Monday, February 14, 2011

Expert in Economics: andre' sonnaargal 24: அன்றே சொன்னார்கள் 24: பொருள் அறிவியலிலும் சிறந்திருந்தனர்

 

>>அன்றே சொன்னார்கள்

பொருள் அறிவியலிலும் சிறந்திருந்தனர்

                                                                                                                

natpu பொருள் அல்லது செல்வம் என்றாலே அதனால் வரும் தீமைகளை மட்டும் எண்ணி அதனை ஒதுக்க வேண்டும் என்பது போன்றே உலகெங்கும் அறிஞர்களும் ஆன்றோர்களும் வலியுறுத்தி வந்துள்ளனர். புத்தர் முதலான சமய அறிஞர்களும் அவ்வாறே மக்களிடம் பொருளாசை துன்பம் தரும் எனக் கூறிப் பொருள் தேடலுக்கு எதிரான கருத்தையே பரப்பி வந்தனர். பொருள் அடிப்படையிலான இயல் பொருளறிவியல் அல்லது பொருளியல் (பொருளாதார இயல்) என உருவானதும் அதன் இன்றியமையாமை உணரப்பட்டதும் 18 ஆம் நூற்றாண்டில்தான் எனலாம். ஆதம் சுமித் (Adam Smith: 1723-1790) என்னும் பொருளியல் அறிஞர் முதலில் பொருளியல் இலக்கணத்தை வரையறுத்தவர் ஆவார்; 1776 ஆம் ஆண்டு நாடுகளின் செல்வமும் அதன் இயல்பும் காரணங்களும் (An Inquiry into the Nature and Causes of the Wealth of Nations) (அல்லது நாடுகளின் செல்வம் ) என்னும் நூலை வெளியிட்டுப் பொருளியல் என்பது செல்வத்தைப் பற்றிய ஓர் அறிவியல் என அறிவித்தார்.

இதற்கு முன்னர் அறிஞர்கள் கார்லைல், இரசுகின் முதலானோர், பொருளியலை மகிழ்வற்ற அறிவியல் என்றும் இருண்டஅறிவியல் என்றும் கூறியதற்கு மாறாக அமைந்தது இவரது விளக்கம்.

அடுத்த நூற்றாண்டில் வந்த பொருளியல் அறிஞரான ஆல்பிரட் மார்சல் (Alfred Marshal: 1842-1924) பொருளியலை நல இலக்கண அடிப்படையில் (Welfare Economics) வரையறுத்தார். 1890 ஆம் ஆண்டு வெளியிட்ட பொருளியல் கோட்பாடுகள் என்னும நூலில் இதனை அவர் தெளிவுபடுத்தினார். பொருளியல் ஒரு புறம் செல்வததையும் மற்றொரு புறம்  அதனை விட முதன்மையாக மனிதனையும் ஆராயும் இயல் என விளக்கினார்.

அறிஞர் தொல்காப்பியர் எழுத்து, சொல், பொருள், எனத் தொல்காப்பியத்தை வகுத்ததும் தெய்வப்புலவர் திருவள்ளுவர் அறம், பொருள், இன்பம் எனத் திருக்குறளை அளித்ததும் பொருளை மக்களுக்கான பயன் அடிப்படையில் நோக்கியதே ஆகும். எனவே, இவர்களின் இலக்கியங்கள் வாழ்வியல் இலக்கியங்களாக ஒளிர்கின்றன.

தெய்வப்புலவர் திருவள்ளுவர் பொருளின் இன்றியமையாமையை விளக்குவதற்குப்,
பொருள்அல் லவரைப் பொருளாகச் செய்யும்
பொருள்அல்லது இல்லை பொருள்                                       (திருக்குறள் 751)
என்கிறார். மேலும்,
அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறன்அறிந்து
தீதுஇன்றி வந்த பொருள்                                                (திருக்குறள் 754)
எனத் தெய்வப்புலவர் திருவள்ளுவர், பொருள் முறையாயும் தீயவழியில் அல்லாமலும்  வரவேண்டிய வழியை விளக்குகையிலே மேனாட்டாரின்  நலம்சார் பொருளிலக்கணத்தை அன்றே நம்மவர்கள் அறிந்து தெளிந்திருந்தனர் எனலாம்.

19 ஆம் நூற்றாண்டில் பொருளியல் பற்றிப் பிற நாட்டார் எண்ணி ஆராய்ந்திருக்கையில் பழந்தமிழர் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அதனைப் பற்றிச் சிந்தித்து உள்ளனர் என்பது மட்டுமல்ல, இன்றைய சிந்தனையின் வெளிப்பாடு அன்றே அவர்களிடம் இருந்துள்ளதும் கவனிக்கத்தக்கது.  இலக்கியங்களில் இவை இடம் பெற்றுள்ளமையாலேயே இவற்றை நாம் இலக்கியக் கற்பனைகள் என்று ஒதுக்குவது தவறு. மாறாக இலக்கிய நூல்களிலேயே அறிவியல் சிந்தனைகள் இடம் பெற்றுள்ளன எனில், துறை நூல்களில் மிகுதியான அறிவியல் செய்திகள் இடம் பெற்றிருக்க வேண்டுமே என எண்ண வேண்டும்.

இன்றைக்குப் பொருளுக்கு அல்லாடும் நாம் அன்றைக்குப் பொருள்  திரட்டலில் சிறந்திருந்ததன் காரணம் பொருள் பற்றிய தெளிவான எண்ணமும் முயற்சியும் இருந்தமைதான். எனவே, தொடர்ந்து வேறு சில பாடல்களையும் அடுத்தடுத்துக் காணலாம்.
-         இலக்குவனார் திருவள்ளுவன்



Comments


No comments:

Post a Comment

Followers

Blog Archive