Tuesday, August 28, 2012

பழமொழிகளில் அறிவியல் செய்திகள் Science in proverbs


பழமொழிகளில் அறிவியல் செய்திகள்

தரவு:இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 28/08/2012நட்பு

பழமொழிகளில் அறிவியல் செய்திகள்
முந்தைய பதிவைக்காண இங்கே அழுத்துங்கள்

16.  ஒதியமரம் பெருத்தாலும் உத்திரத்துக்கு ஆகாது.
17. கம்புக்குக் கால் உழவு.
18. கரும்பைக் கெடுக்கக் கரையான் பூச்சி.
19. கரும்பை விரும்ப விரும்ப வேம்பு.
20. களர் நிலத்தில் கரும்பு வை.

ஓணம் தமிழ்நாட்டு விழாவே!

ஓணம் தமிழ்நாட்டு விழாவே!

இலக்குவனார் திருவள்ளுவன்


மக்கள் விரும்பி -  விழைந்து – கொண்டாடப்படும் நாளே விழாவாகும். பழம்காலம் முதல் – பண்டு தொட்டு -கொண்டாடப்படும் விழா பண்டிகையாகின்றது. இவ்வகையில், ஆவணித்திங்கள் திருவோண நாளில் கேரள மக்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் விழா ஓணம். உண்மையில் ஓண நன்னாள் எனப் பழந்தமிழரால் கொண்டாடப்பட்டதே  இவ்விழா.

கடந்த ஆயிரம் ஆண்டுகளாக ஓணம் கொண்டாடப்படுவதாகக்  கேரள மக்கள் தெரிவிக்கின்றனர். இதில் குறிப்பிடத்தகுந்த ஒன்று பத்துநாள் கொண்டாடப்படும் இவ்விழாவின் பத்தாம் நாளாகிய ஓணத்தன்று யானைகளைச் சிறப்பாக அழகூட்டி நல்லுணவு படைத்து ஊர்வலமாக அழைத்து வருவது.


இன்றைய கேரளம் என்பதே முந்தைய செந்தமிழ் வழங்கிய சேரநாடுதானே. தாங்கள் தமிழர் வழி வந்தவர் என்பதையும் தங்கள் மொழித் தமிழ்ச்சேய் மொழி என்பதையும் மறைத்து விடுவதால் உண்மையான வரலாறு அந்நாட்டு மக்களுக்கே தெரிவதில்லை. சேரநாட்டுச் சிறப்பையும் சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியச் சிறப்பையும் கேரளச்சிறப்பாகவும் மலையாளச் சிறப்பாகவும் சொல்வதுமே அவர்கள் வழக்கம். கேரளத்தினர், பிற தமிழ்ச் சேய் இனத்தவரைப் போல்  தமிழ்ப் பகை உணர்வுடன் நடந்து கொள்வதால் தமிழ்வழிச் சிறப்பை மறைப்பதில் பெருமை கொள்கின்றனர். கானமயிலாடக் கண்ட வான்கோழி தானும் சிறகு விரித்து ஆட முற்படுவதுபோல் மலையாளத்திற்குச் செம்மொழித்தகுதி கேட்கையிலும் சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்களையே தங்கள்  தொல் இலக்கியங்கள் போல் காட்டி உள்ளனர். எனவே, தமிழர்க்குரிய விழாக்களில் ஒன்றே ஓண நன்னாள்  என்பதை ஏற்க மாட்டார்கள். எனினும்  அருகிக் காணப்படும் நடுநிலையாளர் களுக்காகவும் நமக்காகவும் இவ்வுண்மையை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

புலவர் மாங்குடி மருதனார் அவர்களால் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பெற்ற இலக்கியம்தான் மதுரைக் காஞ்சி. மதுரையை நன்கு படம் பிடித்துக் காட்டியிருப்பார் சங்கப்புலவர். மதுரை மாநகரின் அன்றாடநிகழ்வுகளைக் குறிப்பிடுகையில் ஓண நன்னாள் கொண்டாடப்படுவது குறித்தும் பின்வருமாறு கூறியுள்ளார் :

கணம் கொள் அவுணர்க் கடந்த பொலந் தார்
மாயோன் மேய ஓண நல் நாள்
(மதுரைக்காஞ்சி: 590-591)
கூட்டமாகத் திரண்டு வந்த அவுணர்களை வெற்றி கண்ட மாயோன்(திருமால்) தோன்றிய ஓண நன்னாளில் விழா எடுத்தமையைக் குறிப்பிடுகின்றார் புலவர். இதைத் தொடர்ந்து,

சுரும்பு ஆர் கண்ணிப் பெரும் புகல் மறவர்
கடுங் களிறு ஓட்டலின், காணுநர் இட்ட
(மதுரை க்காஞ்சி 596-597)
என்னும் அடிகள் மூலம், வண்டு மொய்க்கும் பூமாலைகள் அணிந்த யானைகளிடையே நடக்கும் போரினைக் குறிப்பிடுகிறார். எனவே, ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஓணநாளன்று யானையை அழகு படுத்துவது வழக்கமாக இருந்துள்ளது.

ஓணம் ஏன் கொண்டாடப்படுகிறது எனக் கேரளர்கள் கூறுவதைப் பார்ப்போம். மாவலி  (மாபலி)என்னும் மன்னன் சிறப்பான முறையில் கேரளத்தைஆட்சி செய்து வந்தானாம். திருமாலே அவரிடம்  வாமனனாகக் குள்ள வடிவம்பெற்று வந்து மூன்றடி மண் தருமமாகக் கேட்டாராம். (கொடுப்பது கொடை என்பது போல் தருவது தருமம் எனப்படும்.) மன்னன் கொடுக்க இசைந்ததும் பேருருவம் கொண்டு ஓரடியைப் பூமியிலும் மற்றோர் அடியை வானத்திலும் வைக்க மூன்றாம் அடி வைக்க இடமில்லையாதலால் மன்னன் தன் தலையில் வைக்கச் சொன்னானாம். அவ்வாறே மன்னனின் தலையில் மூன்றாம்அடியை வைத்து அவனைப் பாதாளத்தில் தள்ளிவிட்டாராம். கொல்லப்பட்ட மன்னன் மாவலி தான் மக்கள் மீது மிகுந்த அன்பு கொண்டுள்ளதால் ஆண்டிற்கு ஒருமுறை அவர்களைச் சந்திக்க  வரம் கேட்டானாம்.  திருமால் வரம் தந்தாராம். அவ்வாறு பாதாள உலகில் இருந்து ஆண்டு தோறும் வரும் மன்னன் மாவலி தங்கள் இல்லங்களுக்கும் வருவார் என நம்பி மக்கள் அழகுக் கோலங்கள் இட்டு அவரை வரவேற்கின்றனராம்.

இறைவன் அருள் நிறைந்தவன்.  பொல்லாதவரிடமே அருள்காட்ட வேண்டிய அவர் மக்களுக்காக நல்லாட்சி செய்யும் மன்னனை வஞ்சகமாக ஏமாற்றிக் கொன்றார் என்பது ஏற்கும்படி இல்லை. கேட்ட நிலத்தைக்கொடுத்த பின்பு அதைப் பெற்றுக்  கொண்டு செல்லாமல் அருள் நிறைந்து வழங்கிய மன்னனைக்  கொல்ல வேண்டிய தேவை என்ன வந்தது? உண்மையில் அவ்வாறு யாரேனும் கொன்றிருந்து கடவுள் மீது பொய்யாகப் புனைந்துரைக்கவும் வழியில்லை. ஏனெனில் கொடை பெற்றவன் கொல்ல வருகின்றான் என்றால் மா(பெரும்) வலிமையுடையவன் என்பதால் மாவலி எனப் பெயர் பெற்ற மாவீரன் அமைதி காத்திருக்க மாட்டான். சுற்றிலும் உள்ள வீரர்களும் ஆன்றோர்களும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க மாட்டார்கள். ஆரியக்கதைகளில் நல்லவன் கொல்லப்படுவதும் உயிர் பிரியும் தறுவாயில் கொன்றவனிடமே  வரம் கேட்டுத் தான்  மறையும் நாளைக் கொண்டாடும்படிக் கூறுவதும் வழக்கமான ஒன்றுதான். அதுபோல் புத்தாண்டாகக்கொண்டாடப்பட்ட நாள் புத்தாண்டுத் தொடக்கம் மாறிய பின்பும்  கைவிடப்படாச் சூழலில் கட்டப்பட்ட கதையே மாவலி பற்றிய கதை. இக்கதை முன்னரே தோன்றியிருப்பின் மதுரைக் காஞ்சியில் புலவர் மாங்குடி மருதனார் அதைக் குறிப்பிட்டிருப்பார். எனவே, கேரளம் உருவான காலத்தில்தான் இக்கதை பிறந்திருக்க வேண்டும்.

ஓணம் விழாவிற்குரிய கதை பகுத்தறிவிற்கு ஏற்றதல்ல  என்பதால் அதனைக் கொண்டாட வேண்டா என  எண்ண வேண்டா. அறிவுக்குப் பொருந்தாக் கதைகளைக் கற்பிக்காமல் இருந்தால் போதும். தொடக்கத்தில் ஆவணித் திங்களே ஆண்டுப்பிறப்பாக இருந்தது. அப்பொழுது ஆண்டுப்பிறப்பை வரவேற்கும் வகையில் ஓண நன்னாள் கொண்டாடப்பட்டது. பின்னர் தைத் திங்கள் ஆண்டுத் தொடக்கமாக மாறிய பின்பு ஓணம் பிற தமிழ்ப்பகுதிகளில் மறைந்து விட்டது. ஆனால், மாயோன் மேய காடுறை உலகம்  என்கின்றார் அல்லவா தொல்காப்பியர்?  மாயோன் மேய ஓண நல் நாள் என்றல்லவா சொல்லப்படுகின்றது. எனவே மாயோனுக்குரிய காட்டுலகம் சார்ந்த மலை நாடான சேரளத்தில் -  கேரளத்தில் அவ்விழா தொடர்ந்து கொண்டாடப்பட்டு வருகிறது.

தன்மதிப்பு இயக்கக் கோட்பாட்டாளரான பேராசிரியர் சி.இலக்குவனார்  தீபாவளியைக் கொண்டாடுவதில்லை. எனினும் அதனைக் கொண்டாடுவது குறித்து அவர், காலங்காலமாகக் கொண்டாடிய விழாவைக் கைவிடும் போக்கில் மக்கள் இல்லை. எனவே, தீபாவளி கொண்டாடுவதற்குக் கூறப்படும்  பொய்யான கதைகளைக் கற்பிக்காமலும் சிக்கனமாகக் கொண்டாடும்படி அறிவுறுத்தியும் கொண்டாடச் செய்ய வேண்டும். திருவிழா என்பது மக்களுக்கு உற்சாகமும் உற்பத்தியாளர்களுக்கும் வணிகர்களுக்கும் பொருள்வரவும் தரக்கூடியதாக உள்ளது. எனவே, எளியமுறையிலும் இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கு அளிக்கும் வகையிலும் கொண்டாட வேண்டும் என்பதை மக்களுக்கு வலியுறுத்த வேண்டும் என்றார்.
தீபாவளிக்குப்பேராசிரியர் கூறியதே ஓணத்திற்கும் பொருந்தும். களைப்பை நீக்கும் களிப்புடனும் உவகை தரும் உற்சாகத்துடனும் கொண்டாடப்படட்டும் ஓணம்! ஓணம் கொண்டாடும் மக்களுக்கு நம் வாழ்த்துகளும் உரித்தாகட்டும்! அதே நேரம் அவ்விழாவைக் கொண்டாடுபவர்கள் உலகின் மூத்த மொழி வழியும் இனவழியும் பிறந்தவர்கள் தாங்கள் என்ற உணர்வு பெற்றுத் தோழமை உணர்வுடன் தமிழ் மக்களை எண்ணட்டும்!

உயிர்மி (உயிரணு) cell

உயிர்மி (உயிரணு) cell

உயிர்மி (உயிரணு)

Cell (Biology)


- இலக்குவனார் திருவள்ளுவன்

ஆகத்து 28, 2012 12:44 இந்தியத் திட்ட நேரம்

நம் உடலில் அமைந்துள்ள கோடிக்கணக்கான நுண்ணறை ஒவ்வொன்றும் உயிர்மி எனப்படும். ஒரே வகையான செயல்திறன் கொண்ட உயிர்மிகளின் இணைப்பானது மெய்ம்மி(திசு) எனப்படும். பலவகைத் மெய்ம்மிகள் வேறுபட்ட விகிதங்களில் இணைந்து உருவாவது உறுப்பு. உறுப்புகள் சேர்ந்து அமைந்தது உடல்.


முழுமைக்கு : http://thiru-science.blogspot.in/2012/08/cell.html

Monday, August 27, 2012

அசாம் கலவரங்களும் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்களும்

அசாம் கலவரங்களும் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்களும்

நட்பு பதிவு செய்த நாள் : 27/08/2012



-          இலக்குவனார் திருவள்ளுவன்
அசாமில் காலம்காலமாக வாழும் மண்ணின் மைந்தர்களுக்கும் குடிபெயர்ந்து வந்தவர்களுக்கும் இடையே ஏற்படும் போராட்டங்கள் நமக்கு விழிப்புணர்வுப் படிப்பினைகளைத் தருகின்றன. இவை குறித்துத் தனியே பார்க்கப்பட வேண்டும். இப்பொழுது அப் போராட்டங்களின் தொடர்ச்சியாக வட மாநிலத்தவர் அயல் மாநிலங்களில் இருந்து வெளியேறிய நிகழ்வுகள் மூலம் நாம் உணர வேண்டியவை யாவை என்பதைப் பார்க்க வேண்டும்.
கருநாடகா, ஆந்திரா, தமிழ்நாடு முதலான மாநிலங்களில் இருந்து  வட மாநிலத்தவர் விரட்டியடிக்கப்படவில்லை. அவர்களே கூறுவதுபோல், தங்கள் மாநிலத்தில் ஏற்படும் கலவரங்களால் தங்கள் குடும்பத்தினருக்குத் தீமை ஏற்படுவதில் இருந்து தடுக்க, அந்நேரத்தில் குடும்பத்துடன் உறுதுணையாக இருக்க என்பன போன்ற காரணங்களே அவர்களைத் தாய்மண் நோக்கிப் புறப்படச் செய்தது. அவ்வாறு செல்லும்பொழுது அவர்கள் எடுத்துச் சென்ற பயண உடைமைகளைப் பார்க்கும் பொழுது அவர்கள் பணியிட நகர்களில் ஓரளவேனும் வசதியாகத்தான் இருந்துள்ளனர் என்பதும் புரிகின்றது. எனவேதான் மீண்டும்  பணிவாழ்விடங்களுக்கே திரும்பி வருவோம் எனக்  கூறியுள்ளனர்.

இவ்வாறு வட மாநிலத்தவர், குடும்பத்தினரின் பாதுகாப்பு உணர்விற்காகத் தாய் நிலம் நோக்கிச் செல்லும் பொழுது மத்திய அரசும் மாநில அரசுகளும் நடந்து கொள்ளும் முறைகளுக்கும் தமிழர்கள் தங்களின் மூதாதையர் மண்ணிலிருந்து அடித்து விரட்டியனுப்பப்படும் பொழுதெல்லாம்  நடந்து கொண்ட முறைகளுக்கும் உள்ள வேறுபாடுகளை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் உண்மையிலேயே இந்தியத்திற்காக உயிர் கொடுக்கும் தமிழர்களுக்கு இந்தியாவில் உள்ள உரிமை நிலை என்ன என்பதைப்  புரிந்து கொள்ளலாம்.
பொறை ஒருங்குமேல் வருங்கால் தாங்குவதாக நாடு இருக்க வேண்டும் எனத் தெய்வப்புலவர் திருவள்ளுவர்(குறள் 733) கூறுகிறார். எனவே, பிறநாட்டினரின் சுமை நம்மீது வரும்பொழுது தாங்குவதாக நாடு இருக்க வேண்டும் என்பதற்கேற்ப அயலர் வரவு  என்பது காலங்காலமாகப் பலநாடுகளும் சந்திப்பதாகத்தான் உள்ளது. ஆனால், அவ்வாறு அச்சுமையைத் தாங்குவதில் இநதிய அரசு காட்டும் வேறுபாடுதான் மிகப் பெருங்குற்றமாகும். சீனத்தைக் காரணம் கூறித் தமிழினப் பேரழிவைச் செய்யும் சிங்களத்திற்குத் துணைநிற்கும் இந்திய அரசு, தலாய்லாமாவிற்கும் திபேத்தியர்க்கும் தரும் சிறப்பான ஒத்துழைப்பும் ஆதரவும் உதவிகளும் சீனாவிற்கு எதிரானவை என்பதை ஏன் நாம் புரிந்து கொள்ளவில்லை? ஈழம் என்றாலே சிங்கள இறையாண்மைக்கும் இந்திய இறையாண்மைக்கும் எதிரானதாகக் கூறும் இந்திய அரசு, பாக்கிசுதான்  இறையாண்மைக்கும் வங்கத்தேச இறையாண்மைக்கும் எதிரான  செயல்பாடுகளை வரவேற்பது ஏன்? அந்நாடுகளால் இந்தியாவிற்குப் பேரிடர் வராதா? அதை நம்மால் சமாளிக்க இயலும் என்றாலும் தேவையற்ற அப்பேரிடர்களை வரவேற்பது தேவைதானா? வங்கத்தேசத்திலிருந்து வந்தவர்களுக்குக் குடியுரிமை முதலான வாழ்வுரிமை தரப்படும் பொழுது ஈழத்திலிருந்து படுகொலை முயற்சிகளில் இருந்து குண்டடிபட்டும் குற்றுயிராகவும் குடும்பத்தினரை இழந்தும் வரும் தமிழர்களுக்கு மட்டும் சிறப்பு முகாம் என்ற பெயரில் சிறைக்கொட்டடியா? அசாமில் அயலவர்க்குத் தரப்படும் உரிமைகளையும் உதவிகளையும் பார்க்கும் பொழுது இத்தகைய எண்ணம் நம்மைப் பற்றுவதை யாராலும் தடுக்க இயலாது.
இப்பொழுது  வடமாநிலத்தவர் தத்தம் மாநிலத்திற்குத்திரும்பும் பொழுது  முண்டியடித்து மத்திய அரசும் மாநில அரசுகளும் அவர்களைத் தடுத்துக் காத்துத் தங்க  வைப்பதில் மேற்கொள்ளும் முயற்சிகளைப் பார்க்கும் பொழுது பாராட்டத் தூண்டுகின்றது. ஆனால், உள்ளமோ இதே போன்ற நிலைப்பாட்டில் இதற்கு முன்பு இவ்வரசுகளின் செயல்பாடுகள் என்னவாக இருந்தன? தமிழ் மக்கள் தங்கள் உழைப்பைக் கொட்டி வளர்த்த தங்கள் மூதாதையர் மண்ணில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட பொழுது – துரத்தியடிக்கப்பட்ட பொழுது – செல்வங்களைப் பறிகொடுத்து உதைபட்டு  வந்த பொழுது – உயிரிழப்பிலும் உடைமை இழப்பிலும் தப்பிவந்த பொழுது – மயிலிறகால் விசிறிக் கொண்டு இருந்தனவா? அல்லது இதே போல் தமிழ் மக்களுக்கு எல்லாப் பாதுகாப்பும் தரப்படும் அங்கேயே இருக்கலாம் என வாக்குறுதி அளித்து உரிய பாதுகாப்பைத் தந்தனவா? என எண்ணிப் பார்க்கும் பொழுதுதான் இந்தியப்பிணைப்பில்  தமிழ் மக்களுக்கு ஒரு நீதி பிறருக்கு ஒரு நீதி என்பதே நடைமுறையாகும் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகின்றது.

இப்பொழுது கருநாடகாவில் உள்ள அமைச்சரும் பல அமைப்பினரும் வடமாநிலத்தவர் தங்குமிடங்களுக்கே சென்று காலில் விழுந்து கெஞ்சாத குறையாக அங்கேயே தங்குமாறும் பாதுகாப்பு தருவதாகவும்  தெரிவித்துள்ளனர். துணை முதல்வரே அயல்மாநிலத்தவரை நேரில் சென்று சந்திக்கின்றார்; அசாம் சென்று  அம்மாநில முதல்வரைச் சந்தித்து அனைவரையும் மீள கருநாடகாவிற்கே அனுப்புமாறும் எத்தொல்லையும் வராமல் பாதுகாப்பதாகவும் உறுதி தருகின்றார். அங்கே தமிழர்கள் வதைபடும் பொழுதும் உதைபடும்பொழுதும் “இங்குள்ளோர் அமைதி இழந்தால் என்னாகும்?  இங்கு வாழும் அம்மாநில மக்கள் நிலை குலைந்து போகாதா” என்றெல்லாம் மனித நேய ஆர்வலர்கள் வினா தொடுத்தனர். என்றாலும் பயன் இல்லை. இத்தகைய பேச்சுகளின்  பொழுது, முதல்வரோ “இவ்வாறு பேசினால் அங்குள்ள நம் தமிழ் மக்கள் மேலும் துன்புறுவர். எனவே,  இங்குள்ள அயல் மாநிலத்தவர்க்குப் பாதுகாப்பு தரப்படும்” எனச் செயல்பட்டார். மாநிலத் தன்னுரிமை என முழங்கிய வாய் பிற மாநில முதல்வர்களிடம் எச்சரிக்கை விட்டுப் பாதுகாப்பு வாங்கித் தரவில்லை. ஒரு முறை நிகழ்வல்ல இது. ஒவ்வொரு முறையும் தமிழர்கள் அயல் மாநிலங்களில் தாக்கப்படும் பொழுது ஆள்வோருக்கு இந்தியப்பற்று மிகுந்து தமிழர் நலன் புறக்கணிக்கப்படும்.
மத்திய அமைச்சராகத் தமிழர்கள் இருந்தாலும் மத்திய அரசில் பங்குவகித்தாலும் இன்றைய இந்திய அமைப்பில் தமிழர்களுக்கு அறம் வழங்கப்படாது. எனவே, தமிழ் மக்கள் தாங்கள் இந்தியத்தால் புறக்கணிக்கப்படுவதை உணர வேண்டும். தமிழர்கள் நலன் குறித்தும் தமிழர்கள் தொடர்பான சிக்கல்கள் குறித்தும் அயல்வாழ் தமிழர் நலன் குறித்தும் தமிழரல்லாதவர்தான் பேசி முடிவெடுக்கும் நிலை உள்ளதைப் பார்க்க வேண்டும். தமிழ்நாட்டின் தலைமைப் பொறுப்புகளில் அயலவர் இருப்பதுபோல் மத்திய அரசில் தமிழர்நலன் தொடர்பான துறைகளில் தமிழர் நலனுக்கு எதிரான அயலவரே பொறுப்பு வகிக்கின்றனர். இச் சூழலில் நம்மவர்க்கு  நல்லறம் எங்கே கிடைக்கும்?
தமிழகக்  காவல் துறைத்தலைவரோ அயலவர்க்குத் தரும் பாதுகாப்பை நாடகமாடி உறுதி செய்கிறார். தமிழ்நாட்டில் அயலவருக்கான பாதுகாப்பை உறுதி செய்யும் அதிகாரிகளும் அரசும் அயலகங்களில் உள்ள  தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்யத் தவறுவதேன்?
எனவே,  இச்சிக்கலால் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்களை உள்ளத்தில் பதிந்து வைத்துக்கொள்ள வேண்டும்; நம் மொழியும் இனமும் தமிழ்த்தேசியமே என்பதை உணர வேண்டும்; தமிழ்நாட்டில் தமிழர்கள் சிறு பான்மையராக மாறும் நிலையைத் தடுக்க வேண்டும்; தலைமைப் பொறுப்புகளில் தமிழுணர்வு மிக்கத் தமிழ்த்தேசியர்களே இருக்க வேண்டும்; மத்திய அரசிலும் தமிழ்த்தேசியர்கள் பொறுப்பு வகிக்கும் வகையில் வாக்குரிமையைப்பயன்படுத்த வேண்டும். இத்தகைய சூழல் அமையாதவரை தமிழர்க்கு எள்ளளவும் பாதுகாப்பு இல்லை என்பதையும் உணர வேண்டும்.
                                                                             தமிழ்த்தேசியம் வெல்க! உலக ஒப்புரவு ஓங்குக!

மனித உடல்

மனித உடல்


(அன்றாட வாழ்விற்கான அறிவியல் தமிழ்)

                                                                                       - இலக்குவனார் திருவள்ளுவன் 

(ஆகத்து 27, 2012 11:41 இந்திய த்திட்ட நேரம்)

பழந்தமிழர்கள் உடலுறுப்புகளுக்கு வைத்துள்ள பெயர்களும் அவர்களது அறிவியல் அறிவை உணர்த்துன்றன. சான்றாகச் சிலவற்றைப் பார்ப்போம்.
‘உடு’ என்பதன் அடிப்படையில் உயிருக்கு உடுப்பு போல் அமைந்தது உடல் எனப்பட்டது. பண்டத்தை உள்ளே வைத்துக்கட்டப்பட்டது பொதி. அதுபோல் உறுப்புகளை அடக்கிய உடல் ‘பொதி’ எனப்பட்டது. கட்டப்படுவதை யாக்கை என்பர். தோல், நரம்பு, எலும்பு, தசை, குருதி முதலிய தாதுக்களால் யாக்கப் பெற்றிருப்பதால் யாக்கை என்றனர். கூடை முடையப் பெற்றிருப்பது போல் ‘தாதுக்களால்’ முடையப்பட்டது முடை என்று சொல்லப்பட்டது. உயிர் புகுவதற்குரியது உடல்; ஆதலின் உடலைப் புகல் என்றனர்;திரண்டு அமைந்ததைப் பிண்டம் என்பர்; உயிர்மிகளால் திரண்டுஅமைந்த உடல் பிண்டம் எனப்படுகிறது. இவை போன்று அறிவியல் உண்மையின் அடிப்படையில் பல்வேறு பெயர்கள் உடலுக்குக் குறிக்கப்பெற்றுள்ளன.
உடலின் உள் உறுப்புகளுக்கு வாயிலாக அமைந்துள்ள உறுப்பிற்கு வாய் எனப் பெயர் இட்டுள்ளனர். உதடு என்றால் விளிம்பு என்று பொருள். வாயின் விளிம்பாக அமைவதால் உதடு என்றனர். உதடுகள் மலரிதழ்கள் போல் மென்மையாக உள்ளமையால் இதழ்கள் என்று குறிக்கப் பெற்றன. அதர் என்றால் வழி என்றுபொருள். உள்ளுறுப்புகளுடன் தொடர்பு கொள்ளவழியாக அமைவதால் இதழ்கள் அதரங்கள் என்று அழைக்கப் பெற்றன. முகத்தில் ‘தொளை’ போன்ற பகுதியில் அமைந்த உறுப்புகள் அப்பொருளில் கண்கள் எனச் சுட்டப் பெற்றன. கட்டடத்தின் மேனிலை முகப்பிற்கு நெற்றி என்று பெயர். உடலின் மேனிலையில் முன்பகுதியில் அமைந்துள்ள உறுப்பு நெற்றி எனப்பட்டது. துளை அல்லது குழியுடைய பொருள்களைக் கன்னம் என்பர். எனவேதான் சுவரில் திருடர்கள் போடு துளைக்குக் 'கன்னம் வைத்தல்’என்கின்றனர். இதுபோல் முதலில் துளையுள்ள காதிற்குக் கன்னம் என்று பெயர் வைத்திருந்துள்ளனர். பின் அப்பெயர் முகத்தில் குழிவாகத் தோன்றும் கதுப்பிற்குக் கன்னம் எனப் பெயராக மாறியது.




உடலுக்கு முகப்பாக அமைவதால் முகம் என்றும் முகத்தில் முனை போல் உள்ளதால் மூக்கு என்றும் பெயர் வைத்துள்ளனர். வாயின் இறுதிப் பகுதி என்ற பொருளில் வயிறு என்றும் இரை தங்கும் பை என்ற பொருளில் இரைப்பை என்றும் பெயரிட்டனர்.
நுரை போன்ற தோற்றத்தில் பல காற்றறைகள் கொண்ட உறுப்பிற்கு நுரையீரல் என்று பெயரிட்டனர். உடலின் கால் பாகத்தில் அமைவதைக் கால் என்றும் அரைப்பகுதியில் அமையும் உறுப்பிற்கு அரை என்றும் உடலின் நடுவாகிய இடைப்பகுதியில் அமைவதால் இடை என்றும் பெயரிட்டனர். குருதி ஓட்டத்தில் நடுவாக இருந்து செயல்படும் உறுப்பிற்கு நடு என்னும் பொருளின் அடிப்படையிலான நெஞ்சம் என்று பெயரிட்டனர். அகன்ற பரப்புடைய உடல் பகுதி என்பதால் 'அகலம்’ என்றனர்; பின்னர் அகலம் என்னும் பொருளுடைய'மார்பு’ என்னும் பெயரையும் சூட்டினர். உடலின் பக்கவாட்டில் அமைந்த உறுப்புகளுக்குப் பக்கம் என்னும் பொருளும் செயல்பாடுகளுக்குக் காரணமாக அமைவதால் செயல் என்னும் பொருளும் வரும் வகையில் கைகள் எனப் பெயரிட்டனர்.
உடலில் தொடுத்தாற்போல் கால்கள் அமைய இணைப்பாக அமையும் உறுப்புகளுக்குத் தொடைகள் எனப் பெயரிட்டனர்.
உயிருடன் சேர்ந்தே இயங்குவது அல்லது உயிருடனிருப்பது உடல் அல்லது உடம்பு எனப்பட்டது. மேலும், முழு உடல் உடம்பு எனவும் தலையற்ற உடம்பு உடல் எனவும் உடலற்ற தலை முண்டம் எனவும் உயிரற்ற உடம்பு உடலம் எனவும் கூறப்பெறும். குஞ்சு பொரித்தபின் அதனுடனான தொடர்பு நீங்கப் பெற்றதே முட்டைக் கூடு. உயிர் நீங்கிய பின் தொடர்பற்றுப் போகும் உடம்பும் குடம்பை அல்லது கூடு எனப் பெற்றது.
உயிர் நீங்கிய உடல், கட்டை போல் கிடப்பதால் ’ கட்டை’ என்றும் கூறினர். கட்டை போல் எரிவது அல்லது மண்ணோடு மண்ணாகப் போவதுதானே உடல்!
இவ்வாறு அனைத்து உறுப்புகளின் பெயர்களும் தோற்றம் அல்லது செயல்முறை அடிப்படையில் அறிவியல் உணர்வுடன் சூட்டப்பட்டுள்ளன.

(புதிதாய் முளைக்கும் மீசைக்கு அருப்பம் என்றும்மெல்லிய அரும்பு மீசையைக் கரிக்கோடு என்றும் வளர்ந்த மீசையை மீசை என்றும் குறித்தனர். தாடி‘அணல்’ எனப்பெறும்.)

நன்றி:  
புத்தறிவியல் தமிழிதழ் (New Science Tamil Magazine)

Thursday, August 23, 2012

வெருளி (phobia) வகைகள்

வெருளி வகைகள்

வெருளி வகைகள்
(அச்ச நோய் வகைகள் எனப்படும் வெருளி வகைகள் :   ஒன்றைப் பற்றிய அச்சத்தினால் ஏற்படும் அச்ச நோய் பல வகைப்படும். ஒன்றின் மீதான கடும் அச்சம், அல்லது விருப்பமின்மை, அல்லது வெறுப்பு, போபியா(phobia) எனப்படுகிறது. ஒருவர் மீது, அல்லது ஒரு சூழல் பற்றி, அல்லது ஓர் அமைப்பு மீது, அல்லது அமைப்பினர், நாட்டினர், அவர்கள் தொடர்பானவை என்பனவற்றின் மீது, அல்லது இவை போன்றவற்றின்மீது, எவ்வகைப் பேரிடருக்கும் வாய்ப்பு இல்லாத பொழுதும் விடாப்பிடியான அல்லது இயல்பிற்கு மீறிய அல்லது பகுத்தறிவிற்கு முரணான அச்சம் ஏற்படுவதையே இது குறிக்கின்றது. போபியா(phobia) என்றால் அளவிற்கு மீறிய பேரச்சம் என அகராதிகள் குறிப்பிடுகின்றன.  ஒற்றைக் கலைச்சொல்லாக அமையாமல் பொருள் விளக்கமாக அமைவதால் இச்சொல்லின் அடிப்படையிலான பிற கலைச்சொற்கள் நெடுந்தொடராக அமைந்து பயன்பாட்டுத் தன்மையை இழக்கின்றன. தமிழ் நெடுந்தொடர்களைவிட அயல்மொழியின் சுருக்கச் சொற்களே பயன்பாட்டில் நிலைத்து விடுகின்றன. எனவே, தமிழ் ஆர்வலர்கள்கூடத் தமிழ்க்கலைச் சொற்களைப் பயன்படுத்துவதில்லை என்னும் குற்றச்சாட்டைக் கூறுவதில் பயனின்றாகிறது. எனவே, சுருங்கிய செறிவான கலைச்சொற்களையே நாம் மீட்டுருவாக்கம் செய்ய வேண்டும்; புத்தாக்கம் புரிய வேண்டும்; பயன்படுத்த வேண்டும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /)
விரிவிற்கு : 
 

Sunday, December 18, 2011

Know our scholars 28: அறிவோம் அறிஞர்களை!- 28. அறிஞர் அ.நாராயணசாமி


அறிஞர் அ.நாராயணசாமி ~ அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 18/12/2011



28. பெரும்புலவர் தலைமணி பின்னத்தூர் கலைமணி
அறிஞர் அ.நாராயணசாமி ஐயர் (1862-1914).


28. தொல்காப்பியப் பொருளதிகாரப் பயிற்சிச் சிறப்பு விளங்க, அதில் எடுத்துக் காட்டியுள்ள மேற்கோள்களுக்கெல்லாம் ஓர் அகராதியை உருவாக்கிய இப்பெரும்புலவர் எழுதிய நூல்கள் ஐம்பதுக்கு மேற்பட்டவை.

தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்


Followers

Blog Archive