Thursday, January 16, 2020

தமிழர் திருநாளே பொங்கல் திருநாள்..! – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி

அகரமுதல

தமிழர் திருநாளே பொங்கல் திருநாள்..! – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி

தமிழர் திருநாளே பொங்கல் திருநாள்!

பொங்கல் கொண்டாட்டம் குறித்த தொன்மையான குறிப்புகள் நமக்குக் கிடைக்கவில்லை. எனினும் பொங்கல் தொடர்பான குறிப்புகளைக் காணலாம். தைப் பொங்கலன்று ஆற்றில் குளித்து மகிழ்வதைத் தைந்நீராடல் என்பர். கி. பி. மூன்றாம் நூற்றாண்டுக்கு முன் இயற்றப்பெற்ற பரிபாடல் இலக்கியத்தில் நன்னாகனார் இசையில் ஆசிரியன் நல்லந்துவனார் எழுதிய பாடலில் தைந்நீராடல் குறிக்கப் பெறுகிறது.
தாய் அருகா நின்று தவ தைந்  நீராடுதல் – பரிபாடல் 11/91
நீ தக்காய் தைந் நீர் நிறம் தெளிந்தாய் என்மாரும் – பரிபாடல் 11/115
இன்ன பண்பின் நின் தைந் நீராடல் – பரிபாடல் 11/134
தைந்நீராடுவதை உவமை போல் கபிலர், கலித்தொகையில்(59)
தையில் நீர் ஆடிய தவம் தலைப்படுவாயோ?
எனக் கேட்கிறார்.
ஆண்டின் இறுதி நாளான மார்கழித் திங்கள் இறுதி நாளன்று – பொங்கலுக்கு முதல் நாள் – கொண்டாடுவது போகி. புதியனவற்றை வரவேற்பதற்காகப் பழையனவற்றைப் போக்கும் நாள் ‘போக்கி.  ‘போக்கி’ என்பதே சுருங்கிப் போகியாயிற்று. பழைய பொருள்களை மட்டுமல், பழைய கசப்பான எண்ணங்களையும் பகை உணர்வுகளையும் எறிவதற்கான நாள் இது.
தை முதல் நாள் கொண்டாடுவதே தைப்பொங்கல். இதனை மணப்பொங்கல் என்பர். மாரியம்மன் கோயிலில் பொங்கல் வைத்து வழிபடுவதைக் காண்கிறோம். இவ்வாறான பல்வேறு நாள் பொங்கலுடன் வேறுபடுத்திச் சிறப்பிக்க இவ்வாறு கூறுகின்றனர். நாட்டின் சில பகுதிகளில் முப்போகமும் சில பகுதிகளில் இருபோகமும் இருக்கும். ஆனால், எல்லாப்பகுதிகளிலும் ஒரு போகம் இருக்கும். அதன் அறுவடைதான் தையில் நடைபெறுகிறது. எனவேதான் தைத்திங்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இடையில் ஏற்பட்ட பொருள் பற்றாக்குறை தொடர்பான இன்னல்கள் நீங்கி மகிழ்வு தொடங்கும் காலம் என்பதால் மகிழ்ச்சியாகக் கொண்டாடுகின்றனர். எனவேதான் “தை பிறந்தால் வழி பிறக்கும்” என்கின்றனர். இதற்குச் சமயப் பரப்புரையாளர்கள் – அறுவடைக்குப்பின்னர் வயலில் நடக்க வழி பிறக்கும் எனத் – தரும் விளக்கம் சரியில்லை.
 மாட்டுப் பொங்கலுக்கு மறுநாள் காண்பொங்கல் அல்லது காணும் பொங்கல். ஒருவரை ஒருவர் சந்தித்து நலம் உசாவி வாழ்த்துகளைப் பரிமாறிக் கொள்வர். பணியாளர்கள் தங்கள் முதலாளிகளைச் சந்தித்துப் பரிசுகள் பெறுவர். சிலர் இதனைத் தவறாகக் கன்றுப்  பொங்கல் என்கின்றனர். மாட்டுப்பொங்கல் கொண்டாடப்படுவதால் தனியாகக் கன்றுப் பொங்கல் எனக் கொண்டாடும் தேவை இல்லை அல்லவா?
 மாட்டுப்பொங்கல் மறுநாளன்று – காணும் பொங்கல் நாளில் – கன்னிப்பொங்கல் / கன்னிமார்பொங்கல் / கனுப் பொங்கல் / பூப்பொங்கல் என என வெவ்வேறு பெயர்களில் கொண்டாடுவர். இதனைத் தை முதல் நாளன்று பொங்கலின் பொழுதும் சில பகுதிகளில் கொண்டாடுவர் அல்லது மறுநாளோ தைத்திங்களில் பிறிதொருநாள் விளையாடியோ கொண்டாடுவர். சிறுமியர் குப்பி எரு எனப்படும் எருவைக்கொண்டு பொங்கல் சமைத்து விளையாடுவதால் இதனைக் குப்பிப் பொங்கல் / கொப்பிப்பொங்கல் / குப்பிராட்டிப்பொங்கல் என்றும் கூறுவர். மணல் வீடுகட்டி அல்லது பொம்மை வீட்டில் சிறுமியர் பொங்கல் வைப்பதால் சிறுவீட்டுப்பொங்கல்  எனவும் சொல்வர்.
 சலவையாளர்கள் துணி துவைக்கும் துறைகளில் நடத்தும் பொங்கலைத் துறைப்பொங்கல் என்கின்றனர். திருமணமான நான்காம் நாள் தாய்மாமன் செலவில் மணமகளுக்கு மட்டும் ஊர்வலம் நடத்திப் பொங்கல் இடுவதைத் தோழிப் பொங்கல் என்கின்றனர்.
மாட்டுச்சந்தையில் இடும் பொங்கலைப் பட்டிப்பொங்கல் என்கின்றனர். பொங்கலன்று மிகுதியாகப் பொங்கினால் மங்கல அறிகுறியாக எண்ணி நிறைப்பொங்கல் என்பர். சிற்றூர்த் தேவதைக்கு ஊரார் இடும் பொங்கல் பெரும்பொங்கல் எனப்படும்.
பொங்கலன்று பெற்றோர் பெண்ணுக்குத் தரும் பரிசும் பெரியோர்க்குச் செலுத்தும் காணிக்கையும் பொங்கல் வரிசை எனப்படுகிறது.
 சிறப்பாகக் கொண்டாடப்படும் பொங்கல் ஏதும் மதச் சார்புடையதா?
 இசுலாம் மதம் தோன்றும் முன்னரே, அதற்கு முன்பிருந்த கிறித்துவ மதம் தோன்றும் முன்னரே கொண்டாடப்படுவது பொங்கல் விழா. எனவே, இந்த மதங்களைச் சார்ந்தது அல்ல அது.
அப்படியானால் இந்து மதவிழா என்று சொல்லலாமா?
இறை நெறியும் மத நெறியும் ஒன்றல்ல. எனவேதான், இறையன்பர் அருட்திரு இராமலிங்க வள்ளலார்,
மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்
என்றார்.
தமிழர்களின் இறைநெறி என்பது இயற்கை சார்ந்தது.
 இந்து மதம் என்ற ஒன்று உருவாகும் முன்னர் இருந்தே சிறந்திருக்கும் இயற்கை சார்ந்த பொங்கல் விழாவை எங்ஙனம் இந்துமதப்பண்டிகை எனக் கூற இயலும்?
பரந்து இருக்கும் கடலோரம் வாழும் மக்கள் பரதவர் எனப்பட்டனர். பெரும்பகுதி கடலால் சூழ்ந்த நம் நாடு பரதக் கண்டம் எனப்பட்டது.  ஆங்கிலேயர் வந்த பின் வந்த பெயரே இந்தியா என்பது. அதுபோல் நம் நாட்டில் இருந்த சமயங்களைச் சேர்த்து இந்து மதம் என்றனர். அவ்வாறு சொல்லும் பொழுது பெரும்பகுதி ஆரியக் கருத்துகளும் ஆரியக் கதைகளும் திணிக்கப்பட்டன. அவ்வாறு திணிக்கப்பட்ட ஆரியம் மக்களை நான்கு வகையாகப் பிரித்தது. அதில் உழுபவன் சூத்திரன் எனப்பட்டுக் கடை நிலையில் வைக்கப்பட்டான். அவன் உயர்வுகளும் சிறப்புகளும் மறுக்கப்பட்டன. இவற்றுக்குக் காரணமான ஆரிய வேதங்கள் பயிர்த்தொழிலையும் பயிர்த்தொழிலாளர்களையும் இழிவு படுத்துவன. ஆனால், தமிழர்களின் பொங்கல் விழா என்பது உழுதொழிலையும் உழவர்களையும் போற்றும் பெருநெறி விழா. அவ்வாறிருக்க இதனை இந்து மத விழா என்பது எப்படிச் சரியாகும்?
 “பிராமணர், சத்திரியர் உழவுத் தொழில் செய்யலாகாது… … பூமியையும் பூமியில் வாழும் சிற்றுயிர்களையும் கலப்பை, மண்வெட்டியால் கொல்ல நேர்கிறது” என்கிறது மநு (11.52) இதையேதான் வேளாண்மை முதலிய கடமைகளில் இம்சை முதலான குறைகள் காணப்படுகின்றன எனக் கீதையும் கூறுகிறது. வேள்வியில் உயிர்களைக் கொல்பவர்கள்தாம் இங்ஙனம் கூறுகிறார்கள்.
இவ்வாறு உழுதொழிலை இழிவாகவும் அத்  தொழிலைச் செய்பவனைச் சூத்திரன் எனக் கூறி இழிவானவனாகவும் ஆரிய நூல்கள் கூறுகின்றன. அத்தகைய இழிவானவன் பெயரில் அவர்கள் விழா எடுப்பார்களா? ஆனால், தமிழர்கள் உழவையும் உழவர்களையும் உயர்வாக மதித்தார்கள். எனவேதான் தெய்வப்புலவர் திருவள்ளுவர், “உழந்தும் உழவே தலை”, “உழுவார் உலகத்தார்க்கு ஆணி” என உழவே தலைமையான தொழில் என்றார். உழவர்களைத் தொழுதே மற்றவர்கள் செல்கின்றனர் என்றார்.
 இவ்வாறு உழவர்களை மதிக்கும் தமிழ் மக்கள் உழவர் திருநாள் என்று கொண்டாடுகின்றனர். உழவை மதிக்கும் தமிழின விழாவை உழவை மதிக்காத இந்து மத விழாவாக எங்ஙனம்  கூற முடியும்? மதத்தோற்றங்களுக்கு முன்பிருந்தே கொண்டாடப்படும் இன விழாவே பொங்கல் விழா என்பதை உணர வேண்டும்.
கடந்த நூற்றாண்டில், தேசியக் கட்சிகளில் இருந்த தமிழ் உணர்வாளர்களாலும் திராவிட உணர்வாளர்கள், தமிழ் உணர்வாளர்களாலும்  பொங்கல் விழா கொண்டாடுவது ஓர் எழுச்சியாக மாறியது. சமய வேறுபாடின்றி அனைத்துத் தரப்பாரும் பொங்கல் விழாவைக் கொண்டாடினர். தனித்தனிக் குடும்ப விழாவாக இலலாமல், மன்பதை விழாவாகத் தமிழ் அமைப்பினரும் பிற அமைப்பினரும் கொண்டாடத் தொடங்கினர். அதற்கு முன்பு சிற்றூர்களில் சல்லிக்கட்டு, காணும் பொங்கல் போன்றவற்றால் ஊர் விழாவாக இருந்த பொங்கல் விழா நகர விழாவாகவும் மாறியது.   எல்லாச் சமயத்தவராலும் தமிழின விழாவாகக் கொண்டாடப்பட்டுச் சிறப்பெய்திய பொங்கல் விழா மெல்ல மெல்ல இந்துக்கள் தவிர  பிற சமயத்தவரால் கடவுள் நம்பிக்கை அடிப்படையில் புறக்கணிக்கப்படலாயிற்று. இந்துக் கடவுளுக்குப் படைத்த பொங்கலைத் தாங்கள் உண்பதா என்றும் ஒரே இறை வழிபாட்டில் நம்பிக்கை கொண்ட நாம் பிற சமயக் கடவுளுக்குப் படைத்த பொங்கலை ஏற்பதா என்றும் எண்ணத் தொடங்கி விட்டனர்.
இலக்கிய அமைப்புகள் மூலம் தமிழ்த்தொண்டாற்றிவரும் பிற சமயத்தவர், சிறப்பாகப் பொங்கல் விழாவை உணர்வுடன்தான் கொண்டாடுகின்றனர். கட்சி அமைப்பினர் கொண்டாடும் பொதுவிழாவாகிய தமிழர் திருநாளிலும் சமய வேறுபாடின்றிக் கலந்து கொள்கின்றனர். ஆனால், குடும்பம் என்று வரும் பொழுது வேறு நிலை எடுக்கின்றனர். இந்துக் கோயில்களில் பொங்கலை முன்னிட்டு வழிபாடுகளும் சிறப்புப் பூசைகளும் நடை பெற்று வருகின்றன. இதனால் இந்து விழாவாக இப்பொழுது கருதப்படும் நிலை வந்து விட்டது.
 மணிமேகலையில் 10 மதவாதிகள் பற்றிய குறிப்பு வருகிறது. அதில் இந்து மதம் இல்லை. இந்து மதம் என்பதே பிற்காலத்திய  கூட்டாக்கம்தான். இந்து மதம் இல்லாக் காலத்திலிருந்தே தமிழர் விழாவாக இருந்து வரும் பொங்கல் விழாவை மத விழாவாகக் கருதுவது தவறு என்பதை அனைவரும் உணர வேண்டும். தாங்கள் தமிழர்கள் என்பதை மறவாது தமிழ் நாட்டவரும் உலகத் தமிழர்களும் தமிழர் திருநாளைக் கொண்டாட வேண்டும்.
எனவே, இந்து என்ற பெயர் சூட்டலுக்கு உள்ளானவர்களும் பிற சமயம் சார்ந்த தமிழ் நாட்டினரும் பொங்கல்  விழாவை இனவிழாவாகவும் பொது விழாவாகவும் பண்பாட்டு ஒற்றுமைக்கும் சமய நல்லிணத்திற்கும் ஏற்ற விழாவாகவும் கருதிச் சிறப்பாகக் கொண்டாட வேண்டும்.
– இலக்குவனார் திருவள்ளுவன்
தினச்செய்தி 17.01.2020

Tuesday, January 7, 2020

திருக்குறளும் “ஆற்றில் போட்டாலும் அளந்து போடு” பழமொழியும் – இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல

 திருக்குறளும் “ஆற்றில் போட்டாலும் அளந்து போடு” பழமொழியும்
பழமொழிகள் சில மூலப் பொருள்களிலிருந்து விலகி இன்றைக்குத் தனியான தவறான பொருள்களில் வழக்கத்தில் உள்ளன. அவற்றுள் ஒரு பழமொழியே “ஆற்றில் போட்டாலும் அளந்து போடு” என்பது. இதனைப் பேச்சு வழக்கில் “ஆத்துல போட்டாலும் அளந்து போடு” என்றும் பெருவாரியாகக் கூறுகின்றனர். உண்மையில் இது பழ மொழி அல்ல. திருவள்ளுவரின் திருக்குறள் ஒன்றின் சிதைந்த வடிவமே ஆகும். அதனைப் பார்ப்போம்.
முதலில் நாம் பழமொழிக்கான விளக்கங்களைக் காண்போம்.
“இந்தப் பழமொழி நாம் வாழ்வில் கைக்கொள்ள வேண்டிய நல்ல கருத்தொன்றை வலியுறுத்துகிறது. நாம் எதைச் செய்தாலும் அளவறிந்து செய்ய வேண்டும். சிக்கனமாக இருக்க வேண்டும். வீண் செலவு செய்யக்கூடாது என்ற பொருளினை இப் பழமொழி கூறுகிறது என்பர்.” இவ்வாறு அவினாசி குழந்தைகள் உலகம் வலைப்பூவில் < https://avinashikidsworld.blogspot.com/ > தெரிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்ல, “மேலும்  இதில், மற்றொன்று வேறு வகையானது. ஆற்றில் கொண்டுபோய் விட்ட பிறகும் கூட நம் மனம் சும்மா இராது. இவ்வளவு பொருட்கள் தேவையில்லாமல் இவ்வளவு காலம் நம்மிடம் ஏன் இருந்தன? என்ற எண்ணம் ஏற்படும். இவற்றின் விளைவு தான் என்ன? நாம் எதைச் செய்தாலும் நிதானித்து, ஆர அமரச் சிந்தித்து, கணக்கிட்டுச் செய்யும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற பாடத்தை இப் பழமொழி நமக்குக் கற்பிக்கிறது. தேவையற்ற பொருள்களைக் கழிக்கும் போது கூட, சிந்தித்துத்தான் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறது.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முடிவாக, இதில் பின் வருமாறு தெரிவிக்கப் பட்டுள்ளது.
“இப் பழமொழிக்குத் தற்காலத்தில் புதியதோர் கருத்தும் கூறப்படுகிறது. ஆற்றில் போடுவது என்பதே தவறு. இதில் அளந்து போட்டால் என்ன? அளக்காமல் போட்டால் என்ன? எதுவும் நேர்ந்து விடாது. எனவே நம்முன்னோர் இப் பழமொழியை முற்கூறிய கருத்தில் கூறவில்லை. அகத்தில் போட்டாலும் அளந்து போட வேண்டும் என்பதே இதன் உண்மையான வடிவமாதல் வேண்டும். அகத்தில் (வயிற்றுக்கு) போட்டாலும் (சாப்பிட்டாலும்) அளந்து போட வேண்டும் (சரியான அளவு சாப்பிட வேண்டும்). அளவுக்கு அதிகமாக உண்ணுதல் கூடாது. அளவுக்கு அதிகமாக (அளந்து உண்ணாமல்) உண்பதே பல வித நோய்கள் தோன்றுவதற்குக் காரணமாயமைகின்றதெனக் கூறப்படுகிறது. ‘அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு’ என்ற பழமொழியும் அளந்துண்ண வேண்டியதன் அவசியத்தையே வலியுறுத்துகின்றது எனலாம். சுருங்கக் கூறின் எச்செயலைச் செய்யும் போதும் நிதானித்து, கணக்கிட்டுச் செய்யும் பழக்கம் நமக்கு ஏற்பட வேண்டும் என்பதையே இப் பழமொழி வலியுறுத்துகிறது எனலாம்.”
மனதோடு மனதாய் < http://manthodumanathai.blogspot.com/2008/08/blog-post.html  > என்னும் வலைப்பூவில்
“. . . .  அவாள்கள் பாசையில் ஆத்துல – வீட்டுல இதன் படி வீட்டுக்கே — குடும்பத்துக்கே – செலவு செய்தாலும் கணக்கிட்டுச் செய்ய வேண்டும்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்வருமாறு, நாகராச சோழன் எம்.ஏ.எம்.எல்.ஏ என்கிற அமாவாசை என்னும் முகநூல் பக்கத்தில் < https://www.facebook.com/NakarajacolanMamlaEnkiraAmavacai/posts/461153967321913/ >  17.08.2013 இல் பதியப்பட்ட ஒன்று, பெண்மை வலைப்பூவில் , https://www.penmai.com/ > 12.08.2015 இல் பகிரப்பட்டது.(மூலப்பதிவு வேறாக இருக்கும்.)
“. . . .  இந்தப் பழமொழியில் நம் உடல் நலம் குறித்த இரகசியம் அடங்கி உள்ளது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? பழமொழியின் உண்மையான பொருள். “அகத்தில் போட்டாலும் அளந்து போடு…” இது, காலப்போக்கில் “ஆத்தில் போட்டாலும் அளந்து போடு” என்றானது. அதை நம் மக்கள் அழகு தமிழில் “ஆற்றில் போட்டாலும் அளந்து போடு” என்று எழுதினார்கள்.
‘அகம்’ என்பது நம் உடலைத் தான் குறிக்கிறது. நம் உடலுக்குள் நாம் போடும் உணவைக் கூட அளந்து தான் போட வேண்டும் என்பதைத் தான் இந்த பழமொழி நமக்கு உணர்த்துகிறது.
“அகத்தில் போட்டாலும் அளந்து போடு…!”  இவ்வாறு பழமொழியின் உண்மை வடிவமாக வேறொன்றைக் கூறுகிறது.
“ஆற்றிலே போட்டாலும் அளந்து போடு; குப்பையிலே போட்டாலும் குறிப்பேட்டில் பதிந்து போடு.”  இப்படியும் ஒரு விளக்கம் உள்ளது.
வலைத்தமிழ் பக்கத்திலும் தமிழ்இலக்கியம் வலைப்பூவிலும் இடம் பெற்ற மற்றொரு கருத்து; மேற்கூறியவாறான இரண்டையும் மறுத்துப் பின்வருமாறு விளக்குகின்றன.
“இப்பழமொழியில் வரும் ‘ஆத்துல’ என்னும் கொச்சைச் சொல்லின் தூய தமிழ்வடிவம் ‘அகத்தில்’ என்பதாகும். அகம் என்ற சொல்லிற்குப் பல பொருட்கள் உண்டெனினும் இப்பழமொழியில் வரும் பொருள் ‘மனம் அல்லது நினைவு’ என்பதாகும். அகத்தில் போடுதல் என்பது நினைவில் வைத்தலாகும். ‘அளந்து’ என்ற சொல்லில் எழுத்துப் பிழை உள்ளது. இது ‘அறிந்து’ என்று வரவேண்டும். இவையே இப்பழமொழிக்கான திருத்தங்கள் ஆகும். தொடர்ந்து இதற்கான விளக்கம் அளிக்கப்பட்டுப் பின்வருமாறு முடிகிறது.
“இப்பழமொழியின் திரிபு வரலாறு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
அகத்தில் -> அகத்தில -> அகத்துல -> ஆத்துல
சரியான பழமொழி: அகத்தில் போட்டாலும் அறிந்து போடவேண்டும்.”
தமிழ்ச்சுரபி வலைப்பூ,  மருவிய பழமொழிகள் < http://lifeoftamil.com/transformed-proverbs-1/   முதலான சிலவற்றில் இதன் இறுதி விளக்கம் மட்டும் எடுத்தாளப்பட்டுள்ளது.
பொதுவாகத் தொன்மைக் கதைப்பொழிவு ஆற்றுவோர் நல்ல தமிழ்ப் பழமொழிகளையும் கருத்துகளையும் அறிவார்ந்து சொல்வதாகக் கருதித் தப்பும் தவறுமாக விளக்குவதைப் பழக்கமாகக் கொண்டுள்ளார்கள். புரியாத கருத்துகளாயின் மேலும் சிறப்பாகத் தவறாக விளக்குவார்கள். இப்பொழுது இணையத்தளம் கையில் சிக்கிவிட்டதால் தடி எடுத்தவன் தண்டல்காரனாக ஆளாளுக்குத் தம் விருப்பம்போல் எழுதுவோர் பெருகி விட்டனர். எனவேதான், இப்பழமொழி குறித்தும் வெவ்வேறான தவறான விளக்கங்கள்.
இவை தவறு என்றால் எது சரி என்கிறீர்களா? இப்பழமொழி அமையக்காரணமாக இருந்த திருக்குறள்தான்!
ஆற்றின் அளவறிந்து ஈக அதுபொருள்
போற்றி வழங்கும் நெறி
(திருவள்ளுவர், திருக்குறள், 477)
இக்குறள்தான் மக்கள் வழக்கில் தவறாக இடம் பெற்றுப் பழமொழியாக மாறிவிட்டது.
 மணக்குடவர், “பொருளை அளவறிந்து கொடுக்கும் வழியாலே கொடுக்க; பொருளையுண்டாக்கி வழங்கும் நெறி அதுவாதலால்.” என்கிறார். பரிமேலழகர். “ஆற்றின் அளவு அறிந்து ஈக – ஈயும் நெறியாலே தமக்கு உள்ள பொருளின் எல்லையை அறிந்து அதற்கு ஏற்ப ஈக, அது பொருள்போற்றி வழங்கும் நெறி – அங்ஙனம் ஈதல் பொருளைப் பேணிக் கொண்டொழுகும் நெறியாம்” என விளக்குகிறார்.
காலிங்கர், “பொருள் வரலாற்றினது சிறுமை பெருமை அளவு அறிந்து அதற்குத் தக்காங்கு அரசர் யாவர்க்கும் ஈந்து ஒழுக;” என்கிறார். பரிதி. “ஏற்பவர் தமக்கு உதவுவாரா மாட்டாரா என் அறிந்து கொடுக்க” என உரைத்தார். பரிப்பெருமாளும் காலிங்கரும் ‘வருவாய் அளவறிந்து ஈந்து ஒழுகுக’ என்று பொருள் கூறினர். தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார், “தனக்குப் பொருள் வரும் வழியினை அறிந்து அதற்கு ஏற்பக் கொடுத்தல் வேண்டும். அங்ஙனம்  கொடுத்தலே பொருளைக் காத்துக் கொண்டு கொடுத்து வாழும் நெறியாகும்” என்கிறார்.
தமிழ் மக்கள் கொடை மடம் மிக்கவர்கள். முல்லைக்குத் தேர் கொடுத்த பாரி மன்னன் போல், மயிலுக்குப் போர்வை அணிவித்த பேகன் மன்னன்போல் கொடுக்க எண்ணும் பொழுது அறச்சிந்தனையில் மட்டும் கருத்து செலுத்திப், பொருள் இருப்பு குறித்துக் கவலைப்படுவதில்லை. யாருக்கு, எதற்குக் கொடுக்கிறோம் என்றும் பொருட்படுத்துவதில்லை. ஆள்வோர் இவ்வாறு இருந்தால் அஃது அவர்களுக்கு மட்டுமல்லாமல் அவர்கள் ஆளும் நாட்டிற்கும் தீதாகும். எனவேதான் இக்குறளைத் திருவள்ளுவர் எழுதினார்.
திருவள்ளுவர் பொருள் வரும் வழி அறிந்து அதற்கேற்பக் கொடுப்பதை வரையறுத்துக் கொள்ளுமாறு தெரிவிப்பதாக அனைவரும் தெரிவித்துள்ளனர்.  யாருக்கு, எதற்குக்கொடுக்க வேண்டும் என ஆய்ந்தறிந்து அதற்கேற்பவும் கொடுக்குமாறு வலியுறுத்துகிறார். பொருத்தமில்லாதவர்க்கு, உண்மைத் தேவையில்லாதவர்க்கு, வேண்டப்படும் அளவிற்கு மிகையாக, வாரி வழங்கக்கூடாது. அவ்வாறு வழங்குவது வழங்கப்படுபவர்க்கும் நன்றன்று. ஆதலின் கொடுக்க வேண்டிய அளவை உணர்ந்து வழங்க வேண்டும் என்கிறார்.
சரி. இதற்கும் பழமொழிக்கும் என்ன தொடர்பு என்கிறீர்களா? பொறுங்கள். பார்ப்போம்.
ஆறு என்பதற்கு, வழி, வழிவகை, அறம், பயன், இயல்பு எனப் பல பொருள்கள் உள்ளன. எல்லாப் பொருள்களும் இக்குறளில் பொருந்துகின்றன. கொடுக்கும் வழியை, வழிவகையை, அறத்தின் தன்மையை, பயனை, இயல்பை அறிந்து தக்கவர்க்குத் தக்க அளவில் வழங்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது.
எனவே, பொருள் வரும் வழியையும் இருக்கும் அளவையும் உணர்ந்து கொடுக்க வேண்டிய வழிவகையையும் உணர்ந்து கொடுக்க வேண்டும் என்னும் நிதி மேலாண்மையை விளக்கும் குறளில் ‘ஆறு’ என்பதை நீரோடும் ஆறாகப் பிற்காலத்தில் தவறாகப் புரிந்து கொண்டனர். எனவே, ஆற்றில் அளவோடு போடவேண்டும் எனப் பொருத்தமில்லாக் கருத்தை உருவாக்கிக் கொண்டனர். எனவே, ‘போட்டாலும்’ என்பதைச் சேர்த்து ஆற்றில் போட்டாலும் என்று தொடங்கி ‘அளவறிந்து ஈக’ என்பதன் பொருளாக ‘அளந்து கொடு’ என்று சொல்லாமல், முன்சொல்லிற்கு ஏற்ப ‘அளந்து போடு’ என்று சொல்லி விட்டனர்.
“ஆற்றின் அளவறிந்து கொடு!” என்னும் பொருளே திரிந்து வழங்குவதை உணர்வோம்! திருக்குறளைப் போற்றுவோம்!
– இலக்குவனார் திருவள்ளுவன்
செருமனியில் திருவள்ளுவர் விழா & ஐரோப்பிய தமிழர்கள் நாள்
சிறப்பு மலர், திசம்பர் 04, 2019. பக்கங்கள் 62-64

ஒவ்வொரு வரியில் இன்பத்துப்பால்! (1131-1180) – இலக்குவனார் திருவள்ளுவன்

ஒவ்வொரு வரியில் இன்பத்துப்பால்!
திருவள்ளுவர்
திருக்குறள்காமத்துப்பால்
அதிகாரம் 114. நாணுத் துறவுரைத்தல்
(நாணத்தை விட வேண்டிய நிலைமை கூறல்)
51. காதல் நிறைவேறாதவர்க்கு மடலேறுதலே வலிமை.(1131)
52. நாணத்தை நீக்கி உடலும் உயிரும் மடல் குதிரை ஏறும்.(1132)
53. நாணமும் ஆண்மையும் இருந்தது. மடல்குதிரை இருக்கிறது. (1133)
54. நாணமும் ஆண்மையும் ஆகிய தெப்பங்கள் காதல் வெள்ளத்தில் இழுக்கப்படுகின்றனவே! (1134)
55. மாலைத்துன்பத்தையும் மடலேறுதலையும் தந்தாள். (1135)
56. கண்கள் உறங்கா. நள்ளிரவிலும் மடலேறுதலையே நினைப்பேன். (1136)
57. கடல்போல் காமம் பெருகினும் மடலேறாச் சிறப்பினள் பெண்.(1137)
58. அச்சமும் இரக்கமும் இன்றிக் காமம் வெளிப்படும்.(1138)
59. யாரும் அறியார் என எண்ணிக் காதல் தெருவில் சுற்றுகிறது.(1139)
60. யாம் பெற்ற துன்பம்  பெறாமையால் ஊரார் சிரிப்பர்.(1140)
அதிகாரம் 115. அலர் அறிவுறுத்தல்
(காதல் செய்தியைப் பலர் கூடிப் பேசுதல் அலர்.காதல் ஒழுக்கத்தை ஊரார் பழிப்பதைத் தெரிவித்தல்.)
61. காதலைப் பழிப்பதால் உயிர் நிற்கும். அறியார் அதனை ஊரார். (1141)
62. அவளை அடையாமல் இருப்பதை அறியாமல் ஊர்ச்சொல் என்னோடு சேர்க்கிறது.(1142)
63. ஊரார் அவளுடன் சேர்த்துப் பேசுவது அவளை அடைந்த மகிழ்வைத் தருகிறது. (1143)
64. ஊர்க்கூற்றால் காதல் வளர்கிறது. இல்லையேல் தளரும். (1144)
65. குடிக்கக் குடிக்கக் கள் இனிது. வெளிப்பட வெளிப்படக் காதல் இனிது.(1145)
66. கண்டேன் ஒருநாள். திங்கள் மறைப்புபோல் பாரெங்கும் பரவியது. (1146)
67. ஊர்ச்சொல் எருவாக அன்னை சொல் நீராக வளர்கிறது காதல். (1147)
68. நெய்யால் நெருப்பு அணையுமோ? ஊர்ச்சொல்லால் காதல் அழியுமோ? (1148)
69. பிரியேன் எனப் பிரிந்தார்க்கு அஞ்சாதவளா ஊர்க்கு அஞ்சுவேன். (1149)
70. உடன்போவாள் என்னும் ஊரலரை உண்மையாக்குவார் காதலர். (1150)
அதிகாரம் 116. பிரிவாற்றாமை
(தலைவன் பிரிவைத் தலைவி பொறுக்க இயலாமை.)
71. செல்லவில்லை எனில் சொல். சென்று வருதலை வாழ்வாளிடம் சொல். (1151)
72. காதல் பார்வை இன்பம் தந்தது. கூடல் பார்வை பிரிவச்சம் தருகிறது. (1152)
73. பிரியேன் என்றாலும் பிரிவார். எங்ஙனம் தெளிவது? (1153)
74. பிரியேன் என்றவர் பிரிந்ததால் நம்பியவர் மீது என்ன குற்றம்? (1154)
75. காத்திடப் பிரிவைத் தடுத்திடுக. பிரிந்தால் உயிர் பிரியும். (1155)
76. பிரிவைக் கூறும் கல்நெஞ்சர் ஆயின் எங்ஙனம் அன்பு காட்டுவார்? (1156)
77. கழலும் வளையல்கள் பிரிவைக் காட்டிக் கொடுக்கின்றனவே! (1157)
78. இனமில்லார் ஊரில் வாழ்தல் கொடிது. அதனினும் கொடிது இனியவர்ப் பிரிவு. (1158)
79. தொட்டால் சுடுவது நெருப்பு. விட்டால் சுடுவது காமம். (1159)
80. தலைவர் பிரிந்தால் வாழ்வார் பலர். நான் அல்லள். (1160)
அதிகாரம் 117. படர் மெலிந்து இரங்கல்
(பிரிவுத் துன்பத்தை நினைத்து மெலிந்து இரங்கல்)
81. பிரிவு நோயை மறைப்பேன். அதுவோ ஊற்று நீராய் மிகுகின்றது. (1161)
82. காதல் நோயை மறைக்கவோ உண்டாக்கியவரிடம் உரைக்கவோ முடியவில்லை. (1162)
83. காதலும் மறைக்கும் நாணமும் உயிர்க்காவடியில் தொங்குகின்றன. (1163)
84. காதல் கடல் உண்டே! கடக்கும் காவல் தெப்பம் இல்லையே! (1164)
85. காதலர்க்குத் துன்பம் தருபவர், பகைவர்க்கு என்ன செய்வாரோ? (1165)
86. காதல் கடல் போல் பெரிது. பிரிவோ கடலினும் பெரிது. (1166)
87. காமக்கடலைக் கடக்க இயலவில்லை. இரவிலும் தனியன்.(1167)
88. உயிர்களைத தூங்கச் செய்யும் இரவிற்கு நான் மட்டுமே துணை. (1168)
89. தலைவரைப் பிரிந்த நீளிரவு கொடுமையிலும் கொடுமை. (1169)
90. கண்கள், காதலர் இருக்குமிடம் சென்றால் நீந்த வேண்டாவே. (1170)
அதிகாரம் 118. கண்விதுப்பு அழிதல்
(விரைந்து பார்க்க வேண்டும் துடிப்பால் வருந்துதல்)
91. கண்கள் காட்டியதால் காமநோய் வந்தது. மீண்டும் காட்டச்சொல்வதேனோ? (1171)
92. பார்த்ததால் துன்பம் வந்தது உணராமல், கண்களே துன்புறல் ஏனோ? (1172)
93. பார்த்த கண்களே அழுவது நகைப்பைத் தருகிறது. (1173)
94. பிழைக்க முடியாநோய் தந்த கண்ணே! அழமுடியாமல் கண்ணீர் வற்றிவிட்டாயே! (1174)
95. கடலினும் பெரிய காமநோய் தந்த கண்கள், துயிலாமல் துன்புறுகின்றன. (1175)
96. காதல் நோய் தந்த கண்களே வருந்துவது மகிழ்ச்சியே! (1176)
97. அவரைக் கண்ட கண்களே! நீர் வற்றிப் போக! (1177)
98. சொல்லால் மட்டும் விரும்பியவரைக் காணாமல் கண்கள் துன்புறுகின்றனவே! (1178)
99. கண்ணே! வராவிட்டாலும் வந்தாலும் தூங்காமல் துன்புறுகிறாயே! (1179)
100. உள்ளத்தைப் பறையடிக்கும் கண்கள் இருந்தால் காதலை மறைப்பது எப்படி? (1180)
-இலக்குவனார் திருவள்ளுவன்
(தொடரும்)

Friday, January 3, 2020

இன்னும் எத்தனை சொற்களின் ‘சோலியை முடி’ப்பார்கள்? – இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்



ன்னும் எத்தனை சொற்களின் ‘சோலியை முடி’ப்பார்கள்?

ஒரு சொல்லுக்கான பொருள் என்பது அதனை மற்றவர் புரிந்து கொள்வதன் அடிப்படையில்தான் அமைகிறது. இதனால், சொல்லின் பொருள் இடத்திற்கேற்ப மாறும் நிலையும் ஏற்படுகிறது. அதே நேரம், சொல் அல்லது சொல்லின் தொடரான சொற்றொடர் வெளிப்படையாக உணர்த்தும் பொருள் ஒன்றாக இருக்கும். பயன்படுத்தும் இடத்தில் உணர்த்தும் பொருள் வேறாக இருக்கும். இவ்வாறான தொடரை மரபுத் தொடர் என்கிறோம். சில நேரங்களில் சொலவடை, மொழி மரபு, வட்டார வழக்கு, இலக்கணத் தொடர் என்றெல்லாம் குறிப்பிடுகிறோம். இவ்வாறு மரபுத் தொடர் பயன்படுத்தப்படும் பொழுது அச்சொல்லின் வெளிப்படையான பொருளுக்கு முதன்மை அளிக்காமல் சொல்ல வரும் உண்மைப் பொருளையே நாம் காண வேண்டும்.
இத்தகைய மரபுத்தொடர்கள் எல்லா மொழிகளிலும் உள்ளன. தமிழில் ஆயிரக்கணக்கில் உள்ளன. ஆனால், நூற்றுக்கணக்கில்தான் தொகுக்கப்பட்டுள்ளன. அவற்றில் சிலவற்றைப் பார்ப்போம்.
தமிழ் மரபுத்தொடரைப் பார்க்கும் முன்னர் ஆங்கிலத்தில் எடுத்துக்காட்டு ஒன்றைப் பார்ப்போம்.(சிலருக்கு ஆங்கிலத்தில் சொன்னால்தானே புரிகிறது!) Kicked a bucket என்றால் வாளியை உதைத்தான் என்று பொருள் அல்ல. இந்த மரபுத் தொடர் இறந்துவிட்டதைக் குறிக்கிறது. பொருளாக இருந்தால் அப்பொருள் சீர்கெட்டுப் பயனற்றதாகி விட்டது என்பதைக் குறிக்கிறது. இப்படி எல்லா மொழிகளிலும் சூழலுக்கேற்ப வெளிப்படையாகத் தெரிவிக்கும் பொருளும் உணர்த்தும் பொருளும் வெவ்வேறாக இருப்பதே இயற்கை. இனித் தமிழுக்குச் செல்வோம்.
வாலைச்சுருட்டிக் கொண்டு போ’ என்றால் கேட்பவனுக்கு வால் இருப்பதாகவும் அதனைச் சுருட்டிக் கொள்ளச் சொல்வதாகவும் பொருளல்ல. ’எதுவும் பேசாமல் போ’ என்றுதான் பொருள்.
வாயைக் காட்டாதே’ – அவன் முன்பு போய் வாயைக் காட்டாதே என்பதுதான் நேர் பொருள். மருத்துவர் முன் வாயைக்காட்டுவது இயற்கை. இங்கே. வாயிலிருந்து இனி எதிர்ச்சொல் வரக்கூடாது என்பதைக் குறிக்கும் வகையில் எதிர்த்துப் பேசாதே எனப் பொருள்.
பூசி மெழுகுகிறான்’ என்றால் தரையைப் பூசி மெழுகுவதாகப் பொருளல்ல. நிகழ்ந்ததை மறைத்தல் அல்லது குற்றத்தை மறைத்தல் என்றுதான் பொருள்.
‘தேர்வை எப்படி எழுதினாய்’ எனக் கேட்டால் ’வெளுத்து வாங்கி விட்டேன்’ என்றால் துணியை வெளுத்ததாகப் பொருளல்ல. நன்றாக எழுதியுள்ளதாகப் பொருள். நன்றாகச் செய்வதைக் குறிப்பதால் சில இடங்களில் நன்றாக அடித்துவிட்டதாகவும் பொருள் வரும். அடிப்பதை அடி பின்னிவிட்டான் என்றும் சொல்வதுண்டு. இங்கே எதையும் பின்னவில்லை.
‘அரசாங்கம் வாய்ப்பூட்டு போடுகிறது’ என்றால் ஒவ்வொருவர் வாயிலும் பூட்டு போடுவதாகவா பொருள்? பேச்சுரிமையத் தடுக்கும் வகையில் பேசவிடாமல் செய்கிறது என்றுதானே பொருள்!
நாக்கு நீளுகிறது’ என்றால் ஏதோ மாய மந்திர வித்தையில் நாக்கு நீண்டுவிட்டதாகவா பொருள். அதிகமாகப் பேசுவதாகப் பொருள். ‘என்னிடமா காது குத்துகிறாய்?’ என்றால் என்ன பொருள்? ‘என்னை ஏமாற்றப் பார்க்காதே’ எனப் பொருள்.
‘இன்றோடு உனக்குத் தலை முழுகி விட்டேன்’ என்றோ ‘கை கழுவி விட்டேன்’ என்றோ சொன்னால் தொடர்பை விட்டு விட்டதாக அல்லது கை விட்டு விட்டதாகப் பொருள்.
‘அவளையே திருமணம் செய்கிறேன் என்று ஒற்றைக்காலில் நிற்கின்றான்’ என்றால் விடாப்பிடியாக நிற்கிறான் – உறுதியாக இருக்கிறான் எனப் பொருள். ‘பல்லைக்கடித்துக் கொண்டு சமாளித்தேன்’ என்றால் துன்பங்களைப் பொறுத்துக் கொண்டதாகப் பொருள்.
‘ஏனடா மென்னியைத் திருகுகிறாய்’ என்பதற்கு என்றைக்காவது, ’மென்னியை நெரித்தது போதும்’ என்றா சொல்கிறார்கள். மென்னி என்றால் குரல் வளை. குரல் வளையையோ குரல் வளை உள்ள கழுத்துப்பகுதியையோ திருகுவதாகவோ நெரிப்பதாகவோ பொருளல்ல. ‘இன்னல் தந்தது போதும். விட்டு விடு’ என்று பொருள்.
‘நேரம் காலம் பார்க்காமல் வந்து என் கழுத்தை அறுக்காதே’ என்கிறோம்.அப்படியானால் நேரம் பார்த்து வந்து கழுத்தை அறுக்கலாமா? ஓய்வில்லாத நேரத்தில் வந்து தொந்தரவு செய்யாதே என்பதைத்தான் இப்படிச் சொல்கின்றனர்.
‘என் தலையை உருட்டியது போதும்’ என்றால் இதுவரை தலையை வெட்டி எடுத்து பந்து விளையாடுவதுபோல உருட்டி விளையாடுவதாகவா பொருள்? குறிப்பிட்ட செய்தி அல்லது பொருண்மையில் அவரைப்பற்றிப் பேசியது போதும் என்கிறார்.
தலை இருக்க வால் ஆடலாமா?’ என்பது எந்த வால் ஆட்டத்தையும் குறிக்கவில்லை. பணியிலோ அகவையிலோ மூத்தவர் இருக்கும் பொழுது தானாக முந்திக்கொண்டு செயலில் இறங்குவதை அல்லது கருத்து சொல்வதைக் குறிப்பிடுவது.
ஈரக்குலையைப் பிடுங்கிடுவேன்’, ‘நெஞ்சில் ஏறி மிதித்து விடுவேன்’, ‘குடலை உருவி மாலையாகப் போடுவேன்’’ என்றெல்லாம் சொல்வதுண்டு. உண்மையிலேயே ஈரக்குலையைப் பிடுங்குவதாகவோ நெஞ்சில் ஏறி மிதிப்பதாகவோ குடலை உருவுவதாகவோ பொருளல்ல. செல்வாக்கை ஒன்றுமில்லாமல் ஆக்கி வெற்றி பெறுவேன் எனப் பொருள்.
வயிற்றில் அடித்துவிட்டான்’ என்றால் உணவு வரும் வழிக்கு முற்றுப்புள்ளி இடும் வகையில் வருவாய் வரும் வழியைத் தடுத்து விட்டான் எனப் பொருள்.
சாட்டையை எடுத்தால்தான் சரி வருவான்’ என்பார்கள். ‘அம்மா இருந்திருந்தால் இந்நேரம் சாட்டையை எடுத்திருப்பார்கள்’, ‘ஆணையர் சாட்டையைச் சுழற்றுவாரா?’ – இவை செய்திகளில் இடம் பெற்றவை. வன விலங்குகளை அடக்கவா அல்லது அடிமையை மிரட்டவா சாட்டையை எடுக்கப் போகிறார்கள். தவறான நடவடிக்கைகள் அல்லது குற்ற நடவடிக்கைகளை அடக்கி ஒடுக்குவதைத்தான் இங்கே குறிக்கிறது.
‘புத்தகத்தைக் கரைத்துக் குடித்து விட்டான்’ என்கிறோம். அப்படிச் செய்தால் வயிற்று வலிதான் வரும். ‘புத்தகத்தை முழுமையாகவும் நன்றாகவும் படித்து முடித்து விட்டான்’ என்றுதான் பொருள்.
நெஞ்சு உடைந்து விட்டான்’ என்றால் இதயம் உடைந்ததாகப் பொருளல்ல. மிதமிஞ்சிய வேதனை அடைந்து விட்டான் என்று பொருள். காரணம் கேட்ட பொழுது மனம் உருகி விட்டது என்றால் மனம் பனியல்ல உருகுவதற்கு அல்லது வெண்ணெய் போல் சூட்டில் உருகும் பொருளுமல்ல. கேட்போர் மனம் இரங்கும் வகையைத்தான் குறிக்கிறது.
தாளம்போடாதே, ஒத்து ஊதாதே’ என்பனவெல்லாம் நடுவுநிலையின்றி தவறு என்று தெரிந்தும் ’ஒருவர் சொன்னதை எல்லாம் சரி என்று சொல்லாதே’ என்பதாகும்.
பொடி வைத்துப் பேசாதே ‘ என்றால் ‘உட்பொருளை மறைத்து வைத்துப் பேசாதே’ எனப் பொருள்.
சோலி என்பது மார்பாடையைக் குறிக்கும் அயற்சொல். எனினும் வேலை என்றும் பொருள் உண்டு. ’உனக்கு வேறு சோலியே இல்லையா?’ என்றால் ‘எனக்குப் பேசித் தொந்தரவு கொடுக்கிறாயே உனக்கு வேறு வேலை இல்லையா?’ எனக் கேட்பதாகப் பொருள்.
‘போதும்! போதும்! உன் சோலியை முடி!’ என்றால் ‘சொன்னது போதும். நிறுத்து’ எனப் பொருள்.
‘இந்தத் தேர்தலுடன் அவன் சோலியை முடித்துவிட வேண்டும்’ என்றால் , ‘அவன் மீண்டு எழாதவாறு இத்தேர்தலில் அவனைத் தோற்கடிக்க வேண்டும்’ எனப் பொருள்.
‘அவன் சோலியை முடித்து விடுவோமா’ என்றால் ’செயல்பாட்டை நிறுத்தி விடுவோமா’ எனக் கேட்பதாகப் பொருள். அதே நேரம், அடியாளிடம் ‘அவன் சோலியை முடித்து விடு’ என்றால் செயல்பாட்டிற்கு அடிப்படையான, ‘உயிரை எடுத்து விடு’ என்றுதான் பொருள். ஆனால், ‘அவன் சோலியை முடித்து விட்டால் எல்லாம் சரியாகிவிடும்’ என்றால், தனக்கு எதிரானவனை அல்லது நல்லெண்ணத்திற்கு எதிராகவும் அரச வன்முறையைப் பயன்படுத்தியும் துன்புறுத்துபவனை அல்லது மக்களுக்கு எதிரானவனை அரசியலில் ஒன்றும் இல்லாமல் ஆக்கிவிட்டால் எல்லாம் சரியாகி விடும் என்று பொருள்.
சரி. சரி. நம் சோலியை இத்துடன் முடித்துவிடுவோம்.
இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்

Followers

Blog Archive