முன்னேற்றப்பாதையில் மக்கள்நலக்கூட்டணி
வழக்கமாக இரு
கட்சிகளுக்கு வாக்களிப்போரில் பலரிடம் மாற்று எண்ணம் தோன்றியுள்ளது என்பதை
மறுப்பதற்கில்லை. இதற்கு முன்பும் இத்தகைய எண்ணம் தோன்றி, ஆனால், நம்பிக்கையின்றி முதன்மைக்கட்சிகளில் ஒன்றிற்கே வாக்களித்தனர். இந்த முறை, வெற்றி
பெறுவார்களா என எண்ணாமல் மக்கள் மன மாற்றத்தை முதலிரு கட்சிகளும்
புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவாவது மாற்றி வாக்களிக்க
எண்ணியுள்ளார்கள். இந்த மாற்று எண்ணத்தை அறுவடை செய்வதில் முதலிடம் மக்கள் நலக்கூட்டணிக்கு உள்ளது.
எல்லாக் கட்சிகளும் மாறிமாறி, முதலிரு கட்சிகளுடன் கூட்டணி வைத்துவிட்டு இப்பொழுது எதிர்ப்பது எப்படி நம்பகத்தன்மையானது என்றும் சிலர் வினவுகின்றனர். மாறி மாறி இத்தகைய கட்சிகளைக் கூட்டணியில் சேர்த்துக் கொண்ட பெரிய கட்சிகளிடம் கேட்க வேண்டிய வினா இது. மேலும், தன்வலிமை
யறியாமல் தேர்தலில் முத்திரை பதிக்க வேண்டிய நேரத்தில் வேறு முடிவுகளும்
பிற கட்சிகளால் எடுக்க முடியாமல் இருந்தது. இப்பொழுது மக்களுக்கு ஆளும், ஆண்ட
கட்சிகள் மீது சலிப்பும் வெறுப்பும பெருகியுள்ளதை உணர்ந்து மக்கள்
நலக்கூட்டணி அமைந்துள்ளது. இதுவரை தேர்தலைப்புறக்கணித்தவர்களும் முதல்முறை
வாக்களிக்க உள்ள இளம் வாக்காளர்களும் மாற்று அணிகளின் பக்கம் கருத்து
செலுத்துவதால், இந்நலக்கூட்டணி நன்கு களப்பணியாற்றி பரப்புரை மேற்கொண்டால் வெற்றியை எட்டலாம்.
அதே நேரம்
இக்கூட்டணிபற்றிய எதிருரை இனிமேலும் உருவாவதைத் தடுக்கும் முயற்சியிலும்
இக்கூட்டணியினர் ஈடுபடவேண்டும். நல்லவேளை வைகோ, தாம் மட்டும்
போட்டியிடவில்லை என்று அறிவித்தாரே தவிர, தம் கட்சியே தேர்தலில் போட்டியிடாது என அறிவிக்கவில்லை. கூட்டணியை உருவாக்குவதில் அவர் கொண்டிருந்த பொறுமையும் அமைதியும் கூட்டணி அமைந்ததும் மாறிவிட்டதோ என்ற ஐயம் பரப்பப்பட்டு வருவதை அவர் அறியாமல் இருக்க முடியாது.
கோவில்பட்டியில் வேண்டுமென்றே சிலர் தலைவர் முத்துராமலிங்கருக்கு மாலை
அணிவிக்க எதிர்ப்பு தெரிவித்த பொழுது கூட்டணி அமைவில் காட்டிய பொறுமையைக்
கையாண்டிருக்கலாம்.
அந்நிகழ்விற்குப் பின்பு அளித்த அறிக்கையில் குறிப்பிட்டவற்றையே மாலை அணிவிக்கத் தடைவிதித்தவர்களிடம் தெரிவித்து, “உங்களில் யாரும் இவ்வாறு தலைவர் முத்துராமலிங்கருக்காகப் பணியாற்றினால் சொல்லுங்கள், நான் திரும்பச் செல்கிறேன்” என்றோ, “தேசியத்தலைவரை ஏன் சமூகத் தலைவராகச் சுருக்குகிறீர்கள்?
மாற்றாரும் மாலையணிவிப்பதுதானே அவருக்குப் பெருமை” என்ற முறையிலோ
கேட்டிருக்கலாம். இதனால் எதிர்ப்பு காட்ட வந்தவர்கள் விலகியிருக்கலாம்.
அல்லது திட்டமிட்டுத் தாக்கத்தான் வந்து விலகாமல் இருந்தாலும் மக்களிடம்
வைகோவின் புகழுரு இன்னும் வளர்ந்திருக்கும். உலகத்தலைவர்களை எல்லாம் சந்தித்தவர், அனைத்துக் கட்சித்தலைவர்களின் நன்மதிப்பைப் பெற்றவர், இனியேனும் ஆதங்கத்திலோ ஆற்றாமையிலோ பேசாமலிருத்தல் நன்று. வைகோவின் சாதி, சமயம்,மொழி, இனம்
என்றெல்லாம் பாராமல் அவர் ஆற்றிவரும் அரும்பணிகளால் அவர்மீது மதிப்பு
வைத்திருந்து ஆனால் வாக்களிக்காமல் இதுவரை இருந்தவர்களும் அவரது அணிக்கு
வாக்களிக்க முன்வருவதை நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
பேரங்களுக்கு அடிபணியாமல்
எளியவர் உள்ள கூட்டணியில் இணைந்ததன் மூலம் விசயகாந்தும் பணம் குவிப்பது
நோக்கமல்ல என்பதை மெய்ப்பித்து விட்டார். அவரைப்பற்றிய திறனாய்வுகளை அவரும் படித்துவருவார். எனவே, தலைமைப்பண்புகளைக் காக்கும் வகையில் செயலாற்றுவது வாக்குகளைப் பெருக்கும்.
தொல்.திருமா காங்.உடன்
கைகோத்ததால் தன் தலையில் தானே மண்ணை வாரிப்போட்டுக்கொண்டவர். மூலக்
குற்றவாளிகளும் உடந்தைக் குற்றவாளிகளும் செல்வாக்குடன் இருக்கும் பொழுது
அங்கிருந்து விலகியதால் மன்னித்து ஏற்கலாம். திராவிட இயக்கங்களால் ஏற்பட்ட
தமிழ்ப்பெயர் சூட்டல் என்பது இவரால் திரளாக நடத்தப்பெற்றது
குறிப்பிடத்தக்க சிறந்த பணியாகும். தொல் தமிழர்கள் ஆட்சிப்பொறுப்பில் இணைவது நாட்டு நலனுக்கு நல்லது.
அந்தவகையில் தன்வகுப்பு தாண்டி நல்லெண்ணங்களை வளர்த்து வரும் இவர் தன்
சிறுத்தைகளின் போலி ஆரவாரக் கூச்சல்களைக் கட்டுப்படுத்துவது நல்லது.
இவற்றால் மக்கள் செல்வாக்கினை எடைபோட முடியாது.
இந்தியப்பொதுவுடைமைக்கட்சியில் தா.பா.அணி எனத் தனிஅணி இருப்பதுபோல் வரும் உரைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இக்கட்சியின் வேட்பாளர்கள் சிலர் தகுதிகளைப்பார்க்கும் பொழுது, இவர்களும் அரசியல் சீர்கேடுகளுக்குத் தேவைக்கேற்ப இடம் கொடுப்பவர்கள் என்ற எண்ணமே ஏற்படுகின்றது. எனவே, இத்தகைய எண்ணங்களுக்கு இடம் தராமல் செயல்படவேண்டும்.
மார்க்சியப்பொதுவுடைமைக்கட்சியில் சிவப்பு முகமூடி போட்ட காவிமுகங்களும் இருக்கின்றன.
அவர்களின் செல்வாக்கால்தான் தமிழ்ஈழ விடுதலைபற்றிய அறிவிப்பு கூட்டணியின்
பொதுக்கொள்கையில் இடம் பெறவில்லை என்பதே உண்மை. இவ்வாறு தமிழக மக்களின்
உணர்வுகளுக்கு எதிராக அவர்கள் செயல்பட்டால், அவர்களின் பிற தொண்டுகளால் எப்பயனும் இல்லை. எனவே, எங்கோ
இயங்கும் கட்சியின் ஊதுகுரலாக இயங்காமல் இங்குள்ள மக்களின் உணர்வுகளைப்
புரிந்து கொண்டு செயலாற்றும் கட்சியாக இயங்க வேண்டும். அயல்வாழ்தமிழர்களுக்கெனத் தனி அமைச்சகம் அமைப்பதாகத் தெரிவித்து இருப்பதால் அதன் பணிகளைச்சிதைக்கக்கூடாது.
வாசன் அமைச்சராக
இருந்த பொழுது என்ன செய்தார் என்று தெரியவில்லை. அதிகம் வம்புதும்புகளில்
மாட்டாதவர் என்ற நற்பெயர் உள்ளது. என்றாலும் தா.மா.க.விற்கு
உயிரூட்டியபின்பு மரு.இராமதாசு வழியில் நாளும் அறிக்கை விடுகிறாரே! இவை
குறித்து அவர் ஆட்சியில் இருந்த பொழுது என்ன செய்தார்? ஒரு துரும்பாவது கிள்ளிப்போட்டிருபாரா? இப்பொழுது தெரியும் தமிழக மீனவர்கள் துயரமும் ஈழத்தமிழர் துயரமும் அப்பொழுது கண்களில் படவில்லையா? இன்னும் தன்னைப் பேராயக்கட்சியாகிய காங்கிரசின் வழித்தோன்றலாகக் கருதாமல் தமிழ்மண்ணிற்கான தலைவராக எண்ணிச்செயல்பட வேண்டும்.
எல்லாவற்றிலும்
முதன்மையான ஒன்று உள்ளது. தேர்தல் நடைபெறும்பொழுதே வெற்றி பெறும் கட்சிக்கு
வெளியிலிருந்து ஆதரவு கொடுக்கலாம் என்ற எண்ணம் இரு தரப்பாகப் பிரிந்து
மக்கள் நலக்கூட்டணித்தலைவர்களிடம் இருந்தால், இப்பொழுதே கூட்டணியை விட்டு வெளியேறித் தாங்கள் விரும்பும் பெரியகட்சிக்கு வாக்களிக்கத் தெரிவித்து விடலாம்.
பொதுவாக யாரும் 100 தொகுதிகளைக்கூட எட்டமுடியாத வகையில் தேர்தல் முடிவுகள் அமையலாம். அப்பொழுது 100 வெற்றியிடங்களை ம.ந.கூட்டணி பெற்றால், பா.ம.க.வினை இணைத்துக்கொள்ளலாமே தவிர, பெரிய கட்சிகளை இணைக்கக்கூடாது. அதுபோல் எதிர்பார்க்கும் இடங்களில் வெற்றி காணாமல், பெரிய கட்சிகளும் பெரும்பான்மையின்றி இக்கூட்டணியின் ஆதரவு கேட்டால் கண்டிப்பாகத் தராமல் மறு தேர்தலுக்கு வழிவிட வேண்டும். அதுவே இவர்களுக்கும் தமிழ்நாட்டிற்கும் நல்லது.
இப்பொழுது
மக்கள்நலக்கூட்டணியின்பால் மக்களின் ஆதரவு பெருகிவருகிறது. அதற்குக்காரணம்
இவர்கள் குறைகள் அல்லாதவர்கள் என்ற எண்ணம் இல்லை. குறைகள் குறைவாக
உடையவர்கள் என்பதுதான். இத்தனை ஆண்டுகளாக ஆட்சி புரிந்தவர்களிடம்
மீண்டும் ஆட்சிப்பொறுப்பை ஒப்படைப்பததைவிட ஒரு மாற்றிற்காக இவர்களிடம்
ஒப்படைத்துப் பார்க்கலாம் என்ற எண்ணம் துளிர்விட்டிருப்பதுதான். அதே நேரம் ‘50 ஆண்டுக்காலத்திராவிட ஆட்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்’ என்று பேசாமல், “தமிழ்நாட்டிற்குத்தலைகுனிவு
ஏற்படுத்திய செயலலிதா ஆட்சிக்கும் கலைஞர் கருணாநிதி ஆட்சிக்கும் மாற்றாக
நல்லாட்சி தர வாக்களியுங்கள்” என்றுதான் முழங்க வேண்டும்.
மாற்றத்தை விரும்பும் வாக்காளர்களையும் புதிய வாக்காளர்களையும் ஒன்று திரட்டினால், மக்கள்நலக்கூட்டணி வாகை சூடுவது உறுதி!
தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு
அரும்பொருள் யாதொன்றும் இல். (திருவள்ளுவர், திருக்குறள் 462)
– இலக்குவனார் திருவள்ளுவன்
No comments:
Post a Comment