தேர்தல் என்பது கூட்டணி உலகமாக மாறிவிட்டது. எனினும் துணிந்து கூட்டணி இன்றிப் போட்டியிடுவோர் இருக்கின்றனர். அவர்களுள் நாம்தமிழர் கட்சி சீமான், அமமுக தினகரன், மக்கள்நீதி மையத்தின் கமல் பாராட்டிற்குரியவர்கள். தன்னம்பிக்கையுடன் கூட்டணி வைத்துள்ளனர் இவர்கள்.
நாம் தமிழர் கட்சி வளர்ந்து வரும் அமைப்பு. இதனைக்கண்டு ஆளுங்கட்சி அஞ்சுவதே இதன் வளர்ச்சிக்குச் சான்று. அந்த அச்சத்தின் காரணமாகத்தான் கடந்த தேர்தல் சின்னமான இரட்டை மெழுகினைக் கிடைக்கச் செய்யாமல் கரும்பு உழவர் சின்னம் அளித்துள்ளனர். அப்படியும் அச்சம் போகவில்லை. வாக்குப் பதிவுப் பொறியில் இச்சின்னம் தெளிவின்றி இருப்பது கூடத் தெரியாத அளவில் உள்ளது. இருப்பினும் அனைத்துத் தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி போட்டியிடுகிறது. 50 விழுக்காடு பெண் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
நா.த.க. எவ்வளவு வாக்குகள் பெற்றாலும் அதற்கு வளர்ச்சியே! நாளைக்கு இந்த வளர்ச்சி அக்கட்சியை நிலை நிறுத்திக் கொள்ள உதவும். எனவே, ஒரு தொகுதிக்காகக் கட்சியை அடைமானம் வைக்காமல் நாடு முழுவதும் பரவலாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சிக்குப் பாராட்டுகள்!
அ.தி.மு.க.-பா.ச.க.கூட்டணிக்குப் பெரும் அச்சுறுத்தலாக உள்ள அ.ம.மு.க. தனித்து நின்று செல்வாக்கைக் காட்ட போட்டியிடுகிறது. இ.ம.ம.க.(இந்திய மன்பதை மக்களாட்சிக் கட்சி / Social Democratic Party of India) உடன்பாடு வைத்து அதற்கு மத்தியச் சென்னைத் தொகுதியை அமமுக வழங்கியுள்ளது. பிற கட்சிகளுடன் கூட்டணி வைத்துக் கொள்ள வில்லை. பா.ச.க.வின் தலையீடு இல்லாமல் இருந்திருந்தால் அ.தி.மு.க. கட்சியும் ஆட்சியும் தினகரன் கைகளில்தான் இருந்திருக்கும். ஆனால், அவ்வாறு வராததுதான் நல்லது. வந்திருந்தால் பா.ச.க.விற்கு அடிமைப் பத்திரம் எழுதிக் கொடுத்திருப்பார். இப்பொழுது துணிந்து பா.ச.க.வையும் காங்.கையும் எதிர்த்து வருகிறார். எத்தனைத் தொந்தரவுகள் கொடுத்தாலும் அவர் மேலாங்கி நிற்கிறார்.
அச்சுறுத்தியும் பணியாததால் பசப்புச் சொற்களில் ஈர்க்ப் பார்த்தது பா.ச.க. ஆனால் அதற்கு இடம் கொடுக்கவில்லை தினகரன். தேர்தல் சின்னம் தொடர்பான தொல்லைகளே அமமுக மீது மத்திய மாநில ஆளுங்கட்சிகளுக்கு இருக்கும் அச்சத்தைக் காட்டுகிறது.
தினகரன் கையே தென் மாவட்டங்களில் ஓங்கி உள்ளது. எனவேதான் அங்கே அதிமுக ஓரிடத்தில் மட்டுமே போட்டியிடுகிறது. அது மட்டுமல்ல. தமிழக மக்கள் மதுரையில் கூடும் சித்திரைத் திருவிழா அன்று வாக்குப் பதிவை வைத்துள்ளது. வாக்குப்பதிவு நேரத்தை மதுரையில் மட்டும்தானே கூட்டி உள்ளது. போதிய விழிப்புணர்வு இல்லா மக்கள் முழுமையும் வாக்களிப்பார்கள் என எங்ஙனம் எதிர்பார்க்க முடியும்? மதுரைக்கு வரும் வெளியூர் வாக்காளர்கள் வாக்களிக்க இயலாதே! அவ்வாறு வாக்களிக்கக் கூடாது என்பதுதான் அரசுகளின் எண்ணம் எனத் தேர்தல் நாள் காட்டுகிறது. எத்தனை இடுக்கண் வந்தாலும் அஞ்சாது எதிர்கொண்டு போட்டியிடும் அ.ம.மு.க.விற்கும் பாராட்டுகள்!
எந்த் தொழில் புரிந்தாலும் எப்பணி ஆற்றினாலும் கட்சி தொடங்கேவா தேர்தலில் போட்டியிவோ தடையில்லை. அவ்வாறிருக்க நடிகர்கள் அரசியலுக்கு வரக் கூடாது என்பது சரியல்ல. நடிகர்களின் ஒப்பனைப் பூச்சையும் பிறர் எழுதித் தருவதைப் பேசுவதையும் நம்பி அவர்களை எடுத்துக்காட்டான நாயர்களாக எண்ணி ஆதரிப்பதுதான் தவறு. கமல் நடிகர் மட்டும் அல்லர். பல்துறைக் கலைஞர். திரைப்படங்களில் நல்லவர் வேடங்களில் மட்டும் நடிப்பவர் அல்லர். எனவே, திரைக்கதைப் பாத்திரங்கள் அடிப்படையில் மக்களிடம் வாக்குகளைப் பெறுவார் எனச் சொல்ல முடியாது. அவரும் ஒன்று அல்லது இரண்டு தொகுதிகளுக்காகக் கட்சியை அடகு வைத்துவிட்டுக் கூட்டணி எதிலும் இணையவில்லை. ஊழலை எதிர்த்தும் நாட்டு நலன் முழக்கங்களை முன்னிறுத்தியும் அவரின் மக்கள் நீதி மையம் பரப்புரை மேற்கொண்டு வருகிறது.
நடிகர்களுக்கு மக்கள் ஆதரவு இருக்கும் என்ற நம்பிக்கையில் அவர் இருந்தால் தவறு. எனினும் ஊழலை ஒழிக்கும் முழக்கத்தால் மக்கள் ஈர்க்கப்படுவார்கள் என நம்பியிருந்தால் தவறல்ல. ஆனால் ஊழலில் திளைக்கும் மக்கள் ஊழலுக்குத் துணை நிற்பதால் ஊழல் அடிப்படையில் எக்கட்சியையும் தோற்கடிக்க முடியாது என்பதே உண்மை. எனினும் தன் வலிமை, தன் மையத்தின் வலிமை என்ன என அறிந்து கொள்ள வாய்ப்பாகத் தனித்து அவரது கட்சி போட்டியிடுகிறது. இந்த வாக்குகள் அடுத்து வரும் தேர்தலில் அவருக்கு உதவும். இவர யாருடைய ஆதரவு வாக்குகளை அல்லது எதிர்ப்பு வாக்குகளைப் பிரிக்கப் போகிறார் என்பதைப் பொறுத்துத் தேர்தல் முடிவுகளில் மாற்றம் வரலாம். எந்தத் தொகுதியிலும் பிணைத் தொகையை மீளப் பெற முடியாத அளவு குறைவான வாக்குகள் பெற்றால் கட்சியை மேம்படுத்துவதற்கான சிந்தனை உருவாகி அடுத்தத் தேர்தலுக்கு உதவும்.
எவ்வாறிருப்பினும் தன்னம்பிக்கையுடன் தனித்துப் போட்டியிடும் மக்கள் நீதி மையத்திற்குப் பாராட்டுகள்!
வெற்றி தோல்விகளை அளவுகோலாகக் கொள்ளாமல் வாக்குகள் பெறுவதையே இலக்குகளாகக் கொண்டு புதிய களம் காணும் இவர்கள் புதிய வாக்காளர்களை ஈர்ப்பதில் கவனம் செலுத்தினால் நன்று. இவர்கள் போட்டிகளால். தோற்க வேண்டும் என்று நாம் கருதும் கட்சிகள் வெற்றி பெற நேர்ந்தாலும் இவர்களின் முயற்சிகள் பாராட்டிற்குரியனவே! வெற்றி பெறும் எனக் கருதும் அணிகளுக்கு வாக்களிக்காமல் நடுநிலையுடன் சிந்தித்து மக்கள் வாக்களிக்க இவர்களின் பரப்புரைகள் உதவும்.
இவர்களின் தன்னம்பிக்கை வெல்க!
ஒல்லும்வா யெல்லாம் வினைநன்றே ஒல்லாக்கால்
செல்லும்வாய் நோக்கிச் செயல்.(திருவள்ளுவர், திருக்குறள் 673)
நக்கீரன் இதழாசிரியர் நக்கீரன் கோபால், நேற்று(9.10.2018) விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்; சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்; பிற்பகல் எழும்பூர் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்து, பேரா.நிருமலாதேவி தொடர்பான கட்டுரைகள் தொடர்ந்து நக்கீரன் இதழில் வருவதாகவும் இவை ஆளுநரை மிரட்டுதல், ஆளுநரைப் பணிசெய்ய விடாமல் தடுத்தல் ஆகியன தொடர்பான குற்றப்பிரிவு 124.அ இன்கீழ் வருவதாகவும் காவல் துறையினர் குற்றம் சுமத்தி வழக்கு தொடுத்திருந்தனர். ஆனால் இதை உசாவிய எழும்பூர் 3 ஆவது பெருநகர நடுவர் கோபிநாத்து, குற்றச்சாட்டுபொருந்தவில்லைஎனக்கூறிநக்கீரன்கோபாலைவிடுதலைசெய்தார்.
கருத்துரிமையை மதித்து நடுநிலையுடன் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகோபிநாத்திற்குப்பாராட்டுகள்.
ஆளுநர் மாளிகை தந்த முறையீட்டின் அடிப்படையில்தான் காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
சட்டம்பற்றி ஒன்றும் அறியாப் பாமரனுக்குக்கூட இச்சட்டப்பிரிவைப் படிக்கும் பொழுது பொருத்தமற்ற குற்றச்சாட்டு என்பது நன்கு புரியும். அவ்வாறிருக்க மேல்மட்டத்தில்உள்ளவர்கள்இவ்வாறுதவறானகுற்றச்சாட்டைமுன்வைத்ததுஎவ்வாறுஎனத்தெரியவில்லை. தமிழக அரசு மூலம் நடவடிக்கை எடுக்காமல் நேரடியாக இறங்கிக் களங்கப்பட்டதும் ஏன் எனப் புரியவில்லை?
ஒருவேளை தமிழக அரசிடம் நடவடிக்கை எடுக்குமாறு கூறி அவர்கள் மறுத்துவிட்டனரோ என்ற ஐயம் ஏற்பட்டது. ஆனால் வந்துள்ள செய்திகள், மேதகு ஆளுநர், அவர் செயலர், இருவரின் அறிவுறுத்தலில் தலைமைச்செயலர் ஆகியோர் இணைந்து நடவடிக்கை எடுத்ததாகத் தெரிவிக்கின்றன. இத்தகைய செயல்பாடு மக்களாட்சிமாண்பிற்குக்கேடுவிளைவிக்கும் என்பதை உணராதது ஏன் என்றும் தெரியவில்லை?
மடியில்கனமிருந்தால்தானேவழியில்பயம்ஏற்படும்? உண்மையில்லாத செய்திக்கு ஏன் கவலைப்பட வேண்டும்? அல்லது தொடர்ந்து வரும் செய்திகளால் தன் பெயருக்குக் களங்கம் ஏற்படும் என்று கருதினால் முதலில் குறிப்பிட்டவாறு தமிழக அரசு மூலம் நடவடிக்கை எடுத்திருக்கலாம். மேதகு ஆளுநர் அலுவலகத்திலிருந்தே முறைப்பாடு வந்துள்ளதால் வழக்கு உசாவல் என்றால் எதிர் வழக்குரைஞர் கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் மேதகு ஆளுநர் அலுவலகத்தினர் விடையிறுத்தாக வேண்டும். மேதகு ஆளுநரும் உசாவல் கூண்டில் நிறுத்தப்பட வேண்டிய சூழல் எழலாம். பொதுவாக இதழ்களுக்கு வரும் அனைத்துச் செய்திகளையும் வெளியிட மாட்டார்கள். பக்கங்களும் போதா. ஆனால் வழக்கு என்றால் அனைத்துத் தகவல்களும் நீதிமன்றத்திற்கு வரும். சிலர் வேண்டுமென்றே தவறான செய்திகளை அனுப்பியிருக்கலாம், அவையும் நீதிமன்றத்தின் முன்னர் வரும். இவற்றால்ஏற்படும்களங்கம்தான்பெரிதாகஇருக்கும்.
நக்கீரன் கோபால் பல அச்சுறுத்தல் வழக்குகளைச் சந்தித்தவர். ஆதலின் வழக்குகளுக்கும் சிறைப்படுத்தலுக்கும் அஞ்சாநெஞ்சினர். அவ்வாறிருக்க மேல் மட்டம் கீழிறங்கி அச்சுறுத்த முன்வந்ததற்குக் காரணம் யாரும் பாசகவினரோ என்ற ஐயமும் வருகிறது.
காவல்துறையால் தேடப்படும் குற்றவாளி ஆளுநருடன் விருந்துண்டபொழுது இவ்வறிவுரை வழங்கப்பட்டிருக்குமோ என்ற ஐயமும் ஏற்படுகிறது. நாட்டுமக்கள் அனைவரும் நக்கீரன் படிப்பவர்கள் அல்லர். ஆனால் செய்தியிதழ்களிலும் தொலைக்காட்சிகளிலும் மாணாக்கியரை அலுவலர்களுடன் உறவு கொள்ள வைத்து ஆதாயம் அடைந்த நிருமலாதேவி, மேல்மட்டம் வரை தொடர்பிருப்பதாகக் கூறியது இடம் பெற்றது அனைவரும் அறிந்ததே! அப்படியானால் அத்தனை ஊடகங்களையும் மிரட்டும் தொனியில் நக்கீரன் கேபால் கைது செய்யப்பட்டாரா? இதற்கு மாறாகத் தொடர்பின்மையை வெளிப்படுத்தும் வகையில் சான்றாதாரங்களைவெளிப்படுத்துவதுதானேமுறையாகஇருக்கும். அவ்வாறில்லாமல் அடக்குமுறையிலும் ஒடுக்கு முறையிலும் ஈடுபட்டு யானை தன் தலையில் தானே மண்ணை வாரிப்போட்டுக் கொள்ளும் செயலைச் செய்யலாமா?
மக்கள் ஏடு/இட்டவாடா(The Hitavada) என்னும் இதழின் ஆசிரியராக இருந்தவர் நம் ஆளுநர். அவரே இதழ்களை – பத்திரிகைகளை – அடக்கி ஒடுக்கும் முயற்சியில் இறங்கலாமா? அதுவும் ஏப்பிரல் மாதம் வந்த கட்டுரைக்கு இப்பொழுது நடவடிக்கை எடுத்ததாகக் கூறுகிறார்கள். அதுவும் முறைதானா? போனது போகட்டும் வழக்கில் அசிங்கப்பட்டதாக எண்ணித் தன்மானச் சிக்கலாகக் கருதாமல் இத்துடன்நக்கீரன்மீதானநடவடிக்கையைநிறுத்திக்கொள்ளவேண்டும். இல்லையேல்மாறுதல்பெற்றுச்செல்லவேண்டும்.
குற்றம் சுமத்தப்பட்ட நக்கீரன் கோபால் விடுதலை செய்யப்பட்டார். அவருக்கு வதாட வந்த வைகோ சிறைக்காவலில் உள்ளார். அவரும் உடனே விடுதலை செய்யப்பட வேண்டும்.
அனைத்துக்கட்சித் தலைவர்களும் இதழுலகினரும் இக்கைது நடவடிக்கையைக் கண்டித்துள்ளனர். ஆனால் அமமுக துணைப்பொதுச்செயலர் ச.ம.உ. தினகரன் வரவேற்றுள்ளார். நக்கீரன் தனக்கு எதிரானது எனக் கருதி அவ்வாறு தெரிவித்துள்ளாரா எனத் தெரியவில்லை. ஆளுநர் அல்லது பாசக ஆதரவு நிலைப்பாட்டைக் காட்ட விரும்பி அவ்வாறு வரவேற்றாரா எனப் புரியவில்லை. குறைந்தது உசாவி அறிந்தபின் கைது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என்றாவது சொல்லியிருக்கலாம். எனினும் அரசியல் முதிர்ச்சியாளராகத் தோற்றமளித்தவர் தானே விரும்பிச் சறுக்கிக்கொண்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.
தனிமனிதர் மீதான ஐயப்பாட்டை நாட்டெதிர்/தேசத்துரோக வழக்காக மாற்ற எண்ணுவது அவ்வாறு முயல்வோருக்குத் தீங்கே விளைவிக்கும். எனவே எதற்கெடுத்தாலும் தேச வஞ்சகம்/இரண்டகம் எனத் திரிக்கும் போக்கிற்கு முற்றுப்புள்ளி இட வேண்டும். மக்களாட்சியின் தூணாக விளங்கும் ஊடகங்கள் காக்கப்பட வேண்டும். ஊடகஅறங்களும் பேணப்பட வேண்டும். மறைமுக நெருக்கடி நிலைக்கும் மறைமுக ஆளுநர் ஆட்சிக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். தமிழக அரசு தன்னுரிமையுடன் செயல்படவேண்டும்!
தினகரனுக்கு வெற்றிச்சூழலை உருவாக்கும் தேர்தல் ஆணையம்
அதிமுக ஆட்சி மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டுவருவது அனைவரும் அறிந்த உண்மை. இந்தச் சூழலில் சசிகலா அல்லது தினகரன்பொறுப்பிற்கு வந்தால் வெறுப்பு மேலும் மிகுதியாகும் என்ற சூழலே இருந்தது. ஆனால், இவர்களின் வளர்ச்சி கண்டு அஞ்சிய மத்திய ஆட்சி, இவர்களை வேரறுப்பதாக எண்ணி மக்களிடையேசெல்வாக்கை உண்டாக்கி வருகிறது.
நெருக்கடிநிலையினால் ஏற்பட்ட இன்னல்களால் மக்கள் இந்திராகாந்திக்கு 1977 இல் தோல்வியைத் தந்தனர். அவர் கட்சியிலிருந்தும் நீக்கப்பட்டார். ஆனால் அவர் 1980 தேர்தலில் வெற்றிபெற்று அரசை அமைத்தார். அவரது அணியே/கட்சியே அ.இ.பே.(காங்கிரசு) ஆனது. இதுபோல்சூழல் அதிகமுகவிலும் இப்பொழுது உள்ளது.
மக்களின் ஆதரவும் ஆதரவின்மையும் மாறிமாறி நிகழ்வனவே! கட்சியிலிருந்து நீக்கப்பட்டாலும் மக்களால் ஏற்கப்பெற்றால் ஒருவர் ஆட்சியமைக்கவும் முடியும். இதுவே நம்நாட்டு அரசியல் சூழல். இச்சூழலில் தினகரன் நிலைப்பாட்டைப் பார்த்தால் ஆட்சிகளின் செயல்பாடுகளால், தாழும் நிலையிலிருந்த அவர் ஆளும் நிலைக்குத் தள்ளப்படுகிறார் என்பதே உண்மை.
அவருக்கு எதிரான தேர்தல் ஆணையத்தின் அல்லது அரசுகளின் நடவடிக்கை யாவும் அவருக்க்கு உரமாகவே அமைகின்றன.
இப்பொழுது எந்தக்காரணம் கூறி, இரட்டை இலை பன்னீர்-எடப்பாடிஅணிக்குத் தரப்பட்டதோ அந்தக் காரணத்தைக் கூறித்தான் சசிகலா அணிக்கு இரட்டை இலை கோரப்பட்டது. அப்பொழுது ஏற்கத்தக்கதல்ல என்ற காரணம் இப்பொழுது பாசகவின் செல்லப்பிள்ளைகளுக்கு வழங்க ஏற்றதாய் அமைந்துவிட்டது. இதனால், நடுநிலையாளர்களும் பாசகவின் ஆதிக்கத்தை விரும்பாத கட்சியினரும் தினகரன் பக்கம் சாய்கின்றனர். இரட்டை இலை மறுப்பு, தினகரனுக்கு ஆதாயம் என்னும் நிலையைத்தான் உருவாக்கிவருகிறது.
பன்னீருக்கு ஆதரவு என்பது மாயை. எடப்பாடி பழனிச்சாமிக்’கு ஆதரவு என்பது ஆட்சி தரும் கவசம். நாளை இந்தக் கவசம் அகற்றப்பட்டால், ஆதரவு காணாமல் போய்விடும். இந்த உண்மை அவர்களுக்கும் தெரியும். இருந்தும் அதிகாரவலிமையுடையவர்களின் ஆட்டத்தால் இவர்கள் ஆட வேண்டிய நிலையில் உள்ளனர். இருப்பினும்தினகரனைக் கண்டு அஞ்சி எடுக்கும் நடவடிக்கைகள் அவருக்குக் கேடயமாக மாறுகின்றன.
இரட்டை இலை இல்லை என்றவர்க்குச் சின்னமாகத் தொப்பி தருவதில் என்ன அச்சம்? அதுதான் தரவில்லை, சமைகலன்(குக்கர்)தந்த பின்னும் ஏன் அச்சம்? இதுவரை தேர்தலில் சின்னம் தரப்படும் முன் மேற்கொள்ளும் தேர்தல் பரப்புரைக்குத் தடை விதித்ததில்லை. ஆனால், சின்னம் இல்லாமல் பரப்புரை கூடாது என 4 நாள் தினகரன் தரப்பாருக்குப் பரப்புரைக்குத் தடை ஏன்? இத்தகைய அச்சமே தினகரனின் செல்வாக்கைக் கூட்டுகின்றது.
அதிமுகவின் மீதுள்ள வெறுப்பு தினகரன் பக்கம் சாராமல் அவரைக் காப்பாற்றும் செயல்களே அவருக்கு எதிரான நடவடிக்கைகள்.
அதிமுகவில் தேவை ஒற்றுமையே!
ஆளும் அதிமுகவில் உள்ள எடப்பாடி பழனிச்சாமியும் பன்னீர்செல்வமும் திறமைமிக்கவர்களே! இல்லாவிட்டால், இப்பொழுது பதவிகளில் இருக்கமாட்டார்கள். அதிமுக தோல்வியுற்றால், பாசகவின் ஆளுமைதான் காரணம் எனச் சொல்லி அதன் ஆதிக்கத்தைக் குறைக்கும் வாய்ப்பு ஏற்படும் என எண்ணி அதன் தோல்வியை அதிமுகவினரே விரும்புகின்றனர். இன்றைய சூழலில் அதிமுகவில் உள்ள மனக்குறைவர்கள் வலிமையான எதிர்க்கட்சியான திமுகவின் பக்கம் சென்றிருக்க வேண்டும் ஆனால், அத்தகைய ஆளும் வாய்ப்பைத் திமுக பெறவில்லை. அதற்குரிய நிலையான வாக்குவங்கி பெருகவில்லை. அதிமுகவில் உள்ளவர்கள் அதிமுகவில் உள்ள ஏதேனும் ஓர் அணியின் பக்கம்தான் இருக்க விரும்புகின்றனர். தினகரனின் சிரிப்பும் அரவணைப்பும் தொண்டர்களை அவர் பக்கம் ஈர்க்கின்றன. எனவே, எதிர்ப்பு அரசியலைக் கைவிட்டு இணைப்பு அரசியலை நாடுவதே அதிமுகவினருக்கு நன்மை தரும்.
சமவாய்ப்பு கோருவது பன்னீர் அணிக்கு ஏற்றல்ல!
இரண்டு அணிகள் இணைந்ததாகச் சொல்லப்பட்ட பின்னரும் பன்னீர் அணி, பழனிச்சாமி அணி எனச் சொல்லிக்கொண்டிப்பதால் பயனில்லை. பழனிச்சாமி அணியில் சமஉ எண்ணிக்கையில் ஏறத்தாழ பத்தில் ஒரு பங்கு சமஉறுப்பினர்களை மட்டும் கொண்டிருந்த பன்னீர் அணியினர் இணைப்பிற்குப் பின்னர்ச் சமவாய்ப்பு கேட்பதும் முறையல்ல! இணைந்ததாகச் சொன்ன பிறகு அந்த அணி, இந்த அணி என்று சொல்வது எப்படி இணைந்ததாகும்? அதிமுகவின் ஒற்றுமை இன்மைதான் பாசகவின் அடிமையாக இருக்கச்செய்கிறது என்பதை உணர வேண்டும். எனவே, தங்கள் நலனுக்காகவும் கட்சி நலனுக்காகவும் ஒரே கட்சியாக இணைய வேண்டும்.
அதே நேரம் இவர்கள், சசிகலா, சசிகலா குடும்பத்தினரைப் பணிந்து நின்றவர்களே! பன்னீர் பிரிந்து நின்றபொழுது ஏன் அவ்வணியில் இருந்த சட்டமன்ற உறுப்பினர்களை நீக்கவில்லை. நாளை அவ்வணி தன் பக்கம் வரும் என்ற எதிர்பார்ப்பில்தான்! பாசக பின்னால் இருந்து இயக்காவிட்டால், ஆளும் அதிமுகவினர், இன்றைக்கும் சசிகலா-தினகரன் துதிபாடிக்கொண்டுதான் இருப்பர். இதனை அக்கட்சித்தலைவர்கள் உணர வேண்டும். தினகரனும் இணைந்த அதிமுக செயல்படுவதற்கு என்ன செய்ய வேண்டுமோ அதனைச் செய்து கட்சியைக் காப்பாற்ற வேண்டும்.
இடைத்தேர்தலில் தினகரன் வெற்றி பெற்றால் அல்லது ஆளுங்கட்சியைவிடக் கூடுதல் வாக்கு பெற்றால், கட்சியில் பெரும்பான்மையர் அவர் பக்கம் சென்றுவிடுவர். நிழலாட்சியால் முதலிடத்தைப் பெற இயலவில்லை என்றால், தேர்தலே ஒத்திவைக்கப்படும்.
பொதுத்தேர்தல் வந்தால் திமுக ஆட்சியைக் கைப்பற்றும் சூழலும் வரலாம். அதிமுக எதிர்க்கட்சியாக மாறினாலும் ஒற்றுமை இருந்தால்தான் கட்சி நிலைத்து நிற்கும். ஆட்சி நிலைக்க வேண்டும் என்பதைவிடக் கட்சி நிலைக்க வேண்டும் என்பதே இன்றைய தேவை. எனவே, எந்நிலை வந்தாலும் கட்சிக்குத் தேவை ஒற்றுமை என்பதைக் கட்சித்தலைவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
அதிமுகவின் ஒற்றுமை இன்மை அதன் வலிமையைக் குறைத்து நாட்டிற்குக் கேடு நல்கும். “ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு” என்பதைக் கட்சியினர் புரிந்து கொள் வேண்டும்.
சசிகலா, தினகரன் தொடர்பான கட்டுரைகளப் படிக்கும் நண்பர்களில் பெரும்பான்மையர், “உங்கள் கட்டுரைத் தலைப்புகளைப் பார்த்து நாங்கள், சசிகலா குடும்பத்தினருக்கு ஆதரவாக எழுதுகிறாரே! என எண்ணுவோம். ஆனால் படித்து முடித்ததும் வழக்கம் போல் நடுநிலையாகவும் துணிவாகவும் எழுதுவதைப் புரிந்து கொள்வோம். மாறுபட்ட கோணத்தில் அமையும் உங்கள் கட்டுரைகள் தொடரட்டும்!” என்கின்றனர். சிலர் “அதிமுகவினரே சசிகலா குடும்பத்தைப் புறக்கணிக்கும் பொழுது அவர்கள் சார்பாக எழுதுகிறீரகளே!” என்று கேட்கின்றனர். மூவர் ஊழல்பேர்வழிகளை ஆதரித்துத் திருவள்ளுவர் பெயருக்கே களங்கம் விளைவிப்பதாக முகநூலில் பதிந்துள்ளனர். மேலும் சிலரும் இதுபோன்ற எண்ணத்தில் இருக்கலாம்.
என்னைப் புரிந்து கொண்டுள்ள பெரும்பான்மை நண்பர்களுக்கு நன்றி.
நம் விருப்பம் ஒன்றாகவும் நாட்டு நடப்பு வேறாகவும் இருக்கும்பொழுது நாட்டுநடப்பின் எதிரொலியாக எழுத வேண்டியது கடமையாகும். எடுத்துக்காட்டிற்கு ஒன்றைக் கூற விரும்புகிறேன். நடந்து முடிந்த பொதுத்தேர்தலுக்கு முன்னரான தொலைக்காட்சி உரையாடல்ஒன்றில், |சென்னை, கடலூர் வெள்ளப் பாதிப்புகளால் அதிமுக தோல்வியுறும் என அனைவரும் தெரிவிக்கும் பொழுது நீங்கள் அதிமுக வெற்றி பெறும் என்று எப்;படிக் கூறுகிறீர்கள்?” எனக் கேட்கப்பட்டது. “அதிமுக வரக்கூடாது என்பதுதான் என் விருப்பம். ஆனால், அதிமுக வெற்றி பெறும் என்பது நாட்டு நிலை. சென்னையும் கடலூரும் மட்டும் தமிழ்நாடு அல்ல! இவற்றை மாற்றும் வல்லமை அதிமுகவிற்கு உண்டு. எனவே, இவையும் கடந்து போகும். அதிமுகதான் வெற்றி பெறும்” என்றேன். அவ்வாறுதான் நடந்தது. எனவே, நம் விருப்பத்தைத் தெரிவிப்பதுடன் நாட்டு மக்களின் போக்கையும் தெரிவிப்பது நம் கடமையாகிறது.
தமிழுக்குத் தலைமையும் தமிழர்க்கு முதன்மையும் தரக்கூடிய தமிழ்த்தேசியர்களே ஆட்சி அமைக்க வேண்டும் என்பதே நம் விருப்பம். ஆனால் தமிழ்த்தேசியர்களில் ஒரு பகுதியினர் தேர்தலைப் புறக்கணிக்கின்றனர். பெரும்பான்மையர் திராவிடத்தை எதிர்ப்பதாகக் கூறிக்கொண்டு ஆரியத்திற்குப் பாய் விரிக்கின்றனர். எனவே, ஒப்பீட்டளவில் குறைந்த தீமையுடையவரையே தேர்ந்தெடுக்க வேண்டியுள்ளது.
தமிழ், தமிழர் நலனை அடித்தளமாகக் கொண்டு திமுக எழுப்பப்பட்டிருந்தாலும் அண்மைய போக்கு அதற்கு மாறாகவே உள்ளது. ஈழத்தில் பெருமளவிலான இனப்படுகொலை நடைபெற்றபொழுதும் அமைதி காத்து உடன்பட்டது, இலங்கைத்தமிழரையும் ஈழத்தமிழரையும் சிங்களத் தமிழர் என்று சொல்லி இன வரலாற்றை அழிப்பது முதலான தலைமையின் போக்கை அடிமைத்தனத்தில் ஊறி மனச்சான்றிற்கு எதிராகக் கட்சியினர் ஆதரிக்கின்றனர். ஓழிக்கப்படவேண்டிய பேராயக்(காங்.) கட்சியைக் காப்பதற்குத் திமுக துணை நிற்கிறது. தோல்விகளைச் சந்தித்த பின்பும் மனத்தை மாற்றிக்கொள்ளாமல் வால்பிடிக்கும் திமுக இன்றைக்கு ஆதரிக்கப்படவேண்டிய நிலையில் இல்லை.
அதிமுகவிற்குத் தரும் ஆதரவு திமுகவைத் திருத்த உதவும் என்பதன் அடிப்படையிலும் தொடர்ந்து திமுக காங். நிலைப்பாட்டில் இருப்பதைத் தடுக்கவும் அதிமுக பக்கம் தமிழ்உணர்வாளர்கள் சாயும் நிலை ஏற்பட்டது. ஆனால் இப்பொழுது மாற்றுஅணித் தலைமையைவீழத்துவதற்காகப் பாசக காலடியில் வீழ்வதையே நோக்கமாகக் கொண்டு பதவியில் உள்ளதலைவர்கள் செயல்படுகின்றனர்.
தமிழ்ஈழ ஆதரவு தீர்மானத்திற்காக அதிமுகவை ஆதரித்தாலும் ஈழத்தமிழர் முகாம்கள் வதைக்கூடங்கள் போல் உள்ளதாகக் கூறப்படுவதும் அவர்களுக்குரிய உரிமைகள் மறுக்கப்படுவதும் இதனைப் பாராட்டுவதற்குரிய தகுதியிழப்பாகவே உள்ளன.
எனினும் இன்;றைய சூழலில் மதவெறியும் இனவெறியும் மொழி வெறியும் கொண்ட ஆட்சியின் தலைமையால் இந்தியா இன்னல்களைச் சந்தித்துக் கொண்டுள்ளது. வலிமையான அரசு இருந்தால்தான் தமிழகம் காப்பாற்றப்படும். எதிர்க்கட்சியான திமுக தேர்தலின்றி ஆளுங்கட்சியாக மாறும் சூழல் இல்லை. எனினும் ஆட்சிக்கலைப்பு அச்சம் ஆள்வோரிடம் உள்ளது.
நேற்றுவரை சசிகலா குடும்பத்தினரிடம் வீழ்ந்து கிடந்தவர்கள் இன்று எழுந்து நிற்கிறார்கள் என்றால் சொந்தக்கால்களில் அல்ல! பாசக இல்லையேல் இன்றைய ஆட்சி இல்லை என்பதை அமைச்சர் பெருமக்களே பொதுக்கூட்டங்களிலேயே தெரிவிக்கின்றனர். எனவே பதவிகளில் இருந்து ஆட்சியையும் கட்சியையும் கைப்பற்ற எண்ணுவோரால் ஆட்சிக்கும் கட்சிக்கும் அழிவே தவிர நன்மை விளையாது. முதல்வர், துணை முதல்வர், பிற அமைச்சர்களுக்குப் பதவி இல்லையேல் செல்வாக்கு செல்லாக்காசாக மாறும்.
சசிகலா சிறையில் இருக்கும் சூழலிலும் தினகரன் நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர் முதலான எப்பொறுப்பில் இல்லாத பொழுதும் கட்சித் தொண்டர்களைப் பிடிப்பில் வைத்துள்ளார். தமிழகக்கட்சிகள் யாவுமே மையத்தின் அடிமையாகத்தான் உள்ளன. என்றாலும் சசிகலா அல்லது தினகரன், பாசக எண்ணும் அளவிலான அடிமைத்தனத்தில் இல்லை என்பது தெரிகிறது. பாசகவிற்கு ஆட்சியில் உள்ளோர் அடிமையாக இருப்பதன் மூலம் கால்ஊன்ற முயல்கிறது. செல்வாக்கில்லாத இருவரை நம்பி ஏமாந்ததுபோதும் என்று இவர்களை அடிமைப்படுத்தினால் எண்ணம் எளிதில் அமையும். ஆனால் அவ்வாறு அடிமைப்படுத்துவது எளிதாக இல்லை என்பதை அரசியல் போக்கு காட்டுகிறது.
செயலலிதாவின் மருத்துவமனைக் காலம், அவசரக்கதியில் அமைச்சரவை பங்கேற்றமை முதலான யாவுமே பாசகவின்றி ஓர் அணுவும் அசையவில்லை என்பதைக் காட்டுகிறது. தமிழிசை முதலான பாசகவினர் முன்கூட்டி மணிஓசையை எழுப்பியதற் கிணங்கவே ஆட்சியிலும் கட்சியிலும் ஆட்டங்கள் நிகழ்கின்றன. எனவே, “எங்கள் அப்பன் குதிருக்குள் இல்லை” எனச் சொல்லும்; பாசகவின் உண்மை முகம் உலகிற்குத் தெரிகிறது.
இச்சூழலில் நடைமுறையில் இருகட்சி ஆட்சியில் உள்ள தமிழ்நாட்டில் ஆளுங்கட்சி வலிமைiயாக இல்லாவிடில் நாட்டிற்கும் கேடுதான். இந்திய அரசியல் கட்சிகளின் அடையாளமாக ஊழல் மாறிப்போயுள்ள காலக்கட்டத்தில் ஊழலை அடிப்படையாகக் கொண்டு யாரையும் அளவிட இயலாது. சசிகலா குடும்பத்தினர் பதவிப்பொறுப்புகளில் இல்லாத பொழுது ஊழல் புரிந்தனர் என்றால் அதற்குத் துணை நின்ற பதவியாளர்கள்தாம் முதன்மைக் குற்றவாளிகள். அவர்களை உத்தமர்களாகக் கூறிக்கொண்டு இவர்களை மட்டும் குற்றம் சுமத்திப் பயனில்லை.
சசிகலா குடும்பத்தினரை அகற்றுவதற்குப் பாசக என்ன சொல்கிறது?
தமிழ்நாட்டில் சிறுபான்மையினராக உள்ள குடும்பத்தினரிடம் ஆட்சி அதிகாரம் இருப்பது நல்லதல்ல என்பதால்தான் சசிகலா குடும்பத்தினரை ஓரங்கட்டுவதாக, மிகமிகச் சிறுபான்மை வகுப்பினராக இருந்து கொண்டு நாட்டை ஆட்டுவிக்கும் பாசக தலைவர் ஒருவர் கூறியுள்ளார்.
தமிழரல்லாதவர் ஆட்சி தமிழ்நாட்டில் அமைய வேண்டும் அல்லது தமிழரல்லாதவர்க்கு அடிமையான ஆட்சி அமைய வேண்டும் என்பதே பாசக நோக்கம்.
தனி ஒரு செயலாகப் பார்க்கும் பொழுது சசிகலாமீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள், பொதுவாகப் பார்க்கப்பட்டால் குற்றப்பட்டியலில் சேர்க்கப்படவேண்டியவர்கள் மிகுதி எனப் புரிந்து கொள்ளலாம்.
சிறைஅறையிலிருந்து நேர்முக அறைக்குச் சசிகலா சென்று வருவதைச் சிறைச்சாலையை விட்டு வெளியே செல்வதுபோல் காட்டுதல்போன்ற பல செய்திகளும் இடைத்தேர்தல் ஒத்திவைப்பு, இரட்டை இலை முடக்கம், அடக்குமுறை வழக்குகள் யாவும் அதிகார வலிமையால் அடக்குவதற்கான முயற்சிகளே! இவர்கள் அடிபணிந்தால், அடுத்த நொடியே காட்சிகள் மாறும். இவர்கள் உத்தமர்கள் ஆவார்கள்! கட்சியையும்ஆட்சியையும் காக்க வந்த தெய்வங்கள் ஆவார்கள்.எனவே, புனையப்படும் வழக்குகள், விரட்டியடிப்பதற்கான நடவடிக்கைகள் அடிப்படையில் நாம் எதையும் எடைபோடக்கூடாது.
தேர்தல் வந்தால் தி.மு.க. வெற்றி அடையும் என்ற எண்ணத்தில் ஆட்சிக்கலைப்பும் கூடாது; பாசகவை எதிர்க்கும் அதிமுக தலைவர்களும் ஆட்சிக்கு வரக்கூடாது என்னும் இலக்கில் பாசக செயல்படுவதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
செயலலிதா மருத்துவமனையிலிருந்த பொழுதே அவர் எதிர்த்த திட்டங்களுக்கு அதிமுக ஆதரவு அளித்துள்ளதால், செயலலிதாவின் உடல்நிலை பற்றிய முழு விவரமும் மத்திய அரசிற்குத் தெரியாமல் இருக்காது. எனவே, சசிகலாவை மட்டும் குற்றவாளியாகக் கூறுவது பொருந்தாது.
பொதுவாக, தேசிய உணவுப்பாதுகாப்புச்சட்டம், உதய் மின்திட்டம், பொதுநுழைவுத்தேர்வு(NEET) திட்டம், பொருள்-சேவை வரித்திட்டம் (G.S.T.) என மேனாள் முதல்வர் செயலலிதாவால் ஏற்கப்பெறாத திட்டங்களை, அவரைத் தொடர்ந்து அமைந்துள்ள அதிமுக அரசுகள் அவசரக்கதியில் ஏற்றுள்ளன.
இவ்வாறு செயலலிதா தமிழக நலன் கருதி எதிர்த்த பல கொள்கைகள் தமிழர்நலனுக்கு ஊறுநேர்விக்கும் வகையில் கைவிடப் படுகின்றன.
தமிழ்நாடு சமற்கிருத நாடாகவும் இந்தி வீடாகவும் மாற்றப்படுவதற்கான பாதையில் பாசக சென்று கொண்டுள்ளது.
கதிராமங்கலம், நெடுவாசல் இயற்கை எரிவாயு திட்டங்கள் முதலான பலவும், அரசிற்கு எதிராக முழங்குவோர் கதை செய்யப்படுவதும் பாசக ஆட்சியின் விருப்பத்திற்கேற்பவே நிகழ்கின்றன.
ஆளுங்கட்சி வலிமையாக இருப்பதன் மூலமே இவற்றைத் தடுக்க முடியும்.
தினகரனுக்கு மக்கள் செல்வாக்கு இல்லையேல் இராதாகிருட்டிணன் தொகுதிச் சட்டமன்ற இடைத்தேர்தல் நடத்தப்பட்டிருக்கும். செல்வாக்கு உள்ளவர்களை ஒடுக்கப் பாசக முயன்றுவருவதால் அதற்கு எதிராக எழுத வேண்டியுள்ளது. இதனால், சசிகலா, தினகரன் தரப்பு உண்மைகளையும் எழுத வேண்டியுள்ளது. இயல்பான போக்கில் விட்டிருந்தால் காணாமல் போயிருக்க வாய்ப்பு இருந்ததை அரசுகள், அதிகார வலிமையால் குறுக்குவழிகளில் செயல்பட்டு வளரவிட்டுள்ளன. அத்தகைய சூழல்களில் ஒன்றுதான் பாசகவின் ஆளுங்கட்சியை ஒடுக்கும் திட்டத்தை எதிர்ப்பதற்காக நாமும் சசிகலா, தினகரன் வஞ்சிக்கப்படுவதையும் குறிப்பிடச் செய்கின்றது.
ஊழல் பெருச்சாளிகள், சுண்டெலிகளை விரட்ட முயலுவதுபோல் நடிப்பதால், நாம் முதலில் பெருச்சாளிகளை விரட்ட வேண்டும். பின்னர் சுண்டெலிகளை விரட்டலாம். இந்த நோக்கில் எழுதப்படுவன சசிசலா., தினகரன் ஆதரவு குரல்போல் மாறிவிடுகின்றன.
தமிழ்நாட்டில் பாசக வேரூன்றி கிளை பரப்பக்கூடாது என்றால் நேர்மையைமட்டும் அளவுகோலாகக் கொள்ளாமல் தமிழ்நாட்டின் நலன்களுக்காக நாம் குரல் கொடுக்க வேண்டும். ஆதலின் அதிமுகவும் திமுகவும் வலிமையாக இருக்க வேண்டும்.
தமிழகக்கட்சிகள் யாவும், தமிழர் நலனையே கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும். தமிழுக்கும் தமிழர்க்கும் முதன்மை அளிக்கும் கட்சிகளையே மக்கள் ஆதரிக்கும் சூழலும் உருவாக வேண்டும்.
இன அழிப்பு, மொழி அழிப்பு கட்சிகளை வளரவிடாமல் தடுப்போமாக!
மனத்தில் பேராசை, மான உணர்வில் ஊனம், மாசுபடியும் செயல்களில் மகிழ்ச்சி ஆகியன ஆட்சித்தலைமைக்குக் கேடு நல்குவன. அத்தகைய ஆட்சியை அகற்ற வேண்டியது மக்கள் கடமை.