திமுகவின் கைகளில் கடிவாளம்!
நம்நாட்டு மக்களாட்சி முறைக்கேற்ப ஆட்சியை அமைப்பதற்கான வெற்றி வாய்ப்பை திமுக இழந்து உள்ளது.
9 தொகுதிகளில் ஆயிரத்திற்கும்
குறைவான வாக்கு வேறுபாட்டிலும் மேற்கொண்டு 9 தொகுதிகளில் ஆயிரத்திலிருந்து
2615 இற்குக் குறைவாகவும் மேற்கொண்டு 14 தொகுதிகளில் இதிலிருந்து
5000த்திற்குக் குறைவாகவும் வாக்குகள் பெற்று வேட்பாளர்கள் வெற்றி வாய்ப்பை
இழந்துள்ளனர். இவர்களுள் மிகுதியானவர் தி.மு.க.வினர். இதனால் திமுக அணி
வெற்றிவாய்ப்பை இழந்துள்ளது. எனினும் மிகுதியான (98) ச.ம.உ.உடைய
எதிர்க்கட்சியாக மாறி உள்ளது.
இனப்படுகொலை நேரத்தில் கலைஞர்
கருணாநிதியின் செயல்பாட்டால் மக்களுக்கு வருத்தம் இருந்தாலும் முந்தைய
நற்பணிகளைக் கருத்தில்கொண்டு வாக்காளர்கள் திமுகவை ஏற்றுள்ளனர். பெற்ற
தொகுதிகள் அடிப்படையில் திமுக வலுவான கட்சிதான். ஆனால், அதே நேரம் மொத்த
வாக்காளர்கள் எண்ணிக்கையில் திமுக பெற்ற வாக்குகள் 23.61 விழுக்காடுதான்.
அப்படியானால் நாட்டுமக்களில் முக்கால் பங்கிற்கும் மேற்பட்டோர் திமுகவிற்கு எதிராகத்தான் உள்ளனர் என்பதை உணரவேண்டும்.
ஆட்சி வாய்ப்பை இழந்ததற்குச்
சரிவரத்திட்டமிடாமையே காரணம் எனத் தன் குறையை ஆராயாமல், திமுக
திசைதிருப்புகிறது. வலுவான கூட்டணி்யை வரவிடாமல் தடுத்ததாக வைகோ மீது பழி
சுமத்துகிறது. அவர் வேறு கட்சியின் தலைவர். அவர் எக்கட்சிக்கு ஆதரவாக
இருந்தாலும் அதைக் கேட்கும் உரிமை திமுகவிற்கு இல்லை. அதிமுக
தன்னம்பிக்கையுடன் தனித்து அனைத்துத் தொகுதிகளிலும் போட்டியிடும்பொழுது
தன்னம்பிக்கையின்றி, அமைய உள்ள கூட்டணியை உடைப்பதாக, வைகோமீது பழி சுமத்தியதே, திமுக மீதான மக்களின் அவநம்பிக்கையை வளர்த்தது எனலாம்.
திமுக, ம.ந.கூட்டணி வேட்பாளர் ஒருவரை விலைக்கு வாங்கியது. வைகோ அல்லது
அவர் ஒருங்கிணைப்பாளராக உள்ள கூட்டணியினர் திமுகவினரிடம் உட்பூசல்
ஏற்படும் வகையில் எதுவும் செய்தார்களா? இல்லையே! அவ்வாறிருக்க
வெளிப்படையாகத் தோல்வியை ஒப்புக் கொள்வதை விட்டுவிட்டு அவர் மீது பாய்வது
ஏன்?
வைகோவைத் தாக்குபவர்கள் மு.க.அழகிரியின் முடிவால் தி.முக. வெற்றிவாய்ப்பை இழந்தது என அவரை ஏன் கடிவதில்லை?
ஒருவரை ஒரு கட்சியிலிருந்து நீக்கும்
பொழுது அவரால் ஏற்படும் தீமையைத் தடுப்பதுதான் முதன்மை நோக்கம் என்றாலும்,
அவரால் ஏற்படும் நன்மையும் வேண்டா என்ற மனப்பான்மையும் இருக்கும்.
தி.மு.க.விலிருந்து மு.க.அழகிரியை நீக்கும்பொழுது அவரால் கட்சிக்கு
விளையும் நன்மையும் வேண்டா என்ற உறுதியில்தான் நீக்கியிருப்பர்.
கட்சிக்கு எதிராகச் செயல்படுகிறார் என அவரைக் கட்சியிலிருந்து
நீக்கியபின்னர், கட்சிக்கு எதிராகச் செயல்படுகிறார் என்று சொல்வது
பொருளல்ல. அதன்பின்னர் அவர் எந்தக் கட்சிக்காக வாக்கு திரட்டுகிறார்
என்பதும் எந்தக் கட்சிக்கு வாக்களிக்கிறார் என்பதும் அவரது தனி விருப்பம்.
ஆனால், அவரது விருப்பத்தின் அடிப்படையிலான செயல்பாடுகளால் தி.மு.க.
ஆட்சியேற்றம் இல்லாமல் போனது. ஆனால், அதற்காக அவரைக் கடிந்து கூறவில்லை.
மாறாக அதிமுகவிற்கு எதிரான வலுவான அணியை அமைக்கத் தடையாய் இருந்தார் என்று
வைகோ மீது மட்டும் பாய்கின்றனர்
இதுபோன்ற தவறான பரப்புரையில் ஈடுபடுவதை விட மக்கள் பணிகளில் ஈடுபட்டுத் திமுக தன் வலிமையை உயர்த்திக் கொள்ள வேண்டும்.
கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த இடத்து. (திருவள்ளுவர், திருக்குறள் 490)
எனச் சூழலமைந்தால் ஆட்சி
மாற்றத்திற்கும் வழிவகுக்கும் வல்லமை கலைஞர் கருணாநிதிக்கு உண்டு.
வல்லமையாளர் வெற்றுப் பழிச்சொற்களால் என்ன பயன் காணப்போகிறார்?
5 முறை முதல்வராக இருந்து பெற்ற
பணியறிவையும் நெடுங்காலச் சட்டமன்ற உறுப்பினராகப் பெற்ற பட்டறிவையும்
நாட்டு மக்களுக்குப் பயன்படும்வகையில் அரசிற்கு ஒத்துழைக்க வேண்டும்; வழி
காட்ட வேண்டிய நேரத்தில் வழிகாட்ட வேண்டும்; இடித்துரைக்க வேண்டிய
நேரத்தில் இடித்துரைத்து நெறியாளராக இருக்க வேண்டும். மாறாக, அரசைக் குறை கூறிக் கொண்டிருப்பதே பணி என எண்ணக்கூடாது.
ஆங்கிலக்கல்வியை வித்திட்டு உரமிட்டு
வளர்த்தது கலைஞர் கருணாநிதிதான். மதுவிலக்கைப் பண்பாட்டுக்குடிபோல்
ஆக்கியதற்குக் காரணமாக அமைந்தவரும் கலைஞர் கருணாநிதிதான். பேரறிவாளன்
முதலான எழுவர் விடுதலைக்கான வாய்ப்பைத் தவற விட்டவரும் கலைஞர்
கருணாநிதிதான். இவைபோல், திமுகவும் தவறு செய்துள்ள நேர்வுகளில் பொதுவாக அதிமுகவைக் குறை கூறுவதை நிறுத்த வேண்டும். தன் தவற்றை ஒத்துக்கொண்டு மன்னிப்புகேட்டு இதே போன்ற தவறுகளை அதிமுக செய்யவேண்டா என்பதுபோல் பேச வேண்டும். தமிழ், தமிழர், தமிழ்நாடு நலன் தொடர்பில் அதிமுகவுடன் ஒத்துழைத்து, விட்டுக் கொடுக்க வேண்டிய நேர்வுகளில் விட்டுக்கொடுத்து இணைந்து குரல் கொடுத்து மத்திய அரசை இணங்கச் செய்ய வேண்டும்.
தேர்தல் வருவதற்கு ஓராண்டிற்கு முன்னர்
பரப்புரைப்பணிகளில் ஈடுபட்டால் போதும். அதுவரை யாரால் நன்மை விளைகிறது
என்ற எண்ணம் இல்லாமல் நாட்டுநலன் கருதிப்பொறுப்பான எதிர்க்கட்சியாகச்
செயல்பட வேண்டும்..
அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறனறிந்து தேர்ந்து கொளல். (திருவள்ளுவர், திருக்குறள், 441)
என்பதை உணர்ந்து அதிமுக அரசும் இவரது கருத்திற்குச் செவிமடுத்து ஆட்சியை நடத்த வேண்டும். ஆட்சிவாய்ப்பை இழந்த சட்ட மன்றஉறுப்பினர்களும் மக்களின் சார்பாளர்கள்தாம். மக்களின் குரலை எதிரொலிக்கும் அவர்களின்குரல்களுக்கு அரசு செவி மடுக்க வேண்டும்.
இதுவரை இருந்ததுபோல் ஏட்டிக்குப்போட்டிச்
செயல்பாடு இன்றி ஆளும்கட்சியும் எதிர்க்கட்சியும் இணைந்து தமிழ்நாட்டைத்
தமிழ்வள நாடாக மாற்ற வேண்டும்.
இலக்குவனார் திருவள்ளுவன்
No comments:
Post a Comment