Monday, April 14, 2025

குறள் கடலில் சில துளிகள் 24. கஞ்சத்தனத்தை என்றும் எண்ணாதே! – இலக்குவனார் திருவள்ளுவன்



(கடலில் சில துளிகள் 23. நல்லன செய்யாது செல்வத்தை அழிக்காதே!- தொடர்ச்சி)

பற்றுள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும்

எண்ணப் படுவதொன்று அன்று.

(திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: குற்றங்கடிதல், எண்:௪௱௩௰௮  – 438)

 பொழிப்பு: பற்றுள்ளம் கொண்டு செல்வத்தைச் செலவிடாத இவறன்மை எந்த நன்மையுள்ளும் வைத்து எண்ணப்படுதற்குரிய ஒன்று அல்ல.

பதவுரை: பற்று-பிடித்தல்; உள்ளம்-நெஞ்சம்; என்னும்-என்கின்ற; இவறன்மை-கஞ்சத்தனம்; இவறல்+தன்மை; செலவிடப்படத் தக்கனவற்றிற்குச் செலவு செய்யாத பொய்யான சிக்கனத் தன்மை. இது திருவள்ளுவரால் புதிதாக ஆளப்பட்ட சொல்  என்கின்றனர் திருக்குறள் ஆய்வர்கள். எற்றுள்ளும் – எவற்றுள்ளும்

தேவையற்ற கஞ்சத்தனத்தைத் திருவள்ளுவர் நேரடியாகக் குற்றம் என்று கூறவில்லை. ஆனால் குற்றச் செயல்கள் யாவற்றிலும் எண்ணத் தக்கதல்ல என்று சொல்லி இதனைக் குற்றச் செயல்கள் யாவற்றிலும் மோசமான குற்றச் செயலாக உணர்த்துகிறார். எனவேதான், காலிங்கர், இவறுதல் பெரிய குற்றம்’ என்று கூறினார்.

‘குற்றத் தன்மைகள் எவற்றுள்ளும் வைத்து எண்ணப்படுவது ஒன்று அன்று’ என்றபடி மணக்குடவர்/பரிப்பெருமாள், பரிதி, பரிமேலழகர் ஆகியோர் உரை பகன்றனர்.

தமிழறிஞர் இரா சாரங்கபாணி “பொருளை விடாது இறுகப் பற்றும் மனம் என்று கூறத்தகும் கஞ்சத்தன்மை எக்குற்றத்துள்ளும் ஒன்றாக வைத்து ஒப்ப நினைக்கத் தகுவதன்று. அது நிகரற்ற பெருங் குற்றமாகும்” என்கிறார்.

‘பொருளைச் செலவழிக்க வேண்டியவிடத்துச் செலவழிக்காமல் இருப்பதற்குரிய உள்ளம் என்று சொல்லப்படும் சிக்கனத் தன்மை எதனுள்ளும் வைத்துக் கருதப்படுவதற்குரிய குணம் அன்று; குற்றமேயாகும்’ என்ற தமிழறிஞர் சி இலக்குவனார் உரை எளிமையாகவும் தெளிவாகவும் உள்ளது என்கிறது குறள் திறன் தளம்.

 இவறன்மை ஓர் இனம் புரியாத குற்றம், குற்றத்தில் பெரிய குற்றம், தனித்தன்மையுடைய குற்றம், நற்குணங்களைத் தாழ்வுபடுத்தும் குற்றம். சிக்கனமாக இருந்து சேமிப்பது சிறந்த பண்புதானே எனச் சிலர் எண்ணலாம். சிக்கனம் என்ற பெயரில் செலவழிக்க வேண்டியதற்குச் செலவழிக்காமல் இருப்பது குற்றம் என்கிறார் திருவள்ளுவர். –

மக்கள் பணத்தை அல்லது பொதுநிதியைத் தேக்கிவைத்து செலவிடாமல் இருப்பது குற்றமே என இக்குறள்மூலம் அறிவிக்கிறார் திருவள்ளுவர்

எண்ணப்படுவதொன்றன்று என உளவியலுடனும்  தொடர்பு படுத்துகிறார். இன்றைய உளவியலறிஞர்கள், கஞ்சத்தனம் பணச்சுழற்சியை நிறுத்தி வேலையின்மைக்கு வழி வகுக்கிறது என்றும் மன அழுத்தம், பதற்றம், மனச்சோர்வு உணர்வுகளை உண்டாக்குகிறது என்றும் கூறுகின்றனர்.

இதனை ஆள்வோர்க்கும் திருவள்ளுவர் கூறுகிறார்.  பொதுப் பணத்தை அஃதாவது பொதுநலத்துக்கான நிதியைச் செலவு செய்யாமால் பாதுகாக்கும் கஞ்சத்தனமே இவறன்மையாம். மிகு செல்வம் கொண்டோரின் ஈயாத்தன்மையையும் இச்சொல் குறிப்பதாக உரையாசிரியர்கள் சொல்வர். மக்களிடம் பணத்தைத் திரட்டும் அரசு அதனை நாட்டின் வளர்ச்சிக்கும் மக்களின் நலனுக்கும்  செலவழிக்காமல் வீணே வைத்திருப்பதைக் குற்றம் என்கிறார் திருவள்ளுவர். ஆதலின், பொருள் மேல் பற்று கொண்டு பொதுநலனுக்குச் செலவழிக்காத குற்றத்தைக் கடிதல் வேண்டும் என இக்குறள் மூலம் திருவள்ளுவர் வேண்டுகிறார்.

கஞ்சத்தனம் உள்ளவனிடம் ஈதலாகிய நற்பண்பு இருக்காது. பிறருக்குக் கொடுக்கும் மனமில்லாததுடன் தனக்கும் செலவழிக்க மாட்டான். இவனிடம் இருக்கும் பொருள் பயனற்று வீணே இருக்கும். யாருக்கும் பயனின்றி அவனது செல்வம் அழியும். எனவேதான் கஞ்சத்தனம் குறித்து எண்ணவும் கூடாது.

“தனிநலன், குடும்ப நலன், பொது நலன் கருதிக்

கஞ்சத்தனத்தை என்றும் எண்ணாதே” என்கிறார் திருவள்ளுவர்.

Sunday, April 13, 2025

எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 1 : இலக்குவனார் திருவள்ளுவன்

      14 April 2025      அகரமுதல







சன. 4, 2011

எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 1

 பேரன்புசால்அவையோருக்கு,

 வணக்கம்.

 பல்வகைப்பட்ட அனைத்துத் துறைகளையும் சார்ந்தவர்கள் இங்கே கூடியுள்ளமை மகிழ்ச்சி அளிக்கிறது. ஏனெனில் இங்கே நாம் வெறும் பொழுது போக்கிற்காகக் கூடவில்லை; பயன் ஆக்கத்திற்காகக் கூடியுள்ளோம்.

 ‘உயர்தமிழ்த்தாய் இந்நிலத்தில் அடைகின்ற வெற்றி யாவும் நம் வெற்றி’ என்ற எண்ணத்தில் கூடியுள்ளோம்; இன்றைய கலந்துரையாடல் மூலம் நம்மிடையே எழுச்சி ஏற்படும் என்ற நம்பிக்கையில் கூடியுள்ளோம். தமிழ் தனக்குரிய நிலையை மீளப் பெறுவதற்கு நம் சந்திப்பு ஓர் உந்துதலாய் அமையும்; இலக்கை அடைவதற்குரிய பாதையில் முன்னேறிச் செல்ல உதவும். தமிழன்னை அரசாளுவதற்கு நாம் ஒவ்வொருவரும்,

                செந்தமிழே உயிரே நறுந்தேனே

                 செயலினை மூச்சினை உனக்களித்தேனே

என நாம் ஒவ்வொருவரும் நமது பங்களிப்பை அளித்து உவகை காண  இயலும்.

ஆட்சி மொழி வகுப்பு என்ற பெயரில்  அனைவரையும் அழைத்திருந்தாலும்

இதனை வகுப்பாகக் கருத வேண்டா; ஒருவர் மட்டும் உரை யாடும் கூட்டமாகவும் கருத  வேண்டா. ஒருவரோடு ஒருவர் கலந்து பேசும் சந்திப்புதான் இது. நாம் அறிந்தவற்றை ப் பகிர்ந்து கொள்ள – அறிந்து மறந்தவற்றை  நினைவு கூர ஒரு நல்ல வாய்ப்பு. எனவே, ‌ஐயம் வரும்போது வினா எழுப்பவும் ஒத்த வே று கருத்தோ வேறு முரணான கருத்தோ ஏற்படுகை யில்  உடனுக்குடன் தெரிவிக்கவும் தயங்கக் கூடாது.

  மேலும் இங்கு வெவ்வேறு துறைகளைச்  சார்ந்தவர்கள், போக்குவரத்துக் கழகங்கள், வாரியங்கள் முதலான அரசு சார் நிறுவனத்தினர், உள்ளாட்சித் துறையினர், பல்கலைக்கழகத்தினர் எனப் பல் திறப்பட்டோர் கூடியுள்ளோம்.

ஒரு துறையில் ஒரு கலைச் சொல்லுக்குரிய பொருள், வேறு துறைகளில்  வெவ்வேறு பொருளில் வழங்கப் படலாம். ஒரு துறையினர் நன்கு அறிந்த எளிய சொல், மற்றொரு துறையினருக்கு அறியப்படாத அரிய சொல்லாக இருக்கலாம். எனவே, மிகவும் நன்கறியப்பட்டவை குறித்துக் கூட இங்கு நாம் பேச வேண்டுமா என்ற எண்ணத்தைத் தவிர்க்க வேண்டுகிறேன்.

இம்மேசையில் ஒவ்வொரு துறைக்கும் உரிய சிற்சிலக் கோப்புகள் எனப் பல உள்ளன. எனவே இவற்றின் அடிப்படையில்தான் நம் கலந்தரையாடல் அமையும். எனினும் இவற்றின் தொடர்பான, இணையான – முரணான செய்திகளும் இட பெற வாய்ப்புகள் உள்ளன. இவற்றில் இடபெறாத, ஆனால் அறிந்து கொள்ள வேண்டிய விவரங்கள் – அகற்றப்பட வேண்டிய ஐயங்கள் பிறருக்குத் தெரிவிக்க வேண்டிய செய்திகள் இருப்பின் உடன் தெரிவிக்க வேண்டுகிறேன்.


? ‘கோப்புகளைத் தொடுவதற்கு முன் ஒரு கேள்வி.
 ’வணக்கம்’ என்று சொன்னால் மட்டும் போதுமா, ’காலை வணக்கம்’ என்று சொல்ல வேண்டாமா?
* நல்ல கேள்வி
 ’வணக்கம்’ என்பது தமிழர்களின் பண்பாட்டை வெளிப்படுத்தும் சொல். அடக்கத்தையும் பணிவையும் உணர்த்தும் பண்பைக் குறிக்கும் சொல். ஆங்கில முறையில் ‘Good Morning, good-afternoon, good evening, good night’ என்பவையெல்லாம் வாழ்த்தும் முறையே ஆகும். அஃதாவது, இது நல்ல காலைப்பொழுதாக அமையட்டு ம். இந்தப் பிற்பகல் உங்களுக்கு நல்லதாய் அமையட்டும். இந்த மாலை உங்களுக்கு நல்லது அளிக்கட்டு ம். இந்த இரவு இனிய உறக்கத்தைத் தரும் நல்லிரவாய் அமையட்டும் என நம் விருப்பத்தை வாழ்த்தாக வெளிப்படுத்துகின்ற முறையாகும். இம் முறையைப் பின்பற்றிச் சரியாகக் கூறுவதாக எண்ணிப் பலரும் ’காலை வணக்கம்’  ‘மாலை வணக்கம்’ என்பனபோல் கூறுன்றனர்.


 ஆங்கில வழியில் எண்ணுவதால் பண்பாட்டுச் சிறப்பை உணராமல் இவ்வாறு தவறாகக் கூறி வருகிறோம். வணங்கல் எனின், ’ வந்தனை , பணிதல், தண்டன், வணக்கம், பரவல், இறைஞ்சல், தாழ்தல், காண்டல், வந்தித்தல், போற்றல்’, எனப் பல பொருள் ஆகும். இவை அனைத்தும் அடக்கத்தைப் புலப்படுத்துவன. எனவே வணக்கத்தைத் தெரிவிக்குபொழுது மற்றவர்பால் நல்லெண்ணம் கொண்டுள்ளதை வெளிப்படுத்துவதாகவும் உள்ளது. மேலும் இளையோர் மூத்தோரை வணங்கலாமேயன்றி வாழ்த்தக் கூடாது. அவ்வாறிருக்க ’ நல்லகாலையாக அமையட்டும்’ என்பதுபோல் வாழ்த்துவது எவ்வாறு ஏற்புடையதாகும். அல்லது குறிப்பிட்ட ஒரு பொழுதுதான் வணக்கமாக இருப்பேன். அஃதாவது ‘காலை வணக்கம்’ என்றால் காலையில் மட்டும் வணக்கமாக இருப்பேன். பின்னர்ப் பிணக்கமாக இருப்பேன் எனப் பண்பாட்டிற்கு மாறாகக் கூறுவது எவ்வாறு பொருந்தும்? அத்துடன் வைகறை, சந்தி,கருக்கல், பகல், முற்பகல், உருமம் (உச்சிவெயில்) நண்பகல், பிற்பகல், படு ஞாயிறு, சாயுங்காலம், செக்கர், அந்தி, அந்திக்கருக்கல், பின்னந்தி, எற்பாடு இரவு, நள்ளிரவு, பின்னிரவு, முதலான பல்வேறு பொழுதுகள் தமிழில் இருக்க, சில பொழுது மட்டும் வாழ்த்தினால் போதுமா? எனவே இனியேனும் அயல்வழக்கைப் பின்பற்றி, காலைவணக்கம், பகல் வணக்கம் என்றெல்லாம் கூறாமல், நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் பண்பாட்டுடன்


’வணக்கம்’ தெரிவிப்போம்.

 (தொடரும்)

Saturday, April 12, 2025

நாலடி நல்கும் நன்னெறி 6 – பயன்பாடு இல்லாப் பொருளால் என்ன பயன்? : இலக்குவனார் திருவள்ளுவன்



(நாலடி நல்கும் நன்னெறி 5 – நிலை புகழ் தரும் செயல் ஆற்றுக – தொடர்ச்சி)

உண்ணான் ஒளிநிறான் ஓங்கு புகழ்செய்யான்

துன்னருங் கேளிர் துயர்களையான் – கொன்னே

வழங்கான் பொருள்காத் திரும்பானேல், அ 

இழந்தான்என் றெண்ணப் படும்.

-நாலடியார், செல்வம் நிலையாமை, 9

பொருள்: தான் உண்ணாதவனாக, மதிப்பைக் காக்காதவனாக, புகழ்மிகு செயல் செய்யாதவனாக, உறவினர்களின் துன்பங்களைப் போக்காதவனாக இரப்பவர்க்குக் கொடுக்காதவனாக வீணாகப் பொருளை வைத்திருந்து என்ன பயன்? பயன்பாடு இல்லாதிருக்கும் அந்தப்பொருளை அவன் இழந்தான் என்பதே உண்மையாகும்.

சொல் விளக்கம்: உண்ணான்=உண்ணாதவனாக; ஒளிநிறான்= ஒளியை நிறுத்தாதவனாக; துன்= பெறுதற்கு; அரும்= அரிய; கேளிர்= சுற்றத்தாருடைய; துயர்= துயரத்தை; களையான்= போக்காதவனாக; வழங்கான்= கொடுக்காதவனாக; கொன்னே= பயனின்றி; பொருள்=செல்வத்தை; காத்து=காத்துக்கொண்டு; இருப்பான் ஏல்= இருப்பான் ஆகில்; அ ஆ= ஐயோ! இழந்தான் என்று=இவன் பொருளை யிழந்தான் என்று; எண்ணப்படும்= (யாவராலும்) எண்ணப்படுவான்.

தருமம் தலைகாக்கும்’ என்னும் படத்தில் படத்தலைப்பில் தொடங்கும் கண்ணதாசன் பாடலில்

அள்ளிக்கொடுத்து வாழ்பவன் நெஞ்சம்

ஆனந்த பூந்தோப்பு

என வரும். அவ்வாறு பிறருக்கு அள்ளிக்கொடுக்காத செல்வம் இருந்தும் வீணே என்கிறது நாலடியார்.

ஏதம் பெருஞ்செல்வம் தான்துவ்வான் தக்கார்க்குஒன்று

ஈதல் இலியல்பிலா தான்.(திருக்குறள் 1006)

எனத் திருவள்ளுவர் தனக்கும் பயன்படுத்தாமல் பிறருக்கும் அளிக்காமல் இருப்பவனின் பெருஞ்செல்வத்தை நோயாகக் கூறுகிறார் திருவள்ளுவர். எனவே,பயன்பாடு இல்லாத செல்வம் இருந்தும் இல்லாததற்குச் சமமாகும்.

எனவே பிறர்க்குப் பயன்படுத்தாத செல்வம் உடையவனும் ஏழையே!

இலக்குவனார் திருவள்ளுவன்

சங்கப் புலவர்கள் பொன்னுரை – 8 : பிறர் துன்பம் துடைத்தலே உண்மைச் செல்வம்! – இலக்குவனார் திருவள்ளுவன்

 




(சங்கப் புலவர்கள் பொன்னுரை – தொடர்ச்சி)

 “நெடிய மொழிதலும் கடிய ஊர்தலும்

செல்வம் அன்றுதன் செய்வினைப் பயனே”

         – மிளைகிழான் நல்வேட்டனார்

                            (நற்றிணை 210: 5-6)

அரசின் பாராட்டுரையும் ஆடம்பரப் போக்குவரத்து வசதிகளும் செல்வமன்று. இவை நம் செயல்களால் கிடைப்பவை!

நெடிய மொழிதல் என்பது அரசால் தரப்படும் பாராட்டுரை அடங்கிய விருதிதழ்கள் ஆகும். சிலர் தன் பெருமை பேசும் வீரப்பேச்சுகள் என்கின்றனர்.

இவ்வாறு சொல்வதை விட உயர்வாகக் கருதுவதற்குரிய அரசுப் பட்டங்களையே குறிப்பதாகக் கொள்வதே சிறப்பு.

தொல்காப்பியர் காலத்திற்கு முன்பிருந்தே மாராயப் பட்டம் சிறந்த போர் வீரர்களுக்கு அரசரால் வழங்கப்பெற்றது. இதைப் போன்ற பட்டங்கள்தாம் நெடிய மொழிதல் என்கிறார்கள் அறிஞர்கள்.

இக்காலத்தில் ஒன்றிய அரசால் தாமரை விருதுகள் போன்றவை வழங்கப்படுகின்றன.

தமிழ்நாடு அரசாலும் கலைமாமணி, கலைச்செம்மல் முதலிய விருதுகள் வழங்கப்படுகின்றன. கலைஞர் செம்மொழி விருது முதலிய உயரிய விருதினையும் குறிப்பிடலாம்.

கடிய ஊர்தல் என்பது பாடப்பெற்ற காலத்தில் தேர், குதிரை, யானை முதலியவற்றில் பெருமிதத்துடன் செல்வதைக் குறித்தது.

இக்காலத்தில் அரசு மகிழுந்தில் செல்வதையும் செல்வத்தால் பெறும் ஆடம்பர ஊர்திகளில் செல்வதையும் குறிக்கும் எனலாம்.

செல்வத்தினாலும் செல்வாக்கினாலும் பெறுவன யாவும் உண்மையான செல்வம் அன்று. இவையெல்லாம் நாம் ஆற்றும் செய்கைகளால் கிடைப்பன.

செய்வினைப் பயன் என்றால் முற்பிறவியில் செய்த வினைப்பயன் எனப் பலரும் கூறுவர். இது பொருந்தாது. நாம் உழைத்து மேற்கொள்ளும் செயல்களால் விளைவன என்பதே சரியாகும்.

தீவினை புரிந்தும் செல்வம் ஈட்டுவர். அரசின் தவறான செய்கைகளையும் பொருட்படுத்தாமல் புகழ்ந்து, செல்வமும் செல்வாக்கும் அடைவோரும் இக்காலத்தில் உள்ளனர். அவை ஏற்கத்தக்கன அல்ல.

“சான்றோர் செல்வம் என்பது, சேர்ந்தோர்
புன்கண் அஞ்சும் பண்பின்
மென் கட் செல்வம் செல்வம் என்பதுவே.”

என்பன பாடலின் இறுதி அடிகளாக வரும்.

புன்கண் என்றால் துன்பம்; அஞ்சும் மென்கண் என்றால் அத்துன்பம் கண்டு வருந்தி ஏற்படும் இரக்க உள்ளம் அல்லது அருட்தன்மை.

நாம் ஈட்டும் பொருட் செல்வமும் அப்பொருளால் பெறும் பிற செல்வமும் தகை நலம் (convenience), வாய்ப்பு நலம் (comfort) முதலியனவும் உண்மையான செல்வமன்று.

பிறர் துன்பங்கண்டு இரங்கி அத்துன்பத்தைத் துடைக்க மேற்கொள்ளும் பரிவுச்செயலே செல்வமாகும்.

இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்
துன்பம் துடைத்தூன்றும் தூண் (திருக்குறள், ௬௱௰௫ – 615)

என்கிறார் திருவள்ளுவரும்.

தனக்கு வரும் இன்பத்தை விரும்பாமல் தன் சுற்றத்தார்க்கு ஏற்படும் துன்பத்தைத் துடைப்பதில் கருத்து செலுத்திச் செயலாற்றுபவன் அவர்களைத் தாங்கும் தூணாக விளங்குவான் என்கிறார் வள்ளுவர்.

முழுப்பாடலும் தோழி தலைவனிடம் கூறுவதால் தலைவியைத் துன்புறச் செய்து விட்டுப் பரத்தையிடம் செல்லாதே என ஆடவர் கற்பை வலியுறுத்துவதாக உள்ளது என விளக்குவர் ஆன்றோர்.

“பொன்னல்ல பூவல்ல பொருளல்ல செல்வங்கள்” என்பார் புலமைப்பித்தன் (படம்: கோயில் புறா. “அமுதே தமிழே” எனத் தொடங்கும் பாடலில் இடையில் வரும் அடி).

எனவே, காலங்காலமாகப் பொருட்செல்வத்தை உண்மையான செல்வமாகச் சான்றோர் கருதுவதில்லை.

நாமும் பிறர் துன்பத்தைப் போக்குவதையே இன்பமாகக் கருதக் கூறும் சங்கப் புலவர் பொன்னுரையைப் போற்றி வாழ்வோம்!

தாய், 11.04.2025

Thursday, April 10, 2025

நோக்கிகள் – இலக்குவனார் திருவள்ளுவன்

 






நோக்கிகள்

புதிய அறிவியல் – செவ்வாய்க் கிழமை, புரட்டாசி 2, 2043 12:03 இதிநேTuesday, September 18, 2012 12:03 IST

தொலைவில் உள்ள ஒன்றை அண்மையில் உள்ளது போல் காண்பதற்கும் நுண்ணிய ஒன்றைப் பெரிதாக்கிக் காண்பதற்கும் ஆராய்வதற்கும் உற்றறிவதற்கும் உணர்வதற்கும் பயன்படுவன நோக்கிகள். அறிவியலில் பயன்படுத்தப் பெறும் நோக்கிகள் வருமாறு: –

  1. அகட்டு நோக்கி -laparoscope
  2. அலைவு நோக்கி -oscilloscope
  3. இணக்குநோக்கி -synchroscope
  4. இரவுநோக்கி- nightscope
  5. இருநோக்கி bina cular
  6. இருமைமேல்நோக்கி -epidioscope, epidiascope
  7. இரைப்பை நோக்கி- gastroscope
  8. உடல் இயக்க நோக்கி-kinetoscope
  9. உருநோக்கி- iconoscope
  10. உள்நோக்கி- endoscope
  11. உறைம நோக்கி cryoscope
  12. ஒளிர்நோக்கி-fluoroscope
  13. கருநோக்கி -fetoscope
  14. குரல்வளை நோக்கி- laryngoscope
  15. குறிநோக்கி- sniperscope
  16. சிற்றிழைநோக்கி -fiberscope
  17. சிறுநீர்க்குழாய்நோக்கி -urethroscope
  18. சிறுநீர்ப்பை நோக்கி cystoscope
  19. சுடர்நோக்கி- spinthariscope
  20. சுழல் நோக்கி -gyroscope
  21. சுழல்பொருள்நோக்கி -stroboscope
  22. சூழ்நோக்கி-periscope
  23. செவிநோக்கி -otoscope
  24. சேணிலைநோக்கி- radarscope
  25. தசைநோக்கி -myoscope
  26. திரைநோக்கி -kinescope
  27. துடிப்புநோக்கி -stethoscope
  28. துளைநோக்கி -borescope / boroscope
  29. தூண்டல்நோக்கி -tachistoscope
  30. தொலைநோக்கி -telescope
  31. நிறமாலைக்கதிர்நோக்கி -spectrohelioscope
  32. நிறமாலைநோக்கி -spectroscope
  33. நுண்ணழுத்தநோக்கி -statoscope
  34. நுண்ணோக்கி -microscope
  35. படநோக்கி- bioscope
  36. படிக நோக்கி / இருநிற நோக்கி dichroscope/ dichrooscope
  37. சுழல் நோக்கி – kaleidoscope
  38. பாதைநோக்கி/துகள்நோக்கி -hodoscope
  39. மாறு நோக்கி-hagioscope
  40. மின்நோக்கி -electroscope
  41. மின்னோட்டநோக்கி-galvanoscope
  42. மீநுண்நோக்கி -ultramicroscope
  43. முகில்நோக்கி -nephoscope
  44. முப்பரும நுண்ணோக்கி -stereomicroscope
  45. முப்பருமநோக்கி -stereoscope
  46. முனைமைநோக்கி- polariscope
  47. மூச்சுக் குழல் நோக்கி bronchoscope
  48. மூட்டுக்குழி நோக்கி-arthroscope
  49. மேல்நோக்கி-episcope
  50. விரி நோக்கி  – pantoscope   
  51. விழிநோக்கி -ophthalmoscope
  52. வெப்பநோக்கி –thermoscope

http://www.newscience.in/articles/nokkikal

Tuesday, April 8, 2025

சட்டச் சொற்கள் விளக்கம் 946-950 : இலக்குவனார் திருவள்ளுவன்


(சட்டச் சொற்கள் விளக்கம் 941 – 945 -தொடர்ச்சி)

946 Astuteநுண்புலம் வாய்ந்த  

கூர்மதியுடைய;  

சூழ்ச்சித்திறமுடைய;   

தந்திர நுட்பமுடைய

வலக்காரம்

நுண்சூழ்ச்சித்திறம்    
  கரவடம் (தந்திரம்)

சட்டத் துறையில், “நுண்புலம் வாய்ந்து” இருப்பது என்பது சட்டக் கோட்பாடுகள், ஒழுங்குமுறைகள்,  அவற்றின் நடைமுறை தாக்கங்கள் பற்றிய கூர்மையான நுண்ணறிவையும் புரிதலையும் கொண்டிருப்ப தாகும்.  இது முன்கூட்டியே சிக்கல் தீர்க்கும், பயனுள்ள முடிவெடுப்பதை அனுமதிக்கிறது.  

சூழ்ச்சித் திறம் என்பது நல்லவகையிலான கலந்தாய்வையே குறிப்பிடடது. ஆனால் ஆரியக் கதைகளின் அடிப்படையில் பின்னர் வஞ்சகத் தந்திரத்தைக் குறித்தது. ஆரியக் கதையின் அடிப்படையில் சாணக்கியன் செயல் அடிப்படையில் சாணக்கியம் எனப்படுகிறது.   “அவன் சாணக்கியமெல்லாம் பலிக்கவில்லை” என்பது மக்கள் வழக்கில் உள்ள தொடர்.  

எமனுக்கே எமனாகத் தந்திரம் புரிபவன் என்ற பொருளில் அவன் எமகாதகன் என்று சொல்வதுமுண்டு.    

சட்டத் துறையில் நுண்மாண் நுழைபுலம் மிக்கவர் சட்டக் கருத்துகள், சட்டங்கள், வழக்குச் சட்டம்,  சட்ட நடைமுறைகள் ஆகியவற்றில் வலுவான புரிதலை வெளிப்படுத்துவார்.   

சாத்தியமான சட்ட இடர்கள் பொறுப்புகளை அடையாளம் காண்பதிலும், அவற்றைத் தணிப்பதற்கான நடவடிக்கைகளை முன்கூட்டியே செயல்படுத்துவதிலும் அவர்கள் திறமையானவர்கள் ஆக இருப்பார்கள்.  

சிக்கலான சட்டச் சிக்கல்களை அவர்கள் பகுப்பாய்வு செய்யலாம், மூல காரணங்களை அடையாளம் காணலாம் பயனுள்ள தீர்வுகளை உருவாக்கலாம்.  

  சட்ட மற்றும் சட்டப்பூர்வமற்ற பார்வையாளர்களுக்குச் சட்டத் தகவல்களை அவர்கள் தெளிவாகவும் சுருக்கமாகவும் தெரிவிக்க முடியும்.  

சிக்கல்கள் எழும் வரை காத்திருக்காமல் சாத்தியமான சிக்கல்களைக் கண்டறிந்து அவை மோசமடைவதற்கு முன்பு அவற்றைத் தீர்க்க முன்னெச்சரிக்கை அணுகுமுறையை எடுப்பார்கள்.  
 947 Astutenessமதிநுட்பம்  

சூழ்ச்சித்திறன் ‌  


கூர்மதி  

நுழைபுலம்  

சூழ்ச்சித்திறம்   காண்க : Astute
948. Asyleeபுக்கிலி  

சரணன்  

புகல்நன்  

அகதி  

ஏதிலி  

புகலிடம்‌ கோருபவர்  

அகதி என்பது தமிழ்ச்சொல்லே. “கதி என்பதற்குப் புகலிடம் முதலான பல பொருள்கள் செ.சொ.பி. அகமுதலியில் தரப்பட்டுள்ளன. (பேரகரமுதலி: ‘க’ மடலம் பக்கம் 316) அப்படியானால் எதிர்மறை முன்னொட்டு  ‘அ’ சேர்ந்து புகலிடம் அற்றவன் என்னும் பொருள் தரும் அகதி என்பதும் தமிழ்ச்சொல்தானே! ஆனால் அயற்சொல் மடலத்தில் சமசுகிருதத்தில் இருந்து வந்ததாகக் காட்டப்பட்டுள்ளது. மயக்கத்திற்குக் காரணம்  வழக்கத்தில் (ங்)க என்னும் ஒலிப்பு உள்ளதே!  ஒலிப்பு மயக்கத்தால் தமிழ்ச்சொல்லை ஆரியச் சொல்லாகக் காட்டலாமா? (தமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் பேரகரமுதலி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி 22.09.2010)”  
புக்கிலிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம் (UNHCR-United Nations High Commissioner for Refugees) என்னும் ஐக்கிய நாடுகள் அமைப்பு புக்கிலி என்பதற்கான வரையறை அளித்துள்ளது. அது வருமாறு:

“புக்கிலி(அகதி)  என்பவர் துன்புறுத்தல், போர் அல்லது வன்முறை காரணமாகத் தனது நாட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் உள்ளவர். இனம், மதம், தேசியம், அரசியல் கருத்து அல்லது ஒரு குறிப்பிட்ட குமுகக் குழுவில் உறுப்பினர் ஆகிய காரணங்களுக்காக ஒரு புக்கிலி துன்புறுத்தலுக்கு ஆளாக நேரிடும் என்ற நியாயமான அச்சத்தைக் கொண்டுள்ளவர். பெரும்பாலும், அவர்கள் வீடு திரும்ப முடியாது அல்லது அவ்வாறு செய்ய அஞ்சுவார்கள்.  போர், இன, பழங்குடி  மத வன்முறை ஆகியவை புக்கிலிகள் தங்கள் நாடுகளை விட்டு வெளியேறுவதற்கான முதன்மைக் காரணங்களாகும்.  

ஐ என்றால் நெருங்குதல், ஒத்தல் என்றும் பொருள்கள். பலர் நெருங்கி இணைந்து ஒத்துச் செயற்படுவதால் ஐக்கியம் எனப்பட்டது. இது தமிழ்ச் சொல்லே!  

அயல் நாடுகளிலிருந்து அரசியலிலும் அரசிலும் பொறுப்பில் உள்ளவர்கள், படைப்பாளிகள் அந்நாட்டின் தாக்குதல் குறித்த அச்சம் கொண்டு பிற நாட்டு அரசில், நாட்டில் தஞ்சம் புகுந்து அடைக்கலமாகிச் சரணடைகின்றனர். இவர்களைச் சரணர் எனலாம்.

  இந்தியாவில் புக்கிலிகளைப் பாதுகாப்பதற்கான உள்நாட்டுச் சட்டம் ஒன்றும் இல்லை, மேலும் இந்தியா 1951 ஐ.நா. புக்கிலிகள் மாநாட்டில் கையெழுத்திடவில்லை. புக்கிலிகள், இந்திய அரசியலமைப்பின் கீழ் அடிப்படை உரிமைகளைப் பெறத் தகுதியுடையவர்கள், குறிப்பாகச் சமத்துவத்திற்கான உரிமை (பிரிவு 14), குற்றங்களைத் தண்டிப்பதைப் பற்றிய பாதுகாப்பு (பிரிவு 20) மற்றும் வாழ்வுரிமை (பிரிவு 21).  

புக்கிலிகளாக வந்துள்ள திபேத்தியர்களுக்கும்  பிற நாடுகளில் இருந்து வந்துள்ள வட மாநிலங்களைச் சேர்ந்த புக்கிலிகளுக்கும் மிகுதியான முழு உரிமைகள் அளித்துள்ள இந்திய ஒன்றிய அரசு, பருமாவிலிருந்து வந்த தமிழர்களுக்கும் இலங்கை அல்லது ஈாத்திலிருந்து வந்து கொண்டுள்ள புக்கிலிகளுக்கும் உதவுவதுபோல் உதவி நான்காம்தர மக்களாக நடத்துவதாக மனித நேய ஆர்வலர்கள் கவலைப் படுகின்றனர்.

அண்டை நாடான இலங்கைியலிருந்து தமிழர்கள் வருவார்கள் என்ற எதிர்காலக் கணிப்பின் அடிப்படையிலேயே இந்தியா புக்கிலிகள் தொடர்பான பன்னாட்டுத் தீர்மானத்தில் கையொப்பமிடவில்லை என மனித நேயர்கள் வருந்துகின்றனர்.  
949. Asylumபுகலிடம்  

காப்பிடம்

காப்பகம்  

அடைக்கலம்  

தஞ்சம்    

பித்தர் காப்புமனை  

மனநோயர்களைப் பொறுத்தவரை அவர்களுக்கான மருத்துவ இல்லம் மன நல மனை என்றும் மனநோயர் காப்பு மனை என்றும் மனவளமனை என்றும் அழைக்கப்படுகின்றது.   பித்தர் காப்புமனை என்பதுபோல் பித்தர் என்ற சொல்லாட்சியைக் கைவிட வேண்டும்.  

பேரிடரில் இருப்பவர் அல்லது ஆதரவு அற்றவர் நாடும் (பாதுகாப்பான) இடம் அல்லது இல்லம் .

    அரசியல் குற்றவாளிகளைச் சிறை செய்தல், அவர்கள் மீது வழக்குத் தொடர்தல் ஆகியவற்றிலிருந்து காக்கும் பொருட்டு அளிக்கப்படும் மறைவிடம்.

 வெளிநாட்டவர்களுக்குச் சில நாடுகளே அடைக்கலம் தருகின்றன.

சட்டத் துறைச் சூழலில், “தஞ்சம் அல்லது அடைக்கலம்” என்பது துன்புறுத்தல், போர் அல்லது பிற கடுமையான அச்சுறுத்தல்கள் காரணமாகத் தங்கள் சொந்த நாடுகளை விட்டு வெளியேறிய வெளிநாட்டினருக்கு ஓர்  அரசு வழங்கும் சட்டப் பாதுகாப்பைக் குறிக்கிறது. இஃது அவர்களுக்குப்  பாதுகாப்பான புகலிடத்தையும் பிற நாடுகளில் புகலிடம் தேடித் துய்க்கும் உரிமையையும் வழங்குகிறது.

இந்தியாவும் பல அயல்நாட்டுத் தலைவர்களுக்கும் அறிஞர்களுக்கும் அடைக்கலம் அளித்துவருகிறது. ஆனால் மருத்துவத்திற்காக வந்த ஈழத் தமிழர்கள் பலருக்கும் ஈழத்தேசியத் தலைவர் பிரபாகரனின்தாய்க்கும் அடைக்கலம் தரவில்லை.

வங்கத் தேசப் பத்தாவது தலைமையராக(P.M.) இருந்த சேக்கு அசீனா வாசித்து (Sheikh Hasina Wazed) இப்போது இந்தியாவில் அடைக்கலமாகி உள்ளார்.
950. At all times of the yearஆண்டின்‌ எல்லாக் காலங்களிலும்‌  

பிணை வழங்குவதற்குரியவர் ஆண்டில் எல்லாக் காலங்களிலும் நிலையான இருப்பிடம் கொண்டவராக இருக்க வேண்டும்.  

ஆண்டின் எலலாக்காலங்ஙகளிலும் குற்றச் செயலில் ஈடுபடுபவராக இல்லாமல் இருந்தாலே பிணை வழங்கக் கருதிப் பார்க்கப்படும்.

(தொடரும்)

Followers

Blog Archive