தவறாமல் வாக்களிப்போம்!
தக்கவர்க்கு வாக்களிப்போம்!
தேர்தல் நாள் – வைகாசி 03, 2047 / மே 16, 2016
தேர்தல்நாளில் வாக்களிப்பது நம் கடமை. கட்சித்தலைவர்கள் உட்பட பலரும் “நீங்கள் யாருக்காவது வாக்களியுங்கள். ஆனால்,தவறாமல் வாக்களியுங்கள்” என்கின்றனர்.
வாக்களிப்பது நம் உரிமை! அதனைத் தக்கவர்க்கு அளிப்பதே நம் கடமை!
நம்மை ஐந்தாண்டுகள் ஆளப்போகிறவர்கள் நம் குறைகளைக் களைபவர்களாகவும் நமக்கு உற்றுழி உதவுநர்களாகவும் இருக்க வேண்டும். யாருக்கோ வாக்களிப்பதன் மூலம் நாம், நம் கடமையைச் சரிவரச் செய்யாதவர்கள் ஆவோம்! அதுபோல் நம் வாக்கு யாருக்குமில்லை (நோட்டா) எனத் தெரிவிப்பதும் தவறாகும். அவ்வாறு தெரிவிப்பதால் அந்த வாக்குகளால் எந்தப் பயனும் இல்லாத பொழுது நம் பொன்னா வாக்குகளை வீணாக்கலாமா?
கடந்த நாடாளுமன்றத்
தேர்தலின்பொழுது யாருக்குமில்லை என வாக்களிக்க வேண்டும் என்பது இயக்கம்போல்
பரப்பப்பட்டது. இந்த முறை அவ்வாறில்லை. ஏனெனில் மக்கள் இந்தமுறை மாற்ற அரசியலை நோக்கிக் கருத்து செலுத்தி வருகின்றனர். எனவே, தங்கள் வாக்கை வீணாக்கவிரும்பவில்லை. எனவே, தக்க முறையில் வாக்கைப் பயன்படுத்த வேண்டும்.
சிலர் புதியவர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்றால், ஆண்ட கட்சிகளின் புதியவர்கள் எனத் தவறாகவும் கருதுகின்றனர். கட்சி வேட்பாளர்கள் புதியவர்களாக இருக்கலாம். ஆனால், கட்சி ஊழலில் திளைத்துத் தோலிருக்கச் சுளை விழுங்கும் மாய்மாலக்காரர்கள் உடையதுதானே! எனவே, புதிய அணிக்கு வாய்ப்பளித்துப் பார்க்க வேண்டும். இதனால் பழையவர்கள், தங்களைத் திருத்திக்கொள்ள வாய்ப்பு வரும். புதியவர்கள் தவறுகள் செய்யா வண்ணம்கண்காணிக்கவும் செய்வார்கள்!
எனவே, ஆண்ட,ஆளும் கட்சிகளை மறந்துவிட்டு நமக்கு நல்லனசெய்யும் வல்லவர் யாரெனத் தெளிந்து வாக்களிக்க வேண்டும்.
வாக்குரிமையைப் பயன்படுத்தினால் போதும் என எண்ணாமல்,
இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல். (திருவள்ளுவர், திருக்குறள் 517)
தக்கவருக்கு வாக்களிக்க வேண்டும்.
எனவே,
வாக்களிப்பீர் தவறாமல்! வாக்களிப்பீர் தக்கவர்க்கு!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
No comments:
Post a Comment