>>அன்றே சொன்னார்கள்
பொருளியலுக்கான இலக்கணத்தை வரையறுக்கும் பொழுது பொருளியல் அறிஞர் ஒருவர், பொருள் பகைவரை அழிக்கும் ஆயுதம் என்றார். சான்றோர் சிந்தனை, கால எல்லைகளைத் தாண்டியும் ஒன்றுபடும் என்பதற்குச் சான்றாக அல்லது பழமைக்கும் பழமையாகவும் புதுமைக்குப் புதுமையாகவும் திகழும் சங்க இலக்கியச் சான்றோர் மொழிகள் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இக்கருத்தை வெளிப்படுத்தியுள்ள பெருமைக்குச் சான்றாக எடுத்துக் கொள்ள சில இலக்கிய வரிகளை நாம் காணலாம்.
பகைவரின் தருக்கை அழிக்கும் கூரிய படைக்கலம் பொருள்; ஆதலின் பொருளை உண்டாக்குக எனக் கட்டளையிடும் தெய்வப் புலவர் திருவள்ளுவர்,
செய்க பொருளை செறுநர் செறுக்கருக்கும் எஃகு
அதனில் கூரியது இல் (திருக்குறள் 759 )
என்கிறார் மேலும்,
பொருள்என்னும் பொய்யா விளக்கம் இருள் அறுக்கும்
எண்ணிய தேயத்துச் சென்று (திருக்குறள் 753)
என்னும் தமிழ்மறை மூலம், பொருள் ஆகிய அணையா விளக்கு அதனை உடையவர் அவர் நினைத்த நாட்டிற்குச் சென்று பகை ஆகிய இருளைப் போக்கச் செய்யும் என உணர்த்துகிறார். பகை இருளை அழிக்கும் விளக்கு என்றாலும் பகையைப் போக்குவது படைக்கருவிதானே!
பொருள் பகையை வெல்ல மட்டும் அல்ல; அருளாளர்க்கும் தேவை. ஏனெனில் பொருள் இல்லையேல் அவர்களின் அருள் உள்ளத்திற்கு வாய்ப்பு இல்லை. எனவேதான் புலவர் மதுரைத் தத்தங் கண்ணனார், அறிவை மயங்கச் செய்யும் வறுமையால் ஏற்படும் மன வருத்தத்தைப் போக்கும் அருள் நெஞ்சம் மிகுதியாக உடையவராக இருப்பினும் பொருள் இல்லையென்றால் யாருக்கும் கொடுக்க இயலாது என்பதை உணர்த்த
இருள்படு நெஞ்சத்து இடும்பை தீர்க்கும்
அருள்நன்கு உடையர் ஆயினும் ஈதல்
பொருள் இல்லோர்க்கு அஃது இயையாது (அகநானூறு 335: 1-3)
என்கிறார்.
முன்னரே பார்த்தவாறு பொருள் இருந்தால் அறமும் இன்பமும் கிடைக்கும் என்பதற்காகக் குறுக்கு வழிகளில் பொருளை உண்டாக்கக்கூடாது என்பதற்காக
ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு எண்பொருள்
ஏனை இரண்டும் ஒருங்கு (திருக்குறள் 760)
என்கிறார் தெய்வப்புலவர் திருவள்ளுவர்.
அஃதாவது, பொருள் மிகுதியாக (காழ்ப்ப) உடையவராய் இருப்பினும் அப்பொருள் நன்னெறியால் (ஒண்பொருள்) வந்தால்தான் ஏனைய அறமும் இன்பமும் எளிதில் கிடைக்கும் என நேர்மையான வழியை வலியுறுத்துகிறார்.
ஆகவே, அருளுடைமையுடனும் அன்புடைமையுடனும் வராத பொருளால் வரும் ஆக்கத்தைக் கைவிடுமாறு வலியுறுத்தி
அருளொடும் அன்பொடும் வாராப் பொருள்ஆக்கம்
புல்லார் புரள விடல் (திருக்குறள் 752)
என வேண்டுகிறார்.
இவையெல்லாம் பகையை வெல்லும் கருவியாகவே பொருளைக் கருதினாலும் நெறிசார்ந்த இயலாகவே அதனைத் தமிழர் கொண்டு இருத்தலை நன்கு விளக்குகின்றன. எனவே, எதற்காகப் பொருளை உண்டாக்க வேண்டும் என்பதுடன், எவ்வாறு உண்டாக்க வேண்டும் என்பதிலும் பழந்தமிழர் கண்ணுங் கருத்துமாக இருந்துள்ளனர்.
தீய வழிகளில் அடையாத பொருளே பகையை வெல்லும் படைக்கருவி என உணர்த்தவே, அறச்செயலும் பகைவெல்லலும் இன்பம் அடைதலும் பொருளால் முடியும் என விளக்கும் புலவர் பாலைபாடிய பெருங்கடுங்கோ,
அரிதாய அறன் எய்தி அருளியோர்க்கு அளித்தலும்
பெரிதாய பகைவென்று பேணாரைத் தெறுதலும்
புரிவமர் காதலில் புணர்ச்சியும் தரும் (கலித்தொகை 11:1-3)
என்கிறார்.
புலவர் மதுரை ஈழத்துப் பூதன்தேவனார், பகைவரின் செருக்கை (செருவோர் செம்மல்) ஒழித்தலும் தம்மைச் சேர்ந்தவர்க்கு ஒரு துன்பம் உண்டானபோது (உறும் இடத்து) உதவுதலுமான ஆண்மையும் இல்லத்தில் ஒன்றும் செய்யாமல் சோம்பி இருப்போர்க்கு இல்லை என்கிறார். அவரது பாடல் வரிகள் பின்வருமாறு :-
செறுவோர் செம்மல் வாட்டலும் சேர்ந்தோர்க்கு
உறும்இடத்து உய்க்கும் உதவி ஆண்மையும்
இல்இருந்து அமைவோர்க்கு இல் (அகநானூறு 231: 1-3)
ஈழத்துப் புலவர் உணர்த்தியதற்கு இணங்க ஈழப்பகைவரை ஒடுக்கலும் ஈழத்தமிழரின் துன்பம் போக்கலும் சோம்பேறிகளுக்கு இயலாது என்பதை உணர்ந்தால் விரைவில் துன்பம் போக்கிப் பகையை ஒடுக்கலாம் அல்லவா?
- இலக்குவனார் திருவள்ளுவன்
No comments:
Post a Comment