Wednesday, February 16, 2011

Will go to accumulate wealth - andre' sonnaargal 26:அன்றே சொன்னார்கள் 26 - செல்வம் திரட்டச் செல்வோம்!

>>அன்றே சொன்னார்கள்

அன்றே சொன்னார்கள் 

செல்வம் திரட்டச் செல்வோம்!

                                                                                                                

நெறியுரைப் பொருளியல் என்பது பொருள் அல்லது செல்வத்தின் நோக்கம் ஒழுக்கம் சார்ந்ததாக, முறை சார்ந்ததாக, மதிப்பு சார்ந்ததாக இருக்க வேண்டும் எனப் பத்தொன்பதாம் நூற்றாண்டில் பொருளியல் அறிஞர்கள் வரையறுத்துள்ளனர். ஆனால், தமிழர்களின் தொடக்கக்கால நெறியே செல்வத்தின் பயன் என்பது மதிப்பார்ந்த நெறியாகவே உள்ளது.
செல்வத்தின் பயன் பிறருக்குக் கொடுத்தல் என மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார்
செல்வத்தின் பயனே ஈதல்             (புறநானூறு 189: 7 )                                           
என்னும் வரி மூலம் விளக்கி இக்கோட்பாட்டை உணர்த்துகிறார்.
அன்பும் அல்லன அறியாமையும் மென்மையும் நல்லொழுக்க இயல்பும் எலும்பையும நெகிழச் செய்யும் இனிய சொல்லும் பிற பண்புகளும் ஒத்து உள்ள தலைவனும் தலைவியும் இனிய வாழ்க்கை நடத்தி வருகின்றனர்.

அன்பும் மடனும் சாயலும் இயல்பும்
என்பு நெகிழ்க்கும் கிளவியும் பிறவும்
ஒன்றுபடு கொள்கை                                    (அகநானூறு 225 : 1-3)                                              
என இவ்வாழ்க்கையை விளக்குவார் புலவர் எயினந்தை மகனார் இளங்கீரனார். (என்பு- எலும்பு; கிளவி - சொல்)  இத்தகைய வாழ்க்கையில் செல்வம் திரட்டச் சென்ற தலைவன் திரும்பி வரும் காலத்தை ஆவலுடன் எதிர்நோக்கும் தலைவி, தன் தலைவன் பொருள் ஈட்டச் சென்ற பொழுது  கூறியதை மனத் திரையில் பார்க்கின்றாள்.
natpu செல்வத்தைக் கொடுப்பது என்பது முன்னோர் திரட்டிய பெரும் பொருளை வாரி வழங்குவது அன்று; தன் உழைப்பில் பெற்ற பொருளைப் பிறருக்கு வழங்குவதே. எனவே, தான் செல்வம் திரட்டும் பொருட்டுப் பிரிந்துதான் ஆக வேண்டி உள்ளது என உணர்த்துவதற்காகத் தலைவன் செல்வத்தின் தேவையைக் கூறினான். இத்தகைய முயற்சி சார்ந்த பெரும் பண்பு பழந்தமிழர்க்கு உரியது. எனவேதான் ஒவ்வொருவரும் ‘திரைகடலோடியும் திரவியம் தேடுஎன்பதுபோல்  நாடுகடந்தேனும் செல்வம் திரட்டி வந்தனர். எனவே தலைவியும் தலைவனின்  முயற்சியின் பெருமை கருதியும் செல்வததின் அருமை கருதியும் பிரிவைப் பொறுத்துக் கொண்டாள்.
 
இதனைப் பாலைபாடிய பெருங்கடுங்கோ
அறன்கடைப் படாஅ வாழ்க்கையும் என்றும்
பிறன்கடைச் செலாஅச் செல்வமும் இரண்டும்
பொருளின் ஆகும்         (அகநானூறு 155 :1-3)                                          
என்னும் வரிகளில் தெரிவிக்கின்றார்.

அறன் கடைப்படுதல் என்றால் அறவழியில் இருந்து நீக்கப்பட்ட பாவச் செயல்கள்; இச்செயல்கள் இல்லா வாழ்க்கைக்கு உதவுவது செல்வம். நம்மை நாடி வருபவரிடம் இல்லை என்று சொல்லும் நிலைமை பாவச் செயல் என விளக்கம் தருகிறார் பரிமேலழகர். செல்வம் இருந்தால் இல்லாதவரிடம் இல்லை என்று சொல்லும் இழிநிலை வராது அல்லவா? அதுதான் அறன் கடைப்படாஅ வாழ்க்கை ஆகும். அப்படியாயின் செல்வத்தின் பயன் அடுத்தவர்க்கு உதவுவதுதானே!

பிறன்கடைச் செல்லுதல் என்றால் நாம் பிறரிடம சென்று வேண்டும் - இரக்கும் - நிலைமை.   உழைத்துப் பொருளை ஈட்டாமல் அடுத்தவரிடம் பொருள் உதவி நாடி இரக்கும் நிலைமையும் பாவச் செயலே என்பது தமிழரின் உழைப்பு நெறி. பிறரை நாடாமல் நல் வாழ்க்கை வாழ உதவுவதும் செல்வமே என்கிறார் புலவர்.

தலைவனும் தலைவியும் வாழும் இன்ப வாழ்வைக் கூற வந்த புலவர் செல்வத்தின் நோக்கத்தையும் சிறப்பாக விளக்கி உள்ளார். இதன் மூலம் தமிழர்களின் செல்வத்திற்கான இலக்கண வரையறை நெறியுரை சார்ந்ததே எனத தெளிவாக விளங்குகிறது அல்லவா?

நமக்குரிய தலைமையின்றி நாம் அடிமையாய்ப் பிழைத்து வாழும் நிலைமைக்குக் காரணம் செல்வத்தின் இலக்கணத்தைப் புரிந்து கொள்ளாமைதானோ?
-         இலக்குவனார் திருவள்ளுவன்



No comments:

Post a Comment

Followers

Blog Archive