Wednesday, August 6, 2025

தமிழ்த்தாயைப் புறக்கணிக்கும் கன்னடச் சேய் 5 – இலக்குவனார் திருவள்ளுவன்

      06 August 2025      கரமுதல



(தமிழ்த்தாயைப் புறக்கணிக்கும் கன்னடச் சேய் 4 – தொடர்ச்சி)

தமிழ்மொழியின் வடிவமைப்பு முறையையே(ORTHOGRAPHY) இந்தியமொழிகள் அனைத்தும் பெற்றுள்ளன! அஃதாவது, இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் பேசப்படும் மொழிகள் அனைத்திற்கும், மொழி-வடிவமைப்பு என்னும் எழுத்தியல் முறை முற்றிலும் தமிழ் மொழியின் மொழி-வடிவமைப்பு  முறையைப் பின்பற்றியே அமைந்துள்ளது. அவ்வாறிருக்கும் பொழுது கன்னட மொழிக்கான எழுத்தமைப்பு முறையும் தமிழ் வரிவடிவ முறைமையைப் பின்பற்றியே உள்ளது என்பது வியப்பல்ல. எனவேதான், தமிழ்த்தாயின் நெடுங்கணக்கு போன்றே கன்னடச் சேயிலும் உயிர் எழுத்துகள், மெய் எழுத்துகள், உயிர்மெய்யெழுத்துகள்  அமைந்துள்ளன.

கவிராச மார்க்கத்தின் தமிழ் மொழி பெயர்ப்பு

மேலே கன்னடத்தின் முதல் நூலாகக் குறிக்கப்பெற்ற ஒன்பதாம் நூற்றாண்டில் வெளிவந்த கவிராச மார்க்கம் என்பது இராட்டிரகூட மன்னன் நிருபதுங்க அமோகவர்சனின் படைப்பு. இதனை அவனது அவைக்களப் புலவரின் படைப்பாகவும் கூறுகின்றனர். இது கன்னட மொழியின் வளர்ச்சி, இலக்கிய இலக்கண மரபுகளைப் பற்றிய தகவல்களை வழங்குகிறது. இதன் தமிழாக்கம், தண்.கி. வேங்கடாசலம் அவர்களால் எழுதப்பெற்று 2000 இல் தமிழ்ப்பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பெற்றது. முதல் நூல் என்று கருதும் வகையில் சிறப்பாக மொழிபெயர்த்துள்ளார் ஆசிரியர். இந்நூல் அவர் காலமான பின்புதான் வெளிவந்தது.

உண்மையைச் சொன்ன கமலை எதிர்ப்பது ஏன்?

 ஆனால், மக்கள் நீதி மையத் தலைவர் கமல் கன்னட மொழியினருடனான நெருக்கத்தைக் காட்டுவதற்காகக் கன்னடத்தின் தாய் தமிழ் என்றதற்குக் கன்னடர்கள் பெரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கலைத்துறையினர், அரசியல்துறையினர், நீதித்துறையினர் என அனைத்துத் தரப்பாரும் எதிர்க்கின்றனர். ஆராய்ச்சி முறையில் விடையிறுக்காமல் வெறுப்பு நோக்கில் கண்டிக்கின்றனர். இதற்குக் காரணம், தமிழின் தாய்மை குறித்த பாடங்களை இந்திய மொழிகளில் வைக்காமைதான். இந்நேர்வில் நாம் கமலைப் பாராட்ட வேண்டும். பொதுவாக எதையாவது சொல்லிவிட்டு எதிர்ப்பு வந்தவுடன் நான் அந்தப்பொருளில் சொல்லவில்லை. இதனால் யாரும் புண்பட்டிருந்தால் என் வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் என மழுப்புவார்கள். அவ்வாறில்லாமல் தான் உண்மையைத்தான் சொன்னேன் என்று உறுதியாக உள்ளமைக்கே பாராட்டு.

தமிழ்நாட்டில் உள்ள தமிழிசை போன்றவர்களே அரசியலுக்காக உண்மையை மறைத்துத் தவறாகத் தெரிவிக்கும் பொழுது உண்மையை உரைக்க வேண்டிய கடமை நமக்கு உள்ளது.

பி.ஒ.நி.(பி.பி.சி.) இணையத் தளத்தில் முரளிதரன் காசி விசுவநாதன், செவ்வியாகக், “கமல் சொல்வதுபோல் தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்ததா?” என ஒரு படைப்பு வந்துள்ளது(04.06.2025). அதில் அவர்,

செக்கு நாட்டைச் சேர்ந்த இந்திய மொழியியல் அறிஞரான கமில் சுவலபில், தன்னுடைய The Smile of Murugan நூலில் “தமிழும் கன்னடமும் பிரியும் இறுதிக் கட்டத்தில்”  என்று குறிப்பிடுகிறார். இச் சொற்தொடர் மட்டுமே, தமிழில் இருந்து கன்னடம் தோன்றியது என்ற பொருளைத் தருகிறது. ஆனால் தமிழைத் தவிர, பிற முக்கியமான திராவிட மொழிகளான தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகியவற்றின் தொடக்கக் கால இலக்கியங்கள் வேறு ஏதோ மொழியில் இருக்கும் இலக்கியங்களைப் படி செய்தவை அல்லது முன்மாதிரியாக எடுத்துக் கொண்டவை என்கிறார் அவர். அந்த ஏதோ மொழிதான் தமிழ்மொழி என்பதை மறுப்பதற்கில்லை.

தமிழுடன் கூடுதல் நெருக்கம் கொண்ட கன்னடம்

ஆர். நரசிம்மாச்சார்யா எழுதிய கன்னட மொழியின் வரலாறு (History of Kannada Language) என்ற நூல், அந்த மொழியின் தோற்றம் குறித்து எதையும் குறிப்பிடவில்லை. ஆனால், கன்னட மொழி தமிழுடன் கூடுதல் நெருக்கம் கொண்டது என்று குறிப்பிடுகிறது.

தமிழ், கன்னடத்திற்குத் தமக்கை மொழியா? தாய் மொழியா?

…  தொல் திராவிட மொழிக்கு நெருக்கமான மொழி தமிழ்தான் என்கிறார் தேசிய நாட்டுப்புற ஆதரவு மைய இயக்குநர் எம்.டி. முத்துக்குமாரசாமி. ஆகவே இப்போதைய கேள்வி, தமிழ் கன்னடத்துக்கு அக்காவா, அம்மாவா என்பதுதான். அக்கா என்றால் எல்லாரும் ஏற்கிறார்கள். ஆனால், இந்த அக்கா மொழி, அம்மா அளவுக்கு மூத்த மொழி என்பதுதான் இதில் கவனிக்கத்தக்கது,” என்றும் அவர் விவரித்தார். தத்தம் மொழியில் இருந்துதான் தமிழ் பிறந்ததாகப் பொய்யான செய்தியைப் பரப்புவோர் சிலர் இருந்தாலும் தமிழ்த்தாய்மையை ஏற்க மனமின்றி அதன்முன்மையை ஒப்புக்கொண்டு மூத்த உடன்பிறப்பு மொழியாகக் கூறும் பிற மொழியாளர்களும் உள்ளனர்.

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவு. 

 (திருவள்ளுவர், திருக்குறள், ௪௱௨௰௩ – 423)

என நாம் நுணுகி ஆராய்ந்து பார்த்தால் தமிழே கன்னடம் முதலான மொழிகளின் தாய் என்பதை நன்கு தெளியலாம். தாய் மகளைப்போல் இளமையாகவும் அழகாகவும் பொலிவாகவும் இருந்தால் பார்ப்பவர்கள்  இருவரும் அக்கா தங்கை போல் இருப்பதாகக் கூறுவர். அதனால் தாய் அக்காவாகிவிட முடியாது. தாய் தாய்தான். அதுபோல்தான் இளமைச் செழிப்புடன் உள்ள தமிழ் தமக்கைபோல் தோன்றினாலும் தாய்தான்.

தமிழ் மரபுகளைக் கூறும் கவிராச மார்க்கம்

தமிழ்க் குடும்ப மொழிகளின் தாய்மொழி தமிழ் என்று மொழி வல்லுநர்கள் மட்டும் சொல்லவில்லை. இந்திய மற்றும் உலக அகழ்வாராய்ச்சி வல்லுநர்களும் கல்வெட்டு ஆய்வாளர்களும் சொல்கிறார்கள். தமிழ் மொழிக்குடும்பத்தின் தாய்மொழி மட்டுமல்ல உலக மொழிகளின் தாய்மொழியும் தமிழ் தான் என்பதை நிறுவியிருக்கிறார்கள். 

இந்தியாவில் அகழ்வில் கிடைத்த பொருள்களில் உள்ள எழுத்துகளில் தொன்மையானதும் அதிகம் கிடைத்திருக்கும் எழுத்துகளும் தமிழே! என்கிறார் ஆய்வறிஞர் அ.அரசேந்திரன்.

கன்னடத்தின் முதல் நூலாகக் கவிராச மார்க்கம் இருக்கும்போது கன்னடத்திற்கான பண்டை இலக்கண மரபுகள் இருக்க முடியாது. எனவே, தமிழ் மரபுகளைப்பற்றியே நூலாசிரியர் கூறுகிறார். எனவேதான் சமற்கிருத மரபைப் பின்பற்றலாம், ஆனால் சமற்கிருதச்சொற்களைக் கலக்கக் கூடாது என்கிறார்.

நன்றி: இனிய உதயம், ஆகட்டு 2025

Sunday, August 3, 2025

குறள் கடலில் சில துளிகள் 31 – அறிஞர்களே கண்கள்; அவர்களைத் துணையாகக் கொள்க! – இலக்குவனார் திருவள்ளுவன்



(குறள் கடலில் சில துளிகள் 30 – பெரியாரைத் துணையாகக் கொள்க! – தொடர்ச்சி)

சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன்

சூழ்வாரைக் சூழ்ந்து கொளல்.  

(திருவள்ளுவர், திருக்குறள், பெரியாரைத் துணைக்கோடல், எண் ௪௱௪௰௫ – 445)

பதவுரை: சூழ்வார்-சூழ்ந்து இருப்பவர்; கண்-விழி; ஆக-ஆகும்படி; ஒழுகலான்-நடந்து கொள்ளுதலால்; மன்னவன்-வேந்தன்; ஆட்சியாளர்; சூழ்வாரை-பெரியாரை; சூழ்ந்து-ஆராய்ந்து; கொளல்-கொள்க.

அறிஞரகளே உலகின் கண்கள். எனவே, ஆட்சியாளர்கள் அவர்களைத் தம் சுற்றமாகக் கொண்டு இயங்க வேண்டும்.

சூழ் என்பதற்குச் சுற்றுதல், சுற்றியிருத்தல் என்பன மட்டும் பொருள்கள் அல்ல. ஆராய்தல், தேர்ந்தெடுத்தல், கலந்தாய்வு எனப் பல பொருள்களும் உள்ளன. இதனடிப்படையில் சூழ்வார் என்றால் கலந்தாய்விற்குரிய அறிஞர் என்று பொருள்.

இத்தகைய அறிஞர்களையே நமக்குத் துணையாக வைத்துக் கொள்ள வேண்டும். ஆதலின் அறிஞர் பெருமக்களையே ஆட்சியாளர் அமைச்சராக வைத்துக் கொள்ள வேண்டும்.

சூழ் என்ற சொல் சூழ்ந்துகொள், ஆராய் என்ற இரண்டு பொருளில் இக்குறளில் வந்துள்ளது. சூழ்ந்து என்றது தன்னைச் சுற்றிக்கொள்பவர்களாக ஏற்றுக்கொள்ளுமுன் அவர்கள் அறிவாலும் பயிற்சியாலும் சூழ்ச்சியாலும் தேர்ந்தவர்களா என்பதை ‘ஆராய்ந்து’ தனக்குத் துணையாகக் கொள்ள வேண்டும் என்பதாம்.

சூழ்வார் என்ற சொல்லில் உள்ள ‘சூழ்’ என்பது சூழ்ந்து கொள்      அ ஃதாவது சுற்றியிரு என்ற பொருளில் வந்து சூழ்வார் என்பது சூழ்ந்துள்ளவர் (சுற்றியிருப்பவர்) எனப் பொருள்படும். இங்கு நாட்டுத் தலைவனைச் சுற்றியிருப்பவர்கள் சூழ்வார் எனப்படுகின்றனர். ஆட்சியைத் திறம்பட நடத்துவதற்கு ஆற்றல் வல்ல அறவோர் அணுக்கமாக இருக்க வேண்டும். இவர்கள் வெவ்வேறு துறையில் சிறப்பு அறிவு கொண்ட பெரியோர்களாயிருப்பர். அவனுக்கு ஆராய்ச்சியுரையும் அறிவுரையும் கூறுபவர்கள் இவர்களே. அவர்களைக் கலந்து எண்ணியே ஆட்சித் தலைவன் அரசியல் முடிவுகளை எடுப்பான்; நல்லாட்சிக்கு அவ்வாறு கலந்துபேசி முடிவு எடுக்க வேண்டும். அத்தகையோர் அமைச்சர் பெருமக்கள், படைத்தலைவர்கள், புலவர்கள், ஒற்றர்கள், தூதர்கள், அறவாணர்கள் முதலானோர் ஆவர். இவர்கள் ஆட்சியாளரைச் சூழ இருத்தலால்  சூழ்வோர் எனப்படுகின்றனர். சூழ்வார் என்றதற்குச் சூழ்ச்சித் துணையாவார் என்றும் பொருள் கூறுவர்.

மணக்குடவர் “அரசன் தன்னைச் சூழ்ச்சியாற் கொல்ல நினைப்பாரைத் தானுஞ் சூழ்ச்சியாற் கொல்ல வல்லவனாதல்” என்று இப்பகுதிக்கு உரை கூறியுள்ளார். இவர் குறளின் பிற்பகுதியிலுள்ள ‘கொளல்’ என்ற சொல்லுக்கு ‘கொலல்’ என்று பாடம் கொண்டு இவ்வாறு கூறியுள்ளாரா எனத் தெரியவில்லை. அல்லது சூழ்ச்சி என்றால் தீவினை புரிய திட்டமிடல் என்னும் பொருள் உள்ளதால், அங்ஙனம் கருதி உரையெழுதினாரா எனத் தெரியவில்லை.

நன்கு கற்ற அறிஞரைத் தன் சுற்றமாகக் கொள்வது பற்றிய வேறு சில செய்யுள்களும் உள்ளன. அவற்றில் இரண்டு வருமாறு:

ஒற்றர் தங்களை ஒற்றரின் ஆய்தலும்

கற்ற மாந்தரைக் கண் எனக் கோடலும்

சுற்றம் சூழ்ந்து பெருக்கலும் சூது அரோ

கொற்றம் கொள் குறிக் கொற்றவற்கு என்பவே

(சீவக சிந்தாமணி, விமலையார் இலம்பகம் 28)

“ஒற்றரை ஒற்றரைக் கொண்டே ஆராய்தலும், அறநூல் கற்றவரைக் கண்போலக் கொள்வதும் மந்திரிச் சுற்றத்தையும் தந்திரிச் சுற்றத்தையும் இவன் இதற்குரியன் என்று ஆராய்ந்து பெருக்கலும் வெற்றிகொள்ளுங் கருத்தையுடைய அரசற்குச் சூழ்ச்சி யென்ப” எனப் பொருள் கூறுகின்றனர்.

கற்றார் பலரைத்தன் கண்ணாக இல்லாதான்

உற்றுஇடர்ப் பட்ட பொழுதின்கண் தேற்றம்

மரையா துணைபயிரும் மாமலை நாட!

சுரையாழ் நரம்பறுத் தற்று.

(பழமொழி, 260)

“பெண் மான்கள் தந்துணைகளை அழைக்கும் சிறந்த மலைநாடனே! நீதிநூல்களைக் கற்றவர்களைத் தனக்குக் கண்ணாகப் பெற்றிராத அரசன், யாதாயினும் ஒரு துன்பம் வந்துற்று, அத்துன்பத்தில் தான் அகப்பட்டு நின்றபொழுது, தானே ஒருவகையாகத் துணிதல், நரம்பினையுடைய சுரைபொருந்திய யாழின் அந்த ஒரு நரம்பையும் அறுத்தாற் போலும்” எனப் பொருள் கூறுகின்றனர்.

கிரேக்க மெய்யியலாளர்களும் மெய்யியல் அறிஞர்கள் துணை கொண்டு ஆட்சி நடப்பதே சிறந்த ஆட்சி என்கின்றனர்.

கண்ணின் பார்வைத்திறன் செம்மையாக இருக்க வேண்டும். அதுபோல் கண்ணாக விளங்க வேண்டிய சூழ்ந்திருப்போர் செம்மையாக இருத்தல் வேண்டும். இவ்வாறு சொல்வது ஆட்சியாளருக்கு மட்டும் உரியதல்ல. மக்களாய்ப் பிறந்த ஒவ்வொருவருமே துன்பம் வந்தால் அதைத் துடைத்தெறியவும் சிறந்த இலக்கினை அடைய நல்ல பாதை காட்டுவதற்கும் அறிவு, ஆற்றல், சூழ்வினைத் திறன், அறவுணர்வு உடையோரை உடன் இருப்பவர்களாகக் கொள்ள வேண்டும். ஆதலின்,

குறள்வழியில் கண்களாய்க் கருதுவதற்குரிய

அறிஞர்களைத் துணையாகக்  கொண்டு

சிறந்து வாழ்க!

Friday, August 1, 2025

நாலடி நல்கும் நன்னெறி 13: நிலைபுகழ் பெற நல்வினைகள் புரிவோம்! – இலக்குவனார் திருவள்ளுவன்



(நாலடி நல்கும் நன்னெறி 12: நன்றியில் செல்வத்தை விரும்பாதீர்! –  தொடர்ச்சி)

நாலடி நல்கும் நன்னெறி 13:

நார்த்தொடுத் தீர்க்கிலென் நன்றாய்ந் தடக்கிலென்

பார்த்துழிப் பெய்யிலென் பல்லோர் பழிக்கிலென்

தோற்பையுள் நின்று தொழிலறச் செய்தூட்டும்

கூத்தன் புறப்பட்டக் கால்.            

(நாலடியார், அறத்துப்பால், 3. யாக்கை நிலையாமை, பாடல் எண் 26)

பாடலின் பிரித்து எழுதிய வடிவம் :

நார்த் தொடுத்து ஈர்க்கில் என்? நன்று ஆய்ந்து அடக்கில் என்?

பார்த்துழிப் பெய்யில் என்? பல்லோர் பழிக்கில் என்?

தோற்பையுள்நின்று, தொழில் அறச் செய்து ஊட்டும்

கூத்தன் புறப்பட்டக்கால்.    

பதவுரை: தோல் பையுள் நின்று – தோலாலான பையாகிய உடம்பினுள் இருந்து, தொழில் அறச்செய்து ஊட்டும் – தொழில்களை முடியச் செய்து அவ்வுடம்பை இயக்கி வருகின்ற, கூத்தன் – கூத்தனாகிய  உயிர், புறப்பட்டக்கால் – உடலில் இருந்து வெளியே சென்ற பின், ஈர்க்கில் – ஈர்த்தல்; இழுக்கப்படுதல்;  நார் தொடுத்து ஈர்க்கில் என் – அவ்வுடம்பை நாரினாற் கட்டி இழுத்தா லென்ன, ஆய்ந்து – தூய்மை செய்து; நன்று ஆய்ந்து அடக்கில் என் – நன்றாகக் குளிப்பாட்டித்  தூய்மைசெய்து அடக்கஞ்செய்தால் என்ன, உழி – இடம்; பெய்யில் – பெய்தால் – வைத்தல்; பார்த்துழிப் பெய்யில் என் – பார்த்த இடத்திற் போட்டா லென்ன, பல்லோர் பழிக்கில் என் – பலரும் பழித்துச்சொன்னால்தான் என்ன ; வருகின்ற பெருமையோ சிறுமையோ ஒன்றுமில்லை. கூத்தன் – இங்கு உயிரைக் குறிக்கின்றது

பொருள்: தோற்பையாகிய உடம்புக்குள் இருந்து கூத்தாடும் உயிர் புறப்பட்டுச் சென்றுவிட்டால், மிஞ்சி இருப்பது உடல்தான்.  உடலைக், கயிற்றில் கட்டித் தரையில் இழுத்துச் சென்றால் என்ன? நன்கு ஆராய்ந்து குழி வெட்டிப் புதைத்தால்தான் என்ன? விலங்குகளும் பறவைகளும் உண்ணும் வகையில் வீசி எறிந்தால்தான் என்ன?  சவம் என்று பலரும் சொல்லிப் பழித்தால்தான் என்ன? எல்லாமே ஒன்றுதான்.

அதிகாரத் தலைப்பு விளக்கம்: யாக்கை என்றால் கட்டுதல் என்று பொருள்.  நரம்பு-நார்-எலும்பு-தசை-இரத்தம் முதலியவற்றால் கட்டப் பெற்றதாகிய உடம்பு யாக்கை எனப்படுகிறது.

நிலையாமை என்றால் நிலைத்த தன்மையின்மை. உடலின் நிலைத்த தன்மை குறித்துத் திருவள்ளுவர் முதலானோரும் கூறியுள்ளனர். இதன் காரணம் நிலையற்ற உடலில் மட்டும் கருத்து செலுத்தாமல் உயிரையும் பேண வேண்டும் என்பதற்காகத்தான். உயிரை எவ்வாறு பேணுவது? நற்செயல்கள் புரிவதன் மூலம், அறச் செயல்கள் ஆற்றுவதன் மூலம் உயிரைப் பேண வேண்டும் என்கின்றனர்.

பை என்றால் என்ன? எதையாவது அல்லது எவற்றையாவது உள்ளே வைத்திருக்கும் கொள்கலமதானே! உடல் தோலால் மூடப்பட்டு உள்ளே உடலுறுப்புகளை வைத்திருக்கிறதல்லவா? அதனால் தோற்பை எனப்படுகிறது.

மேலும், இத்தோற்பையுள்தான் உயிரும் இருக்கிறது. உயிர் இன்பமும் துன்பமும் தந்து பல்வகைத் தொழில்வினைகளை ஆற்றுகின்றது. அவ்வுயிர் இல்லையேல் உடலுக்கு இயக்கமும் இல்லை. அதனால்,  உயிர் நீங்கியபின் உடலுக்கு மதிப்பும் இல்லை. உயிர் இருக்கும் வரை மதிப்புடன் பெயரால் குறிக்கப்பெற்றவர், ஐயா, அம்மா அல்லது அவர், இவர் என்று சொல்லப்பட்டவர், உயிர் நீங்கிய பின் அது அல்லது இதுவாகி விடுகிறார். அதை எரிப்பீர்களா, அடக்கம் செய்வீர்களா? அதைப் பாடையில் கிடத்து, அதன் மேல் உள்ள மாலைகளை அகற்றி விடு என்பன போன்றுதான் அஃறிணையில் சொல்லுவார்கள்.

1.        சணல் நார், 2. பூண்டு நார், 3. காய்கறி நார், 4. பட்டை நார், 5. தேங்காய் நார், 6. வித்து  நார், 7. கற்றாழை நார், 8. முள்ளி நார், 9. பருத்தி நார், 10. வாழை நார், 11. எருக்கு நார், 12. செம்புளிச்சை நார், 13. வக்கை நார் என நார் பல்வகைப்படும். நாரால் கட்டி இழுத்தால் என்ன என்பதன் காரணம் கயிற்றுப் பயன்பாட்டிற்கு முன் நார்தான் கயிறாகப் பயன்படுத்தப்பெற்றது.

உடலைப் பல்வேறு வகையில் நாம் போற்றுகிறோம், பேணுகிறோம். உயிர் நீங்கிய பின் நாம் உடலை மதிப்பதில்லை. எனவே, உயிர் இருக்கும்போதே உயிர் இருக்கும் உடலைப் பாதுகாப்பதுடன் உடலுள் இருக்கும் உயிரையும் நாம் பாதுகாக்க வேண்டும். அதற்கு எனன செய்ய வேண்டும்? அறச்செயல்கள் செய்ய வேண்டும்.

அப்படியானால் உடலைப் பேண வேண்டாவா?

“உடம்பார் அழியின் உயிரார் அழிவர்”

(திருமந்திரம், பாடல் 724) என்கிறார் திருமூலர்.

உயிரைக்காக்க வேண்டுமானால் உடலையும் காக்க வேண்டும். ஆனால், உடலை மட்டும் பேணிப்பயனில்லை.

ஆகவே நிலையாமையைக் கூறுவதன் மூலம் நிலையான புகழுக்கான நல்லன ஆற்ற இப்பாடல் வலியுறுத்துகின்றது. நாமும்,

நிலைபுகழ் பெற நல்வினைகள் புரிவோம்!

Followers

Blog Archive