Monday, December 19, 2022

தமிழக வேலை வாய்ப்பு ஆங்கிலேயருக்கு மட்டும்தானோ! – தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம் 16 – இலக்குவனார் திருவள்ளுவன்

 அகரமுதல




தமிழக வேலை வாய்ப்பு ஆங்கிலேயருக்கு மட்டும்தானோ!

(தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம் 15 – தொடர்ச்சி)

தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம் தொடரில் இப்பொழுது அறநிலையத்துறை குறித்துத்தான் தொடர்ந்து எழுதியிருக்க வேண்டும். எனினும் சில ஆணைகளும் அறிவிப்புகளும் ஆங்கிலத் திணிப்புகுறித்து எழுதத் தூண்டுகின்றன. ஏற்கெனவே இது குறித்துத் தெரிவித்தாயிற்றே! மீண்டும் தேவையா என எண்ணலாம். மீண்டும் மீண்டும் ஆங்கிலத் திணிப்பைத் தொடரும் போது நாமும் அது குறித்து மீண்டும் எழுதக் கடமைப்பட்டுள்ளோம் அல்லவா?

சில நாள் முன்னர் தீயணைப்புத்துறை இயக்குநர் மாறுதலாணை, காத்திருப்பு ஆணை ஆகியவை செய்திகளில் இடம் பெற்றன. தொடர்பான ஆணைகள் ஆங்கிலத்தில்தான் இருந்தன. ஒருவேளை ஒன்றிய அரசின் ஆணைகளோ எனப் பார்த்தால் தமிழ்நாட்டரசின் ஆணைதாம்.  இதில் என்ன அதிர்ச்சி. தமிழில் இருந்திருந்தால்தானே வியப்படைந்திருக்க வேண்டும் என்கிறீர்களா? ஆம். அரசு பிறப்பிக்கும் மாறுதல் ஆணைகள், பிற ஆணைகள் ஆங்கிலத்தில் இருக்க வேண்டும் என்பது உயர் அதிகாரிகளின் மூட நம்பிக்கைகளில் ஒன்று. இதே போன்ற மற்றொரு மூடநம்பி்க்கை ஆளுநர் இல்ல ஆணைகள் ஆங்கிலத்தில் இருக்க வேண்டும் என்பது.

சட்டமன்ற உறுப்பினராக இருந்த உதயநிதி அமைச்சராகப் பொறுப்பேற்பது குறித்த அரசின் ஆணை, செய்திக்குறிப்புகள் ஆகியனவும் ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்புகளும் ஆங்கிலத்தில்தான் உள்ளன.

அமைச்சுப் பொறுப்புகள் மாற்றத்தால் அமைச்சர்கள் பொறுப்பேற்கும் ஆணைமட்டும் இணைப்பில் தமிழ்ப்பட்டியலுடன் இருந்தது. பிற வெல்லாம் ஆங்கிலத்தில்தான். ஆளுநர் செயலர் அழகாகத் தமிழில் கையொப்பமிட்டுள்ளார். அப்படி என்றால் தமிழறிந்த செயலர்தான் அவர்.  ஆனால், தமிழ் தெரியா ஆளுநர் ஆங்கிலத்தில்தானே ஆணை பிறப்பிக்க வேண்டும் என்ற மூட நம்பிக்கை உள்ளதே! எங்ஙனம் தமிழில் ஆணைகளையும் செய்திகளையும் வெளியிடுவது? எனவே, ஆங்கிலத்தில்தான் இருக்கின்றன.

உ.பி. ஆளுநர் மாளிகைத் தளத்தைப் பாருங்கள். இந்தியிலும் தளம் உள்ளது. ஆளுநர் மாளிகை வெளியிடும் செய்திக் குறிப்புகள் யாவும் இந்தியில்தான் உள்ளன. அட்டவணையில் பொருளடக்கப் பகுதியில் மட்டும் ஆங்கிலத்தில் குறிப்பிட்டுள்ளனர். ஆனால் இந்தியில்தான் செய்தி வெளியீடுகள். உ.பி. மாநில ஆளுநர் அம்மாநில மக்கள் மொழியில் செய்திகளை வெளியிடும் பொழுது தமிழ்நாட்டின் ஆளுநர் மாநில மக்கள் மொழியான தமிழில் செய்திகளை வெளியிடக் கூடாதா?

அமைச்சரவை பொறுப்பேற்கும் அறிவிப்பாணை, அமைச்சுத்துறை பகிர்வு ஆணை முதலியற்றைப் பாருங்கள். ஆங்கிலத்தில்தான் உள்ளன. ஆங்கிலப்புலவர்கள், அதனால் ஆங்கிலத்தில் எழுதுகிறார்கள் என எண்ண வேண்டா. ஆங்கிலத்திலும் எழுதத்தெரியாதவர்களே மிகுதி. முந்தைய ஆணைகளையும் அறிக்கைகளையும் பார்த்து, பெயர், புள்ளிவரஙக்ளை மட்டும் மாற்றிப் புதிய ஆணைகள், அறிக்கைகளை  உருவாக்குநரே பெரும்பான்மையர். இவர்களுக்குத் தமிழில் மாதிரி வரைவுகள், மாதிரி அறிக்கைகளைக் கொடுத்து விட்டால தமிழில் எழுதத் தொடங்கி விடுவார்கள். தொடர்ந்து இவ்வாறு எழுதினால், நாளடைவில் தாமாகவே தமிழில் எழுதும் திறமைகளைப் பெறுவார்கள்.

தமிழ்நாட்டிற்கு வரும் அரசியல்வாதிகள் தமிழ் மக்களுடன் நெருக்கம் இருப்பதாகக் காட்டிக் கொள்ளத் தமிழில் ‘வணக்கம்’, ‘நன்றி’ சொல்லியும் தமிழ் மீதான விருப்பம் இருப்பதாகவும் தெரிவிக்கிறார்கள். தமிழ்நாட்டு ஆளுநராகப் பொறுப்பேற்பவர்கள், தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்பவர்கள்  தமிழை மதிப்பதாகக் கூறித் தமிழ் கற்கப் போவதாக அறிவிக்கிறார்கள். அவ்வாறிருக்க ஆளுநர்களை நன்கு தமிழ் கற்கச் செய்யலாமே. இ.ஆ.ப., இ.கா.ப. அதிகாரிகள் தமிழ்த்தேர்வில் வெற்றிபெற வேண்டும் எனச் சொல்வதுபோல்,  ஆளுநர்களையும் தமிழ்த்தேர்வில் வெற்றி பெறச் செய்யலாமே! ஆளுநர்கள் தமிழ் அறியாதவர்களாக இருப்பினும் ஆளுநர் மாளிகை அறிவிப்புகள், அறிக்கைகள், ஆணைகள் தமிழில் இருக்க வேண்டும் என்பதைக் கட்டாயமாக்க வேண்டும். ஆளுநர் மாளிகையின் ஆட்சி மொழி என்றும் தமிழாகத்தான் இருக்க வேண்டும்.

தமிழக அரசின் தேர்வாணையம் என்பது தமிழ் மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதற்குத்தான் என எண்ணிக் கொண்டுள்ளோம். ஆனால், இந்த அமைப்பு ஆங்கிலேயர்களுக்கானதோ! இதன் இணையத்தளத்தில் தமிழ் ஆங்கிலம் இருமொழிகளிலும் வெளியிடும் வசதி உள்ளது. ஆனால், பல விளம்பரங்கள் ஆங்கிலத்தில்தான் உள்ளன. வேலைவாய்ப்பு விளம்பரத் தொகுப்பு அல்லது தேர்வு அட்டவணைகள் ஆங்கிலத்தில்தான் உள்ளன. சில நேர்வுகளில் தலைப்புகளைமட்டும் தமிழில் குறிப்பிட்டு விட்டுப் பதவிப் பெயர்களை ஆங்கிலத்தில் குறிப்பிடுகின்றனர். பதவிப்பெயர்களைக்கூடத் தமிழில் குறிக்கத் தெரியாதவர்களை எதற்கு வேலையில் வைத்திருக்க வேண்டும்? போதிய தமிழறிவு இல்லாதவர்கள் என அவர்களை யெல்லாம் தூக்கி எறிய வேண்டியதுதானே! தமிழறிந்த தமிழருக்கு வேலை வாய்ப்பு கிடைக்குமே!

தமிழ் இருக்க வேண்டிய இடத்தில் ஆங்கிலத்தைப் பார்த்தால் நமக்கு இரத்தம் கொதிக்கிறது. இவர்களோ சடம்போல் இருக்கிறார்களே! இந்தித்திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் இன்னும் ஓயவில்லை. நாம் அத்துடன் ஆங்கிலத்திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தையும் நடத்த வேண்டும் என அரசு விரும்புகிறதோ! கவலைப்படவேண்டா. உங்கள் விருப்பம் அதுதான் என்றால் இதே நிலை தொடர்கையில் பெரிய அளவில் ஆங்கிலத்திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் வரத்தான் போகிறது. அதனால் ஆங்கிலத் திணிப்பாளர்கள் நாடு கடத்தப்பட்டாலும் வியப்பதற்கில்லை. அதற்குள் அவர்கள் தம்மைத் திருத்திக் கொள்வது நல்லது.

அரசு ஒரு முறையேனும் அலுவலக நடைமுறைகளில் தமிழைப் பயன்படுத்தாத உயரதிகாரிகள், துறைத்தலைவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் ஆட்சிப்பீடத்தின் அடி முதல் முடிவரை ஆங்கில வெறி ஓடி விடும். நடவடிக்கை எடுப்போம் என்றெல்லாம் வாய்ப்பேச்சு எச்சரிப்பு கூடாது. நேரடியாக நடவடிக்கையில் ஈடுபடவேண்டும். அதற்குத் தமிழார்வம் மிக்க முதல்வரும் தலைமைச் செயலரும் முன்வரவேண்டும். இப்பொழுது அமைச்சரவை பொறுப்பேற்றது தொடர்பான ஆங்கில ஆணைகள், அறிவிப்புகள் தொடர்பில் உரியவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால், அடுத்து எந்த அறிவிப்பாக, ஆணையாக இருந்தாலும் தமிழில்தான் வரும். செய்வார்களா?

தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால்
ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து.
(திருவள்ளுவர், திருக்குறள் 561)

– இலக்குவனார் திருவள்ளுவன்



Wednesday, December 14, 2022

அறநிலையத் துறையில் ஆற்ற வேண்டியவை-அ(தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம் 15)- இலக்குவனார் திருவள்ளுவன்

 அகரமுதல




அறநிலையத் துறையில் ஆற்ற வேண்டியவை-அ (தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம் 15)

(அறநிலையத் துறை தமிழுக்கு அறக்கேடு விளைவிக்கிறதே!(தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம் 14) தொடர்ச்சி)

கடந்த முறை “அறநிலையத் துறை தமிழுக்கு அறக்கேடு விளைவிக்கிறதே!” எனக் குறிப்பிட்டிருந்தோம். அறநிலையத்துறை ஆற்ற வேண்டிய அரும்பணிகள் பல உள்ளன. அவற்றுள் சிலவற்றை இப்பொழுது பார்ப்போம். முதலில் தமிழ் வழிபாட்டு நிலையைக் காண்போம்.

அறநிலையத்துறை யமைச்சர் சேகர்பாபு, மக்கள் மகிழும் வண்ணமும் முதல்வர் மு.க.தாலின் செயல் பாபு எனப் பாராட்டும் வண்ணமும் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார். ஆதலின் நாம் கூறுவன குறித்துச் செவிமடுத்துச் செயலாற்றுவார் என நம்புகிறோம்.

சங்கக்கால மக்கள்,   “கடவுளை அருவப் பொருளாகவே அறிந்து என்றும் கடவுள் உணர்வுடையவர்களாகவே வாழ்ந்தார்கள். கடவுட் கொள்கைக்கு மாறான கொள்கையை அவர் அறியார். சங்கக்காலத் தமிழ்மக்கள் உணவினும் முதன்மையாகக் கடவுளைக் கருதி வாழ்ந்தனர்.” என்கிறார் பேராசிரியர் சி.இலக்குவனார்.   ஒல்காப் பெரும்புகழ்த் தொல்காப்பியத்தில் கருப்பொருளில், உணவுக்கு முன்பு தெய்வத்தை வைத்துள்ள சீர்மையையும் குறிப்பிடுகிறார்.

எனவே, தமிழர் நெறி கடவுள்நெறியைப் போற்றுவதே! ஆனால், தங்கள் கடவுளை வணங்கத் தங்கள் தாய்த்தமிழை ஒதுக்கி ஆரியத்தைப் புகுத்தியதால், கோவில் வழிபாடுகளைப் புறக்கணிக்கத் தொடங்கினர். இதனால் ஒரு பகுதியினர் இறை மறுப்பாளர்களாக மாறினாலும் மறு பகுதியினர், மூட நம்பிக்கையற்ற வழிபாட்டில் நாட்டம் கொண்டனர். இத்தகையோரையும் கடவுள் மறுப்பாளராகவே எண்ணிக் கொள்கின்றனர்.

சித்தர் பாடல்கள் பலவும் இவ்வாறே உள்ளன. சான்று ஒன்று பார்ப்போம்.

“நட்ட கல்லை தெய்வம் என்று நாலு புட்பம் சாத்தியே

சுற்றி வந்து மொணமொணன்று சொல்லுமந்திரம்ஏதடா?

நட்ட கல்லும் பேசுமோ? நாதன் உள்ளிருக்கையில்

சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ?”

என்னும் சித்தர் சிவவாக்கியர் பாடலில் முதல் இரண்டரை அடிகள் கடவுள் எதிர்ப்புபோல் தோன்றும். ஆனால் அடுத்து வருவன மக்கள் உள்ளத்தில் இறைவன் உள்ள உண்மையைக் கூறி மக்களை மதிக்கச் சொல்லும் இறைநெறியாக விளங்குகிறது.

எல்லாரும் எழுதிக் கொண்டிருப்பது அல்லது பேசிக்கொண்டிருப்பதுபோல் சமற்கிருத வழிபாடு ஈராயிரம் ஆண்டுகளாக இல்லை. இடைக்காலத்தில்தான் வந்தது. சமற்கிருதவழி வழிபாடு பெருகிக் கொண்டிருந்தாலும் ஒட்டு மொத்தமாகப் பார்த்தால் தமிழ் வழி வழிபாடே மிகுதியாக உள்ளது என்பதே உண்மை. ஏனெனில் தமிழ்நாட்டில் சிறுதெய்வ வழிபாடாகச் சொல்லப்படுகின்ற அம்மன்கோவில்கள், குல தெய்வக்கோயில்கள், சிற்றூர்க்கோயில்கள் முதலியவற்றில் தமிழ்வழி வழிபாடே உள்ளது. எனவே, மக்கள் விருப்பம் என்பது தமிழ் வழி வழிபாடே எனலாம். ஆனால், இங்கும் பூசாரிகளுக்குப் பயிற்சிதருவதாகக் கூறிச் சமற்கிருதம் திணிக்கப்பட்டு வருகிறது.

ஆனால், பெரிய கோயில்களிலும் அறநிலையத்துறைக் கட்டுப்பாட்டிலுள்ள பிற கோயில்களிலும் சமற்கிருத வழிபாடே உள்ளது. இவற்றிலெல்லாம் விரும்பியவர்களுக்குத் தமிழ் அருச்சனை என்று ஓரளவிற்குத் தமிழ் அருச்சனை தலைகாட்டும். ஆனால் கொடுமை என்னவென்றால் சைவமும் தமிழும் வளர்த்ததாகப் பெருமை பேசும்-வளர்ப்பதாகக் கூறிக்கொள்ளும் மடங்களின்/ஆதீனங்களின் கட்டுப்பாட்டிலுள்ள கோயில்களில் சமற்கிருத வழி வழிபாடுமட்டுமே உள்ளது.

சங்க இலக்கியங்களுள் தொல்காப்பியத்திலும் மணிமேகலையிலும் கடவுள் வாழ்த்து இல்லை. சிலப்பதிகாரத்தில் திங்கள், ஞாயிறு, மழை என்னும் மூன்றையும் போற்றும் இயற்கை வணக்கப் பாடல்கள் இடம் பெற்றுள்ளன. திருக்குறளில் கடவுள் வாழ்த்து இடம் பெற்றிருந்தாலும், உருவ வழிபாட்டைப் போற்றவில்லை. மேலும் ஆரியத்திற்கு எதிராக எழுதப்பட்டதாகத்தான் உள்ளது.

சங்கப்பாடல்கள்       இயற்றப்பட்ட காலத்தில் அல்லாமல் பின்னர்த் தொகுக்கப்பட்டன. தொகுத்த காலத்தல் கடவுள் வாழ்த்துப் பாடல்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அதன் பின்னர்க் கடவுள் வாழ்த்தைத் தொடக்கப் பாடலாக எழுதும் பழக்கம் வரலாயிற்று. பின்னர் தமிழ்த்தாய் வாழ்த்தைச் சேர்க்கும் பழக்கமும் வந்து விட்டது.

கல்லே பரவின் அல்லது

நெல்உகுத்துப் பரவும் கடவுளும் இலவே.

(புறநானூறு 355) என்கிறார் சங்கப் புலவர் மாங்குடி கிழார். அப்படியாயின் தொடக்கத்தில் நடுகல் வணக்கமே மேலோங்கி யிருந்திருக்கிறது. இதுவே பின்னர் கடவுள் வணக்கமாக மாறியுள்ளது எனலாம்.

இவையெல்லாம் கட்டுரையாளர்கள் பலரும் கூறியவைதாம்.

தமிழ் மன்னர்கள், புரவலர்களின் கொடை மடத்தைப் பயன்படுத்தி, வேள்விகளையும் சடங்குகளையும் செய்வித்தனர். நாளடைவில் மன்னர்களால் செய்யப்படுவனவற்றை அடுத்த நிலையில் உள்ளவர்கள், அதன்பின்னர் அதற்கடுத்த நிலையில் உள்ளவர்கள் எனப் பரவலாகப் பெருகிற்று. இருப்பினும் வருண வேறுபாட்டைப் புகுத்திய ஆரியர்கள், அவர்களால் தாழ்நிலையினராகக் கற்பிக்கப்பட்டவர்கள் இல்லங்களுக்குச் செல்வதில்லை; அவர்களுக்கு ஆரியச் சடங்குகள் செய்வதில்லை. கடந்த நூற்றாண்டு வரை ‘நாடார்கள்’ தங்கள் உறவில் மூத்தவரைக் கொண்டே திருமணச் சடங்கு முதலியவற்றைச் செய்தனர். கட்டுப்பாட்டிற்கும் ஒற்றுமைக்கும் பரிசு கொடுக்க வேண்டும் என்றால், பிராமணக் குலத்திற்குத்தான் கொடுக்க வேண்டும். அப்படிப்பட்டவர்களே இந்நூற்றாண்டில் பணம் தரும் எக்குலத்தாராயினும் சடங்குகள் செய்ய வந்து விட்டனர். இதனால், ஆரியச்சடங்குகள் நுழையாத குலங்களிலும் ஆரியம் நுழையத் தொடங்கி விட்டது.

“இருக்கு ஓதி மறையவர்கள் வழிபட்டு ஏத்தும் இளங்கோயில்” (திருநாவுக்கரசர், தேவாரம் ஆறாம் திருமுறை) என்பதைப் பார்க்கும் பொழுது திருநாவுக்கரசர் காலம் வரை ஆரிய வழிபாடு கோயில்களில் இல்லை என்பதைப் புரிந்து கொள்ளலாம். அதுவும் ஆரிய வழி வழிபாட்டுக்கோயில்கள்  திருவாரூர்  திருமீயச்சூரிலும்  அடுத்து கீழைக் கடம்பூரிலும் எழுப்பப்பட்டன.

கருவறையைப் புதுப்பிக்குங் காலத்தில் கடவுளை வேறிடத்தில் எழுந்தருளச் செய்வர். இதற்குப் பாலாலயம் எனப் பெயர். இச்சொல் தமிழ்ச்சொல்லே. செ.சொ.பி.அகராதியில் சமற்கிருதத்தில் இருந்து வந்ததாக் குறிப்பு இருக்கும். பாலர் என்பதைத் தமிழ்ச்சொல் என இவ்வகராதி குறித்திருக்கும். பாலரின் வேர்சொல்லான பால் + ஆலயம்தான் பாலாலயம்.  இப்பாலாலயங்களில் சமற்கிருத் வழிபாடுகளைப் புகுத்தி இளங்கோயிலாகக் கூறிக் கொண்டனர். இன்றைக்கு மலையாளிகள் ஓரிடத்தில் பணிக்கு அல்லது தொழிலுக்கு வந்து விட்டால், மெல்ல மெல்லத் தன்னைச் சுற்றிலும் வேலைவாய்ப்புகளை ஊரிலிருந்து அழைத்து வரப்படும் மலையாளிகளுக்குத் வாங்கித் தருவதைப் பார்க்கின்றோம். அதேபோல், பிராமணர்கள் தாங்கள் இருக்குமிடங்களில் தங்கள் குலத்தாருக்கு வேலை  வாய்ப்பை உருவாக்குவதைக் காலம் காலமாகச் செய்து வருகின்ற்னர். கோலில் மூலவர் இருக்குமிடத்திற்குப் பூசை செய்ய வரும் பிராமணர், சுற்றிலும் உற்ற கடவுள் படிமங்களுக்குக் கற்பூரம் காட்ட அல்லது பூசை செய்ய எனப் பிற பிராமணர்களை9ச செய்ய வைத்து ஆரிய வழிபாட்டைப் பரப்பினர். அப்படித்தான் பழுதுபார்க்கும் காலத்திற்கு எழுந்தருளச் செய்த பாலாலயத்தை இளங்கோயிலாக்கிப் பிராமணச் சடங்குகள் குடி கொள்ளும் இடமாக மாற்றி விட்டனர். ஆனால், தமிழ் ஆன்றோர்கள் இதனை விரும்பவில்லை.

என்னை நன்றாக இறைவன் படைத்தனன்

தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே (திருமந்திரம்)

எனத் திருமூலர் சொல்வதிலிருந்தே இறைவன் தமிழ் வழிபாட்டையே விரும்புவதாக மக்கள் நம்பிக்கை கொண்டிருந்தனர் எனலாம்.

தமிழ்வழி வழிபாடு குறித்து அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்

Friday, December 9, 2022

அறநிலையத் துறை தமிழுக்கு அறக்கேடு விளைவிக்கிறதே!(தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம் 14)- இலக்குவனார் திருவள்ளுவன்

 அகரமுதல




(நல வாழ்வு மையங்கள் தமிழுக்கு நலம் சேர்க்க வேண்டாவா? (தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம் 13) தொடர்ச்சி)

அறநிலையத் துறை தமிழுக்கு அறக்கேடு விளைவிக்கிறதே!

(தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம் 14)

தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத் துறை உருவாக்கப்பட்டு, 01.01.1960 முதல் செயல்பட்டு வருகிறது. அலுவலகங்களில் ஆட்சித்தமிழைச் செயற்படுத்தும் முன்னணித் துறைகளுள் ஒன்றாக இத்துறையும் உள்ளது. இருப்பினும்  முழுமையாக நிறைவேற்ற வேண்டி வாழ்த்துகிறோம். பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்து விட்டு எதற்கு அறக்கேடு என்று கூற வேண்டும என்ற எண்ணம் வருகிறதா? தமிழர்களால் தமிழர்களுக்குக் கட்டப்பட்ட திருக்கோயில்களில் தமிழுக்கு இடமில்லையே! இஃது அறக்கேடுதானே! கோயில்களில் வழிபாடு, சடங்குகள், அழைப்பிதழ்கள் முதலானவற்றில் தமிழ் மட்டுமே நிலைக்க அரசுதான் பெருமுயற்சி எடுக்க வேண்டும். எனவே அறநிலையத்துறையை மட்டும் குறைகூறிப் பயனில்லைதான். எனினும் மக்களிடம் விழிப்புணர்வு பரவவும் தமிழ்ப்பகைவர்களை அடக்கவும் தக்க பரப்புரை மேற்கொள்ளலாம் அல்லவா?

வழக்கமான அலுவலக நடைமுறைகளில் தமிழைப் பயன்படுத்தினாலும் திருக்கோயில்கள் தொடர்பானவற்றில் இப்போதைய கோயில் வழக்காறுகளுக்கேற்ப தமிழ்ச்சொற்களையோ தமிழ்த்தொடர்களையோ காணமுடிவதில்லை.

ஆகமம் என்றும் இல்லாத வழக்கங்கள் என்றும் சொல்லிக் கோயில் பூசாரிகளும் பிராமணீயக் காவலர்களும் தமிழைப் புறக்கணிக்கின்றனர். நீதித்துறையில் உள்ள பிராமணீய ஆதரவாளர்களும் தமிழ் வழிபாட்டைத் தொடர்ந்து நடத்த விடாமல் ஏதோ செய்து வருகின்றனர். இதற்கு முடிவுகட்ட முடியாத இரங்கத்தக்க நிலையில்தான் தமிழ் மக்கள் உள்ளனர் என்பது அறக்கேடுதானே!

தமிழர்களின் கோயில்களில் உள்ள இறைவன்-இறைவிப் பெயர்கள் தமிழாகத்தான் தொடக்கத்தில் இருந்தன. தமிழர்களின் கோயில்களில் தமிழ்க்கடவுள்களுக்கு வேறு எம்மொழியில் பெயர்கள் இருக்கும்? பின்னர்  சிறு கூட்டம் ஒன்று மெல்ல மெல்ல இறைவன்-இறைவிப் பெயர்களைச் சமற்கிருதமயமாக்கி வந்தனர்; வருகின்றனர். சில தமிழ்ப்பெயர்களை மாற்ற முடியாததால், இரு வகையாகவும் குறித்து வருகின்றனர். சமற்கிருதப் பெயர்களுக்கேற்ப இறைவன் இறைவி குறிதத கதைகளை மூடநம்பிக்கைகளைப் பரப்பும் வண்ணம் கூறிப் புராணம் என்றனர்.  தலப் புராணங்கள் என்பன யாவும் உண்மை வரலாற்றை மறைத்துப் பொய்க்கதைகளைப் பரப்புவனதாமே.

கேரளாவில் உள்ள கோயில்களில் கூட இறைவன், இறைவி ஆகியோர் பெயர்கள் தமிழாக உள்ளமையைப் பார்க்கலாம்.  திருச்சூர் மாவட்டம் திருவித்துவக்கோடு கோயில் இறைவன் உய்யவந்த பெருமாள், இறைவி வித்துவக்கோட்டுவல்லி; கோட்டயத்தில் உள்ள திருக்காட்கரை கோயிலில் இறைவன் பெயர் காட்கரையப்பன்; திருமூழிக்களம்(கோட்டயம்) கோயிலில் உள்ள இறைவன் பெயர் திருமூழிக்களத்தான்; கோட்டயம் திருவல்லவாழ் கோயிலில் கோலப்பிரான் – செல்வத்திருக்கொழுந்து; (கோட்டயம்) திருக்கடித்தானம்:அற்புதநாராயணன் – கற்பகவல்லி நாச்சியார்; திருச்செங்குன்றூர் : இமையவரப்பன் – செங்கமலவல்லி; திருப்புலியூர்:  மாயப்பிரான் – பொற்கொடிநாச்சியார்; திருவாறன்விளை:  திருக்குறளப்பன்; திருவண்வண்டூர் : பாம்பணையப்பன் – கமலவல்லி;  எனப் பலவற்றைக் கூறலாம். தமிழ்நாட்டிலுள்ள கோயில்கள் பலவற்றிலும் இவ்வாறுதான் உள்ளன. பல இடங்களில் தமிழ்ப்பெயர்களுடன் சமற்கிருதப் பெயர்களையும் இணைத்தே வழங்கும் பழக்கமும் உள்ளது. ஆனால், தமிழ்ப்பெயர் பரவலாகப் பயன்படுத்தப்படா நிலைதான்.

சான்றாக அருள்மிகு வண்டுசேர் குழலி  உடனாய அருள்மிகு பாம்புரநாதர் திருக்கோயில் > அருள்மிகு சேசபுரீசுவரர் திருக்கோயில்; திருமணிக்கூடம் – மணிக்கூடநாயகன் > வரதாசப் பெருமாள் / கசேந்திரவரதன்; திருமகள் நாச்சியார்-சிரீதேவி; தஞ்சைப் பெருவுடையார் கோயில் (எ) பிரகதீசுவரர் கோவில்; பழமலைநாதர்  (எ) விருத்தகிரிசுவரர்; விருத்தாம்பிகை (எ) பெரிய நாயகி; பாலாம்பிகை (எ) இளைய நாயகி; திருவெண்காடு கோயில்  (எ) சுவேதாரண்யேசுவரர் கோயில் என இரு முறைகளில் குறிப்பிடுவதைக் காணலாம். இவ்வாறு தமிழை ஒரேயடியாக ஒழிக்க முடியாத இடங்கள்  எங்கெங்கும் கடவுளரின் தமிழ்ப்பெயர்களை அகற்றுவதற்காகச் சமற்கிருதப் பெயர்களை இணைத்துப் பரப்பி வருகிறார்கள்..           

2020 சூன் 14 இல் அப்போதைய தமிழ்வளர்ச்சி அமைச்சர் மாஃபா பாண்டியராசன்,  “தமிழகத்தில் சமசுகிருதத்தில் உள்ள கோவில்கள் மற்றும் தெய்வங்களின் பெயரை தமிழில் மாற்ற முதல்வரிடம் ஆலோசனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.  ஆனால் என்ன நடவடிக்கை எடுத்தார்கள் என்று தெரியவில்லை. தமிழ் வழிபாட்டிற்காக நடவடிக்கைகள் எடுத்து வருவைதப் பார்க்கும் பொழுது, இப்போதைய அரசிற்கும் இதே எண்ணம்தான் எனத் தோன்றுகிறது. ஆனால் விரைவாக நடடிக்கை எடுத்துத் தமிழ்நாட்டுக் கோயில்களில் தமிழ்ப்பெயர்களே இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மிருத்சங்கர அரணம், அங்குராப்பணம், இசுதானிகர், பூர்ணாஃகூதி தீபாராதனை, சீர்ணோத்தாரண அட்டபந்தன, கும்பாபிசேகம் என்பன போன்ற கோயில் நிகழ்ச்சிகள், சடங்குகள் முதலியவற்றைக் குறிப்பிடும் பொழுது தமிழை விரட்டி விட்டு இடையிலே வந்த ஆரியத்தை வீற்றிருக்கச் செய்துள்ளார்கள். இவற்றை எப்பொழுது நாம் துரத்தப் போகிறோம்?

தமிழ்த்தெய்வங்களைப் புறக்கணிக்கும் போக்கு ஆரியர்களால் உருவாக்கப்பட்டு நிலைத்துவிட்டது. தமிழ்த் தெய்வம் முருகனை  உருத்திரன் மகனாக்கி,  விட்ணுவின் மருமகனாக்கியமை, முருகனின் மனைவியான  வள்ளி குற மகளாததால் அவளை இரண்டாம் மனைவி ஆக்கியமை. முதல் மனைவியாக இந்திரனின் வளர்ப்பு மகளான தெய்வானையை ஆக்கியமை, இடைக்காலத்தில் தமிழ்நாட்டில் நுழைந்த விநாயகரை முருகனின் அண்ணனாக்கியமை,  எனத் தமிழ்கடவுள்களை ஆரிய உறவுடன் பிணைத்து அவ்வுறவுகளை மேம்பட்ட உறவுகளாக ஆக்கியமை பலராலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனினும் நாம் தமிழ் மூலத்தைப் புறக்கணித்து விட்டு ஆரியத் தழுவல்களைக் கட்டிக் கொண்டுள்ளோம்.

தலப் புராணங்கள் என்ற பெயரில் வரலாற்றைச் சிதைத்தும் திரித்தும் மூடநம்பிக்கைகளைப் புகுத்தியும் எழுதப்பட்டவற்றை நீக்கி உண்மையான வரலாற்றை வெளிப்படுத்த வேண்டும். ஒரு சான்று: சீர்காழி தலப் புராணத்தில் சீர்காழி குறித்துப் பல்வேறு கதைகள் கூறப்படுகின்றன. அவற்றில், சீகாளி (சிரீகாளி) சிதம்பரத்தில் நடராசப்பெருமானோடு வாதாடிய குற்றம் நீங்க, வழிபட்டது என்பதும் ஒன்று. ஆனால் உண்மையில் இந்த நகரம் சிறப்பான மூங்கில்கள் விளையும் நகர். காழி என்றால் மூங்கில் எனப் பொருள். எனவேதான் இயற்கையோடியைந்து சீர்காழி என இந்நகர் பெயர் பெற்றது. கோயில் மரமும் மூங்கில்தான். ஆனால், பவளமல்லிகையைக் கோயில் மரமாகக் கூறி வருகின்றனர்.  

மற்றோர் எடுத்துக் காட்டு: மதுரை பழமுதிர்சோலையில் உள்ளது நூபரகங்கை. இதன் பழைய பெயர் சிலம்பாறு. சிலம்பு என்பது ஒலித்தல் என்னும் பொருள் உடையது. எதிரொலிக்கும் மலை சிலம்பு என அழைக்கப்பெற்றது. அத்தகைய மலையில் ஓடும் ஆறு சிலம்பாறு எனப்பட்டது. ஆனால் சிலம்பு என்பதைக் காலில் அணியும் அணிகலனாக எண்ணித், திருமால் காலில் இருந்த சிலம்பு விழுந்த இடம் எனக் கதை கட்டி விட்டனர். காலில் அணியும் சிலம்பிற்கு சமற்கிருதத்தில் நூபுரம் என்று பெயர். எனவே, நூபுர கங்கை எனத் திரித்து விட்டனர். இவ்வாறுதான் ஒவ்வோர் கோயில் வரலாறும் கோயில்களில் உள்ள இடங்களின் வரலாறும் சமற்கிருதமயமாக்கப்பட்டன.

எனவே, அரசு உண்மையான தலப் புராணங்களை எழுதச் செய்ய வேண்டும். இறைவன் இறைவிகளின் தமிழ்ப்பெயர்களையே பயன்படுத்த வேண்டும். தமிழில் மட்டுமே வழிபாடு நடைபெற வேண்டும். தமிழ் வழிபாட்டிற்காக அலைபேசியில் அழைக்கும் முறையை நீக்கிச் சமற்கிருத வழிபாடு வேண்டுமென்பவர்களுக்கு மட்டும் குறிப்பிட்ட நேரங்களில் இத்தகைய வாய்ப்பைத் தரவேண்டும். யாரும் கேட்காமலேயே தமிழ் வழிபாடு மட்டுமே இருக்கும் நிலையை அரசு கொண்டு வரவேண்டும். இவற்றிற்கெல்லாமான நடவடிக்கைகளை அறநிலையத்துறை மேற்கொள்ள வேண்டும்.

அறநிலையத்துறை தமிழறமும் இறையறமும் திகழப் பாடுபடுவதாக!

தெரிந்த இனத்தோடு தேர்ந்துஎண்ணிச் செய்வார்க்கு

அரும்பொருள் யாதொன்றும் இல். (திருவள்ளுவர், திருக்குறள் 462)

இலக்குவனார் திருவள்ளுவன்

காண்க:

இறைவன்-இறைவியர் தமிழ்ப்பெயர் காக்க அறநிலையத்துறைக்கு வேண்டுகோள்!

தமிழன்பில்லையேல் இறையன்பு கிட்டாது!

Tuesday, December 6, 2022

நல வாழ்வு மையங்கள் தமிழுக்கு நலம் சேர்க்க வேண்டாவா? (தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம் 13)- இலக்குவனார் திருவள்ளுவன்

 அகரமுதல




நல வாழ்வு மையங்கள் தமிழுக்கு நலம் சேர்க்க வேண்டாவா?(தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம் 13)

(தங்குமிடம் அளிப்போரே! தமிழுக்கும் தங்குமிடம் தாருங்கள்! தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம் 12 தொடர்ச்சி)

தமிழ்நாட்டில் மருத்துவ நிலையங்கள் மருத்துவச் சாலைகள்(பொது மருத்துவ மனைகள்), மாவட்ட மருத்துவ மனைகள், வட்ட மருத்துவமனைகள், நகரக நல்வாழ்வு நிலையங்கள், ஊரக நல்வாழ்வு நிலையங்கள், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், சிறப்பு மருத்துவமனைகள், பன்னோக்கு மருத்துவமனை எனச் சிலவகை உள்ளன.  2019 ஆம் ஆண்டுக் கணக்கின் படித் தமிழ்நாட்டில் 377 அரசு மருத்துவமனைகள், 242 மருந்தகங்கள், 2127 ஊரக, நகரகத் தொடக்க நலவாழ்வு நிலையங்கள், 87413 நலவாழ்வுத் துணை மையங்கள், 416 நடமாடும் மருத்துவ அலகுகள்  உள்ளன. இந்தியாவில் மருத்துவமனைகள் எண்ணிக்கையில் தமிழ்நாடு 6ஆவதாக உள்ளது. ஆனால் படுக்கை வசதி அடிப்படையில் முதலிடத்தில் உள்ளது. இவை தவிர ஏறத்தாழ 1200 சித்த மருத்துவமனை முதலான பிற இந்தியமுறை மருத்துவமனைகள் தமிழ்நாட்டில் உள்ளன. “நல வாழ்வு மையங்கள் தமிழுக்கு நலம் சேர்க்க வேண்டாவா?” என நாம் கேட்பது எல்லாவகை மருத்துவமனைகளுக்கும் பொருந்தும். இருப்பினும் இன்றைக்கு உள்ள ஏறத்தாழ 2500 நல வாழ்வு மையங்கள் அடிப்படையில் இக்கட்டுரை அமைகிறது.

நலவாழ்வு மையங்களுக்கு நோயர் சென்றதும் முதலில் பதிவது ஆங்கிலத்தில்தான். பதிவை நோயர் சீட்டில் குறித்துக் கொடுப்பதும் ஆங்கிலத்தில்தான். அடுத்து இரத்த அழுத்தம் பார்த்துக் குறிப்பதும் ஆங்கிலத்தில்தான்(B.P.). அடுத்து இரத்த சருக்கரை ஆய்வு பார்ப்பதற்கான குறிப்பும் பின்னர் தரப்படும் உண்ணாநிலை இரத்தச் சருக்கரை(FBS-Fasting blood sugar), உணவிற்குப் பிந்தைய சருக்கரை Postprandial Blood Sugar-PBS) ஆய்வு முடிவுக் குறிப்பும், ஊனீர்க் கொழுப்பு (Serum cholesterol) )முதலியனவற்றைக் குறிப்பதும்  ஆங்கிலத்தில்தான். மாத்திரைகளைக் குறிப்பிட்டு உணவிற்கு முன், உணவிற்குப் பின், காலை, நண்பகல், மாலை, இரவு உண்ணும் வேளைகளைக் குறிப்பதும் ஆங்கிலத்தில்தான். மருந்து மாத்திரைகளை முன் குறித்ததுபோல்  மீளத் தர வேண்டும் என்பதற்கும் ஆங்கிலத்தில்தான்(Repeat). மருத்துவர் அறை, மருந்தாளர் அறை, ஆய்வகம் முதலிய அறைகளின் பெயர்ப்பலகைகள், சில இடங்களில் தொடக்க நலவாழ்வு மையங்களின்(ஆரம்ப சுகாரார நிலையங்களின்) முகப்புப் பெயர்ப்பலகைகள், பலரின் கையொப்பங்கள், சுருக்கொப்பங்கள் ஆங்கிலத்தில்தான் உள்ளன. அரசிற்கு அனுப்பப்படும் விவர அறிக்கைகளும் ஆங்கிலத்தில்தான். அரசே ஆங்கிலப் படிவ முறையில் கேட்கும் பொழுது இவர்களைக் குறித்து என்ன சொல்வது? ஒன்றிய அரசிற்கு அனுப்ப வேண்டிய புள்ளிவிவரங்களும் உள்ளன. படிவங்களில் தமிழ், ஆங்கிலம் இடம் பெறச்செய்து, உரிய இயக்ககம் தொகுத்து ஆங்கிலத்தில் விவர அறிக்கையை அனுப்பலாம்.

இந்தியாவில் தமிழ்நாட்டில்தான் நலத்திட்டங்கள் மிகுதியாகச் செயற்படுத்தப்படுகின்றன. எனவே, மருத்துவத் துறையிலும் மிகுதியான நலவாழ்வுத்திட்டங்கள் செயற்படுத்தப்படுகின்றன. இன்னுயிர் காப்போம் – நம்மைக் காக்கும் 48 திட்டம், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், சூல்மகளிர்(கருப்பிணித் தாய்மார்கள்) குழந்தைகள் பேணுகை-தடுப்பூசிச் சேவைகள்,  நலவாழ்வுத் தூதர்கள் திட்டம். மக்களைத் தேடி மருத்துவம், காசநோய், தொழுநோய், ஏப்புநோய்(எயிட்சு) முதலான பல நோய்கள், தொற்றுகள் முதலியவற்றைப்பற்றிய விழிப்புணர்வுத் திட்டங்கள், நல வாழ்வு தொடர்பான புகையிலை-போதைப்பொருள்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி போன்ற பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், இலவச மருத்துவம், இலவச மருத்துவ முகாம்கள், மகுடைத்தொற்றுக்கு (கொரானா) எதிரான தடுப்பூசி முகாம்கள் என மிகப் பல திட்டங்களைத் தமிழ்நாடு அரசு நிறைவேற்றுகிறது. தனி மனிதரின் சராசரி வருவாயில் இத்திட்டங்களால் குறையும் செலவினம், செலவின்மை ஆகியவற்றை வருவாயாகக் கணக்கிட்டால் சராசரி வருவாயைக் கூடுதலாக் கருதலாம். அவ்வாறு  மக்களின் நல்வாழ்விற்காக இவை ஆற்றும் பணிகள் – ஆங்காங்கே மருத்துவர்கள் வருகையின்மை, போதிய மருந்துகள் இன்மை, தேவையான ஆய்வுக்கருவிகள் வசதி யின்மை போன்ற குறைகள் இருப்பினும் – பாராட்டிற்குரியனவே. 

பிறப்பு இறப்பு பதிவேடு, புறநோயர் பதிவேடு, உள்நோயர் பதிவேடு, மருந்து இருப்புப்பதிவேடு, பிற இருப்புப் பதிவேடு, வருகைப்பதிவேடு, மகப்பேறு தொடர்பான பதிவேடுகள் எனப் பலப் பதிவேடுகள் நலவாழ்வு மையங்களில் பேணப்படுகின்றன. இங்கெல்லாம் தமிழ்வளர்ச்சித்துறையின் ஆய்வு நடைபெறுகிறதா எனத் தெரியவில்லை. ஆங்கிலத்தில் இவற்றைப் பேணுவதையே தம் கடமைகளாகக் கொண்டு பணியாளர்கள் பணியாற்றுகின்றனர். பொதுவாக நல வாழ்வு மையங்களில் எழுத்தர் பணியிடங்கள் இருப்பதில்லை. எனவே, ஊதியம் கோருவதில் இருந்து அமைச்சுப்பணியாளர்கள் பார்க்க வேண்டிய வேலைகளை மருத்துவப் பணியாளர்களே மேற்கொள்கின்றனர். இவர்களின் பணிகளை எளிமையாக்கும் வண்ணம் அமைச்சுப் பணியிடங்களை உருவாக்கி அரசு ஆவன செய்ய வேண்டும்.

மருத்துவக் கலைச்சொற்கள் அகராதி, மருந்துப் பெயர்கள் அகராதி முதலியன உள்ளன. இவை தாள்களில் இருந்து என்ன பயன்? பயன்பாட்டிற்கு வரவேண்டாவா? இவற்றில் இருந்து நல வாழ்வு மையங்களுக்குத் தேவையான கலைச்சொற்களைத் தொகுத்து வழங்கினால், நலவாழ்வு மைய மருத்துவர்கள், செவிலியர்கள்,  நலவாழ்வுப் பணியாளர்கள், மருந்து தருநர், பிற பணியாளர்கள் தமிழில் எழுத எளிமையாக இருக்கும். தேவையெனில் இவர்களுக்குப் பயிற்சியும் அளிக்கலாம்.

திட்டங்கள் மக்களுக்காகத்தான். மக்கள்மொழியான தமிழில் அவை தெரிவிக்கப்பட்டால்தான் உரிய பயன் மக்களைச் சென்றடையும். ஆனால், பெரும்பாலான திட்டங்களின் பெயர்களைத் தமிழில் குறிப்பதில்லை. அரசே ஒன்றிய அரசின் திட்டங்களின் பெயர்களை ஆயுசுமான் பாரத் பிரதான் மந்திரி சன் ஆரோக்கியா யோசனா ((PMJAY)(தலைமை யமைச்சரின் மக்கள் நலவாழ்வுக் கொள்கை), பிரதான் மந்திரி சுரக்கசா பீமா யோசனா (PMSBY)(தலைமை யமைச்சரின் பாதுகாப்புக் காப்பீட்டுத் திட்டம்), ஆம் ஆத்துமி பீமா யோசனா(AABY)(எளிய மனிதனின் காப்பீட்டுத் திட்டம்) முதலியவாறு இந்தித்தொடரின் ஒலி பெயர்ப்பில்தான் குறிப்பிட்டுப் பயன்படுத்துகின்றதுஅனைத்துத் திட்டங்களின் பெயர்களையும் அரசு தமிழிலேய பயன்படுத்திப் பரப்ப வேண்டும்.

மக்களின் நலவாழ்வுப்பணிகளில் கருத்து செலுத்துவோர் மக்கள்மொழியான தமிழின் நலவாழ்வுப் பணிகளிலும் கருத்து செலுத்த வேண்டுமல்லவா? ஆட்சித்தமிழ்த் திட்டத்தைச் சிறப்பாக நிறைவேற்ற வேண்டுமல்லவா? இல்லையே! உரிய தலைமை அலுவலகங்கள் நல்ல முறையில் வழிகாட்டாமையே காரணம். இவைபோன்ற குறைபாடுகளுக்குத் துறையும் காரணம் என்பதால், பணியாளர்களின்  ஆட்சித் தமிழ்ப் பங்களிப்பில் குறைபாடுகள் இருப்பினும் நம்மால் முழுமையாகக் குற்றம் சுமத்த இயலவில்லை.

எனவே, அரசும் மருத்துவ இயக்குநரகங்களும் தமிழ்வளர்ச்சித்துறையும் சிறப்பாகச் செயற்பட்டு நலவாழ்வு நிலையங்களும் பிற வகை மருத்துவமனைகளும் தமிழுக்கு நலம் சேர்க்கப் பணியாற்ற வேண்டும்.

தமிழின் நலம் குன்றினால் மக்கள் நலமும் குன்றும்!

– உணர்ந்து செயற்படுக!

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்

வாய்நாடி வாய்ப்பச் செயல்.   (திருவள்ளுவர், திருக்குறள் 948)

மக்களுக்கு வரும் நோயை மட்டுமல்ல, தமிழ்த்தாய்க்கு தமிழ்நாட்டு மக்களால் தரப்பட்டுள்ள பயன்பாட்டுப் புறக்கணிப்பு என்னும் நோயையும் உணர்ந்து காரணம் அறிந்து தணித்து நலமடையும் முறையில் செயற்படுக!

– இலக்குவனார் திருவள்ளுவன்

Followers

Blog Archive