Thursday, October 29, 2020

உள்ஒதுக்கீட்டு ஆணைக்குப் பாராட்டு! எழுவர் விடுதலைக்கும் அரசாணை வெளியிடுக! – இலக்குவனார் திருவள்ளுவன்

 அகரமுதல,


View Post

உள்ஒதுக்கீட்டு ஆணைக்குப் பாராட்டு! எழுவர் விடுதலைக்கும் அரசாணை வெளியிடுக!

அரசுப்பள்ளி மாணாக்கர் நலனைக் கருத்தில் கொண்டு துணிந்து அவர்களுக்காக மருத்துவக்கல்வியில் 7.5% உள்ஒதுக்கீடு வழங்கி அரசு ஆணை பிறப்பித்துள்ளமைக்கு மனமாரப்பாராட்டுகிறோம்!

மருத்துவப் படிப்பிற்காக அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு உள்ஒதுக்கீடு வழங்கத் தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது. ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி பி.கலையரசன் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டு அதன் பரிந்துரை அடிப்படையில் சிறப்புச் சட்டம் இயற்றி ஆளுநர் பரிந்துரைக்கு அனுப்பி வைக்கப்பட்டது அதில் சில திருத்தங்கள் கோரி ஆளுநர் அதை திருப்பி அனுப்பினார்.

பின்னர் அந்தத் திருத்தங்களுடன் மருத்துவம், பல் மருத்துவம், இந்திய மருத்துவம், ஓமியோபதி மருத்துவம் முதலான மருத்துவக்கல்வி சேர்க்கைக்கு கடந்த செட்டம்பர் 15ஆம் நாள் சட்ட முன்வடிவு தமிழகச் சட்ட மன்றத்தில்  நிறைவேற்றப்பட்டு,  ஆளுநர் ஒப்புதலுக்கு வரைவு அனுப்பி வைக்கப்பட்டது.

ஆனால், தமிழக ஆளுநர் ஒப்புதல் தராமல் காலங்கடத்திக் கொண்டு உள்ளார். இதனால் மருத்துவச் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெறுவதிலும் காலத்தாழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

அனைத்துக் கட்சியினரும் சட்ட வரைவில் கையொப்பமிட ஆளுநரை வலியுறுத்தினர். ஆனால், அவர் இதனை பொருட்படுத்தவில்லை. தி.மு.க. கூட்டணியினரும் ஆளுநர் மாளிகை முன்னர் கண்டனப் பேரணி நடத்தினர். இச்சட்டவரைவில் ஒப்பமிட ஆளுநருக்கு தி.மு.க.தலைவர் மு.க.தாலின் மடல் அனுப்பியிருந்தார். அதற்கு இதுகுறித்து முடிவெடுப்பதற்காக மேலும் 4  வாரக் காலம் தேவைப்படுவதாகக் காலத்தாழ்ச்சி செய்தார்.

அரசுப்பள்ளி மாணாக்கர் நலன் பாதிப்புக்ஷறுவது குறித்து ஆளுநர் சிறிதும் கவலைப்படவில்லை. மக்களாட்சியைக் காப்பதிலும் ஆர்வம் காட்டவில்லை என்பது புரிந்தது.

மருத்துவப்படிப்புகளில், அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5  உள்ஒதுக்கீடு வழங்குவதை இந்த ஆண்டே நடைமுறைப்படுத்த வேண்டும் எனக்கூறி, மதுரையைச் சேர்ந்த இராமகிருட்டிணன் என்பவர், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

இதனை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு பின்வருமாறு தெரிவித்தனர்: “7.5 சதவீத உள் ஒதுக்கீட்டுச் சட்ட வரைவில், ஆளுநர் மனச்சான்றின்படி முடிவு எடுக்க வேண்டும். அரசியலமைப்புச் சட்டப்படி , நீதிமன்றத்திற்கு ஆளுநர் பதிலளிக்க வேண்டிய தேவையில்லை. பொது(நீட்டு) தேர்வு முடிவுகள் வெளியாகிவிட்டதால், விரைவாக முடிவெடுக்க வேண்டும். சூழல், இன்றியமையாமை, அவசரம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு முடிவெடுக்க வேண்டும்.

பல கட்ட ஆலோசனைகளுக்குப் பிறகே, சட்டமன்றத்தில், இந்தச்சட்ட வரைவு நிறைவேற்றப்பட்டுள்ளது. அவ்வாறு இருக்கையில், கூடுதலாகப் பல கோணங்களில் ஆலோசிக்க ஆளுநருக்கு மேலும் காலவாய்ப்பு தேவையா?

மக்களால் தேர்வு செய்யப்பட்டவர்கள் உருவாக்கிய சட்ட வரைவிற்கு ஒப்புதல் வழங்குவதற்கு கூடுதல் காலம் கேட்பது விந்தையாக உள்ளது. இதுபோன்ற சூழல்கள் எழாது என்பதாலேயே, ஆளுநருக்கு உத்தரவிட முடியாது எனச் சட்டத்தில் உள்ளது.

ஆளுநருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது எனினும், மாணவர்களின் நலனைக் கருத்தில் கொள்ள வேண்டும்.”

இவ்வாறு  நடுநிலையுடன் நன்காய்ந்து நல்ல தீர்ப்பு வழங்கியுள்ளனர்.

எனினும் ஆளுநர் மாணாக்கர் நலன் குறித்தோ மக்களாட்சி மாண்புகுறித்தோ கருதிப்பார்க்க வில்லை.

ஆனால்,மாணாக்கர் நலனில் கருத்து செலுத்தித் தமிழக அரசு நல்ல முடிவு எடுத்துள்ளது.

அரசியலமைப்பு சட்டம் 162 பிரிவின்படி சட்ட வரைவு ஆளுநரிடம் நிலுவையில் உள்ள விவகாரத்தில் அரசாணை பிறப்பிக்கலாம் என்பதன் அடிப்படையிலும், மருத்துவ கலந்தாய்வு தொடங்கியதாலும் அவசர அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.  எனத் தெரிவித்துள்ளது.

 பாசகவின் அடிமை என்று சொல்லப்படுவதற்கு மாற்றாக முதல்வர் எடப்பாடி க.பழனிச்சாமி நல்ல முடிவெடுத்து அருவினை ஆற்றியுள்ளார். எனவே முதல்வருக்கும் தமிழக அரசிற்கும் பாராட்டுகள்.

மரு.இராமதாசு தெரிவித்துள்ளதுபோல் இந்த ஆணைக்குச்சட்டப்பாதுகாப்பு பெறவும் ஆளுநர் முடிவிற்குக் காலவரையறைசெய்யவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதேபோல் இராசீவு காந்தி கொலை வழக்கில் சிக்க வைக்கப்பட்டுப்பன்னெடுங்காலம் சிறையில் துன்புறும் எழுவரையும் விடுதலைசெய்யவும் ஆணை பிறப்பிக்க வேண்டும்.

சட்டமன்றத்தீர்மானம், அமைச்சரவை முடிவு, முதல்வர் அறிக்கை, உரை முதலியவற்றின் அடிப்படையில்  இவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்பதே தமிழக அரசின் நோக்கம்.

“19.02.2014 இல் கூடிய அமைச்சரவைக்கூட்ட முடிவின்படி எழுவரையும் விடுதலை செய்யத் தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. முடிவு மத்திய அரசுக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்படும். மத்திய அரசு 3 நாட்களுக்குள் தனது கருத்தினைத் தெரிவிக்காமல் காலம் தாழ்த்தினால், இந்திய அரசமைப்புச் சட்டம் 432- இல் மாநில அரசுக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில் அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, சுதேந்திரராசா என்கிற சாந்தன்,  சிரீஅரன் என்கிற முருகன், பேரறிவாளன் என்கிற அறிவு, நளினி,  இராபர்ட் பயசு, செயகுமார், இரவிச்சந்திரன்  ஆகியோர் விடுவிக்கப்படுவார்கள்” என்று மாண்புமிகு முதல்வர் செயலலிதா தெரிவித்தற்கு உயிர் கொடுக்க வேண்டும்.

உள்ஒதுக்கீட்டு ஆணைபோல் எழுவர் விடுதலைக்கும் உடன் ஆணை பிறப்பிக்க வேண்டும்.

இதனால் எழுவரும் எழுவர் குடும்பத்தினர் மட்டுமல்லாமல் உலகத் தமிழர்களும் உலகெங்கும் உள்ள மனித நேயர்களும் முதல்வரையும் தமிழக அரசையும் பாராட்டுவர். நிறைந்த உள்ளத்துடன் குவியும் பாராட்டு வெற்றி மாலைகளை முதல்வர் எடப்பாடி க.பழனிச்சாமிக்குச் சூட்டும்.

ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனஇரண்டின்

நீள்வினையால் நீளும் குடி.   (திருவள்ளுவர், திருக்குறள் – 1022)

அன்புடன்இலக்குவனார் திருவள்ளுவன்

இதழுரை – அகரமுதல

Saturday, October 17, 2020

இனப்பகைவன் வேடத்தில் நடிக்க மாட்டார்கள்! – இலக்குவனார் திருவள்ளுவன்

ஊடக வலிமை உணர்ந்தவர்கள்

இனப்பகைவன் வேடத்தில் நடிக்க மாட்டார்கள்!

மக்களுக்கு வழி காட்டுவதாகவும் திசை மாற்றுவதாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதாகவும் ஊடகங்கள் இருக்கின்றன. திரைக்காட்சியிலும் தொலைக்காட்சியிலும் உள்ளவர்கள் தோற்றத்திலும் பண்பிலும் எத்தன்மையராக இருந்தாலும் மக்களைக் கவர்ந்துவிட்டார்கள் என்றால் மக்களின் நாயக நாயகியர் அவர்களே என்பதில் ஐயமில்லை.

குடும்பத்தினரிடையே, உறவினரிடையே, பழகுநரிடையே, காண்பவரிடையே நிறவேற்றுமை பார்ப்பவர்கள், உருவ அழகிற்கேற்ப பழகுபவர்கள் பெரும்பான்மையர் உள்ளனர். ‘உருவு கண்டு எள்ளாமை வேண்டும்’ என்னும் திருக்குறளைப் படித்திருந்தாலும் அதைப் பின்பற்றமாட்டார்கள். ஆனால், இவர்களே, திரையில் குள்ளனாக இருந்தாலும் கறுப்பனாக இருந்தாலும் கோரனாக இருந்தாலும் அத்தகையவர்களின் திறமையினால் கவரப்பட்டார்கள் என்றால் அவர்களைத் தலையில் வைத்துக் கொண்டாடுவர். அவர்கள் பெயர்களில் நேயர் மன்றங்கள் வைத்துத் தம் உயிரையும் கொடுக்க முன்வருவர்.தீயன், வஞ்சகன், கெட்டவன்,இரண்டகன் என்பனபோன்று எதிர்ப்பண்பு வேடங்களில் தாம் விரும்பும் நடிக நடிகையர் நடித்தாலும் அவர்களை வரவேற்பர். அத்துடன் நில்லாது தீயன் முதலான பெயர்களையும் தங்களுக்குச் சூட்டிக் கொள்வர். அவர்கள் திரையில் உதிர்ப்பன உளறலளாக இருந்தாலும் தங்கள் வழிகாட்டுரைகளாக ஏற்றுக் கொள்வர்.

திரைஉலகைச்சேர்ந்தவர்கள் மக்கள் சார்பாளர்களானதும் அமைச்சர், முதலமைச்சர் பொறுப்பேற்பதும் ஊடக வலிமையால்தான். ஊடகலிமையை உணர்ந்ததால்தான் திரை உலகைச் சேர்ந்தவர்கள் அரசியலில் ஈடுபடுகின்றனர். தங்களின் திரைச்செல்வாக்கு அரசியலிலும் செல்வாக்கை ஏற்படுத்தும என நம்புகின்றனர். இம் முயற்சியில் சிலர் வெல்லலாம். சிலர் கவிழலாம். எனினும்  மக்களிடையே உள்ள திரைமுக மயக்கம் தங்களுக்குக் கை கொடுக்கும் என எதிர்பார்த்தே செயல்படுகின்றனர்.

ஆங்கிலத்தில் கடந்த நூற்றாண்டு தொடக்கத்தில் இருந்தே வரலாற்றுப்படங்கள் நூற்றுக்கணக்கில் வந்துள்ளன. தமிழில் சிவகங்கைச் சீமை, வீரபாண்டிய கட்டபொம்ன்,கருணன் முதலான சில படங்கள் வந்துள்ளன. இப்போது இன்றைய புகழ்வாணர்களை வரும்தலைமுறையினரும் அறிந்திருக்க வேண்டும் என்பதற்காக அவர்களைப்பற்றிய வரலாற்றுப் படங்களையும் எடுத்து வருகின்றனர். இது பாராட்டப்பட வேண்டிய ஒன்றாகும். மறைந்தபிறகு பாராட்டுவதை விட இருக்கும்பொழுதே பாராட்டுவது அவர்களின் உழைப்பிற்கான அறிந்தேற்பாகும்.

வாழும் நிலையில் உள்ள தலைவர்கள், கலைஞர்கள், ஆன்றோர்கள், விளையாட்டு வீரர்கள் என வரலாற்றுப்படங்கள் எடுக்கும் போக்கு இந்திய மொழிகளிலும் தமிழிலும் இப்பொழுதுதான் தொடங்கியுள்ளது. அந்தவகையில் இலங்கை மட்டைப்பந்தாட்ட வீரரான முத்தையா முரளிதரன் வரலாற்றுப் படத்தைத் தமிழில் இப்பொழுது எடுக்க உள்ளனர்.

மட்டைப்பந்தாட்டத் திறமைப்போட்டிகளில்(Test Match) 800 இலக்குகளை வீழ்த்தி அருவினை புரிந்தார் என்பதால் 800 என்னும் தலைப்பில் இவரைப்பற்றிய திரைப்படம் எடுக்கின்றனர். தமிழில் எடுக்கப்படும் படத்தை இந்தி, வங்காளம், சிங்காளம் முதலான பல மொழிகளிலும் மொழி மாற்றம் செய்து வெளியிட உள்ளனராம்.

இத்திரைப்படத்தை எடுப்பவர்கள் அல்லது இயக்குநர் முதலான தொழில் நுட்பக் கலைஞர்கள், பிற கலைஞர்கள் யாரையும் மக்கள் எதிர்க்கவில்லை. ஆனால் மக்கள் செல்வன் எனப் போற்றப்படும் நடிகர் விசய்சேதுபதி முரளீதரன் வேடத்தில் நடிப்பதற்குத் தமிழின உணர்வாளர்கள் உலகெங்கும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். விசய்சேதுபதி மீது மக்கள்கொண்டிருக்கும் தமிழ் உணர்வாளர் என்ற நம்பிக்கையே இத்தகைய எதிர்ப்புகளுக்குக் காரணம் என்பதை விசய்சேதுபதி உணர்ந்து இப்படத்தில் நடிப்பதிலிருந்து விலக வேண்டும்.

பொதுவாக ஈழத்தமிழர்கள் சொந்தநாடு என்பதால் உரிமை வேட்கையுடன் வாழ்பவர்கள். மலையகத் தமிழர்கள் வந்த நாடு என்பதால் உரிமை உணர்வு மழுங்கி வாழ்பவர்கள். முரளி மலையக் தமிழர். மலையகத்தமிழர்களிலும் உரிமைக்காகப் போராடிய, போராடும்  எண்ணற்றோர் இருக்கத்தான் செய்கின்றனர். முரளி, எப்பொழுதுமே பொதுவெளிகளில் சிங்களத்தில் பேசுநராக உள்ளார்.  “நான் முதலில் இலங்கையன்… அதன் பின்னரே தமிழன்” என்று சொல்லித் தமிழன் என்று கூறுவதைப் பின்னுக்குத் தள்ளுநராக உள்ளார். ஈழப்போராட்டங்ளைக் கொச்சைப்படுத்திப் பேசி வந்துள்ளார். 1,86,000 ஈழத்தமிழர்கள் கூட்டு இனப்படுகொலைக்கு ஆளான நாளை-அந்த ஆண்டை- மகிழ்ச்சியான நாளாகவும் மகிழ்ச்சியான ஆண்டாகவும் கூறியவர். அதற்கு விளக்கம் கூறுவதாக எண்ணிக் கொண்டு அதன்பின் போரில்லா வாழ்க்கை உள்ளதால் அவ்வாறு கூறியதாகக் கூறியுள்ளார்.  வாழும் மக்களிடையே அமைதியை உண்டாக்க வேண்டுமே தவிர அனைவரையும் கொன்று புதைத்துவி்ட்டு மயானஅமைதியைப் பாராட்டிக் கொண்டிருக்கக் கூடாது. பேரளவிலான கொத்து கொத்தான இனப் படுகொலைகளுக்குப் பின்னரும்  ஆள் கடத்தல், கட்டாயக்கருத்தடை, தமிழர் நிலங்களைச் சிங்கள நிலங்களாக ஆக்கல், தமிழர்களைச் சுற்றியும் அவர்கள் இடையேயும் சிங்களக் குடியேற்றங்களை உருவாக்கி வருவதல் முதலான பல்வேறு நடவடிக்கைள் மூலம் தமிழர்களை நாளும் அழித்து வருகிறது சிங்கள அரசு. இப்படி இருக்கையில் நாளும்  நடைபெறும் இனஅழிப்புகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் கொலைத்தலைவன் இராசபக்குசேவுடன் கூடிக்குலவுபவனைத் தமிழனாக எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? எனவேதான் அத்தகையவன் படத்தைத் தமிழ்நாட்டில் எடுக்கவும் அதில் நடிகர் விசய்சேதுபதி நடிக்கவும் உலகெங்கிலும் தமிழ் உணர்வாளர்களும்தமிழ் அமைப்புகளும் திரைக்கலைஞர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

‘அசுரன்’ படித்தில் நடித்த நடிகர் அருணாச்சலம் தான் ஈழத்தமிழன்னைக்குப் பிறந்தவர் எனக் கூறித் தன்னிடம் முதலில் முரளி வேடத்தில் நடிக்க அழைத்ததற்கு மறுத்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார். அவருக்குப் பாராட்டுகள்! விசய்சேதுபதிக்கு இப்படத்தில் ஒப்பந்தாகும் பொழுதே பின் விளைவுகள் என்னவாக இருக்கும் எதிர்ப்பலைகள் எழும் என்பனவெல்லாம் தெரிந்திருக்கும். இருப்பினும் அவர் துணிந்து நடிக்க ஒத்துக்கொண்டுள்ளார்.

திரைப்படங்கள் மூலமும் தவறான பரப்புரைகள் மூலமும் மூளைச்சலவை செய்து ஈழத்தமிழர்களின் உணர்வுகளை மழுங்க அடித்துக் கொண்டுள்ளது சிங்களஅரசு. அவற்றின் ஒரு பகுதிதான் இந்தத் திரைப்படமும்.

இந்தப் படத்தைப் பார்ப்பவர்கள் தங்களின் நாயகன் கூறும் உரைகளையும் ஏற்பார்கள் அல்லவா? அப்படியானால் அந்த வேடத்திற்குரிய மூல நாயகனின் தமிழ்ப்பகை உரைகளையும் ஏற்பார்கள் அல்லவா? எனவேதான், தமிழனாகப் பிறந்தும் அயலவனாக நடந்துகொள்ளும் இரண்டகனின் வேடத்தில் நடிக்க வேண்டா என மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். கோட்சேவிற்கு முதன்மை அளிக்கும் படங்களுக்கும் நிகழ்ச்சிகளுக்கும் எதிர்பபு தெரிவிப்பதுபோல்தான் இதுவும். நடிப்பது அவர் உரிமை என்றும் பிறரின் தவறான செயல்களை ஒப்பிட்டும் விசய் சேதுபதி இப்படத்தில் நடிப்பதற்கு ஆதரவு தருவோரும் உள்ளனர். அவர்கள் தமிழின உணர்வாளர்கள் அல்லர். செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் இராசு, “இலங்கை மட்டைப்பந்தாட்ட வீரர் முத்தையா முரளிதரன் தொடர்பான திரைப்படத்தில் நடிப்பது நடிகர் விசய் சேதுபதியின் தனிப்பட்ட உரிமை. ஆனால், மக்களின் உணர்வுகளையும் அவர் மதிக்க வேண்டும்.” என்றார். இதுவே, சரியான நிலைப்பாடு. இங்கே அவரின் உரிமைபற்றிப் பேச்சு எழவில்லை. அவர் உருவாக்கிய பிம்பத்தைச் சிதைக்க வேண்டா என்பதற்காக மக்களின் எதிர்ப்பு உணர்வைப் புரிந்து கொள்ள வேண்டும். உடனடியாக இத்திரைப்படத்தில் விளையாட்டரங்கங்களிலும் பிற இடங்களிலும் சிங்களக் கொடியை உயர்த்திப் பிடிக்கும் சிங்கள அரசை வாழ்த்தும் முரளி வேடத்தில் நடிப்பதில் இருந்து விலக வேண்டும்.

“என்ன இப்படிச் செய்து விட்டோமே என்று பின்னர் வருந்தும் படியான செயல்களைச் செய்யாது விட வேண்டும்” என்பதற்காகத் திருவள்ளுவர். “எற்றென்று இரங்குவ செய்யற்க”(குறளடி655) என்கிறார்.

புகழையும் அறத்தையும் தாராத தூய்மை அற்ற செயல்களை எக்காலத்திலும் ஒருவன் செய்யாமல் விட்டொழிக்க வேண்டும் என்பதைப் பின்வரும் திருக்குறளில்(652) திருவள்ளுவர் வலியுறுத்துவதைப் பின்பற்ற வேண்டும் நடிகர் விசய் சேதுபதியும் 800 திரைப்படக் குழுவினரும்..

என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு

நன்றி பயவா வினை.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

இதழுரை – அகரமுதல

 

Sunday, August 2, 2020

பார்வைத்திறன் பறிபோன பின்னும் படைப்புப் பணியைக் கைவிடாத அறிஞர்..! – இலக்குவனார் திருவள்ளுவன்


பார்வைத்திறன் பறிபோன பின்னும்

படைப்புப் பணியைக் கைவிடாத அறிஞர் ஞானி!

 சூழலுக்கேற்பத் தத்தம் திறமைகளை வளர்த்துக் கொள்வோர் பலர் உள்ளனர். சூழல் எதிராக அமைந்தாலும் எதிர் நீச்சல் போட்டு அருஞ்செயல் ஆற்றுவோர் சிலரே. அத்தகையோருள் ஒருவரே அறிஞர் கோவை ஞானி.

இன்றைய கோவையின் அடையாளமாக விளங்கிய அவர் தன் அடையாளத்தை விட்டுவிட்டு மறைந்து விட்டார்.

பெற்றோர் கிருட்டிணசாமி, மாரியம்மாள் சூட்டிய பழனிச்சாமி என்னும் இயற்பெயரைத் துறந்துவிட்டு ஞானி என்னும் புனைபெயரை ஏற்றவர் ஞானத்தின் உறைவிடமாக விளங்கினார்.

தமிழ் இலக்கியம் பயின்ற அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நூலகத்தைப் பெரும் நிதியமாகப் போற்றி மகிழ்ந்தார். எனவே, படிக்கும் பொழுது வகுப்பறையில் இருந்ததை விட நூலகத்தில் மிகுதியாக நேரம் செலவிட்டார். வரலாறு, மெய்யியல், திறனாய்வு தொடர்பான நூல்களைத் தேடித் தேடிப் படித்ததால், இவர் அறியாமலேயே திறனாய்வு இவர் வயமானது. எனவேதான், படிப்பிற்குப் பின்னர் இருபது தமிழிலக்கியத் திறனாய்வு நூல்களை எழுதினார். மார்சியத் திறனாய்வு குறித்து மூன்று நூல்களையும் சமயத்திறனாய்வு குறித்து இரண்டு நூல்களையும் எழுதினார்.

‘தொலைவிலிருந்து’ என்னும் கவிதை நூலை வெளியிட்டவர்(1989) அதற்கு முன்னரே வானம்பாடி கவிதை இயக்கத்துடன் ஏற்பட்ட தொடர்பின் தொடர்ச்சியால் ‘கல்லிகை’ என்னும் குறுங்காவியத்தை எழுதி வெளியிட்டார்(1995). அதன் பின்னர் ‘கல்லும் முள்ளும் கவிதைகளும்’(2012) என்று கவிதைகளை எழுதி வெளியிட்டார். எனினும் “கவிதை எழுதுவது உணர்வுக் கொந்தளிப்பை உள்வாங்கிக்   கொள்வதாக அமைகிறது. இந்த உணர்வுக் கொந்தளிப்பு, உடலைப் பெரிதும் வருத்தும். இந்தக் காரணத்தால் கவிதை எழுதுவதைக் கைவிட்டேன்” எனக் கவிதை எழுதுவதில் இருந்து விடை பெற்றார்.

சிற்றிதழ் இயக்கத்துடனும் தொடர்பு கொண்டார். இதன் காரணமாக இவர் ‘புதிய தலைமுறை’,  ‘வானம்பாடி’ ‘மார்சிய ஆய்விதழ்’, ‘பரிமாணம்’, ‘நிகழ்’ இதழ்களில் பங்கேற்கவும் இணைந்தும் தனித்தும் நடத்தவும் செய்தார். பின்  ‘தமிழ் நேயம்’ இதழின் ஆசிரியராகவும் வெளியீட்டாளராகவும் இருந்து 67 இதழ்களை வெளியிட்டார். இதன் பயனாக இவரது தமிழிலக்கியப்பார்வை சிற்றிதழ் வாசகர்களுக்கும் சென்று சேர்ந்தது.

எசு.என்.நாகராசன், எசு.வி. இராசதுரை, புலவர் ஆதி முதலியவர்களுடன் இணைந்து மார்சியம் பயின்று அதில் ஈடுபாடுகாட்டினார். அதே நேரம், சி.சு.செல்லப்பா, க.நா.சு., சிட்டி, இலா.சா.இரா. முதலிய மூத்த படைப்பாளர்களுடனும்  அசோகமித்திரன், இந்திரா பார்த்தசாரதி, சுந்தர இராமசாமி, வெங்கட்டு சாமிநாதன், பிரமிள், பொன்னீலன், செயமோகன் முதலிய அடுத்த தலைமுறை எழுத்தாளர்களுடனும் உறவும் நட்பும் பேணினார். தமிழ் இலக்கிய ஈடுபாட்டால் மரபார்ந்த தமிழறிஞர்களைப் போற்றியவர், சிற்றிதழ் இயக்கத்தால் புதுத்தடப் படைப்பாளிகளையும் மதித்தார். வெவ்வேறு மாறுபட்ட கருத்தாண்மை உடைய படைப்பாளிகளுடன் தோழமை கொண்டாலும் அவர்களுடன் இணைந்தும் முரண்பட்டும் தனித்துவத்தைப் பேணினார். இதனால் அவர் பெற்ற பன்முகப்பார்வை அவரது இலக்கியங்கள் மூலம் படிப்பாளர்களுக்கும் கிடைத்தது.

உடன்பட்டும் முரண்பட்டும் நின்றமையால்தான் மார்சியம் பேசினாலும் தமிழ்த்தேசியத்தை அடிப்படை உணர்வாகக்கொண்டார். மார்சியத் திறனாய்வுகளையும் சிறப்பாகச் செய்தார். பெரியாரியத்துடனும் இணங்கிப் போனார். அஃதாவது வெவ்வேறு தளங்களில் செயல்பட்டுத் தனக்கு வேண்டியதில் உறுதியாக நின்றார்.

மார்சியம் பேசிய தமிழ் அறவாணராக அறிஞர் கோவை ஞானி விளங்கினார். எனவே, இரசிய மார்சியம், சீன மார்சியம் என்பது போல தமிழ் மார்சியம் என்பதை விளக்கினார்.

இவரது மாறுபட்ட பார்வையால் பலவற்றிற்குப் புது விளக்கங்கள் அளித்தார். சான்றாகக் காரல் மார்சு “மதம், மக்களுக்கு அபின்” என்றார்.  “அபின் என்ற சொல்லுக்குப் போதை தருவது என்ற பொருளுடன் துயரங்களுக்கு மருந்தாக அமைவது என்றும் கொள்ளலாம். இம்முழக்கத்தில், சமயம் என்பது ஓர் அழிவு சக்தி என்று குறிப்பிடவில்லை. மன்பதையில் ஒடுக்கப்படும் சூழலுக்கு எதிராக மக்களுக்கு ஒரு பொறைமை(சகிப்புத்தன்மை) தேவைப்படுகிறது. இதற்கு மதம் பயன்படுகிறது. ஒடுக்கப்படும் சூழல் நிலவும் காலம் முழுவதும் சமயம் உயிரோடு இருக்கும். சூழலை மாற்றினால் ஒழிய மதம் அழியாது.” என்று விளக்கினார்.

மதம் குறித்த மாறுபட்ட கருத்தின் காரணமாகவே  ‘கடவுள் ஏன் இன்னும் சாகவில்லை’ என்று நூல் எழுதினார். “கடவுள் என்பது ஓர் அழகிய கருத்தாக்கம்; சற்று போதை தரும் கருத்தாக்கம்”. என்றார். மதம் இருக்கும் வரை ஒடுக்கப்படுவோர்கள் இருப்பார்கள் என்பவர்கள் மத்தியில் “ஒடுக்கப்படும் சூழல் நிலவும் காலம் முழுவதும் சமயம் உயிரோடு இருக்கும். சூழலை மாற்றினால் ஒழிய மதம் அழியாது.” என்றார்.

பள்ளி ஆசிரியராகப் பணியாற்றி மாணாக்கர்களை உருவாக்கி வந்தவர், நீரிழிவால் பார்வை பறிபோனதால்(1988)  பணியிலிருந்து ஓய்வு பெற்றுக் கொண்டார். ஆனால், தம் பணியிலிருந்து ஓய்வு பெறவில்லை. பிறரைப்போல் மூலையில் முடங்கித் தன்நிலை குறித்து நொந்துபோகவில்லை. முன்னிலும் மிகுதியாகத் திறம்படச் செயல்பட்டார். அதனால்தான் அதற்குப் பின்னர் நாற்பதிற்கு மேற்பட்ட நூல்களை எழுதியும் தொகுத்தும் வெளியிட்டார்.

மடுத்தவா யெல்லாம் பகடன்னான் உற்ற

இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து.  (திருக்குறள் 624)

என்னும் திருவள்ளுவரின் பொய்யா மொழிக்கு எடுத்துக்காட்டாக விளங்கினார்.

 தடைப்படும் இடங்களில் எல்லாம், தளர்ந்து விடாமல் வண்டியை இழுத்துச் செல்லும் எருதைப் போன்ற ஊக்கம் உடையவனுக்கு நேரிடும் துன்பங்களே இடர்ப்பாடு அடையும் என இக்குறளில்  திருவள்ளுவர் கூறுகிறார். அதைப்போல் பார்வைக் குறைபாட்டால் ஏற்பட்ட தடைகளையெயல்லாம் உடைத்தெறிந்து முன்னேறினார்.

“சங்கக்காலக் குமுகத்தில் ஏற்றத்தாழ்வில்லை. ஆண்டான் அடிமை என்று இல்லை. இயற்கையில் கிடைத்தவற்றைப் பகிர்ந்து உண்டனர். வேட்டையாடிக் கிடைத்தவற்றையும் பகிர்ந்துகொண்டனர். இவற்றில் முதல் பங்கு கலைஞர்களுக்கும் பெண்கள், குழந்தைகளுக்கும் உரியது. இந்தச் சமூகத்தின் பங்குகள் அழியவில்லை. தமிழிலக்கிய வரலாறு முழுவதும் இப்பண்புகள் தொடர்ந்தன.” எனச் சங்கக் காலத்தைப் போற்றுகிறார். இக்கால இலக்கியங்களைச் சங்க இலக்கியப் பார்வையில் ஆராய்ந்தார். எத்தனைக் காலங்கள் மாறினாலும் சங்க இலக்கியச் சிறப்புகள் எக்காலமும் நிலைத்து நிற்கும் என்பதை  உணர்த்தினார்.

மார்சியத்தையும் பெரியாரியத்தையும் போற்றியவர் சமய இலக்கியங்களையும் போற்றினார். “தமிழிலக்கியத்தில் ஒரு பாதி அளவு இருக்கும் சமய இலக்கியத்தை நான் குறை சொல்ல மாட்டேன்.” என்றார். “ஆழ்ந்து பார்த்தால் கடவுள் என்ற பிம்பத்தினுள் இனக்குழுச் சமூகத்தின் மேன்மையான பண்புகளின் கொள்கலமாகக் கடவுள் இருப்பதைக் காண முடியும். இந்தக் கடவுளுக்கு அழிவில்லை.” என்று தெளிவுபடுத்தினார்.

இந்திய அமைப்பு மொழிவழித் தேசிய இனங்களின் கூட்டமைப்பாக இருக்க வேண்டும்” என்ற தமிழ்ப்போராளி பேரா.சி.இலக்குவனாரின் கோட்பாடும் சங்க இலக்கியங்களை நாம் ஒவ்வொருவரும் கற்கவும் போற்றவும் வேண்டும் என்று அவர் வலியுறுத்தியதும் இவர் மனத்தில் ஆழப்பதிந்து விட்டதாம். எனவேதான், எந்தத் தளத்தில் இருந்தாலும் சங்க இலக்கியத்தைப் போற்றத் தவறவில்லை என்றும் பல்வேறு கருத்தியல் பேசுவோர்களிடம் நட்பு கொண்டாலும் தமிழ்த்தேசியத்தை மூச்சாகக் கொண்டதாகவும் தெரிவித்தார். அதனால், ‘தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார்’ என நூல் எழுதித் தருமாறு வேண்டினார்.அதனையும தமிழ்நேயம் 49 ஆவது இதழாக 2012 பிப்பிரவரியில் வெளியிட்டார். ‘நானும் என் தமிழும்’ என்னும் பொதுத்தலைப்பில் என் தமிழ்ப்பணிகளைப்பற்றிய நூல் ஒன்றையும் எழுதித்தருமாறு கேட்டார். பிறகு தருவதாகக் கூறிக் கூச்சத்தினால் எழுதித் தரவில்லை.

இலங்கை, ஈழத் தமிழ் இலக்கியங்களைப் பரப்புதல், ஆய்வியம், ஒடுக்கியம்(தலித்தியம்), பெண்ணியம், பெரியாரியம், மார்சியம், பண்பாட்டியம், தமிழ்த்தேசியம், தமிழ் ஈழத் தேசியம். இதழியம் எனப் பலவற்றிலும் நுண்ணிய பார்வை கொண்டு அவை சார்ந்த தம் பணிகளை அமைத்துக் கொண்டார்.

இத்தகு சிறப்புமிக்கப் பன்முகத் திறனாய்வாளர் அறிஞர் கோவை ஞானி புகழ் ஓங்குக! அவரன்பர்கள் அவர் வழியில் தமிழ்த்தேசியத்தை முன்னிறுத்துக!  மொழிவழித் தேசிய இனங்களின் கூட்டமைப்பிற்குப் பாடுபடுக!

– இலக்குவனார் திருவள்ளுவன்

நமது காவலன் ஆகத்து 1.15. 2020

Friday, June 12, 2020

சிறப்புக் கட்டுரை: பாராட்டுக்குரிய ஊர்ப்பெயர் ஆணையைத் திரும்பப் பெறுக! – இலக்குவனார் திருவள்ளுவன்


சிறப்புக் கட்டுரைபாராட்டுக்குரிய ஊர்ப்பெயர் ஆணையைத் திரும்பப் பெறுக!

தமிழ்நலம் தொடர்பான அரசாணை வெளியிடுவதாகச் செய்தி வந்தது என்றால் ஆராயாமல் ஆரவாரத்துடன் தமிழ் அன்பர்கள் வரவேற்பர். தமிழில் படித்தோருக்கான வேலைவாய்ப்பு முன்னுரிமை ஆணை குறித்த உண்மை நிலை புரியாமல் அதைத் தலையில் வைத்துக் கொண்டாடினர். இப்பொழுது ஊர்ப்பெயர்களை ஆங்கிலத்தில் ஒலிக்கவேண்டிய முறை குறித்த அரசாணை குறித்த செய்தி வந்ததும் தலைகால் புரியாமல் குதித்து வரவேற்கின்றனர்.
“தமிழ் நாட்டிலுள்ள ஊர்ப்பெயர்களைத் தமிழ் உச்சரிப்பைப்போன்றே ஆங்கிலத்திலும் அமைத்தல் என்ற அறிவிப்பினைச் செயல்படுத்தல்பற்றிய அறிவிக்கை என அரசாணை (நிலை) எண் 36 தமிழ் வளர்ச்சி செய்தி(த.வ.1.1.)த்துறை 27, பிப்பிரவரி / மாசி 15, 2051 இல் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. சட்டமன்றத்தில் தமிழ்வளர்ச்சித்துறைக்கான நல்கைக்கோரிக்கையின் பொழுது துறை யமைச்சர் அறிவித்ததற்கிணங்க இவ்வாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.” இவ்வாணையில் 1018 ஊர்களுக்கான ஆங்கில எழுத்துக்கூட்டலைத் தெரிவித்துள்ளனர். இதனை முதற்கட்டம் எனக் கூறியுள்ளதால் தொடர்ந்து அவ்வப்பொழுது ஆணைகள் வரும் என எதிர் பார்க்கலாம்.
1994 இல் வெளிவந்த கையேடு
இவ்வாறு ஊர்ப்பெயர்களுக்கான ஆங்கில ஒலிப்பெழுத்திற்கான ஆணை பிறப்பிப்பது இது முதல் முறையல்ல. அவ்வப்பொழுது நடைபெறுவதுதான். ‘தமிழ் ஆட்சிமொழித் திட்டம் – வரலாறும் செயற்பாடும்(1994)’ என்னும் கையேட்டிலேயே இது பின்வருமாறு குறிக்கப்பெற்றுள்ளது.

நிலவியல் பெயர்களுக்கு எழுத்துக்கூட்டல் வழங்கல்:
அந்நியர் ஆட்சி ஆதிக்கத்துடன் அந்நிய மொழிகளின் ஆதிக்கமும் தொடர்ந்து பரவி, வட்டார மொழிகளைச் சிதைத்ததன் காரணமாக நிலவியல் பெயர்கள் (Geographical Names)பல உருக்குலைந்தன. அவற்றைத் திருத்தியமைக்கும் வகையில் சரியான தமிழ் எழுத்துக் கூட்டலை வழங்கும் பணி தமிழ்வளர்ச்சித்துறையைச் சார்ந்து அமைந்துள்ளது. அஞ்சல் நிலையங்களுக்கும் இருப்பூர்தி நிலையங்களுக்குமான பெயர்களுக்குமான எழுத்துக் கூட்டல்களும் இவ்வியக்ககத்தால் அளிக்கப்பட்டு வருகின்றன.” அவ்வாறு திருத்தமான ஒலி பெயர்ப்பு வழங்கப்பெற்ற எட்டு ஊர்களின் பெயர்களும் எடுத்துக்காட்டாகக் குறிக்கப்பெற்றுள்ளன. அவை, திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், பரங்கிப்பேட்டை, செங்கற்பட்டு, மாமல்லபுரம், திருநின்றவூர், கோடிக்கரை, கொள்ளிடம் ஆகியனவாகும். ஆனால் இவற்றில் ஆகாரத்திற்கு ஆங்கிலத்தில் ஓர் ஏ(A) தான் குறிக்கப்பெற்றுள்ளன. இப்போது ஆகார நெடிலைக்குறிக்க இரண்டு ஏ (AA) பயன்படுத்தப்பெற்றுள்ளன.

பாராட்டுக்குரியது எனினும் திரும்பப் பெற வேண்டும்!
எனினும் இப்போதைய ஆணை பாராட்டிற்குரியது. ஏனெனில், திரளான ஊர்ப்பெயர்த் தொகுதியை, 1018 சொற்களுக்கான ஒலி பெயர்ப்பை, ஒருசேர அளித்து மக்களிடையே எழுச்சியை ஏற்படுத்தியுள்ளனர். ஒவ்வொருவரும் தத்தம் ஊர்ப்பெயர் பட்டியலில் உள்ளதா எனத் தேட முயல்வதும், இல்லாவிடில் எப்பொழுது அதற்கான ஆணை வரும் என்று எதிர்பார்ப்பதுமான உணர்ச்சியை இவ்வாணை உண்டாக்கியுள்ளது.
பாராட்டிற்குரிய ஆணையைத் திரும்பப்பெறச்சொல்வது ஏன் என்கிறீர்களா? இதில் சீர்மை இல்லை. இதுவே இவ்வாணையின் குளறுபடியைத் தெளிவாக்குகிறது.
ஆகாரத்திற்கு இரண்டு ஏ (AA) என வரையறுத்துப் பயன்படுத்தி இருந்தாலும் பல ஊர்ப்பெயர்களில் ஆகாரத்திற்கு ஓர் (A) மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. சான்றுக்குப் பின்வருவனவற்றைக் காண்போம். ஆணையில் உள்ளதை உள்ளவாறு தர வேண்டும் என்பதற்காகக் கிரந்த எழுத்து இடம் பெற்றுள்ளது. அரசு கிரந்த எழுத்து நீக்கிய ஊர்ப்பெயரை ஏற்று அறிவிக்க வேண்டும். எண்கள் அரசாணையில் குறிக்கப்பெற்றுள்ள ஊர் வரிசை எண்கள்.
36 திருவான்மியூர் – THIRUVANMIYOOR
102 வத்தராயன் தெத்து – VATTHARAYAN TETTHU
103 கிளாவடி நத்தம் – KILAVADINATTHAM
105 சீயப்பாடி – SEEYAPPADI
923 இராணிப்பேட்டை – RANIPETTAI
925 ஆற்காடு – AARKADU
934 ஜி.பாப்பாங்குளம் குரூப் – KA. PAPPANKULAM
971 மு.வாடிப்பட்டி – MU. VADIPATTI
207 அதியமான் கோட்டை – ATHIYAMAN KOTTAI
28 சிந்தாதறிபேட்டை – CHINTHADHARIPETTAI
முதலில் குறிப்பிட்டுள்ள கையேட்டில் கல்லார் – கல்லாறு, அடையார் – அடையாறு எனச் செம்மையாக மாற்றியிருப்பதாகக் குறிப்பிட்டிருப்பர். அவைபோல் இப்பொழுதும் செய்திருக்கலாம். சான்றாகச் சிந்தாதறிபேட்டை என்பதன் சரியான பெயர் சின்னதறிப்பேட்டை. முகப்பேறு என்பதன் சரியான பெயர் முகப்பேரி. இவ்வாறு தமிழிலும் பெயர்ச்செம்மைக்கு வழி வகுத்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.
ஓகார நெடிலுக்கும் ஓகாரக் குறிலுக்கும் ஒரே ஓர்  (O)மட்டும் பயன்படுத்தப்பெற்றுள்ளதும் மற்றொரு குளறுபடியாகும். எனவே, அதியமான் கோட்டை என்பது அதியமன்கொட்டை என்றாகிறது. இரண்டு ஓ (OO) ஊகாரத்தைக் குறிக்கப் பயன்படுத்துவதால் குழப்பம் வரும் என்றால் தக்க அறிஞர்களைக் கலந்து பேசியிருக்க வேண்டும்.
ஒரே ஊர்ப்பெயரிலேயே ஓர் ஆகாரத்திற்கு ஓர் (A) யும் மற்றோர் ஆகாரத்திற்கு இரண்டு (AA) யும் பயன்படுத்தும் குழப்பங்களும் உள்ளன. சான்று காண்க:
359 தாராபுரம் வடக்கு – THARAAPURAM VADAKKU (ஆங்கில ஒலிப்பில் ‘தா’ குறில், ‘ரா’ நெடில்)
361 தாராபுரம் தெற்கு – THARAAPURAM THERKU (ஆங்கில ஒலிப்பில் ‘தா’ குறில், ‘ரா’ நெடில்)
376 மாம்பாடி – MAAMBADI (ஆங்கில ஒலிப்பில் ‘மா’ நெடில் ‘பா’ குறில்,)
368 சேனாபதி பாளையம் – SENAPATHI PAALAYAM (ஆங்கில ஒலிப்பில் ‘னா’ குறில், ‘பா’ நெடில்)
இப்பொழுது இவ்வூர் SENATHIPATHYPALAYAM என ஆங்கிலத்தில் திருத்தமாகக் குறிக்கப் பெறுகிறது. அதையே தமிழிலும் பின்பற்றி அதற்கேற்ப எழுத்துக் கூட்டலை அறிவித்து இருக்கலாம்.
மடிப்பாக்கம் என்பதற்கு மடிப்பாக்கம் என இரண்டு ஏ (AA) பயன்படுத்தி MADIPPAAKKAM என மாவட்ட ஆட்சியர் பரிந்துரைத்துள்ளார். ஆனால், மடிப்பக்கம் என்பதுபோல் ஓர் ஏ(A) மட்டும்குறித்து – MADIPPAKKAM (வ.எண். 46) என ஆணை வழங்கியுள்ளனர்.
இடையிலே ஒற்றெழுத்து சேர்க்கப்படாமல் சில ஊர்ப்பெயர்கள் உள்ளன. அவற்றைத் திருத்தமாகக் குறிக்கவும் ஆணை பிறப்பித்திருக்க வேண்டும். சான்றுக்குச் சில வருமாறு:
389 கீழ்பிடகை அப்பன்கோயில்
395 கீழ தூத்துக்குழி
396 மேல தூத்துக்குழி
398 கீழ செக்காரக்குடி
இன மெய்யெழுத்துடன் உயிர்மெய்வரும்போது உரிய எழுத்தை இரட்டிப்பாகக் குறித்துள்ளனர். சான்றாகக் கிழக்கு என்றால் KIZHAKKU, கீழ செக்காரக்குடி என்றால் KEEZHA SEKKAARAKKUDI, பேட்டை என்றால் PETTAI என்பனபோல். ஆனால் பல ஊர்களின் பெயர்கள் அவ்வாறு குறிக்கப் பெறவில்லை.
  1. KEEZHA THOOTHUKUZHI
396 . MELA THOOTHUKUZHI
என்பன போல் இன மெய்யெழுத்திற்கான ஒலி பெயர்ப்பு இல்லை.
தெருப்பெயர்களில் சாதிவாலை அறுத்துவிட்டோம் என்றார்கள். ( சில இடங்களில் இன்னும் சாதிவால் ஒட்டிக்கொண்டுதான் உள்ளது.) ஆனால்ஊர்ப்பெயர்களில் உள்ள சாதிப்பட்டத்தை நீக்கவில்லை.
181 அ.ரெட்டி அள்ளி
196 நாயக்கன் அள்ளி
957 ரெட்டியார் சத்திரம்
என்பன சான்றாகும். நாங்கள் எழுத்துக்கூட்டலில்தான் கருத்து செலுத்தினோம். இதில் இல்லை என்பது பொருந்தாது. எல்லா இடங்களிலும் அரசாணை பின்பற்றப்படுகிறதா எனப் பார்க்க வேண்டும். அதன்படி ஊர்ப்பெயர் மாற்றங்களை அறிவித்து அவற்றுக்கேற்ப ஆங்கில எழுத்துக் கூட்டலைஅறிவித்திருக்க வேண்டும்.
எகரத்திற்கும் ஏகாரத்திற்கும் ஒகரத்திற்கும் ஓகாரத்திற்கும் எவ்வேறுபாடும் இல்லாமல்தான்
24 கோயம்பேடு – KOYAMBEDU
  1. செஞ்சேரி – SENJERI
என்பனபோல் ஊர்ப்பெயர்களைக் குறித்துள்ளனர். ஆனால் வேலூர் என்பதற்கு மட்டும்
921 வேலூர் – VEELOOR
எனக் குறித்துள்ளனர். ஆனால்
937 மேலூர் – Meloor போன்ற பிற ஏகார எழுத்திற்கு இவ்வாறு குறிக்கவில்லை.
அதே நேரம் இரண்டு ஈ (EE) என்பது ஈகாரமாகவே
392 மீனவர் குடியிருப்பு MEENAVAR KUDIYIRUPPU என்பதுபோல் குறிக்கப்பெற்றுள்ளது.
வேலூருக்கான ஒலிப்பு சரி யென்றால் மீனவர் என்பது மேனவர் ஆகிறதுமீனவருக்கான ஒலிப்பு சரியென்றால் வேலூர் என்பது வீலூர் ஆகிறது.
ருமபுரியில் தமிழா?
தருமபுரி மாவட்டத்தில் பல ஊர்ப்பெயர்கள் கன்னடச் சொற்களால் குறிக்கப்பெறுகின்றன. அவற்றைத் தமிழ்ப்பெயர்களாக மாற்ற வேண்டும் என்பது தருமபுரி மக்கள் அவா. அதற்கேற்ப அம்மாவட்ட ஆட்சியர் ஊர்ப்பெயர் ஒலிப்பு எழுத்துகளைக் குறிப்பிட்டுள்ளார்.
சான்றாக அளே என்னும் கன்னடச் சொல்லுக்குப் பழைய என்று பொருள்.
எனவே,
180 அளே தருமபுரி -PAZHAYA THARUMAPURI
எனப் பரிந்துரைத்துள்ளார். தமிழ் வளர்ச்சித்துறையினரோ தமிழுக்கு எப்படி மாற்றம் செய்யலாம் எனக் கருதி HALE THARUMAPURI என்று வரையறுத்துள்ளனர்.
அள்ளி என்னும் கன்னடச்சொல்லுக்குச் சிற்றூர் எனப் பொருள். வாடிப்பட்டி, ஆண்டிப்பட்டி என்பதுபோல் பட்டி என்று ஊர்ப்பெயர்கள் முடிவடைவதைப் பின்பற்றிப் பொருத்தமாக
181 அ.ரெட்டி அள்ளி – A. REDDIPPAATTI (PAATTI எனக் குறித்திருப்பது தட்டச்சுப்பிழையாக இருக்கும்.)
182 அ.நடுஅள்ளி – K.NADUPPATTI
204 பூதன அள்ளி – POOTHANA PATTI
205 அ.ஜெட்டி அள்ளி – A.JETTIPATTI
எனப் பரிந்துரைத்துள்ளனர். இருக்கின்ற பெயருக்கான எழுத்துக் கூட்டலைக் கேட்டால் தமிழ் உணர்வுடன் முந்தைய தமிழ்ப்பெயரைச் சூட்டுவது எப்படி ஏற்றதாகும் எனத் தமிழ்வளர்ச்சித் துறை முறையே A. REDDI HALLI, K.NADU HALLI, POOTHANA HALLI, A.JETTI HALLI என்றே வரையறுத்து ஆணை யிட்டுள்ளது.
மேலும் ஊர்ப்பெயரை அள்ளி எனத் தமிழில் குறிப்பிடுவதற்கேற்ப ALLI என்று பரிந்துரைத்தாலும் ஃகள்ளி எனக் கன்னட ஒலிப்பிற்கேற்பவே ஆங்கிலத்தில் HALLI எனத் திருத்தி ஆணை பிறப்பித்துள்ளது.
அமைந்த கரை என்பது இப்போது அமிஞ்சிக்கரை எனச் சொல்லப்படுகிறது. அமஞ்சி அல்லது அமிஞ்சி என்பது கூலி பெறாமல் உழைப்புத்தானம் வழங்குவது. ஒரு காலத்தில் மக்கள் இணைந்து கூலி எதுவும் பெறாமல் எழுப்பிய கரையை அமஞ்சிக்கரை என்று அழைத்துள்ளனர். அதுவே அமிஞ்சிக்கரை என்றானது. இதைத் தவறு எனக் கருதி21. அமைந்தகரை என்பதுபோல் ஆணை பிறப்பித்துள்ளனர்.
26&27 எழும்பூர், 29&30 திருவல்லிக்கேணி முதலியவற்றிற்குத் தமிழ்க்குடிமகன் அமைச்சராக இருந்தபொழுது ஆணை பிறப்பிக்கப்பட்டதாக நினைவு. என்றாலும் இப்போதுபோல் EZHUMBOOR என்று இல்லாமல் EZHUMBOR என்றுதான் இருந்திருக்கும். அந்த வகையில் இந்த ஆணை சரியே.
இதுபோல் நாம் பலவற்றைக் குறிப்பிட முடியும்அப்படியானால் தமிழ்வளர்ச்சித்துறை எதற்குஅவர்கள் கூர்ந்து நோக்கிச் செவ்வைப்படுத்த வேண்டும்.
ஆணையில், 14.12.2001 ஆம் நாளிட்ட நகராட்சி நி.கு.நீ.வ.து ஆணை பார்வையில் குறிக்கப்பெற்றுள்ளது. விவரம் ஆணையில் இல்லை. ஒருவேளை இந்த ஆணை இதற்கு முந்தைய ஒலிபெயர்ப்பு குறித்தது எனில் அவற்றையும் கோடிட்டுக் காட்டியிருக்கலாம்.
மக்கள் கையிலும் பொறுப்புண்டு
அரசு ஆணைகள் செயற்பாடு மக்கள் கைகளிலும் உள்ளது. மக்கள் இவற்றை உணர்வடன் ஏற்றுச் செயற்படுத்த வேண்டும். ஆனால் செயல்படுத்துவது இல்லை. ஒவ்வொன்றுக்கும் முதல்வரோ அமைச்சரோ வந்து எழுதிக் கொண்டிருக்க முடியாது. எனவே, திருத்தம் வேண்டிய இடங்களில் அரசிடம் தெரிவித்து மற்றவற்றை ஏற்றுப் பயன்படுத்த வேண்டும். அரசு இதற்கு முன்னரே. சிரீ எனத் தொடங்கும் ஊர்ப்பெயர்களைத் திரு எனத் தமிழில் குறிக்க ஆணை பிறப்பித்ததுஇதன்படி சிரீவில்லிபுத்தூர் – திருவில்லி புத்தூர், சிரீரங்கம் – திருவரங்கம் என்பன போன்று பெயர் மாற்ற ஆணையும் பிறப்பித்தது. ஆனால், இன்றைக்கு அங்கெல்லாம் தமிழ்த் திரு தொலைந்துவிட்டது. ஆரிய சிரீயே இருக்கிறது. இறைவனின் பெயர்களில் தமிழ் முன்பே தொலைக்கப்பட்டது. ஆனால், இக்காலத்திலும் தமிழ்க்கடவுளான திருமுருகனை அறநிலையத்துறையினரே பாலசுப்பிரமணியன் என்று குறிக்கின்றனர். குமரி மாவட்டத்தில் பகவதி அம்மன் கோயில் எனத் தனிக்கோயில் இருப்பினும் தமிழர்க்கே உரித்த குமரி அம்மனையும் பகவதி அம்மன் என்கின்றனர். இதுபோன்ற இழிநிலைகளை எல்லாம் துடிப்பான அமைச்சர் மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
1978 ஆம் ஆண்டிலேயே திருமலவாடியைத் திருமழபாடி என்றும் செய்யார் என்பதைச் செய்யாறு என்றும் இன்னும் பல ஊர்களின் பெயர்களையும் திருத்தமாக எழுத வருவாய்த்துறை ஆணையிட்டது. ஆனால் இருவகையாகவும் இன்று பயன்படுத்துகின்றனர். அரசாணையைப் பொருட்படுத்துவதே இல்லை. எனவே, ஆணை பிறப்பித்தால் மட்டும் போதாதுஅதன் சரியான செயல்பாட்டையும் கண்காணிக்க வேண்டும். அரசாணைக்கிணங்க ஊர்ப்பெயர்களைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் குறிப்பிடாத ஊடகங்களுக்கு விளம்பரம் தரக்கூடாது.
அரசு இந்த ஆணையைப் பிறப்பிக்கும் முன்னர் இணையத்தளங்கள், ஊடகங்கள் வாயிலாக மக்கள் கருத்தைக் கேட்டிருக்கலாம்.
தமிழுக்கான ஆங்கில ஒலிபெயர்ப்பு தரப்படுத்தும் குழு ஒன்றை அமைத்து, அக்குழு பட்டறிவு மிக்க, மொழிபெயர்ப்பில் ஈடுபாடு கொண்ட தமிழறிஞர்கள் கருத்துகளைக் கேட்டறிந்து பரிந்துரைப்பதன் அடிப்படையில் அரசே தக்க ஆணை பிறப்பிக்க வேண்டும் எனத் தமிழ்க்காப்புக்கழகம் 18.03.2014இல் அரசிற்குத் தெரிவித்தது. 06.04.2014இல் சென்னையில் தமிழ்க்காப்புக்கழகமும் சென்னை மாநிலக்கல்லூரித் தமிழ்த்துறையும் தமிழ் அமைப்புகளும் இணைந்து தமிழ் எழுத்தொலிகளுக்கான ஆங்கில ஒலி பெயர்ப்பு வரையறைக் கலந்துரையாடலை நிகழ்த்தியது. என் தலைமையில் நடந்த இக் கூட்டத்தில் முனைவர் க.ப.அறவாணன், முனைவர் ப.மகாலிங்கம், பேராசிரியர் முனைவர் ந.தெய்வசுந்தரம், முனைவர் கு.பாலசுப்பிரமணியன், முனைவர் மு.முத்துவேலு, முனைவர் மா.பூங்குன்றன், முனைவர் மு.கண்ணன், முனைவர் இராமகி, பொறிஞர் நாக.இளங்கோவன், முனைவர் இரா.சேது, அன்றில் இறையெழிலன் ஆகியோர் கருத்துரையாற்றினர். வந்திருந்த தமிழ் அறிஞர்களும் தத்தம் கருத்தைத் தெரிவித்தனர். 26.08.2014 இல் மீண்டும் இதுகுறித்து மடல் அனுப்பப்பட்டது. நேரிலும் தெரிவிக்கப்பட்டது. ஆனால், தகவல் தொழில்நுட்பத்துறை ஆர்வம் காட்டியதே தவிர அப்போதைய தமிழ்வளர்ச்சி இயக்ககம் ஆர்வம் காட்டவில்லை.
எனவே, ஒலிபெயர்ப்பிற்கான சீரானவரைமுறையை முதலில் வகுத்து அதன் பின்னரே அதற்கிணங்க ஊர்ப்பெயர்களின் ஒலி பெயர்ப்பு குறித்து ஆணை பிறப்பிக்க வேண்டும். இப்போதைய ஆணையில் நூற்றுக்கணக்கான முரண்பாடுகள் மலிந்து உள்ளமையால் இதனை நிறுத்தி வைக்க வேண்டும். எனவே, செம்மையான ஆணைகளை எதிர்பார்க்கிறோம். அதே நேரம் உலகத்தமிழ் மக்கள் டமில்நடு எப்பொழுது ஆங்கிலத்தில் தமிழ்நாடு ஆகும் என எதிர்பார்க்கின்றனர். அதற்கு விரைவில் விடை தருமா தமிழக அரசு?

– இலக்குவனார் திருவள்ளுவன்

மின்னம்பலம் 13.06.2020

Followers

Blog Archive