரியாரும் அதையே வலியுறுத்தினார். இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பெண்கள் பங்கு பெறச் செய்யத் தூண்டினார் என்று குற்றம் சாற்றப்பட்டுப் பெரியார் ஈ.வெ.இரா.விற்குத் தண்டனை வழங்கப் பட்டது. தந்தை பெரியார் உரை கேட்டு மகளிர் போர்க் கோலம் பூண்டனர்.
இம்மாநாட்டின் மறுநாள் – 1938 நவம்பர் 14 – சென்னையில் பெத்து நாயக்கன் பேட்டை காசி விசுவநாதர் கோயில் அருகிலிருந்து மரு.தருமாம்பாள், இராமாமிர்தம் அம்மையார், மலர்முத்தம்மையார், (பாவலர் பாலசுந்தரம் அவர்களின் துணைவியார்)பட்டம்மாள், சீதம்மாள் ஆகியோர் இந்து இறையியல் பள்ளி நோக்கி மறியலுக்குப் புறப்பட்டனர்; தளையிடப்பட்டனர். வீரத்தாய்மார்கள் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் மறியலில் ஈடுபட்டுக் கொண்டே இருந்தனர். கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர். அங்கு நீதிபதி எவ்வளவோ கேட்டுக் கொண்டும் முன் வைத்த காலைப் பின் வைக்க மறுத்தனர். நீதிமன்றத்தையே பரப்புரை மேடையாக மாற்றி இறுதி வரை தாங்கள் செய்தது தவறு என்று ஒப்புக்கொள்ளாமல், சிறை சென்றனர் பெண்கள். முதல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் மட்டும் 73 பெண்கள் மற்றும் அவர்களுடன் 32 குழந்தைகளும் சிறை சென்றுள்ளனர். இவர்களோடு 1164 ஆண்களும் சிறை சென்றுள்ளனர்.
தி.மு.க.தொடங்கப்பட்ட சில ஆண்டுகளில் மகளிர்அணி தொடங்க வேண்டும் என்ற வேண்டுகோள் எழுந்தது. பேரறிஞர் அண்ணா முதலில் தயங்கினார். பின்னர் இந்தி எதிர்ப்புப் போராட்டங்களில் பெண்களின் பங்குகளை நினைவு கூர்ந்தார்.அதனால் மகளிர் அணியை 21.8.1956-இல் உருவாக்கினார். என்.வி.நடராசன் வீட்டில் நடந்த அமைப்புக் கூட்டத்தில்,
சத்தியவாணிமுத்து தலைவராகவும் செயலாளர்களாக:
இராணி அண்ணாதுரை,
அருண்மொழிவில்வம்,
வெற்றிச்செல்வி அன்பழகன்.
புவனேசுவரி நடராசன்
ஆகியோரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தயாளு கருணாநிதி,
நாகரத்தினம் கோவிந்தசாமி,
சுலோச்சனா சிற்றரசு,
பரமேசுவரிஆசைத்தம்பி,
என்எசுகேயின்மனைவி டிஏமதுரம் முதலானோர் செயற்குழு உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இந்நிகழ்வை இங்கே குறிப்பிடுவதன் காரணம் முதல் இந்தி எதிர்ப்புப்போராட்டத்தில் பெ்ண்களின் தீவிர பங்களிப்பு இருந்தமையே பின்னர்க் கட்சிகளில் மகளிர் அணிகள் உருவாக அடித்தளமாக இருந்தது எனச் சுட்டிக்காட்டவே!
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
மொழிப்போர் வரலாறு அறிவோம்!
No comments:
Post a Comment