Saturday, May 4, 2019

மக்களாட்சியைக் காத்திடத் தேர்தல் ஆணையத்தைக் கலைத்திடுக! – இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல

மக்களாட்சியைக் காத்திடத் தேர்தல் ஆணையத்தைக் கலைத்திடுக!


தேர்தலை நடத்துவதற்கு ஒரு நடுநிலை அமைப்பு தேவை என்பதால்தான் தேர்தல் ஆணையம் தன்னாட்சி அமைப்பாக உருவாக்கப்பட்டது.  மக்களின் அடிப்படை உரிமைகளுள் முதன்மையானது தம்மை ஆளும் மக்களைத் தேர்ந்தெடுக்கும் வாக்குரிமையைப் பயன்படுத்துவது. அதற்கான வாய்ப்பைக்கூடத் தராத செயல்பாட்டுக் குறைவான தேர்தல் ஆணையம் இருந்து என்ன பயன்?
 தேர்தலின் பொழுது வாக்காளர் விழிப்புணர்வுப் பரப்புரைகள் நடத்துகின்றனர். உண்மையில் விழிப்புணர்வு வாக்காளர் பதிவு அதிகாரிகளுக்குத் தேவை.நமக்கு 100விழுக்காடு வாக்குப்பதிவிற்காகப் பரப்புரை தேவையில்லை. 100 விழுக்காடு வாக்காளர் பதிவு விழிப்புணர்வுதான் தேவை.
ஒவ்வொரு தேர்தலின் பொழுதும் வாக்குப்பதிவு மையத்திற்குச் சென்று வாக்கு இல்லை என்று திரும்புவோர் பல்லாயிரக்கணக்கில் உள்ளனர். இந்தத் தேர்தலிலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் 50,000 மீனவர்கள் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இல்லை என்ற வேதனையான முறையீடு வந்ததை அறிவோம். (கடந்த ஆண்டு கருநாடகாவில் 16,00,000 இசுலாமியர் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாக ஆய்வு ஒன்று தெரிவித்தது.) இதற்குத் தேர்தல் ஆணையம்தானே பொறுப்பேற்க வேண்டும்.
வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்க முறையீடு வந்தது என்றால் அவ்வாறு நீக்க என்ன காரணம்  என்று அறிய வேண்டாவா? பட்டியலில் பெயர்கள் மறைவதுபோல் பெயர்களுக்குரியவர்களும் மறைந்து விட்டார்கள் என எண்ணி விடுவார்களா?
புதுப்பேட்டையை சேர்ந்த சிசிலி மோரல் என்னும் பெண் வாக்கு மையம் சென்று பட்டியலில் பெயர் இன்மையால் வேதனையுடன் வீடு திரும்பி மாரடைப்பில் மரணமடைந்ததாகச் செய்தி வந்துள்ளது. தேர்தல் ஆணையத்தால் இவரின் உயிரைத் திருப்பித் தர இயலுமா?
தேர்தல் ஆணையத்தின் அறிவிப்புகள் ஏட்டுச்சுரைக்காய் போன்றது. 10 ஆண்டுகளுக்கு முன்னர் நான் மயிலாப்பூரில் குடியிருந்தேன். முதலில் குடியிருந்த தெருவிற்கு இரு தெரு தள்ளிக் குடி மாறினோம். வாக்காளர் பட்டியலில் பெயர் சரிபார்க்கத் தேர்தல் ஆணையம் அறிவித்தபடி மயிலாப்பூர் அஞ்சலகம் சென்றேன். “எங்களிடம் வாக்காளர் பட்டியல் இல்லை” என்றார் அஞ்சலகத் தலைவர்.  எனவே, வாக்குச்சாவடி அமையும் பள்ளிக்குச் சென்றேன். அப்பள்ளித் தலைமை ஆசிரியர்/முதல்வர், எங்களுக்கு அந்தத் தகவல் வந்தது. மாணவர்களின் கல்விக்கு இடையூறாக இருக்கும் என்பதால் வாங்கி வைத்துக் கொள்ளவில்லை என்றார். வாங்கி வைத்திருந்தால் நாங்கள் அலுவலகத்திற்கு வெளியே வைத்துச் சரிபார்த்துக் கொள்வோமே என்றேன். எப்படி இருந்தாலும் பொதுமக்கள் கூடுவது எங்களுக்குத் தொல்லைதான் என்றார்.
மாநகராட்சி மூலம் பட்டியலில் எங்கள் பெயர்கள் இருந்தமையை அறிந்து மகிழ்ந்தோம். ஆனால், வாக்குப்பதிவிற்குச் சென்றபொழுது பட்டியலில் பெயர்கள் அடிக்கப்பட்டிருந்தன. இணைப்பில் நீக்கப்பட்ட  பட்டியலில் எங்கள் பெயர்கள் இருந்தன. காரணம் கேட்டதற்குத் தெரியாது என்றனர். தேர்தல் ஆணையம் கொடுத்திருந்த தொடர்பு எண்களில் பேசினேன். எங்களுக்குத் தெரியாது, மண்டல அலுவலரைக் கேளுங்கள், மேல் அலுவலரைக் கேளுங்கள், என மாறி மாறி மூவரிடம் பேசியும் பட்டியலில் பெயர்கள் உள்ளன, நீக்கப்பட்ட விவரம் தெரியவில்லை என்றனர். நான்காவதாகப் பேசிய துணை ஆணையர் நிலையில் இருந்த அம்மையார் தலைமைச் செயலகத்தில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் தொடர்பு கொள்ளச் சொன்னார். அங்குள்ள அலுவலகத்தினர், எங்களுக்குப் பட்டியல் வந்த பொழுது உங்கள் பெயர்கள் இருந்தன. நாங்கள்தான் நீக்கியுள்ளோம் என்றனர். காரணம் கேட்டதற்கு இறுதியாக நாங்கள் சிலவற்றைச் சரிபார்ப்போம். நீங்கள் வீடு மாறிச் சென்றதாகத் தகவல் வந்தது. எனவே, நீக்கி விட்டோம் என்றார். வீடு மாறிச்சென்றால் நாங்கள் வந்து வாக்களிக்கக் கூடாதா? நாங்கள் அதே பகுதியில்தான் மாறியுள்ளோம். நீங்கள் இப்படிப்பட்ட தகவல் வரும் பெயர்களைச் சிவப்பு மையால் குறித்துக் கொண்டு வாக்களிக்க வரும் பொழுது சரி பார்க்கச் சொல்லலாம் அல்லவா என்றேன். அதெல்லாம் தெரியாது. பட்டியல் முகவரியில் நீங்கள் இல்லை; நீக்கி விட்டோம் என்றார்.  
அடுத்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பித்திருந்தோம். சரி பார்க்க என 2 பெண்கள் வந்தனர். பொதுவாகப் பெண்கள் அவர்களின் குடும்பத்தில் உள்ள ஆடவர்களைத்தான் அனுப்புவார்கள். ஆனால், பெண்களே வந்தது வியப்பாக இருந்தது. அதைக்கேட்டதும் நாங்கள் வரவேண்டிய பெண்களின் நாத்தனார்கள் என்றும் தங்கள் கணவன்மார் வேறு பகுதிக்குச் சென்றிருப்பதாகவும் கூறினர். குடும்ப அட்டையில் உள்ள முகவரி மாற்றத்தைக் காட்டினேன். நாங்கள் ஊருக்குச் செல்ல புறப்பட்டுக் கொண்டிருந்த நிலையில்தான் வந்தனர். அவர்கள் மறுநாள் மாநகராட்சி சென்று தேர்தல் பகுதியில் இதன் படியைத் தர வேண்டும் என்றனர். நீங்கள்தான் சரிபார்த்துவிட்டீர்களே ஏன் வரவேண்டும் என்றதற்கு நீங்கள் குடும்ப அட்டையின் படியுடன் 1 வாரம் கழித்தாவது வந்துதான் ஆக வேண்டும் என்றனர். 1 வாரம் கழித்து மாநகராட்சிக்குத் தொடர்பு கொண்ட பொழுது, விசாரணை அடிப்படையில் பெயர்கள் சேர்க்கப்படும், வர வேண்டா என்றனர்.
ஆனால், பெயர்கள் சேர்க்கப்படவில்லை. வழக்கம்போல் முறையீடு அனுப்பினேன்; தலைமைச் தேர்தல் அதிகாரிக்கு அடுத்த நிலையில் இருந்த அம்மையாரிடம் பேசினேன். “மன்னித்து விடுங்கள். இதை விட்டு விடுங்கள். வரும் சனவரியில் அடுத்த அறிவிப்பு வருகிறது. அதில் பெயரைச் சேர்த்துக் கொள்ளுங்கள். வரும் தேர்தலில் வாக்களிக்கலாம். உங்கள் குடும்பத்தினர் பெயர்கள் சேர்க்கப்படுவதற்கு நான் பொறுப்பு”  என்றார். அவ்வாறு சேர்த்து அடுத்த தேர்தலில் வாக்களித்தோம். ஆனால், நாம் வாக்குரிமையைக் காக்க இப்படிப் போராட வேண்டிய சூழல் இருப்பது சரிதானா?
சிக்கலுக்கேற்ற நடைமுறைகளை மாற்றிக் கொள்ளாமல் 100 விழுக்காட்டு வாக்காளர் பதிவில் கருத்து செலுத்தாமல் வாக்காளர் விழிப்புணர்வில் தேவையற்ற வீண் செலவுகளைச்செய்து கொண்டு பெருமை கொள்கிறது தேர்தல் ஆணையம்.
ஒருவர் முகவரி மாறியதாகத் தகவல் வந்தால்,  அஞ்சலகம் அல்லது காவல் நிலையம் மூலம் மாறிய முகவரியை அறிந்து பட்டியலில் உரியவாறு பெயர் இடம் பெறும் வகையில் தேர்தல் ஆணையம்  செயல்பட வேண்டும்.
குடும்ப அட்டை, ஆதார் அட்டை மூலமும் முழுமையான வாக்காளர் பட்டியலைத் தேர்தல் ஆணையம் உருவாக்கலாம்.
இந்நாட்டுக் குடிமக்களில் வாக்களிக்கும் அகவை எட்டிய அனைவர் பெயரும் வாக்காளர் பட்டியலில் இடம் பெற வேண்டியது தேர்தல் ஆணையத்தின் பொறுப்பு.  இந்த அடிப்படைப்பணியைக்கூடச் செய்ய முடியாவிட்டால் தேர்தல் ஆணையம் எதற்கு? கலைத்து விடலாமே! அரசின்தேர்தல் பணித் துறை இந்தப் பணியை ஆற்றினால் போதும்.
அடுத்தவர் கூறியும் செய்வதில்லை. தானாகவும் செயல்படுவதில்ல. இத்தகைய அமைப்பு இருக்கும் வரை நோயே! 
நோயைப்போக்குவோம்! மக்களாட்சியை மாண்புறச்செய்வோம்!
ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர்
போஒம் அளவுமோர் நோய்.(திருவள்ளுவர், திருக்குறள் 848)
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை – அகரமுதல

தவறுகள் தொடரா வண்ணம் தேர்தல் ஆணையம் திருத்திக் கொள்க! -இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல

தவறுகள் தொடரா வண்ணம் தேர்தல் ஆணையம் திருத்திக் கொள்க!

எல்லா அமைப்பையும்போல் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளில் நிறைகளும் உண்டு; குறைகளும் உண்டு. ஆனால், குறைகளற்றுச் செயல்பட்டால்தான் தேர்தல்கள் சிறப்பாக நடைபெறும். எனவே, இதன் குறைகளைப்பற்றிச் சில கூற விரும்புகிறேன்.
சான்றுக்குச் சில:  
புழுதிவாக்கம் வாக்குப்பதிவு மையத்தில் கடந்த தேர்தலில் சில வாக்குப்பதிவு அறைகளின் முன்னர்ப் பந்தல் போடாமல் வெயிலில் வாட விட்டிருந்தனர். இது குறித்து முறையிட்டதும் இங்கெல்லாம் வெயில் வராது என எண்ணிப் போடவில்லை என்ற அதிகாரிகள் சில மணி நேரத்தில் பந்தல் போட்டனர். (சிலவற்றில் பந்தல் போடாமல் அனைத்து வாக்குப் பதிவு அறைகளின் முன்னரும் பந்தல்  போட்டதாகக் கணக்கு காட்டியிருப்பர் என்றனர் வாக்காளர்கள்.) ஆனால்,  இந்தமுறை முன்னதாகவே எல்லா வாக்குப்பதிவு அறைகளின் முன்னரும் பந்தல் போட்டிருந்தனர்.
இந்தமுறை, பள்ளியின் தொடக்கத்தில் இருந்த பதிவறையில் வாக்குப்பதிவுக் கருவி பழுதாக இருந்தது.  ஆனால் அரை  மணி நேரத்தில் சரி செய்து விட்டனர்.
குறைகளைக் களைவதற்குப் பாராட்டுகள்!
பழுது நேரத்தில் காத்திருந்த பொழுது எனக்குப் பின்னால் நின்றிருந்தவர் மனைவி பக்கத்திலிருந்த பெண்கள் வாக்குப் பதிவறையில் இருந்து வந்தார். அவர், வாக்காளர் பட்டியலில் உள்ளவாறான பகுதி எண், பக்க எண், வரிசை எண் விவரத்தை அளித்தால்தான் வாக்களிக்க இயலும் எனத் தெரிவிப்பதாகக் கூறினார். கையில் அவர் வைத்திருந்த சீட்டில் உள்ள எண்ணில் பெயரில்லை என்கிறார்களாம். பட்டியலில் இருந்த பெயரைச் சரிபார்க்க வேண்டியது அவர்கள் கடமை எனச் சொல்லி உள்ளே போய்த் தெரிவிக்குமாறு கூறினேன். மீண்டும் வந்து பட்டியலில் உள்ள விவரம் தெரிவிததால்தான் வாக்களிக்க முடியும் எனக் கூறுவதாகக் கூறினார். மீண்டும் நான் அவரிடம் அவ்வாறு கூறுவது முறையல்ல, அவர்களின் கடமை, வாக்காளர்களைச் சரி பார்க்க வேண்டியது. ஆனால், அந்தப் பொறுப்பை நம் தலைமீது சுமத்துவது தவறு என்று சொல்லச் சொல்லி மீண்டும் அனுப்பி வைத்தேன்.  அவர் சென்றதும்  தேர்தல் அதிகாரி வந்தார். வாக்காளர் பட்டியலில் உள்ள தொகுதி எண், வரிசை எண் உரிய பக்க எண் இருந்தால்தான் வாக்களிக்க முடியும் என்றும் அவ்வாறு விவரம் தராதவர்கள் யாரும் வாக்களிக்க முடியாது என்றும் கூறினார். மேலும் அவர், வாக்குப்பதிவு மையத்தின் முன்னர்க் கட்சிக்காரர்களிடம் விவரம் வாங்கி வருமாறு கூறினார்.
அதற்கு நான் எதிர்ப்பு தெரிவித்தேன். கட்சிக்காரர்கள் தரும் வாக்குச்சாவடிச் சீட்டில் கட்சிச் சின்னமும்  இருக்கும் என்பதால் அதனைத் தடை செய்து தேர்தல் ஆணையமே வாக்குச்சாவடிச் சீட்டை அளிப்பதாக அறிவித்துள்ளது. ஆனால், இந்தப் பகுதியில் யாருக்கும் அவ்வாறு தரவில்லை. நீங்கள் வெளியே இருக்கும் கட்சிக்காரரிடம் சென்று வாங்கி வருமாறு கூறுவதால், அக்கட்சிக்குச் சார்பாகச் செயல்படுவதாக உடனே முறையிட்டு நடவடிக்கை எடுக்கச் செய்வேன் என்றேன். உடன் அவர் அமைதியாக அறைக்குள் சென்றார்.
வெளியே அதிமுக நண்பர்கள்மட்டும்தான் வாக்காளர் பட்டியலுடன் அமர்ந்திருந்தனர். ஆனால், இந்தப் பகுதி வாக்காளர் பட்டியல் வேறு பகுதிக்கு மாறிப்போய்விட்டது என அதனைக் கொண்டுவர ஆள் அனுப்பி இருந்தனர். பிற கட்சிக்காரர்கள் யாரும் இல்லை.
அந்த அம்மையார்  வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை எனக்கூறி மீண்டும் வெளியே வந்தார்.  நான், உடனே அவரையும் அழைத்துக் கொண்டு உள்ளே சென்றேன். பெண்கள் பகுதிக்குள் செல்வதாகக் காவலர் தடுத்த பொழுது அதனைப் பொருட்படுத்தாமல்  தேர்தல் அதிகாரிகளிடம் இவர் கையில் இணையத்தில் இருந்து படி எடுத்த வாக்காளர் விவரம் இருக்கின்றது. நீங்கள் ஏன் மறுக்கிறீர்கள் என்றதற்கு “அவர் வீட்டு எண்ணில் வேறு பெயர் உள்ளது. எனவே, மறுக்கின்றோம்” என்றனர். எண் இருந்தது, தெருப்பெயர் இல்லை என்பதைக் காட்டினார். வேறு தெருப்பெயருக்குரியது அது. அப்பக்கத்தின் மேல்பக்கத்தில்தான்  தெருப்பெயர் உள்ளது. அதனைக் காட்டி அவர் முகவரியில் உள்ள தெருப்பெயர் பக்கத்தில் பார்க்குமாறு கூறினேன். அப்பொழுது கட்சிச்சார்பாளர் ஒருவர் முகப்புப் பக்கத்தில் தெருப்பெயர் விவரங்கள் உள்ளதைக் காட்டினார். அதன்படி  உரிய பக்கத்தில் பார்க்கும் பொழுது அவர் பெயர் அங்கிருந்தது. இவ்வாறுதான் வாக்காளர் பெயர்களைச் சரிபார்க்க வேண்டும் எனக் கூறி நான் வெளியே வந்து விட்டேன். அடுத்த பத்து நிமையத்தில் வாக்காளர் பட்டியலுடன் ஓர் அம்மையார் வந்து வாக்காளர் எண் விவரங்களைச் சரிபார்க்கத் தன்னிடம் வருமாறு அறிவித்தார், தேர்தல் பணியாளரா, கட்சிச்சார்பாளரா எனக் கேட்டதற்குத் தேர்தல் பணியாளர் என்றார். காலத்தாழ்வு எதுவும் நேரக்கூடாது என்பதற்காகத்தான் அரசு தேர்தல் மையப்பகுதியில் முதல் நாளே வந்துதங்கியிருக்க வேண்டும் எனக் கூறுகிறது. அதனை மீறியவர் குறித்த நேரத்தில்வந்திருந்தால் இந்தக் குழப்பம் நேர்ந்திருக்காது அல்லவா?
முறையாகப் பயிற்சி பெறாத இத்தகைய தேர்தல் பணியாளர்களால் எத்தனை இடங்களில் வாக்காளர்கள் தங்கள் உரிமையை இழந்திருப்பார்கள் எனத் தெரியவில்லை.
வாக்காளர் சீட்டுகளை அளிக்காத தேர்தல் பணியாளர்கள் மீதும் அவர்களின்பொறுப்பு அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுத்து அவர்களின் ஊதியத்தைப்பிடித்தம் செய்ய வேண்டும். அப்பொழுதுதான் அடுத்த முறை இது போன்ற தவறுகள் நேரா.
ஒரு குடும்பத்தில் சில பெயர் மட்டும் நீக்கப்படும் நேர்வுகள் மிகுதியாக உள்ளன. சான்றாக, எங்கள் மகள் வீட்டில் நான்கு வாக்காளர்கள் இருப்பினும் இரு பெயர்களை மட்டும் முகவரி மாறியதாக நீக்கியுள்ளது. இவ்வாறு பல நேர்வுகள் ஊடகங்களில் குறிப்பிட்டுள்ளனர். வாக்களார் அட்டை இருந்தால் வாக்களிக்கலாம் எனக் கூறி அதற்கேற்ப நடைமுறைகளை வகுக்க வேண்டும்.
தேர்தல் அதிகாரிகளுக்குச் சிறப்பான பயிற்சி அளிப்பதுடன் வாக்கு மையத்தி ல்  அமர உள்ள கட்சித் தொண்டர்களுக்கும்  பயிற்சி அளிக்க வேண்டும். இதில் ஒளிவு மறைவு எதுவும் இல்லை. எனவே, காணொளியாகவே வெளியிட்டுப் போதிய பயிற்சி பெற வாய்ப்பு அளிக்கலாம்.
ஊடகங்கள் மூலம் அறிய வரும் தேர்தல் ஆணையக் குறைபாடுகளையும் முறையீடுகள் மூலம் அறிய வரும் குறைபாடுகளையும் அறிந்து இவை போன்ற தவறுகள் மீண்டும் நேரா வண்ணம் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எற்றென்று இரங்குவ செய்யற்க செய்வானேல்
மற்றன்ன செய்யாமை நன்று. (திருவள்ளுவர், திருக்குறள் 655)
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை – அகரமுதல 

Wednesday, May 1, 2019

சிங்கார வேலர் விருது : நோக்கத்தைத் தெளிவு படுத்துக! -இலக்குவனார் திருவள்ளுவன்

சிங்கார வேலர் விருது : நோக்கத்தைத் தெளிவு படுத்துக!

அறிஞர்களையும் ஆன்றோர்களையும் அரசு மதிக்க வேண்டும். அதன் அடையாளமாகத்தான் தமிழக அரசு விருதுகள் பலவற்றை வழங்கி வருகிறது; திருவள்ளுவர் திருநாள் விருதுகள் எனவும் சித்திரைத் தமிழ்ப்புத்தாண்டு விருதுகள் எனவும் இரு நிலைகளில் வழங்குகிறது.
அவ்வப்பொழுது புதிய விருதுகளை அறிவிப்பதுபோல் இவ்வாண்டு புதியதாகவும் சில விருதுகளை அறிமுகப்படுத்துகிறது.
  1. திருவள்ளுவர் விருது (1986 முதல்)
  2. மகாகவி பாரதியார் விருது (1997 முதல்)
  3. பாவேந்தர் பாரதிதாசன் விருது (1978 முதல்)
  4. தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது (1979 முதல்)
  5. கி.ஆ.பெ. விசுவநாதம் விருது (2000 முதல்)
  6. பெருந்தலைவர் காமராசர் விருது (2006 முதல்)
  7. பேரறிஞர் அண்ணா விருது (2006 முதல்)
ஆகியன திருவள்ளுவர் திருநாளன்று வழங்கப்பெறும் விருதுகளாகும்.

  1. தமிழ்த்தாய் விருது (2012 முதல் தமிழ் அமைப்புகளுக்கு வழங்கப்படும் விருது)
  2. கபிலர் விருது (2012 முதல்)
  3. உ.வே.சா விருது (2012 முதல்)
  4. கம்பர் விருது (2013 முதல்)
5.சொல்லின் செல்வர் விருது (2013 முதல்)
  1. உமறுப் புலவர் விருது (2014 முதல்)
7 சி.யு.போப்பு விருது (2014 முதல்)
  1. இளங்கோவடிகள் விருது (2015 முதல்)
  2. முதலமைச்சர் கணினித் தமிழ் விருது (2013 முதல்)
  3. அம்மா இலக்கிய விருது (2015 முதல்)
  4. சிறந்த மொழி பெயர்ப்பாளர் விருது (2015 முதல்)
  5. சிங்காரவேலர் விருது (2018 முதல்)
  6. தமிழ்ச்செம்மல் விருது (2015 முதல்)(விருதுகள் மாவட்டந்தோறும் வழங்கப்பெறுவன)
  7. அயோத்திதாசர்பண்டிதர் விருது (2019 முதல்)
  8. மறைமலை அடிகளார் விருது (2019 முதல்)
ஆகியன சித்திரைப் புத்தாண்டினை முன்னிட்டு வழங்கப்பெறுவன.
விருதுகள், தமிழ் அறிஞர்கள், தமிழ்ப்பணியாற்றுநர், தமிழ் அமைப்புகள், ஆன்றோர்கள் என்ற வகைகளில் வழங்கப்பெறுகின்றன. இவற்றுக்கான தகுதி வரையறைகளையும் அரசு தெரிவித்துள்ளது.
ஆனால், புதியதாக அறிமுகப்படுத்தி இவ்வாண்டு முதல் வழங்கப்பெற உள்ள சிங்கார வேலர் விருதிற்கான வரையறை  தொடர்பற்று உள்ளது.
“தமிழில் அறிவியல் கருத்துக்களை நூலாக எழுதுபவர்களிலும், சமுதாய முன்னேற்றத்திற்காகவும், சமத்துவ கொள்கைக்காகவும், தொழிலாளர் நலனுக்காகவும் போராடுபவர்களிலும் சிறந்த ஒருவருக்கு ஆண்டுதோறும் சிங்காரவேலர் விருது என்ற புதிய விருது வழங்கப்படும். (விருதுத் தொகை ரூ.1.00 இலட்சம், தங்கப்பதக்கம், தகுதியுரை, பொன்னாடை)” என்பது அரசின் அறிவிப்பு.
அறிவியல் கருத்துகள் அடிப்படை என்பது புலமை சார்ந்தது.
மன்பதை நலன் சார்ந்த செயல்பாட்டு அடிப்படையில் வழங்கப்பெறுவது போராட்டம் சார்ந்தது.
இரண்டையும் இணைப்பது முரணல்லவா?
அறிவியல் தமிழுக்கான விருது என்றால் சிங்கார வேலர் அறிவியல் தமிழ் விருது என்று அறிவித்து வழங்க வேண்டும்.  இல்லையேல் போராட்டச் செயற்பாட்டாளர்களுக்கான விருது என்றால் பொதுவாகவே வழங்கலாம். ஆனால், இவ்வாறு இரண்டையும் இணைப்பதால், பொதுவாக அரசியல்வாதிகளுக்கே இவ்விருது வழங்கப்பெறும் சூழல் ஏற்படும். அறிவியல் தமிழ் புறக்கணிக்கப்படும். அறிவியல் தமிழுக்காக உழைப்பவர்களைப் புறக்கணிப்பது தவறாகும்.  ஒருவேளை அறிவியல் தமிழ்ப் படைப்புகள் அடிப்படையில் வழங்கப்பட்டால், போராட்டச் செயற்பாட்டாளர்கள் புறக்கணிக்கப் பட்டவர்களாவர்.
சமத்துவம்பொதுவுடைமை, தமிழியல் ஆகிவற்றில் தனக்கென தனிமுத்திரைப் பதித்த தகைமையாளர் தமிழறிஞர் அயோத்திதாசப் பண்டிதர் பெயரில் அவர்தம் இலட்சிய நோக்கோடு செயன்மையாற்றும் ஒருவருக்கு ஆண்டுதோறும் அயோத்திதாசப் பண்டிதர் விருது வழங்குவதாகவும்” அறிவித்து உள்ளார்கள். இப்புதிய விருது செயற்பாட்டாளர்களுக்கான விருதாகக் கருதிக் கொள்ளலாம்.
எனவே, சிங்காரவேலர் விருது என்பதை அறிவியல் தமிழ் படைப்புகளுக்கான விருதாக மட்டும் வரையறுத்துக் கொள்ளலாம். இல்லையேல் சிங்காரவேலர் பெயரில் இருவகை விருதுகள் வழங்கப் பெற வேண்டும். ஒருவர் பெயரில் மட்டும் ஒரே துறை சார்பில் இருவகை விருதுகள் வழங்குவது சரியாகாது. எனவே, இதனை எண்ணிப்பார்க்கக் கூடாது.
முந்தைய முதல்வர் புரட்சித்தலைவி செ.செயலலிதா,  அறிவியல் தமிழை வகுப்பு தோறும் அறிமுகப்படுத்தினார். (என்றாலும் கல்வித்துறையின் ஈடுபாடின்மையால் இது செயல்படவில்லை.) அறிவியல் தமிழைக் கட்டுரை மூலமும் முழக்கம் மூலமும் மக்களிடையே கொண்டு சென்றார்.  தி.மு.க. ஆட்சியில் முதல்வர் கலைஞர் கருணாநிதி ‘அறிவியல் தமிழ் மன்றம்’ எனத் தனி அமைப்பையே ஏற்படுத்தினார். (வழக்கமான கட்சி அரசியலில் இதன் செயல்பாடு நிறுத்தப்பட்டது.) இவ்வாறு இப்போதைய ஆளும் கட்சியும் ஆண்ட கட்சியும் அறிவியல் தமிழில் ஆர்வம் காட்டும் பொழுது அறிவியல் தமிழைச் சிறப்பிக்கும் வகையில் விருது அமைவதுதான் சிறப்பாகும். அறிவியல் தமிழில் அரசு தனிக் கருத்து செலுத்துவதே, அறிவியல் வளர்ச்சிக்குப் பெரிதும் துணை நிற்கும்.
அதே நேரம் பலரும் அறிவியல் கட்டுரைகளைப் பிற மொழிச் சொற்கள் கலந்தே எழுதி வருகிறார்கள். இதற்கு முற்றுப்புள்ளி இட வேண்டும். எனவே, அறிவியலை நற்றமிழில் படைப்போர்களை முதன்மைப்படுத்தும் வகையில் விருது அமைவதே சிறப்பாகும்.
எனவே, சிங்கார வேலர் விருது அறிவியல் தமிழ்ப் படைப்புகளை ஊக்கப்படுத்தும் வகையில் அமையும் என அரசு திருத்த அறிவிப்பை வெளியிட வேண்டுகிறோம்!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை – அகரமுதல

Followers

Blog Archive