பள்ளிகளைக் காப்பாற்ற தாய்த்தமிழ்ப்பள்ளி வாரியம்
தமிழ்நாட்டில் 1951 இல் 20.80 % மக்கள் படிப்பறிவோராக இருந்தனர். ஆண்களில் 31.70 % மக்களும் பெண்களில் 10.10 % மக்களும்தான் படிப்பறிவு பெற்றவர்கள். இத்தொகை 1961 இல் ஆண்களில் 51.59% , பெண்களில் 21.06% ஆகவும் மொத்தத்தில் 36.39% ஆகவும் உயர்ந்தது. 1971 இல் படிப்பறிவு உடையோர் மேலும் உயரந்தனர். ஆண்கள் 59.54% பெண்கள் 30.92% மொத்தம் 45.40% என இருந்தது. 2011 இல் தமிழ்நாட்டில் படிப்பறிவோர் விகிதம் ஆண்கள் 86.81% பெண்கள் 73.86% ஆகும். எல்லாக் காலத்திலும் இந்தியாவின் சராசரி விகிதத்தை விடத் தமிழ்நாட்டில் உள்ள படிப்பறிவோர் விகிதம் கூடுதலாகவே உள்ளது.
இவ்வாறு தமிழ்நாட்டில் படிப்பறிவோர் எண்ணிக்கை உயர்ந்ததற்குக் காரணம் யார்? அரசுப் பள்ளிகள், ஊராட்சி ஒன்றியப் பள்ளிகள், ஊராட்சிப்பள்ளிகள் முதலியவற்றின் ஆசிரியர்களும் தலைமை ஆசிரியர்களும்தான். இவர்களைக் கண்டாலே பிள்ளை பிடிக்க வருகிறார்கள் என்று ஓடிய காலம் அது. அதனையும் மீறி வீடு வீடாகச் சென்று பிள்ளைகளை அழைத்துவந்து பள்ளிகளில் சேர்த்தனர்.
தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்குப் பெரிதும் காரணமாக இருந்த அரசுப்பள்ளிகள், உள்ளாட்சிப் பள்ளிகள் ஆகியவற்றின் இன்றைய நிலை என்ன? மூடுவிழாவிற்கு உள்ளாகும் நிலைதானே உள்ளது! திமுக ஆட்சியிலேயே மாநகராட்சிப்பள்ளிகள் சில மூடப்பட்டன. தொடர்ந்து அதிமுக ஆட்சியிலும் பள்ளிகள் மூடப்படும் அவலம் தொடருகின்றது. பள்ளிகளே தேவையில்லை என்னும் பொழுது ஆசிரியர்க்கு என்ன தேவை? எனவே ஆசிரியர்பயிற்சி நிறுவனங்களும் மூடப்படுகின்றன. தமிழ்நாட்டில் உள்ள 32 ஆசிரியர் பயிற்சிக் கல்வி நிறுவனங்களில் 20 நிறுவனங்கள் மூடப்பட்டு விட்டன.
அண்மையச் செய்தியாக தமிழ்நாட்டில் 33 தொடக்கப்பள்ளிகளில் ஒரு மாணவர்கூடப் படிக்கவில்லை என்றும் இவற்றுடன் 10க்கும் குறைவான மாணவர்கள் பயிலும் பள்ளிகளையும் சேர்த்து 890 பள்ளிகளை அரசு மூட உள்ளதாகவும் வந்துள்ளது.
பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் இச்செய்தி தவறு எனக் கூறுகிறார். “பள்ளிகளை மூடும் முடிவில் அரசு தற்போது இல்லை; எண்ணிக்கை உயர்த்த அரசு பள்ளிகள் தற்போதைய நிலைகளை எடுத்து கூறி விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்கிறார். ஆனால், அவரே இதற்குச் செப்டம்பர் மாதம் வரை கால வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்றும் கூறுகிறார். அதற்குப் பின்னர் என்ன செய்யும் அரசு. மாணாக்கர் இல்லாப் பள்ளிக்கு ஆசிரியர்களுக்கும் பணியாளர்களுக்கும் ஊதியம் செலவழிக்க இயலாதே. படிப்படியாக இவ்வாறு பள்ளிகளை மூடி வந்து கொண்டுள்ள அரசு அதனை அமைதியாக நிறைவேற்றத்தான் செய்யும். கல்வித்துறை அ்மைதியாக இருந்தாலும் நிதித்துறை இதனை இவ்வாறுதான் மூடச் செய்யும்.
ஆங்கில வழிப்பள்ளிகளை மூட வேண்டியது அரசின் கடமை. ஆனால், அரசின் தமிழ்வழிப்பள்ளிகளிலும் ஆங்கிவழிப் பிரிவுகளைத் தொடங்கி நடத்தி வருகிறது. மாணாக்கரகளைச் சேர்க்கிறோம் என்று சொல்லி அரசுப் பள்ளிகளையும் உள்ளாட்சிப் பள்ளிகளையும் ஆங்கில வழிப்பள்ளிகளாக மாற்றும் முயற்சியில் ஈடுபடும். மக்களின் விருப்பம் என்ற போர்வையில் இவ்வாறு செயல்படுத்தத் தயங்காது. ஆனால் உண்மையிலேயே அரசிற்குத் தமிழ் வழிப்பள்ளிகளிலும் அரசு, உள்ளாட்சிப்பள்ளிகள் மூடக்கூடாது என்பதிலும் நல்லெண்ணம் இருந்தால் என்ன செய்ய வேண்டும்?
இப்பள்ளிகளில் சேரும் மாணவர்களின் பெயரில் 10,000 உரூபாய் வைப்புத் தொகை செலுத்துவதாக அறிவிக்க வேண்டும். மீண்டும் 6 ஆம் வகுப்பில் அரசு அல்லது உள்ளாட்சிப்பள்ளிகளிலேயே கல்வியைத் தொடர்ந்தால் ஐயாயிரம் வைப்புத் தொகை செலுத்தி ஊக்கப்படுத்தலாம். அதே நேரம் ஆசிரியர்களின் தரத்தையும் உயர்த்த வேண்டும். என்றாலும் அரைத்த மாவையே அரைக்கும் அரசு இயந்திரத்தால் பழைய நிலைதான் தொடரும். அப்படி என்றால் என்ன வழி என்கிறீர்களா?
890 பள்ளிகளையும் தொடக்கக்கல்வி இயக்குநர் கட்டுப்பாட்டில் இருந்து பிரிக்க வேண்டும். தாய்த்தமிழ்ப் பள்ளி வாரியம் என ஒன்றை அமைத்து அதன் கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும். ‘தாய்த்தமிழ்ப்பள்ளி’ எனத் தோழர் தியாகு 1993 இல் அம்பத்தூரில் தொடங்கினார். தொடர்ந்து 1994 இல் குன்றத்தூரில் வெற்றிச்செழியன் ‘பாவேந்தர் தாய்த்தமிழ்ப்ள்ளி’ தொடங்கினார். தொடர்ந்து அடுத்த ஆண்டுகளில் கரூரில் க.வெ.சத்தியமூர்த்தி என்பவர் சக்தி தமிழ்ப் பள்ளிக்கூடத்தையும் திருப்பூரில் தங்கராசு என்பவர் தாய்த்தமிழ்ப்பள்ளியையும் தொடங்கினர். பின் தொடர்ச்சியாக ஆங்காங்கே தாய்த்தமிழ்ப்பள்ளிகள் தொடங்கினாலும் இன்றைய நிலையில் ஏறத்தாழ 30 தாய்த்தமிழ்ப்பள்ளிகள்செயல்பட்டு வருகின்றன. என்றாலும் நிதிப்பற்றாக்குறையால் தட்டுத்தடுமாறிததான் நடை போடுகின்றன.
இத்தகைய தாய்த்தமிழ்ப்பள்ளிகளை ஒருங்கிணைத்துத் தாய்த்தமிழ்ப்பள்ளிகள் வாரியத்தில் இணைக்க வேண்டும். இவர்கள் பகுதிகளிலுள்ள மூடக் கருதியுள்ள பள்ளி வளாகத்தை உள்ளது உள்ளவாறு கட்டடத்துடன் இவர்களின் பயன்பாட்டிற்குத் தர வேண்டும். தாய்த்தமிழ்ப்பள்ளி ஆர்வலர்களைக் கொண்டு எஞ்சிய இடங்களிலும் அரசு தாய்த்தமிழ்ப்பள்ளிகள் தொடங்க வேண்டும். அரசால் இவ்வாறு செயல்பட முடியாவிட்டால தமிழ் அமைப்புகளிடம் பொறுப்பைத் தரலாம். சிறப்பாகச் செய்து முடிப்போம்!
- நக்கீரன் தொகுதி31 இதழ் 14 மே 90-சூன் 01, 2018 பக்கம் 18-19