ஆண்டவர்கள் ஓய்வெடுக்கட்டும்! ஆண்டவன் கட்டளை இது!
தமிழ்நாட்டில் இதுவரை ஆண்ட கட்சிகள்,
நிறைகளும் குறைகளும் கொண்டவையே! இவ்வாறு இருப்பது இயற்கையே! குறிப்பாக
இப்பொழுது தேர்தல் களத்தில் உள்ள செயலலிதாவும் கலைஞர் கருணாநிதியும் பாராட்டத்தக்கப் பணிகளும் ஆற்றி உள்ளனர்.
ஆனால், அதே நேரம், வாயில் தமிழ் முழங்கிக்கொண்டே, செயலில் தமிழை
மறந்தவர்களாக, இருவரும் உள்ளனர். எதை எதையோ கட்டணமாகத் தர முடிபவர்களால் கல்வியையும் மருத்துவ வசதியையும் ஏன் இலவயமாகத் தர இயலவில்லை?
பொருள்களைக் கட்டணமின்றித் தரும்பொழுது அவற்றின் கொள்முதலில் ஆதாயம்
பார்க்க இயலும். கல்வியையும் மருத்துவத்தையும் கட்டணமின்றித் தந்தால்,
மக்களிடமே கொள்ளையடித்து அவற்றை வணிகமாக நடத்தும் கட்சிக்காரர்கள் நிலை
என்னாவது? எனவே இவற்றை மக்களுக்குக் கட்டணமின்றித் தர மனம் வரவில்லை.
இரு பெரும் தலைவர்களும் கட்சி சார்பில்
எண்ணற்ற இலவயத் திட்டங்களையும் நலத்திட்டங்களையும் அறிவித்திருக்கிறார்கள்
அல்லவா? படிப்படியாகவோ முழுமையாகவோ மதுவை அகற்றுவதாக வாக்குறுதி அளித்தல்
போன்ற திட்டங்களை, தங்களது முந்தைய ஆட்சிக்காலங்களில் ஏன் நிறைவேற்றவில்லை?
அவ்வாறு அவர்களால் நலத்திட்டங்களை ஆற்றமுடியும் என்பது பொய்யென்றால்,
இவ்விருவரும் இருவரின் கட்சிகளும் அடியோடு புறக்கணிக்கப்பட வேண்டும். இல்லை
இவர்களால் நிறைவேற்ற இயலும் என்றால், தங்களால் செய்ய முடிந்த பணிகளைச்
செய்யாத வஞ்சகத்திற்காக இருவரும் இருவர் கட்சியும் தண்டிக்கப்படும் வகையில்
தேர்தலில் தோல்வியைத் தர வேண்டும். எனவே, அறக்கடவுளின் கட்டளையாகக் கருதி இதுவரை ஆண்டவர்களுக்கு நாம் ஓய்வு கொடுப்போம்!
மக்கள் இதுவரை தங்கள் விருப்பத்திற்கு
மாறாக வெல்லக்கூடிய கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்ற தவறான எண்ணத்தில்
வாக்களித்து வந்துள்ளனர். யார் வரக்கூடாது என்பதில் கருத்து செலுத்தி, நம் வாக்கு வரக்கூடாதவர்களை வரச் செய்துவிடுமோ என அஞ்சி மற்றொரு வரக்கூடாத கட்சிக்கு வாக்களித்துள்ளனர்.
ஒரு தேர்தலில் வேண்டா என ஒதுக்கிய கட்சியை அடுத்த தேர்தலில் வரவேற்கும்
தவற்றைச் செய்துள்ளனர். ஆனால், இம்முறை யார் வரக்கூடாது என்பதில் கருத்து
செலுத்தாமல் யார் வரவேண்டும் என விரும்பி மாற்று அரசியலை வரவேற்க முன்வந்துள்ளனர்.
ஒரு வேளை மாற்று அரசியல் முயற்சிப் பயனற்று நாம் வரக்கூடா எனக்
கருதுபவர்கள் வந்தாலும் ஒன்றுமில்லை. ஏனெனில் மாற்று அரசியலுக்கு
அளிக்கும் வாக்கு ஆட்சியில் அமருபவர்களுக்கும் பிற முதன்மைக் கட்சிக்கும்
அச்சத்தை ஏற்படுத்தி நெறிப்படுத்தும். எனவே, முடிவுபற்றிக் கவலைப்பாமல்
அனைவரும் ஆண்ட கட்சிகளைப் புறக்கணிப்பதே நாட்டிற்கு நல்லது.
இதனால் மற்றொரு நன்மையும் விளையும். ஆண்ட
கட்சிகள் விழிப்புடன் செயல்பட்டுப் புதிய ஆளும் கூட்டணியைத் தவறு செய்ய
விடாமல் கண்காணிக்கும்.
நாட்டின் முதன்மைக் கட்சிகள் ஒவ்வொன்றும் மற்ற கட்சியின் குறைகளைப்பற்றிக் கூறி வருகின்றன. அத்தகைய குறைகளைக்
களையவும் தமிழ் நாட்டில் தமிழ் எங்கும் தழைத்தோங்கவும் மக்கள் வாழ்வில்
மறுமலர்ச்சி ஏற்படவும் இதுவரை ஆண்ட கட்சிகளுக்கு ஓய்வு கொடுத்து மாற்று
அரசியலைத் தேர்ந்தெடுப்போம்!
குணம் நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல் (திருவள்ளுவர், திருக்குறள் 504).
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை
அகரமுதல 133, சித்திரை 29, 2047 மே 12, , 2016
No comments:
Post a Comment