கொடுந்துயரை நினைவுறுத்தும்
மே மூன்றாவது வாரம்
– காங்கிரசைக் கருவறுக்க நினைவு கொள்வோம்!
உலகில் எங்கு துயரம் நிகழ்ந்தாலும் அதில்
பங்குகொள்பவர்கள் தமிழர்கள். கொடுமைக்கு எதிராகக் குரல் கொடுப்பதிலும்
துயர் நீக்க உதவுவதிலும் முதலிடத்தில் இருப்பவர்கள் தமிழ் மக்கள். ஆனால்,
தம் நாட்டிற்கு மிக அருகில் உள்ள நாட்டில் – இலங்கையில் – இனப்படுகொலை
நேர்ந்த பொழுது அவர்கள் கையறு நிலையில் தள்ளிவிடப்பட்டனர். தங்கள்
வலிமையை ஒன்று திரட்டி ஈழத்தமிழ் மக்களைக் காப்பாற்ற இயலாமல் கூனிக்குறுகினர். இதற்கெல்லாம் காரணமான ஒற்றைச் சொல் ‘இந்தியம்’ என்பது.
இந்திய அரசு தன்னை அணிசேரா நாடுகளின் தலைவராகச் சொல்லிக் கொண்டு
உலகெங்கும் உரிமைக்குரல் எழும் பொழுதெல்லாம் அதனை ஆதரித்து வாகை சூட
வைத்தது. இலங்கையில் தமிழ் ஈழ மக்கள் தங்களின் அடிமைத் தனம் ஒழிந்து மண்ணின்
மக்களாக உரிமையுடன் வாழப் போராடியபொழுது இந்தியா ஒதுங்கியிருந்திருந்தாலே
ஈழத்தமிழ் மக்கள் இந்நேரம் விடுதலை நாட்டில் வாழ்ந்திருப்பர்.
ஆனால், இந்தியாவை ஆண்ட காங்கிரசு அரசோ, – சிங்களத் தலைவர்களும்
அதிகாரிகளும் சொல்வதுபோல் – சிங்கள அரசு மூலம் ஈழத்தமிழர்களுக்கு எதிரான
அட்டூழியுங்களைக் கட்டவிழ்த்து விட்டது. இந்தியாவின் சார்பில்தான் இந்தப் போரை – இனப்படுகொலையை நாங்கள் நடத்தினோம் எனச் சிங்களத் தலைவர்கள் சொல்வதன் பொருள் அதுதானே!
விடுதலைப்புலிகளான தமிழீழப் போராளிகளின் நடமாட்டங்களைக்
காட்டிக்கொடுப்பதுடன் நில்லாது தமிழர்களுக்கு எதிரான கொடுந்தாக்குதலுக்காக
ஏவுகணைகள், வேதியல் வெடிகுண்டுகள், களத்தில் அழிப்பதற்கான அதிகாரிகள்,
முதலான பல உதவிகளையும் செய்து ஏறத்தாழ இருநூறாயிரம் – இரண்டு இலட்சம் –
தமிழீழ மக்கள் மடியவும் எஞ்சியோர் உறுப்பிழந்தும் உடைமையிழந்தும்
உரிமையிழந்தும் இன்றளவிலும் அல்லல்பட்டும் துன்பப்பட்டும் துயரப்பட்டும்
இன்னல்பட்டும் இடுக்கண்பட்டும் நடைப்பிணமாக வாழ்கின்றனர்.
இக்கொடுந்துயரில் உயிரிழந்தவர்களுக்கு
நினைவஞ்சலி செலுத்தும் நாம், இதற்குக் காரணமானவர்களுக்கும் இறுதியஞ்சலி
செலுத்த வேண்டுமல்லவா? அதற்கான வாய்ப்பாகத்தான் மே 3 ஆவது வாரம்
தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் வந்துள்ளது. வரும் வைகாசி 03, 2047 / மே
16, 2016 திங்களன்று நடைபெறும் சட்டமன்றத்தேர்தலில் காங்கிரசிற்கு இறுதி யஞ்சலி செலுத்தும் வாய்ப்பாகக் கருதி, அக்கட்சியினரை மண்ணைக் கௌவச் செய்ய வேண்டும்.
தி.மு.க. கட்சித் தோழர்கள், தங்கள்
கட்சியுடன் கூட்டணி வைத்து, ஒட்டிப்பிறந்த உறவாகவும்
கொள்கைக்கூட்டணியாகவும் சொல்லப்பட்டாலும் தங்கள் தலைமையும் அவர்
குடும்பத்தினரும் செய்த உடந்தைப் பாவங்களுக்குக் கழுவாயாகக் காங்கிரசுக் கட்சிக்கு எதிராகவே வாக்களிக்க வேண்டும். இல்லையேல் தமிழர்கள் மானங்கெட்டவர்கள் என்ற அவப்பெயர்தான் வரும்.
மேலும் ஒரு வேளை தேர்தல் முடிவு யாருக்கும் பெரும்பான்மை அளிக்காமல் இருந்தால் காங்கிரசு
உள்ள கூட்டணிக்கு வெளியில் இருந்து ஆதரவு அல்லது இணைந்து ஆதரவு அல்லது
ஆதரவு பெற்று ஆட்சியமைத்தல் போன்றவற்றில் மக்கள்நலக் கூட்டணியோ பிற
கட்சிகளோ முயலாமல் புறந்தள்ள வேண்டும்
நம்மால் ஈழத்தமிழர்களுக்கு
உதவத்தான் முடியவில்லை. ஆனால், அவர்களை அழித்தவர்களை அரசியல் உலகி்ல்
அழிப்பதன்மூலம் ஈழத் தமிழ் உறவுகளுக்கு ஆறுதலாவது தரலாம் அல்லவா?
செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோடு
எய்த உணர்ந்து செயல்.
(திருவள்ளுவர், திருக்குறள் 516)
எய்த உணர்ந்து செயல்.
(திருவள்ளுவர், திருக்குறள் 516)
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
No comments:
Post a Comment