திருக்குறள் தூதர் வெ.இர.கனகசபை, சொல்லின் செல்வர் கங்காராம் துரைராசு குறித்து எழுதிய கட்டுரை இடம் பெற்றுள்ளது.
தம்பிக்கு மடல்கள் எழுதிய அறிஞர் அண்ணா வழியில் ‘அன்ப’ எனத் தொடங்கி ஏராளமான பன்முக வாழ்வியல் மடல்களைத் தீட்டிய சிறப்பிற்குரியவர் பெருமகனார் எனக் கட்டுரையாளர் அறிமுகப்படுத்தி வைக்கிறார்.
31.12.1917 ஆம் ஆண்டு தோன்றி 08.10.1998 இல் மறைந்த பெருமகனார் ஆயிரம் பிறை கண்டு அழியாப்புகழ் பெற்றுள்ளார் எனக் கட்டுரை முழுவதும் கட்டுரையாளர் நன்கு விளக்கியுள்ளார்.
சங்க இலக்கியம் முதல் பாவேந்தர் பாடல்கள் வரை நிரம்பக்கற்ற செந்தமிழ்த்தேனீ, திருக்குறளைச் சிறப்பாகவும் விளக்கமாகவும் இலக்கிய எடுத்துக்காட்டாகவும் எடுத்தியம்பிய இலக்கியத் தூதர், பல்துறை நூலாசிரியர், இதழியல் தமிழ்ப்பேராசிரியர், அறிவியல், ஆட்சியியல், இயற்கையியல், ஈட்டவியல், உழவியல், ஊட்டவியல், எண்ணியல், ஏரியியல், ஒழுக்கவியல், ஓர்தலியல், கல்வியியல், சமனியல், தற்சார்பியல், நடப்பியல், பண்பியல், மக்களியல், யாழியல், வணிகவியல், ஞானவியல் எனப் பல்சுவை அறிந்த பட்டறிவு மிகுந்த அறிஞர் என உள்ளத்தில் பதியும் வண்ணமும் ஆத்திசூடியை நினைவூட்டும் வண்ணமும் கட்டுரையாளர் பெருமகனாரின் சிறப்புகளை நமக்குத் தந்துள்ளார்.
சொல்லின் செல்வர் கங்காராம் துரைராசிற்கு வாழ்த்து கூறி, அவரின் தோற்றம், வளர்ச்சி, இல்லறவாழ்வு, பொதுத் தொண்டுகள், சமுதாயச்சங்கப்பணிகள், மொழிபெயர்ப்புப் பணிகள்,அமைப்புகள் மூலமான மக்கள் தொண்டுகள், எனப் பலவற்றையும் நிரல்படக் கட்டுரையாளர் கூறியுள்ளார்.
1950இல் தலைமையர் நேரு மதுரை வந்த பொழுது பொதுக்கூட்டத்தில் அவரது ஆங்கில உரையைத் தமிழில் மொழிபெயர்த்துப் பாராட்டு பெற்றமையையும் கட்டுரையாளர் சுட்டியுள்ளார்.
ஆங்கிலத்திலும் சிறந்த பேச்சாளராகத் திகழ்ந்துள்ளார் இ.ஆ.ப.பயிற்சிகள் நடத்திப் பலர் பணிவாய்பபு பெற உதவினார் என்னும் சிறப்புகளையும் நாமறியச் செய்கிறார்.
வள்ளுவர் வகுத்த வழியில் சிறப்பாகத் திருக்குறள்களை விளக்கியதுடன் தாமும் அதன்படி வாழ்ந்தவர் என்பதை நமக்குக் கட்டுரையாளர் விளக்கியுள்ளார். திருக்குறளைக் கூறிக் கூட்டங்களையும் உரைகளையும் தொடங்குதல், குறள்நெறிப்படியான திருமணம் நடத்துதல், சமூகநீதி, பகுத்தறிவு, கட்டுப்பாடு, கடமை, முன்னேற்றப்பணிகள் என நூற்றுக்கு மேற்பட்ட கட்டுரைகளைத் திருக்குறள் எடுத்துக் காட்டுகளுடன் படைத்த சிறப்பு என அறிஞர் பெருமகனாரின் திருக்குறள் ஈடுபாட்டையும் பணிகளையும் கட்டுரையாளர் அளித்துள்ளார்.
தமிழ்ப்பணிகளுடன் பல்வேறு வணிக அமைப்புகளில் பொறுப்பாளராக இருந்து நற்பணிகள் ஆற்றியுள்ளார்; பெங்களூர் தினச்சுடர், தெக்கான் எரால்டு முதலான இதழ்களில் பொருளியல் கட்டுரைகளையும் மக்களுக்கேற்ற எளிய முறையில் எழுதியவர் தாமும் நாடார் சங்கத்தின் ‘மகாசனம்’ இதழின் ஆசிரியராக இருந்து சிறப்பாக இதழ்ப்பணிகளும் ஆற்றியுள்ளார். தென்னிந்தியாவிலும் இலங்கையிலும் புகழ் பெற்ற பெருமகனாக வாழ்ந்து மறைந்துள்ளார் எனக் கட்டுரையாளர் விளக்கியுள்ளார்.
கட்டுரையாளர் மிகவும் அருமையாகவும் நேர்த்தியாகவும் இலக்கியச்சுவையுடனும் சொல்லின் செல்வர் கங்காராம் துரைராசு பற்றி நமக்குச் சொல் விருந்து அளித்துள்ளார். எனினும் நெல்லில் பதர் கலந்தாற்போல் அமைப்புகளின் பெயர்கள் எல்லாம் அயற்சொற்களாகவே இருக்கின்றன. சிறந்த படைப்பாளியாக இருக்கும் கட்டுரையாளர் இனி அயற்சொற்கள் கலப்பும் அயலெழுத்துகள் கலப்புமின்றிக் கட்டுரைகள் எழுத வேண்டுகிறேன். அடுத்த பதிப்பில் இக்கட்டுரையையும் அவ்வாறு கலப்பற்றதாக மாற்றுமாறும் வேண்டுகிறேன்.
திருக்குறள்கம்பர்
மூன்றாவது, இ.ப.நடரசானின் ‘திருக்குறள் கம்பர்’ கட்டுரை இடம் பெற்றுள்ளது.
திருவள்ளுவர் நம் அறிவை மயக்கி அடிமை கொண்டார் என்றும் கம்பர் உணர்வை மயக்கி அடிைம கொண்டார் என்றும் கட்டுரையாளர் ஒப்புமை தருகிறார். கம்பரைக் கம்பரின் வரிகளிலேயே ‘கலைகளின்் பெருங்கடல் கடந்த கல்வியாளர்’ என்றும் ‘எண்ணில் நண்ணூல் ஆய்ந்தே கடந்தான்’ என்றும் கூறுகிறார்.
திருவள்ளுவர் கூறும் செய்ந்நன்றி அறிதலுக்கு எடுத்துக்காட்டாகக் கம்பர் சடையப்ப வள்ளலைத் தன் காப்பியத்தில் நினைவு கூர்வதை விளக்குகிறார். அதுமட்டுமல்ல. தன் அறிவை வளர்த்த தமிழுக்கும் தமிழ்நாட்டிற்கும் தமிழ்ப்புலவர்க்கும் மூலநூல் புலவர் வால்மீகிக்கும் நன்றி தெரிவித்துத் திருக்குறள் கருத்தை வாழ்வில் மேற்கொண்டுள்ளார் எனக் கட்டுரையாளர் விளக்குகிறார்.
கம்பர் சங்க இலக்கியம் முதல் தம் கால இலக்கியம் வரை ஆழ்ந்து கற்ற புலமையாளராக இருந்துள்ளார். எனவே, அவற்றில் தம்மை ஈர்த்த காட்சிகளை இராமாயணத்தில் பொதிந்து வைத்துள்ளார்.
ஆரியத்தாசராக எண்ணப்படும் கம்பரை ஆரியஎதிர்ப்புக் கருத்துகளைத் திருவள்ளுவர் வழியில் திருக்குறள் கருத்துகள் மூலம் வெளிப்படுத்தி ஆரிய எதிர்ப்பாளராகவும் கடடுரையாளர் விளக்குகிறார்.
“வேள்வியைஇயற்றியும்வளர்க்கவேண்டுமோ”
எனக் கம்பர் ஆரிய வேள்விக்கு எதிராக வினா தொடுப்பதையும் கட்டுரையாளர் சுட்டுகிறார்.
கம்பர் 300க்கு மேற்பட்ட இடங்களில் திருக்குறளைக் கையாண்டுள்ளதாகவும் சிலர் 500 முதல் 1000வரை குறிப்பிடுவதாகவும் கட்டுரையாளர் தெரிவிக்கிறார்.
திருவள்ளுவர் கூறிய உவமைகளைச் சற்று மாற்றியும் பல இடங்களில் கம்பர் பயன்படுத்தியுள்ளார் எனவும் கட்டுரையாளர் விளக்கியுள்ளார்.
திருக்குறளை அறியாமல் கம்பர் இராமாயணத்தைப் படிப்போரும் அறியும் வண்ணம் திருக்குறள் கருத்துகளைக் கையாண்டுள்ளார் எனக் கட்டுரையாளர் பாராட்டுகிறார்.
கம்பர் தாம் படைத்துள்ள சரசுவதி அந்தாதி, சடகோபர் அந்தாதி, ஏர் எழுபது, சிலை எழுபது, திருக்கை வழக்கம் என்னும் 5 நூல்களிலும் திருக்குறள் கருத்துகளைப் பெய்துள்ளார் எனவும் கட்டுரையாளர் அழகுற விளக்குகிறார்.
அனைத்தையும் கட்டுரையிலேயே படித்துக் கொள்வதே சிறப்பு. எனினும் சான்றுக்கு ஒன்றைப் பார்ப்போம்.
ஏர் எழுபது நூலில்,
உழுதுண்டுவாழ்வாரேவாழ்வார்மற்றெல்லாரும்
தொழுதுண்டுபின்செல்வாரென்றேஇத்தொல்லுலகில்
எழுதுண்டமறையன்றோஇவருடனேஇயலுமிது
பழுதுண்டோகடல்சூழ்ந்தபாரிடத்துப்பிறந்தோர்க்கே
என்கிறார்.
இப்பாடலில் தொடக்கத்தில் திருக்குறளை முழுமையாகக் கையாண்டுள்ளதைக் காணலாம்.
திருக்குறள் சிறக்கத் தம்மால் இயன்ற தொண்டினை ஆற்றி உயர்ந்த கம்பரைப் போற்ற வேண்டும் என்கிறார் கட்டுரையாளர்.
கட்டுரையளார் இ.ப.நடராசன் சிறப்பான ஆராய்ச்சிக் கட்டுரையை அளித்துள்ளார். எனவே, அவர் கம்பரின் திருக்குறள் ஆளுமை குறித்து முழுமையாக ஆராய்ச்சி நூல் அளிக்குமாறு வேண்டுகிறேன்.
தமிழ்க்காப்பு மொழிப்போரில் உயிர் நீத்தவர்களுக்கும் சிறைப் பட்டவர்களுக்கும் இன்னல் உற்றவர்களுக்கும் நம் வீர வணக்கங்கள்!
மொழிப்போர் நாள் கொண்டாடுவதால் நாம் புத்துணர்வு பெறவும் வரும் தலைமுறையினர் வரலாறு அறிந்து மொழி காப்புப்பணியில் ஈடுபடவும் வாய்ப்பு இருப்பின் அதனை வரவேற்கலாம். ஆனால், ஒரு சடங்காக அதனைக் கொண்டாடுகிறோம். அதனைக் கொண்டாடுபவர்களுக்கும் பங்கேற்பவர் களுக்கும் மொழிக்காப்பு உரிமையைப் பெற வேண்டும் என்ற உணர்வுதான் இல்லை. அவ்வாறிருக்க ஆரவாரக் கொண்டாட்டத்தால் என்ன பயன்?
இந்தி எதிர்ப்புப் போராட்டத்தினால் சிறையடைப்புக் காலத்தில் உயிர்நீத்த நடராசன், தாளமுத்து, உயிரினும் மேலான தமிழுக்காகத் தங்கள் உயிரைத் தீக்கு இரையாக்கிய செம்மல்கள், கீழப்பழூர் சின்னசாமி, கோடம்பாக்கம் சிவலிங்கம், விருகம்பாக்கம் அரங்கநாதன், ஐயம்பாளையம் வீரப்பன், சத்தியமங்கலம் முத்து, மாயவரம் சாரங்கபாணி, நஞ்சருந்தி உயிரை மாய்த்துக் கொண்ட பீளமேடு தண்டாயுதபாணி, சத்தியமங்கலம் முத்து, விராலிமலை சண்முகம், துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்ட சிதம்பரம் இராசேந்திரன், வெவ்வேறு போராட்டக் களங்களில் அரச வன்முறைகளால் உயிர் பறிக்கப்பட்ட ஐந்நூற்றுவருக்கும் மேலோர் ஆகியோர் வரலாற்றுப்பாட நூல்களில் இடம் பெறவில்லையே!
நடராசன், தாளமுத்து மறைவின் பொழுது பேரறிஞர் அண்ணா ஆட்சிக்கு வந்ததும் இவர்கள் நினைவு போற்றப்படும் என்றார். ஆனால், போற்றப்பட வேண்டிய அளவிற்குப் போற்றப்படவில்லையே! மொழிக்காவலர் உதவித் தொகை அளித்து வருவதும் மொழிப்போர் ஈகியர் நினைவு மண்டபம் அமைத்துள்ளதும் பாராட்டப்பட வேண்டியதுதான். என்றாலும் வளரும் தலைமுறையினருக்குத் தமிழ்க்காப்பு உணர்வை ஊட்டும் வகையில் செயல்பாடுகள் இல்லை.
1938 முதல் 7 பெரும் இந்தி எதிர்ப்புப் போராட்டங்களைத் தமிழ்நாடு சந்தித்துள்ளது. அவற்றால் உயிர் நீத்தவர்களும் சிறை சென்றவர்களும் வாழ்விழந்தவர்களும் போற்றப்பட்டு அவர்களின் வழி முறையினர் உரிய முதன்மை பெறுகின்றார்களா? இல்லையே!
மாணாக்கர்களும் இந்தி எதிர்ப்புப் போரில் ஈடுபட்டனர். இதனால் ஆளுங்கட்சிக்குத் தீங்கு என்பதால் மாணாக்கர்கள் அரசியலுக்கு வரக்கூடாது எனப் பலரும் சொல்லத் தொடங்கினர்.
தமிழ்ப்போராளி இலக்குவனார், தங்களின் எதிர்காலம் குறித்து மாணாக்கர்கள்தான் கருத்துடனும் துணிவுடனும் போராட முடியும் என்று அவர்களை இந்தி எதிர்ப்புப் போரில் முனைப்புடன் ஈடுபட வைத்தார். எனவேதான் 1.08.1948 இல் இந்தி எதிர்ப்பு மாணவர் மாநாட்டைத் தலைமை தாங்கிச் சென்னை நினைவரங்க மண்டபத்தில் நடத்தினார். அதன் பின்னர், மாணாக்கர்களும் இந்தி எதிர்ப்பு மாணவர் மாநாட்டைத் திருச்சிராப்பள்ளி முதலான இடங்களில் நடத்தினர்.1965 இல் இந்தி எதிர்ப்புப் படைத்தளபதியாக விளங்கி மாணாக்கர்களைப் போராட்டக் களத்தில் குதிக்கச் செய்தார். இதனால் வீழ்ந்த பேராயக்கட்சியாகிய காங். கட்சியால் இன்றும் எழுந்திருக்க இயலவில்லை. ஆனால், அதனை விரட்டியடித்தவர்களே அதனைப் பல்லக்கில் சுமந்து கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர். தமிழ்க்காப்பில் தங்களையே ஒப்படைத்த அன்றைய மாணாக்கர்கள்போல் இன்றைய மாணாக்கர்கள் இல்லை! அவர்கள் பேச்சிலும் தமிழ் இல்லை! பாட்டிலும் தமிழ் இல்லை! செயல்பாட்டிலும் தமிழ் இல்லை!அவர்கள் கொண்டாட்டங்களிலும் தமிழ் இல்லவே இல்லை!அவர்களை நல்லாற்றுப்படுத்தும் ஆசிரியர்களும் இல்லை! தலைவர்களும் இல்லை!
1965 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்றவர்களுள் சிலர் ஆட்சிப்பொறுப்பிற்கும் பதவிகளுக்கும் வந்தனர். இருப்பினும் இந்தி எதிர்ப்பில் உயிர் நீத்தவர்களின் குடும்பங்களுக்கும் சிறை சென்றவர்களின் குடும்பத்தினருக்கும் நிலையான மறுவாழ்வு உதவி அளித்து இந்தி எதிர்ப்புப்போர் குறித்துப்பாடநூல்களில் இடம் பெற முயலவில்லை.
இந்தி இன்றைக்குத் தொலைக்காட்சிகள் மூலம் நம் வரவேற்பு அறையில் நுழைந்து மக்களை ஆட்கொள்கிறது. தமிழ் நாட்டில் இந்தி விளம்பரங்கள்; பட முன்னோட்டங்கள் இந்தியில்; இருந்தும் தமிழ்க் காதலர்களாகச் சொல்லிக் கொள்பவர்கள் அமைதி காக்கிறார்கள். அவ்வாறு சொல்வது கூடத் தவறு. ஏனெனில் இத்தகைய விளம்பரங்களை வெளியிடுபவர்களே அவர்கள்தாம்.
தமிழ்நாட்டில் ஆட்சிப்பொறுப்பில் இருந்தும் தமிழை மீட்காதவர்களா மத்தியஆட்சிப்பொறுப்பில் இடம் பெற்றதும் தமிழ்க்காப்பு நோக்கில்செயல்படுவார்கள்? தமிழ் முழக்க அமைச்சர்கள் பொறுப்பில்தான் சாலைப் பெயர்கள் இந்தி மயமாயின. இந்தி பரப்பும் பல திட்டங்கள் நடைமுறைக்கு வந்தன. முழக்கங்கள், திட்டப்பெயர்கள் என்ற பெயர்களில் சமற்கிருதம் திணிக்கப்படுவதற்கு வெண்சாமரங்கள் வீசப்பட்டன.
வேள்விகள், வழிபாடுகள் என்பவை மூலம் இறைநெறியில் தமிழை அடியோடு ஒழித்து விட்டனர்.
கல்வி நிலையங்களிலும் இந்தியும் சமற்கிருதமும் திணிக்கப்படுகின்றன. மத்தியப் பல்கலைலக்கழகங்கள் என்ற பெயர்களிலும் இந்தித்திணிப்பும் சமற்கிருதத் திணிப்பும் நடைபெறுகின்றன.
நுழைவுப்போட்டிகள், பொதுப்போட்டிகள் என்ற போர்வைகளில் தமிழ் துரத்தப்படுகின்றது.
மத்திய அரசின் வேலைவாய்ப்புகள் மூலம் இந்தி நம் மீது ஏறி அமர்ந்து கொண்டுள்ளது.
இந்தி பரப்புரை அவை(இந்தி பிரச்சார சபா) சிறப்பாகவே செயல்பட்டுத் தமிழர்களிடையே இந்தியைப் பரப்பிக் கொண்டுள்ளது. ஆனால் தமிழ்நாட்டிலேயே தமிழைக் காக்காத நாமா பிற மாநிலங்களில் தமிழைப் பரப்பப் போகின்றோம்!
பன்னாட்டு அவைகளில் சமக்கிருதம் திணிக்கப்படும்பொழுது தமிழுக்காகக் குரல் கொடுப்போர் யாருமில்லை.
தமிழ்நாட்டுக்கல்விக்கூடங்களில் தமிழ் இருந்த இடம் தெரியாத அளவிற்குத் தொலைந்து போய்க் கொண்டுள்ளது.
திருவையாற்றில் இசைவிழாவில் வீற்றிருந்த தெலுங்கை நாடு முழுவதும் பரப்பிக் கொண்டுள்ளனர்.
ஆட்சியில் இருந்தவர்கள், இருப்பவர்கள், ஆட்சிக்காக அலைபவர்களுக்குத்தமிழ் தேர்தல் முழக்கத்திற்கு மட்டும் தேவைப்படுகின்றது. எல்லா வகைகளிலும் பிற மொழிகள் திணிக்கப்படுவதற்கு அவர்களே நேரடியாகவும் மறைமுகமாகவும் துணை நிற்கின்றனர். மக்களும் அவர்கள் புகழ்பாடித் தமிழ்க்காப்பு உணர்வை மழுங்கடித்து வருகின்றனர்.
அப்படியானால் எதற்காக வீர வணக்க நாள் சடங்குகள்? உணர்வற்றப் பிண்டங்களுக்கு உணர்வூட்டாத இந்தச் சடங்குகளால் என்ன பயன்?
தமிழ்க்காப்பு மறவர்களைப் போற்றுவது வீர வணக்க நாள் கொண்டாட்டத்தில் மட்டும் இல்லை. எல்லா இடங்களிலும் தாய்த்தமிழைக் காக்கும் உணர்வும்செயல்பாடும் நம்மிடையே திகழப் பாடுபடுவதுதான் உண்மையான வீரவணக்க நாள்!
எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள் (குறள் 355)
மெய்ப்பொருள் காண்பதறிவு
என மெய்ப்பொருள் காணும் வித்தகர்; ஆனித்தரமான வீரம் செறிந்த பேச்சு வல்லவர். கவிதை பொங்கும் மிடுக்கு நடை. அதுவே இவரது உரைநடை என்னும் வகையில் அழகாகத் தெளிவாகப் பேசும் சொல்லேருழவர். ஆட்சிததமிழிலும் அறிவியல் தமிழிலும் கலைச்சொல்லாக்கங்களிலும் வல்ல தமிழறிஞர். ‘அகரமுதல’ மின்னிதழின் ஆசிரியர். இணைய வழியாகத் தமிழ் பரப்புவதில் முன்னோடியாகத் திகழ்பவர். தமிழ்த்திரு இலக்குவனார் திருவள்ளுவன் அவர்களைப், பேராசிரியர் கு.மோகனராசு அவர்களின் வரலாறு படைத்த திருக்குறள் சான்றோர்கள் தொகுதி 6 நூலினை அறிமுகம் செய்ய அன்புடன் அழைக்கிறேன். – சுடர்மேரி
வரலாறு படைத்த திருக்குறள் சான்றோர்கள்
– நூலறிமுகம் 1/4
திருக்குறளுக்கு உரை நூல் எழுதியும் ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதியும் திருக்குறள் சொற்பொழிவுகள் ஆற்றியும், திருக்குறள் கதை நூல்கள் எழுதியும், திருக்குறள் பாடல்கள் எழுதியும் பாடியும், திருக்குறள் ஒப்பித்தல் முதலிய திருக்குறள் தொடர்பான போட்டிகள் நடத்தியும் பல வகைகளில் திருக்குறள் தொண்டாற்றுவோர் பலர் உள்ளனர். இத்தனைப் பணிகளுடன் திருக்குள் படைப்பாளர்களை உருவாக்கியும் ஊக்கப்படுத்தியும் திருக்குறள் சான்றோர்களை உலகுக்கு அறிமுகப்படுத்தியும் திருக்குறள் தூதர்களை உருவாக்கியும் திருக்குறள் விருதுகளையும் திருவள்ளுவர் விருதுகளையும் வழங்கியும் அனைத்து வகைத் தொண்டுகளிலும் சிறப்பாக ஈடுபட்டு வருபவர் ஒருவரே! அவரே திருக்குறள் தூதர், உலகத் திருக்குறள் மைய நிறுவனர் பேராசிரியர் முனைவர் கு.மோகனராசு.
கடந்த 1000 ஆண்டுகளாகத் திருக்குறளுக்காக வாழ்ந்த சான்றோர்கள்பற்றியும் இப்போது திருக்குறள் பணிகளில் ஈடுபட்டு வரும் ஆன்றோர்களைப்பற்றியும் ஆய்வுக்கட்டுரைகளைப் படிக்கச் செய்து மேடையேற்றம் செய்து வருகிறார்.
பதிப்புரையில் குறிப்பிட்ட வண்ணம் ‘133 திருக்குறள் தொண்டர்கள் வரலாற்று மாநாட்டினை’ உலகத்திருக்குறள் மையம் மூலம் முனைவர் கு.மோகன்ராசு சிறப்பாக நடத்தியுள்ளார். அம்மாநாட்டில் வழங்கப்பட்ட ஆய்வுரைகளை ‘வரலாறு படைத்த திருக்குறள் சான்றோர்கள்’ என்னும் தலைப்பில் பல தொகுதிகளாக வெளியிட்டு வருகிறார். நூற்பணிகளை மணிவாசகர் பதிப்பகம் செம்மையாகச் செய்து வருகிறது.
திருக்குறள் நெறிப்படி வாழ்ந்து மறைந்த சான்றோர்கள்பற்றிய கட்டுரைத் தொகுப்புகளாக இதுவரை 5 நூல்கள வந்துள்ளன. இன்று 6ஆவது நூல் வெளியாகிறது. ஆறாம் தொகுதியே அறிமுகத்திற்காக என் கைகளில் தவழ்கின்றது. இந்நூல்பற்றிய அறிமுக உரை யாற்றும் நல்வாய்ப்பினை எனக்கு நல்கியமைக்கு என் நன்றியைத் தெரிவிக்கிறேன்.
வரலாறு படைத்த சான்றோர்கள் தலைப்பிலான ஆறவாது தொகுப்பு நூலில் 11 சான்றோர்களின் பெருமைகள் நமக்கு உணர்த்தப்படுகின்றன.
சொல்லின் செல்வர் கங்காராம் துரைராசு குறித்துத் திருக்குறள் தூதர் வெ.இர.கனகசபை,
கம்பர் குறித்து இ.ப.நடராசன்
அருட்செல்வர் கிருபானந்த வாரியார் குறித்து வா.வேங்கடராமன்,
மாக்கவி சி.சுப்பிரமணிய பாரதியார் குறித்துப் பேராசிரியர் கருவை பழனிசாமி
பேராசிரியர் பண்டித வா.சி.சுப்பிரமணியனார் குறித்து வே.ச.விசுவநாதம்
பேராசிரியர் கா.சு.(பிள்ளை) குறித்துப் பேராசிரியர் கருவை பழனிசாமி
தமிழறிஞர் சே.எம்.நல்லசாமி(பிள்ளை) குறித்துப் பேராசிரியர் சே.சி.கண்ணப்பனார்
அ.க.நவநீத கிருட்டிணனார் குறித்து நல்லாசிரியர் வை.இராமசாமி
முனைவர் நவராசு செல்லையா குறித்து நல்லாசிரியர் க.பன்னீர்செல்வம்
சாமி.பழனிசாமி குறித்துக் கோட்டை சு.முத்து
எனப் பதினொன்மரைப்பற்றிப் பதின்மர் கட்டுரைகள் வாசித்தளித்துள்ளனர். பேரா.கருவை.பழனிசாமி இருகட்டுரைகள் அளித்துள்ளார்.
அறிஞர்ஐயன்பெருமாள்
பன்னாட்டுத் தமிழுறவு மன்றம் மூலமும் தமிழ்ப்பணி மூலமும் உலக மாநாடுகள், எழுச்சிப்பயணங்கள் மூலம் தந்தையார் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் அவர்கள் வழியில் தமிழ்ப்பணி ஆற்றி வருபவர் வா.மு.சே. திருவள்ளுவர்.
அறிஞர் ஐயன்பெருமாள்(கோனார்) குறித்த அவரது கட்டுரை முதல் கட்டுரையாக இடம் பெற்றுள்ளது.
பள்ளி, கல்லூரி மாணாக்கர்களும் முன்னாள் மாணாக்கர்களும் அறிஞர் ஐயன்பெருமாளை நன்கு அறிவர். ஆனால், தேர்வில் தாங்கள் எளிதில் வெற்றி பெறக் கோனார் உரை தந்த கோமகன் என்ற அளவில்தான் அறிவார்களே தவிர, அவரின் புலமைத்திறனையும் அறிவுச் செழுமையையும் அறிந்திலர்.
அவர்களும் பிறரும் அறியும் வகையில் அருமையான கட்டுரையை வா.மு.சே.திருவள்ளுவர் அளித்துள்ளார்.
தோற்றம், உயர்மதிப்பெண்களும் சிறப்பான தேர்ச்சியும் பெற்ற இளம்மாணவப் பருவம், பணிவுடைமையையும் இன்சொல்லையும் அணிகலன்களாகக் கொண்டு அனைவர் உள்ளத்தைக்கவர்ந்த பாங்கு என அவரைப்பற்றி விளக்கியுள்ளார்.
படிக்கும் பொழுது பாடங்களுக்கு ஏற்ற உரைக்குறிப்புகள் எழுதுவதையும் வினா-விடைகள் எழுதுவதையும் பழக்கமாகக் கொண்டிருந்த சான்றோர் பிறரும் அவற்றால் பயனடையக் கருதி வினா-விடை நூல்களையும் உரை நூல்களையும் எழுதியுள்ளார் எனக் குறிப்பிட்டுள்ளார். பள்ளி இறுதி மாணாக்கர்களுக்கு 15 ஆண்டுகள் உரைநூல்கள் எழுதியுள்ளார். இளங்கலை வகுப்பிற்கும் உரைநூல்கள் எழுதியுள்ளார் என உரைநூல்கள் வந்த வழியைக் கட்டுரையாளர் விளக்குகிறார்.
உரைநூல்களுடன் தமது பணியை அவர் முடித்துக் கொள்ளவில்லை. கோனார் தமிழ்க்கையகராதி என்னும் அகராதியையும் திருக்குறள் தெளிவுரை நூலையும் வெளியிட்டு நிலையான பணி யாற்றியுள்ளார்.
இந்நூல்களை வெளியிட்டது பழனியப்பா நிறுவனம். இதன் உரிமையாளர் தம் கட்டடத்திற்குக் குடும்பத்தினர் யார் பெயரையும் சூட்டாமல் கோனார் மாளிகை எனப் பெயரிட்டுள்ளார்; இதன் மூலம் பதிப்பகத்தார் மதிக்கும் வகையில் பாரினரால் போற்றப்பட்டுள்ளார் என்பதை நாம் அறிய முடிகிறது.
1942 முதல் 1968 வரை புனித சூசையப்பர் கல்லூரியில் தமிழ்ப்பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார்; அறிவும் திருவும் புகழும் கற்போர் நெஞ்சம் காமுறப் பயிற்றும் திறன் கொண்டவர் எனக் கட்டுரையாளர் விளக்குகிறார்.
திருக்குறள் வழி நின்று தாம் சேர்த்த பொருளையெல்லாம் தம்மைச் சார்ந்தோர்க்கு வழங்கி அறிஞர்களைப்போற்றி ஆதரித்த செம்மல் என்பதைக் கட்டுரையாளர் குறிப்பிடுகிறார்.
பெருமகனாரைத் திருக்குறள் சான்றோராக நிலைநிறுத்துவது அவர் எழுதிய ‘திருக்குறள் கோனார் பொன்னுரை’ என்னும் நூலே. இதனை 12 மக்கள் பதிப்புகளாகப் பழனியப்பா நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்நூலின் அதிகாரத்தலைப்புகள் விளக்கச் சிறப்பைக் கட்டுரையாளர் நன்கு விளக்கியுள்ளார். அவரது உரைத்திறம்பற்றி உணர 10 திருக்குறள்களின் பொன்னுரைகளை நமக்குத் தந்துள்ளார்.
திருச்செந்தூர் திருப்பாவை மாநாட்டில் பங்கேற்றுத் தொடரியில் திரும்பும் பொழுது நலக்குறைவுற்று மதுரையில் இறங்கி மருத்துவ மனையில் சேர்ந்தும் பயனின்றி 01.01.1969 அன்று மறைந்தார் பெருமகனார். அப்பொழுது பெருமகனாரைப்பற்றிப் புலவர் இலால்குடி இரங்கசாமி, வித்துவான் இராமசாமி(க் கேனார்), புலவர் த.கி.குப்புசாமி, முனைவர் வ.சுப.மாணிக்கனார், பம்பாய் இராமன், அறிஞர் கீ.இராமலிங்கனார், குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா ஆகியோர் நினைவுரைகளாக நல்கிய கவிதைகளிலிருந்தும் கட்டுரைகளிலிருந்தும் மேற்கோள் வரிகளை நமக்கு அளித்து அவரின் சிறப்புகளைப் படம் பிடித்துக் காட்டியுள்ளார்.
முத்தாய்ப்பாகத், தனக்குப் பாடல் எழுதப் பழகித் தந்து அன்போடு குறறம் குறைகளைத் திருத்திய ஆசான் எனத் தனக்கும் பெருமகனாருக்கும் உள்ள தொடர்பை வெளிப்படுத்திக் கட்டுரையை முடித்துள்ளார்.
திராவிடப் பகுதிகளில் திராவிடர் திருநாளாகக் கொண்டாடுக!
பொங்கற் புதுநாளைத் தமிழர் திருநாள் என நாம் வழங்கி வருகிறோம். உலகின் பிற பகுதிகளில் அறுவடைத் திருநாள் கொண்டாடப்பட்டாலும் தமிழ்நாட்டின் அறுவடைத் திருநாளே பொங்கல் விழாவாகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டுத் தமிழர் திருநாளாக உலகெங்கும் போற்றப்படுகிறது.
தமிழர் திருநாளாகக் கொண்டாடி வந்த தமிழன்பர்கள் சிலர் கடந்த சில ஆண்டுகளாகத் திராவிடர் திருநாள் என்று கொண்டாடுகின்றனர்.
ஆரியத்திற்கு எதிரான குறியீடு திராவிடம் என்று கூறி அதனால் அவ்வாறு அழைப்பதாகக் கூறுகின்றனர்.
நமது மொழியும் இனமும் தமிழே! தமிழே! தமிழே! தமிழ் மொழியையும் அதன்சேய் மொழிகளையும் சேர்த்துத் தமிழ்க்குடும்பமொழிகள் என அழைக்கவேண்டும் என்கிறார் தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார்.தமிழ்க்குடும்ப மொழிகள் என அழைக்கப்பட வேண்டியனவே திராவிட மொழிகள் என அழைக்கலாயிற்று.
மன்பதை நிலையில் தன்மானம், தன்மதிப்பு, மூட நம்பிக்கை ஒழிப்பு முதலானவற்றிற்குத் திராவிட இயக்கங்கள் பெரும்பங்கு ஆற்றியதையும் ஆற்றி வருவதையும் யாரும் மறுக்க முடியாது. இப்பணிகளின் குறியீடாகத்திராவிடத்தைக் குறிப்பதில் தவறில்லை. ஆனால், தமிழ் இருக்கக்கூடியஇடங்களில் – தமிழ் இருக்க வேண்டிய இடங்களில் – அதனை அகற்றிவிட்டுத்திராவிடம் எனக் குறிப்பது வரலாற்றுப்பிழையாகும். ஒரு வகையில் இன அழிப்புமாகும். எனவே, திராவிடம் என்னும் சொல்லை அதற்குரிய இடங்களில் பயன்படுத்த வேண்டுமே தவிரத் தமிழுக்கு மாற்றாகப் பயன்படுத்தக்கூடாது.
எனவே, பொங்கல் திருவிழாவைத் தமிழ் நாட்டிலும் தமிழர் வாழும் பகுதிகளிலும் தமிழர் திருநாள் என்றுதான் குறிக்க வேண்டும். திராவிடப் பகுதிகளில் திராவிடர் திருவிழாவாகக் கொண்டாட வேண்டும. அதன்மூலம் மூட நம்பிக்கைகள் ஒழியவும் தமிழ் தழைக்கவும் வழி காண வேண்டும்.
பொங்கல் விழாவைக் கொண்டாடுவதன் மூலம் தன்மானத் தனித் தமிழனாக விளங்க வேண்டும் என்றே தந்தை பெரியார் ஈ.வெ.இராமசாமி கூறியுள்ளார். (விடுதலை : 19.01.1969). திராவிடன் எனத் தந்தை பெரியார் ஈ.வெ.இராமசாமி கூறவில்லை. வெறும் தமிழன் என்று மட்டும் குறிப்பிடவில்லை. ‘தனித்தமிழன்’ என்று குறிப்பிடுகிறார். தனித்தமிழர்களின் விழா தமிழர் விழாவாகத்தானே அழைக்கப்பட வேண்டும். எனவே, கேரளம், கருநாடகம், ஆந்திரா, தெலுங்கானா, பிற திராவிடப்பகுதிகளில் திராவிடர் திருநாளாகத் திராவிட இயக்கங்கள் கொண்டாடட்டும்!
ஆரியர்போல் சங்கராந்தி என்று கூறக்கூடாது என்பதுபோல் தமிழர்களிடையே திராவிடர் திருநாள் என்றும் கூறக்கூடாது. தமிழ் நாட்டில் தமிழர் திருநாளைக் கொண்டாடுவோம்!