Saturday, September 24, 2022

தமிழ்ப்பரப்புரைக் கழகம் : இலக்குவனார் கனவை நனவாக்கும் முதல்வருக்குப் பாராட்டு



தமிழ்ப்பரப்புரைக் கழகம் : இலக்குவனார் கனவை நனவாக்கும் முதல்வருக்குப் பாராட்டு –  இலக்குவனார் திருவள்ளுவன்

கடந்த ஆண்டு சட்டமன்றத் தொடரில் 31.8.2021 அன்று நடைபெற்ற தமிழ் வளர்ச்சித் துறையின் 2021-2022-ஆம் ஆண்டிற்கான நல்கைக் கோரிக்கையின்போது மாண்புமிகு அமைச்சர் தங்கம் தென்னரசு “அயல்நாடு மற்றும் வெளிமாநிலங்களில் வாழும் தமிழர்களுக்கு தமிழ் கற்பிக்க தமிழ்ப் பரப்புரைக் கழகம் உருவாக்கப்படும்” என அறிவித்திருந்தார்.

06.01.22 அன்று தமிழ்ப் பரப்புரைக் கழகம் உருவாக்குவதற்குத் தொடர் செலவினமாக உரூ.1 கோடி நிதி ஒப்பளிப்பு அளித்துத் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது 

நேற்று (24.08.2022) மாண்புமிகு முதல்வரால் தமிழ்ப்பரப்பரைக்கழகம் தொடங்கிவைக்கப்பட்டது.

தமிழ்ப்பரப்புரைக் கழகம் தொடங்க வேண்டும் என்பது தமிழ்ப்போராளி பேரா.சி.இலக்குவனார் அவர்களின் கனவு.

பரப்புரைப்பணியைப் பேராசிரியர் சி.இலக்குவனார் தம் மாணவப் பருவத்திலேயே தொடங்கி விட்டார். புலவர் பட்டத்திற்குப் பயிலும் பொழுதே விடுமுறை தோறும் நண்பர்கள் மூவரை இணைத்துக்  கொண்டு ஊர்கள்தோறும் சென்று  தமிழ்மொழியின் சிறப்புகளையும தொல்காப்பியம், சங்க இலக்கியம், திருக்குறள் முதலான இலக்கியங்களின் சிறப்புகளையும் மக்களிடையே பரப்பி வந்தார்.  தமிழ்ப்புலவர்களே தொல்காப்பியம் குறித்து மிகுதியும் படிக்காத காலத்தில் சங்கத்தமிழைத் தமிழ்ப்புலவர்கள் மக்களிடையே கொண்டு செல்லாக் காலத்தில், திருக்குறளை வாழ்வியல் நூலாக மக்களிடையே பரப்பாமல் இருந்த காலத்தில் தமிழ்ப்போராளி இலக்குவனார் அவற்றை மக்களுக்கு அறிமுகப்படுத்தி வந்தார்.

மாணவப்பருவத்தில் தொடங்கிய பரப்புரைப்பணிகளைத் தம் வாணாள்இறுதி வரை, தொல்காப்பியப் பரப்புரைப்பணி, சங்க இலக்கியப் பரப்புரைப்பணி, குறள்நெறிப் பரப்புரைப்பணி, தமிழ்மொழிச்சிறப்பு பரப்புரைப்பணி, தமிழ்க்காப்புப் பரப்புரைப் பணி தனித்தமிழ்ப் பரப்புரைப்பணி எனப் பரப்புரையில் ஈடுபட்டுப் பிறரையும் அவ்வாறு ஈடுபடச் செய்தார்.

தாம் பணியாற்றிய ஊர்கள் தோறும்தமிழ் அமைப்புகள் தொடங்கி இலக்கியப்பணிகளை ஆற்றி வந்த தமிழ்ப்போராளி பேரா.சி.இலக்குவனார் மதுரையில் பணியாற்றும் பொழுது 1960 இல், 1965 இல் அரியணையில் ஏறி நம்மை நசுக்கத்திட்டமிட்டு இருந்த இந்தியை விரட்ட, தமிழ்க்காப்புக் கழகம் தோற்றுவித்தார்.இதனை மாண்புமிகு முதல்வர் அவர்கள் தம் தொடக்கவிழா உரையில் “ஒரு காலத்தில் பேராசிரியர் செந்தமிழ் அரிமா என்று போற்றப்பட்ட இலக்குவனார் அவர்கள் தமிழ்ப்பாதுகாப்புக் கழகம் தொடங்கினார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்க்காப்புக் கழகத்தின் அயராத பணியால், மக்களிடையே இந்தி எதிர்ப்பு உணர்வு கனன்று எரிந்தது. அதன் விளைவே நாடெங்கும் இந்தி எதிர்ப்புப் போர்; இந்தித் திணிப்பிற்குத் தடுப்பு; பேராயக்கட்சியான காங்கிரசு ஆட்சியலிருந்து விரட்டியடிப்பு;  தமிழ்நாட்டில் தி.மு.க.வெற்றிக் கொடி பறந்தது.

பேரா.சி.இலக்குவனார் தமிழ்ப் பரப்பு அயலகப் பயணம் மேற்கொண்ட பொழுது மதுரைத் தமிழ்ச்சங்கம் சார்பாக 10.9.71 இல் பாராட்டி வழியனுப்பும் விழா  நடைபெற்றது. அதில் நிறைவாகப்  பேராசிரியர் நன்றி உரையாற்றினார். அப்பொழுது அவர், தமிழ்ப் பரப்புக்கழகம் நிறுவி உயர்தனிச்  செம்மொழியாம் தமிழ் மொழியின் சிறப்பை உலகெங்கும் பரப்ப வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். “தமிழ்க்காப்புப் பணியை இனித் திமுக அரசு மேற்கொள்ளும். நாம் தமிழ் பரப்புப்பணியை மேற்கொள்வோம்” என்றார். ஆனால், அவரது வாணாள் அதற்கு இடம் கொடுக்க வில்லை. இப்பணிகளைத் தொடங்கி முடிக்கும் முன்னரே அவரை நாம் இழந்து விட்டோம்.

எனினும் நாம் முன்னர்ப் பல நேர்வுகளில் தமிழ்ப்பரப்புரைக் கழகம் அமைக்க வேண்டுகோள் விடுத்துள்ளோம். அவர் அறிவுறுத்திய வழியில் “தமிழ்பரப்புக்கழகம் நிறுவித் தமிழின் சிறப்பை உலக மக்களுக்கு உணர்த்த வேண்டும். தமிழ்க்காப்பு என்பது  கட்சிகளுக்கு அப்பாற்பட்டது. அனைத்துக் கட்சிகட்கும் உரியது என்று பேராசிரியர் இலக்குவனார் அறிவுறுத்தியதை அனைத்துக் கட்சியினரும் ஏற்று அன்னைத் தமிழைக் காப்பதை அவரவர் கடமையாகக் கொள்ள வேண்டும்.” (இலக்குவ நெறியே தமிழர் உரிமைக்கு வழி, நட்பு :  03/09/2012)

“தமிழின் சிறப்புகளை அவரவர் பகுதிகளில் பரப்ப நற்றொண்டாற்ற வலியுறுத்தி வெற்றி காண வேண்டும்.” (மத்தியத் தலைவரானார் தாலின்! முன்மொழியுநராக மாறுக! – இலக்குவனார் திருவள்ளுவன்25.06.2017) என மு.க.தாலின் எதிர்க்கட்சித்தலைவராக இருக்கும் பொழுதே வேண்டுகோள் விடுத்திருந்தோம்.

“மு.க.தாலினுக்குப் பாராட்டுகள்!” என்னும் அகரமுதல இதழுரையிலும்(26.05.2019) தமிழின் சிறப்பை உணர்த்தும் பரப்புரையை மேற்கொள்ள ஆவன செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தோம்.

ஆட்சிக்கு வரும் முன்னரே தாம் ஆற்றவேண்டிய பணிகளைத் திட்டமிட்டு வகுத்துக்கொண்டு அவற்றைப் படிப்படியாகச் செயல்படுத்தி வருகிறார் முதல்வர் மு.க.தாலின். அந்த வகையில் தாம் திட்டமிட்டவாறு தமிழ் வளர்சசிக்கான பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். அதில் உலக அளவிலான தமிழ் வளர்ச்சிக்கான திட்டமான தமிழ்ப்பரப்புக் கழகத்தைத் தோற்றுவித்தது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

தமிழ் அமைப்பு என்றாலே தமிழ்ப்பகைவர்களுக்குத் தலைமையிடமும் முதன்மை யிடங்களும் கொடுப்பதே வழக்கம். அவ்வாறில்லாமல் உண்மையான தமிழ்ப்பற்றுள்ள தமிழறிஞர்களுக்கு மட்டுமே பொறுப்புகள் வழங்கப்பட வேண்டும்.

மக்களே போல்வர் கயவர் அவரன்ன

ஒப்பாரி யாங்கண்ட தில் என்கிறார் திருவள்ளுவர்(திருக்குறள் 1071).

இன்றைக்கு அன்பரே போல்வர் பகைவர் எனத் தமிழன்பர்களாக நடிக்கும் தமிழ்ப்பகைவர்களைக் குறிக்கலாம்.

தவமறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து

வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று என்கிறார் திருவள்ளுவர்(திருக்குறள் 274).

இதுபோல் நடுநிலைவேடத்தில் மறைந்து வஞ்சகராகச் செயல்பட்டுத் தமிழுக்குத் தீங்கு செய்வோர் உள்ளனர்.

எனவே, மாண்புமிகு முதல்வரும் மாண்புமிகு அமைச்சரும் தமிழக அரசும் விழிப்புடன் இருக்க வேண்டும்.

தமிழ்ப்பரப்புரைக்கழகத்தைப் பயன்படுத்திக் கொண்டு யாரும் கொச்சை வழக்குளைப் பயன்படுத்தினாலோ தமிழ் இலக்கியக் காலங்களை வேண்டுமென்றே பின்னுக்குத் தள்ளிக் கற்பித்தாலோ அவர்களைப் பொறுப்புகளில் இருந்து நீக்குவதுடன் தண்டனையும் வழங்க வேண்டும். அவர்களின் கருத்துரிமை என்றால் அதைச் சொந்தச் செலவில் பரப்பிக் கொள்ளட்டும்.

செம்மொழித்தமிழாய்வு மத்திய நிறுவனத்திடம் நிதியுதவி பெற்றுக்கருத்தரங்குகள் நடத்துவோர்களிலும் அவற்றில் பங்கேற்போர்களிலும் ஒரு பகுதியினர் செந்தமிழ் இலக்கியக் காலங்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளி உரையாற்றியுள்ளனர். இதனை இந்நிறுவன அறிஞர்களே வருத்தத்துடன் தெரிவித்துள்ளனர். எனவேதான் இப்பரப்புரைக் கழத்தில் இவை போன்ற தவறுகள் நிகழக்கூடாது என்பதற்காக இதனைக் கூறுகிறோம்.

கிரந்த எழுத்துகளைத் தமிழ் நெடுங்கணக்கில் சேர்த்துப் பயிற்றுவிக்கக்கூடாது. கிரந்தம் தவிர்த்தே பாடங்கள் கற்பிக்கப்பட வேண்டும்.

வேறு எந்த மொழியிலும் பிற மொழி ஒலி எழுத்துகளைக் கலந்து எழுதுவதோ பேசுவதோ இல்லை. தமிழ் இலக்கணமும் அவ்வாறுதான் கூறுகிறது. ஆனால், கிரந்தம் கலப்பதையே உயிர் மூச்சாகக் கொண்டு தமிழைச் சிதைப்போர் பெருகி உள்ளனர். இதன் மூலமாகவாவது இதற்கு முற்றுப்புள்ளி இட வேண்டும்.

‘காலந்தோறும் வரிவடிவம்’ என அட்டவணையிட்டுத் தொல்காப்பியர் தொல்காப்பியத்தை இவ்வாறு எழுதினார், திருவள்ளுவர் திருக்குறளை இவ்வாறு எழுதினார்  என்றெல்லாம் கற்பனைச் சிறகை விரித்துப் பறக்கின்றனர் சிலர். இவையெல்லாம் அரசு நூல்களிலேயே உள்ளன. மிகச்சில மாற்றங்கள் தவிர, நம் தமிழ் மொழியின் வடிவங்களில் எவ்வகை மாற்றமுமில்லை. எனவேதான்  இலக்கண  நூலார், “தொல்லை வடிவின எல்லா எழுத்தும்” (நன்னூல் : எழுத்ததிகாரம்: 5  உருவம்: நூற்பா 95 – இலக்கண விளக்கம் எழுத்தியல்: நூற்பா 23) என்றனர். அஃதாவது தமிழ் வரிவடிவங்கள் தொன்றுதொட்டு ஒரே வடிவமுறையில் இருக்கின்றன. ஓலைச்சுவடி எழுத்துகளில் மாற்றமில்லை.கல்லாறரால் எழுதப்பெற்ற கல்வெட்டுகளில்தான் மாற்றங்கள் நேர்ந்துள்ளன. எனவே, தமிழ்வரிவ வரலாறு என்ற பெயரில் பொய்தலைவிரித்தாட இடம் தரக்கூடாது.

இவை போன்ற தீங்குகள் தமிழ்ப்பரப்புரைக்கழகம் மூலம் பரவாமல் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழ்ப்பரப்புரைக்கழகம் அமைக்க வேண்டும் என்ற தமிழ்ப்போராளி பேரா.சி.இலக்குவனாரின் கனவை நனவாக்கிய முதல்வர் மு.க.தாலினுக்கு தமிழ்க்காப்புக்கழகம், இலக்குவனார் இலக்கிய இணையம், இலக்குவனார் இலக்கியப் பேரவை, அகரமுதல ஆகியவற்றின் சார்பில் பாராட்டுகள். தேமதுரத்தமிழோசை உலகமெலாம் பரவக் கனவுகண்ட பாரதி இன்றிருந்தால் மனமுவந்த முதல்வரை வாழ்த்தியிருப்பார். நாமும் வாழ்த்துவோம்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல-இதழுரை

புரட்டாசி 08, 2053 / 25.09.2022



Saturday, September 3, 2022

இலக்குவனார் நெறியுரைக்கிணங்கத் தமிழ்நல அரசை அமைக்கட்டும்! – இலக்குவனார் திருவள்ளுவன்

 அகரமுதல

இலக்குவனார் நெறியுரைக்கிணங்கத் தமிழ்நல அரசை அமைக்கட்டும்! – இலக்குவனார் திருவள்ளுவன்



கற்றறிந்த தமிழ்ப்புலவர்கள் வழி நடைபெறும் அரசு சிறப்புற்று ஓங்கும். தமிழ்ப்புலவர்கள் என்று கூறுவதன் காரணம், சங்கக்காலத்தில் தமிழ்ப்புலவர்கள் வழி அரசுகள் நடைபெற்றதால் சங்கக்காலம் பொற்காலமாகத் திகழ்ந்தது.

இன்றைய தமிழ்ப்புலவர்கள், நடுநிலைமை உணர்வுடனும் துணிவுடனும் அரசிற்கு அறிவுரை கூறுவோர் அருகியே உள்ளனர்.

கட்சிச் சார்பற்று ஆன்றோர்கள் அறிவுரை கூறினாலும் கட்சிக் கண்ணோட்டத்துடன் கூறுவதாகக் கருதி அவற்றைப் புறக்கணிக்கும் போக்கே உள்ளது.

யார் அறிவுரை கூறினாலும் அரசிற்கு எதிரான கருத்துகள் என்று புறந்தள்ளாமல் நல்லாட்சிக்கான வழிகாட்டி என்று ஏற்பார்கள் எனக் கருதுகிறோம்.



எனவே, தமிழ்ப்போராளி பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் தம் காலத்தில் அரசுகளுக்குக் கூறிய அறிவுரைகள் சிலவற்றை அவரது நினைவு நாளில் தெரிவிக்க விரும்புகிறோம்.

பேராசிரியர் சி.இலக்குவநனாரின் தமிழ் உரிமைப் பெருநடைப் பயணத்தின் நோக்க இலக்குகளில் பின்வருவன இன்றியமையாதன.

1. பேச்சிலும் எழுத்திலும் செந்தமிழையே பயன்படுத்த வேண்டும்.

2. தமிழ்நாட்டின் எல்லாத் துறைகளிலும் தமிழுக்கே முதன்மையிடம் அளிக்க வேண்டும்.

3. எந்த இடத்திலும் தமிழின் சமநிலைக்குத் தாழ்வு வாராது பார்த்துக் கொள்ள வேண்டும்.

தமிழக அரசு மக்களை இவ்வழியில் செலுத்தித் தானும் தமிழ்ப்பணி ஆற்ற வேண்டும்.

மக்களுடன் போட்டி போட்டுக்கொண்டு மொழிக்கொலை புரிந்து விளம்பரங்கள் மேற்கொள்வதை அரசு உடனே நிறுத்த வேண்டும்.

“நம் நாட்டில் நம் மொழிவாயிலாகக் கல்வியளிக்கப்படாத காரணத்தினாலேயே பேரறிஞர்களும் புதியது புனையும் அறிவியற் கலைஞர்களும் உலகம் புகழும் வகையில் பேரளவில் தோன்றிலர். தொழில்நுட்ப அளவில் மிகவும் பிற்பட்ட நிலையில் உள்ளோம்” என வருந்திய பேராசிரியர் சி.இலக்குவனார்

“உயர்நிலைப் பள்ளிகளில் ஒரே காலத்தில் தமிழைப் பாடமொழியாக ஆக்கியதுபோல் கல்லூரிகளிலும் ஒரே சமயத்தில் எல்லா துறைகளிலும் எல்லா நிலைகளிலும் தமிழைப் பாடமொழியாக்க வேண்டும்” என வேண்டி வந்தார்.

இப்பொழுது பள்ளிகளிலேயே தமிழ்வழிக்கல்வி காணாமல் போய்க்கொண்டு உள்ளது. தமிழ்வழிப் பள்ளிகளாக இருந்த ஏறத்தாழ 50 அரசுப் பள்ளிகள் முழுமையும் ஆங்கிலவழிப் பள்ளிகளாகச் செயல்படுகின்றன.

அரசின் தமிழ் வழிப்பள்ளிகளில் ஆங்கில வழிக்கும் இடம் கொடுக்கப்பட்டுள்ளது. தனியாரைப் போன்று அரசும் தமிழன்னைக்கான வாயிலைப் பள்ளிகளில் அடைத்து வருகிறது.

இவ்வாறில்லாமல் தமிழ்நாட்டில் அரசு, தனியார், ஒன்றிய அரசு, உள்ளாட்சி என எவ்வகைப் பள்ளியாக இருந்தாலும் தமிழில் மட்டுமே இயங்க வேண்டும். பிறமொழிவழிக் கல்வி அடியோடு நிறுத்தப்படவேண்டும்.

“தொல்காப்பியத்தையும் திருக்குறளையும் நம் இரு கண்களாகப் போற்ற வேண்டும்” என்றார் தமிழ்ப்போராளி சி.இலக்குவனார்.

முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள், திருவள்ளுவரைப் போற்றும் வகையில் வள்ளுவர் கோட்டம் அமைத்தார்.


கலைஞரின் வழியில் நடைபெறும் அவர் திருக்குமரரான முதல்வர் மு.க.தாலின் தொல்காப்பியரைப் போற்றும் பணிகளை ஆற்ற வேண்டும்.

அதிமுக அரசின் கலைபண்பாட்டுத் துறை, கொள்கை விளக்கக்குறிப்பு 2001-2002 கோரிக்கை எண் 51இல் தொல்காப்பியப் புகழரங்கம் முதலான ஐந்து புகழரங்கங்கள் நிறுவுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், கனவுத்திட்டமாக இது போயிற்று.

முதல்வர் இருபதாண்டுகளாக உறங்கிக் கொண்டிருக்கும் அந்த அறிவிப்பிற்குப் புத்துயிர் அளித்துத் தொல்காப்பியர் புகழரங்கம் அமைத்தல் வேண்டும்.

சங்கத்தமிழை அறிஞர்களின் கருவூலமாக வைத்திராமல் மக்கள் இலக்கியமாக மாற்றியவர் சங்கத்தமிழ்ச் சான்றோர் சி.இலக்குவனார்.

சங்க இலக்கியங்களைப் பரப்ப ‘சங்க இலக்கியம்’ என்றும் ‘இலக்கியம்’ என்றும் இதழ்கள் நடத்தியவர்.

சங்க இலக்கியங்களைப் பாடத்திட்டத்தில் சேர்த்தவர். சங்க இலக்கியங்களை நிலைக்கச் செய்ய அவர் கண்ட கனவு நனவாகச் சங்க இலக்கிய மாடங்களை அமைத்தல் வேண்டும்.

கலைஞர் சங்கப்புலவர்களுக்கு நினைவுத் தூண்களை எழுப்பினார். சங்கப் புலவர்கள் பெயர்களைத் தனித்தனியேயும் சங்கப்பாடல்களையும் நினைவு கூரும் வகையிலும் சங்க இலக்கிய மாடங்களை அமைத்தல் வேண்டும்.

473 சங்கப்புலவர்களின் பாடல்களாக 2371 பாடல்கள் உள்ளன. பெயர் தெரியாத புலவர்களையும் சேர்த்து முதலில் ஒருவருக்கு ஒரு பாடல் என்ற முறையில் கல்வெட்டுகள் அமைத்தல் வேண்டும்.

பின்னர்ப் படிப்படியாக அனைத்துப் பாடல்களையும் கல்வெட்டுகளில் பொறித்தல் வேண்டும்.

ஆண்டுதோறும் பாடநூல்கள் மூலம் திருக்குறள் சிறப்பை மாணாக்கர்களுக்கு உணர்த்தப்பட வேண்டும்.

“ஆங்கிலத்தில் சேக்சுபியர் எனத் தனித்தாள் இருப்பதுபோல் தமிழில் திருக்குறள் எனத் தனித்தாள் இருக்க வேண்டும்” என்ற திருக்குறள் அறிஞர் பேரா.சி.இலக்குவனார் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.



திருவள்ளுவர் பிறந்தநாளைத் தேசியத் திருவிழாவாகக் கொண்டாட வேண்டும் என்ற அவர் கனவை நனவாக்க வேண்டும்.

சமயத் தலைவர்களுக்கு விடுமுறை அளிக்கும் ஒன்றிய அரசு திருவள்ளுவர் பிறந்தநாளுக்கு இந்திய அளவில் விடுமுறை அளிக்க வேண்டும்.

ஒன்றியக் கல்வித்துறை வழங்கும் கலை தொடர்பான நல்கைகள் உதவித்தொகைகளில் திருக்குறள் கலைநிகழ்ச்சிகள் நடத்த உதவி அளிக்க வேண்டும்.

கலையரங்க நிதியுதவித் திட்டத்தைத் திருவள்ளுவர் கலையரங்கம் எனப் பெயரிடுவதாக இருந்தால் மட்டுமே வழங்க வேண்டும்.

இந்திய மாநில மொழிகள் யாவற்றிலும் திருவள்ளுவர், திருக்குறள் சிறப்பை விளக்கும் படைப்புகளைப் பாட நூல்களில் சேர்க்க வேண்டும்.

அனைத்து மொழிகளிலும் குறள் விளக்கக் குறும்படங்கள், திரைப்படங்களுக்கு நிதியுதவி அளித்தல் வேண்டும். ஒன்றிய அரசு போல் பிற மாநில அரசுகளும் திருவள்ளுவரைப் போற்றத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எல்லா நாட்டுத் தூதரகங்களிலும் திருவள்ளுவர் படமும் திருக்குறளும் இடம்பெற நம் அரசு வழிவகை காண வேண்டும்.

“தமிழின் உரிமையே தமிழர் உரிமையாகும். தமிழ்நாட்டில் தமிழுக்கு முதன்மையில்லை என்றால் தமிழர்க்கு முதன்மை இல்லை என்றுதான் பொருள்.

அயல்மொழிகளாம் ஆங்கிலத்துக்கும் இந்திக்கும் உள்ள முதன்மைகள் தமிழையும் தமிழரையும் தாழ்த்தும்.

ஆதலின் தமிழ் மொழிக்கு முதன்மையளிக்கும் பணியில் ஈடுபடுதல் தமிழர்களின் பிறவிக் கடனாகும்.” என்றார் தமிழ்ப்போராளி பேரா.சி.இலக்குவனார்.

ஆனால், தமிழ் நாட்டில் மக்கள் பயன்பாட்டு இடங்கள் எங்கும் தமிழ் உரிய முதன்மையைப் பெறவில்லை.

பல இடங்களில் தமிழே இல்லை. எங்கும் தமிழ் என்பதை வாயால் முழங்கினாலும், செயலில் தமிழைக் காண இயலவில்லை. எனவே, அரசு தமிழ் மட்டுமே தமிழ்நாட்டின் பயன்பாட்டுமொழி என அறிவித்து அதை முழுமையாகச் செயற்படுத்த வேண்டும்.

தமிழ் அறிந்த தமிழர்மட்டுமே உயர் பதவிகளில் அமர்த்தப்பட வேண்டும். சில கழகங்களில் நடைமுறைப்படுத்தும் வேட்டி அணிய இடமில்லை என்ற களங்கங்களை அகற்ற வேண்டும்.




தமிழுக்கு முதன்மையும் தமிழர்க்குத் தலைமையும் இருக்கும் வகையில் ஆட்சி நடத்த வேண்டும்.

“தமிழ் மொழி தமிழ்நாட்டில் தனக்குரிய முதன்மை இடத்தில் அரியணையில் அமர வேண்டுமானால் பாரதக் கூட்டரசு மொழிகளுள் இந்திமட்டும்தான் கூட்டரசு மொழி, தேசிய மொழி எனும் கொள்கை அகற்றப்படல் வேண்டும்.

கூட்டரசு மொழி என ஒப்புக் கொள்ளப்பட்டுள்ள ஒன்றுதான் தொடர்பு மொழியாகவும் பல்கலைக்கழகப் பயிற்சி மொழியாகவும் பாராளுமன்ற மொழியாகவும் சட்டமன்றங்களின் மொழியாகவும், நீதிமன்றங்களின் மொழியாகவும் நாளடைவில் நிலைநாட்டப்படும்.

கூட்டரசு மொழியே மாநிலங்கட்கிடையே தொடர்பு மொழியாக அமையும் என்பதில் ஐயமின்று. அங்ஙனமாயின் மாநில அமைச்சர்களும் அமைச்சுத்துறை அலுவலர்களும் இந்திமொழிப் புலமை பெற்றிருக்க வேண்டிய கட்டாய நிலை ஏற்படும்.

இந்திமொழி தெரிந்தோரே அமைச்சர்களாக வர முடியும் என்றால் சட்டமன்ற உறுப்பினர் அனைவரும் இந்தி மொழி தெரிந்தவராகத்தான் இருத்தல் வேண்டும்.

அரசுக்கும் பதவிக்கும் பொருளீட்டுவதற்கும் மதிப்புப் பெறுவதற்கும் இந்திமொழிதான் வேண்டும் என்றால் தமிழை விரும்புவார் எவராக இருப்பர்?

பின்னர்த் தமிழாசிரியர்கூடத் தமிழை விரும்ப மாட்டார். “ எனத் தமிழ்ப்போராளி சி.இலக்குவனார் எச்சரித்துள்ளார்.

ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே நடைமுறை என்று செயல்படும் ஒன்றிய அரசு இந்நிலையை விரைவில் கொண்டுவந்துவிடுவோம். தமிழக ஆளும் கட்சியான தி.மு.க.வும் வேறு சில கட்சிகளும் மத்தியில் தமிழ் ஆட்சி மொழியாக வேண்டும் என்று குரல் கொடுத்து வருகின்றன.

தமிழ்நாட்டிலேயே தமிழ் முழுமையான ஆட்சிமொழியாக இல்லாத பொழுது இந்த முழக்கம் வெற்றுக்குரல்தான் என்பதை ஒன்றிய அரசு உணர்ந்திருக்கும்.

எனவே, ஒரு புறம் தமிழ்நாட்டில் உடனே எல்லா நிலைகளிலும் தமிழை ஆட்சி மொழியாகவும் அலுவல் மொழியாகவும் தொடர்பு மொழியாகவும் நடைமுறைப்படுத்த வேண்டும்.




மறுபுறம் மத்தியில் உள்ள இந்தி முதன்மை அகற்ற வரி கொடா இயக்கம் போன்ற செயற்பாட்டின் மூலம் பாடுபட வேண்டும்.

அவ்வப்பொழுது எதிர்க்குரல் எழுப்புவதால்மட்டும் இந்தி அகலாது.

இந்தியை அகற்றுவது அவ்வளவு எளிதான செயலல்ல என்பதை உணர்ந்து எந்தெந்த வழிகளில் எல்லாம் இந்தியும் சமசுகிருதமும் திணிக்கப்படுகின்றன என்பதையும் இதனால், பிற தேசிய மொழிகள் நலிவுற்று வருவதையும் இந்தியத்துணைக்கண்டம் முழுமையும் பரப்பி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

மத்தியில் தமிழ் இடம் பெறாதவரை நாம் அடிமை வாழ்வுதான் வாழ்கிறோம் என்பதை மக்களுக்கு உணர்த்த வேண்டும்.

மத்தியில் தமிழ் இடம் பெறாதவரை ஒன்றிய ஆட்சியாளர்கள் அலுவல் முறையில் தமிழ்நாட்டிற்குள் நுழைய விடக்கூடாது.

“தமிழர்களும் பலவகைகளிலும் சிறந்தால்தான் தமிழ் மொழி சிறப்படைய இயலும். தமிழர்கள் தாம் சிறப்படைய முயல்வதோடு தம் மொழிபற்றியும் அறிந்துகொள்ள முயலுதல் வேண்டும்.”

-எனக் குறிப்பிட்டுத் தமிழ் மதிப்புடையதாக எல்லா இடங்களிலும் திகழத் தமிழர்கள் எல்லா இடங்களிலும் மதிப்பு மிக்கவர்களாக வாழ வேண்டும் என்கிறார்.

“இல்லான் கருத்தை எவர்தான் ஏற்பர்? எனவே, தமிழர்கள் தம் நிலையை உலக அரங்கில் உயர்த்திக் கொண்டு தமிழுக்கு உயர்வு கிட்ட வழி வகுக்க வேண்டும்” என்கிறார்.




தமிழ்நாட்டரசு தொழிற்கொள்கை மூலம் தமிழர்கள் தொழிலில் மேம்படப் பாடுபட்டு வருகிறது.
அவ்வாறு மேம்படுபவர்கள் தமிழைத் துறக்கக் கூடாது. அரசும் தமிழ் உலகளவில் உயர்ந்து நிற்கப் பாடுபட வேண்டும்.
தமிழ்ப்போராளி பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் அறிவுறுத்தியவாறு தமிழ்நாட்டில் தமிழே ஆட்சிமொழி, கல்வி மொழி, இறைமொழி, கலைமொழி, தொடர்புமொழி, உரிமை மொழி என்னும் நிலையை முழுமையாகச் செயற்படுத்த முதல்வர் மு.க.தாலினும் அமைச்சர் பெருமக்களும் முன் வர வேண்டும் என அன்புடன் வேண்டுகிறோம்.
-இலக்குவனார் திருவள்ளுவன்
[03.09.1973 தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் மறைந்த நாள் ]

தாய் மின்னிதழ் நாள் 03.09.2022

Wednesday, August 31, 2022

ஆகமவிதிகள் தமிழ்நாட்டுக் கோயில்களுக்குப்பொருந்தா!– இலக்குவனார் திருவள்ளுவன்

 அகரமுதல




வழிபாட்டு முறையில் ஆகமம்

ஆகமவிதிகள் தமிழ்நாட்டுக் கோயில்களுக்குப்பொருந்தா!

 தமிழர்களுக்காகத் தமிழர்களால், தமிழர்களின் கடவுள்களை வழிபடுவதற்குக் கட்டப்பட்ட கோயில்களே தமிழகக் கோயில்கள். இக்கோயில்களில் மண்ணின் மக்களுக்கும் மக்களின் மொழியாகிய தமிழுக்கும் இடமில்லை என்பவர்கள் அயல்மண்ணைச் சேர்ந்தவர்களும் அயல் இனத்தைச் சேர்ந்தவர்களுமே.

தமிழர்களால் கட்டப்பட்ட கோயில்களுக்கு உரிய விதிமுறைகளையும் வழிபாட்டு முறைகளையும் அயலார் எப்படி இயற்ற இயலும்? அவ்வாறு இயற்றப்பட்டதாகக் கூறும் விதிகள் தமிழ்மக்களை எங்ஙனம் கட்டுப்படுத்தும்? பொதுவாக ஆகமவிதிகள் சைவ சமயக்கோயில்களுக்கே உள்ளன.

சைவ ஆகமங்களாகத்  திருவடிகள் முதல் 22 உடலுறுப்புகளையும் குண்டலம், முதலிய 6 அணிமணிகளையுமே குறிக்கின்றனர். இதனை,“உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்” என்னும் திருமூலர் பாடலடியும் மெய்ப்பிக்கின்றது. அவ்வாறிருக்க, இவை எங்ஙனம், கோயில் கட்டுமான முறைகள், சிலை அமைப்பு முறைகள், வழிபாட்டு முறைகள் முதலியவற்றைக் கூறும் விதிகளாகும்?

கட்டடக்கலையிலும் சிற்பக் கலையிலும் தெரிவித்துள்ள, தெரிவிக்க வேண்டிய கருத்துகளையெல்லாம் ஆகம வதிகள் கூறுவதாகச் சொல்வதை எங்ஙனம் ஏற்க இயலும்? காலங்காலமாகச் சமற்கிருத வழிபாடே இருந்ததாகக் கூறுவதும் நாம் நம்பிக்கொண்டிருக்கும் பொய்யான வாதமாகும்.

 திருநாவுக்கரசர் திருஅடைவு திருத்தாண்டத்தில் கோயில் வகைகளைக் குறிப்பிடுகையில்,

இருக்குஓதி மறையவர்கள் வழிபட் டேத்தும்

இளங்கோயில்

என ஒரு வகையைக் குறிப்பிடுகிறார்.

 இதில் இருக்கு வேதம் ஓதுவோருக்கு என ஓர் இளங்கோயில் கட்டித் தரப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். அப்படி என்றால் அதுவரை தமிழ் வழிபாட்டுக் கோயில்களே இருந்துள்ளன என அறியலாம்.  அவ்வாறு கி.பி. ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருநாவுக்கரசர் காலத்தில்தான் சமற்கிருத வழிபாட்டுக் கோயில் முதலில் கட்டப்பட்டுள்ளது. ஆக அதுவரை அனைத்துக் கோயில்களிலும் தமிழ் வழிபாடே இருந்தது என உணரலாம்.

பின்னரும் படிப்படியாக முதன்மைக்கோயில்களில் சமற்கிருத வழிபாடு புகுத்தப்பட்டாலும். தனி அம்மன் கோயில்களிலும் சிறுதெய்வ வழிபாட்டுக்கோயில்களிலும் தமிழ் வழிபாடே இருந்தது, இருக்கின்றது. பெண்கள் இறைவர்களாக இருந்தாலும் இழிவானவர்கள் என்பதே வேதங்கள் வலியுறுத்தும் கருத்து. எனவே, இறைவர்களாக இருந்தாலும் பெண்கள் அல்லவா? எனவே, சமற்கிருதம் பேசக்கூடாது. ஆதலின், அக்கோயில்களில் சமற்கிருத வழிபாடுகள் கிடையா.

எனவே, ஆகமவிதிகள் என்ற பெயரில் தமிழ்மக்களுக்கு எதிரான கருத்துகளை அகற்ற நீதிமன்றங்கள் துணை புரிய வேண்டும். தமிழ் வழிபாடும் அனைத்துப் பிரிவுத் தமிழர்களும் பூசாரியாக இருக்கும் நிலையும் என்றென்றும் இருக்க வேண்டும். அரசின் கொள்கைக்கு உண்மையான இறைநெறியன்பர்கள் துணை நிற்க வேண்டும்.

– தமிழறிஞர் இலக்குவனார் திருவள்ளுவன்,

தலைவர், இறைநெறி மன்றம்

– இரியாசு அகமது, குமுதம் ரிப்போர்ட்டர், 02.09.2022



Thursday, August 18, 2022

பாராட்டு பெறும் காவல்துறை தமிழுக்குக் காவலாக இல்லையே! – இலக்குவனார் திருவள்ளுவன்

 அகரமுதல





தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம்

8. காவல்துறை தமிழுக்குக் காவலாக இல்லையே!

பழந்தமிழ்நாட்டில் காவலுக்கு முதன்மை அளித்தனர். எனவே, நாடு காவலில் சிறந்து இருந்தது. நாட்டு மன்னனையே காவலன் என்று மக்களும் புலவர்களும் கூறினர். மன்னர்கள் தாங்களும் மாறுவேடமிட்டும் இரவுக் காவல் புரிந்தும் காவலில் பங்கேற்றனர்.

இல்லற வாழ்க்கையிலும் காவலுக்கு முதன்மை அளித்தனர். தலைவன் தலைவியைவிட்டுப் பிரிவதை ஆறுவகையாகக் கூறியுள்ளனர். அவற்றுள் ஒன்று காவலின் பொருட்டுப் பிரிவதாகும். எனவே, இதனைக் காவற் பிரிவு என்கின்றனர்.

பதிற்றுப்பத்து முதலான சங்க இலக்கியங்களிலிருந்து காலந்தோறும் இலக்கியங்கள் தமிழ்நாட்டுக் காவல் சிறப்பைக் கூறுகின்றன. தொல்காப்பியத்திற்கு விளக்கவுரையாக அமைந்த அகப்பொருள் விளக்கத்தில் நாற்கவிராச நம்பி,

அறப்புறம் காவல் நாடு காவல்எனச்

சிறப்புஉறு காவல் திறம்இரு வகைத்தே

எனக் காவலை இருவகை உள்ளமையைக் குறிப்பிடுகிறார். முதலாவது, அறமன்றங்கள் முதலான இடங்களைப் பாதுகாப்பதற்காகத் தலைவன் மேற்கொள்ளும் பிரிவு. இரண்டாவது பகைவர்களிடமிருந்து தன் நாட்டைக் காப்பதற்காக மேற்கொள்ளும் பிரிவு என்கின்றனர். இதனை நாம் உள்நாட்டுக்காவல் என்றும் எல்லைக்காவல் என்றும் கூறலாம்.

பழந்தமிழ்நாட்டு நிலை போல் இப்போதும் தமிழ்நாட்டுக் காவல்துறை சிறப்பான நிலையில் இருப்பதாகக் கூறுகின்றனர். உலக அளவில் தமிழ்நாட்டுக் காவல்துறை சுகாத்துலாந்து காவல்துறைக்கு இணையானது, அதற்கு அடுத்த இடத்தில் உள்ளது என்றெல்லாம் சொல்லி வருகிறார்கள். ஆனால், 2022 ஆம் ஆண்டின் உலகின் முதல் 10 சிறந்த காவல்துறைகளில் தமிழ்நாடு காவல்துறை இல்லை. இந்திய அளவிலும் தமிழ்நாட்டுக் காவல்துறை 2019 இல் முதலிடத்தில் இருந்தது, 2020இல் ஐந்தாம் இடத்திற்குச் சறுக்கியுள்ளது.

தேசியக் குற்ற ஆவணக் கழகத்தின்(NCRB) புள்ளிவிவரப்படி 2020 இல் 430 விழுக்காடு உயர்ந்துள்ளது என்கின்றனர். தமிழ்நாட்டில் குற்ற எண்ணிக்கை மிகுதியாக இருப்பதற்கான காரணம், தலைக்கவசம் அணியாமை வழக்குகள், மகுடை(கொரானா)தொற்று விதி மீறல் வழக்குகள் என விதி மீறல் வழக்குகள் தமிழ்நாட்டில் மிகுதியாக உள்ளதே காரணம் எனத் தோன்றுகிறது.

தமிழ்நாட்டு முதல்வர் தமிழ்நாட்டில்  குற்ற எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும் இனியும் குறையும் என்றும் நம்பிக்கையுடன் கூறுகிறார்.

புள்ளிவிவரங்களை ஒதுக்கி வைத்துப் பார்த்தால் 2020இல் இந்தியாவில் காவல்துறை, பாதுகாப்பு படைகளின் பிரிவுகளுக்கு வழங்கப்படும் மிக உயரிய அறிந்தேற்பான ‘குடியரசுத் தலைவர் கொடி’ 2020 ஆம் ஆண்டிற்கானது தமிழ்நாடு காவல்துறைக்கு அண்மையில் வழங்கப்பட்டது. இதுவரை 10 ஆண்டுகள் வழங்கினாலும் தென்னிந்தியாவில் முதன்முறையாகத் தமிழ்நாடுதான் இக்கொடி ஏற்பைப் பெற்றுள்ளது. அதிலும் முன்னரே இந்திய அளவில் ஐந்தாவது வரிசையில் 2009 இல் தமிழ்நாடு பெற்றுள்ளது. (தமிழகக் காவல்துறையின் 150ஆம் ஆண்டை முன்னிட்டு இது வழங்கப்பட்டது.) அஃதாவது 13 ஆண்டுகளுக்குப் பிறகு இஃது இரண்டாம் முறையாகும்.

இத்தகைய சிறப்பைப் பெற்ற தமிழ்நாட்டரசின் காவல்துறை தமிழுக்குக் காவலாக இல்லை என்பதே பேரவலமாகும்.

காவல்துறையின் முத்திரையில் தமிழ் இல்லை; கொடியில் தமிழ் இல்லை; குடியரசுத்தலைவர் கொடியில் தமிழக அரசின் காவல்துறையின் கொடியும் இடம் பெறுவதால் ஆங்கிலத்தில் உள்ள அக்கொடியே இதிலும் இடம் பெற்றுள்ளது; ஊர்திகளில், காவல்துறை, உலா ஊர்தி, காவல் ஊர்தி  எனக் குறிப்பது எவற்றிலும் தமிழ் இல்லை. சாலை நடுவில் வைக்கும் தடுப்புப் பலகைகள், அறிவிப்புப் பலகைகள், சாலை வழிகாட்டிகள், காவல்துறை அறிவிப்புகள் முதலியவற்றில் தமிழை இல்லாமல் ஆக்குவது ஏன்?

மேலே உள்ள படங்கள் மூலம் தமிழ்நாட்டுக் காவல்துறை ஆங்கிலத்திற்கு அடிமையாக உள்ளதையும் பிற மாநிலங்களில் தத்தம் மொழியைப் பயன்படுத்துவதையும் அறியலாம். அவர்கள் வெட்கம், மானம், சூடு, சொரணை உள்ளவர்கள், உப்புபோட்டு உண்பவர்கள்.

காவலர்கள் தோளில் அணியும் பதவிக் குறியீட்டில் (இரு நிலை நீங்கலாகத்) தமிழ் இல்லை; காவலர்களின் வருகைப் பதிவின் பொழுதும் அணிவகுப்பின் பொழுதும் ஆங்கிலம் மூலமே ஏவுகின்றனர். அரசு விருதுகளில் தமிழ் இல்லை.

பதவி மாறுதல் ஆணைகளில் தமிழ் இல்லை. தமிழ்நாட்டின் தலைமைச் செயலகத்தில் ஆங்கிலேய அதிகாரிகள்(?) உள்ளனர் போலும்! அவர்கள் ஆங்கிலேயர்களுக்கு(?)த்தான் ஆணை பிறப்பிக்கின்றனர் போலும்! எனவே, அவர்களுக்காக – ஆங்கிலேயர்களால்(?) ஆங்கிலேயருக்கு(?) – ஆங்கிலத்தில்  ஆணை பிறப்பிக்கின்றார்கள் என்பது தெரியாமல், நாம்தான் தமிழில் ஆணைகள் இல்லை எனச் சொல்லி வருகிறோமோ? முன் ஏர் செல்லும் வழிதானே பின்னேரும் செல்லும். எனவே, துறைத் தலைமையினரும் ஆங்கிலேயர்களுக்காகப்(!) பணியாற்றுவதால், மாறுதல் ஆணை என்று இல்லை,  பொதுவான ஆணைகள் பலவற்றிலும் தமிழைத் தேட வேண்டி உள்ளது.

தமிழ்நாட்டுக் காவல்துறையில், கவிஞர்கள், எழுத்தாளர்கள், படைப்பாளிகள், தமிழார்வலர்கள் உள்ளனர். தமிழ் ஆட்சிமொழித் திட்டத்தைச், சொல்லும் படிச் செயலாற்றுவதற்கு அதிகாரிகளும் ஊழியர்களும் உள்ளனர். இருப்பினும் தமிழகக் காவல்துறையில் தமிழுக்கு இடமில்லாதது ஏன்? என்றுதான் புரியவில்லை.

இப்பொழுது முன்நிகழ்வு ஒன்று நினைவிற்கு வருகிறது. மதுரையில் சித்திரைப் பொருட்காட்சி அரங்கங்கள் ஆங்கில மயமாகக் காட்சி யளித்தன. 1991 இல் நான் மதுரை தமிழ் வள்ச்சித் துறை உதவி இயக்குநராக இருந்த பொழுது இவற்றை மாற்றுவதற்காகத் தமிழில் எழுதும் துறைகளுக்கு நால்வகையில் மும்மூன்று பரிசகளாக 12 பரிசுகள் அறிவித்தேன். சிறப்பாக எழுத வழிகாட்டவும் செய்ததால் அரங்கங்கள் முழுமையும் தமிழாயின. அவ்வாறுதான் முழுமையும் ஆங்கிலமாக இருந்த காவல் துறை அறிவிப்பிற்குப் பின்னர், முழுமையும் தமிழாக மாறியது. காவல்துறைக்கு முதல் பரிசும் கிடைத்தது. நினைத்தால் அருவினை ஆற்றும் காவல்துறை, எண்ணினால் தமிழ் ஆட்சிமொழிச் செயலாக்கத்தில்  முதலிடம் பெறலாம் அல்லவா?

எங்கெங்குக் காணினும் ஆங்கிலமடா – தமிழா

ஆங்கிலம் ஒன்றே  எண்ணமடா – எங்கும்

தவறியும் தமிழைக் காணோமடா – அந்த

ஆங்கிலம்தான் அன்னை மொழியோடா!

என்று உள்ள நிலையை மாற்றி மாண்புமிகு முதல்வர் மு.க.தாலின் தனிக் கருத்து செலுத்தி தமிழ்நாடு எங்கும் தமிழ்மணம் கமழச் செய்வார் என எதிர்பார்க்கலாமா?

– இலக்குவனார் திருவள்ளுவன்

Tuesday, August 9, 2022

தமிழக அரசிற்குப் பாராட்டும் சீராட்டும்! – இலக்குவனார் திருவள்ளுவன்

 அகரமுதல



தமிழக அரசிற்குப் பாராட்டும் சீராட்டும்

தமிழ்நாட்டில் – மாமல்லபுரத்தில் – 44 ஆவது சதுரங்க ஞாலப்போட்டியை அரசு சிறப்பாக நிகழ்த்தி இன்று(09/08/22) நிறைவு விழாவும் நிகழ்கிறது. போட்டியில் வாகை சூடிய அனைவருக்கும் பாராட்டுகள். பங்கேற்ற பிற போட்டியாளர்களுக்கு அடுத்து வெற்றியைச் சுவைக்க வாழ்த்துகள். சிறப்பாக நடத்திய தமிழக அரசிற்கும் வழி நடத்திச் செல்லும் மாண்புமிகு முதல்வர் மு.க.தாலினுக்கும் பாராட்டுகள்.

  ஆடி 12, 2053 / 28.07.2022  முதல் நடைபெறும் சதுரங்க விழாவிற்கு வந்துள்ள 186 நாடுகளிலிருந்து  பங்கேற்ற 1,736 பன்னாட்டு வீரர்களும் வீராங்கனைகளும் தமிழக அரசின் விருந்தோம்பலையும் பல்வகை ஏற்பாடுகளையும் மிகவும் மகிழ்வுடன் பாராட்டி வருகின்றனர். போட்டியாளர்கள் மட்டுமல்லாமல், ஆர்க்குடே துவார்க்கோவிச்சு (Arkady Dvorkovich) தலைமையில் உள்ள பன்னாட்டுச் சதுரங்கக் கூட்டமைப்பின்(International Chess Federation/Fide) பொறுப்பாளர்களும், இலாரண்டு பிரெயிடு(Laurent Freyd) தலைமையிலான நடுவர்களும் பிற விருந்தினர்களும் மனமாரப் பாராட்டி மகிழ்கின்றனர்.

பொதுவாக ஈராண்டு அல்லது குறைந்தது ஓராண்டு கால வாய்ப்பு எடுத்துக் கொண்டு பன்னாட்டு நிகழ்ச்சி ஏற்பாடுகளைச் செய்து முடிப்பர். ஆனால் நான்கு திங்கள் கால வாய்ப்பில் அனைத்து நிலை அதிகாரிகளும் அமைப்பினரும் சிறப்பாகப் பணியாற்றிச் செம்மையாக சதுரங்க ஞாலப்போட்டியை நிகழ்த்தி வருகின்றனர்.

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து

அதனை அவன்கண் விடல்

(திருவள்ளுவர், திருக்குறள் 517)

என்னும் தமிழ் மறைக்கேற்ப முதல்வர் மு.க.தாலின்  பொறுப்புகளைப் பகிர்ந்து அளித்து அவரவர்கள் தத்தம் கீழ் உள்ளவர்களில் தக்கவர்களைக் கொண்டு சிறப்பாக நடத்தி வருவதற்கு வழிகாட்டும் அவருக்கும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை  அமைச்சர் சிவ. வீ.மெய்யநாதன், உணவு அமைச்சர், தகவல் தொழில் நுட்ப அமைச்சர் முதலான பிற அமைச்சர் பெருமக்களுக்கும் தலைமைச் செயலர் முனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப. தலைமையில் செயல்பட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் பல்வேறு நிலைகளில் பணியாற்றியவர்களுக்கும் தொண்டாற்றியவர்களுக்கும் அன்பு கலந்த பாராட்டுகளைத் தெரிவிக்கிறோம்.

பாராட்டும் பொழுது சீராட்டையும் தெரிவிக்க விரும்புகிறோம்.  சீராட்டு என்பது சிறு சண்டை என்னும் பொருளில் இங்கே கையாளப்பட்டுள்ளது. சிறு சண்டை என்று குறிப்பிடுவதன் காரணம், அரசின் தமிழ்ப்பணியிலுள்ள குறைபாடுகளே. இவை குறித்து “சதுரங்கப் பெருவிழாவில் வெட்டப்படும் தமிழ்!” என்னும் கட்டுரையில் தெரிவித்துள்ளோம்.

நாம் குறிப்பிட்ட பின்னர் விளம்பரங்களில் ‘சதுரங்கம்’ இடம் பெற்றது மகிழ்ச்சிதான். எனினும் அடையாள அட்டை, பதாகை, மேடை, சான்றிதழ், நினைவளிப்பு, என ஒவ்வொன்றிலுமே தமிழ் இடம் பெற்றிருக்க வேண்டும். சுற்றுலா வருவோர்க்கு வழிகாட்டுவதுபோல் விளையாட்டரங்கும் குறித்த வழிகாட்டுக் குறிப்புகளையும் தமிழ் மொழி, இலக்கியம், கலை, பண்பாட்டுச் சிறப்புகளையும் தமிழிலும் ஆங்கிலம், செருமனி, பிரெஞ்சு, உருசியன் முதலான உலக மொழிகளிலும் இடம் பெறும் வகையிலும் கையேட்டை அனைவருக்கும் கொடுத்திருக்க வேண்டும். இதைக் குறிப்பதன் காரணம் அடுத்து வரும் விழாக்களிலாவது இவற்றைக் கடைப்பிடிப்பார்கள் என்ற நப்பாசையில்தான்.

இதன் தொடர்ச்சியாகத் தமிழ்நாட்டரசின் தமிழ்க்கடமையை மறக்கும் அவலத்தை மீண்டும் சுட்டிக் காட்ட விரும்புகிறோம். முன்பே இதனைச் சுட்டிக்காட்டியிருந்தாலும் தொடர்ந்து குறிப்பிடும் வண்ணம் தொடர்ந்து ஆங்கிலமே எங்கும் கண்களில் படுவதால் நாமும் மீண்டும் சொல்ல விரும்புகிறோம்.

மேலே படம் 1 இல் உள்ளது முதல்வர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் கல்வெட்டு ஆங்கிலத்தில் இருப்பது. படம் 2 இல் மேடை விளம்பரம் ஆங்கிலத்தில் இருப்பது. இந்த நேரம் முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி முதல்வராக இருந்த பொழுது நிகழ்ந்த ஒரு செயல் நினைவிற்கு வருகிறது. விழா ஒன்றின் பொழுது ஏற்பாட்டைப் பார்வையிட வந்த கலைஞர் அவர்கள், தம் அருகில் இருந்த தமிழ்வளர்சசி பண்பாட்டுத்துறைச் செயலர் அறிஞர் ஒளவை நடராசனிடம் எதையோ சுட்டிக்காட்டி ஏதோ கூறினார். முதல்வர் கலைஞர் புறப்பட்டுச் சென்றதும் உயரதிகாரிகள் ஒளவையிடம் வந்து “முதல்வர் ஐயா என்ன சொன்னார்” என்றார்கள். “அங்கே மட்டும் ஏன் ஆங்கிலம் இருக்கிறது என்றார். அதனை மாற்றி விடுங்கள், அப்பொழுதுதான் முதல்வர் வருவார்” என்றார். உடன் அவ்வாறு செய்துவிட்டு இனி எல்லா நிகழ்ச்சிகளிலும் தமிழ்ப்பதாகைகள், தமிழ் விளம்பரங்களையே வைப்பதாகக் கூறி அவ்வாறே செய்தனர். தந்தை எட்டடி பாய்ந்தால் தான் பதினெட்டடி பாயும் முதல்வர் முனைப்புடன் செயல்பட்டால் தமிழ்நாட்டில் எங்கும் தமிழ் இருக்கும் அல்லவா? அழைப்பிதழ், கல்வெட்டு, மேடைப்பின்னணி, விளம்பரம் யாவும் தமிழில் இருந்தால்தான் பங்கேற்பேன் என்றால் அனைவரும் உடன் ஆவன செய்வார்கள் அல்லவா? இதனைப் பிற அமைச்சர்களும் அதிகாரிகளும் பின்பற்றித் தமிழை நிலைக்கச் செய்வார்கள் அ்ல்லவா?

“தமிழ் தமிழ்” என்று முழங்கிக் கொண்டு, தமிழை மறந்து வாழும் ஆட்சிப் பொறுப்பினர் பிற மாநிலங்களைப் பார்த்தாவது திருந்த வேண்டும் அல்லவா? இன்றைக்கு உலகமே கையில் – கைப்பேசியில் – வந்து விட்டது. அதில் பார்க்கும் செய்திகளில் பிற மாநிலங்கள், பிற நாடுகள் எங்கும் அவரவர் தாய்மொழி வீற்றிருக்கத் தமிழ்நாட்டில் ஆங்கிலம் அரசோச்சும் வேதனையான சூழலைப் பார்க்க முடிகிறது. சான்றுக்குச் சில படங்களை மேலே பார்க்கலாம்.

படம் 3. அண்மையில் மராட்டிய அரசு பதவியேற்றபொழுது அமச்சரவை பதவியேற்பு விழா என மராட்டியத்தில் அறிவிப்பு இருப்பதைப் பார்க்கலாம். இந்தி வேண்டும் என்று சொல்லக்கூடிய ஒன்றியப் பொறுப்பாளர்களின் மாநிலமான குசராத்தில், குசராத்தி மொழியிலேயே அறிவிப்பு, விளம்பரம் முதலானவை இருப்பதைப் படம் 4,5,6 இல் காணலாம். படம் 7 இல் கருநாடக மாநிலம் பெங்களூரில் பிற்பட்டோர் ஆணையப் பொன்விழா நிகழ்ச்சியில் கன்னடம் மட்டும் மேடைப்பின்னணியில் அழகு செய்வதைப் பார்க்கலாம். அவர்களெல்லாம் உணர்வால் தத்தம் மொழியன்பர்களாக இருக்கின்றனர். தமிழ்நாட்டுடன் ஒப்பிட்டுத் தொடர்புடையோர் வெட்கமும் வேதனையும் அடைய வேண்டாவா? அங்கெல்லாம் மாநில மொழி மட்டுமே வீற்றிருக்க இங்கோ ஆங்கிலம் மடடுமே அல்லது ஆங்கிலமும் இணைந்து இருக்கும்  சீரற்ற நிலை ஏன்? இதன் உச்சக் கட்டம்தான் இது தமிழ்நாட்டவருக்கான அரசு அல்ல என்று கூறுவதன் மூலம் அரசு முத்திரையை ஆங்கிலத்தில் பயன்படுத்தியிருப்பது(படம் 8).

தெய்வப்புலவர் திருவள்ளுவர், மகிழ்ச்சியால் சோர்ந்து கடமை தவறியவர்க்குப் புகழில்லை என உலகின் எப்படிப்பட்ட நூலறிஞர்களும் கூறுவதாகக் கூறுகிறார்.

எப்பால்நூ லோர்க்கும் துணிவு
பொச்சாப்பார்க்கு இல்லை புகழ்மை அதுஉலகத்து
(திருவள்ளுவர், திருக்குறள், குறள் 533)

என்கிறார் அவர்.

இதையே பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

கொண்ட கடமையில் தூங்கியவன் புகழ் இழந்தான்

என்கிறார்(நாடோடி மன்னன் திரைப் பாட்டு).

பல திசைகளிலிருந்தும் பல நாட்டவரிடமிருந்தும் வரும் புகழுரைகளில் மயங்கித் தமிழ்க்கடமைகளை மறக்கக்கூடாது என்பதற்காகத்தான் இதனைக் கூறுகிறோம். தமிழக ஆட்சியில் அமரத் துடிக்கும் ஓநாய்க்கூட்டத்திலிருந்து தமிழக மக்களைக் காப்பாற்ற இவ்வாட்சி நிலைத்திருக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில்தான் அன்பின் காரணமாக இதைக் கூறுகிறோம். எனவே, தமிழ் மட்டும் அறிந்தவர்கள் போல் ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் செயல்பட வேண்டும். தமிழ்த்தாயை மறப்பவர்கள் தத்தம் பெற்ற தாய்மார்களுக்கு இரண்டகம் செய்பவர்கள் என எண்ண வேண்டும்.

தாயை மறப்பவன் ஈனப்பிறவி

தமிழ்த்தாயை மறப்பவன் மனிதனே அல்லன்

 “சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே-அதைத்

தொழுது படித்திடடி பாப்பா” – பாரதியார்

நாம்தமிழைத் தொழ வேண்டா

பயன்படுத்தினால் போதும்!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

இதழுரை, அகரமுதல ஆடி 24,2053 /  09.08.2022  

Followers

Blog Archive