Saturday, June 21, 2025

சங்கப் புலவர்கள் பொன்னுரை – 17: பிறருக்கு உறவாகவும் ஊக்கமாகவும் இருப்போம்! – இலக்குவனார் திருவள்ளுவன்



(சங்கப் புலவர்கள் பொன்னுரை –16 தொடர்ச்சி)

உள் இலோர்க்கு வலியாகுவன்
கேள் இலோர்க்குக் கேளாகுவன்

               புறநானூறு 396 : 10-11

பாடியவர்: மாங்குடி கிழார்.
பாடப்பட்டோன்: வாட்டாற்று எழினியாதன்.
திணை: பாடாண்.
துறை: கடைநிலை.

மன்னன் எழினியின் மகன் ஆதன் எழினியாதன் எனப்படுகிறான்.

உள் = மனவெழுச்சி (ஊக்கம்). வலி = பற்றுக்கோடு (ஆதரவு), வலிமை. கேள் = உறவு.

வாட்டாறு என்னும் பெயருடைய ஓர் ஊர் சோழ நாட்டில் உள்ள பட்டுக்கோட்டை அருகே உள்ளது.

மற்றோர் ஊராகிய சேரநாட்டில் இருந்த வாட்டாற்றைச் சார்ந்தவன் எழினி ஆதன் என்று உரைவேந்தர் ஒளவை சு. துரைசாமி(ப்பிள்ளை) புறநானூற்று உரையில் கூறுகிறார்.

வாட்டாற்று எழினியாதன், ஊக்கம் இல்லாதார்க்கு உரமாகித் துணை செய்வான்; சுற்றம் இல்லாதார்க்கு உற்ற உறவாகி மகிழ்ச்சி அளிப்பான்.

அஃதாவது, உள்ளத்தில் தெம்பு இல்லாதவர்களுக்கு இவன் வலிமைத் துணையாக விளங்குவான். உறவினர் இல்லாதவர்களுக்கு உறவினனாக இருந்து உதவுவான்.

ஊக்கம் ஒவ்வொருவருக்கும் தேவை என்று திருவள்ளுவர் ‘ஊக்கமுடைமை’ எனத் தனியதிகாரமே வைத்துள்ளார்.

உரமொருவற்கு உள்ள வெறுக்கைஅஃ தில்லார்
மரம்மக்க ளாதலே வேறு. (திருக்குறள் ௬௱ – 600)

– என்கிறார் திருவள்ளுவர்.

ஒருவனுக்கு உள்ள செல்வம் என்பது ஊக்கமுடைமையே! ஊக்கம் ஆகிய செல்வம் இல்லாதவர், தோற்றத்தில் மக்கள்போல் காட்சியளித்தாலும் மரங்களைப் போன்றவரே! என்கிறார்.

இத்தகைய மன வலிமையில்லாதவர்க்கு ஊக்கமாகிய செல்வம் தரும் உரவனாகவும் பொருட் செல்வம் இல்லார்க்குப் பொருள் வழங்கி உறவனாகவும் எழினியாதன் திகழ்கிறார்.

உரவு என்றால் வலிமை. உரவில்லாதவர்க்கு வலிமை தருவதால் உரவன். உறவு என்றால் சுற்றம். உறவன் என்றால் சுற்றம் இல்லாதவர்க்குச் சுற்றமாக இருந்து உற்றுழி உதவுபவன்.

எழினியாதன் கொடையை மழையாகப் பொழிபவன். பெரிய சுற்றத்தார் உண்டதுபோக உணவு எஞ்சுமாறு, அவர்கள் மகிழுமாறு மிகுதியான உணவுப் பொருள்களை அளிப்பவன்.

ஆதலால் அவனை நாடி வருவோர் பெற்ற செல்வத்திற்கு அளவே இல்லை. அவர்கள் வானத்து மீன்கள் போலும் அவன் வெண்மையான முழுநிலாவைப் போலும் திகழ்ந்தனர்.

இப்படியே அவன் என்றென்றும் விளங்கவேண்டும். நாள்தோறும் அவர்களும் அவர்களைப் போன்றவர்களும் வாழ்த்திப் பாராட்டுமாறு களிற்று நிரைகளையும் நல்ல அணிகலன்களையும் வழங்கி அவன் மாசுபடாத புகழுடன் விளங்க வேண்டும்.

தானும் வாழ்த்த வேண்டும். பிறரும் வாழ்த்த வேண்டும். வாழ்த்தும்படி அவன் நல்ல செல்வ வளத்தை வழங்கிக்கொண்டே இருக்கவேண்டும்.

எனவே, பாடலை…

யாமும் பிறரும் வாழ்த்த, நாளும்
நிரைசால் நன் கலன் நல்கி,
உரை செலச் சிறக்க, அவன் பாடல்சால் வளனே!

என முடிக்கிறார்.

உரை என்றால் புகழ் என்றும் சால் நிரம்பிய என்றும் பொருள்கள்.

இவ்வாறு புலவர் பாடும் புகழுடைய அவன் பெருஞ்செல்வம் மேலும் பெருகுவதாக என வாழ்த்துகிறார்.

இவ்வாறு வாழ்த்துவதன் மூலம் எழினியாதனின் சிறப்பைக் கூறி நாமும் அவன் போல் வலிமையில்லாதவரைத் தாங்கும் வலிமையாளனாகவும் சுற்றம் இல்லாதவருக்குச் சுற்றமாகவும் இருக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறார்.

எனவே நாம் 

ஊக்கமில்லாதவர்க்கு ஊக்கமாகவும் 

சுற்றம் இல்லாதவர்க்குச் சுற்றமாகவும் தி

கழ்வோம்!

Tuesday, June 17, 2025

சட்டச் சொற்கள் விளக்கம் 976-980 : இலக்குவனார் திருவள்ளுவன்



(சட்டச் சொற்கள் விளக்கம் 971-975 : இலக்குவனார் திருவள்ளுவன் – தொடர்ச்சி)

976. Attributable    பண்புக்கூறு
        
கற்பித்துக் கூறு
உடைமையாக்கத் தக்க
கற்பித்துக் கூறத்தக்க
காரணம் கற்பித்தல்

சாட்டத்தக்கது.

சட்டத்தில், “பண்புக்கூறு” என்பது  குறிப்பிட்ட ஒருவர், நிகழ்வு அல்லது செயலால் ஏற்பட்டதாகவோ, விளைந்ததாகவோ ஒதுக்கப்பட்டதாகவோ கருதப்படுவதைக் குறிக்கிறது. இது பெரும்பாலும் ஒரு காரணத் தொடர்பு அல்லது பொறுப்பைக் குறிக்கிறது.

கொத்தடிமைத் தொழிலாளர் முறை (ஒழிப்புச்) சட்டம், 1976(Bonded Labour System (Abolition) Act, 1976) பிரிவு (2): துணைப்பிரிவு (1) இல் உள்ள எதையும் பொருட்படுத்தாமல், இந்தச் சட்டத்தின் கீழ் ஏதேனும் குற்றம் ஒரு நிறுவனத்தால் செய்யப்பட்டு, அந்தக் குற்றம் நிறுவனத்தின் எந்தவோர் இயக்குநர், மேலாளர், செயலாளர் அல்லது பிற அதிகாரியின் இசைவு அல்லது உடந்தையுடன் செய்யப்பட்டுள்ளது அல்லது அதற்குக் காரணம் என்று(or is attributable to)  மெய்ப்பிக்கப்பட்டால், அத்தகைய இயக்குநர், மேலாளர், செயலாளர் அல்லது பிற அதிகாரி அந்தக் குற்றத்தைச் செய்ததாகக் கருதப்பட்டு, அதற்கேற்ப நடவடிக்கை எடுக்கப்படுவதற்கும் தண்டிக்கப்படுவதற்கும் ஆளாக நேரிடும்.  

இந்தியாவின் கடல்சார் மண்டலங்கள் (வெளிநாட்டுக் கப்பல்கள் மூலம் மீன் பிடித்தலை ஒழுங்குபடுத்துதல்) சட்டம், 1981, பிரிவு 17(2)(THE MARITIME ZONES OF INDIA (REGULATION OF FISHING BY FOREIGN VESSELS) ACT, 1981, S. 17(2))  

நிறுவனங்களால் செய்யப்படும் குற்றங்கள். (1) இந்தச் சட்டத்தின் கீழ் ஒரு நிறுவனம் குற்றம் செய்திருந்தால், குற்றம் நடந்த நேரத்தில், நிறுவனத்தின் வணிகத்தை நடத்துவதற்கு நிறுவனத்தின் பொறுப்பில் உள்ளவராகவும் பொறுப்பாளராகவும் இருந்த ஒவ்வொருவரும், அதே போல் நிறுவனமும் அந்தக் குற்றத்தைச் செய்ததாகக் கருதப்படுவார்கள், மேலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதற்கும் தண்டிக்கப்படுவதற்கும் ஆளாக நேரிடும்.

இந்தத் துணைப்பிரிவில் உள்ள எதுவும், அத்தகையவர் தனக்குத் தெரியாமல் குற்றம் செய்யப்பட்டதாகவோ அத்தகைய குற்றம் நிகழாமல் தடுக்க அனைத்து உரிய முயற்சிகளையும் மேற்கொண்டதாகவோ மெய்ப்பித்தால், இந்தச் சட்டத்தில் வழங்கப்பட்ட எந்தவொரு தண்டனைக்கும் அவரைப் பொறுப்பாக்காது.

சுற்றுச்சூழல் சட்டம்: சுற்றுச்சூழல் விதிமுறைகள் பெரும்பாலும் மாசுபட்ட நிலத்தைச் சரிசெய்வதற்கு யார் பொறுப்பு என்பதை வரையறுக்கப் “பண்புக்கூறு” என்ற சொல்லைப் பயன்படுத்துகின்றன. ஒரு பொருள் ஒரு குறிப்பிட்ட மூலத்திலிருந்து “பண்புக்கூறு” என்று கண்டறியப்பட்டால், அந்த மூலமே அதைத் தூய்மை  செய்ய வேண்டியிருக்கும்.
977. Attributable to any neglect on his part        அவர்பாலுள்ள புறக்கணிப்பு எதற்கும்‌ காரணம் கற்பிக்கதாய்‌ இருக்கிற;

அவர்பாலுள்ள பாராமுகம் எதற்கும்‌ காரணம் கற்பிக்கதாய்‌ இருக்கிற;
978. Attribute    குணம்/பண்பு

கற்பித்துக்‌ கூறு

குணம் என்பது இனம்நிறம்சமயம்மரபவழிதேசியத் தோற்றம்குமுகாயப் பொருளாதார நிலைகல்வி நிலைஇயலாமைபாலினம்பாலின அடையாளம்உடல் தோற்றம்நலவாழ்வு நிலை அல்லது பாலியல் நோக்குநிலை உட்பட உண்மையான அல்லது உணரப்பட்ட தனிப்பட்ட இயல்பாகும்.
 979. Auctionஏலம்

ஏலம் என்பது ஒரு பொது விற்பனையாகும்அங்கு அதிக விலை கேட்பவருக்குப் பொருட்கள் விற்கப்படுகின்றன. இந்தச் செயல்முறையில் ஏலதாரர் ஏலப் போட்டியை எளிதாக்குகிறார். மேலும் ஏலதாரர் அதிக ஏலத்தை ஏற்றுக்கொள்ளும்போது விற்பனை இறுதி செய்யப்படுகிறது.

இதன் மூலச்சொல்லான auctiō என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் அதிகரித்தல்பொருள் விலை வாங்குவோரால் அல்லது கேட்போரால் அதிகரித்துக்கொண்டே போவதால் இச்சொல்லால் குறித்தனர்பின் ஏலம் என்னும் பொருள் வந்தது.  

போட்டியிற் பலர்முன் ஏற்றும் விலைஒவ்வொரு நிலையிலும் இஃது இயலுமா  >ஏலுமாஏலுமா என்பதன் அடிப்படையில் ஆராயப் படுவதால் ஏலம் என்றாயிற்று.

மணப்பொருள் ஒன்றின் பெயரும் ஏலம்.
 980. Audi alteram partemஇருபுறங் கேட்டல்

இரு தரப்பினரையும்‌ கேட்டல்

மறு தரப்பினரையும்‌ கேட்டல்

Audi alteram partem (audiatur et altera pars) என்பது இலத்தீன் தொடர்இதன் பொருள், “மறு தரப்பையும் கேளுங்கள்.” அல்லது “மற்ற பக்கமும் கேட்கப்படட்டும்“.

எந்தவொருவரும் நியாயமான உசாவலின்றி தீர்ப்பளிக்கப்படக்கூடாது என்பது கொள்கையாகும்.  அதில் ஒவ்வொரு தரப்பினரும் தங்களுக்கு எதிரான ஆதாரங்களுக்கு விடையளிக்க வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்பதை இத் தொடர் உணர்த்துகிறது.

(தொடரும்)

Thursday, June 12, 2025

குறள் கடலில் சில துளிகள் 29. – பெரியாரைப் பேணுக! – இலக்குவனார் திருவள்ளுவன்

 ஃஃஃ         13 June 2025      கரமுதல


குறட் கடலிற் சில துளிகள் 29 . பெரியாரைப் பேணுக!

அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப்

பேணித் தமராக் கொளல்.  

(திருவள்ளுவர்,  திருக்குறள், பெரியாரைத் துணைக்கோடல்,  குறள் எண் ௪௱௪௰௩ – 443)

பதவுரை: அரியவற்றுள்-அருமையானவற்றுள், (அருமையான பேறுகளுள்); எல்லாம்-அனைத்தும்; அரிதே-அருமையானதே; பெரியாரை-பெருமையுடையவரை; பேணி-விரும்பி; நலன்பாராட்டி; உவப்பன செய்து; தமர்-தம்மவர்; தமக்கு நெருக்கமான உறவினர், தமக்குச் சிறந்தாராக; கொளல்-கொள்க.

பொழிப்புரை : பெரியோரையே விரும்பித் தமக்குரிய சுற்றத்தினராகப் பெற்றுக் கொள்ளுதல், பெறுதற்கரிய பேறுகளுள் எல்லாம் அரிதான பெரும்பேறு ஆகும். (புலியூர்க் கேசிகன், திருக்குறள் – புதிய உரை)

மணக்குடவர், “பெரியாரைக் கொளலென்பது மந்திரி புரோகிதரைக் கூட்டிக் கொள்கை” என்கிறார்.

பரிப்பெருமாள், குறிப்புரையில் “பெரியாரைக் கொளலென்பது மந்திரி புரோகிதரை.அவரைத் தேடிக் கூட்டுதல் அரிது என்றது.” என்கிறார்.

புரோகிதர் ஆரியச் சடங்குகளைச் செய்விப்பவர். இவர்களைத் துணையாகக் கொள்வதற்கான தேவை ஏன் வருகிறது? பல நிலைகளிலும் உள்ள பொதுமக்கள் பெரியாரைத் துணைக் கொள்ள வேண்டும். எனினும் உரையாசிரியர்கள் ஆள்வோர்க்கு முதன்மை கொடுத்து அரசர்க்குத் துணையாக இருப்பவரைக் கூறுகின்றனர்.  அவ்வாறு கூறும் பொழுது, பெரியாரைத் துணைக்கோடல் என்பது குறித்து விளக்கும் மணக்குடவர் அரசன் குற்றம் அற்றானாயினும், தன்னின் முதிர்ந்த அறிவுடையாரைத் துணையாகக் கொண்டு வினைசெய்ய வேண்டுதல் என்கிறார்.

பரிமேலழகர், அரசன், தீநெறி விலக்கி நன்னெறிச் செலுத்தும் பேரறிவுடையாரைத் தனக்குத் துணையாக் கோடல் என்று சொல்லுகிறார். அத்துடன் “பேரறிவுடையர் என்பவர், அரசர்க்கும் அங்கங்கட்கும் மானுடத் தெய்வக் குற்றங்கள் வாராமல் காத்தற்கு உரிய அமைச்சர் ,புரோகிதர்” என்று விளக்கவும் செய்கிறார்.

உரையாசிரியர்கள் தங்கள் காலத்தில் ஆரியம் ஆதிக்கம் செலுத்திய சூழலில் அல்லது தாங்கள் ஆரியத்திற்கு ஆட்பட்டுத் தேவையே இல்லாமல் ஆரியச்சடங்காளரை, அஃதாவது புரோகிதரை உரையில் சேர்த்தது தவறேயாகும். அவ்வாறு சேர்த்தது தவறு என்னும் பொழுது அமைச்சருக்கு இணையாகப் புரோகிதரைக் கூறுவது பெருந்தவறாகும்.

அரிதான செயல் என்பது எதுவாகும்?

பரிப்பெருமாள் “செய்தற்கரியன வெல்லாவற்றினும் செய்தலரிது” என்கிறார். பரிமேலழகர், “அரசர்க்கு அரிய பேறுகள் எல்லாவற்றுள்ளும் பெரிது” என்கிறார்.

அரிது என்பதை விளக்கும் பரிதி, “ஒரு மலையையெடுத்து ஒரு மலைமேலே வைத்தல். ஒரு கடுகிலே ஏழுகடலை அடக்கல். இதிலும் பெரியது” என்கிறார்.

காலிங்கர்,  “கல்வியும் கேள்வியும் அறிவுடைமையும் குற்றங் கடிதலும் பிறவும் ஆகிய செயற்கரிய எல்லாவற்றுள்ளும் பெரிதும் அரிது” என்கிறார்.

இத்தகைய அரிதான செயல்களாக ஆரியச்சடங்குகளையும் அவற்றைச் செய்விக்கும் புரோகிதரையும் கூறுவது தமிழ்நெறிக்கு எதிரான பெருங்கொடுமையாகும்.

துணையாகக் கொள்ள வேண்டிய பெரியாரை விளக்கும்போது, கல்வித்துறையில் சிறந்தவர்கள், படைத்துறையில் வல்லுநர்கள், அறிவியல் துறையில் ஆற்றலாளர்கள், இலக்கியத் துறையில் ஈடிணையற்றோர், வானியலில் வல்லவர்கள் அன்பிலும் பண்பிலும் தலை சிறந்தோர், நல்லாற்றுப்படுத்துவதில் வல்ல அமைச்சர்கள் முதலானவர்களைக் கூறாமல் அவ்வரிசையில் புரோகிதரைச் சேர்த்தது தவறு என உணர்வோம்.

ஆள்வோராயினும் வேறு நிலைகளில் வாழ்வோராயினும் குற்றங்குறையற்ற வாழ்க்கைக்கு நாம் என்றும்

பெரியாரைத் துணையாகக் கொள்வோம்!

Saturday, June 7, 2025

நாலடி நல்கும் நன்னெறி :11. நல்லன புரிந்து நற்கதி/நன்மை அடைவோம்! – இலக்குவனார் திருவள்ளுவன்

 




(நாலடி நல்கும் நன்னெறி :10  வழி வழியே இறந்தோரைத் தொடர்ந்து செல்வதே இயற்கை –  தொடர்ச்சி)

எந்நிலத்து வித்திடினும் காஞ்சிரங்காழ் தெங்காகா(து)
எந்நாட் டவரும் சுவர்க்கம் புகுதலால்
தன்னால்தான் ஆகும் மறுமை; வடதிசையும்
கொன்னாளர் சாலப் பலர்.

நாலடியார், அறிவுடைமை, 243

சொற்பொருள் : 
கொன்னாளர் = கரிசாளர் (பாவிகள்) ; காழ் = விதை; எனவே, காஞ்சிரங்காயின் /காஞ்சரங்காயின் விதை எனலாம்.

காஞ்சரஞ்காய் என்பது பூவரச மரத்தைப்போல் தோற்றமளிக்கும் நச்சுமரத்தின் காய். இதனை எட்டி மரத்தின் காயாக உரையாசிரியர்கள் தரும் விளக்கம் தவறு என்று செ.சொ.பி.பேரகர முதலி கூறுகிறது.

“இஃது எட்டியைப்போல் கசப்புடையதன்று. தின்றால் ஓரளவு இனிப்பதும், உண்டாரைக் கொல்வதுமாகிய பழங்களைக் காய்க்கும் மரம்.” எனப் பேரகர முதலி கூறுகிறது. சென்னைப் பல்கலைக்கழக அகரமுதலியும், சாம்பசிவம் மருத்துவ அகரமுதலியும், பிற அகரமுதலிகளும் இதனை  எட்டிக் கொட்டை எனக் குறித்திருப்பது தவறு என்றும் பேரகர முதலி கூறுகிறது.

பாடற்பொருள் : எத்தகைய மண்ணில் விதைத்தாலும் காஞ்சரங்காய் தென்னை மரமாக முளைக்காது. எந்த நாட்டில் பிறந்தாலும் நல்லறம் புரிபவர்கள் மேலுலகம் புகுவர். வடநாட்டிலும் பாவிகள் பலர் உள்ளனர்.

வட நாட்டில் பாவிகள் பலர் உள்ளனர் என்பதன்மூலம் வடநாடு உயர்வானது, எனவே, வடவர் அனைவரும் மேலுலகம் புகுவர் என்னும் ஆரியத்தைப் புலவர் மறுக்கிறார்.

நல்லறம் புரிந்தால் நல்லுலகம் செல்வர். தீ வினை புரிந்தால் வீழ்கதி(நரகம்) செல்வர். அவ்வாறிருக்க இங்கே திசையின் அடிப்படை யில் நல்லுலகம் குறித்தும் வீழ்கதி(நரகம்) குறித்தும் கூறியதை எடுத்துக்காட்டாகக் கூ றுவது ஏன்?

தென்னிந்தியாவில் பிறந்தவர் நல்லுலகம் செல்ல மாட்டார்கள்; வட இந்தியாவில் பிறந்தவர்கள் மட்டுமே நல்லுலகம் புக முடியும்  என்று சில ஆரிய நூல்கள் கூறுகின்றன. அவற்றை மறுத்து இனத்தின் அடிப்படையிலும் பிறப்பின் அடிப்படையிலும் நல்லுலகமும் வீழ்கதியும் அடைவர் என்பதை மறுப்பதற்காகவே, சனாதனத்திற்கு எதிராகவே நாலடியார் கூறுகிறது.

தென்னாட்டை ‘நரக பூமி’ என்றும் வட நாட்டைப்’ புண்ணிய பூமி’ என்றும் ஆரியம் கூறுகிறது.  ஆயினும், வித்தின் இயல்பிற் கேற்பத்தான் மரம் வளர்கிறது. நிலத்தின் தன்னமயி னடிப்படையில் அல்ல. அதைப்போல் மறுமைப் பயன் என்பது அவரவர் செய்யும் நல்வினைகளின் அடிப்படையில்தான். எனவே, நல்லுலகம், வீழ்கதி என்பதன் காரணம் அவரவர் செய்கையே! பிறப்பாலோ பிறப்பிடத்தாலோ இல்லை என நாலடியார் மறுக்கிறது.

இப்பாடல் நாலடியாரில் அறிவுடைமை அதிகாரத்தில் உள்ளது. தீவினை நல்வினை ஆற்றுவது என்பது அவரவர் நல்லொழுக்கம், தீயொழுக்கத்தின் அடிப்படையிலேயே. எனவே, ஒழுக்கத்திற்கு அடிப்படை அறிவுடைமை என்று அறிவுடைமை அதிகாரத்தில் வைக்கப்பட்டுள்ளது.

நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்

என்றும் இடும்பை தரும்.   (திருக்குறள், ௱௩௰௮ – 138)

என்கிறார் திருவள்ளுவர். ஒழுக்கத்தின் அடிப்படையில்தான் நல்லுலகமும் தீ யுலகமும் என்பதையே திருவள்ளுவர் கூறுகிறார். இதன் மூலம் ஆரியக் கருத்தைத் திருவள்ளுவர் மறுத்துரைக்கிறார்.

இத்தமிழ்நெறியின் வழியிலேயே நாலடியாரும் நல்லன செய்தால் நல்லுலகம் அடையலாம் என்கிறது.

இறப்பிற்குப் பிந்தைய உலகம் இருக்கிறதோ இல்லையோ, ஆனால் நன்மை செய்தால் நன்மை எய்தலாம் தீமைபுரிந்தால் தீமையே அடைவர் என்பதாகக் கருதலாம்.

முனிவராக இருந்தாலும் தமிழினத்திற்கு எதிராக ஆரியம் கூறும் கருத்துகளுக்குப் புலவர் தக்க எடுத்துக்காட்டுடன் மறுமொழி அளித்துள்ளார். நாமும் காஞ்சிரங்காய் தெங்காகாது என்பதை உணர்ந்து

நல்லன புரிந்து நற்கதி/நன்மை அடைவோம்!

Thursday, June 5, 2025

சங்கப் புலவர்கள் பொன்னுரை – 16 : பயன் கருதாமல் பிறர் துன்பம் துடைக்க உதவுவோம்! – இலக்குவனார் திருவள்ளுவன்



“எத்துணை ஆயினும் ஈத்தல் நன்று என
மறுமை நோக்கின்றோ அன்றே
பிறர் வறுமை நோக்கின்று அவன் கை வண்மையே”

             புறநானூறு 141 : 13-15

திணை – பாடாண்
துறை – பாணாற்றுப்படை; புலவராற்றுப்படையுமாம்.

வையாவிக்கோப் பெரும்பேகனைப் பரணர் பாடியது.

“பாணன் சூடிய பசும்பொன் தாமரை”

எனத் தொடங்கும் பாடலில் இடம் பெறும் வரிகள்.

பதவுரை: எத்துணை = எவ்வளவு, எத்தனை; ஈத்தல் = கொடுத்தல்; மறுமை = மறுபிறவி, மறுவுலகம் என்பர் பிறர். மறுபயன் என்கிறார் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்.

நோக்கின்றோ = நோக்கியது; அன்றே = அல்ல; வண்மை = வள்ளல் தன்மை

கொடுப்பது நன்று என எவ்வளவு கொடுத்தாலும் அவ்வாறு அளிப்பது மறுமைப் பயன் நோக்கியன்று; அஃதாவது, பிறருக்குக் கொடுப்பதால் மறுபயன் கிடைக்கும் என்று கருதிக் கொடுப்பவனன்று பேகன்.

அவனது கொடைத் தன்மை பிறரது வறுமைத் துன்பத்தைப் போக்க வேண்டும் என்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்டது.

தேவைப்படுவது சிறிதோ, பெரிதோ, எந்த அளவாயினும் ஈதல்தான் பெரிது எனக் கொடுப்பவன் என்று தேவையறிந்து கொடுப்பவன் என்கிறார்.

இதனைப் புலவர் தாமாகக் கூறாமல் பரிசில் பெற்ற பாணன், பரிசில் பெற வந்த பாணனிடம் கூறுவதுபோல் கூறுகிறார்.

‘பே’ என்னும் சொல்லின் ஒரு பொருள் மழை முகில். மழை முகில் போன்றவன் என்ற பொருளில் பேகன் என்று பெயர் வந்ததாகப் பொருள்.

கொடை மடத்தால் மயிலுக்குப் போர்வை அணிவித்த மன்னன்தான் பேகன். கடையெழு வள்ளல்களில் ஒருவனாகப் போற்றப்படுபவன்.

ஒருவருக்குக் கொடுப்பது, உதவும் வள்ளல் என்றோ கொடைத் தன்மையில் சிறந்தவர் என்றோ பிறர் பாராட்டுவதற்கோ புகழ்ந்து பேசுவதற்கோ அல்ல. ஒருவரின் துன்பத்தைப் போக்க வேண்டும் எனக் கருதியே கொடுப்பது ஆகும்.

பிறர் துன்பம் போக்கும் வள்ளல் தன்மை மிக்கவனே பேகன். இவ்வாறு பரணர் வையாவிக் கோப்பெரும் பேகனைப் பற்றிச் சிறப்பாகக் கூறியுள்ளார்.

பிறருக்குக் கொடுப்பதன் மூலம் பயன் எதிர்நோக்காமல் செயற்படுவதே சிறப்பாகும்.

“இம்மை செய்தது மறுமைக்கு ஆம் எனும்,
அறவிலை வணிகன் ஆஅய் அல்லன்

புறநானூறு 134 : 1-2

என்று புலவர் ஏணிச்சேரி முடமோசியார் ஆய்அண்டிரனைப் பற்றிக் கூறும் பொழுது இம்மையில் செய்யும் நற்செயல் மறுமைக்குப் பயன் தரும் என்று கருதும் அறத்தை விலைபேசும் வணிகன் அல்லன் என்று பாராட்டியிருப்பார்.

கொடை என்பது இருப்பவர்க்கும் தேவை இல்லாதவர்க்கும் கொடுப்பது அல்ல. இல்லாதவருக்கும் தேவை இருப்பவர்களுக்கும் தேவையறிந்து கொடுப்பதுதான் உண்மையான கொடை.

அதனால்தான் திருவள்ளுவரும்,

வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்

குறியெதிர்ப்பை நீர துடைத்து. (திருக்குறள், ௨௱௨௰௧ – 221)

என்கிறார். அஃதாவது ஒன்றும் இல்லா வறுமையாளருக்குக் கொடுப்பதுதான் ஈகை. பிற வெல்லாம் மறுபயனை எதிர்நோக்கிக் கொடுப்பதே ஆகும்.

இவ்வாறுதான் மன்னன் பேகனும். வறியவர்களிடமிருந்து எதிர்ப்பயன் ஒன்றும் இவருக்குத் தேவையில்லை.

ஆனால், இலலாதவர்க்குக் கொடுப்பதன் மூலம் மறுமையில் பயன் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறதே அம் மறு பயனை எதிர்நோக்கிக் கொடுக்கலாம் அல்லவா? அவ்வாறு மறுபயன் நோக்கி அவன் கொடுககவில்லை. எனவேதான் பரணர் போற்றுகிறார்.

பெரு மழை, பெரு வெள்ளம், கடும்புயல், நில நடுக்கம், கடல்கோள் முதலிய இயற்கை இடர்களின் பொழுதும் பெருநேர்ச்சி(விபத்து)களின் பொழுதும் யார், எவர் என அறியாமல் பயன் நோக்காது மக்கள் பாதிப்புற்றவர்களுக்குத் தாமாக முன்வந்து உதவுகிறார்கள் அல்லவா? இவ்வுதவிதான் பயன் கருதா உதவியாகும். இதுபோல்

நாமும் சங்கப் புலவர்கள் பொன்னுரையை ஏற்றுப்

Followers

Blog Archive