Thursday, July 31, 2025

சங்கப் புலவர்கள் பொன்னுரை – 19 : மக்களின் பொருள் அழியும்படி வரிப்பொருள் பெறாதே!-இலக்குவனார் திருவள்ளுவன்

 





மரம் சா மருந்தும் கொள்ளார், மாந்தர்;
உரம் சாச் செய்யார், உயர்தவம்; வளம் கெடப்
பொன்னும் கொள்ளார்

புலவர் கணி புன்குன்றனார்நற்றிணை 226.1-3

சிலர் புலவர் பெயரை “யாதும் ஊரே யாவரும் கேளிர்” எனப் பாடிய கணியன் பூங்குன்றனார் எனக் குறிப்பிடுகின்றனர்.

சொற்பொருள்: மரம் சா – மரம் சாகும்படி; உரம் சா – வலிமை குன்றும்படி: பொன்னுங் கொள்ளார் மன்னர் – ஆள்வோர் இறைப்பொருள் வாங்க மாட்டார்.

இலை, பூ, காய், கனி, வேர், பட்டை முதலான எல்லா வகையிலும் மருந்தாகப் பயன்படும் மருந்து மரத்தை அதன் சிறப்பான பயன் அனைத்தும் ஒருங்கே கிடைக்க வேண்டும் என்று மரத்தை வீழ்த்திப் பயன்படுத்துவார்களா? அல்லது மரத்தைப் பட்டுப்போகச் செய்வார்களா?

வலிமை பெறத் தவம் இருப்பவர்கள், தங்கள் வலிமை கெடும்படிப் பட்டினி கிடந்து வலிமை குன்றுவார்களா?

மக்களின் பொருள் வளம் அழியும்படி வரிப்பொருள் பெறுவார்களா?

இவ்வாறெல்லாம் செய்ய மாட்டார்கள் அல்லவா?

இப்பாடலின் மையப் பொருள் இக்கருத்துகள் அல்ல. இவற்றின் மூலம் பொருள் திரட்டச் சென்ற தலைவன் திரும்புவதற்குள் அதன் பயனைத் துய்க்கத், தான் இருக்க வேண்டுமல்லவா?

தானில்லாதுபோன பின்பு செல்வம் திரட்டி வந்து என்ன பயன்? எனத் தலைவி, தோழியிடம் உணர்த்துவதே! இருப்பினும் இவ்வுவமைகள் மூலம் மூன்று அறக்கருத்துகளைப் புலவர் குறிப்பிடுகிறார். அவற்றில் ஒன்றைத்தான் நாம் இங்கே பார்க்கிறோம்.

அரசன் எவ்வாறு வரி திரட்ட வேண்டும்?

“காய் நெல்லறுத்து” எனத் தொடங்கும் பாடலில் புலவர் பிசிராந்தையார் பாண்டியன் அறிவுடை நம்பிக்கு வரியை அளவறிந்து பெற வேண்டும் என அறிவுரை கூறியுள்ளதை நாமறிவோம்.

வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும்
கோலொடு நின்றான் இரவு.
                             (திருக்குறள், ௫௱௫௰௨ – 552)

என்கிறார் திருவள்ளுவர்.

ஆள்வோர் குடிமக்களிடம் முறை கடந்து வரி பெறுவது வழிப்பறிக் கொள்ளைக்குச் சமம் என்கிறார் இதில்.

அதேபோல் மக்களிடம் பொருளைப் பறித்துப் பொருளைத் திரட்ட மாடடார்கள் என்று அக்கால் ஆள்வோர் நடைமுறையைக் குறிப்பிடுகிறார். இதன்மூலம் மக்களிடம் பொருளைப் பறித்துப் பொருளைத் திரட்டாதே எனப் பிற்காலத்தவருக்கு அறிவுரை வழங்குகிறார் புலவர் கணி புன்குன்றனார்.

“வரியை அளவோடு! பெறுக! நாட்டை வளமாக ஆக்குக!” என்பதே தமிழ் நெறி.

எனவே, சங்கப் புலவர் பொன்னுரை வழி நடந்து ஆள்வோரிடம் மக்களின் பொருள் அழியும்படி வரிப்பொருள் பெறாதே! என்கிறோம் நாமும்.

சட்டச் சொற்கள் விளக்கம் 991-995 : இலக்குவனார் திருவள்ளுவன்



(சட்டச் சொற்கள் விளக்கம் 986-990 : தொடர்ச்சி)

 991. Authenticate       உறுதி யளி

மெய்யெனக் காட்டு  

போலியல்ல என ஆதாரம் காட்டு
அதிகார அளிப்பு உறுதியொப்பமிடு;

உறுதி யொப்பமிடுதல்    

சட்டச் சூழலில், உறுதி அளிப்பு என்பது நீதிமன்றத்தில் அதன் ஏற்றுக்கொள்ளத்தக்க தன்மையை நிறுவ, ஒரு செய்தியின், குறிப்பாக ஆதாரத்தின் உண்மையான தன்மையை மெய்ப்பிப்பதை அல்லது சரிபார்ப்பதைக் குறிக்கிறது. இச் செயல்முறை, வழங்கப்பட்ட சான்றுகள் போலியானவை அல்லது புனையப்பட்டவை அல்ல, மாறாக அவை கூறப்பட்டவை என்பதை உறுதி செய்கிறது.
 992. Authenticated extracts    உறுதி யளிக்கப்பட்ட எடு பகுதிகள்

உறுதிச்சான்றிடப்பட்ட எடு பகுதிகள்

extract என்பதை எடு குறிப்பு என்றும் சொல்கின்றனர். குறிப்பு என்பது உள்ளதை நம் வரிகளில் குறிப்பதாகவும் பொருள்படும். ஆனால் ஆவணத்தின் சில பகுதிப் பக்கங்களை உள்ளவாறே எடுத்துத் தருவது. எனவே, எடு பகுதி என்பதே சரியாகும்.
993.  Author       ஆக்கியோன்

படைப்பாளி  

மூலவர்  

ஆசிரியர்  

நூலாசிரியர்  

ஆசிரியர் என்பது புத்தகத்தின்/ நூலின் ஆசிரியர் எனப் பொருளாகும். இலத்தீன் auctor > augeō = தோற்றம் / உருவாக்கல். இதிலிருந்து  உருவானது. ஒரு படைப்பைத் தோற்றுவிப்பவன் அல்லது உருவாக்குநன். எனவே, ஆக்கியோன், படைப்பாளி என்கின்றோம்.
 994. Author of the trustஅறக்கட்டளைப் பொறுப்பாண்மையர்  

பொறுப்பமைப்பாளர்

trust என்றால் கைப்பிணை, துணிவு, பாரம், கையடை, கையம்பு, நம்பகம், நம்பிக்கை, பொறுப்பாட்சி, அறக்கொடை, அறக்கட்டளை, பொறுப்பாண்மை, பொறுப்புரிமை அமைப்பு எனப் பல பொருள்கள் உள்ளன. கைப்பிணை முதலியன நம்பிக்கை அடிப்படையில் ஒப்படைக்கப்படுவனவற்றைக் குறிப்பன. பெருமளவுத் தொகையை அல்லது சொத்தினை அறச்செயல் புரிய ஒப்படைக்கப்படுவனவற்றை அறக்கொடை என்கின்றனர். அறக்கொடையின்மூலம் அமைக்கப்படுவன என்பதால் இப்போது நாம் அறக்கட்டளை எனப் பயன்படுத்தி வருகிறோம்.

Author of the trust என்னும் பொழுது, அறக்கட்டளையைத் தோற்றுவித்தவரைக் குறிக்கிறது. அவர் இருக்கும் பொழுது அல்லது அவருக்குப் பின்னர் இதனைப் பொறுப்பாகச் செயற்படுத்தும் குழுவினரைப் பொறுப்பாண்மையர்/பொறுப்பமைப்பாளர் என்கின்றனர். எனவே, அறக்கட்டளைப் பொறுப்பாண்மையர் எனலாம்.  நம்பிக்கை என்னும் பொருள் கொண்ட தொல்செருமானியச்சொல்லான traustą என்பதிலிருந்து உருவானது.
 995. Authorisation  /    Authorization   அதிகார அளிப்பு

சட்டப்பூர்வமாக அதிகார அளிப்பு என்பது மற்றொருவரின் சார்பாகச் செயல்பட அல்லது ஒரு குறிப்பிட்ட செயலை மேற்கொள்ள அதிகாரம், இசைவு அல்லது உரிமையை வழங்குவதைக் குறிக்கிறது. இஃது அடிப்படையில் ஒருவருக்கு ஏதாவது ஒன்றைச் செய்ய சட்டப்பூர்வ அதிகாரத்தை வழங்கும் செயல்முறையாகும். அது முடிவுகளை எடுப்பதா, வளங்களை அணுகுவதா அல்லது பணிகளைச் செய்வதா என்பது குறித்ததாகும்.

எடுத்துக்காட்டாக, ஒரு பகர அதிகார ஆவணம், நிதிமேலாண்மையிலும் சட்டம் தொடர்பானவற்றிலும்  முடிவுகளை எடுத்துச் செயலாற்ற முடியாத மற்றொருவருக்காகச் செயற்படும்  அதிகாரத்தை ஒருவருக்கு வழங்குகிறது.

Thursday, July 24, 2025

தமிழ்த்தாயைப் புறக்கணிக்கும் கன்னடச் சேய் 4 – இலக்குவனார் திருவள்ளுவன்



(தமிழ்த்தாயைப் புறக்கணிக்கும் கன்னடச் சேய் 3 – தொடர்ச்சி)

தமிழின் தாய்மையை ஒத்துக் கொள்வது பிற மொழிகளைத் தரம் தாழ்த்தும் செயலல்ல!

“தமிழ் மொழிதான் அனைத்துத் திராவிட மொழிகளுக்கும் தாய் மொழி என நிலைநாட்ட நினைப்பது மற்ற திராவிட மொழிகளைத் தரம் தாழ்த்தும் செயல்” என்று சிலர் கூறுகின்றனர்.  தாய்க்குப் பலர் மகவுகள் இருக்கும் பொழுது அது பெருமைக்குரிய செய்தியே தவிர யாரையும் இழிவுபடுத்தும் செயலல்ல. இது குறித்து அறிஞர் அ.அரசேந்திரன் பின்வருமாறு கூறுகிறார்:

“ஓர் அம்மாவிற்கு இத்தனை மகள்கள் என்று சொல்வது அந்த மகள்களை தரம் தாழ்த்துவதாகுமா? அனைத்து உலக மொழிகளுக்கும் தாயாக விளங்குவது தமிழ் தான் என்பது பெருமைக்குரிய விசயம் தானே? எந்த ஓர் அகழ்விலும் தமிழைத் தாண்டிய தொன்மையான மொழியே இந்தியாவில் கிடைக்காத போது எதை வைத்துத் தமிழ் மொழி குடும்பத்தில் வந்த மொழிகள் தமிழைவிட மூத்தது?

எத்தனைச் சங்கங்கள் வைத்து மொழி வளர்த்தன இம்மொழிகள்?

தமிழ் மொழி எதையும் நிலைநாட்ட வேண்டியதில்லை உண்மை என்னவோ அதைத் தான் சொல்கிறார்கள். வெற்றுப் பெருமையை நாடும் பிற மாநில மக்கள் தேவையில்லாத போட்டியில் இறங்குவது தான் தவறானது உண்மைக்குப் புறம்பானது.”(மகள், மகன் என்பனவற்றிற்குப் பன்மை மக்கள்.)

இதே வினாவிற்கு ஆராய்ச்சியாளர் இரவிசிவன் பின்வருமாறு விடையிறுக்கிறார்

காலச்சூழலில் தாயை விட்டு தொலைதூரம் சென்ற காரணத்தினால் மற்றும் அறியாமையால் தாயைத் தெரியாத குழந்தைகள் இருக்கலாம். ஆனால் தாய்க்கு மட்டும்தான் தெரியும் தன்னிலிருந்தே பிறந்தவர்கள் இவர்கள் என்று . அவர்களுக்கு இச்செய்தியை உணர்த்த வேண்டிய கடமையும் தாய்க்குத்தான் உண்டு.

இல்லையெனில், தாயை வழிபட வேண்டிய பிள்ளைகள் மூடர்களின் வழிகாட்டுதலில் தன் பிறப்புக்கு காரணமான தாயைத் தூற்றிக் கொண்டிருக்கும் அவலம் தொடர்ந்து கொண்டேயிருக்கும்.

தாயும் வாயை மூடி மௌனித்திருந்தால், தகுதியற்றவள் கூட உள்ளே நுழைந்து ‘தான்தான் தாயென’ – சொந்தம் கொண்டாடத் தொடங்கிவிடுவாள். (விட்டாள்??).

கன்னடம் திரிந்துள்ள முறைகள்

மொழி ஞாயிறு பாவாணர், பேரா.முனைவர் சி.இலக்குவனார் முதலிய அறிஞர்கள் கன்னடம் திரிந்துள்ள முறைகள் எனப் பின்வருவனவற்றைக் குறிப்பிடுகின்றனர்.

 1. ப  ஃக வாக மாறியுள்ளது.

        பள்ளி  ஃகள்ளி; பாடு  ஃகாடு.

 2. உயிரீற்றுப் பேறு.

        எதிர்  எதிரு; இருந்தேன்  இருந்தேனெ.

 3. தொகுத்தல் திரிபு.

        இருவர்  இப்பரு; இருந்தேன்   இத்தேன.

 4. வல்லொற்று மிகாமை.

        ஓலைக்காரன்  ஓலகார; நினக்கு  நினகெ.

 5. சொற்றிரிபு.

        மற்றொன்று  மத்தொந்து

        முதலாயின  மொதலானய.

 6. போலி.

        வேடர்  பேடரு ; செலவு  கெலவு.

 7. எதிர்மறை இடைநிலைக் குறுக்கம்

        இராதே  இரதெ.

 8. பெயரீற்றுப் பால் விகுதிக் கேடு.

        குருடன்  குருட; மகன்  மக;

        அப்பன்  அப்ப.

 9. வேற்றுமை உருபின் திரிபு.

        நின்னால்  நின்னிந்த

        நின்கண்  நிந்நொள்  நிந்நல்லி

 10.விகுதி மாற்றம்

        அன் அம் ஆதல்;

        செய்கிறேன்  செய்தபெம்.

இவ்வாறு இலக்கண வகையாக மொழியியல் நோக்கில் அறிஞர்கள் மெய்ப்பித்திருக்கும் பொழுது தமிழ்த்தாயிலிருந்து பிறந்ததே கன்னடச்சேய் என்னும் ஆய்வு உண்மையை ஒத்துக் கொள்வதில் என்ன தயக்கம்?

கன்னடத்தை முற்பட்டதாகக் கூறும் தவறான வாதங்கள்

கன்னடத்தைக் கி.பி.இரண்டாம் நூற்றாண்டு என்று முற்பட்டதாகக் காட்ட சிலர் முயல்கின்றனர். ஒரு வேளை அது உண்மையாக இருந்தாலும் தமிழுக்குப் பிற்பட்டதே ஆகும். எனினும் இவ்வாறு கூறுவது தவறு எனப் பேரா.முனைவர் சி.இலக்குவனார் பின்வருமாறு கூறுகிறார்.

“கன்னடச் சொற்கள் கிரேக்க மொழியார் நூல்களில் காணப்படுகின்றனவென்றும், அந் நூல்களின் காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு என்றும் கூறிக் கன்னடத்தின் பழமையை நிலைநாட்டுவாருமுளர்.

  கன்னட மொழியின் பழமையான நூல் கவிராசமார்க்கம் என்ற இலக்கண நூல்தான். அதன் காலம் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு என்பர். அஃது ஓர் அணியிலக்கண நூலாக இருத்தலினால் அதற்கு முன்பு பல இலக்கண இலக்கியங்கள் இருந்திருக்கக் கூடும் என்பாரும் உளர். கி.பி. ஆறாம் நூற்றாண்டுக்கு முன்னர்க் கன்னட, தெலுங்கு, மலையாள மொழிகளில் இலக்கியம் தோன்றவில்லை என்று ஆராய்ச்சியாளர் வரையறுத்துள்ளனர்.” எனவே, முன்பு பல இலக்கண இலக்கியங்கள் இருந்திருக்கக் கூடும் என்ற கருத்தும் தவறாகும்.

(தொடரும்)

Thursday, July 17, 2025

தமிழ்த்தாயைப் புறக்கணிக்கும் கன்னடச் சேய் 3 – இலக்குவனார் திருவள்ளுவன்



(தமிழ்த்தாயைப் புறக்கணிக்கும் கன்னடச் சேய் 2 – தொடர்ச்சி)

செம்மை வழக்குகள் தமிழிலும் சிதைந்த வழக்குகள் பிற மொழிகளிலும் உள்ளன.

தமிழ்ச்சொற்கள் செப்பமுற்ற நிலையிலும் தமிழ்க் குடும்ப மொழிகளில் உள்ள சொற்கள் சிதைந்த நிலையிலும் உள்ளமை குறித்துப் பின்வருமாறு பேரா.இலக்குவனார் கூறுகிறார்.

 “இவ்வாறு எவ்வகையில் நோக்கினாலும் தமிழும், தமிழல் திராவிட மொழிகளும் ஒரு மொழி போலவே தோன்றுகின்றன. பெரும்பாலும் செப்பமுற்ற வழக்குகள் தமிழிலேயே உள்ளன. பிறமொழிகளின் சொற்கள், சிதைந்த வழக்குகளாகவே யுள்ளன. பண்பட்ட பழந்தமிழிலிருந்து பிரிந்து, நெருங்கிய தொடர்பு குறைந்த மொழிப் பகுதிகள் காலம் செல்லச் செல்ல உருமாறிக்கொண்டே வந்துவிட்டன. செப்பமுற்ற தமிழையொட்டி அவை இயங்குவதற்கேற்ற சூழ்நிலைகள் இல்லை..” (பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார், பழந்தமிழ்)

மலையாளத்தை அடுத்துத் தமிழோடு நெருங்கிய தொடர்பினைக் கொண்டிருப்பது கன்னடம். கன்னடம் என்ற சொல் கருநாடகம் என்ற சொல்லின் சிதைவாகும். கருநாடகம் என்பது நாட்டைக் குறிக்கும் சொல்லாகும். அதிலிருந்து தோன்றிய கன்னடம் மொழியைக் குறிப்பதாகும். (பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார், பழந்தமிழ்)

கன்னடம் கி.பி.ஆறாம் நூற்றாண்டளவில் தனிமொழியாக உருப்பெறவில்லை.

கி.பி. ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்தவரெனக் கருதப்படும் குமாரிலபட்டர் தென்னிந்திய மொழிகளைக் குறிக்குங்கால் ஆந்திர திராவிட பாசா என்று குறிப்பிட்டுள்ளார். ஆந்திரம் தெலுங்கையும் திராவிடம் தமிழையும் குறிப்பதாகும். ஆதலின் கன்னடம் கி.பி.ஆறாம் நூற்றாண்டளவில் தனிமொழியாக உருப்பெறவில்லை.  (பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார், பழந்தமிழ்) தமிழோ இன்றைக்கு மூவாயிரம்ஆண்டுகட்கு முந்தைய தொல்காப்பியத்தை உடையது. அந்நூல்வழி பல்லாயிரம் ஆண்டுகளாகத் தமிழ் இலக்கண நூல்கள் இருந்துள்ளன என்பதை அறியலாம். தொல்காப்பியத்தில் மொத்த நூற்பாக்கள் 1571; இவற்றுள் எழுத்து அதிகாரத்தில் 57, சொல்லதிகாரத்தில் 72, பொருள் அதிகாரத்தில் 158, ஆக மொத்தம் 287 நூற்பாக்கள் தொல்காப்பியருக்கு முன் உள்ளவர்களின் கருத்தை மேற்கோளாகக் குறிப்பிடுவனவாகும் என்கிறார் பேராசிரியர் சி. இலக்குவனார் (தொல்காப்பிய ஆங்கில மொழிபெயர்ப்பும் திறனாய்வும்: பக்கம் 15) எனவே, இத்தகைய தொன்மையான தமிழ் வழங்கிய பகுதியில் இருந்த ஒரு மொழி பேச்சு வழக்கால் புதுமொழியாக மாறியிருக்கும் பொழுது தமிழில் இருந்து பிறந்ததுதான் அப்புதுமொழியாகிய கன்னடம் எனச் சொல்வதில் என்ன தவறு உள்ளது? இத்தகைய கன்னட மொழியைத் தமிழின் தாயாகச் சிலர் கூறுவது எத்தகைய அறியாமை மிக்கது?

கன்னடம் எப்பொழுது எப்படிப் பிறந்தது?

  “பம்பாய் மாகாணமும் ஐதராபாத்துச் சீமையும் சென்னை மாகாணமும் கூடுகின்ற இடத்துக் கொடுந்தமிழ் வழக்கு, கி.பி.ஆறாம் நூற்றாண்டுக்குப் பின்னால் வடசொற் கலப்பு மிகுதியாலும் ஒலி வேற்றுமைச் சிதைவாலும் கன்னடமென வேறு மொழியாகப் பிரிந்துவிட்டது” என்கிறார் பேரா.முனைவர்  சி.இலக்குவனார் (பழந்தமிழ்) கொடுந்தமிழ் வழக்கே கன்னடமாக மாறியது என்னும் பொழுது தமிழ்தானே கன்னடத்தின் தாய் என்பது சரியாக இருக்கும்.

கன்னட மொழியின் முதல் இலக்கியமே கி.பி.ஒன்பதாம் நூற்றாண்டுதான்

“தென்னிந்திய மொழிகள் எனப்படும் தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய திராவிட மொழிகள் தமிழோடு தாம் கொண்டுள்ள நெருங்கிய உறவை இன்னும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றன. அவை தமிழிலிருந்து விலகி ஆரியத்தோடு தொடர்பு கொண்டு தனி மொழிகள் ஆகிவிட்டன. அவ்வாறு ஆன பிறகு அவற்றில் இலக்கியம் தோன்றிய காலம் வடஇந்திய மொழிகளின் இலக்கியக் காலத்தையே ஒட்டியுள்ளது. . . . . . . . . . . . . .  கன்னட மொழியில் நமக்குக் கிடைத்துள்ள முதல் இலக்கியம் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் முதற் பகுதியில் இயற்றப்பட்ட கவிராச மார்க்கமாகும்.” எனப் பழந்தமிழ் நூலில் குறிப்பிடுகிறார். 

(தொடரும்)

Monday, July 14, 2025

சட்டச் சொற்கள் விளக்கம் 986-990 : இலக்குவனார் திருவள்ளுவன்



(சட்டச் சொற்கள் விளக்கம் 981-985 தொடர்ச்சி)

      
 986. Audit notesதணிக்கைக்‌ குறிப்புகள்‌

தணிக்கை அல்லது கணக்கு அலுவலகத்தில் கிடைக்கும் தரவு, தகவல் அல்லது ஆவணங்கள் தொடர்பாக நடத்தப்பட்ட தணிக்கை முடிவுகளைக் கொண்ட, தணிக்கை அலுவலகத்தால் வெளியிடப்படும் குறிப்பே தணிக்கைக் குறிப்பாகும்.
 987. Audit of accountsகணக்குகளின் தணிக்கை

கணக்கியல் உலகின் ஒரு பகுதியாகத் தணிக்கை உள்ளது.

கணக்கியல், நிதிப் பதிவுகளை எச்சார்புமினறித் தற்போக்கில் மேற்கொள்ளும் ஆய்வு ஆகும்.

நிறுவனம் அல்லது வணிக நிறுவனத்தின் செயற்பாடுகள்,  சட்டங்களுக்கும் பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட கணக்கியல் கொள்கை களுக்கும் இணங்கியுள்ளனவா என்பதைத் தீர்மானிக்க மேற்கொள்ளப்படுகிறது.

இந்தியப் புள்ளியியல் நிறுவனச் சட்டம், 1959 இன் பிரிவு 6(1) [Section 6(1) of The Indian Statistical Institute Act, 1959 – ISIA 1959] நிறுவனfக் கணக்குகளின் தணிக்கையைக் குறித்துக் கையாள்கிறது. குறிப்பாக, இந்தியப் புள்ளியியல் நிறுவனத்தின் கணக்குகள், நிறுவனங்கள் சட்டம், 1956 இன் கீழ் நிறுவனங்களின் தணிக்கையாளர்களாகச் செயல்படத் தகுதியுள்ள தணிக்கையாளர்களால் தணிக்கை செய்யப்பட வேண்டும் என்றும், இந்தியத் தலைமைக் கட்டுப்பாட்டாளர்-தணிக்கையாளருடனும் நிறுவனத்துடனும் கலந்தாலோசித்த பிறகு நிறுவனம் அத்தகைய தணிக்கையாளர்களை அமர்த்த வேண்டும் என்றும் கூறுகிறது
 988. Auditor      தணிக்கையாளர்

தணிக்கையர்

கணக்காய்வர்
அதிகார முறையில் கணக்குகளைச் சரிபார்ப்பவர்.

கலைஆய்வர்

மேலே Audit காண்க.

இந்தியப் புள்ளியியல் நிறுவனச் சட்டம், 1959 இன் பிரிவு 6(1) [Section 6(1) of The Indian Statistical Institute Act, 1959 – ISIA 1959] காண்க.
 989. Auditor General of India        இந்தியாவின்‌ தலைமைத்‌ தணிக்கையாளர்‌

இந்தியாவின்‌ தணிக்கைத் தலைமையாளர்.

 மத்திய, மாநில அரசாங் கங்களின் செலவுகளின் புற/ அகத் தணிக்கைகளுக்குப் பொறுப்பான உச்ச அதிகார அமைப்பாகும்.

நாடெங்கும் ஏறத்தாழ 58,000 ஊழியர்களைக் கொண்ட இந்தியத் தணிக்கை – கணக்குத் துறையின் தலைவராகவும் செயல்படுகிறார். இவர்களுள் தேவைப்படுபவர்களைக் கொண்டு நெறியுரை வழங்கி தணிக்கை மேற்கொண்டு அவற்றின் அடிப்படையில், தான் தணிக்கை ஆய்வு மேற் கொள்வதால் அமைப்பு எனக் குறிக்கப் பெற்றுள்ளது.

இந்திய அரசு, மாநில அரசுகள், அரசு நிதி உதவியைக் கணிசமான அளவில் பெறும் அமைப்புகளின் வரவு செலவுக் கணக்கைச் சரிபார்க்கும் அதிகாரத்துடன் இந்திய அரசியலமைப்பின் (இயல் 5) கீழ் நிறுவப்பட்ட ஓர் அதிகார மையம் ஆகும். இதன் தலைவர் குடியரசு தலைவருக்கு நேரடியாகக் கட்டுப்பட்டவர். இவர் அரசுக்கு எந்தவிதத்திலும் கட்டுப்பட்டவர் கிடையாது.

அரசுடைமையாக்கப்பட்ட அனைத்து நிறுவனங்களுக்கும் வெளித் தணிக்கையாளராகவும் இவர் செயல்படுகிறார்.

தலைமைக் கணக்குத் தணிக்கையாளரின் அறிக்கைகள் நாடாளுமன்ற/மாநிலச் சட்டப் பேரவைகளின் சிறப்புக் குழுக்களான பொதுக் கணக்குக் குழுக்களால் ஆய்வு செய்யப்படுகின்றன.

இந்திய அதிகார முன்னுரிமைப் பட்டியலில் ஒன்பதாவதாக உச்ச நீதிமன்ற நீதிபதிக்கு இணையாக வரிசைப்படுத்தப் பட்டுள்ளார்.         
 990. Auditor’s report   தணிக்கையாளரின் அறிக்கை தணிக்கையாளரின் அறிக்கை பெரும்பாலும் கணக்காளரின் மதிப்பீடு அல்லது கருத்துரை என்று அழைக்கப்படுகிறது. கருத்துரை எனில் கணக்கு வழக்குகள், வரவு-செலவினங்கள், தொடர்பான செயற்பாடுகள் குறித்த முறையான ஏற்புரை அல்லது மறுப்புரை/ தடையுரை ஆகும். அகத்தணிக்கை அல்லது புறத தணிக்கையினால் அகத் தணிக்கையாளர் அல்லது தற்சார்பான புறத் தணிக்கையாளரால் அளிக்கப்படுவதாகும்.  தணிக்கையின் முடிவுகளின் அடிப்படையில் பயனர் முடிவுகளை எடுப்பதற்கான உறுதிப்பாட்டுப் பணியாகும்.

Followers

Blog Archive